பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் – 150+ ஆயுதங்கள் படிமங்களுடன்
- பண்டைய ஈழத்தமிழர்
- போராயுதங்கள்
- தமிழர்
- தமிழரின் படைக்கலங்கள்
- பண்டைய தமிழீழத்தின் ஆயுதங்கள்
- தமிழரின் ஆயுதங்கள்
- சங்ககால தமிழரின் ஆயுதங்கள்
- போர்க்கடவுள் முருகன்
- தமிழரின் ஈட்டிகள்
- குமரிக்கண்ட தமிழரின் ஆயுதங்கள்
- பண்டு தமிழர்
- பண்டைய தமிழர்
- சங்ககால ஆயுதங்கள்
- வீரத்தமிழர்
- பண்டைய தமிழீழத் தமிழர்
- பண்டைய ஆயுதங்கள்
- பண்டைய தமிழகம்
- ஈழத்தமிழர் ஆயுதங்கள்
- தமிழரின் கத்திகள்
- தமிழரின் வேல்
- சங்கத் தமிழர்
- ஆதிச்ச நல்லூர்
- தமிழகம்
- ஆதிச்ச நல்லூர் ஆயுதங்கள்
- பண்டைய இலங்கையின் ஆயுதங்கள்
- ஆதிச்சநல்லூர்
- பண்டைய தமிழீழத்தின் படைக்கலங்கள்
தமிழரின் சமர் படைக்கலன்கள் :
வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை படைக்கலங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது.
தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும்.
- கைக்கொள்படை/ கைப்படை: – (hand hold weapons)
- கைவிடுபடை:
- எய்படை – எய்யும் ஆய்தங்கள் – அம்பு, சன்னகம், கவண்டை போன்றவை
- எறிபடை – எறியும் ஆய்தங்கள் – விட்டேறு, குந்தம், தோமரம் போன்றவை
- கைவிடாப்படை:
- குத்துப்படை – குத்தும் ஆய்தங்கள் – வேல், சூலம் போன்றவை
- வெட்டுப்படை – வெட்டும் ஆய்தங்கள் – வாள், கோடாரி போன்றவை
- அடுபடை – அடிக்கும் ஆய்தங்கள் – தண்டு, தண்டம், உலக்கை போன்றவை
- தடுபடை – மேற்வரும் படையை தடுக்கும் ஆய்தங்கள் – கிடுகு, தோல், மாவட்டணம் போன்றவை
- கைவிடுபடை:
- கைக்கொள்ளாப்படை: – ( siege & defense tools)
ஆதிச்ச நல்லூர் ஆய்தங்கள்
17 ஆம் நூற்றாண்டு ஆய்தங்கள்:
- தோய்த்தல் – ஆய்தங்களைக் காச்சி நனைத்தல்
- துவைச்சல்(படைக்கருவி) – tempering (weapons)
- பணைத்தல் – AIM MISS
- இலக்கு, மச்சை – target
- ஆய்தப்பயிற்சி செய்யுமிடம் – சரம்புச்சாலை, பயிற்சிப்பாசறை, கிடை, களரி
- சரம்பு – ஆயுதப்பயிற்சி
- பணிக்கன் – படைக்கலம் பயிற்றுவிப்போன்.
- சலகுபிடித்தல் – படைப் பயிற்சி எடுத்தல் (to practice drill)
- ஆய்தங்கள் வைத்திருக்குமிடம் – ஆய்தசாலை, படைவீடு, ஆய்தக் களஞ்சியம், தில்லெரி, துப்புளி.
- எஃகம் / துப்பு / படைக்கலம் / ஆய்தம்/ ஏதி/ தானை/ கடுமுள்/ கழுமுள் / படை/ கூர்த்திகை/ கார்த்திகை/ அரி/ பாரசவம்/ மேதி – பண்டையகால ஆய்தப்பொதுவினைக் குறிக்கும் சொற்கள்.
- மேற்கண்ட ஆய்தங்களிற்கான கீழுள்ள விளக்கம், “போரியல்: அன்றும் இன்றும்” என்னும் நூலில் இருந்து எடுத்துள்ளேன்.
- ஆய்தம் என்பது தமிழே! இச்சொல்லே பிற்காலத்தில் ‘ஆயுதம்‘ என்று சமற்கிருததில் திரிந்தது(காண்க : செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி )
- துப்பு – அறிவுடன் பயன்படுத்தத்தகும் வலிமை சான்ற துணைக்கருவிகள்
- தானை – காக்கும் தலைமை சான்ற ஆய்தங்களின் தொகுதி
- படை – படுக்கப்(கொலை) பயன்படுத்துவன படை எனப்படும்
- படைக்கலம் – பல படைகள் சேர்ந்தவை படைக்கலம் எனப்படும்
- எஃகம் – எஃகில் இருந்து செய்யப்பட்ட அனைத்து ஆய்தங்களும் எஃகம்.
- ஏதி – கூர்மையும் விரைவும் கொண்ட துண்டாக்கும் ஆய்தங்கள்
- கார்த்திகை – தீயுமிள் ஆய்தங்கள்
- கூர்த்திகை– கைக்கொள்ளும் கூரிய ஆய்தங்கள்
- இவை, நான் எழுதிய விளக்கங்கள்:
- மேதி – எருமை போன்ற பெரும்பலங் கொண்ட ஆய்தம்
- பாரசவம் – கடும் கனமான ஆய்தங்கள்
- அரி – அரிக்கும் ஆய்தங்கள் அரி எனப்படும்
- கடுமுள் – மிகக் கூர்மையான முள் கொண்ட ஆய்தங்கள்
- கழுமுள் – கழுவின் முள் போன்ற ஆய்தங்கள்
- ஆய்தங்களின் கூர்மையின் பெயர் – வல், வள், வசி , வை, அள், பூ, ஆர் (sharpness, pointedness)
- கூர்வாங்குதல்/ கூர்ப்பிடுதல் – ஆய்தத்தைக் கூராக்குதல்
- கூர்மை பார்த்தல்– ஆய்தத்தின் கூர்மையைச் சரிபார்த்தல்
- ஆய்தத்தின் நுனி – முனை (tip of a weapon)
- அலகு – ஆய்தத்தின் கொல்லும் கூர்மை கொண்ட பகுதி (blade of a weapon or instrument)
- ஆய்தத்தின் பல்- கரு
- கழி – ஆய்தப்பிடி
- ஏறு – வாள், தேள்களின் எறிகை
- ஊறுபாடு – ஆயுதங்களாற் காயமுண்டாக்குகை
- விழுப்புண் – ஆய்தங்களாற் ஏற்பட்ட காயம்.
- கீறுதல்– ஆய்தத்தால் அறுத்தல்
- கத்து – குத்துவெட்டு (இறந்து பட்ட வழக்கு. கிட்டிப்பு: பாவாணர்)
- அடைப்பம்– போர்க் கருவிகள் வைக்கும் பை/ பேழை.
- ஆய்தவுறை – தடறு/ படையுறை/ புட்டில்/ துதி
- இது தோலாலும், எஃகாலும் ஆனது ஆகும்
- காரோடன் -ஆய்தவுறை செய்வோன்.
- வாளுறை – கட்காதாரம்/ வள்/ இடங்கம்/ சொருவு/ திருணகம்
- வாண்முட்டி, ஆசு, பரிஞ்சு – வாளின் பிடி (handle or hilt of a sword)
- கிண்ணி– வாளின் கைப்பிடி உறை (cover of the hilt of the sword)
- வாண்முகம் – வாளின் வாய் (edge of the sword)
- சொருவுவாள் – உறையினுள் வைக்கப்பட்ட வாள்
- ஆணி, புட்கரம், வாளலகு –வாளின் அலகு (sword blade)
- சிலுக்கு – வாளின் பல் (tooth of a saw)
- வெள்வாள் – ஒளியுள்ள கூரிய வாள்;
sharp shining sword. - தாராங்கம் – அரசனால் வீரனுக்கு நெடுமொழி கூறித் தரப்பட்ட வாள்
- ஒள்வாள்– படைக்கலம் இழந்த எதிரிக்கு சமராட எறியும் வாள்
- கத்திப் பிட்டல் – கத்திக் கூடு
- தாங்கு – வேல் / ஈட்டியின் பிடி (The staff of the spear)
- பிடங்கு – வேல் / ஈட்டியின் குழைச்சு (The part of a lance to which steel is fixed.)
- தரங்கு – வேல் / ஈட்டியின் நுனி {The point of in spear (end tip)}
- இலை – வேல் / ஈட்டியின் அலகு (blade of a spear or lance or javelin)
- தலை – செண்டு அ கரளாக்கட்டை போன்றவற்றின் தலைப்பகுதி (head part of a mace or club)
ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர்களால் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஓர் பெயர் தெரியாத ஆய்தங்கள்:
1.தமிழ் அகராதிகளில் முத்தலைச்சூலம்/ முக்குடுமி (பெரியபு. உருத்திர. 10) என்னும் வித்தியாசமான சூலத்தைக் குறிக்கும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சூலம் என்றால் நாம் அறிந்தது..
இரண்டு பெயர்களும் தலையினையே குறிக்கின்றன. மேலும் இந்த ஆய்தத்தினை தலையில் மணிமுடி போல தாங்கியபடி ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற ஓர் முத்திரையானது சிந்துசமவெளி ஆய்வில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே இவை ஏதேனிலும் ஒன்று அதற்கான பெயராக இருக்கலாம் என்பது என் கருத்து.
- இதனைப் பயன்படுத்தும் விதம்
2.
- இவ்வாய்தத்தின் கூர்மையானது செவ்வக வடிவத்தில் உள்ளது. முன் பகுதியின் ஒரு ஒருபக்கத்தில் மட்டும் சிறிது வளைந்து சத்தாராக உள்ளது.
- இவ்வாய்தத்தின் பெயர் தெரியவில்லை!
- இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இவ்வாய்தமானது யப்பானியர்களின் கிகுசி யாரி என்னும் ஆயுதத்தைப் போல உள்ளது
- இவ்வாய்தத்தின் பெயர் தெரியவில்லை!
3.
- நன்கு அகண்ட, ஒரு அடி பத்து அங்குல உயரம் கொண்ட வாள்.ஒரு பக்கம் கூரான சிறிது வளைந்த வாள். ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.
- இதன் பெயர் தளிமமாகஇருக்கலாம் என்பது என் கருத்து!
- தளி→ தளிமம் – பரந்த தடிப்பான திண்ணை போன்ற நேர்த்தியான அமைப்பினை உடையது.
- பெயர் தெரியாத வேறு கைக்கொள் விடாப்படைகள்
- கீழ்க்கண்ட ஆய்தங்கள் இரண்டில், முதலாவது சென்னை அருங்காட்சியகத்தில் இருந்தும் இரண்டாவது ஓர் சேகரிப்பாளர் ஒருவரிடம் இருந்தும் எடுக்கப்பட்டவை. ஆகையால் இவை பற்றி அறிந்தவற்றை மக்கள் தெரிவித்துதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
‘இதே போன்ற படையினைச் சிங்களமும் வைத்திருக்கிறது | திருநள்ளாறு சனீசுவரர் கோவிலில் உள்ள சனியின் சிற்பத்தின் கையில் இவ்வாய்தம் உள்ளது. | சனிசுவரர் படம் காண: Shani Is Depicted As A Male Deity In The Puranas‘
‘இதே போன்ற படையினைச் சிங்களமும் வைத்திருக்கிறது | இதே போன்ற வடிவமைப்பை உடைய ஆய்தங்கள் பாரதத்தில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.’
1)சத்தி/ சூல்/ சூலம் / காளம்/ நல்வசி- இதில் பல வகையுண்டு.
- எரிமுத்தலை – நெருப்பினைக் கொண்ட சூலம்
“தாமேற் றழுத்திய சத்தி வாங்கி” (பெருங். மகத. 20, 63)
“ஊனக மாமழுச் சூலம் பாடி”(திருவாச. 9:17)
“குலிசங் கதைசூல்” (சேதுபு. தேவிபுர. 27)
“நல்வசி, சூலம்” (பிங்.)
‘நீலகிரியில் கிடைத்த 1500 ஆண்டுகள் பழமையான சூலங்கள்’
‘கி.மு.1-ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலக் காசு | படிமப்புரவு : தகவலாற்றுப்படை’
‘சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் – கரூர் | படிமப்புரவு : தகவலாற்றுப்படை’
‘முற்காலச் சோழர் | கி.பி. 9ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் – கரூர் | படிமப்புரவு : தகவலாற்றுப்படை”
‘சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி அருகே செங்கட்டு என்னும் ஊரில், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக்குழு” கல்வெட்டு | படிமப்புரவு: தஞ்சை ஆ.மாதவன்‘
2)சிறு சூலம்
கொச்சியில்(பழைய சேர நாட்டின் ஒருபகுதி) உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற படை. காம்பு மிக மிகக் குறுகியது. ஒரு பனையோலை விசிறியின் அளவே காம்புஇன் நீளம்.
3)முக்கவர்தடி / முக்கப்பு / முக்கவர்சூலம்/ முத்தலைக் கழு– இதன் குத்தும் பகுதியானது சூலத்தின் குத்தும் பகுதியைக் காட்டிலும் நீளமாக இருக்கும். இது வேட்டைக்குப் பயன்படும் ஓர் ஆய்தம். தேவைப்பட்டால் களத்திலும் சுழலும்.
→எல்லா ஆய்தங்களும் களத்திலும் சுழன்றவைதான்!
- முத்தலைக் கழு – கழு போன்ற நீண்ட குத்தும் அலகூகளைக் கொண்ட சூலம்.
“பருமுக் கப்பினரே”(தக்கயாகப். 98)
“முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில்மிகும் காராரிந்த மேனி”
“கழு முள் மூவிலை வேல் முத்தலை கழு…சூலப் படை என வழங்கும்” (நிக.தி:7:2)
“முத்தலைக் கழுக்கள் வீசுவன” (திருவிளை. திருநகர.24)
4)மூவிலைச்சூலம் / இலைத்தலைச் சூலம்/ முத்தலைவேல் – மூன்று வேலின் இலை போன்ற முனைகளைத் அலகாகக் கொண்ட சூலம்.
”மின்னாரும் மூவிலைச்சூலம் என்மேற் பொறி” (தி.4. ப.109. பா.1, 10)
“இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்” (திருநீலகண்ட பதிகம், 3)
“ஒண்கிடந்த முத்தலைவேல் ஒற்றியப்பா நாரணன்தன்” (திருஅருட்பா, திருவொற்றியூர், கொச்சகக் கலிப்பா, 27)
5)சூலவேல் சூலமும் வேலும் இணைந்ததே சூல வேல் எனப்படும். வடிவம் யாதெனில், சூலத்தின் நடு முள்ளிற்குப் பகரமாக வேலின் இலையும் பக்கவாடுகள் இரண்டிற்கும் இரு சூல முள்ளுமாக இருக்கும்.
“உருகெழு சூலவேல் திரித்து’ (சங். அக.).
6)மூவிலைவேல் –வேல் என்பது ஓரிலை போன்றது. மூவிலை வேல் என்பது மூன்று இலைகளால் ஆனது.இதன் தாங்கானது படத்தில் காட்டப்பட்டுள்ளது போலல்லாமல் நல்ல நீளமாக இருக்கும்.
- முருகனின் கையில் இவ்வாய்தம் உண்டு.
“கழு முள் மூவிலை வேல் முத்தலை கழு…சூலப் படை என வழங்கும்” (நிக.தி:7:2)
7)வேல்/ உடம்பிடி/ ஞாங்கர்/ சத்தி/ எஃகம்/ குந்தம் : முக்கோண இலைவடிவ கூரிய முனை கொண்ட ஆய்தம். இதனை கையில் வைத்தே சண்டையிடுவர்… கூடியவரை எறிவதில்லை!
- இவற்றின் இலை வெற்றிலையின் வடிவில் இருப்பதால் வெள்ளிலை என்றும் அழைக்கப்பட்டது…
- வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! வேலின் கீழ் நுனி வட்டமாக முடியும்!
- வடிவேல் – மிகவும் கூர்மையான வேல்
“உடம்பிடி/ ஞாங்கர்”(பிங்.)
“குந்தமலியும் புரவியான்” (பு:வெ4:7);
- குல் > குன் > குந்து > குந்தம்
8)சிறியிலை எஃகம் – சிறிய ஒடுங்கிய இலையினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்..
“சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்” (புற, நாணின மடப்பிடி!, 308)
9)ஏந்திலை/ முகட்டுவேல் – இலை நீளமாக இருப்பது போன்ற வடிவினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!
- ஏ → ஏந்து, முகட்டு = உயரம்
- இலை – இலை
- ஏந்திலை = நெடிய இலை
”ஏந்திலை சுமந்து” – (பரிபாடல் – 17,2)
“முகட்டுவேல் ” – (செ.சொ.பே.மு)
10)தூரியம் – தூரிகை போன்ற ஒரு வகையான வேல் . இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!
(பிங்.)
11)முத்தகம் – முத்தக இலை போன்ற அமைப்பினை உடைய வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும். கூடியவரை எறிவதில்லை!
12)அயில்/ அயில்வேல்/ நீள் இலை எஃகம் – கோரைப்புல் போன்று கொஞ்சமாக அகண்டு மிகவும் நீண்டிருக்கும் ஒரு வகையான வேல்.
“அயில்புரை நெடுங்கண்” (ஞானா. 33)
- ஆதிச்சநல்லூரில் கிடைத்த பலவடிவ அயில்வேல்கள்:
13)சங்கு / சங்கம்- இலையானது ஒரு பக்கம் வளைந்து இருக்குமான ஆய்தம். கூடியவரை எறிவதில்லை!
சுல்- சல்- சழி – சருக்கு- சக்கு- சங்கு– சங்கம்
“கழுக்கடை சங்கொடு ….விழுப்படையாவும்” (கந்தபுராணம், சகத்திரவாகு,7)
ஆங்கிலேயர் காலத்திலும் இதன் பெயர் சங்கே!
- கைபிடியுடன் கூடிய சங்கு:
‘இப்படம் ஒரு தமிழ் வர்மக்கலை ஆசானிடம் இருந்து கொள்ளப்பட்டது ஆகும். மேலதிக விளக்கத்திற்கு இவ்விடையின் கடைசியில் உள்ள நிகழ்படங்களைக் காணவும்’
14)பூந்தலைக் குந்தம் – பூப்போன்ற இலையினையுடைய குந்தம். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை.
“பூந்தலைக் குந்தங் குத்தி”(முல்லைப். 41)
- கீழே உள்ள சிலையானது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். அதில் அதில் நடுவில் உள்ல சிலையின் வலது பக்கத்தில் உள்ள கையில் பூந்தலைக் குந்தத்தை காணலாம்.
15)சவளம் – சவண்ட வாள் போன்ற தோற்றம் உடையஆய்தம். கூடியவரை எறிவதில்லை! இதில் இரு வகை உண்டு:
- சுவள்→ சவள் → சவளம்
“அடுசவளத் தெடுத்த பொழுது”(கலிங். 424)
- சிறுசவளம்/ குந்தம் – சிறிய சவளம்
- பெருஞ்சவளம்/பீலி – நன்கு சவண்ட பெரிய சவளம்.
“பெருஞ்சவளம்,பீலி “. (பிங்.)
16) உழவாரம் – அலகானது கொஞ்சம் பார்பதற்கு நேராக்கி நிறுத்திய மண்வெட்டி போல இருக்கும். முன்பக்கம் மட்டுமே சப்பையாக்கப்பட்டுகூராக இருக்கும்!
“கையிற்றிகழுமுழவாரமுடன்” (பெரியபு. திருநாவு. 77)
17) சல்லியம்- ஆணி/ முள் போன்ற அலகினை உடைய எறிபடை !
- சுல் = குத்தற்கருத்து வேர்.
- சுல் → சல் = கூரிய முனையுள்ளது, குத்தும் கருவி.
- சல் + இயம் = சல்லியம் → ஆணி/ முள் போன்ற கூரிய முனை
- கீழ்க்கண்ட சல்லியமானது தென்தமிழ்நாட்டு அரசர் ஒருவரால் பிரித்தானிய பேரரசர் ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதாகும்
- ஆதிச்சநல்லூரில் கிடைத்த சல்லிய இலை:
18)அரணம் – அரணத்தின் வடிவினை ஒத்த இலையினைக் கொண்ட வேல் .
- இதே பொருள் கொண்ட செருப்பு மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றினதும் வடிவத்தினைக் காண்க. அனைத்தும் ஒரே வடிவமே!
(பிங்.)
19)வல்லயம் / குத்துவல்லயம் – இது அதிநீளமான ஓர் ஆய்தமாகும்; முனையில் கூரிய கூர்மையுள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஆய்தம். எட்டத்தில் நின்றபடியே எதிரியை குத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. இதனைக் கூடுதலாக யானைமேல் உள்ளவர்கள் பயன்படுத்துவார்கள்!
“வல்லயத் தனிலுடைவாளில்” (கந்தபு. தருமகோ. 24)
- குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் ‘aboriginal and Dravidian races of southern India ‘ என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும். அவ்வாறு கிடைத்த இரு படங்களையும் பிரித்து கொடுத்துள்ளேன்.
20)பண்டி வல்லயம் – பன்றி வேட்டையிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படும் வேல்.
- பன்றி> பண்டி | பண்டி என்பது பன்றி என்னும் சொல்லிற்கான ஈழத்து வழக்காகும்
- குறிப்பு : மேற்கண்ட தகவல் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் ‘aboriginal and non-aryan tribes of central India and the andaman islands’ என்னும் தலைப்பின் கீழ் எண் 29 இல் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும்.
21)கழுக்கடை/ விட்டேறு/ கோல் –குச்சியில் நீளமான கூர்மையான முனையினைக் கொண்ட ஈட்டி. கழுக்கோல் என்பது தான் கழுமரம்.. இதை அதோடு போட்டுக் குழப்ப வேண்டாம்!
“பிண்டி பாலங்கள் கழுக்கடைவாட்படை” (திருவிளை.திருமண.31)
“புயமறவே விட்டேறு” (இரகு. நகர. 28)
22)நேரிசம்- நீண்ட முள்போன்ற மெல்லிய தலையினைக் கொண்ட ஈட்டி. இது எறிபடை வகையே.
- நேர்- நேரான
- இல்>இளி>இசி – முள் / குத்துவது
- அம் –விகுதி
“மாகடைக்க னேரிசத்தான் மறைக்களிற்றை மதமடக்கி” (குற்றா.தல. தருமசாமி.74)
- ஆதிச்சநல்லூரில் கிடைத்த நேரிசம்
23)திருகுதடி- திருகுவது போல இருக்கும் ஈட்டி அலகு. இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. இது எறிபடை வகையே.
24)தோமரம்/ கைவேல்/ கப்பம்/ கப்பணம்/ கற்பணம் – சிறிய படை.. இது பார்பதற்கு சிறிய வேல் போன்று இருக்கும்.. இதே போன்ற சிலதினை முதுகில் ஓர் தூணி போன்று ஒன்றினை அமைத்து அதனுள் வைத்து செருக்களம் நோக்கி எடுத்துச் செல்வர். தேவைப்படும் போது எதிரி நோக்கி விட்டெறிவர் இல்லையேல் கையில் வைத்து சண்டையிடுவர். தற்கால கைத்துப்பினை(pistol) இதனுடன் ஒப்பிடுக.
- இப்படை வீரர்களை அக்காலத்தில் தோமரவலத்தார் என்றழைத்தனர்.
- கை+வேல் = கைவேல் | கை – சிறிய
“தோமரவலத்தர் ” (பதிற்றுப். 54, 14)
(பிங்.), கைவேல் களிற்றொடு போக்கி (குறள், 774)
“கப்பனப் படையும் பாசமும்” (இராமா. கரன். 351);
“கப்பணஞ் சிதறினான்” (சீவக. 285).
‘அருகில் உள்ள சூலம் மற்றும் பொத்திரத்தை விட கைவேலானது சிறியதாக உள்ளதைக் கவனிக்கவும்| கி.மு.1-ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலக் காசு | படிமப்புரவு : தகவலாற்றுப்படை’
25)பொத்திரம் –
- பொள்- துளையிடுவது போன்ற
- திரம்– தகரைச்செடியின் கொத்துப் பூப்போல குண்டாக இருக்கும் கூர்மையான அலகு.
“பொத்திரம் பாய்ந்து மாய்ந்தீர் “(சேதுபு. சங்காபாண்டி,41)
26)கவர்தடி/ கணையம்- இருபக்கமும் கூரான எறியாய்தம்.
(கருநா.)
“தண்டமாலங் கணையங் குலிசாயுத மாதியாக” (கந்தபு.தாரக.157);
“அம்பொடு கணையம் வித்தி” (சீவக.757)
27)இட்டி / ஈட்டி/ எறியீட்டி/ வண்டம்/ தரங்கம் – எறிபடை …
- ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும் ; ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.
- இல் > இள் > ஈட்டு > ஈட்டி
- துளங்கு → தளங்கு → தரங்கு → தரங்கம்
- வண் – மிகுதி
- வண்டம் – மிகுதியாக இருக்கும் ஆய்தம்.. (வேலினை விட ஈட்டி / குந்தம் தானே போர்க்களத்தில் அதிகமாக இருக்கும்!)
“வைவ ளிருஞ்சிலை குந்தம்” (சீவக. 1678)
“தரங்கத்தாற் பாம்பைக் குத்தினான்”
“வண்டம்” (சங்.அக.)
“இட்டிவேல் குந்தங் கூர்வாள்”(சீவக.2764); (செ.அக.):
‘ஐந்து தலைமுறைகளாக கிருஸ்ணகிரியில் காக்கப்பட்டுவரும் ஓர் பழங்கால ஈட்டி. இவ்வீட்டியின் தடியில் தேளின் படம் வரையப்பட்டுள்ளதை நோக்குக’
28)இரட்டைக் கருவீட்டி- நீண்ட கைபிடி காணப்படும்.
→செ.சொ.பே.மு
- மன்னார், கட்டுக்கரைக் குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காசில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட இரட்டைக் கருவீட்டி கேடகத்துடன்:
‘இரு நடுகற்களின் இடது கீழ்ப் புற மூலையை நோக்கவும். அங்கே இரட்டைக்கருவீட்டி உள்ளதை காணவும்’
29) சுடரிலை வேல்:
இதை நீங்கள் முருகனின் கையில் பார்த்திருப்பீர்கள். அதன் விதப்பான பெயர்தான் இது. வேலின் இலையானது சுடரினைப் போன்ற உருக் கொண்டிருந்தால் அது சுடரிலை வேலாகும்.
30)பெயர் என்னவென்று தெரியவில்லை.
ஆனால் பண்டைய தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது
‘படம் சிங்களவரிடம் இருந்தே எடுத்தேன்’
- கீழே உள்ள சிலையானது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். அதில் அதில் நடுவில் உள்ள சிலையின் இடது பக்கத்தில் உள்ள கையில் பட்டிசத்தை காணலாம்.
31)வகைப் பெயர் அறியில்லா வேல்
‘ சங்ககால-மலையமான் காசு | காலம் அறியில்லை | காசுப் படிமப்புரவு – தகவலாற்றுப்படை’
32)கணுவாளி- முள்கொண்ட முட்டி
33) வைர முட்டி – இடிப்பதற்கான முளைகளை உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆய்தம்.
34)இடிக்கட்டை – மாட்டுக்கொம்பால் செய்த கையில் வைத்து சண்டையிடும் ஆய்தம்.
35)கரசம்- குத்துவதற்கான கூர்களையும் இடிப்பதற்கான முளைகளையும் உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆய்தம்.
36)பூங்கருவி / சன்னகம் – வாயில் வைத்து ஊதி கணையினை வெளியில் செலுத்தும் ஆய்தம்.
- பூ – ஊதுதல்
- சன்னகம் – சன்னத்தினை தன்னகத்தே கொண்டது.
- சன்னம் – இதில் இருந்து வெளியேறும் கணையின் பெயர்.
37)பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட வில்லம்பு:-
38) பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட கோடாரிகள்:-
39)பாரை
→ “பாரையின் றலைய” (கம்பரா.நாக.பாச.110.)
40)சங்கிலிக் கட்டை:
- பயன்படுத்தும் விதம்
41)கரலாக்கட்டை: சண்டையுமிடலாம்; உடற்பயிற்சியும் செய்யலாம்.
இதில் ஐந்து வகையான கரலாக்கட்டைகள் உள்ளன :
- புடிக்கரலை/ எழு(எழு – தூண்போல இருக்கும் ஓர் கணையம்)
- புயக்கரலை – ‘புயம்’ என்பது தமிழ்ச்சொல்லே!
- கைக்கரலை
- குத்திக்கரலை/ பரிகம் (பரிகம் – ஏற்றம் போல இருக்கும் ஓர் கணையம்)– குத்திப் போர்புரிவதே குத்து> குஸ்து> குஸ்தி என்றானது.
- தொப்பைக் கரலை
42) குண்டாந்தடி
குண்டர்களிடம் இருக்குந் தடி குண்டாந்தடி எனப்பட்டது. இது திருநெல்வேலி கொள்ளையர்களால் பயன்படுத்தப்பட்டதாகும்:-
- குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India – No -65 என்னும் புத்தகத்தில் ‘aboriginal and Dravidian races of southern India ‘ என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்து ஆகும்.
43) மறத்தண்டு/ தண்டு/ தண்டாய்தம்/ தண்டம் :
- துள் – தள் – தண்டு – தண்டம்
படத்தில் உள்ள வேலிற்கு அருகில் உள்ளது தான் தண்டு.
தண்டு என்றாலே ஓரளவிற்கு மொத்தமான தடி என்றுதான் பொருள். எனவே இங்குள்ளதே சரியென நான் முன்மொழிகிறேன்
‘படிமப்புரவு: காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்’
இதில்…. மொத்தத்திலிருந்து போகப்போக ஒடுங்கி மெலிதாகும் வடிவமும் உண்டு:-
‘இலகுளீசர், அரிட்டாப்பட்டி சிவன் குடைவரை, கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்’
இவ்விறைவனின் கையில் இருப்பது ஒருவகைத் தண்டே.
‘பாண்டியர் குடைவரைக் கோவிலும் அதில் காவலிற்கு நிற்கும் வாயில்காப்போர்’
மேலே உள்ள இருவரின் கைகளிலும் ஒருவித தண்டம் உள்ளதை நோக்குக.
கீழ்க்கண்ட தெய்வம் தண்டத்தை குத்தி நிறுத்தியுள்ளதை நோக்குக:
‘பஞ்சவன் மாதேவீச்சுவரம், தஞ்சாவூர் AD-11th C’
‘குன்னாண்டார் கோயில், புதுக்கோட்டை | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்’
44)ஏறுழ்/ வயிரம்/ நிலைச்செண்டு-
“நிலைச் செண்டும் பரிச்செண்டு” , சேக்கிழார்
இங்கு நிலைச் செண்டு என்பது கத(gada) என்றும் பரிச்செண்டு என்பது பரியினை(குதிரை) ஓட்டுவதற்கான செண்டாகவோ (ஐயனாரிற்கான ஊர்தியாக தமிழ்நாட்டின் சிற்றூர்களில் குதிரையும், ஊர்களில் ஆங்காங்கே யானையும் உண்டு.) அல்லது சுழற்றி ஏதேனும் ஒன்றினை ஓட்டுவதற்கான செண்டாகவோ கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் நிலைச்செண்டு இதுவெனவும், பரிச்செண்டு என்பது ஓட்டுவதற்கான செண்டு எனவும் கொள்க.
45) தேவதண்டம் – முனையில் ஆணிகளை உடைய தண்டம்
‘படம் விளங்கிக் கொள்ள மட்டுமே’
46) முசலம்/ முசலி – பலராமனின் கையில் இருக்கும் இந்த அடுபடையே முசலமாகும். இது வடிவில் சிறிய தண்டம் போன்றதாகும்.
‘பரசுராமர், மைய அருங்காட்சியகம், சென்னை’ – தமிழிணையம் – தகவலாற்றுப்படை ‘
47) முளை – தலைப் பகுதியின் கோளகம் சிறியதாக இருக்கும். காம்பு சிறியது!
48)சீர்– ஒரே சீரானா ஆனால் தலைப்பகுதி மட்டும் சிறிது மெல்லிய குண்டான தோற்றத்தினைக் கொண்ட ஆய்தம். காம்பு சிறியது!
49)தடி:
50)உலக்கை/ காண்டம்- கீழே காட்டப்பட்டுள்ளதைப் போன்றுதான் இருக்கும்.நீளமான வலிமையான கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட உலக்கை.
- காண்டம்: தண்டு போலத் திரண்ட கோல்
51) முசுண்டி / மட்டிப்படை – பெரிய சுத்தியல் போல இருக்கும் ஆய்தம். படத்தைப் பார்த்தவுடனே புரிந்திருக்கும்.
52) முட்கரம்:-
முசுண்டியின் தலையில் முட்கள் இருந்தால் அது முட்கரம் ஆகும்
53)பிண்டி/ வாலம்/ பீலித்தண்டு – மரத்தால் ஆன இவ்வாய்தத்தின் தலைப் பகுதியானது பார்ப்பதற்கு தண்டு போலவும் இதன் பிடங்கு நல்ல வலிமையான தலைமரத்தின் தொடர்ச்சியான தடியையும் கொண்டிருக்கும்..
- பிள் -> பிண்டு-> பிண்டி = திரளை
54) அங்குசம்/ தாறு / இருப்புமுள்/ தாற்றுக்கோல்/ தார்க்கோல் / பரிக்கோல்/ தோட்டி/ குத்துக்கோல்/ குத்துக் காம்பு/ முட்கோல்/ சரணம்/ காழெஃகம்/ கொந்துகோல் – இதற்கு மேலும் பல பெயர்கள் உண்டு ! யானை மேல் அமர்ந்து போரில் ஈடுபடும்போது யானையை அடக்கப் பயன்படுத்தபடும் ஆயுதம்.
- நெடுந்தோட்டி– பெரிய தோட்டி
- அரைமதியிரும்பு – பாதி நிலா போன்ற ஒருவகை யானைத் துறட்டியிரும்பு
55) பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட கேடயங்கள்:
56)வாள்/ ஏதி / சிரி/ நாட்டம் / தூவத்தி/ வஞ்சம்/ மட்டாய்தம்/ உவணி/ உடைவாள் – (இதில் பல வகையுண்டு )ஒருபக்கம் மட்டுமே வெட்டும் தன்மை கொண்டது. கொஞ்சமாக வளைந்திருக்கும்.
- கூர்வாள்/ தெளிவாள்/ வடிவாள் – மிகவும் கூரிய வாள்
- ஊருவாள் – என்னவகையான வாள் என்று தெரியவில்லை
‘மேற்கண்ட படத்தில் இடது பக்கத்தில் இருந்து மூன்றாவதாக இருப்பது கூன்வாளாகும் | இடது ஓரத்தில் இருப்பது கத்திவாளாகும் | இவற்றில் கைடிபிடி இருந்தால் அவை கைபிடி வாள் என்றும் அழைக்கப்படும்’
- கைபிடிவாள்/ பிடிவாள்/ உடைவாள்- கை பிடியுள்ள வாள். ஒருபக்கம் மட்டுமே வெட்டும் தன்மை கொண்டது. கொஞ்சமாக வளைந்திருக்கும்.
- படைவாள் – போர் வீரர் பெருமளவில் இவ்வாளையே பயன்படுத்தியதால் இப்பெயர் இதற்கு ஏற்பட்டது
- குறும்பிடி – இதில் குறுகிய பிடியினை உடையது குறும்பிடி எனப்பட்டது
57)கூன்/ கூன்வாள்/ தாத்திரம்/ வளை வாள்- நன்கு வளைந்த வாள் (கூனிய வாள்)
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன்
→ கம்ப., யுத்த காண்டம், 144 (9048 ஆவது பாடல்)
‘இது சோழர்களால் பயன்படுத்தப்பட்ட வாளாகும்’
‘இது சேரர்களால் பயன்படுத்தப்பட்டது | படிமப்புரவு: கேரளாவின் கொச்சி அருங்காட்சியகத்தில் இருந்து’
மேற்கண்ட அதே வாள் தமிழ்நாட்டிலும் கிடைத்துள்ளது:-
‘ஜமுனா மாத்தூர் நடுகல்’
58)கைவாள்/ கரவாள்/ கரவாளம்/ கரவாபிகை/ முட்டுவாள்/ ஈலி/ சிறுவாள்/ குறுக்கை – (small sword)
- கீழ்க்கண்ட சிறுவாளானது ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகும். இதற்கு கைபிடி இல்லை என்பதையும் காண்க.
59)நெளிவாள் / கோணம்-நெளிந்த(ஒருவகையில் கூனிய) வாள். சேர அரசர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்..
60)கடுத்தலை – இவ்வாளானது வீரபத்திரரின் கையில் உண்டு.
‘வீரக்கல் கிடைத்த இடம்: செம்பனூர், பெரும்பாலை, தருமபுரி மாவட்டம் | இங்கு கடுத்தலையின் படிமம் உள்ளதைக் காண்க’
61)மாவசி/ நெடுவசி – இருகையால் பிடித்துச் சண்டையிடும் ஆளடி உயரமுள்ள வாள்.
- கீழ்க்கண்ட மாவசி ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகும்.
65)பட்டயம்/ பட்டம்/ பட்டா- பட்டையான பரப்பைக் கொண்ட வாள். இருபக்கமும் வெட்டும் தன்மை கொண்டது.
62)பட்டாக்கத்தி– பட்டாவினை விடச்சிறியது
63)கையுறை வாள்/ கைப்பட்டா/ தொடுப்புக் கத்தி –
- பட்டை -> பட்டா (பட்டையான பரப்பக் கொண்டதால்)
பட்டையான பரப்பைக் கொண்ட கையுறையுள்ள வாள். இருபக்கமும் வெட்டும் தன்மை கொண்டது. மற்ற வாள்களுடன் ஒப்பிடும் போது இது கொஞ்சம் மெல்லியது. இது உண்மையில் முகாலயர்களால் உருவாக்கப்பட்டது. இதன் பயன்பாடு 17 மற்றும் 18 நூற்றண்டுகளில் மட்டுமே ஆகும் என்கிறது விக்கி. இது முகாலயர்களிற்கும் மராத்தியரிற்கும் ஆங்காங்கே எதிர்க் கிளர்ச்சியில் ஈடுபட்ட தமிழர்களால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
64)கோல்வாள் – மிகவும் நீளமான அலகினை வாள் போல கொண்ட ஓர் ஆய்தம். இதற்கு தாங்கு உண்டு. அதுவும் கொஞ்சம் நீளமாக கோல் போல இருக்கும் .
“படம்: ஆதிச்சநல்லூரில் இருந்து”
65)ஈர்வாள்/ அரி / வேதினம் – வாளின் அலகில் சிலும்புகள் இருக்கும். அவை சிலவேளை ஒருபக்கமும் இருக்கலாம் இல்லை இருபக்கமும் இருக்கலாம்
‘இது வர்மக் கலை ஆசான் அருணாச்சலம் என்பவரிடம் இருந்து கிடைக்கப்பெற்றது ஆகும். ‘
66)நவிர் / மழுவாள் – முள் போன்று மெலிதாக உள்ள வாள்.
- முள் – மள் -மழு
67)இழிகை /குத்தீட்டி – அகண்டு போகப்போக குறுகி(இறங்கி) குத்தும் தன்மையினை முனையில் கொண்டிருக்கும் வாள்.
கிரிஸ்ணகிரியில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் ஒன்றிலும் இவ்வாள் உண்டு: தமிழிணையம் – தகவலாற்றுப்படை
68 ) பெயர் தெரியாத வாள்
இது ராஜா கேசவனாதன் என்பவர் பயன்படுத்திய வாள். இதன் கைபிடியை வைத்துப் பார்க்கும் போது இது தென்னிந்திய வாள் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
கிடைத்த இடம் : பத்மனாதபுரம் அரண்மனை
69) நாந்தகம்/ தெய்யம் வாள் – சேர அரசர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்.. இது சேரர்களால் பயன்படுத்தப்பட்டதால் ‘நாயர் கோவில் வாள்’ என்று அவர்களின் குலப்பெயர் இட்டு அழைக்கப்பட்டது. இன்றும் அங்கு புழக்கத்தில் உண்டு!
70) சொட்டைவாள் – இந்த வாளும் கிட்டத்தட்ட நாந்தகத்தின் அலகு போன்ற ஆனால் அந்த துருத்திய பாகம் அற்றதான, ஒரு வழுக்கைத்தலையினைப் போன்ற வடிவினை உடைய வாள். இது, இந்த அமைப்பினைத்தான் கொண்டிருந்ததாக ‘சொட்டை‘ என்னுஞ் சொல் மூலமாக அறிய முடிகிறது.
71)சுடர்வாள் – இதன் பக்கங்கள் சுடர் போன்று காட்சி அளிக்கும். சோழர்களால் பயன்படுத்தப்பட்ட, அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்ட வாள்.
72)கட்கம் – தமிழரின் போர்க்கடவுளான கொற்றவையின் (காளி) கையில் உள்ள வாள். சேர அரசர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்..
- கள்+கு → கட்கு+அம் → கட்கம் → திரட்சி, உருண்டு திரண்டது போன்ற வாள்.
73) கைச்சுரிகை/ சுரிகை/ கரவாதி – இது ஐயப்பனின் கையில் இருக்கும் ஓர் ஆய்தமாகும். சோழ அரசன் தித்தன் இதைச் சுற்றுவதில் சிறந்து விளங்கினான். இது கண்டத்தைவிடச் சிறியதாகும்.
74)கண்டம்/கண்டகம் – இது சுரிகையினை விடப் பெரியதாகும்.
- இது சேரர்களின் கண்டம்:-
‘இது நீலகிரியில் கண்டெடுக்கப்பட்டதாகும்’
‘இது நீலகிரியில் கண்டெடுக்கப்பட்டதாகும் | இதன் தலைப்பகுதி பெருத்தும் கீழே வரவர நடுப்பகுதி ஒடுங்கியும் பின் மீண்டும் அடிப்பகுதி பெருத்தும் இருக்கிறது. இது அரிய வகைக் கண்டமாகும் ‘
- கீழ்க்கண்ட கண்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகும்.
75) பெயர் தெரியாத வாள்
இவை ஒரே வடிவ ஆனால் இருவேறு தோற்றத்தொடு (சோழரிற்கு ஒரு தோற்றம், சேரரிற்கு ஒரு தோற்றம்) கூடிய வாள்கள்.
- இது சேரர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்
- இது பொலன்நறுவையில் கண்டெடுக்கப்பட்ட சோழர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்:-
- புள்ளமங்கை – திருவாலந்துறையார் கோயிலில் உள்ள கொற்றவையின் கையிலும் சோழர்கள் பயன்படுத்திய இதே வாளின் வடிவம் உண்டு.
76) பெயர் தெரியாத வாள்
இவை வடிவில் ஒரே வகையச் சேர்ந்தவையாக இருந்தாலும் தோற்றத்தில் வெறுபடுகின்றன. ஒன்று குள்ளமாகவும், மற்றொன்று நீளமாகவும் உள்ளது. இவற்றின் வகைப் பெயர் தெரியவில்லை. இவை சேரர்களால் பயன்படுத்தப்பட்ட வாட்களாகும்.
77) பெயர் தெரியாத வாள்
இது சேரர்களால் பயன்படுத்தப்பட்ட வாள்
78) பெயர் தெரியாத வாள்
இதன் வாளலகு இருபக்கமும் அலைபோல இருக்கிறது.
‘சென்னை அருங்காட்சியகத்தில் இருந்து கிடைத்தது’
79)கத்திவாள் – இது நேராகவும் கொஞ்சம் நீளமாகவும் இருக்கும். ஆனால் வாளில் உள்ள வளைவுகள் இருக்காது. அதேபோல வாளைப் போன்ற தடிமனும் மொத்தமும் இல்லாதிருக்கும்.
80)முத்தப்பன் வாள் :
இது சேரர்களால் பயன்படுத்தப்படும் ஓர் வாளாகும். இது முத்தப்பன் சாமியின் கையில் இருக்கும்.
இடைச்சுரிகை/ குற்றுடைவாள்- இடையில் வைத்திருக்கும் குற்றுடைவாள்கள் அனைத்திற்கும் வழங்கப்படும் பொதுப்பெயர்கள்.
- கக்கடை, கட்டாரி, கொடுவாய்க்கத்தி, பீச்சுவா, முக்குத்துவாள், இரட்டைக் கத்தி , கைக்கத்தி/ பீச்சாங்கத்தி, சமதாடு , ஈட்டிக்கத்தி, எறிவாள் ஆகியவை எல்லாம் இதன் வகைகளே!
81)குத்துக்கத்தி
(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும்)
82)கொடுவாய்க்கத்தி –அதாவது முழுதும் வளைந்திருக்காமல் அறுவாளுக்கு இருப்பதுபோல நுனிப்பகுதி மட்டும் வளைந்திருக்கும் கத்தி.
- கொடுவாய் -வளைந்த வாய்
83)கைக்கத்தி/ பீச்சாங்கத்தி – முன் பக்கமும் ஒருபக்கம் மட்டுமே கூராக உள்ள கத்தி.
- இக்கத்தியானது ஈழத்தமிழர்களாலும் கொடவர்களாலும் பயன்படுத்தப்பட்டது. பீச்சாங்கத்தி என்னும் சொல் வவுனியாவில் வழக்கில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
84)சமதாடு – மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தும் வேலைபாடுகள் நிறைந்த ஒரு வகை இடைச்சுரிகை .
‘மேல்காவனூர் வீரக்கல்’ – தமிழிணையம் – தகவலாற்றுப்படை
85) ஈட்டிக்கத்தி –ஈட்டியினைப் போல அலகினைக் கொண்டதால் ஈட்டிக் கத்தி எனப்பட்டது.
86)முக்குத்துவாள்
87)இரட்டைக் கத்தி – இரண்டு அலகுள்ள கத்தி
88)கக்கடை/ கைக்கடி- படிமத்தில் உள்ளதுபோல சிறியதாக பல வளைவுகள் கொண்ட கத்தி.
- கை+கடி – கைக்கடி – கைக்கடை – சிறிய குத்தும் வாள்
89)எறிவாள்- எறியப்பயன்படும் வாள்
90)நாட்டான் வெட்டுக்கத்தி
91)சத்தகம்
(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .)
92) புல்லுச் சத்தகம்
(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .)
93)சாக்கத்தி
- குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் ‘aboriginal and Dravidian races of southern India ‘ என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும்.
94) கொங்கவெள்ளம்
- குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India – No -61 என்னும் புத்தகத்தில் ‘aboriginal and Dravidian races of southern India ‘ என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்து ஆகும்.
95)கள்ளக்கத்தி – கைத்தடியினுள் மறைத்து வைக்கக் கூடிய கத்தி.
96)மடக்குக்கத்தி/ வில்லுக்கத்தி – ஒரு உறைபோன்ற ஒன்றுக்குள் மடக்கி வைக்கப்பட்டிருக்கும் கத்தி.
‘படம் விளங்கிக் கொள்ள மட்டுமே’
97)மச்சுக்கத்தி
- இதனை வீச்சறுவாளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்! அதனைவிட இது சிறியது. மேலும் இதற்கு கொடுவாய் இல்லை.
98) குருத்துக் கத்தி
(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .)
99) ஓச்சன் கத்தி – சந்திரனின் ஒளியை தெறிக்கவிடும் என்று உவமைப்படுத்தப்பட்ட வாள். கீழே காட்டப்பட்டுள்ளதைப் போன்றுதான் இருக்கும். இவ்வாளானது பெரும்பாலும் பலியிடப் பயன்படுத்தப்பட்டது. சிலநேரங்களில் போர்க்களத்திலும் சுழன்றது.
100) கண்டர்கோடாரி / மீன்வெட்டுக் கத்தி
- பூண் – உலக்கை, கத்தி முதலியவற்றைப் பலப்படுத்த உதவும் உலோக வளையம்.
101)முட்கத்தி
(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .)
102)சூர்க்கத்தி/ சூரி/ சூரிக்கத்தி/ சூருக்கத்தி – குத்துவதற்கோ அல்லது எறிவதற்கோ உகந்தது. நீள் முக்கோணத்தின் ஒரு பக்கத்தில் மட்டுமே அடியாகக் கொண்டு பிடிபோடப்பட்டிருக்கும்
103) பழக்கத்தி – பழம் வெட்டப் பயன்படும்.
(சேலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்)
104) அமுக்கொத்தி/ பாசவன் கத்தி – Tamil butchers knife
105)அரிவாள்/ குயம்/ கரவாதி- இது பொதுப்பெயராகும்
- மெலிதாய் அறுப்பது – அரிவாள்
அரிவாள் என்பது மருவி, அருவா என வழங்கப்படலாயிற்று
→ தொழிலின் அல்லது வினையின் மென்மையைக் குறிக்க இடையின ரகரமும், வன்மையைக் குறிக்க வல்லின றகரமும், ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
106)மட்டையரிவாள்
107) கொந்தரிவாள் – நீளமான பிடி கொண்ட கத்தி.
108)தேய்பிறையிரும்பு/ பிறையிரும்பு – தேய்பிறை போன்றதென்று உருவம் உருவகப்படுத்தப்பட்ட அரிவாள். முழு இரும்பால் ஆனது.
109)கருக்கரிவாள் / பன்னரிவாள் / கதிரரிவாள்/ கையரிவாள் – பற்கள் உள்ள அரிவாள்
110) புல்லரிவாள் / தாக்கத்தி/ கொய்த்தரிவாள் – மெல்லிய பற்கள் அற்ற அரிவாள். வயலில் வேலை செய்வோரால் புற்கள் வெட்டப்பயன்படும் அரிவாள்.
- தாக்கத்தி என்றால் அரிவாள் அன்று.. புல்லரிவாளே தாக்கத்தி எனப்படும்
111)கிளிக்கத்தி– கிளிமூக்கு போன்று நுனி வளைந்த கத்தி ; நுனியில் வளைந்திருக்கும் கத்தி.
112) கும்மல் / குமல்- அகண்ட வாய் கொண்ட அரிவாள்
113) சிற்றரிவாள் – சிறிய அரிவாள். அலகானது அரிவாளுக்கு ஏற்றாற் போல் கொஞ்சம் வளைந்திருக்கும்.
Metropolitan Museum of Art
114)அறுவாள்/ புள்ளம் –
- வலிதாய் அறுப்பது – அறுவாள்
→ தொழிலின் அல்லது வினையின் மென்மையைக் குறிக்க இடையின ரகரமும், வன்மையைக் குறிக்க வல்லின றகரமும், ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
115) கொடுவாள்/ கொடுக்கறுவாள்
கொடு- கொடுக்கு = தலை வளைவு
அலகின் தலைப்பகுதியில் வளைந்திருந்தால் அது கொடுக்கறுவாளாகும். இதைப் பேச்சுவழக்கில் அறுவாள் (பெரும்பாலும் எழுத்துப் பிழையால் அருவாள் எனப்படுகிறது) என்றே அழைக்கின்றனர்.
116) தெய்வ அறுவாள்
அழகர் கோவில் தெய்வ அறுவாள்:-
காவல் தெய்வம் ஒன்றினது தெய்வ அறுவாள்:-
117) இளநீர் அறுவாள் – மெல்லியதான நேராக வந்து அலகு கொஞ்சம் பெருத்து கிளிமூக்குப்போல மெதுவாக வளைந்திருக்கும். தேவைப்பட்டால் கழுத்தையும் அறுக்கும்.
118)வெட்டறுவாள் / வெட்டுவாள்/ கடாவெட்டி- அலகானது சதுரமாக வளைந்து நீண்டிருக்கும். ஆடு, கடா முதலியன வெட்டப்பயன்படும் வாள்.
119)கொத்தறுவாள் – ஆடு, கடா முதலியனவற்றின் இறைச்சி வெட்டப் பயன்படும் அறுவாள்.
120) வீச்சறுவாள்
- குறிப்பு : மேற்கண்ட படம் வெள்ளையரால் எழுதப்பட்ட Arms of the Aboriginal and Dravidian races of Southern India என்னும் புத்தகத்தில் ‘aboriginal and dravidian races of southern India ‘ என்னும் தலைப்பின் கீழ்க் கொடுக்கப்பட்டுருந்தவை ஆகும்.
121)பாளையறுவாள் / பாளைக்கத்தி/ சாணாரக்கத்தி/ ஈழவக்கத்தி
- இதனை சந்திரவாய்தம் என்றும் அழைப்பர்!
122)ஆக்கறுவாள்/ அக்கறுவாள்/ பாசறுவாள்/ பாசுகராக் கத்தி/ அக்கரிவாள்
- ஆக்கறுவாள் → அக்கறுவாள் → அக்கரிவாள்
செ.சொ.பே.மு. இருந்து…….
→அரிதல் = சிறு கத்தியால் அல்லது அரிவாள் மணையலகால், காய்கறி முதலிய மெல்லியவற்றைச் சிறுசிறு துண்டுகளாக மென்மையாய் நறுக்குதல்.
→அறுத்தல் = பெரியவற்றையும் வன்மையானவற்றையும், இரண்டாகவோ பல பெருந்துண்டுகளாகவோ, சிறு கத்தியாலும் பெருவாளாலும் முன்னும் பின்னும் வன்மையாய் இழுத்தராலியும் கத்தரித்தும் வெட்டியும் துணித்தல்.
ஆதலால், அரிவாள் வேறு ; அறுவாள் வேறு. ஆகவே, அக்கறுவாளை அக்கரிவாள் என்பது தவறாம்!
123)காட்டுக் கத்தி
(இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .)
124)கொக்கைச் சத்தகம்/ வாங்கரிவாள்/ வாங்கு/ அலக்கு/ சள்ளை/ துரட்டி – நீளமான கழியில் கட்டப்பட்டிருக்கும் சத்தகம்.
- சுறட்டுக்கோல், கொக்கத்தடி- இழுத்து விழுத்தும் கோல். இதன் முனையில் சத்தகம் இருக்காது. மாற்றாக ஒரு ‘சிறுதடி’ இருக்கும். அச்சிறு தடியின் நடுப்பகுதி கொக்கத்தடியோடு பிணைக்கப்பட்டிருக்கும்.
125)கம்பறாக்கத்தி – கம்பு அறுக்கும் கத்தி
126)பாசக் கயிறு/ பாசாங்கச்சை / நாண்வடம் / பழுதை/ தாமம்/ இரச்சு / தாம்பு/ தாமணி- குதிரை அல்லது யானையின் மேல் அமர்ந்திருக்கும் வீரரை கீழே இழுத்து விழுத்த பயன்படுவதோ அல்லது குதிரை அல்லது யானையின் மேல் அமர்ந்திருக்கும் வீரரைர் கீழே நிற்கும் வீரரை கொழுவி இழுத்துச் செல்லப் பயன்படும் கயிறு
→ நுனியில் கூர்மையுடையதும், வீசும்போது ஒலி எழுப்புவதுமான தர்ப்பைப் புல் போல அறுக்க வல்லதுமான கயிற்று வடிவிலுள்ள பாசக்கயிறு.
127)துண்டு/ கற்துணி/ வாலம் : வெறும் துணிதான்.. ஆனால் பலமான ஆயுதம். துணியின் இருபக்கமும் கல்வைத்து கட்டப்பட்டிருக்கும்.
- கற்துணி ஓர் வாளினை வீழ்த்தும் விதம்:
- கற்துணி கொண்டு ஓராளை வீழ்தும் விதம்:
128)வளரி/ துட்டுத்தடி/ வளைதடி/ எறிவல்லையம் :
129)சக்கரம்/ திகிரி/ வளையம்/ எறிவளையம்/ வளை/ பாறாவளை/ நேமி / பரிதி/ வலயம்/ ஆழி/ ஒளிவட்டம் / படைவட்டம்/ சுழல்படை :
130)ஓகதண்டம் – இவ்வாய்தமானது எதிரியினைப் பிடித்து அடக்கி அமுக்குவதற்கு பயன்படுத்தபட்டது.
- துள் -> தள் -> தண்டி -> தண்டம்
- பண்ருட்டி திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலின் பின்புறம் கண்டெடுக்கப்பட்ட ஓகதண்டம்.
131)ஆலாய்தம் – கலப்பை வடிவில் உள்ள ஆய்தம்.
132)வகைபெயர், படைபெயர் அறியா ஒரு ஆய்தம்.
இது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கப் பெற்றதாகும். இந்திய துணைக்கண்டத்திலே இது போல் எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
133) கவண்/ கவணை/ கவண்டு/ கவண்டி/ கவண்டை/ ஒடிசில்/ கோபனை/ தழல்/ குளிர்/ சுண்டுவில்/ தெறிவில்/ உண்டைவில்(உண்டி வில்)/ கவட்டி வில் –
134)வீசு வில்/வள்ளி வில்/ சிங்காணி/ சிங்காடி –
- சிங்காணி/ சிங்காடி யைப் படையாகக் கொண்டிருப்போர் சிங்காணிக்காரர் என்றும் ‘குத்திக் கொல்லர்’ என்றும் அழைக்கப்படுவர்.
135)சவுக்கு/ சவுகு / சாட்டை:
136) திருக்கைவால்– திருக்கையின் வால் போல இதன் கயிற்றில் முள்ளிருக்கும்
137)உருண்டை/ நாட்டு வெடிகுண்டு – உருண்டை என்றால் உருண்டை வடிவத்தில் செய்யப்பட்டிருக்கும் வெடிமருந்து.. அதான் நாட்டு வெடிக்குண்டென்போமே அதுதான் இது.
- 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாரான காலப்பகுதியில் தமிழரால் பயன்படுத்தப்பட்டது.
138)வில்லுருண்டை- வெடிமருந்து கொண்ட அம்பினை செலுத்தும் வில்லுக்கு வில்லுருண்டை என்று பெயர். ‘உருண்டை என்றால் உருண்டை வடிவத்தில் செய்யப்பட்டிருக்கும் வெடிமருந்து..
- 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாரான காலப்பகுதியில் தமிழரால் பயன்படுத்தப்பட்டது.
குலிசம் / உருண்டை/ உண்டை/ சம்பம் / நூறுகோடி/ வைரவாள்/ அரி – எந்தவொரு வலிமையான பொருளையும் உடைத்து விடும். இவ்வாய்தமானது பழங்கதைகளில் வரும் என்று கூறப்படுகீறது.. சிலப்பதிகாரத்தில் இது பற்றிய குறிப்புகள் உண்டு.. ஆனால் இவ்வாய்தம் போரில் சுழன்றதைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை.
- வர்ம / வளரி ஆய்தங்கள் :→
- நிலக்கிழார்களால் பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களின் ஒரு தொகுதி:-
அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது:
- கேரளாவில் உள்ள ஒரு ஆய்தக்கொட்டிலினுள்ளே சேரர்களின் பல்வேறுபட்ட வாள்கள்
- எட்டயபுரம் அரண்மனை
- இவரது விடையில் தமிழரின் பல்வேறு தோலியல் எச்சங்கள் பற்றிய படங்கள் உண்டு.. அவற்றினைக் காண்க:
- ஆய்தங்கள் பற்றிய சில நிகழ்படத்(video) தொகுப்புகள் :
- மேலும் பார்க்க :–
உசாத்துணைகள்:
- சூடாமணி நிகண்டு
- கழகத் தமிழ் அகராதி
- http://manidal.blogspot.com
- https://roar.media/tamil/main/history/ancient-weapons-we-totally-forgotten/
- Thanjavur Kuthuvarisai Federation
- முருகா, குமரா, இறைவா, கந்தா, கடம்பா,
- கம்பராமாயாணம்- யுத்த காண்டம்
- புறநானூறு
- சொற்றொடர் பொருளகராதி
- பாவாணரின் சொற்பிறப்பியல் அகரமுதலி
- தொழில் நுட்பவியல்- பகுதி-2
- Google Groups
- ஊர் ஸ்பெஷல் – திருப்பாச்சி அருவாள் !
- தமிழ்நாடு யாதவர் படை
- அந்தியூர்ப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்
- THE MARATHA WEAPONS OF WAR
- Google Groups
- ஆதவன் டிவ்- யூடியூப் தடம் – (watch?v=MylESGfvhvE)
- http://tamilconcordance.in/KAMBANconc-1-ta11.html
- A Description of Indian and Oriental Armour
- How was the ancient Indian military organized? When they fought Alexander, what types of units were they organized into? How large were the units? Who was in charge, and did they have captains and generals?
- மணி அகராதி
- pingkala nikaNTu of pingala munivar -part 2 (in tamil script, unicode format)
- https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/105963/24/24_appendix%208.pdf✎ EditSign
- புறநானூறு – #308
- பிங்கல நிகண்டு
- https://www.penmai.com/community/threads/5-000-year-harappan-stepwell-found-in-kutch-bigger-than-mohenjo-daros.77676/page-3
- https://karkanirka.org/2008/12/30/knives/
- யாழ்ப்பாணம் : : http://Jaffna.com
- 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகீஸ்வரர் சிலை, போர்வாள் கண்டெடுப்பு
- /watch?v=Mge6ni2kdVM&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=5&t=432s
- /watch?v=ni–Af6lkJY&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=3
- Ethnographic Arms & Armour
- அறந்தாங்கியில் பழங்கற்கால கற்கோடாரி கண்டெடுப்பு!
Leave a Reply
You must be logged in to post a comment.