சமூக நீதியை சரித்திரமாக்கிய தமிழ்நாடு! – அன்றும் இன்றும்

சமூக நீதியை சரித்திரமாக்கிய தமிழ்நாடு! – அன்றும் இன்றும்

விகடன் வாசகர் க. சேதுராமன்

03 Aug 2021

ஸ்டாலின்

ஸ்டாலின்

கடந்த சில வருடங்களாக மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்பின் கீழ் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பின்பற்றபடவில்லை…

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சமூக நீதி, இந்த வார்த்தை கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவு தமிழ்நாடு அரசியலில் ஓங்கி ஓலித்து கொண்டிருக்கும் ஒரு சொல். சமூக நீதிக்கான வரலாறு என்பது இன்றோ அல்லது நேற்றோ தொடங்கியது அல்ல, 1917 இல் சென்னை மாகாணத்தில் நீதி கட்சியில் தொடங்கி இன்றைய தமிழ்நாட்0+\டில் மு.க .ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக வரை தொடர்கிறது. சமூக நீதியை காத்திடும் விதமாக கடந்த அரை நூற்றாண்டுகளாக இரு பெரும் திராவிட கட்சிகள் எடுத்த நடவடிக்கைகள் ஏராளம், அதிலும், குறிப்பாக திமுக-வின் பங்கு மிக முக்கியமானது. இதன் தொடர்ச்சி தான், தற்போது ஒன்றிய அரசு, மருத்துவ படிப்புகளில், அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப் பட்டோர்க்கான 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த அறிவித்திருப்பது.

Representational Image
Representational Image

நவம்பர், 20 1916 அன்று, இருபதிற்கும் மேற்பட்ட பிராமணரல்லாத தலைவர்களால் தொடங்கப்பட்ட சவுத் இந்தியன் லிபரல் பெடரேஷன்(SILF), இதுதான் அந்நாட்களில் நீதிக்கட்சி என்றும் பிரபலமாக அழைக்கப்பட்டது. இது 1920 இல் நடந்த தேர்தலில் மெட்ராஸ் மாகாணத்தில் பெருவாரியான இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது. தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, 1925இல் கம்யூனல் கவர்மெண்ட் ஆர்டர் சட்டத்தை கொண்டுவந்தது. இதுவே இடஒதுக்கீட்டை பிரிட்டிஷ் இந்தியாவில் அறிமுகம் செய்தது முதல் முறையாகும். 1925 இல் கொண்டுவரப்பட்ட கம்யூனல் கவர்மெண்ட் ஆர்டர், 1947 சுதந்திரத்திற்கு பிறகும் தொடர்ந்தது. இதை எதிர்த்து , 1951 இல் சண்பகம் துரைராஜன் என்பவர் போதிய மதிப்பெண் பெற்றும், தனக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை எனவும்,மேலும் இந்த கம்யூனல் கவர்மெண்ட் ஆர்டர் அரசியலமைப்பு சட்டம் 16(2) க்கு எதிரானது என்றும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தை அணுகினர். அங்கு நடந்த விசாரணைக்கு பிறகு, 1925 இல் கொண்டுவரப்பட்ட இந்த இடஒதுக்கீடு செல்லாது என்று மெட்ராஸ் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து அப்போதைய சென்னை மாகாண அரசு உச்ச நீதிமன்றம் சென்றது, உச்சநீதிமன்றமும் உயர்நீதி மன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பின் விளைவாக , மெட்ராஸ் மாகாணத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகமும், பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவும் “இந்த தீர்ப்பு என்பது சமூக நீதிக்கு எதிரானது” என்று பல போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வர முனைந்தார். 12 மே 1951 இல் கொண்டுவரப்பட்ட இந்த முதல் சட்டத்திருத்தம் 15(4) படி , சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான முன்னேற்றத்திற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் அளித்தது. குறிப்பாக, சுதந்திர இந்தியாவில் ஒருமுறை கூட நாடாளுமன்றம் கூடாத நிலையில் சமூக நீதிக்கான சட்ட திருத்தத்தை அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வந்த பெருமை திராவிட இயக்கங்களையே சாரும்.

மெட்ராஸ் மாகாணம்
மெட்ராஸ் மாகாணம்

சமூக நீதி காத்திடும் விதமாக, 13 நவம்பர் 1969 அன்று அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் முதலாவது பிற்படுத்தப் பட்டோருக்கான ஆணையம் , ஏ.என்.சட்டநாதன் தலைமையிலும், எஸ். சின்னப்பன் மற்றும் எம். ஏ. ஜமால் உசேன் ஆகிய இருவரையும் உறுப்பினராக கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டுருந்தார். இந்த குழுவின் முதன்மை பணியானது அதுவரை அரசால் பிற்படுத்த பட்டோரின் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்து, பிற்படுத்த பட்டோர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதும் ஆகும். மேலும் , இந்த சட்டநாதன் கமிஷன் அறிக்கை வெளிவந்தபின், அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை 25% லிருந்து 31% மாகவும் மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 16% லிருந்து 18% மாகவும் அரசு உயர்த்தியது. இதன் மூலம் இடஒதுக்கீடு மொத்தம் 49% மாக உயர்ந்தது.

இதன் பின்,1977 இல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் அவர்கள் ,2 ஜூலை 1979 இல், ஆண்டு வருமான (ரூ. 9000) அடிப்படையிலான பொருளாதார ரீதியிலான பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தி அரசாணை ஒன்றை வெளியிட்டார். இந்த அரசாணைக்கு எதிராக திராவிடர் கழகமும், மு. கருணாநிதி தலைமையிலான திமுகவும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்ததனர். மேலும் “இதுபோன்ற பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீடு என்பது சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படையிலே இருக்க வேண்டும்” என்று எடுத்துரைத்தனர்.

மு.கருணாநிதி
மு.கருணாநிதி

இதற்கிடையே 1980 இல் பாராளுமன்றம் கலைக்கபட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக வெறும் இரண்டு பாராளுமன்ற தொகுதியிலேயே வெற்றி பெற முடிந்தது. இதன் காரணமாக, 21 ஜனவரி 1980 அன்று எம்ஜிஆர் அவர்கள் பொருளாதார ரீதியிலான பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு அரசாணையை திரும்ப பெற்றார். மேலும், எம்ஜிஆர் அவர்கள் 31 சதவீதமாக இருந்த பிற்படத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். இதன் மூலமாக தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 68 சதவீதமாக உயர்ந்தது.

1989 இல் ஆட்சிக்கு வந்த மு.கருணாநிதி அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்கி அதற்கு 20 சதவீதத்தை ஒதுக்கினார். இதன் மூலமாக 30% பிற்படுத்தப்பட்டோருக்கு மற்றும் 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு என்றும், 18% பட்டியலினத்தவருக்கு என்றும், 1% பழங்குடியினருக்கு என்றும் மொத்தம் 69 % இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார்.

இந்திரா சவ்கனே வழக்கும், தமிழ் நாடு அரசும்

1992 இல் பிரபலமான இந்திரா சவ்கனே வழக்கில் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு சம்பந்தமான தீர்ப்பொன்றை வழங்கியது, இந்த தீர்ப்பில் அது இடஒதிக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டம் 16(4) அடிப்படையில் 50% த்திற்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று கூறியிருந்தது.

இடஒதுக்கீடு
இடஒதுக்கீடு

அப்போது தமிழ்நாடு அரசு 69% இடஒதுக்கீட்டை பின்பற்றிவந்ததால் இந்த தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சிக்கலை உருவாக்கியது, இதனை தீர்க்கும் பொருட்டு , அப்போதைய தமிழ்நாடு முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள், 1993-1994 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தை அணுகினர். இதன் மீதான தீர்ப்பில் உயர்நீதிமன்றம் 1993-1994 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அப்போதுவரை நடைமுறையில் இருந்த முறைப்படி நடத்தி கொள்ளவும், அதற்கடுத்த கல்வியாண்டு 1994-1995 இல் இடஒதுக்கீடு 50% மிகாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தை அணுகி அப்போதிருந்த இடஒதுக்கீடுக்கீட்டை தொடர அனுமதிக்குமாறு கேட்டது. இருந்தபோதிலும் உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்ற தீர்ப்பை உறுதிசெய்யும் வகையில் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்பது 50% மேலாக இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

நீதிமன்றங்கள் விலக்கு அளிக்காத நிலையில், நவம்பர் 1993 இல் சட்டமன்றத்தில் 69% இடஒதுக்கீடுக்கான தீர்மானம் தாக்கல் செய்யபட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சட்டம் என்றும், தமிழ்நாடு சட்டம் (தமிழ்நாடு ஆக்ட்) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சட்டமானது அப்போதைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர் ஒப்புதல் பெறப்பட்டது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

மேலும், அப்போதைய ஜெ. ஜெயலலிதா அரசு அதோடு மட்டும் நிற்காமல், இந்த சட்டத்திற்கு சிறப்பு சட்ட பாதுகாப்பு வழங்கும் பொருட்டு இதை அரசியலமைப்பு சட்டம் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் வைக்க அப்போதைய பிரதமர் நரசிம்மராவை வலியுறுத்தி இறுதியாக அது ஆகஸ்ட் 1994 இல் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் வைக்க பட்டு சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த சட்டம் தொடர்பாக வேறு எந்த நீதிமன்றத்திலும் மறுசீராய்வு செய்ய முடியாது.

கடந்த சில வருடங்களாக மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்பின் கீழ் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு பின்பற்ற படவில்லை. இதனை தொடர்ந்து, திமுக கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டை நடைமுறை படுத்த வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. அந்த வழக்கில், 27 ஜூலை 2020 இல் சென்னை உயர்நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த வேண்டுமென்று ஆணையிட்டது. ஆனாலும் இதை நடைமுறை படுத்துவதில் தாமதமானதால், மீண்டும் திமுக இதுதொடர்பாக இந்த ஆண்டு ஜூலை 19 இல் ஒரு மனுவை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.

கருணாநிதி -  ஸ்டாலின்
கருணாநிதி – ஸ்டாலின்

இதற்கு பதிலளிக்கும் வகையில் சோலிசிட்டர் துஷார் மேத்தா அவர்கள் பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவு அடுத்தக் கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, ஒன்றிய அரசு, மாநிலங்கள் அகிலஇந்திய தொகுப்பிற்கு வழங்கும் 15% மருத்துவ படிப்பிற்கான இளங்கலை இடங்களிலும் மற்றும் 50% முதுகலை இடங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.


இப்படி கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக சமூக நீதியை நிலைநாட்ட மக்கள் போராட்டம் மற்றும் சட்ட போராட்டங்களின் மூலம் வெற்றி வாகை சூடிய திமுகவும் , அதன் தொடர்ச்சியான மு.க ஸ்டாலின் அவர்களும், தமிழ்நாடு பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 50% பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை அகிலஇந்திய தொகுப்பிலும் நடைமுறை படுத்த சட்ட ரீதியாக வென்று முழுமையான சமூக நீதியை நிலை நாட்டுவார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் துளிர்விட்டுள்ளது.

https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-social-justice-in-tamilnadu

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply