இன்று (09-08-2021) சிங்கப்பூரின் தேசிய நாள்
அழகன் கனகேந்திரம்
09 08 1965 ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக சிங்கப்பூர் உருவெடுத்தது இந்த நாளில்தான். கேலி செய்யப்பட்ட வெறும் 718.3 சதுர கி.மீ பரப்பளவே உள்ள ஒரு சின்னஞ்சிறு தீவு பணக்கார நாடாக உருவெடுத்தது, ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சிறிய சந்தை எனப்பட்ட சிங்கப்பூர், பொருளாதாரத்தில் முதலிடம் என்கிற பெயரை லீயின் பணிகளால் பெற்றது.

Lee Quan Yew
எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதை சாதித்து காட்டிய சிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று வந்து வழக்குரைஞராகப் பணி புரிந்து கொண்டிருந்த ஹாரி லீ குவான் யூ 1959 ல் தொடங்கிய பி.ஏ.பி (People’s Action Party – PAP) கட்சிதான் இன்று வரை தனிப் பெரும்பான்மையுடன் சிங்கப்பூரை ஆண்டு வருகிறது.
சாகும் வரை அதன் தனிபெரும் தலைவராக் இருந்தவர் லீ. 30 ஆண்டு காலம் பிரதமர், 56 ஆண்டு காலம் சகல அதிகாரங்களும் கூடிய அமைச்சர், 60 ஆண்டு காலம் ஒரே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எனத் தொடர்ந்து சிங்கப்பூரைத் தன் சுண்டு விரல் இயக்கத்தில் வைத்திருந்தவர் அவர்.இனப்பற்றாளர், சர்வாதிகார மனோபாவம் உடையவர், பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குபவர் என்ற பல குற்றச்சாட்டுகள் லீ குவான் மீது இருந்தாலும், மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து வந்து தனி நாடாக ஆன போது அது அழிந்து விடும் என்று பலரும் கருதிய நேரத்தில் அந்நாட்டை பொருளாதார சக்தியாக மீட்டெடுத்தவர் அவர் என்பதை எவராலும் மறுக்க இயலாது.
பூஜ்ஜியத்தில் இருந்த ஒரு நாட்டை 30 வருடங்களில் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்.எந்த ஒரு நாடும் சுதந்திரத்தை போராடிப் பெற்றதாகத் தான் சரித்திரம்.ஆனால், சிங்கப்பூர் மட்டும் விதிவிலக்கு.மலேசிய நாடாளுமன்றம் சிங்கப்பூரை கூட்டமைப்பிலிருந்து விலக்குவது என முடிவெடித்தது அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடனும் (120 எதிர் 0) இம்முடிவு எடுக்கப்பட்டது. உலக வரலாற்றில் இப்படி கட்டாயமாக விடுதலை அளிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் அமைந்தது. லீ இதைத் தேசிய ஊடகங்களில் அறிவித்த போது அழுதார் எனச் சொல்லப்படுகிறது.
ஆம், சிங்கப்பூருக்கு சுதந்திரம் என்பது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. மலேசிய கூட்டமைப்பு சிங்கப்பூரை தனி நாடாக அறிவித்ததும் “வேண்டாம், தயவு செய்து கூட்டமைப்பிலிருந்து எங்களை பிரிக்காதீர்கள்” என்று லீகுவான்யூ போன்ற தலைவர்கள் அன்றையக் காலக்கட்டத்தில் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார்கள்.ஆனால், மலேசியத் தரப்பினர் அதற்கு செவிமடுக்கவே இல்லை.1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற சிங்கப்பூர், அதே ஆண்டு (1963) செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் மலேசியக் கூட்டமைப்பின் ஒரு மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்பின்பு, 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் நாளன்று மலேசியக் கூட்டமைப்பானது, சிங்கப்பூரை அக்கூட்டமைப்பிலிருந்து பிரித்து, தனி நாடாக அறிவித்தது… இந்த நாள்தான் (ஆகஸ்ட் 9) சிங்கப்பூரின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது…மலேசிய கூட்டமைப்பிலிருந்து தனி நாடாக (வலுக்கட்டாயமாக) பிரிக்கப்பட்டு சுதந்திர நாடாக பிரகடனப் படுத்தப்பட்ட சிங்கப்பூரை ஒரு சிறந்த வர்த்தக பூமியாக மாற்றிக் காட்டுவேன் என்று அன்றைக்கு சபதம் எடுத்தார் லீகுவான்யூ… அதன்படி சிங்கப்பூரை மலேசியாவைவிட வளர்ந்த நாடாகவும் உயர்த்திக் காட்டினார்.சிங்கப்பூரை செதுக்கியெடுத்த அந்த மகாசிற்பிக்கு தங்கள் கடின உழைப்பின்மூலம் பக்கபலமாய் இருந்தவர்கள் நம் தமிழர்கள் என்பதை அந்த மமதையற்ற மகாசிற்பியே மனம் திறந்து கூறியிருக்கிறார் என்பது தமிழர்களை பெருமைப்பட வைக்கும் விஷயம்.உலக அளவில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள நாடுகளின் வருடாந்திரப் பட்டியலில் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது சிங்கப்பூர்.
ஆனால் அது தனி நாடாக உருவான போது கட்டமைப்புகள் ஏதும் இல்லாத, உணவுப் பொருள் உற்பத்தி செய்ய இயலாத வெற்றுப் பரப்பாகவே இருந்தது, இன்றைய மேம்பட்ட நிலைக்கு சிங்கப்பூரை உயர்த்தியவர்களில் முதன்மையானவர் லீ குவான் யூ. ஒன்றுமில்லாத நாட்டை வியந்துபோற்றும் அளவுக்கு மாற்றியவர் அவரே.சிங்கப்பூர் தனி நாடானபோது, அது நெடுங்காலம் நீடித்திருப்பதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இல்லை என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் எழுதின. சிங்கப்பூரில் பிரிட்டிஷார் உருவாக்கியிருக்கும் கட்டமைப்புகளை மூடிவிட்டால், சிங்கப்பூர் என்றொரு நாடே இல்லாமல் போய்விடும் என்று கேலி செய்தன.

ஒரு புறம் பிரிட்டன் இன்னொரு புறம் சீனா, அந்தப் பக்கம் அமெரிக்கா என பல தரப்பில் இருந்தும் சிங்கப்பூரில் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்புகள் உருவாகியிருந்தன. தற்காத்துக் கொள்வதற்கு சிங்கப்பூரிடம் அப்போது இராணுவம் கூடக் கிடையாது. இருந்த இரு படைப்பிரிவுகளும் மலேசியாவிடம் இருந்து இரவலாகப் பெறப்பட்டவை. இந்த நெருக்கடியைத் திறமையாகக் கையாண்டார் லீ. நவீன கட்டமைப்புகள் அனைத்தும் அசுத்தம் நிறைந்திருந்தது.
அதைத் தடுப்பதற்காக முதலில் கண்ட இடங்களில் எச்சில் துப்புவதைத் தடுக்கும் பரப்புரையை லீ தொடங்கினார். எச்சில் துப்புவதையே மக்கள் மறக்கும் அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தார்.1965ல் ஆயிரத்திற்கு 27.3 ஆக இருந்த குழந்தை இறப்பு வீதம் (infant-mortality rate) 2003ல் வெறும் 2.2 ஆகக் குறைந்தது. இது அமெரிக்காவைக் காட்டிலும் 3 மடங்கு குறைவு.
உலகிலேயே மக்கள் நலத்தில் முதலாவது நாடாக சிங்கப்பூரை புளூம்பெர்க் தரவரிசை (World’s healthiest country) முதன்மைப்படுத்துகிறது. குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டுள்ள வகையிலும் லீயின் சிங்கப்பூர் முன்னிற்கிறது. சிங்கப்பூரில் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியம் அமெரிக்காவைக் காட்டிலும் 24 மடங்கு குறைவுசிங்கப்ப்பூரின் வளர்ச்சி அமெரிக்காவுடையதைக் காட்டிலும் விரைவானது, அதிகமானது எனத் தரவுகளுடன் நிறுவியது. உலக அளவில் வணிகம் செய்வதற்கான சிறந்த நாடுகளின் வரிசையில் (Economist Intelligence Unit’s ranking) முதலாவதாகவும் லீயின் சிங்கப்பூர் இன்றும் மதிப்பிடப்படுகிறது.
தேவையில்லாமல் காரில் ஒலி எழுப்பினால் அபராதம் விதிக்கப்பட்டது. புகை கக்கும் வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. கால்நடைகளைச் சாலையில் உலவவிட்டால் உரிமையாளருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
சூயிங்கம் ஆங்காங்கே ஒட்டப்படுகிறது என்பதால், 1960-களிலேயே சூயிங்கத்தையே தடை செய்ய பரிசீலிக்கப்பட்டது. தபால் பெட்டிகள், சாவித் துவாரங்கள், லிஃப்ட் பொத்தான்கள் என எங்கெங்கும் சூயிங்கத்தை ஒட்டி விடுகிறார்கள் என்று புகார்கள் வந்தன.மெட்ரோ ரயில்கள் ஓடத் தொடங்கியபோது அதன் கதவுகளில் சூயிங் கம் ஒட்டப்பட்டது.
இதனால் 1992-ஆம் ஆண்டு சூயிங் கம் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டது.இது குறித்து செய்தியாளர் ஒருவர் லீ குவான் யூவிடம் கேட்டபோது, எதையாவது மென்றால்தான் கற்பனை வரும் என்றால், வாழைப் பழத்தை மெல்லுங்கள் என்று கூறினார். லீயினால் முக்கிய தொழில்கள் சிங்கப்பூரில் பெருகின. பன்னாட்டு முதலீடுகள் குவிந்தன. பெரு நிறுவனங்கள் சிங்கப்பூரில் கிளைபரப்பின. எதிர்பாராத அளவுக்குச் செல்வம் குவிந்தது.
பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிவிட்டால், அரசே நீடித்திருக்காது என்று கூறப்பட்ட ஒரு நாடு, உலகமே ஏக்கத்துடன் பார்க்கும் அளவுக்கு முக்கிய நாடாக உருவெடுத்தது. எந்தக் கனிம வளமும் இல்லாத, குடிநீருக்குக்கூட வெளிநாட்டை நம்பியிருக்கும் நிலையில் இருந்த சிங்கப்பூர் ஆசியாவின் முதல்நிலைப் பொருளாதார நாடாக உயர்ந்தது.
பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தாலும், மத நல்லிணக்கம், இன ஒற்றுமை போன்றவறைப் பாதுகாத்தவர் லீ. 75 சதம் பேர் சீனர்களாக இருந்த போதும் சீன மொழிதான் (மான்டரின்) ஆட்சி மொழி என அவர் அறிவிக்கவில்லை ,மொழிப் பாகுபாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக, மலாய், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவித்திருந்தார். லீ குவான் யூ பிறந்தது பணக்காரக் குடும்பம். அங்கு கண்டிப்புக்கும் குறைவிருக்காது. சாதாரணமாக கேள்விப்படாத பலவிதமான தண்டனைகளை இளம் வயதிலேயே பெற்றிருக்கிறார் லீ குவான் யூ.
தனது தாய் வழி தாத்தாவின் வீட்டில் இருந்தபோது, விலை உயர்ந்த பொருள் ஒன்றை லீ வீணாக்கிவிட்டார். விவரம் லீயின் தந்தை சின் குவானுக்குத் தெரியவந்தது. அவர் லீயைத் தூக்கிக் கொண்டு கிணறுவரை சென்றுவிட்டார். இனி எப்போதாவது தவறு செய்தால் கிணற்றில்போட்டு மூடிவிடப்போவதாக எச்சரித்தார். சிறுவனான லீ குவான் யூ அச்சத்தில் உறைந்திருந்தார். குறும்பு செய்வதைக் குறைத்துக் கொண்டார். அதே நேரத்தில், தண்டனைகள் கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறைந்துபோகும் என்பது அவரது மனதில் ஆழப் பதிந்துபோனது.
இன்று சிங்கப்பூரில் பிரம்படிகள் கொடுப்பது, கடுமையாக அபராதம் விதிப்பது, ஊழல் அதிகாரிகளைக் கடுமையாகத் தண்டிப்பது போன்றவையெல்லாம் இதன் எதிர்வினைகள்தாம். நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு இளம் வயதில் கற்றுக் கொண்ட பாடங்களை அமல்படுத்தும் விதமாக, விதிமீறல்களுக்குக்கு பிரம்படி உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கும் முறையை லீ அமல்படுத்தினார்.
ஒழுக்கமில்லாவிட்டால், எந்தவிதமான இலக்கையும் அடைய முடியாது என்பது அவரது எண்ணம். அதையே ஆட்சியிலும் அவர் அமல்படுத்தினார். 1980-களில் தனது மூத்த அமைச்சர் மீது ஊழல் புகார் எழுந்தபோது, அதை விசாரிப்பதற்கு லீ உத்தரவிட்டார். அது தெரிந்தவுடனேயே அந்த அமைச்சர் தற்கொலை செய்து கொண்டார். அந்த அளவுக்கு லீ கண்டிப்பானவராக இருந்தார். இயல்பாகவே தமிழர்கள் மீது அதிகப் பாசம் கொண்டவர் லீ குவான் யூ. சிங்கப்பூரைக் கட்டமைப்பதில் தமிழர்களின் பங்கு அளப்பரியது என்ற கருத்து அவருக்கு இருந்தது. அதனால் தமிழர்களுடனும் தமிழ்நாட்டுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது.
இன்றைக்கு உலக அளவில் பொருளாதார ரீதியாக மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாகவும்,கண்கவரும் அழகிய பிரதேசமாகவும் திகழும் மிகவும் சிறிய பரப்பளவே கொண்ட தீவு நாடான சிங்கப்பூர் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள் இதோ உங்களுக்காக இந்த பதிவில்.
1. சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய் ஆகும் .மலாய், மாண்டரின்,தமிழ், சீனம் ஆகிய நான்கு மொழிகளும் சிங்கப்பூர் நாட்டின் ஆட்சி மொழிகளாகும். இருப்பினும் பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் ஆங்கில மொழியை பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.
2. சிங்கப்பூர் 1965 ஆம் ஆண்டு வரையிலும் மலேசியா நாட்டின் ஒரு அங்கமாகவே இருந்தது.அதன் பின்னர்தான் மலேசியாவிலிருந்து பிரிந்து சிங்கப்பூர் தனி நாடாக உருவாகியது.
3. சிங்கப்பூரில் 33.2% மக்கள் புத்த மதத்தையும், 18.7% மக்கள் கிறிஸ்தவ மதத்தையும்,மீதம் உள்ள 48.1% மக்கள் இஸ்லாம் ஹிந்து மற்றும் வேறு சில மதங்களையும் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
4. சிங்கப்பூரில் உள்ள பொது கழிப்பறைகளை உபயோகித்த பின்னர் உபயோகித்த நபர் அவற்றை சுத்தம் செய்யாமல் போய்விட்டால் சிங்கப்பூரின் சட்டப்படி அவர் ஒரு குற்றவாளி ஆவார்.அந்த நபர் 150 சிங்கப்பூர் டாலர்களை அந்த குற்றத்திற்காக அபராதபாக செலுத்த வேண்டும்.
5.ஒரு ஆண்டில் 18.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருகை தருகிறார்கள். உலகிலேயே அதிக மக்களால் பார்வையிடப்பட்ட நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
6. ஆசிய கண்டத்திலேயே ஊழல் குறைத்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதன்மையான இடத்தில் உள்ளது.உலக அளவில் ஐந்தாவது ஊழல் குறைந்த நாடாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது.
7. இன்றைய சிங்கப்பூர் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை துமாசிக் என்ற பெயரோடு அழைக்கப்பட்டது
8. சிங்கப்பூர் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 48 சதவீத மக்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
9. சிங்கப்பூரின் 100 டாலர் பண நோட்டில் சிங்கப்பூரின் முழு தேசிய கீதமும் மிகச்சிறிய மைக்ரோ எழுத்துக்களால் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
10. சிங்கப்பூரில் உள்ள கிட்டத்தட்ட 80 சதவீத நிலம் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும்.
11.சிங்கப்பூர் மக்களில் சராசரியாக 10 இல் 9 பேர் அரசுக்கு சொந்தமான வீட்டிலேயே வசிக்கின்றனர்.
12. உலகின் முதன்மையான பசுமை நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.
13. சிங்கப்பூர் ஒரே ஒரு தீவை மட்டும் உள்ளடக்கிய நாடு கிடையாது.மொத்தம் 63 தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவு நாடு .
14. உலகிலேயே முதல் முறையாக திறக்கப்பட்ட இரவு நேரத்தில் மட்டுமே செயல்படும் ‘ The Night Zoo’ என்ற இரவு நேர மிருகக் காட்சியகம் சிங்கப்பூரில் தான் உள்ளது.
15.சிங்கப்பூர் நாட்டு மக்கள் தான் மற்ற நாடுகளை சேர்ந்த மக்களை விட மிகவும் வேகமாக நடக்கும் பழக்கத்தை உடையவர்கள் என்று கூறப்படுகிறது.
16. 280 மீட்டர்களை விட உயரமாக எந்தக் கட்டிடமும் கட்டக் கூடாது என்ற விதி சிங்கப்பூரில் உள்ளது.
17. சிங்கப்பூர் உலகிலேயே மிகவும் சிறிய 20 நாடுகளில் ஒரு நாடாகும். சிங்கப்பூரை விட 15,000 மடங்கு அமெரிக்கா பெரிய நாடு ஆகும்.
18. சிங்கப்பூர் உணவுப் பிரியர்கள் நிறைந்திருக்கும் ஒரு நாடாகும். சிங்கப்பூரில் தினம்தினம் புதியதாக இரண்டு உணவகங்கள் திறக்கப்படுகின்றன.
19. சிங்கப்பூரின் பெரும்பான்மையான மக்கள் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். எனவே இந்த மாதத்தில் சிங்கப்பூரில் பிறந்தநாள் விழாக்கள் மிகவும் களை கட்டும் என்றே சொல்லலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.