சனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது பேச்சு அடிநாக்கில் நஞ்சு நுனி நாக்கில் தேன்!

சனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது பேச்சு  அடிநாக்கில் நஞ்சு நுனி நாக்கில் தேன்!

 நக்கீரன்

“Will you walk into my parlour?” said the Spider to the Fly,
“‘Tis the prettiest little parlour that ever you did spy;

இந்த வரிகள் ஒரு ஆங்கிலக் கவிஞன் எழுதிய பாடலில்  வருகிறது. 

“நீங்கள் என் வரவேற்பு அறைக்கு வருவீர்களா?”  எனச் சிலந்தி  ஒரு ஈயைப் பார்த்துக் கேட்டது.
“அது நீங்கள் என்றுமே பார்த்திராத அழகான சிறிய வரவேற்பறை.”

கதையின் தார்மீகம் என்னவென்றால், முகத்துதி செய்து நட்புடன் செயல்படும் அனைவரும் உண்மையில் அப்படியில்லை. தீயவர்கள் முகத்துதியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். இது அவர்களுக்கு எதிரான ஒரு எச்சரிக்கை.   ஈயைத் தனது பசிக்கு உணவாக்குவதுதான் சிலந்தியின் தந்திரம். சிலந்திவலையில் சிக்குப்படும் ஈ மீளமுடியாது. அது ஒரு வழிப் பாதை.

76 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க்  சென்ற இலங்கையின் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச  ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதன்போது  சனாதிபதி கோட்டாபய பல உறுதிமொழிகளை அவருக்கு வழங்கியிருந்தார். முக்கியமாக –

1) காணாமல்போன ஆட்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வெகுவிரைவில் முன்னெடுப்போம்.

2) போரில் இறந்தவர்களது இறப்புச் சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகள்  எடுக்கப்படும்.

3) தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்குப்  பொதுமன்னிப்பு வழங்கத் தயங்க மாட்டேன்.

4) இலங்கையில் மீண்டுமொருமுறை பிரிவினைவாதம் உருவாக மாட்டாது என்று உறுதியளிக்க முடியும். மத அடிப்படைவாதம் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கையைப் போன்றே ஏனைய அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும். 

5) உள்ளக பொறிமுறை ஊடாக, நீண்ட காலமாக நிலவி வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகளை மேற்கொள்ளப் புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு  பகிரங்க அழைப்பு.  

ஆனால் இலங்கையில் காணப்படும்  யதார்த்தம் என்ன?  சனாதிபதி இராசபக்ச நுனி நாக்கில் தேனும் அடிநாக்கில் நஞ்சையும் வைத்துக் கொண்டு பேசுகிறார்.  எப்படி ஈ யைப்பார்த்து சிலந்தி தந்திரமாக தனது வரவேற்பறைக்கு அழைத்ததைப்  போல சனாதிபதி  இராசபக்சாவும் புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு அழைப்பு விடுக்கிறார்! யர் தமிழர்களைப் பிரதிநித்துவப் படுத்தும் பல அமைப்புக்களை இதே சனாதிபதி இராசபக்ச கடந்த பெப்ரவரி 25, 2021 அன்று ஒரு சிறப்பு வர்த்தமானி மூலம் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளார்! இந்தப் பட்டியலில் 14 தமிழ் அமைப்புக்களும் 400 க்கும் அதிகமான தனிமனிதர்களும் இடம் பெற்றுள்ளார்கள்.

இந்தப் பயங்கரவாதப் பட்டியலை  தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியவர் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சா அவர்கள்தான். கடந்த 2014 மார்ச்மாதம் 16 தமிழ் அமைப்புக்களும் 427 தனிமனிதர்களும் அரசாணை மூலம் பயங்கரவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள்.

பின்னர் நல்லாட்சி அரசில் வெளியுறவு அமைச்சர் காலம் சென்ற மங்கள சமரவீர அவர்கள் அந்தப் பயங்கரவாதப் பட்டியலில் இருந்த 8 தமிழ் அமைப்புக்களையும் 267 தனிமனிதர்களையும் நீக்கினார். அதன் மூலம் 8 தமிழ் அமைப்புக்களும் 157 தனிநபர்களும் மட்டும் அந்தப் பயங்கரவாதப் பட்டியலில் எஞ்சியிருந்தார்கள்.

மேலே கூறியது போல இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது. 16 அமைப்புக்களும் 400 க்கும் அதிகமான தனிமனிதர்களும்  இடம் பெற்றுள்ளார்கள். பின்னர் எந்த முகத்தோடு சனாதிபதி இராசபக்ச தமிழ் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுகிறார்?

காணாமல் போனோர் தொடர்பாக தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்தந்தையர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக மழையிலும் வெய்யிலிலும் போராடி வருகிறார்கள்.

காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்  கொடுக்கப்படுவதாக சொல்கிறார். அது மட்டும் போதுமா? அது சிக்கலுக்குத்  தீர்வாகுமா?

போர்க்களத்தில் அல்ல போர் முடிந்த பின்னர் பல போராளிகளை அவர்களது பெற்றோர்கள் இராணுவத்திடம் கையளித்தார்கள். உயிரோடு கையளிக்கப்பட்ட அந்தப் போராளிகள் எங்கே? 

76 வது ஐநா சபையில் உரையாற்றிய சனாதிபதி கோட்டாபய இராசபக்ச இன, மதம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான, நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது தனது அரசின் உறுதியான நோக்கம் என்று கூறினார். “இருப்பினும், மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் உள்நாட்டு நிறுவனங்களின் மூலம் மட்டுமே நீடித்த முடிவுகளை அடைய முடியும் என்பதை வரலாறு காட்டுகிறது.

போர் முடிந்த மே 18  இரண்டு குழுக்களாக விடுதலைப்புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். முதல் குழு 18 மே 2009 இரவு புலிகளின் அரசியல் துறைத் தலைவர் பி.நடேசன் தலைமையில் அமைதிச் செயலகத்தின் சீவரத்தினம் புலித்தேவன் மற்றும் அவரது உதவியாளர் கேணல் இராமேஷ் மற்றும் நடேசனின் மனைவி வினீதா ஆகியோர் வெள்ளைக்கொடிகளை ஏந்தி சரணடைந்தனர். அவர்களோடு  60 போராளிகளும் அவர்களது உறவினர்களும் சரண் அடைந்தனர். இவர்கள் சரணடைவது பற்றி சனாதிபதி மகிந்த இராசபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய இராசபக்சா போன்றோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்பட்டிருந்தது,

வெள்ளைக் கொடிகளை  இராணுவத்தினர் தூரத்திலேயே பார்க்குமாறு உயரப் பிடித்துக் கொண்டு  செல்லுமாறு சனாதிபதி மகிந்த இராசபக்ச ஆலோசனை கூறியிருந்தார். இருந்தும் அவர்கள் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். “எஞ்சியிருந்த வி.புலிகளையும் கொன்று குவித்து விட்டோம்” என இராணுவம் தனது இணைய தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

ஆனால் கொல்லப்பட்டவர்களை இராணுவத்தினர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஊடகங்களில் வெளிவந்தன, அந்தப் படங்கள்  நடேசன், பூலித்தேவன் மற்றும் இரமேஷ் ஆகியோர் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் சுட்டுப்  கொல்லப்பட்டதைக் காட்டின. கேணல் இராமேஷ் அவர்களை இராணுவ அதிகாரிகள்  மிரட்டி உருட்டி  விசாரிப்பதை வேறொரு வீடியோ காட்டியது.

18 மே 2009 மாலை,  இரண்டாவது தொகுதி விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் நிர்வாகத் தலைவர்கள் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள இலங்கை இராணுவத்தின் 58 வது பிரிவில் சரணடைந்தனர். இவர்களில் 40 க்கும் மேலான வி.புலித் தளபதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு என இராணுவத்தினரால் இபோச ஊர்திகளில் அழைத்துச்   செல்லப்பட்டார்கள். அப்படி அவர்கள் அழைத்துச் செல்வதை அவர்களது துணைவியர், உறவினர்கள் கண்ணால் கண்டிருக்கிறார்கள்.

அவர்களது பெயர்ப்பட்டியலில் 41 வி.புகளது இடம்பெற்றுள்ளன. முக்கியமாக கீழ்க் கண்டவர்களது பெயர்கள் இருக்கிறது.

(1) கே.வி. பாலகுமார் மற்றும் அவரது மகன் சூரியதீபன்
(2) வி. இளங்குமரன் (குழந்தை சுப்பிரமணியன்) தமிழீழக் கல்வித் துறையின் தலைவர். அவரது மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள் அறிவுமதி.
(3) யோகரத்தினம் யோகி வன்னியில் உள்ள ‘மோதல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு’ பொறுப்பானவர்
(4) கவிஞர் புதுவை ரத்னதுரை, புலிகளின் கலை மற்றும் கலாச்சாரத் துறையின் ஒருங்கிணைப்பாளர்
(5) K. பாப்பா, ஒருங்கிணைப்பாளர் விடுதலைப் புலிகள் விளையாட்டுத் துறை
(6) ராஜா (செம்பியன்) உதவி ஒருங்கிணைப்பாளர் விடுதலைப் புலிகள் விளையாட்டுத் துறை மற்றும் அவரது 3 குழந்தைகள்
(7) இளந்திரையன், விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர்
(8) வீரதேவன், ஒருங்கிணைப்பாளர் விடுதலைப் புலிகள் வங்கி
(9) எஸ்.தங்கன், அரசியல் பிரிவு துணைத் தலைவர்
(10) அருணா, தமிழீழ கல்வித்துறை
(11) எஸ். நரேன், உதவி TRO இன் நிர்வாக தலைவர்
(12) குட்டி, புலிகளின் போக்குவரத்துத் துறையின் தலைவர்
(12) பிரியான், நிர்வாக சேவைத் துறை தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர்
(13) வி. பூவண்ணன், புலிகளின் நிர்வாக சேவை பிரிவின் தலைவர்
(14) தங்கையா, நிர்வாக சேவை துறை
(15) மலரவன், நிர்வாக சேவை துறை
(16) பகீரதன், நிர்வாக சேவைத் துறை
(17) ரெஹா, புலிகளின் மருத்துவ பிரிவின் தலைவர்
(18) செல்வராஜா, தளபதி மணல் அரு தலைமையகம்
(19) பாஸ்கரன், தளபதி மணல் அரு தலைமையகம்
(20) மேஜர் லாரன்ஸ்
(21) மேஜர் குமரன்
(22) பிரபா, மட்டக்களப்பு மாவட்ட தளபதி
(24) ரூபன், வழங்கல் ஒருங்கிணைப்பாளர்
(25) நகை வணிகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாபு
(26) இளம்பரிதி, அரசியல் பிரிவின் நிர்வாகத் தலைவர்
(27) எலிலன், திருகோணமலை அரசியல் பிரிவின் தலைவர்
(28) விஜிதரன், நிர்வாகச் செயலாளர், அரசியல் பிரிவு
(29) மேஜர் வீமன்
(30) சக்தி, ஒருங்கிணைப்பாளர் வனவியல் பிரிவு மற்றும் அவரது குடும்பத்தினர்
(31) ஈ.ரவி, வீடுகளின் பொறுப்பு
(32) சஞ்சை, முள்ளியவளை பிரதேச அரசியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
(33) பர ரதா, ஒருங்கிணைப்பாளர் நீதித்துறை
(34) குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் விமானப்படை பாதுகாப்பு
(35) சித்திராங்கன் மாலதி, தளபதி மணல் ஆறு மாவட்டம்
(36) சுகி,  தளபதி
(37) அருணன், பெரிய கடல் புலிகள்
(38) மனோஜ் – மருத்துவ துறை
(39) லேரரன்ஸ், நிதித்துறை
(40) லோரன்ஸ் திலகர், ஒருங்கிணைப்பாளர் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் திட்டத் துறை
(41) கரிகாலன், முன்னாள் தளபதி, கிழக்கு மாகாணம்

மொத்தம் 110 பெயர்கள் அடங்கிய முழுப்பட்டியலை இணையதள முகவரி http://white-flags.org/ இல் பார்க்கவும்.

இவர்களில் யாரும் உயிரோடு  திரும்பி வரவில்லை. எல்லோரும் கடுமையான சித்திரவதைக்குப் பின்னர்  கொல்லப்பட்டார்கள். சிலர் சிமெந்து குழைக்கிற இயந்திரத்துக்குள் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் எனவும் அறியப்படுகிறது. 58 ஆவது இராணுவப் பிரிவின் கட்டளைத் தளபதியாக  சவேந்திரா சில்வா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநாமஉ பேரவையின் ஆணையர் மிசேல் பச்சலெட் போர்க்குற்றம் தொடர்பாக தங்களிடம் 120,000 ஆவணங்கள் இருப்பதாக அண்மையில் நடந்த ஐநாமஉ பேரவை அமர்வில் அறிவித்திருந்தார்.

போர் தொடர்பான உண்மைகள் தெரிய வேண்டும். படுகொலைகளுக்குப் பொறுப்பான இராணுவ தளபதிகள் இனம் காணப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். சனாதிபதி கோட்டாபய ஆட்சியில் அது நடக்கும் என தமிழர் தரப்பு நம்பத் தயாராயில்லை. கடந்த கால வரலாறு அதைத்தான்   சொல்கிறது. 

About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply