அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அன்னைத் தமிழில் அர்ச்சனை நெடுங்காலக் கனவு கைப்பட்டுள்ளது!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அன்னைத் தமிழில் அர்ச்சனை நெடுங்காலக் கனவு கைப்பட்டுள்ளது!

நக்கீரன்

தமிழக வரலாற்றில், தமிழின வரலாற்றில் கடந்த ஓகஸ்ட் 15 ஆம் நாள் முக்கியமான திருநாள் ஆகும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற பெரியாரின் கனவையும் கலைஞர் கருணாநிதியின் சட்டத்தையும் நடைமுறைப் படுததியுள்ளார் தமிழ் நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.  இதன் மூலம் மொத்தம் 51 ஆண்டுகால சமத்துவப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதற்கு வழிவகுக்கும் முறையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த பட்டியல் பிரிவு 5 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் 12 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் ஒருவர், பெண் ஓதுவார் ஒருவர் என 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமச்சர் ஸ்டாலின் வழங்கி வைத்தார்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற போராட்டத்துக்கு நீண்ட வரலாறு உண்டு.  தந்தை பெரியார் மறைந்த  போது கலைஞர் கருணாநிதி “பெரியாருக்கு எத்தனையோ விருப்பங்கள் உண்டு. சாதி பேதமற்ற சமுதாயம், மூட நம்பிக்கை ஒழிந்த சமுதாயம் இதையெல்லாம் காண வேண்டுமென்று பெரியார் ஆசைப்பட்டார். அவரது ஆசைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டன சமநீதிக்காகக் குரல் எழுப்பி, மக்களுக்கு எழுச்சியூட்டி, துடிப்புடன் இறுதி வரை தனது தள்ளாத வயதிலும் சமுதாய இழிவு ஒழிப்புக்காகப் போராடியவர்  தந்தை பெரியார்” என்றார்.

பெரியார் சமூகநீதிக்காகக் குரல் எழுப்பி, மக்களுக்கு எழுச்சியூட்டி, துடிப்புடன் இறுதி வரை தனது தள்ளாத வயதிலும் சமுதாய இழிவு ஒழிப்புக்காகப் போராடியவர்.  இறப்பதற்கு முன்னர் அவர் ஆற்றிய உரையில் “ஐம்பது வருடமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல். அதுவும், எதிரே நம்மைப் பார்த்து, சூத்திரன் என்று சொல்லமாட்டான். வீட்டிலே பேசுவான்.  இந்தச் சூத்திரப் பசங்க என்றுதான் பேசுவான். இந்த இழிவிலே இருந்து நீங்கணும்” என்ற தனது விருப்பத்தை வெளியிட்டார்.

தமிழகத்தில் 1970 இல் கருவறை நுழைவுப் போராட்டத்தினை அறிவித்த தந்தை பெரியார், அப்போராட்டத்திற்குக் காரணமான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற கோரிக்கையினைச் சட்டமாக்குவதாக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தந்தை பெரியாருக்கு உறுதியளித்ததின் விளைவாக அப்போராட்டத்தினை  அவர் கைவிடுகிறார். அதன் பிறகு, தலைவர் கலைஞர் 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பார்ப்பனர் அல்லாதோரும் பயிற்சி பெற்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தினைக் கொண்டுவந்து சட்ட சபையில் நிறைவேற்றினார்.

கலைஞர் இயற்றிய இச்சட்டத்தினை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமைக்கோர முடியாது என்றும் அதே வேளையில், அர்ச்சர்கர் நியமனத்தில் ஆகம விதிகள் மீறப்பட்டால், அச் சட்டத்தினை எதிர்த்த பார்ப்பனர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பினைப் பற்றித் தந்தை பெரியார் “ஆபரேஷன் வெற்றி; நோயாளி மரணம்” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தலையங்கத்தை விடுதலையில் எழுதினார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசியற் சட்டத்தைத் திருத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில்  தனிநபர் மசோதா ஒன்றைத் திமுக நா.உறுப்பினர் 1974 இல்  கொண்டுவந்தார். அதன் பிறகு, திமுக வில் ஏற்பட்ட  பிளவு, நெருக்கடி நிலை, திமுக ஆட்சிக் கலைப்பு என்று தமிழகத்தின் சமூகநீதி முன்னேற்றத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் அடுத்தடுத்த தடைக்கற்களை மத்திய ஆளும்வர்க்கம் ஏற்படுத்தியது.

அதற்குப் பின்னர் அமைந்த தமிழக அரசு, திராவிடக் கட்சியின் அரசாகவே இருந்தாலும், அதன் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் ” கடவுள் இல்லையென்று சொன்ன பெரியார் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டு மென்று கூறினாரா? ஆர்ச்சரியமாக இருக்கிறதே” என்று கேட்டார். இருந்தும்  திராவிடர் கழகம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக எம்ஜிஆர் ஆட்சியில் நீதியரசர் மகாராஜன் குழு  அமைக்கப்பெற்றது. ஆகம விதிகள் மீறப்படாமல் அனைத்து சாதியினரும் எவ்வாறு அர்ச்சகர் ஆகமுடியும் என்ற ஆலோசனைகள் பெறப்பட்டன. அக்குழுவின், வேத, ஆகம பயிற்சிப் பள்ளிகளை நிறுவி அதன்மூலம் அனைத்துச் சாதியினரையும் பயிற்றுவித்து, அர்ச்சகர் ஆக்கலாம் என்ற பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.

1991 இல் ஜெயலலிதா தலைமையில் அமைந்த அண்ணா திமுக அரசு வேத பயிற்சி பள்ளிகள் நிறுவப்படும் என்று அறிவித்தது.  அவை அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் எனப் பெயர்மாற்றம் செய்யப்படவேண்டு மென்று திராவிடர் கழகம் வலியுறுத்தி வெற்றியும் பெற்றது. ஆனால், அன்றைய அரசின் அறிவிப்பு, அறிவிப்பாகவே நின்றுபோனது. 2006 இல் அமைந்த  திமுக அரசு, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை நிறுவியதுடன் 69% விழுக்காடு அடிப்படையில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அரசாணை வழங்கியது.

இதனை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவச் சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்  வழக்குத் தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் 2015 இல் தமிழக அரசின் சட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகள் கழித்து மாரிச்சாமி என்ற பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர் தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மதுரை அழகர் கோவிலுக்குட்பட்ட அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராகப் பணியமர்த்தப்பட்டார்.

இது தொடர்பாக 2007 இல் தமிழக அரசு நீதியரசர் ஏ.கே. இராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு சைவ ஆகமங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர்  செய்யும் புரட்டு என்று தரவுகளுடனும் சான்றுகளுடனும் நிறுவியியது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலிலுள்ள நாற்பத்தியொரு அர்ச்சகர்களில் நால்வருக்கு மட்டுமே ஆகமங்கள் தெரியுமென்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள நூற்றிப்பதினாறு அர்ச்சகர்களில் வெறும் இருபத்தியெட்டுப் பேருக்கு மட்டுமே ஆகமங்கள் தெரியுமென்றும் தெரிவித்தது.

தந்தை பெரியார் தன்னுடைய வாழ்நாளின் இறுதிப்பகுதியில் கூட தமிழர் சமூதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று 1973 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 8,9 ஆகிய நாட்களில் நடத்தினார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில்தான்  ஆட்சிப் பொறுப்பேற்ற நூறாவது நாளில் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது ஆகும்.

ஆனால் இந்திய நாட்டிற்கே முன்னுதாரணமாகக்  கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது சனநாயக முன்னணி அரசு ஏற்கனவே அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்கி வரலாறு படைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2002 இல் வெளியான தீர்ப்பினை 16 ஆண்டுகள் கழித்து செயல்படுத்தியிருக்கிறது கேரள அரசு.  அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூகநீதியாகும்.

பிரசாதம் கொடுக்கும் அர்ச்சகர்

பண்டைய தமிழகத்தில் எல்லா வகுப்பினருள்ளும் சிவனடியார்கள் தோன்றினார்கள். அறுபத்து மூவருள் பிராமண நாயன்மார்கள் பதினான்கு பேர்; வணிக நாயன்மார் அறுவர்; வேளாள நாயன்மார் பதின்மூவர்; குருக்கள் மரபினர் நால்வர், வேட்கோவர், வேடர், இடையர், வண்ணார், பரதவர், சாலியர், பாணர், பறையர், சான்றார் முதலிய வகுப்புக்களிலும் நாயன்மார் தோன்றினர்.

எனவே பக்தி இயக்க காலத்தில் (7 – 9 ஆம் நூற்றாண்டு)  கொடிய சாதி வேறுபாடுகள் பாராட்டப் படவில்லை. சைவநெறி தழைத்தோங்கப்  பாடுபட்டவர்களில் தேவார மூவரின் பங்களிப்பு பெரிதாகும். இவர்கள் தந்த பண்சுமந்த பாடல்கள் தோத்திரப் பாக்களாக உள்ளன. இவர்கள் பாடிய தலங்கள் திருமுறைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தேவார மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என அழைக்கப்படுகின்றனர்.

பிராமணரான சம்பந்தர்,  திருநாவுக்கரசருடைய கல்வியறிவு, பட்டறிவு, முதுமை, பக்தியின் சிறப்பு இவற்றைக் கருதி அவரை ‘அப்பரே’ (Father) என்றழைத்தார். பிராமணரான அப்பூதி அடிகளும் அவரது குடும்பமும் வேளாளரான திருநாவுக்கரசருடன்  இருந்து உணவுண்டனர். அப்பருக்குப் பாத பூசை செய்தார். சிவப் பிராமணரான சுந்தரர் உருத்திரக் கணிகையரான பரவையாரையும் வேளாளப் பெண்மணியான சங்கிலியாரையும் மணந்துகொண்டது கவனிக்கத்தக்கது. சிவநேயச் செட்டியார் தம் மகளை மணந்துகொள்ளும்படி பிராமணரான சம்பந்தரை வேண்டியதும், வேளாளரான கோட்புலியார் தம் இரு பெண்களையும் மணந்துகொள்ளும்படி ஆதி சைவரான சுந்தரரை வேண்டினமையும் மனங்கொள்ளத்தக்கது.

திருஞானசம்பந்தர்  தான் தரிசிக்கும்  கோவில்களுக்கு தன்னோடு  திருநீலகண்ட யாழ்ப்பாணரை அழைத்துச் சென்றார். திருஞானசம்பந்தர் பாடும் பாடல்களுக்கு பண்ணமைத்து  திருநீலகண்டர் தனது யாழில்  வாசித்தார்.  அவரது துணைவியார் மதுங்கசூளாமணி வாயால் பாடினார்.  இவர்கள் பாணர் குலத்தவர் ஆவர்.

“ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும், கங்கை வார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளரே,” என்று திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். 

இவை அனைத்தையும் நோக்க, அக்காலச் சிவனடியார்கட்குள் சாதி வேற்றுமை காட்டப்படவில்லை என்பதும், பக்தி ஒன்றுக்கே மதிப்புத் தரப்பட்டது என்பதும் தெரிகின்றன. அனைவரும் கலந்து ஒன்றாய்ப் பழகுதல், பாடுதல், உண்ணுதல், உறங்குதல் சமய வள்ர்ச்சிக்குத் தேவையானது எனக் கருதப்பட்டது. மேலும் சாதி வேறுபாடுகள் அற்ற சமணத்தையும் பவுத்தத்தையும் வெல்ல முயன்ற சைவத்தில் அவ்வேறுபாடுகள் இருத்தல் இழிவென்று  அவர்கள் கருதியிருத்தல் வேண்டும்.

இறைவன் “ஏழிசையாய் இசைப்பயனாய்” இருப்பவன். “பண் அவனே;” “பண்ணின் திறனும் அவனே” என்பது நாயன்மார்கள்  கண்ட உண்மைகள்.  சமய தத்துவங்களில் உயர்ந்தது நாத தத்துவம். நாதத்திலிருந்து இசை தோன்றுகிறது. இறைவனே இசை வடிவமாய் இருக்கிறான் என்பது சைவ சமயக்கொள்கை. இதனால் இசையோடு தோத்திரங்களைப் பாடுவதால், இறைவன் மகிழ்வான். அருள் புரிவான் என்று சம்பந்தர் கூறியுள்ளார். “தமிழோடு இசை கேட்கும் இச்சையில் நித்தம் சம்பந்தர்க்கு காசு நல்கினீர்” என்று சுந்தரர் சிவனை  நோக்கிக் கூறியிருத்தல், இசையை இறைவன் விரும்புகிறான் என்பதை உணர்த்துகிறது.

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்ததன் மூலம் ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் ஆகம விதிகளின்படிதான் பணிநியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழ் உணர்வாளர்களின் இன்னொரு நீண்ட கால வேண்டுகோளை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் நாள் நிறைவேற்றியிருக்கிறது. கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.  

அபிஷேகம் செய்யும் அர்ச்சகர்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 47 கோவில்களில்  தமிழ் மந்திரங்கள்  ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

சைவநெறி தழைத்தோங்க பாடுபட்டவர்களில் தேவார மூவரின் பங்களிப்புப் பெரிதாகும். இவர்கள் தந்த பண்சுமந்த பாடல்கள் தோத்திரப் பாடல்களாக  பயன்படுத்தப்படுகின்றன.

சைவநெறி தழைத்தோங்க பாடுபட்டவர்களில் தேவார மூவரின் பங்களிப்புப் பெரிதாகும். இவர்கள் தந்த பண்சுமந்த பாடல்கள் தோத்திரப் பாடல்களாக உள்ளன. இவர்கள் பாடிய தலங்கள் திருமுறைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டுள்ளது.  தமிழில் அர்ச்சனைசெய்ய விரும்பும் அடியார்கள் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளலாம். 

முதற் கட்டமாக வடபழனி முருகன் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 47 பெரிய திருக்கோயில்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 539 முக்கிய கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.  இதற்காக, முருகன், விநாயகர், பெருமாள், சிவன், அம்மன் எனத் தனித்தனி கடவுள்களுக்கு ஏற்றவகையில் போற்றிப் புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன.

மேலும் தமிழகத்தில் உள்ள கோயில்களில் அப்பகுதியில் உள்ளபெரும்பான்மை மக்கள் விருப்பப்பட்டால் அக்கோயில்களில் தமிழில் குடமுழுக்குச் செய்யப்படும். எந்தவிதமான முரண்பாட்டுக்கும் இடமில்லாமல், யார் மனதும் புண்படாமல் ஆகம விதிகளைப் பின்பற்றி முறையாக குடமுழுக்கு அனைத்து கோயில்களிலும் செய்யப்படும். 

தமிழகத்தில் தமிழ் வழிபாட்டிற்கும் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் பெரும் பணியும் தொடக்கப்பட்டுள்ளது.  இது ஒரு நல்ல தொடக்கம். தேவையான அளவு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளைத் திறந்து பட்டயப் படிப்பு மட்டுமின்றி பட்டப்படிப்பையும் உருவாக்கி சாதி வித்தியாசம் இன்றி அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர் பணிநியமனங்கள் செய்யப்பட வேண்டும்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற தமிழர்களின் நெடுங்காலக் கனவு கைப்பட்டுள்ளது!
 

About editor 3020 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply