தமிழ் இலக்கியம்: திருவள்ளுவரை கிறிஸ்தவராக காட்டுவது ?ஏன்?

தமிழ் இலக்கியம்: திருவள்ளுவரை கிறிஸ்தவராக காட்டுவது ?ஏன்?
  • ஆ விஜயானந்த்
  • பிபிசி தமிழ்

8 நவம்பர் 2021

வள்ளுவர்

`கிறிஸ்தவராக இருந்துதான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார்’ என நூலாசிரியர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ` வள்ளுவரின் காலம் என்பது கி.மு. 31 ஆக உள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பிறந்த வள்ளுவர், எப்படி ஞானஸ்நானம் பெற்றிருப்பார்?’ எனக் கேள்வியெழுப்புகின்றனர் தமிழ் ஆர்வலர்கள். சமய வட்டத்துக்குள் வள்ளுவரை அடைப்பது சரிதானா?

திருவள்ளுவர் கிறிஸ்தவரா?

`திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய, நூல் வெளியீட்டு விழா ஒன்று கடந்த 5 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறள் நூலை வள்ளுவர் எழுதியுள்ளதாக நூலாசிரியர் தெய்வநாயகம் எழுதியுள்ள கருத்து ஆய்வுக்குரியது” என்றார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய திருமாவளவன், “திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகின்றனர். ஆனால், மதமும் கடவுளும் வேண்டாம் என வாழ்கின்ற மனிதர்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக அண்மைக்கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கிறிஸ்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான மத வெறுப்பு பிரசாரம் நடைபெற்று வருகிறது. சமூக நீதியை வென்றெடுப்பதற்கு திருக்குறளும் ஓர் ஆயுதமாக உள்ளது. கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையில் ஏந்தாமல் திருக்குறளையும் படிப்பதற்கு இந்த நூல் உந்துசக்தியாக இருக்கும்” என்றார்.

மதம் மாற்றுவது சரியா?

இதையடுத்து, `திருவள்ளுவர் கிறிஸ்தவரா?’ என சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியது. “ திருவள்ளுவரை, திருவள்ளுவராக ஏற்றுக் கொள்வதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஒருபக்கம் வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள் அவரை `ஸ்ரீவள்ளுவன்’ என்பதும் அவருக்கு காவி ஆடையை அணிவித்து மத சின்னங்களுக்குள் கொண்டு வருவதும் எப்படி தவறோ, அதைப் போலத்தான் இதுவும்” என்கிறார், காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஹாஜாகனி.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ திருவள்ளுவர் என்பவர் அனைவருக்குமான சொத்தாக இருக்கிறார். அதில் அனைவருக்கும் சமஉரிமை உள்ளது. பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் எதிர்க்கிறது. திருவள்ளுவரும் அதையே வலியுறுத்துகிறார். அதேபோல், கொல்லாமையை சமணம் வலியுறுத்துகிறது. அதுவும் திருக்குறளில் இருக்கிறது. அந்த வகையில், `ஒவ்வொரு சமயத்திலும் சொல்லப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்கள் எல்லாம் திருக்குறளிலும் உள்ளது’ எனக் கொண்டாடலாம். அதற்காக திருவள்ளுவரை மதம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

திருவள்ளுவர்

தங்கள் மதத்தில் உள்ள விழுமியங்களை வள்ளுவர் கூறியிருக்கிறார் எனப் போற்றிக் கொண்டாடுவதே சிறப்பானது. முத்தமிழ்க் காவலர் என்று அழைக்கப்பட்ட கி.ஆ.பெ.விசுவநாதம் ஒன்றைச் சொல்வார், `எதுவெல்லாம் நம்மை இணைக்கிறது என்று சிந்திப்போம். எதுவெல்லாம் பிரிக்கிறதோ அதைக் கைவிடுவோம்’ என்பார். வள்ளுவர் எந்த மதம் என்று கண்டுபிடிப்பதோ, அவர் ஞானஸ்நானம் பெற்றாரா அல்லது காவி அணிந்தாரா அல்லது அவர் மதுரையில் பிறந்தாரா… மயிலாப்பூரில் பிறந்தாரா என்பதற்கெல்லாம் எந்தவித ஆதாரங்களும் இல்லை.

மதீனா லாட்ஜும் வள்ளுவர் படமும்

திருவள்ளுவரின் உருவப்படம் என்பது பாரதிதாசனின் மேற்பார்வையில் ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்தார். அதையும் மயிலாடுதுறையில் உள்ள மதீனா விடுதியில் தங்கித்தான் வரைந்தார். அதற்கு ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. வேணுகோபால் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மாவும் இதைக் கூறியுள்ளார். `மதீனா லாட்ஜில் பிறந்த வள்ளுவர்’ என்றொரு கட்டுரையும் அவர் எழுதியுள்ளார். திருவள்ளுவர் எனச் சொல்வதற்கு ஒரு குறியீட்டை உருவாக்கினார்கள். அந்தக் குறியீட்டை அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவரது படத்தை வரைந்த வேணுகோபால் சர்மா, பிறப்பால் பிராமணராக இருந்தாலும் எந்தச் சின்னங்களையும் அவர் வள்ளுவர் மேல் புகுத்தவில்லை” என்கிறார்.

“வள்ளுவரை சமய பேதமற்று அனைவரும் கொண்டாட வேண்டும். அவரை தங்கள் சமயத்துக்குட்பட்டவராக பார்ப்பது என்பது சரியான ஒன்றல்ல. காற்று, நீர், நிலம், நிலவு, சூரியன் ஆகியவை எப்படி அனைவருக்கும் பொதுவானதோ, அதைப்போல திருக்குறளின் விழுமியங்களும் அனைவருக்கும் பொதுவானது. அவரைக் குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைப்பது தவறானது. இறை வணக்கத்தை இஸ்லாமியர்கள்தான் `தொழுகை’ என்கின்றனர். `கற்றதனால் ஆய பயன் என்கொல்’ குறளில் `நற்றார் தொழார் எனின்’ என வள்ளுவர் சொல்கிறார். இதற்காக அவரை இஸ்லாமியர் எனக் கூற முடியுமா? எங்கள் சமயத்தில் உள்ள ஓர் உயர்ந்த கருத்தை வள்ளுவரும் கூறியுள்ளார் என்று வேண்டுமானால் கொண்டாடலாம்.

இயேசு கிறிஸ்து காலத்துக்கும் நபிகள் நாயகம் காலத்துக்கும் முற்பட்டவராக திருவள்ளுவர் இருக்கிறார். காலத்தில் அழியாத கருத்தையும் ஒரே கடவுள் என்ற கொள்கையையும் அவர் உரத்துப் பேசியுள்ளார். உலக வாழ்க்கைக்குப் பிறகு இன்மை, மறுமை போன்றவற்றை அவர் கூறியிருந்தாலும் ஆதித் தத்துவம் என்பது ஒன்றுதான். அந்த நற்செய்தியானது காலத்துக்குக் காலம் மாறுபடும்.

ஏற்கெனவே இருந்த காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளை மாற்றி எழுதியவர் அவர். ஓர் உயர்ந்த வாழ்க்கைக்குப் பாதை காட்டுகிற நூலை வள்ளுவர் அளித்துள்ளார். எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாத பெரியார், திருவள்ளுவருக்கு மாநாடு நடத்தினார். நாத்திகர்களும் ஆத்திகர்களும் இணைந்து கொண்டாடக் கூடிய நூலாக வள்ளுவம் உள்ளது. அதனை மதத்துக்குள் திணிப்பது என்பது அவசியமற்றது” என்கிறார் முனைவர் ஹாஜாகனி.

தான் வரைந்த திருவள்ளுவர் படத்துடன் கே.ஆர். வேணுகோபால் சர்மா.
படக்குறிப்பு,தான் வரைந்த திருவள்ளுவர் படத்துடன் கே.ஆர். வேணுகோபால் சர்மா.
“46 ஆண்டுகளாக நடக்கும் வேலை இது”

அதேநேரம், திருவள்ளுவரை கிறிஸ்தவராக முன்னிறுத்தும் வேலைகள் எல்லாம் 46 ஆண்டு காலமாக நடப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் புலவர் செந்தலை ந.கவுதமன். இவர் சூலூர் பாவேந்தர் பாரதிதாசன் பேரவையின் தலைவராக இருக்கிறார். “ வள்ளுவரை கிறிஸ்தவர் என்ற அடையாளத்துக்குள் கொண்டு வரும் வேலையை 1975 ஆம் ஆண்டிலேயே பேராசிரியர் தெய்வநாயகம் தொடங்கிவிட்டார். அப்போது அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசியராக இருந்தார். `வள்ளுவர் என்பவர் கிறிஸ்தவர்’ என்பதுதான் அவரின் ஆய்வேடாகவும் இருந்தது. அப்போது இருந்த பாதிரியார் ஒருவர், தெய்வநாயகத்துக்கு உதவியாக இருந்தார்” என்கிறார் கவுதமன்.

மேலும், “ வாயில் என்றொரு பத்திரிகையையும் தெய்வநாயகம் நடத்தினார். ஏறக்குறைய 46 ஆண்டுகளுக்கு முன்னால் செய்த பணியை இப்போதும் செய்து வருகிறார். என்னிடமும், `வள்ளுவர் கிறிஸ்தவர்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைக் கேட்டார். `வள்ளுவரை வள்ளுவராகத்தான் காட்ட வேண்டும், உங்கள் விருப்பத்துக்காக எழுத முடியாது’ எனக் கூறிவிட்டேன். அதன்பிறகு அவர் கல்லூரி பணியை விட்டுவிட்டு காவி உடையை அணிந்து கொண்டு `திராவிட சமயம்’ என்றொரு அமைப்பை நடத்தினார்” என்கிறார்.

“வள்ளுவருக்கு மதம் இல்லை”

“ கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலைத் திறப்பு விழாவுக்கு வந்த அவர், `வள்ளுவர் கிறிஸ்தவர்’ என்ற புத்தகத்தை விநியோகித்தார். அப்போது அவரிடம் தமிழ் ஆர்வலர்கள் கோபப்பட்டனர். நானோ, `அவரிடம் இந்த வேலையை யாரோ ஒப்படைத்துள்ளனர்’ என்றேன். இதை ஒரு வேலையாக அவர் செய்து வருகிறார். ஜி.யு.போப்பும், `வள்ளுவரை கிறிஸ்தவர்’ என எழுதியுள்ளார். ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பு கவித்துமானது என்பதால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சிலர் வள்ளுவருக்கு விபூதி அணிய முற்பட்டனர், சிலர் நாமம் போடப் பார்த்தனர். இவர்கள் சிலுவையை அணிய வைக்க முயல்கிறார்கள். வள்ளுவர் சமணர் என்பதை நிறுவுவதற்கு கணிசமானோர் முயற்சி மேற்கொண்டனர். `வள்ளுவருக்கு மதம் இல்லை’ என பாரதிதாசன் பாட்டெழுதினார். வள்ளுவரின் காலமாக கி.மு. 31 உள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பிறந்தவர் எப்படி ஞானஸ்நானம் பெற்றிருப்பார்? சொல்லப் போனால், இயேசு காலத்தில் கிறிஸ்தவம் என்ற மதம் உருவாகவில்லை. இயேசுவுக்குப் பிறகு 150 ஆண்டுகளுக்குப் பிறகு புனித ஜான் பால் என்பவர், மத நிறுவனமாக மாற்றினார். ஆகவே, தெய்வநாயகம் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” என்கிறார்.

‘தினமும் நூற்றுக்கணக்கான மிரட்டல் அழைப்புகள்’

தமிழ் ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேராசிரியர் தெய்வநாயகத்திடம் விளக்கம் பெறுவதற்காக பிபிசி தமிழ் சார்பில் பலமுறை தொடர்பு கொண்டோம். அவருக்கு குறுந்தகவல் அனுப்பியும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இந்நிலையில், கட்டுரை பிரசுரமான பிறகு பிபிசி தமிழை தொடர்பு கொண்டு பேசிய முனைவர் தெய்வநாயகம், “ தினமும் நூற்றுக்கணக்கான மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. அதனால்தான் யாருடைய செல்போன் அழைப்பையும் நான் எடுப்பதில்லை” என விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “ திருவள்ளுவர் குறித்து எனது நூலில் என்ன தெரிவித்துள்ளேன் என்பதைப் பார்க்காமல் யூகத்தின் அடிப்படையிலேயே அனைவரும் பேசி வருகிறார்கள். அதிலும் வசைபாடுகிறவர்கள்தான் அதிகம் உள்ளனர். வள்ளுவரின் காலமாக கி.மு 31 எனக் குறிப்பிடுவதே ஒரு சதியாகத்தான் பார்க்கிறேன். திருக்குறள் என்பது சங்கம் மறுவிய காலத்தைச் சேர்ந்தது. அது பதினென்கீழ் கணக்கு நூல்களுள் ஒன்று. அந்த நூல்கள் எல்லாம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. திருக்குறளை உலகளாவிய அளவில் கிறிஸ்தவர்கள்தான் பரப்பினார்கள். அதனால் கிறிஸ்தவர்களைக் காட்டக் கூடாது என்ற தீய எண்ணத்தில் கி.மு 31ஐ வள்ளுவர் காலமாக சிலர் பேசத் தொடங்கினார்கள்” என்கிறார்.

“ வள்ளுவரின் காலமாக குறிப்பிடப்படும் ஆண்டு தவறானது என்பதை காரண, காரியங்களுடன் விளக்கி தமிழ்நாடு முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். மேலும், `திருவள்ளுவரை கிறிஸ்தவராக விவரித்து கட்டுரை கொடுங்கள்’ என யாரிடமும் சென்று நான் கேட்கவில்லை. 1958 ஆம் ஆண்டில் `திருவள்ளுவர்- கிறிஸ்தவரா?’ என்றொரு நூல் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக நடந்த ஆராய்ச்சியின் பலனாக இந்த நூலை எழுதியுள்ளேன். திருவள்ளுவர் என்பவர் ஞானஸ்நானம் பெற்ற ஒரு கிறிஸ்தவர் என்ற உண்மையை உணராமல் எழுதப்பட்ட உரைகள் அனைத்தும் தவறானவை என்பதையும் இந்த நூலில் நிரூபித்துள்ளேன்” என்கிறார் தெய்வநாயகம்.

மேலும், “ என்னை விமர்சிக்கிறவர்கள், நான் எழுதிய நூலைப் படித்துவிட்டுப் பேசட்டும்” என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-59200643

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply