வட அரைக் கோளத்தில் புவியின் காலங்களும் பருவங்களும்
நக்கீரன்
எதிர்வரும் யூன் 21 ஆம் நாள் (சனிக்கிழமை) பிற்பகல் 5.43 மணிக்கு வேனில் காலம் முடிந்து கோடைகாலம் தொடங்குகிறது. அந்த நாளை ஆங்கிலத்தில் solstice என வானியலாளர்கள் அழைக்கிறார்கள். sol என்ற சொல் சூரியனைக் குறிக்கும். Stice என்றால் “அசையாது நிற்கிறது” என்று பொருள். இந்தச் சொல் லத்தீன் மொழிச் சொல். இலத்தீன் மொழியில் இருந்து ஆங்கில மொழிக்குள் புகுத்தப்பட்டது. சமற்கிருதத்தில் சங்கிராந்தி என அழைக்கிறார்கள். சூரியன் ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு நகர்வதே சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. தமிழில் கதிர்த்திருப்பம் என அழைக்கப்படுகிறது.
இதனை கடக , மகர ரேகைகள் அல்லது இராசிகள் என்றும் சொல்லாம். சோல்ஸ்டைஸ் (Solstice) என்பது சூரியன் கடக ரேகை அல்லது மகர ரேகைக் கோட்டுக்கு நேர் மேலே வந்துவிட்டுத் திசைமாறிச் செல்லும் நாள். இந்த நிகழ்வு யூன் 20 அல்லது 21 (உத்தராயணம்); டிசம்பர் 21 அல்லது 22 (தட்சிணாயணம்) ஆகிய தேதிகளில் மட்டும் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டிருக்கிறது. இவ்விரு நாட்களிலும் சில கோயில்களில் சூரிய உதயத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள சாளரம் வழியாகப் புகுந்து மூல விக்கிரகத்தின் சிவலிங்கத்தின் நெற்றியின் மீது விழுகிறது.
எகிப்தில் இரண்டு பிரமிட்டுக்கு இடையில் யூன் 20 இல் சூரியன் உதயமாவதைப் பார்க்கலாம். மாயன் இனத்தவருக்கும் இந்த யூன் கதிர் திருப்பம் பற்றிய அறிவு இருந்திருக்கிறது. கோடைகால கதிர்த்திருப்பத்தைக் கொண்டாட இங்கிலாந்தின் தென்மேற்கில் ஸ்டோன்ஹெஞ்ச் இல் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். இது வரலாற்றுக்கு முந்தைய 5,000 ஆண்டு கால கல் வட்டம் ஆகும்.
யூன் 21 ஆம் நாள் மிக நீண்ட பகலையும் குறுகிய இரவையும் கொண்டிருக்கும். கனடாவில் சூரியன் காலை 5.48 உதயமாகி மாலை 9.40 வரை நீடித்திருக்கும். அதாவது 15 மணி, 52 நிமிடம், 5 வினாடி நீடித்திருக்கும். பின்னர் பகல்பொழுது குறைந்து கொண்டு போகும். அதே நேரம் தென் அரைக் கோளத்தில் மிக நீண்ட இரவும் குறுகிய பகலும் காணப்படும்.
சங்கிராந்தி அல்லது கதிர்த்திருப்பம் என்றால் என்ன?
நமது பூமி ஒவ்வொரு நாளும் ஒரு முறை அதன் அச்சில் இடஞ்சுழியாக (மேற்கில் இருந்து கிழக்காசு) சுழன்று கொண்டிருக்கிறது. இதனால் பகல் மற்றும் இரவு தோன்றி மறைகிறது. பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கிமீ (மணிக்கு 108,000 கிமீ) வேகத்தில் சுழல்கிறது, இது பூமியின் விட்டத்தை (ஏறத்தாழ 12,600 கி.மீ.) ஏழு நிமிடங்களிலும், சந்திரனுக்குச் செல்லும் தூரத்தை (384,000 கி.மீ.) நான்கு மணி நேரத்திலும் கடக்க எடுக்கும் வேகமாகும்.
நில நடுக்கோடு (பூமத்தியரேகை, Equator) என்பது நில உருண்டை (புவி) சுழலும் அச்சின் வட முனை, தென் முனை ஆகியவற்றுக்குச் சம அளவான தொலைவில் நில உருண்டையைச் சுற்றி இருப்பதாகக் கருதப்படுகின்ற ஒரு கற்பனைக் கோடு ஆகும். இது நிலநடுக்கோடு என்றும் சில வேளைகளில் வெறுமனே மத்திய கோடு என்றும் அழைக்கப்படுவதுண்டு. நிலநடுக்கோடு புவி உருண்டையை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றது.
இக்கோட்டுக்கு வடக்கேயுள்ள பகுதி வட அரைக்கோளம் என்றும் தெற்கேயுள்ள பகுதி தென் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றது. நிலநடுக்கோட்டின் நிலநேர்க் கோட்டு அளவு 0° வடக்கு ஆகும். இக்கோட்டின் மொத்த நீளம் ஏறத்தாழ 40,075 கிமீ (24,901.5 மைல்கள்) ஆகும்.
புவி தனது அச்சில் தன்னைத்தானே இடஞ்சுழியாக சுற்றும் அதே நேரத்தில், புவி ஒரு வருட காலப்பகுதியில் சூரியனைச் சுற்றி அதன் சுற்றுப்பாதையில் (ecliptic) நகர்கிறது. இருப்பினும், பூமியின் சுழற்சியின் அச்சு சூரியனைச் சுற்றியுள்ள இயக்க அச்சுடன் வரிசையாக இல்லை. அதற்குப் பதிலாக புவியின் அச்சு அதன் சுற்றுப் பாதைக்கு 23.44 பாகை சற்றுச் சாய்ந்துள்ளது.
பூமி 23.5 பாகை சாய்ந்து இருக்க முக்கியமான காரணம் அதன் வடக்கு (மேல்) பகுதியில் நிலப்பரப்பு நிறை தென் பகுதியைவிட வேறுபடுவதால் தான் எனச் சொல்லப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Obliquity (சரிவு) என்று அழைக்கப்படுகிறது. புவி தனது அச்சில் 23.44 பாகை சாய்ந்திருப்பதாலேயே பருவ காலங்கள் ஏற்படுகின்றன. புவியின் அச்சுச் சாயாமல் நிமிர்ந்து (90 பாகை) இருந்திருந்தால் பருவ காலங்கள் ஏற்படாது.
புவி மட்டுமன்று சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுமே தமது அச்சில் குறிப்பிட்ட அளவு சாய்ந்து உள்ளன.
இந்த சாய்வு என்பது ஆண்டின் ஒரு பாதியில் பூமியின் வடக்குப் பகுதி சூரியனை நோக்கி சற்று சாய்ந்து கிடக்கிறது. ஆண்டின் மற்ற பாதியில் தலைகீழாக சூரியனை நோக்காது வடக்கே சாய்ந்து கிடக்கிறது.
வடக்கு அரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்திருக்கும் தருணத்தில், வடக்கு அரைக்கோளம் அதன் கோடைகாலத்தை அனுபவிக்கிறது. அதே நேரத்தில் தெற்கு அரைக்கோளம் குளிர்காலத்தை அனுபவிக்கிறது.
புவி தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும் போது அது ஒரு நீள் வட்டப் பாதையில் (ecliptic) சூரியனைச் சுற்றிவருகிறது. ஆனால் எமது கண்களுக்கு புவியை சூரியன் சுற்றி வருகிறது போலத் தெரிகிறது. இது காட்சிப் பிழையாகும் (visual error) ஆகும். கண்ணால் பார்ப்பதுவும் முழு உண்மையாக இருக்காது என்பதற்கு புவி – சூரியனின் சுழற்சிகளைக் கூட நாம் சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்தக் காட்சிப் பிழை காரணமாகவே மிக நீண்ட காலமாக – அரிஸ்தோட்டல் அவருக்குப் பின் தொலமி ஈறாக – வானியலாளர்கள், மதவாதிகள் புவி இந்த அண்டத்தின் (universe) மையத்தில் இருப்பதாகச் சொல்லி வந்தார்கள். சூரியன் அதனைச் சுற்றிவருவாதாகச் சொன்னார்கள்!
அரிஸ்தோட்டல் – தொலமி இருவரது புவிமைய அண்டம் மேற்குலக சிந்தனையை 2,000 ஆண்டு காலம் ஆட்டிப்படைத்தன.
பதினாறாம் நூற்றாண்டில்தான் போலந்து நாட்டின் புகழ்பெற்ற வானியலாளர் நிக்கலஸ் கோபெர்னிக்கஸ் (கிபி1473-1543) ஒரு புதிய கோட்பாட்டை முன்மொழிந்தார். கோபெர்னிக்கஸ் ஒரு முழுநேர வானியலாளராக இருந்ததில்லை. அவர் கிறித்தவ தேவாலாயத்தில் குருவாக இருந்தவர்.
நிக்கலஸ் கோபெர்னிக்கஸ் “வானுலக உடலிகளின் சுற்றுக்கள்” (On the Revolutions of Heavenly Bodies) என்ற புகழ்பெற்ற நூல் அவரது ஓய்வு நேரத்தில் எழுதப்பட்டதாகும். அவர் “வானுலக உடலிகளின் சுற்றுக்கள்” (On the Revolutions of Heavenly Bodies) என்ற நூல் கோபெர்னிக்கஸ் மரணப் படுக்கையில் படுத்திருந்தபோதுதான் வெளியிடப்பட்டது. அவரது காலத்தில் புவிமையக் கோட்பாடு கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடாக இருந்தது. அந்தக் கோட்பாட்டை மறுத்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். “வானுலக உடலிகளின் சுற்றுக்கள்” என்ற நூல் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் படிப்பித்துக் கொடுப்பது போப்பாண்டவரால் தடைசெய்யப்பட்டிருந்தது.
வானுலக உடலிகளின் சுற்றுக்கள் என்ற நூலில் புவி அல்ல, சூரியன், சூரிய மண்டலத்தின் மையப் பகுதியில் இருக்கிறது என்ற கோட்பாடு முன்மொழியப்பட்டது. அதன் அடிப்படையில் ஞாயிறை வரிசையாகச் சுற்றி வரும் கோள்களில் புவி மூன்றாவது இடத்தில் வைக்கப்பட்டது. இந்த மாற்றம் கோபெர்னிக்கன் புரட்சி (Copernican Revolution ) எனச் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
கோபெர்னிக்கன் ஞாயிறுமைய கோட்பாடு 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அவரது சமகால வானியலாளர்களாலும் இயற்கை தத்துவவாதிகளாலும் பொருத்தமற்றது என எண்ணப்பட்டது.
அவரது கோட்பாடுக்கு ஆதரவு வழங்கியவர்களில் யோகான்ஸ் கெப்லர் (1571-1630) மற்றும் கலிலியோ கலிலி (1564-1642) முன்னணியில் இருந்தார்கள். இறுதியாக கோபெர்னிக்கன் கோட்பாட்டுக்கு அறிவியல் அடிப்படையில் வலிமை சேர்த்த பெருமை சேர் அய்சக் நியூட்டனது ‘உலகளாவிய ஈர்ப்பு மூல அடிப்படைக் கோட்பாடு’ (Theory of Universal Gravitation) ஆகும்.
புதிய ஒழுங்கின்படி புவி இன்னொரு கோள், நிலா, ஞாயிறை அல்ல புவியைச் சுற்றி வருகிற உபகோள், வெகு தொலைவில் உள்ள விண்மீன்கள் ஞாயிறைச் சுற்றுவதில்லை, புவி தன்னைத்தானே 24 மணித்தியாலத்துக்கு ஒருமுறை வலம் இருந்து இடமாக (மேற்கு – கிழக்காக) சுற்றுகிறது, அப்படிச் சுற்றும் போது வானத்தில் உள்ள விண்மீன்கள் புவியை எதிர்த்திசையில் (கிழக்கு – மேற்காக) சுற்றுவதுபோன்ற ஒரு மாயத் தோற்றத்தை (உணர்வுக் காட்சியை) உண்டாக்குகிறது என எண்பிக்கப்பட்டது.
வெட்ப மண்டலப் பகுதிக்கு அப்பால் (Beyond Tropics) ஒருபோதும் சூரியன் தலைக்கு மேல் செங்குத்தாக விழுவது இல்லை. அயன மண்டலத்திற்கு அப்பால் உள்ள இந்த பகுதிகளில் நான்கு பருவ காலங்கள் தோன்றுகின்றன. கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம், வசந்த காலம் ஆகியவையே அந்த நான்கு பருவகாலங்கள் ஆகும்.
பருவகால மாற்றத்தினால் மட்டுமே உயிர்ச் சுழற்சி நடைபெறுகிறது! எப்போதும் வெயில் அடித்தால் அல்லது எப்போதும் மழைபெய்தால் உணவுப் பொருட்களைக் கூட உற்பத்தி செய்ய முடியாது போய்விடும். ! அது போல எப்பொழுதும் பனிப்பொழிவு உள்ள நாடுகளில் உயிரினம் வாழ்வது அரிதாக இருக்கும்.
பருவகால மாற்றங்கள் மற்றும் கால நிலை மாற்றத்தினால் உயிர் வாழ்வதற்கான சமநிலை புவியில் உள்ளது! இல்லாவிட்டால் புவியும் ஒரு உயிர்வாழ தகுதியற்ற கோளாக மட்டுமே இருந்திருக்கும்!
சூரியன் புவியைச் சுற்றிவரும் போது அதன் பாதை ஆறு மாதங்கள் வட அரைக் கோளத்திலும் அடுத்த ஆறுமாதம் தென் அரைக் கோளத்திலும் காணப்படுகிறது. வட திசைப் பயணத்தை உத்தராயணம் என்றும் தென்திசைப் பயணத்தை தட்சிணாயனம் என்றும் கூறுவர்.
சூரியன் யூன் 21 இல் தனது வட திசைப் பயணத்தை கடகக் கோட்டில் முடித்துக் கொண்டு தென்திசை நோக்கிப் பயணிக்கிறது. ஆறு மாதங்கள் கழித்து சூரியன் தன் தென்திசை பயணத்தை மகரக் கோட்டில் (இராசி) இருந்து தொடங்குகிறது. சூரியன் இராசி மண்டலத்தில் மகர இராசிக்கு பிரவேசிக்கும் நாளே மகர கதிர்த்திருப்பம் ஆகும். இதனைக் குளிர்கால கதிர்த்திருப்பம் (Winter Solstice) என அழைக்கிறார்கள். இது டிசெம்பர் 21-22 இல் தொடங்கி மார்ச் 20-21 வரை நீடிக்கிறது. வட அரைக் கோளத்தில் டிசெம்பர் 21-22 சிறிய பகல்பொழுதையும் நீண்ட இரவையும் கொண்டிருக்கும்.
இந்த வெட்ப கால, குளிர் கால கதிர்த்திருப்பங்களுக்கு அப்பால் சூரியன் தனது பாதையில் வான் நடுக்கோட்டை (celestial equater) இரண்டுமுறை வெட்டுகிறது. வடதிசைப் பயணத்தில் மார்ச் 21-22 ஆம் திகதி இடம்பெறுகிறது. தென்திசைப் பயணத்தில் செப்தெம்பர் 21-22 இல் இடம்பெறுகிறது. இந்த நாட்களில் உலகம் முழுதும் பேரளவு 12 மணித்தியால பகலும் 12 மணித்தியால இரவும் காணப்படும்.
மார்ச் 21-22 இல் வட அரைக் கோணத்தில் வேனில் காலம் ( Spring Equinox) ) தொடங்குகிறது. செப்தெம்பர் 21-22 இல் இலையுதிர்கால காலம் (Autumn equinox) தொடங்குகிறது. எனவே வேனில், கோடை, இலையுதிர்காலம், பனிக்காலம் என பருவங்கள் அந்த வரிசையில் மாறி மாறி இடம்பெறுகின்றன.
ஏற்கனவே கூறியவாறு தென் அரைக் கோளத்தில் இந்தப் பருவங்கள் தலைகீழாக மாறிவரும். வட அரைக்கோளத்தில் வேனில், கோடை, இலையுதிர், பனிக் காலம் தென் அரைக் கோளத்தில் இலையுதிர், பனி, வேனில், கோடையாக மாறி வரும்.
வானியலாளர்கள் கடந்த 2000 ஆண்டுகளில் புவியானது தனது அச்சில், சுமார் 24 நாட்கள் முன்னோக்கிச் சென்றுவிட்டதாகக் கணித்திருக்கிறார்கள். இன்று யூன் 21/22 இல் தொடங்கும் கோடைகால உச்சம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யூலை 18/19 இலும் இன்று டிசம்பர் 21/22இல் நிகழும் பனி உச்சம், அந்த நாளில் சனவரி 17/18 இலும் இடம்பெற்றிருக்கும்!
அதே போல் இன்று மார்ச்சு 21/ 22 இல் நிகழும் வேனில் சமநாள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ஏப்பிரல் 16/17 இல் நிகழ்ந்திருக்கும்! அதேபோல், செப்டம்பர் 22/23இல் இன்று நிகழும் கூதிர் சமநாள் என்றோ ஒருநாள் அக்டோபர் 17/18இல் நிகழ்ந்திருக்கும். இந்த அயனாம்ச வேறுபாடுகள் 24,500 ஆண்டுகளுக்குப் பின்னர் தானாகவே திருத்தப்பட்டுவிடும்.
ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, சமநாள் – உச்சநாள் தொடர்பான அறிவியல், அறிந்தோ அறியாமலோ நம் முன்னோர்கள் இந்த நான்கு நாட்களுக்கும் – அந்த நான்கு மாதங்களின் பிறப்பிற்கும் பெரும் முக்கியம் கொடுத்திருக்கிறார்கள். அந்த நான்கு மாதங்களின் பிறப்பையும் விழாவெடுத்து வரவேற்றிருக்கிறார்கள். இந்த இரண்டாயிரம் ஆண்டுகால இடைவெளியில், அவற்றுக்கு விழாவெடுக்கும் மரபு, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய நான்கு மாதப்பிறப்புகளையும் நான்கு பண்டிகைகளாகவே மாற்றியிருக்கின்றது!
ஆக சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்,
சித்திரை ஒன்று = வேனில் சமநாள்
ஆடி ஒன்று = கோடை உச்சநாள்
ஐப்பசி ஒன்று = கூதிர் சமநாள்
தை ஒன்று = பனி உச்சநாள்
தமிழ் நாட்காட்டி இன்றைவரை மாற்றமின்றி பழைய கணிப்புகளையே கைக்கொள்கின்றது. எனவே, அதன் கணிப்புப்படி, மேழம் முதலான வான்மனைகளூடு சூரியன் நகர்வது இன்றும் ஏப்பிரல் 13/.14 முதலான நாட்களிலேயே நடக்கின்றது. மேலைத்தேய வானியல் படி, அந்நாள் மார்ச்சிற்கு (பங்குனி) நகர்ந்தது பற்றி அது கவலைப்படுவதில்லை.
ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, சமநாள் – உச்சநாள் தொடர்பான அறிவியல், அறிந்தோ அறியாமலோ நம் முன்னோர்கள் இந்த நான்கு நாட்களுக்கும் – அந்த நான்கு மாதங்களின் பிறப்பிற்கும் பெரும் முக்கியம் கொடுத்திருக்கிறார்கள். அந்த நான்கு மாதங்களின் பிறப்பையும் விழாவெடுத்து வரவேற்றிருக்கிறார்கள். இந்த இரண்டாயிரம் ஆண்டுகால இடைவெளியில், அவற்றுக்கு விழாவெடுக்கும் மரபு, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய நான்கு மாதப்பிறப்புகளையும் நான்கு பண்டிகைகளாகவே மாற்றியிருக்கின்றது!
சரி, சித்திரை ஒன்று புத்தாண்டாகிவிட்டது. தை ஒன்று, தைப்பொங்கலாகிவிட்டது. மற்ற இரண்டுக்கும் என்ன நேர்ந்தது?
ஒன்றுமே நேரவில்லை! இன்றும் நம் பக்கத்தில்தான் வாழ்கின்றன!
ஆடி மாத முதலாம் தேதியை – ஆடிப்பிறப்பை பெருவிழாவாகக் கொண்டாடுவது சுமார் 20, 30 ஆண்டுகளுக்கு முன்வரை ஈழத்தில் பெருவழக்கு! இன்றும் அது தொடர்கின்றதெனினும் மிக மிக அருகிவிட்டது.
ஐப்பசிப் பிறப்பும் செத்துவிடவில்லை. அது துலை விழு (துலா விஷூ)வாக இன்றும் மலையாளத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே!
முன்னாள் தமிழர்களான மலையாளிகளது புத்தாண்டு மேழ விழு (மேஷ விஷூ)வான சித்திரையிலேயே வந்தாலும், அதைவிடச் சிறப்பாக துலை விழுவைக் கொண்டாடுவது சேரநாட்டவர் வழக்கம்.
ஆகவே ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்! சித்திரை ஆண்டுப்பிறப்பு உட்பட ஆடி, ஐப்பசி, தைப் பிறப்புக்கள் தமிழர் நம் பாரம்பரிய பண்டிகை நாட்கள் என அடித்துக்கூறலாம். பலரும் கூறுவதுபோல், நிச்சயமாக சித்திரைப்பிறப்பு ஆரியன் திணித்ததல்ல என்பதற்கு இவை யாவும் போதுமான சான்றுகள்!
சரி, தையும் பண்டைய தமிழன் பண்டிகை தானே – அதை நாங்கள் ஆண்டுப்பிறப்பாகக் கொண்டாடினால் என்ன கெட்டுப் போய்விடும்?
Leave a Reply
You must be logged in to post a comment.