தமிழர்கள் சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டதற்கு இந்துமதமே காரணம்
நக்கீரன்
உகரம் என்ற பெயரில் மின்னிதழ் ஒன்றை நடத்தி வருபவர் கம்பவாரிதி. அவரது இயற்பெயர் ஜெயராஜ். பாட்டும் நானே பாவமும் நானே என்ற கேள்வி – பதில் பகுதியை நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரில் 17 ஆம் திகதி வெளிவந்த உகரத்தில் பின்வதும் கேள்வியும் பதிலும் வெளியாகியுள்ளது. அதற்கான எனது எதிர்வினை பதிவு.
கேள்வி 01:- தமிழ்நாட்டு பாரதீயஜனதாக் கட்சியைப் பாராட்டுவதுபோல் எழுதியிருக்கிறீர்கள். மதச்சார்பற்ற நாடாக இருந்த இந்தியாவை, இந்து சாம்ராஜ்ஜியமாக மாற்ற முனையும் அதன் செயலைக் கண்டிக்கமாட்டீர்களா?
பதில்: மதச்சார்பற்ற இந்தியாவை நான் வரவேற்கிறேன். அந்நாடு அப்படி இயங்குவது நல்லதுதான். பல இனங்கள் விரிந்து வாழத் தொடங்கிவிட்ட இன்றைய உலகில், இந்தியா மட்டும் என்றில்லை எந்த நாடும் மதச்சார்பற்று இயங்குவது சிறந்ததே. இந்தியா எல்லா மதத்தாரையும் பாரபட்சமின்றி அணைத்துக் கொள்ளும் ஒரு நாடாக இருந்தால், அது பெருமை கொள்ளும் என்பதில் சந்தேகத்திற்கு இடமேயில்லை.
அதேநேரத்தில் மற்றொன்றையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். காலாகாலமாக எத்தனையோ இந்துமத ஞானிகளும் தீர்க்கதரிசிகளும் தத்துவவாதிகளும் தோன்றி வளர்த்தெடுத்த மண்தான் இந்தியா. அதனால் அன்றுதொட்டு இன்றுவரை இந்துமதத்தின் தளமாக அது திகழும் உண்மையையும் நாம் மறக்கவோ, மறுக்கவோ கூடாது!
இந்துமதத்தினுடைய சகிப்புத்தன்மைதான், இந்தியாவில் மாற்று மதங்களை வளரச் செய்தது. அந்த நன்றியை பின்வந்த மதத்தவர்கள் மறக்காமல் இருக்கவேண்டும் என்பதும் அவசியம் என்று கருதுகிறேன்.
மேற்குலகில், புதிய மதம் பரப்ப நினைத்த இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். புதிய புரட்சிக் கருத்தை விதைக்க நினைத்த ‘சோக்கிறட்டீஸை’ நஞ்சூட்டிக் கொன்றார்கள். பூமி தட்டையானது என்ற பிழையான தம் கருத்துக்கு மாறாக, பூமி உருண்டையானது என்ற உண்மையைச் சொன்ன அறிஞனை அவர்கள் தீயிட்டுக் கொழுத்தினார்கள். இதுதான் மேற்குலகப் பண்பாடு.
இந்தியாவில் நம் இந்து மதத்தார் புதிதாய் வந்த மதங்களுக்கும் அவர்தம் கருத்துக்களுக்கும் தாராளமாய் இடங்கொடுத்தார்கள். மாற்று மதக் கொள்கைகளை மறுத்தார்களே தவிர வெறுத்தார்கள் இல்லை. அதனால்த்தான் மற்றைய சமயங்கள் இந்தியாவில் நிலைகொள்ள முடிந்தது. தமது மதக் கொள்கைகளின் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையே இந்துமதத்தாரின் இந்த விரிந்த மனநிலைக்குக் காரணமாயிற்று. ஒட்டகத்திற்கு இடங்கொடுக்க அது கொட்டகையைப் பிரித்த கதையாய், பின் வந்த வேற்று மதத்தவர்கள் இன்று இந்துமதத்தின் வேரை இங்கு அசைக்க நினைப்பது சகிக்க முடியாத ஒன்று என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது.
இந்த உண்மையை உணர்ந்து, இந்தியாவில் இந்து மதத்தின் தலைமைத் தன்மையை மாற்று மதத்தவர்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். அப்படியல்லாமல், வந்தவர்கள் தான் தாம் என்பதை மறந்து, அவர்கள் எல்லை கடந்து ஆட்டம் போட நினைத்தால் அதைச் சகிப்பது எப்படி?
சுதந்திரத்திற்குப் பின்னாக வந்த இந்திய அரசுகள் பலவும், உலக ஈர்ப்புக்காய் மதச்சமரசம் பேசத் தலைப்பட்டு, இந்தியாவில் இந்துமதத்தின் தலைமைத் தன்மையை சிதைத்தன. நம் தமிழ் நாட்டிலும் நாத்திகக் கொள்கை கொண்ட திராவிடக் கழகங்களின் வருகைக்குப் பின்னால் அம்மண்ணின் தாய்மதமான இந்துமதம் தான் அவர்களால் பெரிதாக இழிவு செய்யப்பட்டது. கடவுள் மறுப்புக் கொள்கை என்று சொன்ன அவர்கள் அதில்த்தானும் நேர்மை காட்டவில்லை. அவர்களது கடவுள் மறுப்புக் கொள்கை என்பது, உண்மையில் இந்துமதக் கடவுள் மறுப்புக் கொள்கையாகத்தான் அன்று தொட்டு இன்று வரை இருந்து வருகிறது.
தமிழ்நாட்டுத் தலைவர்கள், ரம்ழானின் போது, தொப்பி போட்டுக் கொண்டுபோய் மசூதியில் கஞ்சி குடிக்கிறார்கள். கிறிஸ்மஸூக்கு சேர்ச்சுக்குச் சென்று கேக் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்துமத விஷேடங்களில் மட்டும் அவர்கள் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை. எப்போதாவது அவர்களின் மனைவிமார்கள் தான் அங்கு சென்று வருகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அறநிலையத்துறை என்ற பெயரில் இந்துமத ஆலயங்களை மட்டும் கைவயப்படுத்தி அதன் சொத்துக்களையும் உறுஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தலைவர்களின் பொய்மைக் கொள்கையின் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்புத் தான், இன்று பாரதீயஜனதாவின் வேருக்கிடும் உரமாக மாறியிருக்கிறது.
இதனால்த்தான், இந்தியமண் இந்துமண்தான் எனச்சொல்லி, அதே நேரத்தில் அனைத்து மதங்களையும் பேண நினைக்கும் பாரதீயஜனதாவின் மேல் எனக்கு மதிப்பு உண்டாகிறது. ஆனால் அவர்களிலும் சிலர் இந்துமதத் தீவிரவாதிகளாய் மாற நினைக்கிறார்கள். அதில் எனக்கு கிஞ்சித்தும் உடன்பாடில்லை.
🤪உலகநாதரின் ஒப்பீனியன்: ‘சூப்பர்’ வாரிதியார் உண்மையை உடைத்துச் சொல்லியிருக்கிறாருங்கோவ்!
எனது எதிர்வினை: கம்பவாரிதியின் கருத்துக்கும் பவுத்தமதவாதம் பேசும் இராசபக்சாக்களுக்கும் வேற்றுமை இல்லை. இந்து மதம் என்பது பிராமணிய மதம்தான். நால்வர்ணம் என்ற அத்திவாரத்தில்தான் அது கட்டியெழுப்பப் பட்டுள்ளது. நால்வர்ணம் நாலாயிரம் சாதியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆகமம் பஞ்சமiரை தீண்டத்தகாதவர் எனச் சொல்லி ஆலயத்துக்குள் நுழைவதை தடைசெய்துள்ளது. அவர்களுக்கு தனிச் சேரிகளை இந்து மதம் அமைத்துக் கொடுத்துள்ளது. இந்து மதம் ஒன்றே பிறப்பின் அடிப்படையில் வேற்றுமை பாராட்டுகிறது. நந்தனை தீயிட்டுக் கொழுத்திய மதம் எந்த மதம்? இன்று கூட நந்தன் நுழைந்த தில்லைக் கோயிலின் 9 ஆவது வாசல் அடைபட்டுள்ளது.
தில்லையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமுடி மூலை என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி என்ற ஓதுவார். தில்லை நடராசர் கோயிலில் சிற்றம்பலமேடையில் திருவாசகம் உள்ளிட்ட சிவபுராணப் பாடல்களை அவர் பாட விரும்பினார். “பாடக் கூடாது” என்று தீட்சிதர்கள் தடுத்தனர். தடுத்தது மட்டும் அல்ல தாக்கி அவரை மருத்துவ மனைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
தீட்சிதர்கள் சிற்றம்பலமேடையில் தேவாரம் பாடலாம்; ஆனால் அதே இடத்திலிருந்து ஓதுவார் பாடக் கூடாது என்பது சாதி அடிப்படையிலான வாதமாகும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக அரசு சட்டம் கொண்டுவந்த பின்னர் தீட்சிதர்கள் தனி உரிமைகொண்டாட முடியாது என்பது ஆறுமுக சாமியின் வாதம்.
இந்த நாட்டில் ஆத்திகனுக்கு அவன் மொழியில் வழிபடும் உரிமையை பெற்றுத்தர நாத்திகர்களே போராட வேண்டி இருக்கிறது என்பது ஆத்திகர்களின் தலையெழுத்து. கம்பவாரிதி போன்ற போலி இந்துமதவாதிகள் போராட மாட்டார்கள். சமற்கிருதம் தேவ பாசை, தமிழ் நீச பாசை என்று இந்து மதம் சொன்னால் பூம் பூம் மாடுகள் போல கம்பவாரிதியும் தலையாட்டுவார்.
சாதியத்தை ஒழித்து சமூக நீதிக்காகப் போராடியவர்கள் தந்தை பெரியார், அறியர் அண்ணா, கலைஞர் கருணாநிதி. கலைஞரின் மூத்த மகன் அழகிரி திருமணம் செய்தது ஒரு தலித் பெண்ணை.
இந்து சமயம் மட்டுமே தாழ்த்தப்பட்டோருக்கு – கல்வியை மறுக்கிறது. இந்து சமய வேதங்களைப் படிக்கக் கூடாது மீறிப்படித்தால் அவனது நாக்கில் இரும்பைக் காய்ச்சி ஊத்தவேண்டும் என மனுதர்மம் சொல்கிறது. நாவலர் தொடக்கிய பள்ளிக்கூடங்களில் பஞ்சமர் படிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.
பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற பகுத்தறிவாதிகள் தோன்றிய பின்னரே சாதி பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது. பூசை செய்யும் உரிமை பார்ப்பானுக்கு மட்டுமல்ல அனைத்துச் சாதியினருக்கும் உண்டு என்பதை திராவிட இயக்கம் நடைமுறைப் படுத்தியுள்ளது. எந்தக் கோயில் கடவுளரும் பள்ளன், பறையன் எனக்கு பூசை செய்வதா என கோபித்துக் கொண்டு கோயிலை விட்டு வெளியேறவில்லை.
அண்ணல் அம்பேத்கார் இந்துவாகப் பிறந்தேன், ஆனால் இந்துவாகச் சாகவிரும்பவில்லை எனக் கூறி 500,000 மக்களை திரட்டி பவுத்த மதத்துக்கு மாறினார்.
புத்தமதத்தவர் சாதிபார்ப்பதில்லையா என அவர் கேட்கக் கூடும். அதற்கு சிங்கள பவுத்தத்தை உதாரணம் காட்ட முற்படலாம். சிங்கள – பவுத்தர்களிடையே சாதி காணப்படுகிறது என்பது சரிதான். ஆனால் இந்து மதம் போலல்லாது பவுத்த மதக் கோட்பாட்டில் சாதிப்பாகுபாடு அறவேயில்லை. ஒருவன் பிறப்பால் பிராமணன் ஆக முடியாது. ஒழுக்கத்தால்தான் பிராமணன் ஆக முடியும் என்று சொன்னவர் புத்தர். இதையே வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார். சிங்கள பவுத்தர்களிடம் தமிழர்களிடையே காணப்படும் சாதி இறுக்கம் இல்லை. விகாரைகளில் யாரும் சென்று வழிபடலாம். பள்ளியில் யாரும் சென்று படிக்கலாம்.
//திராவிட கழகத்தினர் மசூதியில் கஞ்சி குடிக்கிறார்கள், தேவாலயத்தில் தமிழ்நாட்டுத் தலைவர்கள், ரம்ழானின் போது, தொப்பி போட்டுக் கொண்டுபோய் மசூதியில் கஞ்சி குடிக்கிறார்கள். கிறிஸ்மஸூக்கு சேர்ச்சுக்குச் சென்று கேக் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அறநிலையத்துறை என்ற பெயரில் இந்துமத ஆலயங்களை மட்டும் கைவயப்படுத்தி அதன் சொத்துக்களையும் உறுஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.//
இஸ்லாம் மற்றும் கிறித்தவ சமயங்களில் இந்து மதத்திலுள்ள அருவருப்பான புராணங்கள் இல்லை. கதைகள் இல்லை. தேர், திருவிழா, அர்ச்சனை என்று மனிதர்களின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிப்பதில்லை. இஸ்லாம், கிறித்தவம் இரண்டிலும் வழிபாடு பிரார்த்தனை மூலம்தான். மனைவி, பிள்ளைகள் என குடும்பம் நடத்தும் கடவுளர் கிடையாது. இந்து மதத்தில் சுந்தரேசுவரர் – மீனாட்சி திருமணம் ஆண்டு தோறும் நடக்கிறது. தீ மிதித்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், ஆணிமிதி கட்டையில் நடத்தல், தீச்சட்டி காவுதல், கத்தி மீது நடத்தல், மொட்டை அடித்தல் போன்ற பொருளற்ற சடங்குகள் இல்லை.
தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் அனைத்துக்கோயில்களும் கொண்டு வரப்பட்டாலும், மூவேந்தர்கள் கட்டிய தில்லை நடராசன் கோயில் நிர்வாகம், வழிபாடு இரண்டும் பார்ப்பனர்களது கையில் போய்விட்டது! இதையிட்டு கம்பவாரிதி எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?
“இந்துமத ஆலயங்களை மட்டும் கைவயப்படுத்தி அதன் சொத்துக்களையும் உறுஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற கம்பவாரிதியின் குற்றச்சாட்டு அடிப்படையில்லாத குற்றச்சாட்டு. உண்மை என்னவென்றால் கோயில் சொத்துக்களை திருடும் கோயில் பெருச்சாளிகளிடம் இருந்து காப்பாற்றவே இந்து சமய அறநிலைத்துறை உருவாக்கப்பட்டது. அது மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நாத்தீகர்களின் ஆட்சிதான் கோயில்களுக்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
“வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி?” என்ற மனோன்மணியம் சுந்தரனார் சொன்னதுதான் சரி. அதற்கு மாறாக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளையும் “நால்வர்ணமே லோக தர்மம்” எனும் மனுவையும் சமமாக வைத்துப் பேசும் ஆபத்தான போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கம்பவாரிதி மூடத்தனத்தை, இந்துத்வத்தை, சனாதனத்தை பரப்பிக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு சாமரம் வீசுகிறார்.
திருட்டுப் போன கோயில் சிலைகளை அமெரிக்கா – அவுஸ்திரேலியா வரை சென்று திமுக ஆட்சி மீட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோயில் சிலைகளைத் திருடி விற்பவர்களில் பெரும்பான்மையினர் கோயில் அர்ச்சகர்களே! இதோ சென்ற மாதம் வெளிவந்த செய்தி. “சீர்காழி அருகே 2 கோடிக்கு விற்க முயன்ற கோயில் சிலைகள் மீட்பு குருக்கள் கைது” (https://www.polimernews.com/dnews/171475) என்பதுதான் அந்தச் செய்தி.
1967 தொடக்கம் தமிழ்நாட்டில் நடப்பது நாத்திகவாதியான பெரியாரின் திராவிட ஆட்சி. தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலிகள். பாரதீய ஜனதா கட்சி தலைகீழாக நின்றாலும் தமிழ்மண்ணில் காலூன்ற முடியாது. காரணம் தமிழ்மண் பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்த மண். பாஜக. தனது தத்துவமாக இந்துத்துவத்தை முன்வைக்கும்போது, அதற்கு எதிரான தத்துவமாக திராவிட சித்தாந்தை முன்வைக்கிறோம்.
தன்மானம், பகுத்தறிவு, பிறப்பொக்கும் சமூக நீதி, சமத்துவம், சமவாய்ப்பு, மொழிப் பாதுகாப்பு, இவைதான் திராவிட சித்தாந்தம்.
Leave a Reply
You must be logged in to post a comment.