இராசபக்கச குடும்ப ஆட்சி கவிழுமா இல்லையா என்பது பெரிய கேள்விக் குறியாகவே இருக்கிறது?
நக்கீரன்
கெடு குடி சொற்கேளாது என்பது பழமொழி. இராசபக்ச குடும்பம் மக்களது குரலுக்குச் செவி சாய்ப்பதாக இல்லை. கடந்த திங்கட் கிழமை (ஏப்ரில் 11) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மகிந்த இராசபக்ச இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் – அதற்கான தீர்வை முன்வைக்காமல் – முன்னைய அரசு உட்பட மற்றவர்கள் தலையில் பழி சுமத்தியுள்ளார். இந்த அரசு பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அப்படியிருக்க பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த இராணுவத்தைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இந்தப் பல்லவி பழைய பல்லவி. போர் முடிந்து 13 ஆண்டுகள் நிறையப் போகிறது. இருந்தும் இந்தப் பல்லவியை மகிந்த இராசபக்ச பாடுகிறார்.
பொருளாதார நெருக்கடிக்கு கோவிட் – 19 தொற்று நோயையும் மகிந்த இராசபக்ச காரணம் காட்டுகிறார். ஆனால் அண்டை நாடுகளான வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் கோவிட் தொற்று நோய்க்கு முகம் கொடுத்தன. இருந்தும் அந்த நாடுகள் இலங்கை போல் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தாகத் தெரியவில்லை.
எதிர்பாராத திருப்பமாக போர் வெற்றி மற்றும் இராணுவ வீரர்களை முன்னிலைப்படுத்தி, பழைய புராணத்தைப் பாடி வரும் சனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட இராசபக்சாக்களை வீட்டுக்குச் செல்லுமாறு இளைஞர் இளைஞிகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தவறான விளக்கத்தை கொடுக்க முயற்சிப்பது
இராசபக்சாக்களின் அரசியல் ஒண்டாட்டித்தனத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.
கோட்டாபய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என வீதிக்கு இறங்கிய இளைய தலைமுறையினரை 1988, 89 ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சிகளை ஏற்படுத்திய இளைஞர் இயக்கத்துடன் ஒப்பிட்டு பிரதமர் மகிந்த இராசபக்ச பேசியிருப்பதை எதிர்க்கட்சியினர் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.
இப்போது மக்கள் முகம் கொடுத்துள்ள சிக்கல்களுக்கோ, மக்கள் எழுப்பும் குரலுக்கோ பிரதமரின் பேச்சு பதிலளிக்கவில்லை. களத்தின் யதார்த்தத்தைப் புரிந்துக்கொள்ளாது தான் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையென மக்கள் நினைப்பார்கள் என நினைத்து மகிந்த இராசபக்ச தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார். பிரதமர் இராசபக்ச நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு எவ்வித தீர்வையும் வைத்திருக்கவில்லை என்பது அவரது உரையிலிருந்து தெளிவாகப் புரிகிறது என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மகிந்தா இராசபக்சவின் எதிர்வினை, குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் தார்மீக பலமின்மையை வெளிப்படுத்துகிறது. நடந்தவற்றுக்கு பொறுப்புக்கூறி இருந்தால், திறமையின்மையை ஒப்புக் கொண்டிருந்தால் அத்தகைய துணிச்சலை வெளிப்படுத்தியிருந்தால், பிரதமரின் பண்பு நலத்தை மக்கள் பாராட்டியிருப்பார்கள்.
மோசமான பொருளாதார நிர்வாகம், நெருங்கிய நண்பர்களுக்கு சலுகைகள், ஊழல், அதிக வட்டிக்கு கடன் செலுத்தியதன் ஊடாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்துக்கு முன்னைய அரசாங்கம் பொறுப்பு எனக் கூறமுற்படுவது வேடிக்கையானது. வங்காள தேசத்தில் கோவிட் தொற்று நோயால் 13 ஏப்ரில், 2022 வரை பாதிக்கப்பட்டவர்கள் 1,952,131 பேர். இறந்தவர்கள் 29,124 பேர். இலங்கையில் இந்த நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் 6,63,000, இறந்தவர்கள் 16,484 பேர். வங்காள தேசத்தின் குடிமக்கள் தொகை 164.7 மில்லியன். இலங்கை குடிமக்களின் தொகை 21.92 மில்லியன். அதாவது இலங்கையை விட 7.5 மடங்கு அதிகமானது. இது போலவே வங்காள தேசத்தின் 2021 இன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (அ.டொலர் 350 பில்லியன்) 4.6 விழுக்காடு. அதே ஆண்டில் இலங்கையின் வளர்ச்சி 3.7 விழுக்காடு (அடொலர் 81 பில்லியன்).
ஹென்றி கிஸ்ஸிங்கர் ஒருமுறை வங்களாதேசத்தை “சர்வதேச கூடை நாடு” என வருணித்திருந்தார். அதாவது அந்த நாட்டின் பொருளாதாரம் அல்லது நிதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று சொன்னார். இன்று அந்த நாட்டிடம் இலங்கை கையேந்தி பிச்சை எடுக்கிறது! எனவே இலங்கையின்
பொருளாதார நெருக்கடிக்கு கோவிட் தொற்று நோய் முக்கிய காரணியாக அமையவில்லை.
பொருளாதாரம் சரியாக கையாளப்படாமை, சர்வதேச நாணய நிதியத்தை நேரகாலத்தோடு அணுகாமை, கடன் கொடுப்பனவுகளைத் தள்ளிப்போடாமை, செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை, சம்பளத்தில் அறவிடும் வரியை நீக்கியது, விவசாயிகளுக்கு இரசாயின உரத்தை அடியோடு நிறுத்தியது, நிதி அமைச்சுக்கு பசில் இராசபக்சவை அமைச்சராக நியமித்தது, பணத்தை அதிகமாக அச்சிட்டது, பொது நிருவாகத்தை இராணுவ மயப்படுத்தியது, கடன்களை அடைக்க வெளிநாட்டு நாணய இருப்புக்களை காலி செய்தது பொருளாதார, அரசியல் நெருக்கடிக்கு காரணிகளாக அமைந்தன. முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பணத்தை அதிகமாக அச்சிடுவது பணவீக்கத்தை ஏற்படுத்தாது என்று அறிவித்தார்!
இன்றைய நிதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் பன்னாட்டு நிதி நிறுவனத்திடம் போவதற்கு நிவாட் கப்ரால், முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் எ.ஆர். அத்திக்கல மற்றும் முன்னாள் சனாதிபதியின் செயலாளர் பி.யூ. ஜெயசுந்தரா ஆகிய மூவருமே முட்டுக்கட்டை போட்டார்கள் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய நெருக்கடியின் தோற்றம் அரசியல் என்றும், அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களின் எதேச்சதிகார ஆட்சி பல தசாப்தங்களாக சிங்கள பவுத்த பெரும் பான்மையைத் திருத்திப்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறது, இராணுவத்தையும் பவுத்த குருமார்களையும் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள். இது இராணுவமயமாக்கல், சமத்துவமின்மை மற்றும் அநீதியை ஏற்படுத்தியுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
வயது போன நாய்க்கு புதிய வித்தைகளைக் கற்றுக் கொடுக்க முடியாது எனச் சொல்வார்கள். அது போல இராசபக்சாக்கள் பணத்தையும் பதவிகளையும் கொடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை வாணிகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். குருநாக்கலை தேர்தல் மாவட்டத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சிசார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சாந்தா பண்டார துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் நா.உறுப்பினர்களை பணம் மற்றம் பதவிகளைக் கொடுத்து வளைப்பது இராசபச்ச குடும்பத்துக்கு, குறிப்பாக பசில் இராசபக்சவுக்கு கைவந்த கலை.
யார் எதைச் சொன்னாலும் இலங்கை அரசின் அரசியல் முன்பு இருந்தது போல (மார்ச் 31, 2022) இனி இருக்க முடியாது. இப்போது தென்னிலங்கை இளைஞர்கள், இளைஞிகள் இனம், மொழி, மதம் கடந்து போராடி வருகிறார்கள். போராட்டத்தில் மூவின மக்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் விளைவாக அரசியல் அரங்கில் காத்திரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
(1) தற்போதைய அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் அனைத்து அரசாங்கங்களுக்கும் ஒரு தெளிவான செய்தி – குடிமக்களின் பணம் மற்றும் உரிமைகளில் கைவைக்கக் கூடாது.
(2) அரசியல்வாதிகள் அனைவரும் விழிப்படைந்த மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும். குடிமக்கள் விழித்துவிட்டார்கள். ஒரு சோற்றுப் பொட்டலம் மற்றும் மது போத்திலுக்கும் அவர்கள் விலை போக மாட்டார்கள்.
(3) அரசாங்க அதிகாரிகளுக்கும் தனியார் நிறுவன முகாமையாளர்களுக்கும் ஒரு தெளிவான செய்தி. குடிமக்கள் உங்களைப் பொறுப்பேற்கச் செய்வார்கள்.
(4) 20 ஆவது சட்ட திருத்தம், நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி பதவியை நீக்குவதற்கான அழுத்தம். இதன் மூலம் ஒரு தனிமனிதனுக்கு வழங்கப்பட்ட கட்டற்ற மற்றும் சர்வாதிகார அதிகாரங்களை குறைத்தல் அல்லது முற்றாக நீக்குதல்.
(5) குடிமக்கள் அரசியலைப் பற்றி விமர்சன ரீதியாக சிந்திக்கவும் சீர்தூக்கிப் பார்க்கவும் கற்றுக்கொண்டுள்ளனர். பெரும்பான்மையான கருத்தை அல்லது அரசியல்வாதிகள் அவர்களை சமாதானப்படுத்த என்ன சொல்கிறார்கள் என்பதை இனிமேல் கருத்தில் கொள்ளமாட்டார்கள்.
(6) ஒரு குடிமகனின் இயக்கம் ஒரு பொதுவான நோக்கத்திற்காக இயல்பாகவும் அமைதியாகவும் முன்னெடுக்க முடியும் என்பதை அமைதிவழியான போராட்டம் காட்டுகிறது.
மேற்கூறிய அனைத்தும் அரசியல் சார்பற்ற அல்லது மையப்படுத்தப்பட்ட தலைமைத்துவம் இல்லாமல் அமைதியான போராட்டங்கள் மூலம் சாதிக்கப்பட்டுள்ளன.
2010 இன் முற்பகுதியில் அரபு வசந்தம் அரபு உலகின் பெரும்பகுதி முழுவதும் பரவிய அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள், எழுச்சிகள் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளின் தொடக்கம் ஆகும். இது ஊழல் மற்றும் பொருளாதார தேக்கநிலைக்குப் பதிலளிக்கும் வகையில் தொடங்கிய மக்கள் போராட்டமாகும்.
அரபு வசந்தம் (அரபு: الربيع العربي) மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் சனநாயக சார்பு எதிர்ப்புக்கள் மற்றும் எழுச்சிகளின் அலைகள் மற்றும் பிராந்தியத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளின் தொடக்கம் ஆகும். 2010 டிசெம்பரில் மத்திய துனிசியாவில் முதல் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இருபத்தாறு வயதான தெரு வியாபாரி மொஹமட் பௌசிசி, உள்ளூர் அதிகாரிகளால் அவர் நடத்தப்பட்ட விதம் குறித்துத் தனது எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ஊடகங்களில் “மல்லிகைப் புரட்சி” என்று அழைக்கப்படும் ஒரு எதிர்ப்பு இயக்கம் விரைவாக நாடு முழுவதும் பரவியது. துனிசிய அரசாங்கம் தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலமும் அரசியல் மற்றும் பொருளாதார சலுகைகளை வழங்குவதன் மூலமும் அமைதியின்மையை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்தது. இருப்பினும், எதிர்ப்புக்கள் விரைவில் நாட்டின் பாதுகாப்புப் படைகளை முறியடித்தன. இதனால் நாட்டின் சனாதிபதி ஜைன் அல்-அபிடின் பென் அலி (Zine al-Abidine Ben Ali ) தனது பதவியைத் துறந்து 14 சனவரி, 2011 அன்று நாட்டை விட்டு வெளியேறினார்.
துனிசியாவில் பென் அலி வெளியேற்றப்பட்டதன் காரணமாக ஈர்க்கப்பட்ட இளம் எகிப்தியர்களிடையே அதே போன்ற போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. சனவரி 25 அன்று எகிப்து முழுவதும் மக்கள் இலட்சக் கணக்கில் திரண்டார்கள். எகிப்திய பாதுகாப்புப் படையினர் போராட்டங்களை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கியது. ஆனால் அது தோல்வியடைந்தது. கெய்ரோ மற்றும் நாடு முழுவதும் எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பல நாட்கள் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மோதல்கள் இடம்பெற்றன. பிறகு, எகிப்திய பாதுகாப்புப் படையினர் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ஆயுத பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என அறிவித்தது. இது மக்கள் போராட்டத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இராணுவத்தின் ஆதரவை இழந்த ஹொஸ்னி முபாரக் (Hosni Mubarak.) கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 11 அன்று பதவி துறந்தார்.
துனிசியா மற்றும் எகிப்தில் எதிர்ப்பாளர்களின் விரைவான வெற்றிகளால் ஊக்கமடைந்த யேமன், பஹ்ரைன், லிபியா, சிரியா மக்கள் சனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் 2011 இன் பிற்பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். இருப்பினும், துனிசியா மற்றும் எகிப்தைப் போலல்லாமல், இந்த நாடுகளில் மக்களின் அதிருப்தி வெளிப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிக் குழுக்கள் மற்றும் ஆளும் ஆட்சிகளுக்கு இடையே இரத்தக்களரி மற்றும் நீடித்த – போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
லிபியாவில் 2011 பெப்ரவரி நடுப்பகுதியில் முயம்மர் அல்-கடாபியின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாக வேகமாக விரிவடைந்தது. மார்ச் மாதம் கிளர்ச்சிப் படைகள் தோல்வியின் விளிம்பில் இருப்பதாகத் தோன்றியபோது, நேட்டோ தலைமையிலான ஒரு சர்வதேச கூட்டணி கடாபியின் படைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. நேட்டோ தலையீடு இறுதியில் கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக இராணுவ சமநிலையை மாற்றியிருந்தாலும், கடாபி தலைநகரான திரிபோலியில் மேலும் பல மாதங்களுக்கு அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டார். ஓகஸ்ட் 2011 இல் கிளர்ச்சிப் படைகள் திரிபோலியை கைப்பற்றியபோது கடாபி கொல்லப்பட்டார்.
இலங்கையிலும் ஒரு அரபு வசந்தம் வீசுகிறது. ஒரு வேறுபாடு. அரசுக்கு எதிரான போராட்டம் அமைதியாகவே நடைபெறுகிறது. ஆயுதப் போராட்டமாக மாற வாய்ப்பு அறவேயில்லை.
இராசபக்சாக்கள் போராடும் இளைஞர்கள் ஒரு கட்டத்தில் ஓய்ந்து, ஒதுங்கி விடுவார்கள் என நினைக்கிறார்கள். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சனாதிபதி கோட்டாபய இராசபக்சவுக்கு எதிரான குற்றவியல் தீர்மானம் நிறைவேறும் என்பதும் நிச்சயமில்லை. எனவே இராசபக்கச குடும்ப ஆட்சி கவிழுமா இல்லையா என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. (கனடா உதயன் – 15-04-2022)
Leave a Reply
You must be logged in to post a comment.