“தன் இறுதிக்காலத்தை முன்பே உணர்ந்த சித்தர் பாலகுமாரன்” – நெகிழும் எழுத்தாளர்கள்!
16 May 2018
எழுத்து சித்தர் பாலகுமாரன் காலமாகிவிட்டார். இது அவரது வாசகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனது எழுத்தின்மூலம் ஆயிரக்கணக்கான இதயங்களைக் கொள்ளையடித்தவர். வாழ்க்கையை அணுகுவதில் பலருக்கு முன்மாதிரியாக இருந்தவர்.
“இலக்கியத்தில் தொடர்ச்சியாக 40 ஆண்டுகள் இயங்கியவர் பாலகுமாரன். பொதுவாக ஒரு 10 ஆண்டுகள்தான் ஒரு எழுத்தாளர் தீவிரமாக எழுதுவார். அடுத்த பத்து ஆண்டுகளில் அந்த வீச்சு குறைந்துபோய்விடும். அவர்களுடைய வாசகப் பரப்பே இடம் மாறிப்போய்விடும். இந்தச் சமூக வாழ்க்கையில் அதே முனைப்போடு ஒருவர் தொடர்ந்து இயங்குவது மிக மிகக் கடினம். ஆனால், பாலகுமாரனுடைய வீச்சு நாற்பது ஆண்டுகாலம் தொடர்ச்சியாக இருந்தது. அவருடைய முதல் படைப்பான ‘மௌனமே காதலாக தொடங்கி, கடைசியாக அவர் எழுதிய பத்திகள் வரைக்கும் எழுத்தின் மீதும் சமூகப் பரப்பின்மீதும் செலுத்திய ஆதிக்கம் குறையவேயில்லை. அதுதான் பாலகுமாரனின் மிகச் சிறந்த ஆளுமையாக நினைக்கிறேன். இனியொரு நாற்பது ஆண்டுகள் இப்படியொரு எழுத்தாளர் நம் சமூகத்துக்கு கிடைப்பாரா? என்பது தெரியவில்லை.
1970-ம் ஆண்டுகளிலேயே எழுதத் தொடங்கியவர் பாலகுமாரன். அந்தத் தருணத்தில் தீவிர இலக்கியத் தன்மையோடு ‘கணையாழி’ இதழ் வந்து கொண்டிருந்தது. அதில் எழுதுபவர்கள் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். அந்தப் பத்திரிகை சார்பில் மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். அப்போது இளைஞர்களாக இருந்த பாலகுமாரன், சுப்பிரமண்ய ராஜு போன்றவர்கள் அந்தக் கூட்டங்களில் பங்கேற்று, அதன் வழியாக எழுத்துலகில் நுழைந்தார்கள். இதையெல்லாம் பாலகுமாரனே தன்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார். அதையெல்லாம் வாசித்துதான் என்னைப் போன்ற பலர் 1990-களில் இலக்கியத்துக்கு வந்தார்கள். கணையாழியின் வழியே, மறைந்த கவிஞர் ஞானக்கூத்தனால் வளர்த்தெடுக்கப்பட்டவர் பாலகுமாரன். ‘அடுத்தது என்ன?’ என்ற கேள்வி தோன்றியபிறகுதான் அவர் வெகுசன பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். ‘ஆனந்த விகடன்’ போன்ற இதழ்களில் வெளியாகும் அவரது படைப்புகள் வாசகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டன.
சமூக இறுக்கங்களை உடைத்தெறிந்த எழுத்து பாலகுமாரனுடையது. பெண்ணியம் சார்ந்து, அவர்களுடைய வெளிப்பாடுகள் சார்ந்து நிறைய எழுதினார். அது தன்னியல்பாகவே அவருடைய எழுத்தில் வெளிப்பட்டது. பெண்களுக்கான விடுதலை உணர்ச்சியை அப்போதே விதைத்தார் பாலகுமாரன்.
(எழுத்தாளர் பாலகுமாரன் மரணம் குறித்த இறுதிப் பேட்டி…)
இப்போதெல்லாம் காதல், இயல்பான ஒரு சமூக விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் காதல் என்பது கெட்டவார்த்தையாக, சமூகக்கோளாறாக, நோய்மையாகக் கருதப்பட்டது. காதலிப்பவர்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவங்கள் எல்லாம் நடந்தேறின. அதுகுறித்த பல மனத்தடைகளை தன் எழுத்தின் மூலம் உடைத்தெறிந்து, சமூகத்துக்குப் புத்துணர்ச்சி அளித்தவர் பாலகுமாரன்.
மறைந்த பிரபல இயக்குநர் பாலசந்தரிடம், ‘புன்னகை மன்னன்’, ‘சிந்து பைரவி’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஒரு படத்தின் திரைமொழி என்பது சொற்கள் தான். ஒரு படத்தில் பாலகுமாரன் வசனம் எழுதினால், அந்தப் படமே அவருடைய பாணிக்கு மாறிவிடும். இயக்குநரின் பாணியில் இருக்காது. ‘குணா’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘மன்மதன்’, ‘உல்லாசம்’ போன்ற படங்களில் அதை நீங்கள் கவனிக்கலாம். பாட்ஷாவில் “நான் ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி..”, காதலனில் “சந்தோஷமோ.. துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு.. நிதானத்துக்கு வருவ..” என அவர் எழுதிய எல்லா வசனங்களிலும் ஒரு தனித்தன்மை இருக்கும். காதலர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவரின் நாவலில் வருகிற பாத்திரங்கள் பேசுவது போலவே இருக்கும். திரைமொழியை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்த எழுத்தாளர் என்றால் அது பாலகுமாரன்தான்.
தமிழின் தொடர்ச்சியான ஒருபெருங்கன்னி அறுந்துவிட்டது. அது பேரிழப்புதான். அவர் இன்னும் பத்து ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கலாம். தமிழுக்கு இன்னும் நிறையப் படைப்புகள் கிடைத்திருக்கும்” என்று நெகிழ்ச்சியாக பேசுகிறார் மகுடேசுவரன்
(எழுத்தாளர் பாலகுமாரன் மரணம் குறித்த இறுதிப் பேட்டி… பகுதி – 2 )
பாலகுமாரனுக்கும் தனக்குமான நட்பு பற்றி பேசுகிறார் எழுத்தாளர் சாருநிவேதிதா..
“யோகியைச் சந்தித்ததில் இருந்தே பாலகுமாரனின் பாதை வேறு மாதிரி ஆகிவிட்டது. வாசகர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவருடைய, ‘இதுபோதும்’ என்ற நூலை எனக்கு வாசிக்கக் கொடுத்தார். ‘இந்த நூலைக் கண்டிப்பாக வாசித்தே ஆகணும்’னு என்னிடம் கேட்டுக்கொண்டார். யோகியிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அந்தப் புத்தகத்தில் சாரமாகக் கொடுத்திருப்பார். அவர் எழுதியதில் முக்கியமான புத்தகம் அது.
தன்னுடைய இறுதிக்காலத்தை முன்கூட்டியே உணர்ந்த சித்தர் அவர். போன வருடம் முகநூலில் தன்னுடைய இறப்பு குறித்து, ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். எல்லா மனிதனையும் சமமாகப் பாவித்தவர். பெண்கள், பாலகுமாரனிடம் பழகும்போது, கிடைக்கிற சுதந்திரத்தை, வேறு யாரிடமும் உணரமுடியாது. நிபந்தனையற்ற அன்பு கொண்டவர். அன்பின் சொரூபம் அவர். அதனால்தான் பெண்களுக்கு அவரை அதிகம் பிடித்திருந்தது.
சினிமாவில் வித்தியாசமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியிருக்கிறார். ‘நாயகன்’, ‘பாட்ஷா’வை எல்லோருக்கும் தெரியும். ‘புதுப்பேட்டை’ போன்ற ஹார்ட் பிரேக்கிங் படத்துக்கும் அவர் எழுதியுள்ளார். அவருடைய இடத்தில் இருந்து, தரைமட்டமான ஒரு இடத்துக்கு எழுதியிருப்பது ஆச்சர்யமான விஷயம். வசனத்தில் இளங்கோவன், கருணாநிதிக்கு இணையாக எழுதியவர் பாலகுமாரன். சினிமாவில் வசனத்தை மிகுந்த உயரத்துக்குக் கொண்டுபோனதில் அவரின் பங்கும் அளப்பரியது. இலக்கியத்தில் எதிர்காலம் குறித்து எழுதியவர் சுஜாதா. இலக்கியத்தை வரலாறு நோக்கி நகர்த்தியவர் பாலகுமாரன். அவரைப்போல அன்பான மனிதனைப் பார்ப்பது கஷ்டம்!” என்று, கண்ணீர் தளும்ப பேசினார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.
——————————————————————————————————————-
‘சிகரெட்” பற்றி
எழுத்தாளர் பாலகுமாரன்
இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும்
பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை.
சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது. அந்த நஞ்சு நரம்புகளில்
பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலhக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக
நினைத்துக் கொண்டேன்.
நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற
அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?
நிகோடின் என்பது வெறும் புகையல்ல. அதுவொரு போதையான ரசாயனம்.
அது என்ன செய்யும்?
கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம்
தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது.
சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து
உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி எல்லா இடங்களிலும் ஒரு
அமைதி படர்கிறது. கண் கிறக்கமான ஒரு நிலைமை ஏற்படுகிறது.
இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
உதவியும் செய்தது. என்ன உதவி?
சுற்றுப்புறம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் எத்தனை இரைச்சல்
இருந்தாலும் உள்ளடங்கி ஆழ்மனதில் அமிழ்ந்து சிந்திக ;க சிகரெட் உதவி
செய்வதாக நினைத்துக் கொண்டேன். அப்படி சிந்திப்பதால்தான் கதை எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.
காலை, மாலை, இரவு என்று எல்லா நேரங்களிலும் சிகரெட்
வேண்டியிருந்தது. சிகரெட் பிடிப்பதற்காகவே பலமணி நேரம் கூட்டங்களில்
உட்காருவதை தவிர்த்தேன். அரை மணிக்குமேல் யாரோடும் அமர்ந்து
அமைதியாக பேச முடியவில்லை.
வெகு விரைவாக சாப்பிட்டு விடுவேன். குழம்பு சாதம் நாலு கவளம்,
தயிர் சாதம் நாலு கவளம் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்ததும்
வெளியே யோய் ஒரு சிகரெட் பற்ற வைத்து புகை இழுத்தால்தான் சாப்பிடதன் நிறைவு பூர்த்தியாகும்.
இது மிகமிக கேவலமான நிலைமை. ஆரோக்ய குறைவான சிந்தனை.
உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை அறுத்தெறிகின்ற மிகப்பெரிய காரியம்.
பத்தொன்பது வயதில ; தொடங்கிய சிகரெட் பழக்கம் மெல்ல மெல்ல
வளர்ந்து நாற்பத்தைந்தாவது வயதில் உச்சகட்டத்தை அடைந்தது. இழுத்து
இழுத்து புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது
இரைப்பைக்கும் போயிற்று. இரைப்பையில் புகை தங்கி மேல் வயிறு பெரிதானது. மேல் வயிறு பெரிதாக இருந்ததால் நடக்கும்போது மூச்சு வாங்கியது.
மாடிப்படி ஏறும்போது சிரமமாக இருந்தது.
எது பற்றியும் கவலைப்படாமல் இடையறாமல் சிகரெட் பிடித்தபடி
இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் ‘இவனை மாற்ற முடியாது” என்று
கைகழுவி என் போக்கிலேயே விட்டார்கள். ‘நிச்சயம் ஒருநாள் நீங்களாக
விட்டுவிடுவீர்கள்” என்றும் சொன்னார்கள்.
அது நேர்ந்தது.
திருமணத்திற்காக ஒரு மகள் இருக்கிறாள். வளர்ந்து படிக்க வேண்டிய
ஒரு மகன் இருக்கிறான். இருந்தும் கவலையின்றி இத்தனை செலவு
செய்கிறோமே, உடம்பு பாழாகிறதே என்று கவலைப்பட்டு என்
குருநாதரை மனமுருக வேண்டி இந்த சிகரெட்தான் கடைசி, என்று
சொல்லி ஒரு பாக்கெட் சிகரெட் முழுவதும் வீட்டு வாசலில் நின்றே
அமைதியாக பிடித்து முடித்த பிறகு அந்த பெட்டியை கசக்கி
குப்பைத் தொட்டியில் எறிந்தேன்.
மறுநாளிலிருந்து சிகரெட் பிடிக்கவில்லை. முதல் ஒரு மணி நேரம் தவிப்பாக இருந்தது. பல் கடித்து பொறுத்துக் கொண்டேன். இன்னும் அரை மணி ‘இன்னும் அரைமணி” என்று தள்ளிப் போட்டேன். அரை நாள் சிகரெட் பிடிக்காமல் இருந்தது ஆரோக்யமாக தெரிந்தது.
அன்று முழுவதும் பிடிக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தேன்.
இருந்தேன். நெஞ்சு விசாலமானது. அதற்கு பிறகு இரண்டு நாட்கள், மூன்று
நாட்கள் சிகரெட் பிடிக்கவில்லை.
நான்காவது நாள் சிகரெட் தேவைப்படவில்லை.
நடுவே ஒரு சிகரெட் பிடித்திருந்தாலும் கால் இடறி மறுபடியும்
புகைக்குழியில் விழுந்திருப்பேன். முற்றிலும் மாறுபட்ட மனிதனாக, நன்கு
சுவாசிக்கிறவனாக, மற்றவர்கள் சிகரெட் பிடித்தால் மூக்கை பொத்திக்
கொள்பவனாக மாறினேன்.
ஆனால் என்ன, செய்த பாவங்கள் விடுமா?
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக
தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் ஆபரே~ன்
செய்து கொண்டேன்.
அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட்டை நிறுத்தி ஆரோக்யத்தை
அதிகப்படுத்தியதால் அந்த ஆபரே~னை சமாளிக்க முடிந்தது.
பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.
இரண்டாயிரத்து பதினொன்றில் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ்
செய்து கொண்டேன்.
சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால்,
தினந்தோறும் காலையும் மாiலயும் வேகமாக நடந்ததால்,
மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.
ஆனால், இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை.
பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன்
வி~த்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.
நுரையீரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி
அடைப்புகள். நுரையீரல் முழுத் திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
ஒருபிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும்
மூடி ஆக்சிஜனை வேகமாக செலுத்தினால்தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த வி~யத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்ற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள்.
இதை எப்படி சரி செய்வது?
வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக
இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு
உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.
மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.
வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள்
வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக
இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத ;திரியாக மாறpயது. எப்பொழுதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும்படி ஒரு அவஸ்தை.
ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித்
திரிந்தவனுக்கு சிறைத் தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை. ஜூரம் இல்லை. ஆனால், ஆக்சிஜன்குழாயை எடுத்துவிட்டால் மூச்சுத்திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது, உண்ண முடியாது, எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை டுத்ததுபோன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.
ஒருநாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக்கொண்டேன். அப்படிப் புகைத்தால்தான்
கதை எழுத வரும் என்று முட்டாள்தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.
மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும்.
எந்த ரூபத்தில ; வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சு திணறி இதோ
‘இதோ” என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.
நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங ;கியது என்பது
பரவாயில்லை.
மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த
முடியாமல், வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க
முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட்
பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை
அழித்து விடுங்கள்.
சிகரெட் பிடிப்பவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை கைவிடுங்கள்.
சிகரெட் உங்களை இன்றல்ல… பிற்பாடு ஒருநாள் மிக நிதானமாக
கொல்லுகின்ற ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த இருமல், இந்த முதுகு குனியல், இந்த தளர்வு, இந்த வேதனையெல்லாம் சிகரெட் பிடிப்பதால் விரைவாக ஒரு மனிதனுக்கு வரும்.
நல்லபடியாக சுவாசம் செய்து கொண்டிருந்தால் எழுபத்தைந்து வயது வரை
ஆரோக்யமாக நிச்சயம் இருக்கலாம். அறுபத்தாறு வயதில் தள்ளாடுகின்ற
நிலைமை ரூ எழுத முடியாத நிலைமை ரூ பேச முடியாத நிலைமை , ஒரு
மனிதனுக்கு வருகிறதென்றால் அது வேதனைக்குரியது.
அது தவிர எந்நேரமும் நம்மைச் சுற்றி தாங்கும்படியாக நம் உறவினர்களுக்கு நாம் சுமையாக இருக்கிறோம் என்பது இன்னும் இம்சையானவிடயம்.
வீட்டிலுள்ள முக்கியமான ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால் அந்த வீடே
நோய்வாய்ப்படும். எனவே எது வி~மோ, எது மிக கொடூரமாக நம்மை
தாக்குமோ அதிலிருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.
புகை பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்குத் தீங்கானது. உங்கள் வாழ்க்கையை சிதறடிக்கப் போவது.
உங்கள் வளர்ச்சியை அறுத்தெறியப் போவது. உங்கள் ஞானத்தை பொசுக்கப்
போவது. எனவே, சிகரெட்டை மனதாலும் நினையாமல் நன்கு மூச்சு இழுத்து
வெளியே விடுகின்ற பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள். சிகரெட் ஆசையே வராது.
Leave a Reply
You must be logged in to post a comment.