நாங்கள் ஒரு தேசம் என்கின்ற உணர்வை, கொள்கையை,  நிலைப்பாட்டை மீளவும் உருவாக்கியது இலங்கைத்  தமிழ் அரசுக் கட்சி

நாங்கள்  ஒரு தேசம் என்கின்ற உணர்வை, கொள்கையை,  நிலைப்பாட்டை மீளவும் உருவாக்கியது இலங்கைத்  தமிழ் அரசுக் கட்சி

சுமந்திரன்  நா.உ

பாகம் 1

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” என்ற தலைப்பில் 18.12.2021 (சனிக்கிழமை) அன்று கருத்தாய்வு ஒன்று  யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கருத்தாய்வில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், திரு. நிலாந்தன், திரு.ந.வித்தியாதரன், திரு.ம.செல்வன், பா.உ. எம்.ஏ.சுமந்திரன், பா.உ. த.சித்தார்த்தன், மு.பா.உ.எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் திரு.க. அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னுரையை அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் வழங்கினார்.  கருத்தாய்வை வி.எஸ்.சிவகரன் நெறிப்படுத்தினார்.  இந்தக் கருத்தாய்வில் திரு சுமந்திரன், நா.உ ஆற்றிய உரையின் முதல் பாகம்  எழுத்து வடிவில்  கீழே தரப்பட்டுள்ளது.   

சுமந்திரன் நா.உ

மேடையில் என்னுடன் கூட அமர்ந்திருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் மற்றும் நீண்ட நேரம் உரைகளை செவிமடுத்துக் கொண்டிருக்கும் ஆர்வலர் அனைவருக்கும் வணக்கம்! 

திரு. சிவாஜிலிங்கம் ஒன்றை ஞாபகப்படுத்தினார். 1949-12-18 தமிழரசுக் கட்சி தாபிக்கப்பட்ட நாள். இன்று 2021-12-18 தமிழரசுக் கட்சியின் 72 ஆண்டு வயதாகிறது.  தமிழ்த் தேசியத்தின் பிதாமகன் தந்தை செல்வா என்று அவர் சொன்னார். அதில் ஒரு பெரிய உண்மை இருக்கிறது.

ஐந்நூறு  ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு நாங்கள்  தேசம் என்கின்ற உணர்வை- ஒரு விவரிப்பை – ஒரு கொள்கை நிலைப்பாட்டை மீளவும் உருவாக்கியது இலங்கை தமிழரசுக் கட்சி. 1949 ஆம் ஆண்டிலே  தமிழரசுக் கட்சியை உருவாக்கிய போது தந்தை செல்வா ஆற்றிய சொற்பொழிவு  பின்னர் 1951 இல் திருமலை மாநாட்டில் கட்சித்  தீர்மானமாக அறிவிக்கப்பட்டது. அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ச்சியாகப் பயணித்து வந்திருகிறோம். அந் நிலைப்பாட்டுக்கு எங்களுடைய மக்கள் ஆதரவு 1956 இல் இருந்து  தொடர்ச்சியாக இன்று வரை இருக்கிறது.

இடையில் ஒரு காலத்தில் அந்நிலைப்பாடு இன்னும் தீவிரம் பெற்று தனி நாடாக ஆக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருந்தது. ஆனால் சமஸ்டிக் கட்டமைப்பிலே எங்களுடைய  பாரம்பரிய பிரதேசங்களிலே  எம்மை நாம் நாமே ஆளக்கூடிய ஓர் ஆட்சி முறை அமைக்கப்பட வேண்டும் என்கின்ற  கொள்கைக்குக் குறைவாக  எந்தக் காலத்திலேயும்  எங்களுடைய  மக்கள் வாக்களிக்கவில்லை.

அதுவே எங்களது நிலைப்பாடாக தொடர்ச்சியாக இருந்திருக்கிறது. யுத்தம் முடிவடைந்த பிறகு  2010 இல் இருந்து 2020 வரை உள்ள இடைப்பட்ட காலத்திலே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் முன்பாக முன்வைத்த கொள்கை நிலைப்பாடு அதுவாக தான் இருந்திருக்கிறது. தொடர்ச்சியாகச் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) சந்தித்த அனைத்துத்  தேர்தல்களிலேயும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக முன்வைத்த நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது. அந்தத்  தேர்தல் விஞ்ஞாபனங்கள் அனைத்தையும் வரைந்ததிலே ஒரு பங்காற்றிய எனக்கு அது நன்றாகத் தெரியும்.

சென்ற ஆண்டு நாம் மக்கள் முன்பாக வைத்த நிலைப்பாட்டிலேயும் கூட எமது அரசியல் நிலைப்பாடு என்று தலையங்கம் இட்டுத் தெட்டத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு  உள்ளே பல கட்சிகள் உள்ளன. வெவ்வேறு கால கட்டத்தில் உள்ளே வருவார்கள், பின்னர் வெளியே போவார்கள். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு – யுத்தத்துக்குப் பின்னாலான காலத்திலே – சமஸ்டிக் கட்டமைப்பிலான ஓர் ஆட்சி முறை என்பதிலே எந்தவித சலனமும் இருக்கவில்லை. அப்படியாகவேதான் சொல்லப்பட்டிருக்கிறது. 

பலர் பல சரித்திரங்களைச்  சொன்னார்கள். வேறு சிலர் இப்படி இப்படியாக இருக்க வேண்டும் என்று சொல்லி அதெல்லாம் இல்லை என்ற தீர்மானத்தைத் தாமாக அறிவித்து விட்டு அமர்ந்திருக் கிறார்கள். அவை எல்லாம் இல்லை என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தெரியாது.

ஒரு இராசதந்திரப் பொறிமுறை எங்களிடையே இல்லை – ஒரு திட்டம்  இல்லை என்று அவர்கள் சொல்வதிலே ஒரு நியாயம் இருக்கலாம். ஏனெனில், அது அவர்களுக்குத் தெரியாது.  இது தான் எங்களடைய  இராசதந்திரத் திட்டம் என்று இந்தக் கூட்டத்தில் வைத்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ  எனக்குத்  தெரியாது. அப்படியாக  அறிவிக்க முடியாது என்பது அவர்களுக்கு  -அரசியல் விஞ்ஞானிகளுக்குத்  – தெரிந்திருக்க வேண்டும்.

இந்த பத்தி எழுத்தாளர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டு இருப்பார்கள். இது இல்லை –  அது இல்லை- இந்தியாவை புறம் தள்ளிவிட்டு அமெரிக்காவுக்குப் போய் விட்டார்கள்! யார் அய்யா சொன்னது இந்தியாவைப் புறம் தள்ளி, அமெரிக்காவுக்கு போய்விட்டோம் என்று? கற்பனையிலே பலர் எழுதிக் கொண்டிருப்பார்கள்.  கற்பனையிலே பலர்  குழப்பிக் கொண்டிருப்பார்கள். 

2011 ஆம் ஆண்டு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராசாங்க திணைக்களத்தால் அழைக்கப்பட்டு – நாங்கள்  அங்கு சென்று  பேசியதுதான் அதன் பின்னர் இவ்வளவு காலமும் ஜெனிவா தீர்மானங்களுக்கு அடித்தளம் என்பதை சிவாஜிலிங்கம் தெளிவாகச்  சொன்னார். அப்போது நாங்கள்  இந்தியாவை புறந்தள்ளி விட்டு அமெரிக்காவுக்கு  ஏன் போனீர்கள் என்று யாராவது சொன்னார்களா? அப்பொழுது இருந்ததை விட இப்பொழுது  கூடுதலாக இந்தியாவின் இணக்கப்பாட்டுடன் தான் இவை எல்லாம் நடைபெறுகிறது. அதை மட்டும்தான் நான் உங்களுக்குச்  சொல்லலாம்.

அமெரிக்காவில் கூட ஒவ்வொரு சந்திப்பிற்குப் பிறகும் அல்லது ஒவ்வொரு நாளுக்குப் பிறகும்  இந்தியாவுடன் எமது உரையாடல்  இருந்திருக்கிறது. வோஷிங்டனுக்கும் நியூ டெல்லிக்கும் இடையிலே இது சம்பந்தமாக தொடர்ச்சியான உரையாடல் நடைபெறுகிறது. அது தொடர்பில் நீங்கள் எவரும் பதைபதைக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. அது எல்லாம் ஒழுங்காகத்தான் நடக்கிறது.

இதற்குள்ளே சிலர் அப்படி வெட்டி ஓடுகிற நோக்கம்.  “அய்யய்யோ இவை இந்தியாவை கை விட்டிட்டினம்! நாங்கள் தான் இந்தியாவுடன் நிற்கப் போறோம்” என்கிறார்கள். அதற்கு ஒரு கூட்டணி! அதற்கு செய்தியாளர் சந்திப்புகள்! இந்த இராசதந்திர அணுகுமுறைகள் இந்தக் காலகட்டத்திலே எப்பயாக  இருக்க வேண்டும் என்பதை சிந்தித்து அறிவதற்கு அவ்வளவு புத்தி அவசியம் இல்லை.

இன்றைக்குத்தான் “குவாட்” (SQUAD) என்ற நான்கு நாடுகளின் அமைப்பு உருவாகி இருக்கிறது. அமெரிக்காவம், இந்தியாவும், யப்பானும் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் நான்கும் சேர்ந்து இயங்குவது எதற்காக? சேர்ந்து இயங்குவது எதற்காக? 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட போது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கூட பனிப்போர் இருந்தது.

திரு. சம்பந்தன் நாடாளுமன்றில் ஆற்றிய நீண்ட பேச்சு ஒன்று அந்தக் காலத்தில் செய்தது.  அமெரிக்காவுக்கு திருகோணமலை எண்ணெய்க் குதங்களை  அமெரிக்காவுக்குக்  கொடுக்க வேண்டாம் – அவற்றை இந்தியாவுக்குக்  கொடுங்கள் என்று தெட்டத் தெளிவாகக் கூறியிருந்தார். அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதாக இருந்தது. இன்று அப்படி ஒரு நிலைப்பாடு இல்லை. அதைப் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்களும் சொன்னார். அவர்களுடைய எண்ணங்கள் ஒன்றாக இருக்கிற இந்தச் சூழ்நிலையிலே நாங்கள் இதனை முன்நகர்த்த வேண்டும். (தொடரும்)
 

https://www.facebook.com/100007985535285/videos/602660210955523/

——————————————————————————————————————

நாங்கள்  ஒரு தேசம் என்கின்ற உணர்வை, கொள்கையை,  நிலைப்பாட்டை மீளவும் உருவாக்கியது இலங்கைத்  தமிழ் அரசுக் கட்சி

சுமந்திரன்  நா.உ

(பாகம் 2)

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” என்ற தலைப்பில் 18.12.2021 (சனிக்கிழமை) அன்று கருத்தாய்வு ஒன்று  யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கருத்தாய்வில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், திரு. நிலாந்தன், திரு.ந.வித்தியாதரன், திரு.ம.செல்வன், பா.உ. எம்.ஏ.சுமந்திரன், பா.உ. த.சித்தார்த்தன், மு.பா.உ. எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் திரு.க. அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னுரையை அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் வழங்கினார்.  கருத்தாய்வை வி.எஸ்.சிவகரன் நெறிப்படுத்தினார்.  இந்தக் கருத்தாய்வில் திரு சுமந்திரன், நா.உ ஆற்றிய உரையின் 2 ஆவது பாகம்  எழுத்து வடிவில்  கீழே தரப்பட்டுள்ளது.   

சீனாவை ஏன் எங்களுக்கு ஆதரவாகச்  சேர்த்துக் கொள்ளக்கூடாது?

சீனத் தூதுவருடைய விஜயத்தைப் பற்றிச் சொன்னார்.  நேற்றைய தினம் பலர் என்னோடு இங்கே உரையாடியபோது சொன்னார்கள்.  வெளிநாட்டில் இருந்தும் ஒரு சிலர் உரையாடினார்கள்,  “ஏன் சீனாவை எங்களுக்கு ஆதரவாகச்  சேர்த்துக் கொள்ளக்கூடாது? என்று கேட்டார்கள். அப்படிக் கேட்கிற தமிழ் அமைப்புக்களும் இன்றைக்கு இருக்கின்றன.  ஒன்றைத் தெளிவாகச் சொல்லுகிறேன். சீனர்களுடைய செல்வாக்கு வடக்குக் கிழக்குக்கு வேண்டாம் என்று பகிரங்கமாக நாங்கள் சொல்லியிருக்கிறோம்.  பாராளுமன்றத்திலும் நான் பேசியிருக்கிறேன்.  வெளிப்படையாக நான் சொல்லியிருக்கிறேன். சீனர்களுடைய செல்வாக்கை வடக்குக் கிழக்கில் நாங்கள் வரவேற்கவில்லை. தென்னிலங்கைப் பத்திரிகைகளிலே  வந்திருக்கிறது – ஆங்கிலப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. அதற்கு  இரண்டு காரணங்களைச் சொல்லியிருக்கிறேன். ஏன் அப்படியான ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம் என்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.

ஒன்று எங்களுடைய அரசியல் விடிவுக்காக நாங்கள் செய்கிற போராட்டம்  ஜனநாயகத்திலும் மனிதவுரிமைகளிலும் தங்கியிருக்கிறது. ஜனநாயகக் கோட்பாடுகளிலேயும் மனிதவுரிமை கோட்பாடுகளிலேயும் தங்கியிருக்கிறது. இந்த இரண்டையும் பற்றி சீனாவுக்கு எதுவும் தெரியாது. 

இரண்டாவது காரணம்: இலங்கை செஞ்சீனக் கடலிலே ஒரு தீவாக இருந்திருந்தால், அந்தப் பிராந்தியத்திலே சீனாவுக்கு இருக்கிற நியாயமான பாதுகாப்புக் கரிசனைகளை நாங்கள் உள்வாங்கியிருப்போம். ஆனால் இலங்கை செஞ்சீனக் கடலிலே அமைந்திருக்கிற தீவு அல்ல. அது இந்தியாவின் பக்கத்தில் இருக்கிற தீவு. இந்தியாவினுடைய நியாயமான பாதுகாப்பு கரிசனைகளை நாஙகள் உள்வாங்கியிருக்கிறோம் என்றால் யாரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது.

நாங்கள் இருக்கிற இடத்தைப் பொறுத்து இருக்கிறது. சீனா இந்தியாவின் நட்பு நாடல்லவே!  அது அனைவர்க்கும் தெரியும். சீனா இந்தியாவின் நட்பு நாடல்ல. ஆகையினாலே இலங்கைத் தீவுக்கு மிக அண்மையில் இருக்கும் வடக்குக் கிழக்கில் சீனாவின் செல்வாக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. பகிரங்கமாக இப்போதும் சொல்லுகிறேன் – விரும்பவில்லை.

எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்குமாகயிருந்தால்………

இந்த இரண்டு நியாயமான காரணங்களுக்காக எங்கள் மத்தியிலே – இலங்கையிலே –  சீனர்களின் செல்வாக்கை நாங்கள்  விரும்பவில்லை. இதை சொல்லித்தான் இந்து சமுத்திரத்திலே  சீனர்களுளடைய ஆதிக்கம் பற்றி மிகவும் கரிசனை அடைந்திருக்கும் அமெரிக்காவோடும் பேசுகிறோம்  இந்தியாவுடனும் பேசுகிறோம். வடகிழக்கிலே அவர்கள் (சீனர்கள்) நிலை கொள்ளாது இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அந்த இரண்டு நாடுகளுக்கும் (அமெரிக்கா, இந்தியா) இருக்கிறது. பிராந்திய வல்லரசுக்கும் உலக வல்லரசுக்கும் இருக்கிறது. நாங்கள் அந்த இடத்தில் இருக்கிறோம். அதிகாரப் பகிர்வு எங்களுக்குக் கொடுக்கப்படுமாக இருந்தால், நாங்கள் கேட்கிற விதத்திலே அதிகாரம் கொடுக்படுமாக இருந்தால் – எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்குமாகயிருந்தால் –  அவர்கள் சீனாவின் ஆதிக்கம் குறித்து பயப்படத்  தேவையில்லை என்று திடமாக இரு சாராருக்கும் (அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும்) நாங்கள் சொல்லியிருக்கிறோம். Some of us have confidence , the President will fulfill his promises, says  Sumanthiran - Srilanka News | DSRmedias.com

அநேகமாக எல்லா நாடுகளும் தங்களுடைய நலன்களின் அடிப்படையில் தான் பேசுவார்கள்.  அதில் எவ்விதமான வியப்பும் இல்லை. சில வேளைகளிலே  ஒரு குறித்த பிரதேசத்திலே  தொடர்ச்சியாக ஒரு குழப்பம் இருந்தால்தான் அங்கே தங்கள் தலையீடுகளைத்  தொடர்ச்சியாக வைத்துக் கொண்டிருக்கலாம் என்கின்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.  நாங்கள் சொல்லியிருக்கிறோம் குழப்ப நிலையிலே தொடர்ச்சியாக இருந்தால் அது இலங்கை அரசின் ஆதிக்கத்திலேதான்  இந்த  நில அதிகாரம், பாதுகாப்பு அதிகாரம் தொடர்ச்சியாக இருக்கப் போகிறது.  அது உங்களுக்குச் சாதகமானது அல்ல. இதைத்  தீர்த்து வைத்தால், அந்த அதிகாரங்கள் எங்களடைய கைகளிலே இருக்கும். அதுதான் உங்களுக்கு சாதகமானது.

ஆகவே, எங்ளது அணுகுமுறை. இவர்கள் போனார்கள் – சந்தித்தார்கள் – வந்தார்கள் அதற்குப் பிறகு இனி ஒன்றும் இல்லை? நாங்கள் அதற்குப் பிறகு நித்திரையாக இருக்கவில்லை. நிறையச் சந்திப்புக்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  குறைந்தது பத்துத் தூதர்களை இரண்டு சந்திப்பில்  நான் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அது படமெடுத்து முகநூலில் போடும் சந்திப்புகள் இல்லை. அப்படியும் சில சந்திப்புகள் நடந்து கொண்டுடிருக்கின்றன.  இது அப்படியான சந்திப்புக்கள் அல்ல. படம் எடுத்து நாங்களும் சந்தித்தோம் – என்னத்தைப் பேசினார்கள் என்பது தெரியாது – நாங்களும் சந்தித்தோம் என்று முகநூலில் படம் போட்டு விடுகிற சந்திப்புக்கள் அல்ல. யாரைச் சந்தித்தேன் என்ன பேசினேன் என்று நான் சொல்லவில்லை.

தேர்தல் விஞ்ஞாபனங்கள்  எதிலும் நாம் 13 பற்றி எதுவும் சொல்லவில்லை.

இதன் தொடர்ச்சியாக ஜனவரியில் சில முக்கிய விடயங்கள் நடைபெற இருக்கின்றன. அது நடைபெறுகிறபோது தெரியும். அமெரிக்க இராசாங்க திணைக்களத்துக்கு யாரும் போய் சந்திக்கலாம் என்று அமெரிக்க உதவித் தூதுவர் யாருக்கோ சொன்னாராம். யாரும் யாரையும் சந்திக்கலாம். அது எங்களுக்கும் தெரியும். நான் ஆகக் குறைந்தது எட்டுத்  தடவைகள் ஆவது போய் சந்தித்திருக்கிறேன்.

ஆனால், 2011 ஆம் ஆண்டு ஒக்டோபரில் நடந்த சந்திப்பும், 2021 ஆம் ஆண்டு நொவம்பரில் நடந்த சந்திப்பும் அந்த யாரும் போய் சந்திக்கிற சந்திப்புகள் அல்ல. மூன்று  நாட்களிலே அவர்களே நேரம் ஒதுக்கி  இன்னின்ன தரப்பினரை சந்திப்பதற்கான ஒழுங்குகள்  2011 லும் நடந்தது. அப்படியே 2021 லும் நடந்தது.  ஆனபடியினாலே தாமும் ஏதோ செய்கிறோம் என்பதற்காகச் செய்யப்படுகிற நடவடிக்கைகள் குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும்.  13 ஆம் திருத்தத்தைப்பற்றி ஒரு விளக்கத்தைச் சொல்லித்தான் எனது பேச்சை முடிக்க வேண்டும். எங்களுடைய  தேர்தல் விஞ்ஞாபனங்கள்  எதிலும் நாம் 13 பற்றி எதுவும் சொல்லவில்லை. 2020 தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் 13 ஆம் திருத்தத்தைப்பற்றி ஏதோ சொல்லியிருப்பதாக இன்றைக்கு டெய்லி மிரர் பத்திரிகையிலே  ஒரு கட்டுரை இருக்கிறது. அது எனக்கு வியப்பாக இருந்தது. நான் எங்களுடைய  தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையை எடுத்துப் பார்த்தேன். அதில் அப்படி இல்லை. ஆனால், டெய்லி மிரர் பத்திரிகையில் அவ்வாறு இருக்கிறது. அது  எப்படி வந்தது என்று ஆராய்ந்தேன். அதற்கு முன்பு செய்யப்பட்ட வரைபுகளைப் பார்த்த போது அந்த வரைபுகள் ஒன்றில் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது. அதை யாரோ எங்கோ லீக் பண்ணி அது வேறு யாரோ ஒருவர் கைக்குச் சென்று இன்று டெய்லி மிரர் பத்திரிகை கட்டுரையில்  வந்திருக்கிறது.

13 ஆம் திருத்தத்தைப் பற்றி  நாங்கள் எங்கும் சொல்லுவதில்லை. ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முன்பு சந்திரிகா அம்மையார் காலத்தில் நீலன் திருச்செல்வம் மற்றும் ஜி.எல். பீரிஸ் இணைந்து புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கியபோது அதில் 13 ஐ பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் அது உருவாக்கப்பட்ட காலத்திலே ஜி.எல். பீரிஸ் பல இடங்களில் பேசியிருக்கிறார். அன்று நான் நாடாளுமன்றதத்தில் பேசும்போது அவரது பேச்சையும் மேற்கோள் காட்டியிருந்தேன்.  பி. நவரட்ணராசா இராணி சட்டத்தரணி அவர்களின் 1997 ஆம் ஆண்டு நினைவுப் பேருரையில் ஜி.எல். பீரிஸ் சொன்னது 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது “அடிப்படையிலேயே பழுது பட்டது” என்று கூறினார். நாங்கள் சொல்லவில்லை. இது  “திருத்த முடியாதது – irreparable, fundamentally flawed” ஜி.எல் பீரிஸ் அவர்களது வார்த்தைகள்.  அதற்கான காரணங்களைச்  சொல்லியிருக்கிறார். நானும் அவற்றை சுருக்கமாகத் திருப்பிச் சொல்கிறேன்.

நிறைவேற்று அதிகாரம் ஆளுநர் கையில்!

அதிகாரப்பகிர்வு என்று சொல்லுகிறோம். அதிகாரப் பகிர்வு என்னும் போது மூன்று வகையான அதிகார பகிர்வுகளைக்  கூறலாம். அதிலே நீதித்துறை அதிகாரம் பகிரப்படவில்லை.  மற்ற இரண்டும் – நிறைவேற்று அதிகாரம் மற்றது சட்டவாக்க அதிகாரம் –  பகிரப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் ஆளுநருடைய கையில்! அது 13 ஏ  திருத்தத்திலே சொல்லப்பட்டிருக்கிறது  அமைச்சர்   வாரியத்தின் ஆலோசனையின் படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று.  ஆனால்  அதே திருத்தத்தில் சொல்லப்பட்டிருகிறது எங்கெங்கே அவர்   தற்துணிவாக நினைக்கிறாரோ  அதில் அவர் யாருடைய ஆலோசனையையும் பெறத் தேவையில்லை. ஆளுநர் தனித்துச் செயல்படலாம்.  அது மட்டுமில்லை.  எந்தெந்த விடயங்கள் தன்னுடைய தற்துணிவு  என்று தீர்மானிப்பது  ஆளுநர்தான்.  அதில் அவர் ஏதாவது தவறு செய்தால் அதனை எந்த நீதிமன்றமும் அவரைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது. அது சம்பந்தமாக ஜனாதிபதிக்கு மட்டும்தான் முறைப்பாடு செய்யலாம்.  ஜனாதிபதி சொல்லித்தானே முதல்லே அவர் செய்கிறார்? பிறகு என்ன மேன்முறையீடு? (தொடரும்)

——————————————————————————————————————–

About editor 3015 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply