தமிழ்நாட்டு மீனவர்கள் எமது தொப்புக் கொடி உறவுகள் என்பது சரி ஆனால் வாயும் வயிறும் வேறு!
நக்கீரன்
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் வாசகர்களே…?
காலைக்கதிர் ஆசிரியரின் கேள்வி இது. பதில் சுரைக்காய்க்கு உப்பில்லை என்று நினைக்கிறோம். ஆசிரியருக்கு வர வர மறதி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சரியாக 3 மாதத்துக்கு முன்னர் எழுதியது இன்று மறந்துபோச்சு. எனவே நினைவு படுத்த அதனைக் கீழே தருகிறேன். அன்று இலங்கை அரசு சொதப்புகிறது என்று சாடி விட்டு இன்று அதே அரசு நடவடிக்கை எடுத்தால் தட்டை மாற்றிப் போடுவது படு அயோக்கியத்தனம்.
இனி இது இரகசியம் அல்ல
“மயிலே, மயிலே இறகு போடு’ என்றால் மயில் இறகு போடாது. பல சமயங்களில் பிடுங்கி எடுக்க வேண்டியிருக்கின்றது. மீனவர் பிரச்சினையில் கூட அப்படித்தான் போலும்.
தமிழக மீனவர்களின் அத்து மீறல் தொடர்பில்அவ்விடயத்தைக் கொழும்பு சரிவரக்கையாளவில்லை, சொதப்புகின்றது என்ற எண்ணப்பாடு வடக்கு, கிழக்குத் தமிழ் மீனவர்கள் மத்தியில் உண்டு.
இலங்கைக் கடல் பிரதேசங்களுக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்கள் ட்ரோலர் களைப் பயன்படுத்துதல், அவை மூலம் கடல்படுக்கையின் அடி வரை முழு கடல் வளத்தையும் துளாவி அள்ளும் இழுவைமடி வலையைப் பயன்படுத்துதல், அதனால் இலங்கை மீனவர்கள் விரித்த வலைகளை நாசப்படுத்துதல் போன்றவையே இலங்கை மீனவர்களை – குறிப்பாக வடக்கு, கிழக்கு மீனவர்களை – பெரிதும் பாதிக்கின்றன என எமது மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ட்ரோலர் மீன்பிடிக்கும், இழுவை மடிப்பாவனைக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு எம்.பியான சுமந்திரனின் முழு முயற்சியில் நல்லாட்சி அரசின் காலத்தில் இந்த இரண்டுக்கும் தடை விதிக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை மீறி இந்த ரக மீன் பிடியில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைக்கும் அந்தச் சட்டம் வழி செய்தது.
சட்டடம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை இலங்கை அதிகார வர்க்கம் சரிவரப் பயன்படுத்தவே இல்லை என்றும் –
அதுதான் தமிழக மீனவர்களின் அத்துமீறலுக்குப் பிரதான காரணம் என்றும் –
சுமந்திரன் எம்.பி. சில தினங்களுக்கு முன்னர் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.
“தமிழக மீனவர் அத்துமீறலைத் தடுப்பதற்கு உரிய சட்டம் எனும் சரியான ஆயுதத்தை நாங்கள் வழங்கியிருக்கின்றோம். ஆனால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த சட்டம் என்ற அந்த ஆயுதத்தை சரிவரப் பயன்படுத்துகின்றார் இல்லை.
இந்தப் பிரச்சினையை அவர் சட்ட ரீதியாகக் கையாளப் பின்னடிக்கின்றார். தமக்குத் தெரிந்த ஒரே மார்க்கத்தை அவர் பயன்படுத்த விழைகின்றாரோ என்று எமக் குச் சந்தேகம் ஏற்படுகின்றது. வடக்கு, கிழக்குத் தமிழ் மீனவர்களை நேரடியாகத் தமிழக மீனவர்களுடன் முரண்பட்டு, முட்டி மோதுவதற்கு அவர் வழிப்படுத்துகின்றாரோ, தூண்டி விடுகின்றாரோ என்ற சந்தேகம் எமக்கு உண்டு. சட்டத்தைச் சரிவரப் பிரயோகித்தாலே – ட்ரோலர் மற்றும் இழுவை மடி வலைகளைப் பயன் படுத்துவோருக்கு எதிராக சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளின் படி நடவடிக்கை எடுத்தாலே – இந்த அத்துமீறல் – மீனவர்களின் எல்லை மீறல் – அடியோடு குறைந்து விடும். வடக்குக் கிழக்குக் கடற்பிரதேசத்தின் கடல் வளம் தக்க வைக்கப்படும்” –
என்றெல்லாம் சுமந்திரன் விடயங்களை அடுக்குகின்றார்.
அவை உண்மையா, பொய்யா என்பது வேறு விடயம். ஆனால் அக்கருத்தில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்படவேண்டியுள்ளன. ஒன்று – இலங்கையில் தடை செய்யப்பட்ட ட்ரோலர் படகு மீன்பிடி அமைச்சர் டக்ளஸின் யாழ்.மாவட்டத்திலேயே – இலங்கை மீனவர்களாலேயே – தாராளமாக முன்னெடுக்கப்படுகின்றது. இப்படித் தடையை மீறி மீன்பிடிக்க ட்ரோலர்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்டும் காணாமலும் இருப்பதற்கு சில தரப்புகள் ட்ரோலருக்கு இவ்வளவு என்று கப்பம் அறவிடுகின்றன எனவும் தகவல்.
இப்படி உரிய சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்தாமைதான் பிரச்சினைக்குப் பிரதான காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்திய சுமந்திரன் வரும் 17, 18 ஆம் திகதிகளில் இதனையும் விவசாயிகள் பிரச்சினையையும் முன்னிறுத்தி பொதுஜனப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இந்தப் போராட்டத்தில் கிளிநொச்சி விவசாயிகள் மற்றும் மீனவர்களைக் களத்தில் இறக்கும் ஏற்பாட்டை சிவஞானம் சிறிதரன் எம்.பி. செய்கின்றார் எனத் தெரிகின்றது.” (Kalaikkathir – 14/10/2021)
தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடலில் மீன்பிடிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளன. தமிழ்நாடு மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டாவண்ணம் இந்திய ரோந்துக் கடற்படைகண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டு மீனவர்கள் அதனைச் சட்டை செய்யாமல் நாளும் பொழுதும் எல்லைதாண்டி வந்து வட இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான கடலில் சட்டத்துக்கு முரணாக மீன்பிடிக்கிறார்கள்.
மீன் பிடித்தாலும் பருவாயில்லை தடைசெய்யப்பட்ட இழுவைப்படகுகளில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இருமடிவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கிறார்கள். பல இலட்சம் பெருமதியான இலங்கை மீனவர்களது வலைகளை அறுத்தெறிகிறார்கள். குஞ்சு, கருமன் மீன்களை அள்ளுவதால் இலங்கை மீனவர்களது கடல்வளத்தை அழிக்கிறார்கள்.
இதற்கு எதிராக ஒக்தோபர் 17, 2021 (ஞாயிற்றுக்கிழமை) முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக ஒரு எதிர்ப்புப் பேரணி ம.ஆ. சுமந்திரன் நா.உ தலைமையில் நடந்தது உங்களுக்குத் தெரியும்.
30 ஆண்டு காலப் போரினால் எமது மீனவர்களது வாழ்வாதாரம் பலத்த அடி வாங்கியுள்ளது. இதே காலப் பகுதியில் தென்னிலங்கை மீன்பிடித் தொழில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் போருக்குப் பின்னரும் தமிழ்நாட்டு மீனவர்கள் தெரிந்தே இழுவைப்படகுகளில் எல்லை கடந்து வந்து மீன்பிடிக்கிறார்கள். அவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்கிறது. படகுகளை சிறைப்பிடிக்கிறது. சில நாட்களில் இராசதந்திர நெருக்கடி காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். படகுகள் விடுவிக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் அடுத்த நாள் அதே படகுகளில் அத்துமீறி வந்து மீண்டும் தொழில் செய்கிறார்கள். இப்படியே போனால் வட இலங்கை மீனவர்கள் பட்டினி கிடந்து சாக வேண்டுவரும். ஆசிரியர்
அதை விரும்புகிறாரா?
தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் போது இலங்கைக் கடற்படை அவர்களைக் கைது செய்வது போல வட இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க ஆடியில் ஒருக்கா ஆவணியில் ஒருக்கா போகும் போது இந்தியக் கடற்படை அவர்களைக் கைது செய்து காவல்துறையிடம் கையளிக்கிறது. காவல்துறை அவர்களைச் சிறையில் அடைக்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்கள் எமது தொப்புக் கொடி உறவுகள் என்பது சரிதான். ஆனால் வாயும் வயிறும் வேறு. அவர்களது படகுகளை ஏலத்தில் விடுவது முற்றிலும் சரியானதே. படகுகளை விடுவித்தால் அடுத்த நாள் அதே படகுகளில் அத்துமீறி மீன்பிடிக்க வருவார்கள்.
இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. ஒன்றிய அரசு நினைத்தால் இந்தச் சிக்கலுக்குக் குறுகிய காலத்தில் தீர்வு காணலாம். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க பயிற்சியும், வலைகளும் படகுகளும் கொடுத்து உதவ வேண்டும். அப்படிச் செய்வதே இந்தச் சிக்கலுக்க ஒரே தீர்வு. படகுகளை விடுவிப்பது தீர்வல்ல.
Leave a Reply
You must be logged in to post a comment.