கஜேந்திரகுமார் புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைப் (இணைப்பாட்சி) பிடிக்கும் ஆசையில் கையில் உள்ள ஒரு பறவையைப் (13 ஏ) பறக்க விடச் சொல்கிறார்!

கஜேந்திரகுமார் புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைப் (இணைப்பாட்சி) பிடிக்கும் ஆசையில் கையில் உள்ள ஒரு பறவையைப் (13 ஏ) பறக்க விடச் சொல்கிறார்! 

 நக்கீரன்

இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையில் யூலை, 29 1987 இல்  ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் 1978 இல் இயற்றப்பட்ட யாப்புக்கு 13 ஏ  சட்ட திருத்தம் 14 நொவெம்பர், 1987  இல் நிறைவேற்றப்பட்டது. மாகாண சபைகள் சட்டம் 42 (1987)  மாகாண சபைகளை உருவாக்க வழிகோலியது.  அரச ஆணை மூலம் பெப்ரவரி 03, 1988 இல் 9 மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. 02 யூன், 1988 இல் 7 மாகாண சபைகளுக்கு தேர்தல் நடந்தது. தற்காலிகமாக இணைக்கப்பட்ட வட – கிழக்குக்கு 19 நொவெம்பர், 1988 இல் தேர்தல் நடந்தது. யூலை 1990  இல் அது கலைக்கப்பட்டது. 31 டிசெம்பர்,2006 அது கலைக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின. மாகாணங்களில் உயர் நீதி மன்றங்களை உருவாக்கவும் சட்டத்தில் இடம் இருந்தது. எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்க மறுத்து வருகிறது.

வட- கிழக்கு மாகாணசபையின்   நிருவாக மொழியாக தமிழுக்கும், ஏனைய மாகாணங்களில் நிருவாக மொழியாக சிங்களத்துக்கு  முன்னுரிமை

வழங்கப்பட்டது.

இப்போது 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 13 சட்ட திருத்தத்தை முழுமையாக  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஒரு தரப்பும் அதனை ஒழிக்க வேண்டும் என இன்னொரு தரப்பும் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம்.

(1) சென்ற ஆண்டுக் கடைசியில் ஏழு கட்சிகள் கூடி 13 சட்ட திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு அனுப்ப இருந்த கடிதம்.

(2)  ஒற்றையாட்சிக்குள் கொண்டுவரப்பட்ட  13 ஏ ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறி தமிழ்த் தேசிய மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், நா.உ கொழும்பு தமிழ்ச்  செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை  என்றும் தமிழர் தேசியத் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

அத்துடன், ததேமமுயினர்  இட்டுக்கட்டப்பட்ட கதைகளைக் கூறிப் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர்  தெரிவித்தவை வருமாறு:-

13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான தீர்வாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் கூறியது கிடையாது.

தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, தமிழரசுக் கட்சியாக இருந்தாலும் சரி, இந்த நிலைப் பாட்டில் மாற்றங்கள் காணப்பட்டிருக்கவில்லை.

இந்தப் பின்னணியில் தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணத்திலும் அவ்விடயங்கள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இது சம்பந்தமான ஆவணத்தில் கையொப்பமிட்ட தலைவர்களும் மிகத் தெளிவாக அந்த விடயத்தைக் கூறியுள்ளனர்.

இருப்பினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த ஆவணத்தைத் திரிவுபடுத்தி, இட்டுக்கட்டப்பட்ட விடங்களை வெளிப்படுத்திப் பொய்யான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

எம்மைப்பொறுத்தவரையில், பிரிக்க முடியாத, பிளவுபடுத்த முடியாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் இணைந்த வடக்கு, கிழக்கில், தங்களைத் தாங்களே ஆட்சி செய்யக் கூடிய வகையிலும், தங்களின் தலைவிதியை தீர்மானிக்க கூடிய வகையிலும், மீளப்பெறமுடியாத அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டு, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். அதுவே தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கும்.

ஆனால், 13 ஆவது திருத்தச்சட்டமானது, தற்போதைய அரசமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். அத் திருத்தச்சட்டமானது அதிகாரப்பகிர்வின் ஒரு வடிவமாக அரசமைப்பில் காணப் படுகின்றது. ஆகவே அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் மாறிமாறி இருந்த தலைவர்கள் அனைவரும் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்றே வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள்.

பிரேமதாச காலத்தில் மங்கள முனசிங்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. சந்திரிகாவின் காலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தலைப்பில் தீர்வுப்பொதி தயாரிக்கப்பட்டது.

No plans to oust Sampanthan: ITAK - The Morning - Sri Lanka News

பின்னர் இரணில் விக்கிரமசிங்க காலத்தில் ஒஸ்லோ பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. மஹிந்த ராஜபக்ச 13 + என்று குறிப்பிட்டமையோடு சர்வகட்சி அறிக்கையும் தயாரிக்கப் பட்டது. அதன் பின்னர் மைத்திரி – இரணில் கூட்டாட்சியில் புதிய அரசியலமைப்புக்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இவற்றில் கோட்டாபய கூட அரசியல் தீர்வு பற்றி இந்தியப் பிரதமருக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காகவே நாம் எமது நிலைப்பாட்டைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றோம்.

விசேடமாக இந்தியா தமிழர்களின் விடயத்துடன் நீண்டகாலமாகத் தொடர்பு பட்டுள்ளது என்ற அடிப்படையில் அவர்களுக்குள்ள தார்மீகக் கடமையை முன்னெடுக்குமாறு நாம் கோரியுள்ளோம்.

நாம் எமது மக்கள் வழங்கிய ஆணையை மீறாது, சரியான திசையில் பயணிக்கின்றோம். இதனை சில தரப்புக்கள் அரசியலுக்காக குழப்புவதற்கு முனைகின்றன என்றார்.

இன்று தமிழ்த் தேசியப் பரப்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியும் மக்கள் மத்தியியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அதனால் அந்தப் பிம்பத்தை உடைக்க வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி கேட்ட தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் அதன் பினாமியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இன்று இணைப்பாட்சி கேட்பது நல்ல முன்னேற்றம். ஆனால் 13 ஆவது சட்ட திருத்தம் தமிழ்மக்களது அரசியல் தீர்வுக்கான ஒரு சட்டம் இல்லை என்று தமிழ்க் காங்கிஸ் கட்சி வாதாடுவது புத்திசாலித்தனமான அரசியலாக இல்லை. 13 ஆவது சட்ட திருத்தம் மாகாணசபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வை வழங்குகிறது. அது மட்டுமல்ல அதிகாரப் பகிர்வுக்கான அலகு மாகாணம் என்பது முதன்முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட  டட்லி – செல்வா உடன்பாட்டில் அதிகாரப் பரவலாக்குக்கான அலகு மாவட்டம் என்றிருந்தது.

13 இன் கீழ் நிறைவேற்று அதிகாரம் ஆளுநர் கையில் இருக்கிறது என்பதும் ஆளுநர் சனாதிபதியின் முகவர் என்பதும் உண்மையே. ஆளுநர் நினைத்தால் மகாண சபையைக் கலைக்குமாறு சனாதிபதியை கேட்கலாம்.

ஆனால் நடைமுறையில் மாகாண சபையை முதலமைச்சர் உட்பட 5 பேர் கொண்ட ஒரு அமைச்சர் வாரியம் நிருவாகிக்கிறது. அமைச்சர்களது நியமனம் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே இடம்பெறும். அமைச்சர்களை விலக்குவதாக இருந்தாலும் முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே செய்ய முடியும். அமைச்சரவை மட்டுமல்ல ஏனைய விடயங்களிலும் முதலமைச்சரின் ஆலோசனைப் படியே பெரும்பாலும் ஆளுநர் வினை செய்ய வேண்டும்.

2013 -2018 வரை இயங்கிய வட மாகாண சபையில் முதலமைச்சரின் ஆட்சிக்கு ஆளுநர்கள் முட்டுக் கட்டையாகவோ தடையாகவோ இருந்ததில்லை. முதலமைச்சர் குடைச்சல் கொடுக்கிறார் அவரோடு  சேர்ந்து பணிபுரிய முடியாது எனக் கூறி ஆளுநர் எச்.எம்.எஸ். பலிகக்கார (27-01-2015 தொடக்கம் 16-09-2016 வரை)  தனது பதவியைத் துறந்திருந்தார்.

13 திருத்தத் சட்டத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட காணி அதிகாரங்கள், பொலீஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டால் மாகாண சபை முறைமையில் இணைப்பாட்சிக்குரிய  பல அம்சங்கள் காணப்படும்.

எனவேதான் இனச் சிக்கலைத் தீர்த்து வைக்க இணைப்பாட்சிதான் சரியான தீர்வாக இருந்தாலும் அது கிடைக்கும் வரை குறைபாடுடைய 13 சட்ட திருத்தத்தை ஒரு தொடக்கப் புள்ளியாக வைத்துக் கொள்ள வேண்டும் என தமிழ் அரசுக் கட்சி கூறுகிறது. ததேகூ இன் தலைவர் இரா சம்பந்தர் கூறுவது போல தமிழ்மக்களது வேட்கை இணைப்பாட்சிதான். அதில் மாற்றம் இல்லை. தமிழ் அரசுக் கட்சி தொடங்கிய காலம் தொட்டு இணைப்பாட்சி அரசியல் அமைப்புக்கு போராடி வருகிறது. அதனால் அதன் பெயர்கூட ஆங்கிலத்தில் Federal Party என மற்றவர்களால் அழைக்கப்படுகிறது.

கஜேந்திரகுமார் 13 சட்ட திருத்தத்தை எதிர்ப்பது – அதனை முற்றாக ஒழிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டி நிற்கும் சிங்கள – பவுத்த பேரினவாதிகளுக்கு அவல் கொடுத்த மாதிரி இருக்கும். சனாதிபதி கோட்டாபய அரசு புதிதாகக் கொண்டுவர இருக்கும் யாப்பில் 13 முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக ஒரு சிங்கள செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

கஜேந்திரகுமார் எப்போதும் எதிர்ப்பு அரசியலை நடத்தி வருபவர். இது அந்தக் குடும்பத்தின் பரவணி. பண்டா – செல்வா உடன்பாட்டை அன்றைய தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜிஜி பொன்னம்பலம் சிங்கள – பவுத்த பேரினவாதிகளை விட மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்த்தார். தமிழ் அரசுக் கட்சி தமிழ்மக்களை வட – கிழக்கு மாகாணங்களுக்குள் முடக்கப் பார்க்கிறது எனக் கடுமையாக விமர்ச்சித்தார். தமிழர்கள் பருத்தித்துறை தொடக்கம் தேவேந்திரமுனை வரை சுதந்திரமாக வாழும் உரிமை வேண்டும் என்றார். வெளிநாடுகளில் இருந்து கொண்டு கஜேந்திரகுமாரின் கட்சிக்கு பணம் கொடுக்கும் போலிப் புலி ஆதரவாளர்கள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பழைய வரலாற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

13 திருத்தச் சட்டத்தை யாரும் முழுதாக ஏற்றுக் கொள்ளவில்லை. அது சட்டமான போது அதில் இருந்த குறைபாடுகளைச்  சுட்டிக்காட்டி  தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அதன் பொதுச் செயலாளர் அ. அமிர்தலிங்கம், தலைவர் மு.சிவசிதம்பரம் மற்றும் இரா. சம்பந்தன் அன்றைய இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்திக்கு ஒக்தோபர் 28, 1987 அன்று ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார்கள் (https://sangam.org/letter-pm-rajiv-gandhi-tulf-13th-amendment/). அதையிட்டுக்  கவனம் எடுப்பதாக இராசீவ்காந்தி சொல்லியிருந்தார். ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை தில்லிக்கு அழைத்து பேச்சு வார்த்தையும் நடத்தினார். ஓரு குறிப்பிட்ட காலத்துக்குள் இலங்கை அரசு மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்ற உறுதிமொழியை தில்லி பெற்றுக் கொண்டது. ஆனால் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை.

2013 -2018 வரை இயங்கிய வட மாகாண சபையில் முதலமைச்சரின் ஆட்சிக்கு ஆளுநர்கள் முட்டுக் கட்டையாகவோ தடையாகவோ  இருந்ததில்லை.

13 திருத்தத் சட்டத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட காணி அதிகாரங்கள், பொலீஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப் படுத்தி  ஆளுநருக்குப் பாரப்படுத்தியுள்ள நிறைவேற்று அதிகாரத்தை மாகாண சபையின் அமைச்சு வாரியத்துக்கு பாரப்படுத்தி, பொதுப் பட்டியலை இல்லாது செய்து, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாது என்ற உத்தரவாதம் இருக்குமேயானால் மகாண சபை இணைப்பாட்சி அம்சங்கள் கொண்ட ஒரு அமைப்பாக இருக்கும்.

நொவெம்பர் 1987 இல் 13 திருத்தச் சட்டம் செல்லுபடியாகுமா இல்லையா என உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. நீதியரசர் ஆர்.எஸ். வனசுந்தர 13 ஆவது திருத்தம் 1978 ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு முரணானது ஆகையால் அது பொதுமக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டுமென்று தீர்ப்பளித்திருந்தார். அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு நீதியரசர்கள் ஓ.எஸ்.எம். செனவிரத்ன, எல்.எச்.டீ. அல்விஸ், எச்.ஏ.ஜீ.டீ. சில்வா ஆகியோர் தீர்ப்பளித்தனர். பிரதம நீதியரசர் எஸ். சர்வானந்தா,  அரசியலமைப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ 13 ஏ முரண்பாடாக இல்லை என்பதால் அதனை சட்டமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுவது போதுமானதால் பொதுமக்கள்  அபிப்பிராய வாக்கெடுப்பு அவசியமில்லை என்று பிரதம நீதியரசர் எஸ். சர்வானந்தா, நீதியரசர்கள் பி. கொலின் தோமி, ஈ.ஏ.டி. அத்துகோரள, எச்.டி. தம்பையா ஆகியோர் தீர்ப்பளித்திருந்தனர். 

இதன்போது 13 சட்ட திருத்தம் நிறைவேறப் பொதுமக்கள் வாக்கெடுப்பு வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் ஒன்பதாவது நீதியரசர்  K.A.P. இரணசிங்கி இருந்தார்.  அவரும்  தனது தீர்ப்பில் பொதுமக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டுமென்று தீர்ப்பளித்திருந்தார். ஆனால்  சட்ட வரைவிலுள்ள சில சரத்துக்கள் நீக்கப்பட்டால் 13 ஆவது சட்ட திருத்தத்தைத் தான் ஆதரிப்பதாகத்  தீர்ப்பளித்தார். இதன் காரணமாக 13 சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக 5 நீதியரசர்களும் எதிர்த்து 4 நீதியரசர்களும் தீர்ப்பளித்ததால் அது நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 

எனவே 13 சட்ட திருத்தம்  ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மீறவில்லை என்ற தீர்ப்பு அரும்பொட்டில்தான் நிறைவேறியது. இந்தத் திருத்தத்தில் தமிழ்மொழியும் ஒரு உத்தியோக மொழி, ஆங்கிலம் இணைப்பு மொழி என்ற சரத்தும் உள்ளடக்கபட்டது குறிப்பிடத்தக்கது. எனவே 13 ஏ திருத்தச் சட்டம்தான் தமிழ்மக்களது சிக்கலுக்கு நாட்டின் அரசியலமைப்பில் இன்று உள்ள ஒரே பாதுகாப்பாகும். அதிகாரப் பகிர்வை (devolution) வழங்கும் ஒரே சட்ட திருத்தம் 13 மட்டுமே.

13 சட்ட திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு விட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் இருவரைத் தவிரப் பிற உறுப்பினர்களின் வாக்குகளால் சட்டமாக்கப் பட்டது. பிரதமர் பிரேமதாச முரண்பாடுகள் இருப்பதாகக் கூறினாலும் எதிர்க்காமல் ஆதரித்துப் பேசி ஆதரவாக வாக்களித்தார். விவசாய உணவு அமைச்சராக இருந்த காமினி ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தார். சிறில் மத்யூ எதிராக வாக்களித்தார். அவ் வேளை பாராளுமன்றத்திற் தமிழர் விடுதலைக் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்த எவரும் இருக்கவில்லை. (நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவளிப்பதில்லை என 6வது திருத்தச் சட்டத்திற்கு இணங்கச் சத்தியம் செய்து மீண்டும் பதவிப் பிரமாணம் செய்யாதபடியால் பாராளுமன்ற உறுப்புரிமையைப் 17 உறுப்பினர்கள் இழந்திருந்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதை முழுமையாக எதிர்த்தது. மக்கள் ஐக்கிய முன்னணி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவும் எதிர்த்தார். பாராளுமன்றத்திற்கு வெளியில் ஜே.வி.பி. எதிர்த்தது. செல்லையா இராஜதுரை ஏற்கனவே கட்சிமாறி ஐக்கிய தேசிய அரசில்  அமைச்சராக இணைந்திருந்தார்.

ததேகூ இன் தலைவர் சம்பந்தர் தமிழ்மக்களது இலட்சியம்  ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் இணைந்த வடக்கு, கிழக்கில், தங்களைத் தாங்களே ஆட்சி செய்யக் கூடிய வகையிலும், தங்களின் தலைவிதியை தீர்மானிக்க கூடிய வகையிலும், மீளப்பெறமுடியாத அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டு, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இதில் மாற்றமில்லை.

13 ஏ ஒரு கோவணம் என்று வைத்துக் கொண்டாலும் பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு இருக்கிற  கோவணத்தை பறிபோகவிட முடியாது. அரசியல் என்பது ஒரு தெரிவு  சரிவராவிட்டால் இரண்டாவது தெரிவைக் கைக்கொள்ளும் இராசதந்திரமாகும்.  இணைப்பாட்சி தெரிவு இன்று சாத்தியம் இல்லை என்றால்  அடுத்த தெரிவான அதிகாரப் பரவலாக்கலை (13ஏ) முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கேட்பதாகும்.

இந்தியப் பிரதமர் மோடி  மார்ச் 13, 2015 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது    “கூட்டுறவு கூட்டாட்சியில் உறுதியான நம்பிக்கை கொண்டவன்” என்று கூறியிருந்தார். இந்தியாவிலும் இதே கோட்பாட்டை – ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கடைப்பிடித்து  வருவதாக –  பேசி வருகிறார். 13 ஆவது திருத்தம் பற்றிக் குறிப்பிடுகையில் “13 ஆவது திருத்தத்தை விரைவாகவும் முழுமையாகவும் அமுல்படுத்துவதும் அதற்கு அப்பால் செல்வதும் இந்தச் செயல்முறைக்கு பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

13ஏ பற்றிய குழப்பத்துக்குக் காரணம் ரெலோ அடைக்கலநாதன், புளட் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணித் தலைவர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் சிறிகாந்தா போன்றோர் தொடக்கத்தில் பிரதமர் மோடிக்கு அனுப்ப இருந்த கடிதம் ஆகும். அந்த வரைவைத்  தாங்களே தங்களுக்குள் பேசி தயாரித்துவிட்டு அதில் இரா.சம்பந்தன் ஐயா கையெழுத்து இடவேண்டும் என்ற கேட்ட பொழுதுதான் “கட்சியைக் கேளாமல் கையெழுத்துப் போட மாட்டேன்” என்று அவர் மறுத்தார்.

இதன் பின்னர்தான் தமிழ்மக்களது வேட்கை, அவர்கள் கொடுத்த ஆணை சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வு என முன்னைய  கடிதம் திருத்தி அமைக்கப்பட்டது. அந்தக் கடிதம்தான் சென்ற மாதம் பிரதமர் மோடிக்கு இலங்கைக்கான இந்தியத் தூதர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்  ஆகும். 

இது தெரிந்தும் தனது அரசியல் இலாபத்துக்கு ஆக அந்தக் கடிதம் 13 ஏ திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்த் தலைவர்கள் இந்தியாவிடம் கேட்கிறார்கள் எனக் கஜேந்திரகுமார் பரப்புரை செய்கிறார்.

அதே நேரம் அதே 13 சட்டத்தின் கீழ் உருவாகிய மாகாண சபைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனத் திருவாய் மலர்ந்துள்ளார். 2013 இல் நடந்த மாகாணசபைத் தேர்தலை புறக்கணித்த கஜேந்திரகுமார் இரவோடு இரவாக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஆனால்  ஒருபுறம் ஒற்றையாட்சி அரசமைப்பின் கீழ் இயற்றப்பட்ட  13 ஆவது சட்ட திருத்தத்தை  கடுமையாக எதிர்த்துக் கொண்டு மறுபுறம் அதே 13 ஏ உருவாக்கிய மாகாணசபைத் தேர்தலில் போட்டி போட முடிவு செய்திருப்பது முரண்பாடாகும். 

தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தளவில் 13 ஏ ஒரு தொடக்கப் புள்ளி எனக் கருதுகிறது. பசிக்கிறவனுக்கு “அமாவாசைக்கு வா,  பத்துவகைக் கறியோடு சோறு போடுகிறேன்” என்று சொல்லாமல் பழைய சோறும் பச்சடியும் இருக்குது சாப்பிடு எனக் கொடுப்பதே அவனது பசியைப் போக்க ஒரே வழி.

13 ஆவது திருத்தத்தை  தமிழ் அரசுக் கட்சி நிராகரிக்கவில்லை. ஆனால் 13 க்கு அப்பால் சென்று 13+ தருவேன் என்று மகிந்த இராசபக்ச பல இடங்களில்,  பான் கீ மூன் உட்பட பலருக்குக் கொடுத்த  வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வற்புறுத்துகிறது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி எப்போதும் எதிர்மறை அரசியல் செய்து பழக்கப்பட்ட கட்சி. அந்தப் பரவணியில்  ஊறிய கட்சி.  பண்டா – செல்வா உடன்படிக்கையை சிங்கள – பவுத்த கடும்போக்காளர்களை விட மூர்க்கத்தனமாக எதிர்த்த கட்சி. தமிழர்களுக்கு ஒரு பல்கலைக் கழகம் திருகோணமலையில் அமைய வேண்டும் எனத் தமிழ் அரசுக் கட்சி கேட்டபோது, இல்லை யாழ்ப்பாணத்தில் இந்துப் பல்கலைக் கழகம் வேண்டும் எனக் கேட்டவர் ஜிஜி பொன்னம்பலம் அவர்கள். கடைசியில் பல்கலைக் கழகம் திருகோணமலையிலும் இல்லை யாழ்ப்பாணத்திலும் இல்லை என்று ஆனது.

சோல்பரி ஆணைக்குழு முன் தோன்றிய ஜிஜி பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐப்பது கேட்டு 10 மணித்தியாலங்கள் வாதாடினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பெரும்பான்மை 68% சிங்களவர்களை சிறுபான்மை ஆக்குவது மக்களாட்சி முறைமைக்கு எதிரானது என சோல்பரி ஆணைக்குழு தெரிவித்தது. ஜிஜி பொன்னம்பலம் நாட்டின் குடிமக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு 23% (1946) பிரதிநித்துவம் கேட்டிருக்கலாம். அது கிடைத்திருந்தால் குடியுரிமைச் சட்டம், வாக்குரிமைச் சட்டம், தனிச் சிங்களச் சட்டம் போன்ற சட்டங்களை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

கஜேந்திரகுமார் புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைப் (இணைப்பாட்சி)  பிடிக்கும் ஆசையில் கையில் உள்ள ஒரு பறவையைப் (13 ஏ) பறக்க விடச் சொல்கிறார்.   ஆனால் கையில் இருப்பதை வைத்துக் கொண்டு புதரில் இருக்கும்  இரண்டு பறவைகளைப் பிடிக்க முயற்சிப்பதுதான் அரசியல் சாணக்கியம் ஆகும். (மிகுதி அடுத்தவாரம்)

13ஏ திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உண்டென்பதை மறுப்பதற்கில்லை.  ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ்  நிறைவேற்று அதிகாரம் ஆளுநர் கையில் என்பதும் ஆளுநர் சனாதிபதியின் முகவர் என்பதும் உண்மையே. ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் செய்ய முடியாது. செய்வதாக இருந்தால் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதன் காரணமாகவே உயர்நீதி மன்ற நீதியரசர் K.A.P. இரணசிங்கி ஒற்றையாட்சி முறைமையை மீறும் சரத்துக்களை நீக்கினால் தான் 13 சட்ட திருத்த அரிசயலமைப்பு வரைவுக்குத் தான் ஒப்புதல் தர அணியமாக இருப்பதாகத் தெரிவித்தார்.  

ஆனால் மாகாண சபைக்கு ஓர் அமைச்சர் வாரியம் இருக்கிறது. அமைச்சர்களது நியமனம் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே நடக்கிறது. அமைச்சரவை மட்டுமல்ல ஏனைய விடயங்களிலும் முதலமைச்சரரின் ஆலோசனைப் படியே ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும். 2013 -2018 வரை இயங்கிய வட மாகாண சபையில் முதலமைச்சரின் ஆட்சிக்கு ஆளுநர்கள் முட்டுக் கட்டையாகவோ தடையாகவோ இருந்ததில்லை. 13ஏ திருத்தத் சட்டத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட காணி அதிகாரங்கள், பொலீஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டால் மாகாண முறைமையில் இணைப்பாட்சிக்கு உரிய பல அம்சங்கள் காணப்படும். எனவேதான் இனச் சிக்கலைத் தீர்த்து வைக்க இணைப்பாட்சிதான் சரியான தீர்வாக இருந்தாலும் அது கிடைக்கும் வரை குறைபாடுடைய 13 சட்ட திருத்தத்தை ஒரு தொடக்கப் புள்ளியாக  வைத்துக் கொள்வதே  அரசியல் சாணக்கியமாகும் எனப் பலர் கருதுகிறார்கள். 

இது தொடர்பாக  மனித உரிமை சட்டத்தரணியும் சட்ட பேராசிரியருமான கலாநிதி நிர்மலா சந்திரகாசன் அவர்கள் 13 சட்ட திருத்தத்தத்தை ஆதரித்து ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Nirmala Chandrahasan, in The Island, 28 December 2020, where the title reads “In defence of Provincial Councils”

The Provincial Councils, like the windmills in Cervante’s Don Quixote, are having brickbats thrown at, and cantankerous knights tilting at them. In this piece, I would like to answer some of the criticisms made against the Provincial Councils. But before I do so I note that the Prime Minister has announced that the Provincial Council elections will be held once the ground situation is ready for it. This welcome statement puts paid to all the critics, it is generally acknowledged that the Prime Minister as an experienced and consummate politician would know the political climate in the country and act accordingly.

மாகாண சபை முறையை  ஆதரிக்கும் சந்திரஹாசன்

மாகாண சபைகள், Miguel de Cervantes  என்ற இசுப்பானிய எழுத்தாளர் எழுதிய ஒரு என்ற நாவலில் வரும் Don Quixote பாத்திரம் காற்றாலைகளை இராட்சதகர்கள் எனக் கற்பனை செய்து அவற்றோடு மோதுவதைப் போல  மாகாண சபைகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் சில விமர்சனங்களுக்கு இந்தக் கட்டுரையில் பதிலளிக்க விரும்புகிறேன். ஆனால் நான் அவ்வாறு செய்வதற்கு முன்னர், அதற்கான கள நிலவரங்கள் அநுகூலமானதும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார் என்பதை கவனத்தில் கொள்கின்றேன். பொதுவாக பிரதமர் ஒரு அனுபவமிக்க மற்றும் முழுமையான அரசியல்வாதியாக நாட்டின் அரசியல் சூழலை அறிந்து அதற்கேற்ப செயல்படுவார் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.

———————————————————————————————————–

கஜேந்திரகுமார் புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைப் (இணைப்பாட்சி) பிடிக்கும் ஆசையில் கையில் உள்ள ஒரு பறவையைப் (13 ஏ) பறக்க விடச் சொல்கிறார்! 

நக்கீரன்

சென்ற வாரத் தொடர்ச்சி………………..

13 ஆவது திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உண்டென்பதை மறுப்பதற்கில்லை.  ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ்  நிறைவேற்று அதிகாரம் ஆளுநர் கையில் என்பதும் ஆளுநர் சனாதிபதியின் முகவர் என்பதும் உண்மையே. ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் செய்ய முடியாது. செய்வதாக இருந்தால் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதன் காரணமாகவே உயர்நீதி மன்ற நீதியரசர் K.A.P. இரணசிங்கி ஒற்றையாட்சி முறைமையை மீறும் சரத்துக்களை நீக்கினால் தான் 13 சட்ட திருத்த அரிசயலமைப்பு வரைவுக்குத் தான் ஒப்புதல் தர அணியமாக இருப்பதாகத் தெரிவித்தார்.  

ஆனால் மாகாண சபைக்கு ஓர் அமைச்சர் வாரியம் இருக்கிறது. அமைச்சர்களது நியமனம் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே நடக்கிறது. அமைச்சரவை மட்டுமல்ல ஏனைய விடயங்களிலும் முதலமைச்சரரின் ஆலோசனைப் படியே ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும். 2013 -2018 வரை இயங்கிய வட மாகாண சபையில் முதலமைச்சரின் ஆட்சிக்கு ஆளுநர்கள் முட்டுக் கட்டையாகவோ தடையாகவோ இருந்ததில்லை. 13 ஆவது  திருத்தத் சட்டத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட காணி அதிகாரங்கள், பொலீஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டால் மாகாண முறைமையில் இணைப்பாட்சிக்கு உரிய பல அம்சங்கள்அதில் இருக்கும்.

எனவேதான் முன்னர் கூறியவாறு இனச் சிக்கலைத் தீர்த்து வைக்க இணைப்பாட்சி சரியான தீர்வாக இருந்தாலும் அது கிடைக்கும் வரை குறைபாடுடைய 13 ஆவது  சட்ட திருத்தத்தை ஒரு தொடக்கப் புள்ளியாக  வைத்துக் கொள்ள வேண்டும். அதுதே  அரசியல் சாணக்கியமாகும்.  

இது தொடர்பாக  மனித உரிமை சட்டத்தரணியும் சட்ட விரிவுரையாருமான கலாநிதி நிர்மலா சந்திரகாசன் அவர்கள் 13 ஆவது சட்ட திருத்தத்தத்தை ஆதரித்து ஆங்கிலத்தில் The Island  நாளேட்டில்  எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. 

உண்மையில், 13 ஆவது திருத்தம் யூலை – ஓகஸ்ட், 1966 காலப்பகுதியில் ஜே. ஆர். ஜெயவர்த்தன அரசுக்கும் திரு அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும்  இடையிலான விரிவான விவாதங்களில் ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் பீலிக்ஸ் டயஸ் அபேசிங்க செயலாளராக இருந்தார்.  ஒரு ஆண்டு கழித்து இந்திய – இலங்கை ஒப்பந்தம் யூலை 1987 இல் கையெழுத்தானது. 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் சட்டம் நொவெம்பர் 1987 இல் நிறைவேற்றப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான காரணம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கை  ஆகும் எனக்  கூறலாம். 13 ஏ  அதிகாரப் பகிர்வை வழங்கியது.

பேச்சுவார்த்தையில், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக இடம்பெற்றவர்கள் தந்திரசாலியும் புத்திசாலியுமான திரு ஜெயவர்த்தனவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்,  அவர்களை இலகுவாக உச்சிப்போட்டார். அதன்பிறகுதான் ஜெயவர்த்தனா அவர்களால்   தயாரிக்கப்பட்ட மசோதாக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளுக்குக் குறைவாக இருப்பதை உணர்ந்த கொண்டனர். இதன் காரணமாக நடந்து முடிந்த முறைமையோடு தங்களைத் தூர விலக்கிக் கொண்டனர்.

திரு அமிர்தலிங்கம் 1987 ஒக்டோபரில்  திரு இராஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தில், இரண்டு சட்டமூலங்கள் மீதான தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.  மாகாண சபைகள் தொடர்பான அத்தியாயம் மாகாணங்களுக்கு நம்பகமான சுயாட்சியை வழங்கும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, தற்போதைய சட்டமூலங்கள் காணப்படுகின்றன. மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பொறுத்த மட்டில் கூட நாடாளுமன்றமும் மத்திய அமைச்சரவையும் அவற்றின் அதிகாரத்தை தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளன.

எனது பார்வையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பல அதிகாரங்களை  மாகாண சபைகள் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மறுக்கிறது.  மாகாண சபைகள் சட்டத்தில்  சில திருத்தங்களைச் செய்வதன் மூலம்  இவற்றைச் சரிசெய்யப்படலாம். இது பற்றி பின்னர் கூறுவேன்.

மாகாண சபைகள் மற்றும் அதிகாரப்பகிர்வு முன்மொழிவுகள்  நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும்  வடக்கு – கிழக்கை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், தற்போது நடைபெற்றுவரும் ஆயுத மோதலைத் தீர்க்கும் நோக்கத்தில் இருந்த போதிலும், ஜெயவர்த்தன அரசாங்கம்  நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் மாகாண சபை முறையை விரிவுபடுத்தியது.

Man of the Soil - Amirthalingam was born 26 August 1927 in Pannagam near  Vaddukoddai in northern province of Ceylon. He was the son of S.  Appapillai, a retired station master, and

எனவே தற்போதைய மாகாண சபை முறையானது எந்தவொரு குறிப்பிட்ட பிராந்திய அல்லது இன அளவுகோல்களின் அடிப்படையிலும் இல்லாமல் நாட்டின் அனைத்து மக்களையும் நோக்கியதாக உள்ளது. யாழ்ப்பாணத்திலோ அல்லது மாத்தறையிலோ அவர்களின் சொந்த பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிக்க முயல்கிறது. கொழும்பில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் மட்டுமன்றி உள்ளூர் மக்களுக்கும் சமூகங்களுக்கும் நெருக்கமாக மாகாணங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்க இந்த அமைப்பு அனுமதிக்கிறது. 

பின்னோக்கிப் பார்க்கையில், இது ஒரு நல்ல நடவடிக்கையாகும், ஏனெனில் இது  முழுத் தீவுகான அமைப்பாகும்.   எனவே, இந்தியாவின்  தலையீடு நாட்டிற்கும் அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் ஒன்றைக் கொண்டு வந்தது என்று நாம் கூறலாம். இருப்பினும், வெளிநாட்டு தலையீடு எப்போதும் நல்ல பலனைத் தராது.

இந்த நிகழ்வில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், நீங்கள் உங்கள் வீட்டை ஒழுங்காக வைத்திருக்காதபோது, கருத்து வேறுபாடு மற்றும் வெறுப்பு ஏற்படும் போது, அண்டை வீட்டாரும், அருகில் இல்லாத அண்டை வீட்டாரும் நிச்சயமாக உங்கள் விவகாரங்களில் தலையிட விரும்புவார்கள். பொதுவாக அது அவர்களின் சொந்த நலனுக்காகவே இருக்கும்.

ஒரு சிலரின் விருப்பப்படி, அதாவது  தீவிர தேசியவாதிகள் மற்றும் எதேச்சாதிகாரம் சார்ந்தவர்கள்  தற்போதுள்ள அரசியல் அமைப்பைச் சீர்குலைத்து சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாப்பற்ற உணர்வையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்துவது மீண்டும் மூன்றாம் தரப்பினர் தலையிடும் சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

சில தரப்பினரால் பரிந்துரைக்கப்படுவதைப் போன்று மாகாண சபைகளை இல்லாதொழித்து அரசியல் கட்டமைப்பைச்  சீர்குலைக்காமல், குறிப்பாக மோசமான பொருளாதார நிலைமையின் பின்னணியில் கப்பலை (அரசாங்கத்தை) மிதக்க வைப்பதே சிறந்த கொள்கையாகும். 

மற்றொரு விமர்சனம் என்னவென்றால், மாகாணம் என்பது அதிகாரப் பகிர்வின் பொருத்தமான அலகு அல்ல என்பதாகும். இதற்குப் பதிலடியாக 2006 ஆம் ஆண்டு சனாதிபதி மகிந்த இராசபக்சவினால் அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மை அறிக்கையை குறிப்பிடுவேன்.  அந்த அறிக்கையிலிருந்து பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறேன்.  (தொடரும்)

——————————————————————————————————————–

கஜேந்திரகுமார் புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைப் (இணைப்பாட்சி) பிடிக்கும் ஆசையில் கையில் உள்ள ஒரு பறவையைப் (13 ஏ) பறக்க விடச் சொல்கிறார்! 

கனடா நக்கீரன்  

சென்ற வாரத் தொடர்ச்சி…………………………..

அதிகாரப் பகிர்வுகான அலகு.

அதிகாரப் பகிர்வுக் குழு பல்வேறு விருப்பங்கள் மற்றும் விருப்பங்களின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தியது.

 “அதிகாரப்பகிர்வுக்கான ஒரு அலகு நடைமுறைக்கு இயன்றவரை புவியியல் ரீதியில் இணைந்த பிரதேசத்தை உள்ளடக்கியதாகவும், சமச்சீர் பிராந்திய மேம்பாட்டுக்கு உகந்ததாகவும் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு அணிகளுக்கு இடையே வெவ்வேறான வேறுபாடுகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இந்தச் சூழலில்  அதிகாரப் பகிர்வுக்கான பொருத்தமான அலகு மாகாணமாக இருக்கும் என்ற கருத்தில் உள்ளது.

இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012

வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையில் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள்  அடங்கிய நிபுணர் குழுவில் எந்தவொரு அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் இருக்கவில்லை என்பதையும், விவாதங்கள் உண்மை மற்றும் இடஞ்சார்ந்த கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

மாகாண சபைகள் வெள்ளை யானைகளைப் போன்றது என்றும், அவற்றை இயங்க வைப்பதில் அரசு கூடுதல் செலவினங்களைச் செய்யும் போது மக்களுக்குச் சேவைகளை வழங்குவதில் அவை திறம்படச்  செயல்படவில்லை என மற்றொரு விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த விமர்சனத்தில்  சிறிது பொருள் உண்டு.  அதை வழங்க இயலாமைக்கான காரணங்களை மற்ற நாடுகளில் உள்ள ஒத்த அமைப்புகளுடன் ஒப்பிட்டு ஆராய வேண்டும். ஐக்கிய இராச்சியம் ஒரு ஒற்றையாட்சி முறைமை நாடு. அதில் இதே போன்ற அதிகாரங்கள் வெவ்வேறு இனப் பிராந்திய அலகுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன, அதாவது.  ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து, (இது அல்ஸ்டர் மாகாணம்).

இந்த அலகுகள் அனைத்தும் அவற்றின் சொந்த சட்டமன்றங்களைக் கொண்டுள்ளதுடன், ஸ்கொட்லாந்து நாட்டைப் பொறுத்தவரை ஒரு  நாடாளுமன்றம் உள்ளது, அதே நேரத்தில் அவை West Minster இல் உள்ள நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றன. அரை – கூட்டாட்சி (quasi-federal) அரசியலமைப்பைக் கொண்ட இந்தியாவிலும், மாநிலங்களுக்கு ஆளுநர் மற்றும் சட்டப் பேரவைகள் இருக்கின்றன. இவற்றின் அதிகாரங்கள் 13 ஆவது திருத்தத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களிலிருந்து மிகவும் வேறுபட்டதல்ல.

மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளிலும் அதிகாரப்பகிர்வு மிகவும் திறமையாகச் செயல்பட்டுள்ளதோடு பிராந்திய/மாகாண அலகுகள் திறமையாகச் செயல்பட்டு மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க முடிந்துள்ளது. அப்படியானால் இலங்கையில்  மாகாணசபைகள் ஏன் இந்தளவு சிறப்பாக செயல்படவில்லை என்பதை நாம் பார்க்க வேண்டும்.

Unveiling the plaque of Northern Provincial Council – Northern Provincial  Council, Sri Lanka

முதலில் திறமையாக வினை செய்ய போதுமான நிதி தேவைப்படுகிறது. மாகாண சபையின் சட்டத்தின் விதிகளின் கீழ், மாகாண ஆளுநருக்கு  ஒரு மாகாணத்தின் நிதி மீதான கட்டுப்பாட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநரின் சம்மதமின்றி எந்தவொரு வரி விதிக்கும் அல்லது ஒழிக்கும்  சட்டத்தையும் மாகாண சபை நிறைவேற்ற முடியாது. இது தொடர்பாக ஆளுநர்கள் ஒத்துழைக்கவில்லை.

இதனால் சபைகள் பெருமளவில் மத்திய மானியங்களிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. நொவம்பர் 2016, மத்திய – சுற்றியல் உறவுகளுக்கான நாடாளுமன்றத் துணைக் குழுவின் அறிக்கை, மாகாணங்களுக்கு வழங்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட வரி உயர்த்தும் அதிகாரத்திற்குக் கூடுதலாக கடன்கள் மற்றும் முதலீடுகளைப் பெறுவதற்கும், தேடுவதற்கும் அல்லது குறைந்த பட்சம் நிர்வகிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள வரையறைகளாகும். வெளிநாட்டு உதவி மற்றும் முதலீடுகள் மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்கள். “போதிய அல்லது கொள்கையற்ற நிதி ஏற்பாடுகளின் அரிக்கும் விளைவு என்னவென்றால், அவை மாகாண மற்றும் உள்ளூர் சேவை வழங்குதலை இடை நிறுத்துவதுடன்  அரசியலமைப்பு ரீதியாக நிறுவப்பட்ட சனநாயக நிறுவனங்களின் மீதான நம்பிக்கை இழப்புக்கு வழிவகுக்கிறது” என்று குழு முடிவுரையாகக் கூறியுள்ளது.

மாகாணச் சபைகள் சட்டம் மாகாண  அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டை ஆளுநருக்கு வழங்குகிறது.  இந்த அதிகாரங்கள் தேசிய அரச சேவையின் மீது சனாதிபதி கூட பயன்படுத்தாத அதிகாரங்கள் ஆகும். மத்திய அரசும்   மாகாண சபையும்  ஆளும் கட்சியின்  கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், ஆளுநர்கள் தங்கள்  தனிச் சிறப்புரிமைகளை குறைவாகவே வலியுறுத்தும் நிலையில் இருப்பதோடு முதலமைச்சர்கள்  சிறந்த முறையில் செயல்பட முடியும். எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் மிகவும் குறைவாகவே செயல்படுகின்றன. மறுபுறம் இந்தியாவில் மாநிலங்களின் ஆளுநர்கள் அரசியலமைப்புத் தலைவர்கள் போல் செயல்படுகின்றார்கள்.   நிறைவேற்று  செயல்பாடுகளையும் அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை.

மறுசீரமைப்பு தேவைப்படும் மற்றொரு பகுதி மாகாணத்தின் நிர்வாக சேவை ஆகும். வல்லுனர்கள் குழுவின் 2006 பெரும்பான்மை அறிக்கை, அதிகாரப் பகிர்வு பலனளிக்க அது இருமை அற்றதாக இருக்க வேண்டும் என்றும்  மாகாண நிர்வாகத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. கவலைக்குரிய மற்றொரு விடயம் விடயங்டகளின் ஒதுக்கீடு. 13 ஆவது திருத்தம் மாகாணத்திற்கும் மத்திக்கும் இடையில் விடயங்களை இரண்டு பட்டியல்களிலும் மூன்றாவது ஒருக்கியல் (concurrent)  பட்டியலிலும் ஒதுக்கீடு செய்தாலும்,   ஒன்றுடன் ஒன்று அதிகாரங்கள்  மாகாண சபையின் வினைத்திறனை மட்டுப்படுத்தி விட்டது.

மாகாண சபை வினைத்திறனோடு செயல்பட, விடயங்களை ஒதுக்குவதில் தெளிவு இருக்க வேண்டும். இதுவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். மாகாண சபை முறையின் வினைத்திறனான செயற்பாடுகளுக்கு இடையூறாக உள்ள குறைபாடுகளை நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இவற்றில் பெரும்பாலானவை மாகாண சபைகள் சட்டத்தில் இருந்து வந்தவை.

இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் திருத்த முடியும். மாகாணத்தில் நிர்வாக மாற்றங்கள் மற்றும் நிர்வாக சேவைகளை மறுசீரமைப்புச் செய்வது 13 ஆவது திருத்தச் சட்டத்திலேயே வழங்கப்பட்டுள்ளவாறு சனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேற்கொள்ள முடியும். இதற்குப் பெரிய அரசியலமைப்பு மாற்றங்கள் தேவைப்படாது.

குறைபாடுகள் இருந்தபோதிலும், மத்திய அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் அத்துமீறல்கள் இருந்தபோதிலும், மாகாண சபை முறையானது நாட்டில் வேரூன்றியுள்ளது. இது மாகாண மட்டத்தில் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கிறது.  உள்ளூர் மட்டத்தில் அரசியல் பிரச்சினைகளில் அனுபவம் பெற்றவர்கள் அதன் பின்னர்  தேசிய அளவில் ஈர்க்கப் படலாம்.

மாகாண மட்டத்தில் சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிப்பதில் தங்களுக்குச் சில உரிமை இருப்பதை அவர்களால் உணரமுடிகிறது. ஸ்கொட்ஸ், வெல்ஷ் மற்றும் வடக்கு ஐரிஷ் இனத்தவர்கள் தங்கள் உள்ளூர் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வைக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் (UK) நாம் பார்ப்பது போல், எந்தவொரு பல்லின அரசுக்கும் இது அவசியமானதாகும்.  மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முயற்சிக்காமல், திருத்தங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் தேவையான மாற்றங்களைச் செய்து, அவர்களின் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் அவற்றை மிகவும் திறமையானதாக மாற்றும் வகையில் அது முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

மாகாண சபைகள் 30  ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசியலமைப்பின் ஒரு கூறாக இருந்து வருகின்றன. கொழும்பில் உள்ள அதிகாரவர்க்கத்தினரும் அரசாங்க அமைச்சர்களும் அவர்களை ஐயத்திற்கோ வெறுப்புடனோ பார்ப்பதை விட்டுவிட்டு,   நாட்டின் ஆளுகையில் ஆதரவான நிறுவனங்களாகக் கருதி, முழு நாட்டிற்கும் மிகவும் திறமையான நிர்வாகத்தையும் சனநாயக ஆட்சி வடிவத்தையும் உருவாக்குவதற்கான நேரம் இதுவாகும்.

தமிழ் கட்சிகள், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் மேலும் அதிகாரமளிக்கும் முறைகளை நோக்கிச் செயற்படுவதன் மூலம், தமிழ் பேசும் மக்களின் வேட்கைகள் மற்றும் நலன்களைப் பேணிக்காக்கும் அதே வேளை தேசிய நலனுக்கான செயற்பாட்டில் ஈடுபடவும் முடியும். மாகாண சபைத் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டுத் தொடக்கத்தில் நடத்தப்பட்டு, தற்போதுள்ள அரசியல் அமைப்பின் தொடர்ச்சி நீடிக்கும் என நம்பலாம். முற்றும். (Chandrahasan defends the Provincial Council System. The Island, 28 December 2020) (Canada Uthayan February. 2022)

—————————————————————————————————

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply