இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை – 47

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை – 47
கஜினி முகமதுவின் வாள்

உண்டியலை உடைத்தால் காசு கிடைக்கும் என்பதுபோல், கோயிலை உடைத்தால் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்பது கஜினி முகமதுவுக்குத் தெரியும்;பிரீமியம் ஸ்டோரி

பிர்தௌசி ஒரு புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர். அரண்மனைப் புலவரான இவரை ஒரு நாள் கஜினி முகமது அழைத்து, பாரசீகப் பேரரசின் மகத்தான வரலாற்றை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். `ஓ, தாராளமாக எழுதுகிறேன் மன்னா’ என்று மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்ட பிர்தௌசி, அடுத்த 27 ஆண்டுகள் உழைத்து, செதுக்கி உருவாக்கிய மாபெரும் காப்பியம்தான் ‘ஷாநாமா.’ 50,000 ஈரடிச் செய்யுள்களைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட ஷாநாமா உலகின் நீளமான காப்பியங்களில் ஒன்று. பாரசீகத்தின் வரலாற்றைத் தொன்மக் கதைகளோடு இணைத்து உருவாக்கப்பட்ட அழகிய படைப்பு இது. `கவலைப்படாமல் எழுதுங்கள், ஒவ்வொரு செய்யுளுக்கும் ஒரு தினார் அளிக்கிறேன்’ என்று ஊக்கமளித்திருந்தார் கஜினி முகமது.

கவிஞர் என்னவோ தன் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார். ஆனால் கஜினி முகமது ஒப்புக்கொண்ட சன்மானத்தை அளிக்க மறுத்துவிட்டார். வெகுண்டெழுந்தார் பிர்தௌசி. ‘ஏ, கொடுங்கோலனே! சிறுமை மிக்கவனே! என் சினமும் என் சொற்களிலிருந்து புறப்பட்டுவரும் தீயும் உன்னை நடுநடுங்க வைக்கும்! சொர்க்கம் உன்னை ஒருபோதும் மன்னிக்காது!’ ஒரு கவிஞனின் சாபத்துக்கு ஆளானதாலோ என்னவோ, வரலாற்றில் இவர் பெயரைச் சுற்றி அடர் இருள் இன்னமும் படர்ந்துகிடக்கிறது. இந்தியாவுக்கு இதுவரை வருகை தந்தவர்களில் அதிக வெறுப்பையும், அதிக எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் கஜினி முகமதுவின் பெயர் இடம்பெற்றுவிட்டது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 47 - கஜினி முகமதுவின் வாள்

பாஹியானையும் யுவான் சுவாங்கையும் அறிவுச் செல்வம் கவர்ந்திழுத்தது என்றால், கஜினி முகமதுவை இந்தியாவின் பொருள் செல்வம் ஈர்த்தது. 1000-ம் ஆண்டுவாக்கில் பெரும் படையைத் திரட்டிக்கொண்டு வட இந்தியாவுக்குள் நுழைந்தார். இந்தியா குறித்துக் கேள்விப்பட்ட கதைகளெல்லாம் கதைகளல்ல என்பதைக் கண்ணாரக் கண்டார். உலகிலேயே வளமான இடம், உலகின் பலவீனமான இடமாகவும் இருந்ததைக் கண்டு அவர் கண்கள் விரிந்தன. வாள் துடித்தது.

அடுத்த 25 ஆண்டுகளில் 17 முறை படையெடுத்து இந்தியாவுக்கு வந்தார் கஜினி முகமது. கோடை விடுமுறைக்கு வருவதுபோல் கொளுத்தும் வெயிலில் புழுதி கிளப்பியபடி அவர் படைகள் வந்துசேரும். பருவமழை வருவதற்கு முன்னால் கிளம்பிச் சென்றுவிடும். மழை அதிகரித்து, பஞ்சாப் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுவிட்டால் ஊர் போய்ச் சேர முடியாது என்பதால், இந்த ஏற்பாடுபோலும். தொடங்கியது வடக்கில் என்றாலும், மத்திய இந்தியா, கிழக்கு, தெற்கு என்று ஒவ்வோர் ஆண்டும் கொள்ளையை விரிவுபடுத்திக் கொண்டே சென்றார் கஜினி முகமது.

செல்வம் எங்கே இருக்கும் என்று தேட வேண்டிய அவசியமே இல்லை. உண்டியலை உடைத்தால் காசு கிடைக்கும் என்பதுபோல், கோயிலை உடைத்தால் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்பது கஜினி முகமதுவுக்குத் தெரியும்; உடைப்பார். தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் என்று வழிய வழிய சூறையாடி எடுத்துச் சென்றார். வட இந்தியாவை ஆண்டுவந்த பிரதிகாரப் பேரரசு, மத்திய இந்தியாவின் சந்தேலர்கள், குவாலியரின் ராஜபுத்திரர்கள் என்று யாராலும் கஜினி முகமதுவின் வருகையையும் கொள்ளையையும் தடுத்துநிறுத்த முடியவில்லை. கனோஜ், மதுரா, தானேஸ்வரம் ஆகிய பகுதிகள் கஜினி முகமது வந்துசென்ற பிறகு சிதிலங்களாகவே மாறிவிட்டன. எல்லாவற்றுக்கும் உச்சமாகக் கருதப்படுவது குஜராத் சோமநாதர் சிவன் கோயில் இடிப்பு.

அலெக்சாண்டருக்குப் பிறகு, நாம் சந்திக்கும் அடுத்த அந்நிய ஆக்கிரமிப்பாளர் கஜினி முகமது. கஜினி என்பது இப்போதைய ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஒரு நகரம். அங்கே பிறந்தவர் என்பதால் முகமதுவின் பெயரோடு ஊர் பேரும் ஒட்டிக்கொண்டுவிட்டது. அகண்ட கஜினி பேரரசு உருவாக்கும் பெருங்கனவோடு ஒரு பக்கம் ஆக்கிரமிப்பிலும், இன்னொரு பக்கம் கொள்ளையிலும் இறங்கினார் கஜினி முகமது. ஆட்சியிலிருந்த 30 ஆண்டுகளும் இந்த இரண்டும் தடையின்றித் தொடர்ந்தன. கோயில் சொத்துகளை மட்டுமின்றி, யானைகளையும் அவர் இங்கிருந்து கவர்ந்து சென்றிருக்கிறார். தவிரவும், இந்தியர்கள் பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடிமைகளாகவும், போர் வீரர்களாகவும் அவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெருமளவிலான மதமாற்றங்களும் நடைபெற்றிருப்பதாகக் குறிப்புகள் சொல்கின்றன.

இங்கேதான் நம் பார்வை சிக்கலானதாக மாறுகிறது. கஜினி முகமது இந்தியாவில் இழைத்த கொடுமைகளுக்கான சான்றுகளை, அவரே அமர்த்திய அரசவை அறிஞர்களே போதுமான அளவுக்கு வழங்கியிருக்கிறார்கள். ஆனால், கொடுமைகள் என்னும் தலைப்பில் அல்ல. எங்கள் பேரரசர் எத்தனை ஆயிரம் இந்துக்களைக் கொன்றிருக்கிறார் தெரியுமா… இஸ்லாத்துக்கு விரோதமான எத்தனை கோயில்களை அவர் கரங்கள் உடைத்து நொறுக்கியிருக்கின்றன தெரியுமா… எத்தனை பேரை வாள் முனையில் அவர் மதமாற்றம் செய்து நம் மதத்தை உய்வித்திருக்கிறார் என்பதை அறிவீர்களா? என்கிறரீதியில் தங்கள் பேரரசரை ஏற்றியும் போற்றியும் அமைந்துள்ள பதிவுகள் இவை.

அதனாலேயே இவற்றை முழுக்க நம்பி ஏற்க இயலாது என்று ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள். சோமநாதர் கோயில் பற்றித் தனி ஆய்வு நூலையே அவர் எழுதியிருக்கிறார். கஜினி முகமது ஒரு கொடுங்கோலர்தான்; கொடுந்தவறுகள் இழைத்தவர்தான். கோயில்களிலிருந்து செல்வங்களை வாரிச்சுருட்டிக் கொண்டவர்தான். ஐயமில்லை. ஆனால், இவற்றுக்கெல்லாம் வகுப்புவாதச் சாயம் பூசுவது எந்த அளவுக்குச் சரியாக இருக்க முடியும்… மதம்தான் அவருடைய உந்துசக்தியா… இந்துக் கோயில்களை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவற்றை இடித்தாரா அல்லது கொள்ளையடிப்பதற்காக இடித்தாரா?

இந்துக்களுக்கு என்னென்ன கொடுமைகள் இழைத்தாரோ அதே கொடுமைகளைத்தான் தாம் ஆக்கிரமித்த பிற பகுதிகளிலும் கஜினி முகமது இழைத்திருக்கிறார். இந்துக்களிடமிருந்து மட்டுமல்ல, இஸ்லாமி யர்களிடமிருந்தும் அவர் கொள்ளையடித்தார், அவர்களையும் அடிமைப்படுத்தியிருக்கிறார். அவரிடம் இருந்தது இந்து வெறுப்பு ஒன்றுதான் என்றால், தன் படைகளில் ஏன் அவர் இந்துக்களை இணைத்துக்கொள்ள வேண்டும்… சிப்பாய்களாக மட்டுமின்றி, ராணுவத் தலைமையிடங்களிலும் ஏன் இந்துக்களை அமர்த்த வேண்டும்?

கஜினி முகமது குறித்து இவ்வாறெல்லாம் நாம் இன்று உரையாடிக் கொண்டிருப்பதற்கும், கேள்விகள் எழுப்பிக்கொண்டிருப்பதற்கும் காரணம், அவரே நியமித்த வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்துள்ள பதிவுகள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அல்பெரூனி. இந்தியாவுக்குப் படையெடுத்துவரும்போது அவருடன் இணைந்து வந்தவர் அல்பெரூனி. இணைந்து என்பதைவிட, அவரால் இழுத்துவரப்பட்டவர் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். கஜினி எதை விரும்புவாரோ அதை மட்டுமே எழுத முடியும் என்பதால், அவருடைய சாகசங்களை மட்டுமே முதலில் பதிவுசெய்தார் அல்பெரூனி. கஜினி இறந்த பிறகு, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தன் மனதுக்குப்பட்டதை அச்சமின்றி, வெளிப்படையாக எழுத ஆரம்பித்தார். இந்தியாவிலேயே சில ஆண்டுகள் தங்கியிருக்கும் வாய்ப்பு அமைந்ததால், இந்தியாவை நுணுக்கமாக ஆராயவும், பதிவுசெய்யவும் அவருக்கு வாய்ப்பு அமைந்தது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 47 - கஜினி முகமதுவின் வாள்

அல்பெரூனியை ஒரே சொல்லில் அறிமுகம் செய்ய வேண்டுமென்றால், `பல்துறையறிஞர்’ என்று அழைக்கலாம். அல் மசுடிபோலவே இவரும் இஸ்லாமிய மறுமலர்ச்சியால் வளர்த்தெடுக்கப்பட்டவர். இந்த நோக்கத்துக்காக, அந்த நோக்கத்துக்காக என்றில்லாமல், அறிவை அறிவுக்காகத் தேடிச் சேகரித்தவர். வானியல், கணிதம், இயற்பியல், புவியியல், இலக்கணம், மொழி, மருத்துவம், வரலாறு என்று அவர் ஆர்வம் செலுத்திய, ஆழப்படுத்திய துறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவர் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு துறையையும் கற்றுத் தேர்ந்ததைப்போல், துறைகளும் அவர் எமக்கானவர் என்று போட்டிபோட்டுக்கொண்டு உரிமை கொண்டாடின. முதல் மானுடவியலாளர். ஒரு மதத்தை இன்னொன்றோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வுசெய்யும் ஒரு புதுத் துறையின் தந்தை. புவி அறிவியலின்கீழ் ஒரு பிரிவைத் தொடங்கிவைத்தவர். இந்தியவியலின் தந்தை. இப்படிப் பல புகழ் மகுடங்கள் அவருக்கு.

அல்பெரூனி எழுதிய புத்தகங்கள் என்று இன்று நம்மிடம் இருப்பவை 22. அறிவியல், தத்துவம், கணிதம் என்று பல துறைகளில் அவர் எழுதிவைத்தவை மொத்தம் 141 நூல்கள். இன்றைய உஸ்பெகிஸ்தானில் 973-ம் ஆண்டு பிறந்தவர் அல்பெரூனி. ஒரே நேரத்தில் இஸ்லாத்தின்மீதும் அறிவியலின்மீதும் அவர் ஆர்வம் படர்ந்தது. இறுதிவரை இரண்டிலும் அவர் தோய்ந்திருந்தார். புதிய மொழிகளைக் கற்பது அவருக்கு எளிதாக இருந்தது. சம்ஸ்கிருதம், ஹீப்ரூ, பாரசீகம், சிரியன், அரபு என்று தொடங்கி, பல மொழிகளை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டார். சாக்ரடீஸ், பிளேட்டோ தொடங்கி கிரேக்கச் சிந்தனையாளர்களின் தாக்கத்துக்கு உள்ளானார். அறிவுத் தேடல் அவரைப் பல இடங்களுக்கு இட்டுச் சென்றது. அங்கு சுற்றி, இங்கு சுற்றி கடைசியில் கஜினி முகமதுவின் நிழலில் ஒதுங்கினார்.

தன் வாள் முனையின் கீழ், அவரை அடக்கிவிட முடியும் என்றுதான் கஜினி நினைத்தார். அல்பெரூனியோ தனது பேனாவின் முனையால் கஜினியையும், கஜினியால் வெல்ல முடியாத இந்தியாவையும் ஒருசேர வென்றெடுத்தார்.

இந்தியா, கஜினி முகமதுவை வெறுத்தது. அல்பெரூனியை அள்ளியணைத்துக்கொண்டது. கஜினி இந்தியாவை இருளில் தள்ளினார் என்றால், அல்பெரூனி ஒளி பாய்ச்சினார். கஜினி, சுரண்டிச் சுரண்டி எடுத்துச் சென்றார் என்றால் அல்பெரூனி அள்ளி அள்ளி வழங்கிவிட்டுச் சென்றார். கஜினியின் மதம்தான் அல்பெரூனியின் மதமும். ஆனால் அல்பெரூனியின் நம்பிக்கை பரந்தும் விரிந்தும் இருந்ததால், இந்தியாவால் அவர் கரங்களுக்குள் கட்டுண்டு கிடக்க முடிந்தது.

(விரியும்)

https://www.vikatan.com/news/general-news/series-about-in-history-of-india-47

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை – 62 – ஒரு பயணி எப்படி இருக்கக் கூடாது?

MARUDHAN GHASSIFKHAN K P M

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

காமாவின் பயண அனுபவங்களையும், பார்வைகளையும் அவரோடு வந்த ஒருவரில் (அவர் பெயர் தெரியவில்லை) பதிவுகள் வாயிலாக அறிந்துகொள்கிறோம்.பிரீமியம் ஸ்டோரி

வாஸ்கோ ட காமாவுக்கு ஒரு வழக்கம் இருந்தது. கரை ஒதுங்கவேண்டிய இடம் கண்களுக்குத் தெரிந்துவிட்டால் உடனே அங்கே சென்றுவிட மாட்டார். தன் கப்பலிலிருந்து ஓர் ஆளைப் பிடித்து சின்னப் படகில் அனுப்பிவைப்பார். அவர் சென்று, அது என்ன மாதிரியான இடம், அங்கிருப்பவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள், போர்ச்சுகலிலிருந்து ஒரு கப்பல் நுழைந்தால் அதை வரவேற்பார்களா, எதிர்ப்பார்களா என்பதையெல்லாம் தீர விசாரித்துவிட்டு வருவார். அவர் வரும்வரை காத்திருப்பார்கள். வரவேயில்லையென்றால் அது ஆபத்தான இடம் என்பது தெரிந்துவிடும். கிளம்பிவிடுவார். விசாரிக்கப்போனவர் என்னவானால் அவருக்கு என்ன!

மலபார் கடற்கரை பாதுகாப்பானது என்பதை இவ்வாறு உறுதி செய்துகொண்ட பிறகே இந்தியாவில் காமா தனது கால்களைப் பதித்தார். கோழிக்கோட்டை அப்போது சமுத்திர ராஜா என்பவர் ஆண்டுவந்தார். காமா வந்தபோது அவர் ஊரில் இல்லை. உள்ளூர் பிரமுகர் ஒருவர் பல்லக்கும் பரிவாரமும் அனுப்பி, காமாவை வரவேற்று அழைத்துச் சென்றார். ஒயிலாக அமர்ந்துகொண்டு ஊரை வேடிக்கை பார்த்தபடி காமா சென்றார் என்றால், வேடிக்கை பார்க்கும் அவரை வழிநெடுகிலும் குழுமி நின்று மக்கள் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 62 - ஒரு பயணி எப்படி இருக்கக் கூடாது?

வழியில் ஒரு கோயிலை காமா கண்டிருக்கிறார். பல்லை வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் உருவம், நான்கைந்து கைகளோடு இருக்கும் மனிதர்கள் என்று வித்தியாசமான சுவர் ஓவியங்களைக் கண்டிருக்கிறார். வெற்று உடலின்மீது வெள்ளை நூல் அணிந்திருக்கும் புரோகிதர்களும் காட்சியளித்திருக்கிறார்கள். கழுத்து, மார்பு, நெற்றி என்று பல இடங்களில் வெள்ளை, வெள்ளையாக ஏதோ பூசிக்கொண்டிருக்கும் மனிதர்களையும் வீதிகளில் கண்டிருக்கிறார். இவருக்கு முன்பு இதே காட்சிகளைக் கண்ட பலரும் ‘இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?’ என்று குழம்பியதுண்டு. காமாவின் குழப்பமோ வேறு. ‘இங்குள்ள கிறிஸ்தவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?’ இந்திய கிறிஸ்தவர்கள் ஏன் உடலில் ஏதோ சாயம் பூசிக்கொள்கிறார்கள்… இந்திய கிறிஸ்தவர்கள் ஏன் தேவாலயத்தில் என்னென்னவோ வரைந்து வைத்திருக்கிறார்கள்… இந்திய கிறிஸ்தவர்கள் ஏன் ஆடையணியத் தயங்குகிறார்கள்… நூல் அணியும் வழக்கத்தை எங்கிருந்து கிறிஸ்தவர்கள் கற்றார்கள்?

அவருக்குத் தெரிந்த சமூகவியல் கோட்பாடு ஒன்று. ஒரு மனிதன் கிறிஸ்தவனாகப் பிறக்கிறான் அல்லது முஸ்லிமாக. அவருக்குத் தெரிந்த புவியியல் கோட்பாடு ஒன்று. ஒரு நாடு கிறிஸ்தவ நாடாக இருக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய நாடாக. அவருக்குத் தெரிந்த மானுடகுலத் தத்துவம் ஒன்று. கிறிஸ்தவம் நல்லது, இஸ்லாம் கெட்டது. முதல் பார்வையிலேயே ‘இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு’ என்பதை அவர் கண்டுபிடித்துவிட்டார். இறக்கும்வரை தன் முடிவை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

காமாவின் பயண அனுபவங்களையும், பார்வைகளையும் அவரோடு வந்த ஒருவரில் (அவர் பெயர் தெரியவில்லை) பதிவுகள் வாயிலாக அறிந்துகொள்கிறோம். கோழிக்கோடு மக்களை அவர் பின்வருமாறு விவரிக்கிறார். கறுத்த தோல்கொண்டவர்கள். சிலர் நீண்ட தலைமுடியும் நீண்ட தாடியும் வைத்திருக்கிறார்கள் என்றால், சிலர் கச்சிதமாகக் கத்தரித்து வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலரோ முழு மொட்டை போட்டுக்கொள்கிறார்கள். காதுகளில் துளையிட்டுக்கொண்டு, துளையில் தங்கத்தை அணிந்துகொள்கிறார்கள். பெண்கள் காண்பதற்கு அசிங்கமாக இருக்கிறார்கள். அவர்கள் உடல் சிறியதாக இருக்கிறது. காது, கழுத்து என்று நிறைய நகைகள் போட்டுக்கொள்கிறார்கள். கால் விரல்களைக்கூட விட்டுவைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

கோழிக்கோட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார் காமா. வியாபாரம் செய்வதற்கு மன்னரின் அனுமதி தேவை என்பதால் அவரைச் சந்திக்கும் முயற்சிகளில் இறங்கினார். நான் போர்ச்சுகல் மன்னரின் அரசுத் தூதுவர். என் மன்னர் அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர். எங்கள் நாடு அவ்வளவு செழிப்பானது என்று கதைகள் சொல்லி இதோ உங்கள் மன்னருக்கான பரிசுகள் என்று சில மூட்டைகளையும் அரண்மனையில் ஒப்படைத்தார். குறைந்தது ரத்தினக் கம்பள வரவேற்பு கிடைக்கும் என்பது அவர் எதிர்பார்ப்பு. மூட்டைகளைத் திறந்து பார்த்திருக்கிறார்கள் அமைச்சர்கள். கைகழுவும் பாத்திரம், தொப்பி, எண்ணெய் பீப்பாய், சர்க்கரை, தேன் போன்றவை தட்டுப்பட்டிருக்கின்றன. `செழிப்பான தேசத்திலிருந்து நீ கொண்டுவந்த பரிசு மூட்டை இதுதானா?’ என்று விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள். அவமானம் பிய்த்துத் தின்றது காமாவை. பரிகசித்த அமைச்சர்கள் முஸ்லிம்களாக இருந்துவிட்டது அவர் கோபத்தைக் கிளறிவிட்டது.

எப்படியோ சமுத்திர ராஜாவைச் சந்தித்து, `இது என் மன்னரின் பரிசு அல்ல, என் பரிசுதான். அடுத்தமுறை என்னவெல்லாம் கொண்டுவருகிறேன் பாருங்கள்’ என்று குழைந்து அவர் அனுமதியையும் பெற்றுக்கொண்டுவிட்டார். தொடக்கத்தில் உள்ளூர் மக்கள் ஆர்வத்தோடுதான் அவரை வரவற்றிருக்கிறார்கள். அதற்கு முன்பு அவர்கள் பெருமளவில் அராபியர்களோடு மட்டுமே வர்த்தகம் செய்திருக்கிறார்கள் என்பதால், மேற்கிலிருந்து புதிதாக வந்திருக்கும் அந்நியர்மீது அவர்களுக்கு இயல்பாகவே ஆர்வம் உண்டானது. ஆனால் காமா தேவையற்ற அச்சங்களால் அலைக்கழிக்கப்பட்டார். அனுமதி கொடுப்பதுபோல் கொடுத்து சமுத்திர ராஜா நம்மைச் சிறைப்படுத்திவிட்டால் என்ன செய்வது… என்னைப் பரிகசித்த அமைச்சர்கள் மற்ற இஸ்லாமியர்களோடு சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக ஏதேனும் சதி செய்தால் என்னவாகும்? தவிரவும், சமுத்திர ராஜாவின்மீதும் அவருக்கு ஏகப்பட்ட கடுப்பு. ஒரு கிறிஸ்தவராக இருந்துகொண்டு இந்த மன்னர் ஏன் இஸ்லாமிய அமைச்சர்களோடு இணைந்திருக்கிறார்… ஒரு சக கிறிஸ்தவனாக இருந்தும் ஏன் என்னை அவர்களோடு சேர்ந்து பரிகசிக்கிறார்?

அந்த மன்னர் உண்மையில் ஓர் இந்து. ஆனால் காமாவுக்குத்தான் இந்து மதம் என்றொன்று இருப்பதே தெரியாதே! அவருடைய நடை, உடை, பாவனைகளைப் பார்த்தால் நிச்சயம் இஸ்லாமியர் கிடையாது என்பது தெரிகிறது. இஸ்லாமியர் அல்லாத ஒருவர் கிறிஸ்தவராகத்தானே இருந்தாக வேண்டும்? சமுத்திர ராஜா என்று சொல்ல வாய் வரவில்லை என்பதால் ‘சமோரின்’ என்று அழைத்தார் காமா. அது ஒரு பொதுப்பெயராகவே பின்னர் நிலைத்துவிட்டது. மலபாரில் இருந்தவரை மட்டுமல்ல, அங்கிருந்து கிளம்பி வீடு போய்ச் சேர்ந்த பிறகும்கூட, அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தார். இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாடு. நம்மைப் போன்ற கிறிஸ்தவ மன்னன் ஒருவன்தான் மலபாரை ஆண்டுவருகிறான்.

ஒரு வணிகராக காமா கடைவிரிப்பதற்குள், அங்கிருந்த இஸ்லாமியர்களுக்கு வந்திருப்பது வணிகரல்ல, வரும் வழியில் அரபுக் கப்பல்களைக் கொள்ளையடித்த கடற்கொள்ளையர் என்பது தெரிந்துவிட்டது. எனவே அவரிடம் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் ஒதுங்கியே சென்றனர். அவர்களை மட்டுமல்ல, எவரையும் நம்பத் தயாராக இல்லை காமா. யாரைப் பார்த்தாலும் சந்தேகம், அச்சம், பீதி, வெறுப்பு, பகையுணர்ச்சி. ஒன்றுக்கு இரண்டாக விலைவைத்து சில பண்டங்களை அவருக்கு விற்க வந்தனர் சிலர். வாங்கி வைத்துக்கொண்டார். செம்மண்ணோடு சேர்ந்திருக்கும் இஞ்சியைக்கூட மூட்டையாக வாங்கிக்கொண்டார். மட்டரகமான பட்டை, லவங்கப் பொருள்களுக்கு இரட்டிப்பு விலை சொன்னபோது பதில் பேசாமல் கொடுத்தார். கொல்லம் சென்றார். அங்கே வணிகம் செய்ய முயன்றார். பலனில்லை. இது நம் சந்தையல்லவா… இங்கே ஏன் ஒரு போர்ச்சுகீசியர் மூக்கை நுழைக்க வேண்டும் என்று அரபு வணிகர்கள் கருதினர். அங்கிருந்த இஸ்லாமியர்களும் அவரைப் புறக்கணித்தனர். மலபாரில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார் காமா. அவரால் அவர் நினைத்த விலைக்கு எதையும் வாங்க முடியவில்லை; எதையும் விற்கவும் முடியவில்லை.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 62 - ஒரு பயணி எப்படி இருக்கக் கூடாது?
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை – 62 – ஒரு பயணி எப்படி இருக்கக் கூடாது?

MARUDHAN GHASSIFKHAN K P M

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

காமாவின் பயண அனுபவங்களையும், பார்வைகளையும் அவரோடு வந்த ஒருவரில் (அவர் பெயர் தெரியவில்லை) பதிவுகள் வாயிலாக அறிந்துகொள்கிறோம்.பிரீமியம் ஸ்டோரி

வாஸ்கோ ட காமாவுக்கு ஒரு வழக்கம் இருந்தது. கரை ஒதுங்கவேண்டிய இடம் கண்களுக்குத் தெரிந்துவிட்டால் உடனே அங்கே சென்றுவிட மாட்டார். தன் கப்பலிலிருந்து ஓர் ஆளைப் பிடித்து சின்னப் படகில் அனுப்பிவைப்பார். அவர் சென்று, அது என்ன மாதிரியான இடம், அங்கிருப்பவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள், போர்ச்சுகலிலிருந்து ஒரு கப்பல் நுழைந்தால் அதை வரவேற்பார்களா, எதிர்ப்பார்களா என்பதையெல்லாம் தீர விசாரித்துவிட்டு வருவார். அவர் வரும்வரை காத்திருப்பார்கள். வரவேயில்லையென்றால் அது ஆபத்தான இடம் என்பது தெரிந்துவிடும். கிளம்பிவிடுவார். விசாரிக்கப்போனவர் என்னவானால் அவருக்கு என்ன!

மலபார் கடற்கரை பாதுகாப்பானது என்பதை இவ்வாறு உறுதி செய்துகொண்ட பிறகே இந்தியாவில் காமா தனது கால்களைப் பதித்தார். கோழிக்கோட்டை அப்போது சமுத்திர ராஜா என்பவர் ஆண்டுவந்தார். காமா வந்தபோது அவர் ஊரில் இல்லை. உள்ளூர் பிரமுகர் ஒருவர் பல்லக்கும் பரிவாரமும் அனுப்பி, காமாவை வரவேற்று அழைத்துச் சென்றார். ஒயிலாக அமர்ந்துகொண்டு ஊரை வேடிக்கை பார்த்தபடி காமா சென்றார் என்றால், வேடிக்கை பார்க்கும் அவரை வழிநெடுகிலும் குழுமி நின்று மக்கள் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 62 - ஒரு பயணி எப்படி இருக்கக் கூடாது?

வழியில் ஒரு கோயிலை காமா கண்டிருக்கிறார். பல்லை வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் உருவம், நான்கைந்து கைகளோடு இருக்கும் மனிதர்கள் என்று வித்தியாசமான சுவர் ஓவியங்களைக் கண்டிருக்கிறார். வெற்று உடலின்மீது வெள்ளை நூல் அணிந்திருக்கும் புரோகிதர்களும் காட்சியளித்திருக்கிறார்கள். கழுத்து, மார்பு, நெற்றி என்று பல இடங்களில் வெள்ளை, வெள்ளையாக ஏதோ பூசிக்கொண்டிருக்கும் மனிதர்களையும் வீதிகளில் கண்டிருக்கிறார். இவருக்கு முன்பு இதே காட்சிகளைக் கண்ட பலரும் ‘இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?’ என்று குழம்பியதுண்டு. காமாவின் குழப்பமோ வேறு. ‘இங்குள்ள கிறிஸ்தவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?’ இந்திய கிறிஸ்தவர்கள் ஏன் உடலில் ஏதோ சாயம் பூசிக்கொள்கிறார்கள்… இந்திய கிறிஸ்தவர்கள் ஏன் தேவாலயத்தில் என்னென்னவோ வரைந்து வைத்திருக்கிறார்கள்… இந்திய கிறிஸ்தவர்கள் ஏன் ஆடையணியத் தயங்குகிறார்கள்… நூல் அணியும் வழக்கத்தை எங்கிருந்து கிறிஸ்தவர்கள் கற்றார்கள்?

அவருக்குத் தெரிந்த சமூகவியல் கோட்பாடு ஒன்று. ஒரு மனிதன் கிறிஸ்தவனாகப் பிறக்கிறான் அல்லது முஸ்லிமாக. அவருக்குத் தெரிந்த புவியியல் கோட்பாடு ஒன்று. ஒரு நாடு கிறிஸ்தவ நாடாக இருக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய நாடாக. அவருக்குத் தெரிந்த மானுடகுலத் தத்துவம் ஒன்று. கிறிஸ்தவம் நல்லது, இஸ்லாம் கெட்டது. முதல் பார்வையிலேயே ‘இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு’ என்பதை அவர் கண்டுபிடித்துவிட்டார். இறக்கும்வரை தன் முடிவை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

காமாவின் பயண அனுபவங்களையும், பார்வைகளையும் அவரோடு வந்த ஒருவரில் (அவர் பெயர் தெரியவில்லை) பதிவுகள் வாயிலாக அறிந்துகொள்கிறோம். கோழிக்கோடு மக்களை அவர் பின்வருமாறு விவரிக்கிறார். கறுத்த தோல்கொண்டவர்கள். சிலர் நீண்ட தலைமுடியும் நீண்ட தாடியும் வைத்திருக்கிறார்கள் என்றால், சிலர் கச்சிதமாகக் கத்தரித்து வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலரோ முழு மொட்டை போட்டுக்கொள்கிறார்கள். காதுகளில் துளையிட்டுக்கொண்டு, துளையில் தங்கத்தை அணிந்துகொள்கிறார்கள். பெண்கள் காண்பதற்கு அசிங்கமாக இருக்கிறார்கள். அவர்கள் உடல் சிறியதாக இருக்கிறது. காது, கழுத்து என்று நிறைய நகைகள் போட்டுக்கொள்கிறார்கள். கால் விரல்களைக்கூட விட்டுவைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

கோழிக்கோட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார் காமா. வியாபாரம் செய்வதற்கு மன்னரின் அனுமதி தேவை என்பதால் அவரைச் சந்திக்கும் முயற்சிகளில் இறங்கினார். நான் போர்ச்சுகல் மன்னரின் அரசுத் தூதுவர். என் மன்னர் அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர். எங்கள் நாடு அவ்வளவு செழிப்பானது என்று கதைகள் சொல்லி இதோ உங்கள் மன்னருக்கான பரிசுகள் என்று சில மூட்டைகளையும் அரண்மனையில் ஒப்படைத்தார். குறைந்தது ரத்தினக் கம்பள வரவேற்பு கிடைக்கும் என்பது அவர் எதிர்பார்ப்பு. மூட்டைகளைத் திறந்து பார்த்திருக்கிறார்கள் அமைச்சர்கள். கைகழுவும் பாத்திரம், தொப்பி, எண்ணெய் பீப்பாய், சர்க்கரை, தேன் போன்றவை தட்டுப்பட்டிருக்கின்றன. `செழிப்பான தேசத்திலிருந்து நீ கொண்டுவந்த பரிசு மூட்டை இதுதானா?’ என்று விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள். அவமானம் பிய்த்துத் தின்றது காமாவை. பரிகசித்த அமைச்சர்கள் முஸ்லிம்களாக இருந்துவிட்டது அவர் கோபத்தைக் கிளறிவிட்டது.

எப்படியோ சமுத்திர ராஜாவைச் சந்தித்து, `இது என் மன்னரின் பரிசு அல்ல, என் பரிசுதான். அடுத்தமுறை என்னவெல்லாம் கொண்டுவருகிறேன் பாருங்கள்’ என்று குழைந்து அவர் அனுமதியையும் பெற்றுக்கொண்டு விட்டார். தொடக்கத்தில் உள்ளூர் மக்கள் ஆர்வத்தோடுதான் அவரை வரவற்றிருக்கிறார்கள். அதற்கு முன்பு அவர்கள் பெருமளவில் அராபியர்களோடு மட்டுமே வர்த்தகம் செய்திருக்கிறார்கள் என்பதால், மேற்கிலிருந்து புதிதாக வந்திருக்கும் அந்நியர்மீது அவர்களுக்கு இயல்பாகவே ஆர்வம் உண்டானது. ஆனால் காமா தேவையற்ற அச்சங்களால் அலைக்கழிக்கப்பட்டார். அனுமதி கொடுப்பதுபோல் கொடுத்து சமுத்திர ராஜா நம்மைச் சிறைப்படுத்திவிட்டால் என்ன செய்வது… என்னைப் பரிகசித்த அமைச்சர்கள் மற்ற இஸ்லாமியர்களோடு சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக ஏதேனும் சதி செய்தால் என்னவாகும்? தவிரவும், சமுத்திர ராஜாவின்மீதும் அவருக்கு ஏகப்பட்ட கடுப்பு. ஒரு கிறிஸ்தவராக இருந்துகொண்டு இந்த மன்னர் ஏன் இஸ்லாமிய அமைச்சர்களோடு இணைந்திருக்கிறார்… ஒரு சக கிறிஸ்தவனாக இருந்தும் ஏன் என்னை அவர்களோடு சேர்ந்து பரிகசிக்கிறார்?

அந்த மன்னர் உண்மையில் ஓர் இந்து. ஆனால் காமாவுக்குத்தான் இந்து மதம் என்றொன்று இருப்பதே தெரியாதே! அவருடைய நடை, உடை, பாவனைகளைப் பார்த்தால் நிச்சயம் இஸ்லாமியர் கிடையாது என்பது தெரிகிறது. இஸ்லாமியர் அல்லாத ஒருவர் கிறிஸ்தவராகத்தானே இருந்தாக வேண்டும்? சமுத்திர ராஜா என்று சொல்ல வாய் வரவில்லை என்பதால் ‘சமோரின்’ என்று அழைத்தார் காமா. அது ஒரு பொதுப்பெயராகவே பின்னர் நிலைத்துவிட்டது. மலபாரில் இருந்தவரை மட்டுமல்ல, அங்கிருந்து கிளம்பி வீடு போய்ச் சேர்ந்த பிறகும்கூட, அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தார். இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாடு. நம்மைப் போன்ற கிறிஸ்தவ மன்னன் ஒருவன்தான் மலபாரை ஆண்டுவருகிறான்.

ஒரு வணிகராக காமா கடைவிரிப்பதற்குள், அங்கிருந்த இஸ்லாமியர்களுக்கு வந்திருப்பது வணிகரல்ல, வரும் வழியில் அரபுக் கப்பல்களைக் கொள்ளையடித்த கடற்கொள்ளையர் என்பது தெரிந்துவிட்டது. எனவே அவரிடம் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் ஒதுங்கியே சென்றனர். அவர்களை மட்டுமல்ல, எவரையும் நம்பத் தயாராக இல்லை காமா. யாரைப் பார்த்தாலும் சந்தேகம், அச்சம், பீதி, வெறுப்பு, பகையுணர்ச்சி. ஒன்றுக்கு இரண்டாக விலைவைத்து சில பண்டங்களை அவருக்கு விற்க வந்தனர் சிலர். வாங்கி வைத்துக்கொண்டார். செம்மண்ணோடு சேர்ந்திருக்கும் இஞ்சியைக்கூட மூட்டையாக வாங்கிக்கொண்டார். மட்டரகமான பட்டை, லவங்கப் பொருள்களுக்கு இரட்டிப்பு விலை சொன்னபோது பதில் பேசாமல் கொடுத்தார். கொல்லம் சென்றார். அங்கே வணிகம் செய்ய முயன்றார். பலனில்லை. இது நம் சந்தையல்லவா… இங்கே ஏன் ஒரு போர்ச்சுகீசியர் மூக்கை நுழைக்க வேண்டும் என்று அரபு வணிகர்கள் கருதினர். அங்கிருந்த இஸ்லாமியர்களும் அவரைப் புறக்கணித்தனர். மலபாரில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார் காமா. அவரால் அவர் நினைத்த விலைக்கு எதையும் வாங்க முடியவில்லை; எதையும் விற்கவும் முடியவில்லை.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 62 - ஒரு பயணி எப்படி இருக்கக் கூடாது?

13 ஆகஸ்ட், 1498 அன்று காமா விடைபெறுவதற்குத் தயாரானார். விற்பனையாகாத பொருள்களை மலபாரில் இறக்கிவைத்துவிட்டு சில ஆட்களையும் விட்டுச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் காமா. ஆனால், மன்னரை நம்பத் தயாராக இல்லை அவர். `உங்களை நம்பி என் பண்டங்களையும் ஆட்களையும் நான் விட்டுச் செல்வதுபோல், என்னை நம்பி நீங்கள் சிலரை என்னோடு அனுப்பி வைக்கமுடியுமா?’ என்று மன்னருக்குச் செய்தி அனுப்பினார். `நீ பண்டங்களை விட்டுச் செல்ல வேண்டுமானால், அதற்கு வரி செலுத்த வேண்டும்’ என்று பதில் அனுப்பினார் மன்னர். மன்னருக்கும் காமா மீது நம்பிக்கையில்லை என்பதால் போர்ச்சு கீசியர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு எச்சரித்து வீரர்களை அனுப்பிவைத்தார். `என் அனுமதியின்றி யாரும் காமாவின் கப்பல்களுக்குச் சென்று எந்தப் பொருளும் வாங்கக் கூடாது’ என்றும் உத்தரவிட்டார். அவர் உத்தரவை மீறி சில வணிகர்கள் படகில் சென்று காமாவின் கப்பலை அடைந்தபோது, காமா அவர்களைச் சிறைப் பிடித்துக்கொண்டார்.

மன்னரிடம் இல்லாத வீரர்களா, படைகளா, ஆயுதங்களா? இருந்தாலும் அவர் காமாவிடம் சீற்றம் கொள்ளாததற்குக் காரணம், காமாவின் கப்பல்களில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகள். மன்னருக்கு பீரங்கி பரிச்சயமில்லை என்பதாலும், காமா கொள்ளையடிக்கவும் கொல்லவும் தயங்காதவர் என்று அவர் நம்பியதாலும் பேச்சுவார்த்தைக்கு இறங்கினார். `என்னுடைய வணிகர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு, இங்கிருந்து கிளம்பிப் போ. உன்னையும் உன் கப்பல்களையும் விட்டுவிடுகிறேன்’ என்றார். இருவரும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள். காமா எதைத்தான் மதித்திருக்கிறார்? வீம்புக்குச் சில பண்டங்களை வரியும் செலுத்தாமல் மலபாரில் விட்டுவைத்தார். பணயக் கைதிகளில் சிலரை விடுவிக்காமலேயே தப்பிச் சென்றார். கோழிக்கோட்டில் மன்னரின் 70 கப்பல்கள் காமாவை வழிமறித்துப் போரிட்டன. போர்ச்சுசீகியர்கள் எதிர்த்து போரிட்டனர். அதற்குள் புயல் காற்றும் வீசத் தொடங்கிவிட்டதால் காமா வெற்றிகரமாகத் தப்பிச் சென்றுவிட்டார்.

போர்ச்சுகலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலபாரில் வாங்கிய பண்டங்கள் அனைத்தையும் 60 மடங்கு அதிக விலைவைத்து அங்கே விற்றார். ஆனாலும் அவருக்குத் திருப்தியில்லை. இரண்டாம் இந்தியப் பயணத்துக்குத் தயாரானார். இந்த முறை அவர் நோக்கம் ஒன்றுதான். இந்தியாவைப் பழி வாங்க வேண்டும்!

https://www.vikatan.com/news/general-news/series-about-in-history-of-india-62

(விரியும்)

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை – 64 – அக்பர் ஏன் இப்படி இருக்கிறார்?

MARUDHAN GHASSIFKHAN K P M

அக்பர்

அக்பர்

தன் காலத்து வழக்கப்படி முடியைக் கத்தரித்துக்கொள்வதில்லை அவர். தொப்பிக்கு பதிலாகத் தலைப்பாகைபோல் ஒன்றை அணிகிறார்.பிரீமியம் ஸ்டோரி

இந்திய வரலாற்றில் அசோகருக்கு அடுத்து அதிகம் கொண்டாடப்படும் ஓர் அரசராக அக்பர் திகழ்கிறார். தாமரைபோல் விரிந்திருந்த அவர் மனமே அதற்குக் காரணம். மாற்றுச் சமயங்களோடு, மாற்று நம்பிக்கைகளோடு, மாற்றுப் பண்பாடுகளோடு ஆர்வத்தோடு அவர் உரையாடினார். எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றிடமிருந்தும் கற்றுக்கொண்டார். அறிவும் அதிகாரமும் தன் கண்களை மறைக்காமல் இருக்க இயன்றவரை பாடுபட்டார். மதங்கள் மனிதர்களைப் பிரிக்கக் கூடாது, இணைக்க வேண்டும் என்று கனவு கண்டார். போர்ச்சுகலிலிருந்து கத்தோலிக்க பாதிரியார் அன்டோனியோ மான்செரெட், அக்பரின் அரசவைக்கு வருகை தந்தபோது அவரை வரவேற்று சில ஆண்டுகள் விருந்தினராகத் தங்கவைத்தார். அக்பர் குறித்து அந்தப் பாதிரியார் எழுதிவைத்த குறிப்புகளிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

`நாங்கள் சென்று சந்தித்தபோது, அக்பரின் வயது 38. முன்பின் தெரியாதவர்கள்கூட அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் ஓர் அரசராகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். அகன்ற தோள்பட்டை, குதிரையோட்டத்துக்கு ஏற்ற உறுதியான கால்கள், மெலிதான பழுப்பு நிறத் தோல். தன் தலையை வலதுபக்கத் தோள் பக்கமாகக் கொஞ்சம் சாய்த்தவாறு இருப்பார். விரிந்த நெற்றி. சூரிய வெளிச்சம்பட்டு கடல் தகதகவென்று மின்னுவதைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அப்படியொரு மினுமினுப்பை அவர் கண்களில் தரிசிக்கலாம். மெலிதான புருவங்கள். நேரான, சிறிய மூக்கு. மூக்கு துவாரங்கள் நன்றாகத் திறந்திருக்கும். இடது பக்க மூக்குக்கும் மேலுதடுக்கும் நடுவில் ஒரு சிறிய மச்சத்தைக் காணலாம்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 64 - அக்பர் ஏன் இப்படி இருக்கிறார்?

தன் காலத்து வழக்கப்படி முடியைக் கத்தரித்துக்கொள்வதில்லை அவர். தொப்பிக்கு பதிலாகத் தலைப்பாகைபோல் ஒன்றை அணிகிறார். அதற்குள் தலைமுடியைச் சுருட்டி வைத்துக்கொள்கிறார். இந்தியர்களுக்கு இப்படி அணிவதுதான் பிடித்திருக்கிறது, இதுதான் அவர்கள் வழக்கம் என்பதால், அவரும் தலைப்பாகை அணிகிறாராம். தாடியை மழித்துக்கொள்கிறார். மீசைவைத்திருக்கிறார். தாடி இல்லாததால் துருக்கிய இளைஞன் போன்ற தோற்றமே இருக்கிறது. நடக்கும்போது இடதுகாலைக் கொஞ்சம் நொண்டி நடப்பதுபோல் இருக்கிறது. ஆனால், அந்தக் காலில் காயம் எதுவும் இல்லை. பருத்தும் இல்லை, மெலிந்தும் இல்லை; உறுதியான உடல் அவருடையது. அவர் சிரிக்கும்போது முகமே கோணலாக மாறிவிடும். அவர் கோபம் கொண்டால் அந்தக் கோபத்தில் ஒரு கம்பீரம் இருக்கும். தன்னை நாடி வருபவர்களோடு அவர் எந்த அளவுக்கு இயல்பாகப் பழகுவார் என்பதை விவரித்தால், அது ஏதோ மிகைபோல் தோன்றக்கூடும். சாமானியர் தொடங்கி பிரமுகர் வரை எவரோடும் இனிமையாகப் பேசக்கூடியவர்.

வேட்டையாடுவது அக்பருக்குப் பிடிக்கும். யானைச் சண்டை, காளைச் சண்டை, கோழிச் சண்டை போன்ற விளையாட்டுகளை ரசிப்பார். வித்தியாசமான பறவையைக் கண்டால் ஆர்வம் கொள்வார். வித்தியாசமாக எது இருந்தாலும் பிடிக்கும். சிலசமயம் அவரைப் பார்க்கும்போது ஓய்வில் இருப்பதுபோல் தோன்றும். தோற்றப்பிழை. பொறுப்புகளைத் தலையிலிருந்து அவர் இறக்கிவைப்பதே இல்லை.

ஆடை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்கக் கூடாது, காலணி இப்படி அணியலாம், அப்படி அணியக் கூடாது என்றெல்லாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலவும் கட்டுப்பாடுகளை அவர் பொருட்படுத்துவதில்லை. தனக்குப் பிடித்ததை அணிந்துகொள்கிறார். ஐரோப்பிய வாள், கேடயம் அவருக்குப் பிடிக்கும். அவரைச் சுற்றி 20 பாதுகாவலர்கள் எப்போதும் இருக்கிறார்கள். அவரும் எப்போதும் ஆயுதம் தரித்திருக்கிறார்.

அவர் அரண்மனை அழகானது. பாதுகாப்பானது. பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது. அக்பருக்குக் கட்டடக்கலை தெரியும் என்பதால், சிலசமயம் அவரும் தொழிலாளர்களோடு இணைந்து பணியாற்றுவார். உள்ளே நிறைய புறாக்கள் வளர்க்கிறார். சீட்டி ஒலி எழுப்பினால் புறாக்கள் படபடவென்று சத்தமெழுப்பியபடி பறந்து, (நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்) சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதிரி காற்றில் தலைகீழாகத் திரும்பி, அழகாக நடனமாடி நம்மையெல்லாம் மகிழ்வித்துவிட்டு ஒன்றுபோல் பறந்துவந்து என் வேலை முடிந்தது என்று அமர்ந்துகொள்ளும்.

படித்தவர்களையும் சான்றோர்களையும் எப்போதும் அருகில் வைத்துக்கொள்கிறார். அவர் தேவைக்கு ஏற்ப தத்துவம், சமயம், ஆன்மிகம் என்று பலவற்றை அவர்கள் விவரிக்கிறார்கள். பண்டைய மன்னர்கள் பற்றியும் அவர்களுடைய புகழ்மிக்கச் செயல்பாடுகள் பற்றியும் சொல்லச் சொல்லிக் கேட்பார். அமைதியாக அமர்ந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வார். எல்லாவற்றையும் அப்படியே கிரகித்துக்கொண்டுவிடுவார். எது சரி, எது தப்பு என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவார். நல்ல நினைவுத்திறன். அவரால் எழுதவோ, படிக்கவோ முடியாது. ஆனால், அப்படியொரு குறை அவரிடம் இருப்பதுபோலவே காட்டிக்கொள்ள மாட்டார். யார், எதை, எங்கே கேட்டாலும் தன் கருத்தைத் தெளிவாகவும் அழகாகவும் அவர் எடுத்துவைக்கும் விதத்தைக் காணும் எவரும் இவர்தான் எவ்வளவு கற்றிருக்கிறார் என்று தன்னை மறந்து வியப்பார்கள்!

நாட்டை நிர்வகிக்கவும், அரண்மனையை நிர்வகிக்கவும் தகுந்த ஆட்களை நியமித்திருக்கிறார். இருபது இந்துக்கள் தலைமைப் பொறுப்புகள் வகிக்கிறார்கள். இவர்களில் சிலர் அக்பருக்கு ஆலோசனைகளும் வழங்குவார்கள். இன்னும் சிலர் அக்பரின் குழந்தைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இந்த இந்துக்கள் அக்பருக்கு உண்மையானவர்களாக நடந்துகொள்கிறார்கள். அக்பர் அவர்களை மிகுந்த நம்பிக்கையோடு எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறார். தன் குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் தெரிய வேண்டுமென்பதில் அக்பர் தெளிவோடு இருக்கிறார். வீர விளையாட்டுகளிலும் அவர்களை ஈடுபடுத்துகிறார். போர்ப்பயிற்சி அளிக்கச் சிறந்த ஆசிரியர்களை நியமித்திருக்கிறார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 64 - அக்பர் ஏன் இப்படி இருக்கிறார்?

ஒரு முடிவு எடுப்பது குறித்துத் தன் ஆலோசகர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே கருத்து சேகரிக்கிறார். எல்லோருடைய கருத்தும் எதில் ஒத்துப்போகிறது, எதில் மாறுபடுகிறது என்று அலசி அதன் அடிப்படையில் ஒரு முடிவை எடுப்பார். பல சமயங்களில் அவர் முன்கூட்டியே ஒரு முடிவை எடுத்திருப்பார். ஆனால் அதை வெளிப்படுத்தாமல், நீங்கள் என்ன சொல்கிறீர்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஒவ்வொருவரிடமும் கேட்பார். அவர்களும் அவர் முடிவையே பிரதிபலித்தால், உடனே முடிவெடுத்து உத்தரவு போட்டுவிடுவார். யாரேனும் முரண்பட்டால், என்ன ஏது என்று விசாரித்து, தேவைப்பட்டால் தன் முடிவை மாற்றியமைக்கவும் தயங்க மாட்டார்.

அரசரின் அலுவல் பணிகளை கவனித்து, குறிப்புகள் எழுதுவதற்கு எழுத்தர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர் எடுக்கும் முடிவுகள், அவர் போடும் உத்தரவுகள், அவருடைய வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் இவர்கள் எழுதிவைப்பார்கள். எங்கே அக்பரின் வாயிலிருந்து வரும் சொல் கீழே தவறி விழுந்துவிடுமோ என்பதுபோல் அவரையே உன்னிப்பாக கவனித்து, அவர் பேசத் தொடங்கியவுடன் எழுத ஆரம்பித்துவிடுவார்கள். அவர் பேசும் வேகத்துக்கு இவர்கள் கரங்கள் ஈடுகொடுக்கும். அக்பரின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் இப்படி எழுதி வைப்பதன் மூலம் அப்படி என்ன நன்மை ஏற்பட்டுவிடும் என்றுதான் எனக்குத் தெரியவில்லை.

அந்நிய நாடுகளிலிருந்து வருபவர்களை வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் பரிவோடு உபசரிக்கிறார். அயல்நாட்டுத் தூதுவர்களை, தஞ்சம் தேடி வரும் பக்கத்து நாட்டு இளவரசர்களைக் கரிசனத்தோடு வரவேற்று வசதிகள் செய்து கொடுக்கிறார். அவர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டுமே. இங்கிருக்கும் வரை, எங்கள் நாணயங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். எங்கள் அளவுகளையும் எடைகளையும்தான் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அத்தை குல்பதான் பேகம் (பாபரின் மகள்) மீது அக்பருக்கு பாசம் அதிகம். ஒருமுறை மெக்காவிலிருந்து அத்தை திரும்பி வரும்போது வீதியெங்கும் பட்டுத் துணி விரித்து வரவேற்றார். தானே நேரில் சென்று அவரை மாளிகைக்கு அழைத்து வந்தார்.

பிறப்பால் தாழ்ந்த ஒருவர் திறமையானவராக இருந்து, அக்பரின் பார்வையில் விழுந்துவிட்டால் படிப்படியாக அவர் நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம். தவறிழைப்பவர்கள் துரத்தப்படுவார்கள். சில பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். முக்கிய அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பணியாற்றுவார்கள். பலருக்கு வசதியான அலுவலக அறைகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார். தந்தையை இழந்த குழந்தைகள் பலருக்குக் கல்வி வழங்கியிருக்கிறார்.

வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி எல்லாம் நல்லபடியாக இருக்கின்றன. வரி வசூலும் நன்றாகவே நடக்கிறது. விளைச்சல் அமோகமாக இருக்கிறது. நாட்டிலுள்ள பெரிய மனிதர்கள் குவித்துவைத்திருக்கும் அளவற்ற செல்வத்துக்குத் தனியே வரி வசூலிக்கிறார். செல்வந்தர்கள் இறந்துபோனால் அவர்கள் சேகரிப்பு அரசருக்கே வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்தும் செல்வம் கிடைக்கிறது. பரிசுகள் அவரைத் தேடிவருகின்றன. எல்லாம் போக, அக்பரே பலவிதமான வணிகங்களில் நேரடியாக ஈடுபட்டு பெரும் லாபம் ஈட்டுகிறார். வருமானம் வரும் எந்த வாய்ப்பையும் அவர் நழுவவிடுவதில்லை.

அரசருக்குத் தெரியாமல் யாரும் நாட்டில் குதிரை வாங்கவோ, விற்கவோ முடியாது. குதிரை ஏலம் அடிக்கடி நடக்கும். அக்பரும் கலந்துகொள்வார். நல்ல குதிரை விலைக்கு வந்தால், அவரே வாங்கிக்கொள்வார். பல குதிரைகளைச் சேர்ந்தாற்போல் வாங்குவதும் உண்டு. அரசர் என்பதால் அடாவடியாகப் பிடுங்கிக்கொள்கிறார் என்று யாரும் கருதிவிடக் கூடாது என்பதற்காக அதிக பணம் கொடுத்தே அவர் கொள்முதல் செய்வது வழக்கம். ஏலம் விடுபவர் அக்பர் கொடுக்கும் பணத்தை மக்கள் முன்னால் காண்பித்து, அவர்கள் முன்னால் எண்ணி, கணக்கு சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

அக்பர்மீது மக்களில் சிலருக்கு வருத்தமும் இருக்கிறது. இந்த அளவுக்கு நம் மன்னர் மற்ற மதத்தினரோடு ஒன்று கலந்து பழகவேண்டுமா… இந்த அளவுக்குத் தாராளமாக எல்லோருக்கும் இடம் அளிக்கவேண்டுமா… அவர் ஏன் இப்படி இருக்கிறார்? ‘ஏனென்றால் அவர் அக்பர்’ என்பதைவிட வேறு என்ன பதிலை இவர்களுக்குச் சொல்வது?’

(விரியும்)

https://www.vikatan.com/news/general-news/series-about-in-history-of-india-64

————————————————————————————————————-

About editor 3116 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply