குறள் எண் 0849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. (அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:849) பொழிப்பு (மு வரதராசன்): அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பான் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான். |
மணக்குடவர் உரை: அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்: அவ்வறியாதவன் தான் அறிந்தபடியை அறிந்தானாயிருக்குமாதலான். இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.பரிமேலழகர் உரை: காணாதாற் காட்டுவான் தான் காணான் – தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்: காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் – இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொளுவுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.)வ சுப மாணிக்கம் உரை: அறிவிலி தான் கண்டதையே கண்டவன்; அவனை அறிவுறுத்துபவன் அறியாதவன். |
பொருள்கோள் வரிஅமைப்பு: காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான் தான் கண்டவாறு கண்டானாம்.பதவுரை: காணாதான்- புல்லறிவாளன், அறியாதான்; காட்டுவான்-அறிவிக்கப் புகுகின்றவன்; தான்-தான்; காணான்-அறியான்; காணாதான் – அறிவுக் குறையுடையவன்; கண்டானாம்-அறிந்தானாம்; தான்-தான்; கண்டவாறு-அறிந்தபடி. |
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்: பரிப்பெருமாள்: அறியாதானை அறிவிக்கப் புகுவான் தான் அறியானாகும்: பரிதி: புல்லறிவற்கு அறிவு சொல்லுவான்றான் இந்தப் புல்லறிவன்; காலிங்கர்: தான் கற்றதொன்றின் மெய்ப்பொருளைக் காண அறியாத புல்லறிவாளன் தான் கண்டவாற்றையே குறித்து ஒன்றைக் கசடறக் காட்டக் கருதுவான் யாவன்; அவன் தானும் மற்று அன்னனே ஆம்; பரிமேலழகர்: தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்;’அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்’ என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியும் காலிங்கரும் மாறுபாடாக ‘புல்லறிவற்கு அறிவு சொல்லுவான் புல்லறிவன்’ என்றனர்.இன்றைய ஆசிரியர்கள் ‘அறிவில்லாதவனை அறிவிக்கப் புகுவான், அவனாற் பழிக்கப்பட்டுத் தான் அறிவில்லாதான் ஆவான்’, ‘நல்லறிவுகளைத் தானே அறியாதவனாகிய புல்லறிவாளன் ஒன்றும் அறியாத ஒருவனுக்கு அறிவு சொல்லுவான்’, ‘ஒன்றும் அறியாதவனுக்கு யாதாவது அறிவிக்கப் புகுந்தவன் அறியாதவனாய்க் கருதப்படுவான்’, ‘என்ன கூறியும் அறியாதானை அறிவிக்கப் புகுவான் தான் அறியானாய் விடுவான்’ என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் அறியாதவன் என்பது இப்பகுதியின் பொருள்.கண்டானாம் தான்கண்ட வாறு: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அவ்வறியாதவன் தான் அறிந்தபடியை அறிந்தானாயிருக்குமாதலான். மணக்குடவர் குறிப்புரை: இது கொண்டது விடாமை புல்லறி வென்றது. பரிப்பெருமாள்: அவ்வறியாதவன் அறிந்தபடியே அறிந்திருக்கும் ஆதலான். பரிப்பெருமாள் குறிப்புரை: இது கொண்டது விடாமை புல்லறிவு என்றது. பரிதி: அந்தப் புல்லறிவற்கு என்னறிவு சொல்லப் பெற்றான் என்றவாறு. காலிங்கர்: என்னை எனின், தான் காட்டும் மெய்ப்பொருள் காணாதானாகிய புல்லறிவாளன் தான் கண்டவற்றையே கண்டானாய் விடும் இத்துணை அல்லது, ஓர்ந்து1 கைக்கொள்ளும் கருத்தினன் அல்லன் என்றவாறு. [ஓர்ந்து கைக்கொள்ளும் – ஆய்ந்து மேற்கொள்ளும்] பரிமேலழகர்: இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; பரிமேலழகர் குறிப்புரை: புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொளுவுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம். [கொளுவுதல் -கொளுத்துதல், நல்லறிவைக் கொள்ளுமாறு செய்தல்]’புல்லறிவாளன் தான் அறிந்தபடியே அறிந்தானாயிருக்குமாதலான்’ என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.இன்றைய ஆசிரியர்கள் ‘அறிவில்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய் இருப்பான்’, ‘(அது எப்படி முடியுமென்றால்) அந்த ஒன்றுமறியாத (நிரபராதியும்) இந்த புல்லறிவாளனுக்குள்ள அற்ப புத்தியுள்ளவனாகவே ஆகிவிடுவான்’, ‘முற்றும் அறியாதவன் விடாப்பிடியால் தான் கண்ட அளவில் அறிந்தவனாகக் கூடும்’, ‘அறியும் தன்மை இல்லாதான் தான் அறிந்தபடியே (தவறாக) அறிந்தவனாவான்’ என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.புல்லறிவாளன் தான் அறிந்த வகையில் அறிந்தவனாக இருப்பான் என்பது இப்பகுதியின் பொருள். |
நிறையுரை: அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் அறியாதவன்; புல்லறிவாளன் தான் அறிந்த வகையில் அறிந்தவனாக இருப்பான் என்பது பாடலின் பொருள். இக்குறள் கூறும் செய்தி என்ன? |
புல்லறிவாளனுக்கு அறிவு புகட்ட நேரத்தையும் ஆற்றலையும் வீணாய் செலவழிக்க வேண்டியதில்லை.சிற்றறிவினனுக்கு ஒன்றைத் தெரிவிக்க முயலுபவன் தானே தன்னை அறியாதவனாக உணரும் நிலைக்கு வந்துவிடுவான்; அறிவுக்குறைவுற்றவனோ தான் முன்பு இருந்த நிலையிலேயே இருந்து கொண்டு தான் எல்லாம் அறிந்தவன் என்று தனக்குத் தானே எண்ணிக் கொள்வான். இப்பாடலிலுள்ள காணாதான் என்ற சொல் புல்லறிவாளனைச் சுட்டும். அவன் தனக்கு உரைத்தவனையும் அறிவில்லாதவனாக உணரச்செய்து தான் எல்லாம் அறிந்தவன்போல தன் கருத்தில் விடாப்பிடியாக இருப்பான். ஒருபொருளில் ஒருகருத்து உண்டாகிவிட்டால் அது அவன் மனத்தில் உறைந்து (fixation) போய்விடுகிறது. அதை ஒருபொழுதும் மாற்றிக்கொள்ள மாட்டான். இதனால் அவனது மனவளர்ச்சி தடைப்பட்டு, உண்மை காணாமல், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான்.இக்குறட்பாவை வாய்விட்டுப் படித்தால் ஒருவகை ஒலிநயத்தை உணரலாம். ஒரே ஒலியமைப்பு உள்ள சொற்கள் திரும்பத் திரும்ப வருவதால் இந்த ஒலிநயம் அமைகிறது. |
இக்குறள் கூறும் செய்தி என்ன?மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா. தன்னை எல்லாம் அறிந்தவனாகச் செருக்கி யிருப்பது புல்லறிவாகும். புல்லறிவுடையவன் ஓர் பொருளை எத்துணை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியும் தான் கொண்டதே அறிவு என்று முரண்டு பிடிப்பான். தான் கொண்டதே கொண்டு அதை விடமாட்டான். என்னதான் முயன்றாலும் அவன் மனமேற்கும்படி செய்வது முடியாத செயல். புல்லறிவாளன் நல்லறிவைக் கொள்ளான். தனது சிற்றறிவு காண்பதே அறிவு என்பான். அவனுக்கு நல்லறிவைக் கொள்ளுமாறு செய்தல் கடினம். அவனுக்கு நல்லறிவு கொளுத்த முயல்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான். அறிவுக்குறையுடையவன், தான் அறிந்தது கொண்டு, அறிவுடையவனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளுவான். தான் கண்டதே அறிவு என்று சாதித்துப் பிழையானவற்றையும் சரியென்றே வன்மையாகப் பேசும் இயல்புடையவனாயிருப்பான். இவன் தான் கற்றது உலக அளவு என்று எண்ணிக்கொண்டு தவறானவற்றையே வலியுறுத்தித் திரிவான்.புல்லறிவாளன் தான் காணாதது எதுவுமில்லை; தனக்கு எல்லாம் தெரியும் என்ற நிலையில் இருப்பவன்; அவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான்; அவனுக்கு அறிவுரை கூறுவது பயன் தராது என்பன இக்குறள் கூறும் செய்திகள். |
அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் அறியாதவன்; புல்லறிவாளன் தான் அறிந்த வகையில் அறிந்தவனாக இருப்பான் என்பது இக்குறட்கருத்து. அறிவைக் கொடுத்தாலும் கொள்ளாமை புல்லறிவாண்மை.புல்லறிவாளனை அறிவுறுத்துபவன் அறியாதவன்; புல்லறிவாளன் தான் அறிந்தவரையே அறிந்தவன். |
Leave a Reply
You must be logged in to post a comment.