இராசபக்ச குடும்பம் உலக வரலாற்றில் இருந்து பாடம் படிக்க மறுக்கிறது!

இராசபக்ச குடும்பம் உலக வரலாற்றில் இருந்து பாடம் படிக்க மறுக்கிறது!

நக்கீரன்

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. (அதிகாரம் கொடுங்கோன்மை – குறள் 551)

Than one who plies the murderer’s trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing. (Chapter The Cruel Sceptre – Kural 551)

HTML clipboard

குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது என்பது இதன் பொருளாகும்.  கொடுங்கோன்மை என்பது அரசாங்கத்தின் ஒரு சர்வாதிகார அல்லது எதேச்சதிகார வடிவமாகும்.  இதில் அதிகாரம் என்பது ஒரு தனிநபரிடமோ அல்லது ஆளும் வர்க்கத்திலோ குவிந்திருக்கும். அரசன் ஆளவேண்டிய முறைப்படி ஆள்வான் கொடுங்கோலன் தன் விருப்பம் போல் ஆள்வான். அரசன் எல்லோருயை  நன்மையையும் நாடுவான்; கொடுங்கோலன் சிலருடைய மகிழ்ச்சியையே நாடுவான்.
அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் வள்ளுவர் அரசனது கொடுங்கோன்மை பற்றிச் சொன்னது இன்றைய மக்கள் ஆட்சியில் கோலோச்சும் சனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் போன்றோருக்கும் பொருந்தி வரும்.

அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் வள்ளுவர் அரசனது கொடுங்கோன்மை பற்றிச் சொன்னது இன்றைய மக்கள் ஆட்சியில் கோலோச்சும் சனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் போன்றோருக்கும் பொருந்தி வரும்.

இலங்கையின் கடந்த 74 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சியைப் பிடித்த அரசியல் கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களையும், தங்களது குடும்பத்தையும்  தங்களைச்  சூழயிருந்த  சொந்தங்களை செல்வந்தர்களாக்கினார்கள்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக  இனம், மொழி, சமயம் கடந்து இலங்கை மக்கள் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச, பிரதமர் மகிந்த இராசபக்ச இருவரும்  தங்கள் பதவிகளைத் துறந்து விட்டு வீட்டுக்குப் போகுமாறு வெய்யிலிலும் மழையிலும் இளைஞர்கள் போராடி வருகிறார்கள். மேலும் ஒருபடி சென்று கருவூலத்தில் இருந்து கொள்ளையடித்த கோடிக்கணக்கான சொத்தையும் தந்துவிட்டு வெளியேறுமாறு கேட்கிறார்கள்.

இராசபக்ச குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், சேனநாயக்கா குடும்பம் போல் அல்லாது ஒரு சாதாரண குடும்பம். ஆனால் இன்று அவர்கள் நாட்டின் மிகப் பெரிய  கோடீசுவரர்கள். மிகக் குறுகிய காலத்தில் எப்படிக் கோடீசுவரர்கள் ஆனார்கள்?

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் அலி சப்ரி நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை இலங்கை சுதந்திரத்தின் பின்னர், பாரிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கான காரணங்களை ஒளிவு மறைவின்றிச் சொன்னார். அவர் ஆற்றிய  ஆற்றிய உரையில் காணப்பட்ட   13  தவறுகள் பின்வருமாறு:

(1) வருமான வரியை அதிகரிக்கும் புதிய வரவு – செலவு திட்டத்தின்   முன்மொழிவு விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

(2) வரி குறைப்பு (2019) பொருளாதாரத்தைக்  கடுமையாகப் பாதித்தது.

(3) ரூபாயை முன்னரே மிதக்க விட்டு, படிப்படியாகக்  அதன் பெறுமதி குறைய அனுமதித்திருக்க வேண்டும்.

(4) பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) உதவி மிகவும் முன்னதாகவும் மிகவும் தேவைப்படும் நெருக்கடியான சூழ்நிலைகளின் போது பெறப்பட்டிருக்க வேண்டும்.

(5) கடன்களை மறுசீரமைப்பதில் ஏற்பட்ட தாமதம் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்தது.

(6) இலங்கையின் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு கையிருப்பு தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளது. 2019 இல் கையிருப்பு 7.5 பில்லியன் டொலராக இருந்தது.

(7) வரி வருவாய் தற்போது 24  விழுக்காட்டில்  இருந்து 8.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

(8) 2021 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1,464 பில்லியன் ரூபாவாகும் அதேவேளை 2021 ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவு 3,522 பில்லியன் ரூபாவாகும்.

(9) செலவினமானது வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும், அதே வேளையில் 2,748 பில்லியன் ரூபா தொடர்ச்சியான செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டது.

(10) பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (IMF)  திட்டத்தில் நுழைவதற்கு இலங்கைக்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும்.

(11) பல நாடுகளுடன் இடைக்கால நிதி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

(12) உலக வங்கியின் 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை 700 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
(13) உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் இந்தியா ஆகியவை அத்தியாவசிய மருந்துகளை வாங்குவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடனில் மூழ்கித் தத்தளிக்கும் ஆட்சியைக் காப்பாற்ற நிதி அமைச்சர் அலி சப்ரி பொய்யான நம்பிக்கையை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில்,  யதார்த்தம் மேலும் மேலும் அவநம்பிக்கையையும் எழுப்புகிறது.

ஒரு சில அத்தியாவசிய பொருட்களை வாங்க சில்லறை விற்பனை நிலையங்களுக்கு முன் நீண்ட நுகர்வோர் வரிசைகளுக்கு முடிவே இல்லாமல் இருக்கிறது.  அந்த வரிசைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. பாதிக்கப்பட்ட எட்டாவது நபர் மண்ணெண்ணெய் வாங்க காத்திருந்த போது உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  சாத்தியமான அனைத்து நுகர்வுப் பொருட்களிலும் பற்றாக்குறை உள்ளது மற்றும் சந்தையில் கிடைக்கும் சிறிதளவு கூட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. 

கடந்த காலங்களில் இலங்கைக்கு வராத பட்டினி, தற்போது அடிமட்ட மக்களது  வீடுகளின் கதவுகளைத் தட்டுகிறது. இந்தச் சூழ்நிலையில், வெளியில் இருந்து கிடைக்கப்பெறும் டொலர்கள் மட்டும் இந்தக் சிக்கல்களை நிரந்தரமாக தீர்க்க முடியாது. ஒரு பிச்சைக்காரன் பிச்சையெடுப்பதன் மூலம் பணக்காரன் ஆக மாட்டான்இ அது போலவே நோய்த்தடுப்பு மருந்துகள் ஒருபோதும் நிரந்தர பாதுகாப்பை வழங்காது.

இதற்குப் பொது மற்றும் தனியார் துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் சிதைந்த பொருளாதாரத்தை மறுகட்டமைக்க ஒருங்கிணைந்த திட்டம் தேவை.  நிலவும் அரசியல் அராஜகத்தால் அது சாத்தியமில்லை.

A large crowd at the Galle Face - LankaTruth

எனவே  அமைச்சர் சப்ரியின் நம்பிக்கை தவறானது மட்டுமல்ல குறைப் பிறப்பாகவும் காணப்படுகிறது. முன்னைய நிதி அமைச்சர்கள் போலவே இவரும் பொருளாதாரத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் அல்லர். குருடர்கள் உள்ள நாட்டில் ஒற்றைக்கண்ணன் அரசனாக இருப்பது போன்று ஆளும் கட்சியில் நிதி அமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவர் இல்லாத காரணத்தினால் அந்த இடத்துக்கு சப்ரி அமர்த்தப்பட்டுள்ளார்.  ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. ஒன்றுக்கு இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் கையளித்துள்ளார். ஒன்று சனாதிபதி கோட்டாபய இராசபக்சக்கு எதிரானது. மற்றது பிரதமர் மகிந்த இராசபக்சவுக்கு எதிரானது.

கோட்டபாய இராசபக்ச மற்றம்  மகிந்த இராசபக்ச இருவரும் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற கூக்குரல் மகிந்த இராசபக்ச மட்டும் பதவி விலக வேண்டும் என மாறியுள்ளது. ஆனால் மகிந்த இராசபக்ச தான் பதவி விலகப் போவதில்லை என்றும் தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்றும் ஒரு இடைக்கால அரசு உருவாக்கப்பட்டாலும் தானே பிரதமர் என்றும் கூறிவருகிறார். அதனை மெய்ப்பிப்பது போல நேற்று துணை சபாநாயகர் தேர்தலுக்கு நடந்த வாக்கெடுப்பில் இரஞ்சித் சியம்பலபிட்டிய அவர்கள் 83 வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காரணம் தங்களை சுயாதீனக் குழு என்று சொல்லிக் கொண்டிருக்கும் 11 கட்சிகளைச் சேர்ந்த 39  நா.உறுப்பினர்களும்  வாக்களித்துள்ளார்கள்.

இந்தச் சுயாதீனக் குழுவில் மைத்திரிபால சிறிசேனா அவர்களது சிறிலங்கா சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்ச அவர்களது  தேசிய சுதந்திர முன்னணி, உதய கமன்பில்ல அவர்களது பிவித்துறு ஹெல உறுமய கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

இந்தப் பின்னணியில் ஆளும் கோட்டாபய மற்றும் மகிந்தா இராசபக்ச இருவருக்கும் எதிரான போராட்டம் எழுச்சியோடு தொடர்கிறது. முன்னர் எப்பொழுதும் இல்லாதவாறு  இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், தொடர்வண்டி ஊழியர்கள் மற்றும் பவுத்த தேரர்கள் ஒரு அணியிலில் திரண்டு போராடுகிறார்கள். இன்று மே 6 அன்று நாடுதழுவிய கதவடைப்புப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தங்களது வேண்டுகோள்களுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் அடுத்த வாரம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.

மிக நுணுக்கமாக வடிவமைத்த ‘மஹிந்த இராசபக்ச’ ஒரு முழுமையான வம்ச நிறுவனமானது இன்று இடிந்து கொண்டிருக்கிறது. மகிந்த இராசபக்ச மட்டும் இல்லை; முபாரக், கடாபி, சுஹார்டோ மற்றும் பலர் தங்கள் சந்ததியினரை அரியணையில் அமர்த்த நினைத்தார்கள். ஆனால் விதி வேறுவிதமாக  விளையாடியது.  பெரும்பாலான மூன்றாம் உலகின் குட்டி சர்வாதிகாரிகளும் அப்படித்தான் நினைத்தார்கள். நினைக்கிறார்கள்.

கோட்டாபய, மகிந்தா மற்றும் பசில் இராசபக்க ஆகியோரது உருவப் படங்களை தெருவில் ஆர்பாட்டக்காரர்கள் இழுத்துச் செல்கிறார்கள். பாடையில் வைத்துக் காவுகிறார்கள். அவர்களது கொடும்பாவிகளைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள்.  பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

லிபியாவின் சர்வாதிகாரி மொயம்மர் கடாபிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்த போது அவர் அதனை நம்பவில்லை.  “எனது மக்கள் அனைவரும் என்னை நேசிக்கிறார்கள்  என்னைப் பாதுகாக்க அவர்கள் உயிரையும் கொடுக்க அணியமாக இருக்கிறார்கள்” என்று கடாபி பிபிசி க்கு அளித்த நேர்காணலில் (:01/03/2011) கூறினார். தெருக்களில் இறங்கிப் போராடும் மக்கள் “வெளியாட்கள்” வழங்கிய போதைப் பொருளின் தாக்கத்தில் இருந்ததாகவும் கடாபி குற்றம் சாட்டினார்.

மொத்தம் 41 ஆண்டுகளுக்கும் மேலாக லிபியாவை ஆண்ட கடாபியின் இறப்பு பரிதாபமாக இருந்தது.  மயக்கமடைந்த நிலையில்  கடாபி பிடிபட்டு ஒரு  வடிகால் வழியாக அழைத்துச் செல்லப்படுகிறார், அவரது தலையின் இடது பக்கத்தில் ஆழமான காயம் இருந்தது, அவரது  உடற்பகுதியில் ஏற்பட்ட மற்ற காயங்களிலிருந்து வடிந்த குருதியால் அவரது சட்டை சிவப்பு நிறத்தில் இருந்தது. அடுத்ததாக தரையில் காணப்படுகிறார். அவரை ஆயுதங்களுடன்  சூழ்ந்து நின்ற துப்பாகிதாரிகள்  “இறைவனே மிகப் பெரியவன்” (அல்லாகு அக்பர்)  என்று கூச்சலிட்டுக் கொண்டு  கடாபி மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். “நான் உங்களுக்கு என்ன செய்தேன்? சுட வேண்டாம்”  என்று கடாபி கெஞ்சியதைக்  கிளர்ச்சிக்காரர்கள் காதில் போடவில்லை.

இராசபக்ச குடும்பம் உலக வரலாற்றில் இருந்து பாடம் படிக்க மறுக்கிறது! (Uthayan May 06, 2022)

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply