சீன பொதுவுடமைக் கட்சியின் தலைவர்கள் அதிகாரத்தில் நீடித்து இருப்பதற்குச் சித்தாந்தத்தை ஒதுக்கித் தள்ளியுள்ளனர்!
நக்கீரன்
“சீனா? அந்தப் பூதம் தூங்கட்டும், ஏனென்றால் அது எழுந்தால் உலகை அசைத்துவிடும்” என பிரான்ஸ் நாட்டின் பேரரசர் நெப்போலியன் பொனபாட் சொன்னதாக கூறப்படுகிறது. நெப்போலியன் பொனபாட்தான் (1804-14/15) பிரான்ஸ் நாட்டின் முதல் பேரரசர். பிரஞ்ச் புரட்சியில் (1789-99) அவர் முக்கிய பங்கு வகித்தார். ஒரு சாதாரண குடியில் பிறந்த அவர் இராணுவத்தில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து நாட்டின் தலைவரானார்.
சீனாவைப் பற்றிய நெப்போலியனின் கணிப்பீடு இன்று பலித்து வருகிறது. மா சே துங் இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவாமிங்டன் ஆட்சியை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி நடத்திய போரில் அது வெற்றி கண்டது. இதன் பின், ஒக்தோபர் 1, 1949 அன்று வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பீஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து சீன மக்கள் குடியரசு புரட்சி மூலம் நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி யூலை 01, 1921 இல் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு அந்தக் கட்சி தனது நூறாவது ஆண்டு நிறைவைப் பெரும் ஆரவாரத்தோடு கொண்டாடுகிறது. தொண்ணுறு மில்லியன் (9கோடி) உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக் கட்சியே உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாகும்.
சீனக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டு 72 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று சீனா உலகத்தின் இரண்டாவது பெரிய வல்லரசாக – அமெரிக்காவுக்கு அடுத்த பெரிய வல்லரசாக உருவெடுத்துள்ளது. நண்டு கொழுத்தால் வளையில் இராது என்று சொல்வார்கள். சீனாவும் அப்படித்தான். அண்டை நாடான இந்தியா மற்றும் மேற்குலக சனநாயக நாடுகளோடு சீனா பகைமை பாராட்டி வருகிறது.
சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு நிறைவையொட்டி இந்த ஆண்டு முழுவதும் தொடர் கொண்டாடங்களுக்கு அந்த நாட்டை ஆளும் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி கடந்த வியாழக்கிழமை (யூலை முதல்நாள்) நடைபெற்ற பிரமாண்டமான கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய சீன நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் “சீன உள்விவகாரங்களில் எப்படி நாங்கள் செயற்பட வேண்டும் போன்ற போதனைகள் வழங்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று முழங்கினார்.
கொங்காங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அங்கு சனநாயக ஆதரவுக்குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும் உலக அளவில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில், சீன அதிபரின் இந்தக் கடுமையான எச்சரிக்கை அமெரிக்காவை குறிப்பிட்டுப் பேசுவது போல உள்ளதாக அரசியல் இராசதந்திரிகள் கருதுகிறார்கள். அண்மைக் காலமாக சீனா தனது அரசியல் மற்றும் பொருளாதாரச் செல்வாக்கை ஆசியாவில் மட்டுமல்ல அதற்கப்பாலும் உள்ள ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நிலைநிறுத்தி வருகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பண்டைய கால பட்டுச் சாலையை மீண்டும் புதுப்பித்து வருகிறார். இந்தப் புதிய வாணிக (சரக்கு போக்குவரத்து) பாதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. பட்டுச் சாலை பொருளாதார மண்டலம் (Silk Road Economic Belt) சீனாவின் ஜியான் பிரதேசத்தில் தொடங்கி மத்திய ஆசியா, ஐரோப்பிய நாடுகளை இணைக்கிறது. மற்றோரு பட்டுச் சாலை பாகிஸ்தான் (சீனா–பாகிஸ்தான் பொருளாதார மண்டலம்), மியான்மர், இந்தியா (வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மர் பிரதேசம்) தென்கிழக்கு ஆசிய நாடுகளை (சீனாவில் குன்மிங் இல் இருந்து தாய்லாந்து, சிங்கப்பூர் ரயில் பாதை ) இணைக்கிறது.
மண்டலம் (Belt) என்பது பட்டுச் சாலை பொருளாதார மண்டலம் என்பதன் சுருக்கமாகும்.
இது சீன அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகளாவிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு உத்தி கிட்டத்தட்ட 70 நாடுகள் மற்றும் அனைத்துலக அமைப்புகளில் முதலீடு செய்யப்படும் திட்டமாகும். இந்தத் திட்டம் சீன பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளரும் சீனத் தலைவருமான ஷி ஜின்பிங் அவர்களின் வெளியுறவுக் கொள்கையின் மையப் பகுதியாகக் கருதப்படுகிறது.
இது மேற்குப் பிராந்தியங்களின் புகழ்பெற்ற வரலாற்று வாணிக பாதைகளில் மத்திய ஆசியா வழியாக சாலை மற்றும் தொடர்வண்டி போக்குவரத்திற்கான உத்தேச நிலப்பரப்பு தென்கிழக்கு ஆசியா வழியாக தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா வரையிலான இந்தோ – பசிபிக் கடல் வழிகளைக் குறிக்கும். இதன் கீழ் துறைமுகங்கள், வானளாவிய கட்டிடங்கள், தொடர்வண்டிப் பாதைகள், சாலைகள், விமான நிலையங்கள், அணைகள் மற்றும் இரயில் பாதை சுரங்கங்கள் ஆகியவை உருவாக்கப்படும்.
இதே போல் கடல் பட்டு பாதை (கப்பல் போக்குவரத்துக்காக) சீனாவின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரமான புஜியான் மாகாணத்தில் இருந்து தொடங்கி தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்த மகா சமுத்திரம் வழியாக செல்கிறது. ஒரே வாணிக மண்லம் – ஒரே போக்குவரத்துப் பாதை என்பதே, சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டு கொள்கையின் முக்கிய அம்சம் ஆகும்.
இந்த ஒரே வாணிக மண்டலம் – ஒரே போக்குவரத்துப் பாதை என்பதை 21 ஆம் நூற்றாண்டின் மார்ஷல் திட்டம் எனலாம். இதன் நோக்கம் அனைத்துலக அளவில் சீனாவை புதிய பொருளாதார மையமாக மாற்றுவதே. இதற்காகச் சீன நாட்டுத் தலைவர்கள் கோடிக்கணக்கான டொலர்களை செலவு செய்து வருகிறது. அத்துடன் இந்தத் திட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. இந்தியா உட்பட பல நாடுகள் இந்தத் திட்டத்தில் சேருவதற்குப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் மத்தியில் அச்சம் உள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியா இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் இந்தத் திட்டங்களை அமெரிக்கா சந்தேகக் கண்களோடு பார்க்கிறது. இதனால் வணிகம், உளவு பார்த்தல், கொரோனா பெருந்தொற்று போன்ற விவகாரங்களில் சீனாவும் அமெரிக்காவும் ஆளுக்காள் குற்றம்சாட்டிக் கொண்டு வரும் வேளையில், கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கவனமாக கட்டியெழுப்பப்பட்டு வந்த இரு நாட்டு உறவுகள் இன்று மோசமான வகையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
உலகில் எஞ்சியுள்ள ஐந்து பொதுவுடமை நாடுகளில் சீனா முக்கியமானது. ஏனையவை கியூபா, வட கொரியா, வியட்நாம் மற்றும் இலாவோஸ் என்பன.
சீனா பொதுவுடமை நாடென்றாலும் அதன் பொருளாதாரம் அசல் சந்தை முதலாளித்துவ கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டதாகும். மா சே துங் சீனாவின் அதிபராக இருந்தவரை நாடு சோசலீச பொருளாதாரக் கொள்கையைக் கெட்டியாகப் பிடித்திருந்தது. ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் எல்லாம் தலை கீழாக மாறியது.
அவருக்குப் பின் ஆட்சிக் கட்டில் ஏறிய டெங் ஷியாபிங், மாவோ ஆட்சியில் நிலவிய குழப்பமான அரசியல் இயக்கங்களின் விளைவாக நிறுவன சீர்கேடு மற்றும் பொதுவுடமைத் தத்துவத்துடன் அதிருப்தி அடைந்த ஒரு நாட்டை மாற்றியமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கினார். நாட்டை மீண்டும் ஒழுங்கிற்கு கொண்டு வந்தார். 1977 முதல் 1979 தொடக்கம் வரை, பத்து ஆண்டுகளாக கலாசாரப் புரட்சியால் தடைபட்டிருந்த பல திட்டங்களை மாற்றி அமைத்தார். பொருளாதார மண்டலங்களை உருவாக்கினார். சனவரி 1, 1979 இல், அமெரிக்காவுடன் இராசதந்திர உறவுகளை ஏற்படுத்தினார். டெங் அமெரிக்காவிற்கு வருகை தந்த முதல் சீனத் தலைவரானார். அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அவரால் முன்மொழியப்பட்ட சீர் திருத்தங்கள் சீனாவின் மூன்றாவது அரசியலமைப்பில் (1982) இணைக்கப்பட்டன. 1980 களில், டெங் சீனாவின் மக்கள் தொகை நெருக்கடியைச் சமாளிக்க ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தைக் கொள்கையை ஆதரித்தார். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான 863 திட்டத்தைத் தொடங்கினார். கொங்காங் ஒரு நாடு, இரண்டு முறைமைகள் என்ற கொள்கையையும் முன்மொழிந்தார்.
டெங் ஷியாபிங் பொதுவுடமை பொருளாதாரக் கோட்பாட்டைக் கைவிட்டு முதலாளித்துவ கோட்பாட்டை கைக்கொண்டதை நியாயப்படுத்த “ஒரு பூனை கருப்பு அல்லது வெள்ளை நிறம் என்பதல்ல முக்கியம். அது எலிகளைப் பிடித்தால் அது கெட்டிக்காரப் பூனைதான் (It doesn’t matter if a cat is black or white, so long as it catches mice) என்ற முழக்கத்தை முன் வைத்தார். அது இன்று சீனாவை ஒரு பெரிய வல்லரசாக மாற்றியுள்ளது. தனியார் நிறுவனங்கள்
பொருளாதாரத்துறையில் செல்வாக்குச் செலுத்துகின்றன. சீனா பற்றிய முக்கிய தரவுகளைப் பார்ப்போம்.
பெயர் – சீன மக்கள் குடியரசு
பரப்பளவு – 9,596,960 சதுர கிமீ (அமெரிக்காவை விட சற்றுச் சிறியது)
எல்லை நாடுகள் – (14): ஆப்கானிஸ்தான், பூட்டான், பர்மா, இந்தியா, கஜகஸ்தான், வட கொரியா, கிர்கிஸ்தான், லாவோஸ், மங்கோலியா நேபாளம், பாகிஸ்தான், உருசியா, தஜிகிஸ்தான், வியட்நாம்.
கடற்கரை – 14,500 கிமீ.
மலை – இமயமலைச் சிகரம் (ஆசியாவின் மிக உயர்ந்த சிகரம் மற்றும் கடல் மட்டத்திலிருந்து பூமியின் மிக உயர்ந்த புள்ளி) 8,849 மீட்டர்.
இயற்கை வளங்கள் – நிலக்கரி, இரும்பு தாது, ஹீலியம், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விழுக்காடு – 6.14% (2019 மதிப்பீடு)
வருவாய்: 2.553 டிரில்லியன் டொலர்கள் (2017 மதிப்பீடு)
செலவு: 3.008 டிரில்லியன் டொலர்கள் (2017 மதிப்பீடு)
மக்கள் தொகை – 1,397,897,720 (யூலை 2021 மதிப்பீடு). உலகில் முதலிடம்.
இனக்குழுக்கள் – ஹான் சீன 91.6%, ஜுவாங் 1.3%, மற்றவை 7.1% (2019 மதிப்பீடு). சிறிய இனக்குழுக்களை சீன அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
மொழிகள் – சீன அல்லது மாண்டரின், யூ (கான்டோனீஸ்), வு (ஷாங்கானீஸ்), மின்பீ (புஜோ), மின்னன் (ஹொக்கியன்-தைவான்), சியாங், கன், ஹக்கா கிளைமொழிகள், சிறுபான்மை மொழிகள் (இனத்தைப் பார்க்கவும் குழுக்கள் நுழைவு); குறிப்பு – குவாங்சி ஜுவாங்கில் ஜுவாங் அதிகாரப்பூர்வமானது, குவாங்டாங்கில் யூ அதிகாரப்பூர்வமானது, மங்கோலியன் நெய் மங்கோலில் அதிகாரப்பூர்வமானது, உய்குர் சிஞ்சியாங் உய்குரில் அதிகாரப்பூர்வமானது, கிர்கிஸ் ஜின்ஜியாங் உய்குரில் அதிகாரப்பூர்வமானது, மற்றும் திபெத்தியன் ஜிசாங்கில் (திபெத்) அதிகாரப்பூர்வமானது.
அச்சிடப்பட்ட முக்கிய மொழி மாதிரி: 世界 – 不可 缺少 的 基本 來源 (மாண்டரின்)
மதங்கள் – நாட்டுப்புற மதம் 21.9%, பவுத்தம் 18.3%, கிறிஸ்தவர் 5.2%, முஸ்லீம் 1.8%, ஒரு மதத்திலும் இணைக்கப்படாதவர்கள் 51.8% (2020 மதிப்பீடு)
படைபலம் – 2.8 மில்லியன் மாலுமிகள் மற்றும் விமான, கடற்படை வீரர்கள் உள்ளனர். இது அமெரிக்க எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். (அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது, ஒரு மில்லியனுக்கும் அதிகமான செயலில் – துருப்புக்களைக் கொண்ட மற்ற நாடுகள் உருசியா, இந்தியா மற்றும் வட கொரியா மட்டுமே.)
படைபலச் செலவு – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9%.
பொதுவுடமைத் தத்துவம் கோலோச்சிய சோவியத் ஒன்றியம் தொண்ணூறுகளில் இருந்த இடம் இல்லாது மறைந்துபோன பின்னரும் சீனாவில் பொதுவுடமைக் கட்சி நிலைத்து நீடித்து வருவது உலக அதிசயங்களில் ஒன்றாகும். சோவியத் ஒன்றியத்தின் சிதைவு, சீன பொதுவுடமைக் கட்சிக்கு மிகப்பெரிய பாடமாக விளங்குகிறது. சோவியத் ஒன்றியம் சிதைந்ததற்கான காரணிகளை கண்டுபிடித்து அது போன்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்று ஜி ஜின்பிங் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.
சீன பொதுவுடமைக் கட்சியின் மிகப் பெரிய பலம் அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டதாகும். சோசலீச பொருளாதாரக் கோட்பாடு நடைமுறையில் வெற்றிபெறாது என்பதை அறிந்து கொண்ட சீன பொதுவுடமைக் கட்சி அதனைத் தூக்கி எறிந்து விட்டு முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாட்டை தழுவிக் கொண்டது நல்ல எடுத்துக் காட்டாகும்.
மாவோவின் கலாச்சாரப் புரட்சியின் போது ஏற்பட்ட பசி பட்டினிகள் டெங் ஷியாபிங்கின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது. நீண்ட பயணம் முதல் சீன பொதுவுடமைக் கட்சியின் தலைவர்கள் அதிகாரத்தில் நீடித்து இருப்பதற்குச் சித்தாந்தத்தை ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.