உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

எது தமிழ்த் திருமணம்?

சு. அறிவுக்கரசு

மாதர்கள் கருப்பந் தரிப்பதற்கும், ஆடவர்கள் கருப்பமுண்டு பண்ணுகிறதற்கும், பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டார்கள் என்கிறது மனுசாஸ்திரம் ஒன்பதாம் அத்தியாயம், 96ஆம் பாடல்.

இந்த மனு சாத்திரத்தின் அடிப்படையில்தான் இந்து சட்டம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுயராஜ்யம் வந்தால் மனுஸ்மிருதிதான் சட்டமாக இருக்க வேண்டும் என்றார் பாலகங்காதர் திலக். என் வழி திலகர் வழியாக இல்லை என்பதால் என்னைச் சிலர் எதிர்க்கிறார்கள் என்று காந்தியார் மனம் நொந்து கூறினார். திலகர் வன்செயலாளர். காந்தி வன்செயல் தவிர்த்தவர். ஆகவே காந்தியாரை எதிர்த்தவர்கள் பிறகு கொன்றே விட்டார்கள். வன்செயல் விரும்பிகள் தற்போது பதவிக்கு வந்துவிட்டனர். முழு மனுஸ்மிருதியே சட்டமாக வரலாம். பாடமாக வரலாம்.

பிள்ளை பெறுகிற எந்திரமா பெண்கள்? என்று கேட்டார் பெரியார். பிள்ளை தரிக்கிற உறுப்பையே வெட்டி அப்புறப்படுத்திட வேண்டும் என்கிற அளவுக்கே போனார் பெரியார். ஆனால் இந்து சாத்திரம் பெண்கள் பிள்ளை பெற்றுப் போடுவதற்கே படைக்கப்பட்டவர்கள் என்கிறது. இந்தக் காரியத்தைச் செய்வதற்காக ஆடவர், பெண்டிர் இணைவதற்கான சடங்கை விவாகம் என்கிறது சாத்திரம். திருமணம் என்கிறது தமிழ். கல்யாணம் என்றும் சிலர் குறிப்பிடுவர். கலியாணம் என்று குறிப்பிடுகிறது வடமொழி.

நாலடியார் கல்யாணம் (பாடல் 86) என்கிறது. ஆசாரக் கோவை (பாடல் 48) கலியாணம் என்கிறது. குறிஞ்சிப் பாட்டு (232) மணம் என்கிறது. அய்ங்குறுநூறு வதுவை (61) என்கிறது. மன்றல் என்கிறது அகநானூறு (136) தொல்காப்பியம் மன்றல் என்பதோடு கடி என்றும் குறிப்பிடுகிறது. வரைவு என்றும் குறிப்பிடுகிறது தொல்காப்பியம் (383). வதுவை எனும் சொல்லும் தொல்காப்பியத்தில் குறிக்கப் பெறுகிறது.

திருமணம் என்று சொன்னால், ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கூடி வாழ்க்கை நடத்துவதுதான். அதற்கு ஒரு குறிப்பு இருக்க வேண்டும் என்பதுதானே தவிர மற்றபடி வேறு ஒன்றும் வேண்டியது இல்லை. விவாகம் அல்லது திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் காரியமே ஆகும் என்றார் தந்தை பெரியார்.

ஆரியத் திருமணம்

இந்தத் திருமண முறைகள் எட்டு வகைப்படும் என்றது மனுஸ்மிருதி. இந்த எட்டு வகைகள்தான் இந்து சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அவை, இவை: பிராமம், தெய்வம், ஆருஷம், பிரஜாபத்யம், ஆசுரம், காந்தருவம், இராட்சசம், தாழ்ந்ததான பைசாசம் என 8. (மனுஸ்மிருதி 2:21) பிராமணனுக்கு பிராமம் முதல் காந்தருவம் வரையில் கிரமமாக ஆறும் சத்திரியனுக்கு ஆசுரம் முதல் பைசாசம் வரையில் நான்கும் வைசிய சூத்திரனுக்கு மேற்சொன்ன நான்கில் ராட்சசம் நீங்கலாக மூன்று தருமத்தைக் கொடுக்கத்தக்க விவாகங்களென்றறிய வேண்டியது என்கிறது மனுஸ்மிருதி (2_23).

வேதம் ஓதுகிறவனை அழைத்து, கன்னிகையைத் தானம் செய்வது பிராம விவாகமாம். யாகம் செய்யும்போது தனக்கு உதவியாளாக இருப்பவனுக்குத் தன் பெண்ணைத் தருவது தெய்வ விவாகமாம். யாகம் செய்யும் செலவுக்காக ஒரு பசு அல்லது இரண்டு பசு வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்து கொடுப்பது ஆருஷ விவாகமாம். ஒரு பையனுக்கு ஒரு பெண்ணைத் தந்து தருமங்களைச் செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுப்பது பிரஜாபத்யமாம். பெண்ணின் தந்தை கேட்கும் தொகைதந்து பெண்ணுக்கு நகைபோட்டு வாங்கிச் செய்து கொள்வது ஆசுர விவாகமாம். ஆணும் பெண்ணும் விரும்பி, உறவு கொண்டு, தாங்களே செய்து கொள்வது காந்தருவ விவாகமாம். உடல் வலுவால் உறவினர்களைத் தாக்கிப் பெண்ணைத் தூக்கிச் சென்று விவாகம் செய்வது ராட்சச விவாகமாம். தூங்குபவளையோ, குடியினால் மயங்கியிருப்பவளையோ, பித்துப் பிடித்தவளையோ வன்கலவி செய்து விவாகம் செய்வது பைசாச விவாகம் என்கிறது மனுஸ்மிருதி.

தொல்காப்பியச் சப்பைக்கட்டு

இதையே தமிழ்த் தொல்காப்பியம், மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் எனக் கூறுகிறது. தமிழ் படித்த பண்டிதர்கள் இந்த எட்டுக்கும் எடுத்துக்காட்டு கூறுகின்றனர். பிராம விவாகத்திற்கு மீனாட்சி_சொக்கநாதன் திருமணம் எடுத்துக்காட்டு. பிரசாபத்ய விவாகத்திற்கு சீதா_ராமன் திருமணம். ஆருஷம் என்பது பழங்கால பண்டமாற்றுமுறை விவாகமாம். தெய்வ விவாகத்திற்கு எடுத்துக்காட்டு ரிஷ்யசிருங்கர்_சாந்தை விவாகமாம். பராசரர்_மச்சகந்தி புணர்ச்சியும், துஷ்யந்தன்_சகுந்தலை உடலுறவும் கந்தருவ விவாகமாம். ஆசுர விவாகத்திற்கு வில் ஒடித்துச் சீதையை ராமன் மணந்ததும், வில் எய்து துரோபதையை அருச்சுனன் மணந்ததும் எடுத்துக்காட்டாம். அம்பை முதலிய பெண்களைத் தன் தம்பியர்க்கு மணமுடித்த வீடுமன் செயல் இராட்சச விவாகத்திற்கு எடுத்துக்காட்டாம். பைசாச விவாகத்திற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் புராணங்களில் உள்ளன.

தொல்காப்பியக் கூற்றுகளின்படி தமிழர் மணம் காதலால் கட்டுண்ட ஆணும் பெண்ணும் தம் களவொழுக்கம் பெற்றோர்க்கும் உற்றார்க்கும் தெரியும் முன் மணம் முடித்தல், களவுக்காதல் தெரிந்தபின் உடன்போக்கு நிகழ்ந்து மணம் முடித்தல் என்ற வகையில் ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை காணக் கிடைக்கிறது. ஆரிய முறைகளில்…?

ஆகா, என்ன பொருத்தம்?

தனிச்சிறப்பு கொண்ட தமிழர், இந்துக்கள் என்ற நாமகரணம் செய்விக்கப்பட்டதன் கெட்ட விளைவாக எட்டுவகைத் திருமணங்கள் அவர்களின் தலையில் கட்டப்பட்டுள்ளன. பத்து வகைப் பொருத்தங்கள் அவர்களின் விவாகங்களுக்குப் பார்க்கப்படுகின்றன. தினம், கணம், மகேந்திரம், ஸ்த்ரீ தீர்க்கம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என்பன தசா பொருத்தங்களாம். இந்தப் பொருத்தங்கள் அமைந்துள்ளனவா என்பதைக் கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் பார்த்தே கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் பேஷாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும், அவன் ஆண்மை அற்றவன் என்பது. அதுபோலவே அவள் வயதுக்கு வரவில்லை என்பது! எத்தனை பார்க்கிறோம், குடும்ப நீதிமன்றத்தில்! மணவிலக்கு வழக்குகளில்?

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்த, காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு திருவென
முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே

என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந்திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது.

இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் கூறுகிறது.

நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்.

தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்றனர் தமிழர்!

வாழ்வில் இணைந்து தொடக்க நிலையில் இருப்போர்க்கான வாழ்வியல் தேவைகளையும் இருக்கக் கூடாத பண்புகளையும் தெளிவாக்கித் தருகிறது தமிழர் பண்பாடு!

(தொடரும்)


எது தமிழர் திருமணம்? (2)

நாளாம்! நாளாம்! திருநாளாம்!

சு. அறிவுக்கரசு
 

பெண்ணுடன் உடல்உறவு கொள்வதற்கும் திருமணம் செய்து கொள்வதற்கும் தேவைப்பட்டால் பொய் சொல்வது குற்றமல்ல என்பது ஆரியர் பண்பாடு. ஆகவேதான் ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் செய் என்றே எழுதி வைத்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட கேவலப் பண்பாடு தமிழர்க்கும் உடையதானது என்று ஆக்கிவைத்து விட்டார்கள். அவர்களது திருமண முறையையும் தமிழர் திருமணம் என்றாக்கி விட்டார்கள்.

வேங்கை மரம் பூக்கின்ற காலமாகிய இளவேனில் காலம்தான் மணம் செய்துகொள்ளச் சிறந்த காலம் என்கிறது வேங்கை தந்த வெற்பணி நன்னாள் என்கிற நற்றிணைப் பாடல் 369. அக்காலத்தே விடியற்காலைப் பொழுது நல்லதாம். திங்கள் ரோகினி நட்சத்திரத்துடன் சேர்ந்த நாளாக இருப்பது சிறப்பாம். இந்த நிபந்தனையை அகநானூறு பாடல் 86 கூறுகிறது. இவை எவையும் இன்று காணோம். கொங்குநாட்டு வேளாளர் சித்திரை மாதத்தில் திருமணம் நடத்துவது கிடையாது. பெரும்பாலோர் வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில்தான் வைத்துக் கொள்கிறார்கள். பல்வேறு பார்ப்பனச் சடங்குகள் தமிழர் திருமணத்தில்  நுழைக்கப்பட்டன. அவை தமிழர் திருமணம் என்றே அழைக்கப்படுவதுதான் கொடுமையான விந்தை! மனுஸ்மிருதிப்படி 32 வயது ஆண் 12 வயதுப் பெண்ணை மணக்க வேண்டும். 24 வயது ஆண் 8 வயதுப் பெண்ணை மணக்க வேண்டும். இந்த வயதுக்குமுன் மணம் செய்து கொள்ள அவசரப்பட்டால், வேதம் ஓதல் முதலிய தர்ம காரியம் கெடும். அதனால் பின்பு துக்கப்படுவான் என்று மனுஸ்மிருதி 9_94 விதித்துள்ளது.

12 வயதுக்கு முன் பெண் திருமணம் சட்டப்படி பொ.ஆ.(கி.பி.) 1891இல் தடுக்கப்பட்டது. பொ.ஆ. 1925இல் பெண்ணின் மணவயது 13 ஆக்கப்பட்டது. 1929இல் வந்த சாரதா சட்டப்படி வயது 14ஆக உயர்த்தப்பட்டது. இதை ஏற்க மறுத்த பார்ப்பனத் தலைவர் சத்யமூர்த்தி என்பாரும் எம்.கே.ஆச்சார்யா என்பாரும் இந்தச் சட்டத்திற்கு எதிராக எட்டு வயதுப் பெண்ணுக்குத் திருமணம் செய்வித்து சிறைக்குப் போகத் தயார் என்றும் மனு சாத்திரத்திற்கு விரோதமாகத் திருமணம் செய்வித்து நரகத்திற்குப் போகத் தயாரில்லை என்றும் பேசினார்கள் சட்டமன்றத்திலேயே! இவர்களின் சாத்திரத்தின்படி அஷ்ட வருஷா பலேத் கன்யா என்கிற கன்னிகை என்பவள் 8 வயது உள்ள பெண்தான். எட்டு வயதுக்குப் பிறகு திருமணம் செய்து வைக்கும் தந்தைக்குத் தண்டனை சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. என்ன தண்டனை தெரியுமா? மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா

பிதா பிபதிகோனிதம் பஹிஷ்டை என்கிறது தண்டனை விவரம்! இதற்கு என்ன பொருள் தெரியுமா? அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்துமதம் எங்கே போகிறது? என்கிற நூலில் எழுதியிருக்கிறார். (பக்கம் 158இல்) இப்பெண்ணின் ருது ரத்தத்தைப் பிதா புசிக்க வேண்டுமாம்! எவ்வளவு ஆபாசமான, அசிங்கமான தண்டனை? இதற்காகத்தான் ஜெயிலேமேல் என்றார்களோ, பார்ப்பனத் தலைவர்கள்?

அதன்படிப் பார்த்தால் இன்றைக்கு எல்லாப் பார்ப்பனத் தந்தைகளும் இந்தத் தண்டனைக்கு ஆளாகிறவர்கள் என்று ஆகிறதே! இன்றைய சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 என்றாகியுள்ள நிலையில் எல்லாத் திருமணங்களும் அந்த வயதுக்கு மேல்தானே நடக்கின்றன! சட்டம் வந்தபின்னர், சாத்திரங்கள் ஓடிவிட்டன.

பறையும் சங்கும் முழங்க

அவர்கள் அப்படியென்றால், தமிழர்கள் எப்படித் திருமணம் செய்து கொண்டார்கள்? அகநானூறு 86, 136 ஆகிய பாடல்கள் இதுபற்றிய விவரங்களைக் கூறுகின்றன. அகநானூறு பாடல் 195 திருமண மண்டபம் அலங்கரிப்பு உள்பட எல்லா விவரங்களையும் தெரிவிக்கிறது.

புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனைமணல் அடுத்து மாலை தாற்றி
உலந்தினிது அயரும் என்ப

எனும் வரிகள் மணமக்களின் வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டதைப் பாடுகின்றன. வீட்டுச் சுவர்கள் செம்மண் பூசப்பட்டன. வீட்டின்முன் புதுமணல் பரப்பப்பட்டன. மாலைகள் தொங்கவிடப்பட்டன. இப்படிப்பட்ட அலங்கரிப்புகள் திருமணம் நடக்கவிருக்கும் வீட்டுக்குச் செய்யப்பட்டனவாம்.

இன்றைக்குச் சிலர் சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதுபோல அன்றைக்குப் பறை ஒலியும் சங்கொலியும் முழக்கப்பட்டன. இறப்பு நடந்த வீடுகளில் ஒலிக்கும் சத்தமாகக் கருதப்பட்டுக் கடைப்பிடிக்கப்படும் சங்கொலி, பறையொலி முதலியவை அன்று மங்கல ஒலியாகக் கருதப்பட்டு மணமேடைகளில் இசைக்கப்பட்டன என்றால்… எத்தகைய தலைகீழ் மாற்றம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது? ஆரிய ஆதிக்கச் செல்வாக்கு எவ்வகையிலோ புகுத்தப்பட்டு விட்டதால் அல்லவா, இத்தகைய தலைகீழ் மாற்றம் தமிழர் நிலையில்! இதனைத் தமிழர் உணர்ந்து கொள்ளும் நாள் விரைந்து வாராதோ? குறுந்தொகைப் பாடல் 15இல் குறிக்கப்பட்டுள்ள இந்த இசை தமிழர்தம் இல்லம்தோறும் முழக்கப்படும் நிலை வரவேண்டும்.

உளுந்தஞ் சோறு

இருள் கட்டுக் குலைந்து வெளிச்சம் பரவத் தொடங்கும் விடியற்காலை வேளையில் மணம் நடத்தப்பட்டதாம். அகநானூறு கூறுகிறது. (பாடல் 86). அப்போது மக்கள் உண்ட உணவுபற்றியும் பாடல் பாடுகிறது. உளுந்தும் அரிசிப் பொங்கலும் கலந்த சோற்றை சுற்றமும் நட்பும் உண்பார்களாம். இதனால் ஏற்படும் மகிழ்ச்சி ஒலி மண வீட்டில் நிறைந்திருக்குமாம். இன்றைக்குப் பாசிப்பயிறு (பச்சைப் பயிறு) கலந்த பொங்கல் உண்கிறோம். அன்று உளுந்து கலந்த பொங்கல். குமரி, நெல்லை மாவட்டப் பகுதிகளில் இன்றும்கூட உளுந்தம் சோறு சமைக்கப்படுகிறது. உணவு விடுதிகளில்கூட உளுந்தஞ்சோறு பரிமாறப்படுகிறது.

மணமகளை அழகுபட அலங்கரித்து அமரச் செய்து, முதிய பெண்டிர் நான்குபேர் அவளுக்கு வாழ்த்துக் கூறி அவள் தலையில் நீரை ஊற்றி நனைக்கச் செய்வார்களாம். அந்த நீரில் மலரும் நெல்லும் கலந்திருக்குமாம். மலர் மலர்ந்து மணம் வீசக்கூடியது. நெல் விளைந்து பல மடங்கு பெருகக்கூடியது. எனவே, மணங்கமழும் வகையில் அவளது வாழ்க்கையும் வமிசமும் பல்கிப் பெருக வேண்டும் என்கிற விருப்பத்தை அப்படிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கின்றனர். இன்றைக்கோ…? திருமணம் முடிந்ததும் மஞ்சள் கலந்த அரிசியும் பிய்த்துப் போடப்பட்ட பூவிதழ்களும் கலந்த அட்சதை அவர்களின் தலையில் போடப்படுகின்றன. தொலைவில் இருந்து வீசப்படுகின்றன.

குழலாட… பூவாட…

திருமணம் ஆன நாள் முதற்கொண்டு மகளிர் தம் கூந்தலில் மலர் அணியும் உரிமையைப் பெற்றனர் என்பதும்கூட அகநானூற்றுப் பாடல் (394) மூலம் தெரிய வருகிறது. இதனைக் கொண்டு ஒருத்தி திருமணம் ஆனவளா, அல்லவா என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாமே! தமிழர் பண்பாடு எவ்வளவு சிறப்பாக இருந்துள்ளது! இன்றைய நிலை என்ன? தாலி என்கிற ஒன்றைக் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டு அது தொங்கும் இடம் நோக்கிக் கவனித்து திருமணம் ஆன நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஆக்கிவிட்டார்களே! தாலி இருக்கும் இடத்தை உற்று நோக்கினால் ஒழுக்கக் குறைவாக இருக்குமே என்கிற சிந்தைகூட அவர்களுக்குப் புலப்படவில்லை.

வடநாட்டுப் பெண்களின் நிலை தமிழ்நாட்டுப் பெண்களின் நிலையைவிடப் பல மடங்கு சிறப்பானது. திருமணத்தின்போது அவர்களுக்குத் தாலி கட்டப்படுவது இல்லை. மாறாக அவர்களின் நெற்றியில் செந்தூரம் வைக்கப்படுகிறது. குங்குமம் ஒருத்தியின் நெற்றியில் இருந்தால் திருமணம் ஆன பெண் என்பதை விளங்கிக் கொள்ளலாம். திருமணம் ஆவதற்கு முன்பு பெண்கள் குங்குமமோ, பொட்டோ வைத்துக் கொள்ளக்கூடாது என்பதால் இது மிக எளிது.

ஆரியப் பண்பாட்டுக்கேடு தமிழ்நாட்டைப் பாதித்துள்ளதைப் போல, வடநாட்டைப் பாதிக்கவில்லை எனக் கருதலாமோ?

தன்மனை வதுவை அயிரயிவள்
பின்னிருங் கூந்தல் மலரணிந்தோயே

என்று மணமகளின் தோழிகள் மணமகனைப் பாடுகின்றனர் என்கிறது பாடல். தன்தோழி கூந்தலில் மலரணியும் வாய்ப்பைத் திருமணம் மூலம் தந்த காரணத்தால் (அல்லது கரணத்தால் = சடங்கால்) அவன் வாழ்த்தப் பெறுகிறான். அந்தச் சடங்கு எங்கே போனது? எப்படிப் போனது? யாரால் போனது? பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு அல்லவா இதற்குக் காரணி? தமிழர் என்று விளங்கிக் கொள்வது?

– தொடரும்


எது தமிழர் திருமணம்? (5)

பிரம்மனின் கயமை

சிவன் திருமண சப்தபதி சிறப்பு வாய்ந்தது. பிரமன்தான் புரோகிதர். மந்த்ரங்களைக் கூறி நெய்யை ஊற்றித் தீயை வளர்த்துக் கொண்டே இருந்த நிலையில் மணமக்கள் ஏழு சுற்று சுற்றிவரத் தொடங்கினர். தீ தன் சேலையில் பற்றிக் கொள்ளக் கூடாதே என்கிற தடுப்பு முயற்சியாக மணமகள் தன் புடவையைச் சற்று உயர்த்திப் பிடித்தவாறு நடந்தாள். அதனால் அவளது பாதத்தின் ஒரு பகுதியும் கால்கட்டை விரலும் தெரிந்தது. புரோகிதப்  பார்ப்பனரின் கண்களில் கட்டைவிரல் தென்பட்டது. கட்டை விரலின் கவினுறு அழகு பிரமனின் சிந்தையைக் கவர்ந்தது. தன் சிந்தனையைச் சிறகடித்துப் பறக்கவிட்டான்.

கட்டை விரலின் அழகே இப்படி என்றால்… பாதம் எவ்வளவு அழகாக இருக்கும்?… கணுக்கால் எப்படி அமைந்திருக்கும்? அதற்கும் மேலே கெண்டைக் கால் எப்படி இருக்கும்? அதற்கும் மேலே தொடைகள் எப்படி இருக்கும்? அவற்றின் அழகு…? இடையில் இருக்கும் மறைவிடம் எப்படி இருக்கும்? என்றெல்லாம் கற்பனைத் தேரில் ஏறிப் பறந்தான். விளைவு என்ன ஆயிற்று தெரியுமா? அவனது காமாந்தகார எண்ணத்தினால் ஓமத்தீயே அணைந்துவிட்டதாம்! கடவுளின் யோக்யதை இப்படி இருக்கிறது! ஆண்டவனின் திருமணத்தில் இப்படிப்பட்ட அக்கிரமம்! அசிங்கம்! அந்தப் புரோகிதன் பார்த்துக் கொடுத்திட, இவர்கள் செய்து கொள்வதுதான் தமிழ்த் திருமணம்!

மணவறை அமைக்க

மணமக்கள் அமரும் இடம் மணவறை எனப்படும். அதன் கிழக்குத் திசையில் தேவேந்திரனாம், தென்கிழக்கில் அக்கினியாம், தெற்கில் எமன், தென்மேற்கில் நிருதி, மேற்கில் வருணன், வடமேற்கில் ஈசான மூர்த்தி என எட்டுத் திக்குப் பாலகர்களையும் வேதமோதி ஆவாகனம் செய்து பொருத்த வேண்டுமாம். இந்திரனுக்கு அடையாளமாக அநேகமுகம் உள்ள விளக்கு வைப்பார்கள். அக்னிக்கு அடையாளமாக குடவிளக்காம். ஈசான மூர்த்திக்குப் பதிலாக அம்மியும் குழவியுமாம். நவக்கிரகங்களைப்  பிரதிநிதித்துவப் படுத்திடும் வகையில் முளைகட்டிய ஒன்பது தானியங்கள் வைக்கிறார்கள். சப்த ரிஷிகளுக்கு மாற்றாக ஏழு மண்குடங்கள். ஏழு தண்ணீர்களைக் குறிக்கும் வகையில் பெரிய மண்பானையில் நீர் வைப்பதுதான் சாலுங்கரகம் என்கிறார்கள்.

இந்திரனுக்கும் ஏழு தண்ணீருக்கும் இடையே 12 அங்குல பள்ளம் தோண்டி அதில் நீர், பால், தேன் ஊற்றி நவதானியங்கள் போட்டு அரசாணிக்கால் நடப்பட வேண்டும். இதனை மூன்று பெண்கள் செய்ய வேண்டும். நெல்லினால் பள்ளத்தை மூடி நீர், பால், தேன் தெளித்துக் கும்பிட வேண்டுமாம். அரசாணிக்கால் என்பது அரசு, ஆலமரம், கல்யாண முருங்கைக் கிளை ஆகிய மூன்றும் வைத்துக் கட்டியது. அரசு பிரம்மாவாம். ஆல் திருமாலாம். முருங்கைக் கிளை சிவனாம். முக்கடவுளும் அங்கே வந்திருந்து அருள் பாலிப்பதாகப் பொருளாம்.

தொல்காப்பியம் கூறியவாறு, பெண் கேட்டு, பெற்றுத் திருமணம் செய்வோர் மணமகளை அழைப்பார்கள். ஆரிய வழக்கப்படி ஆணுக்குப் பெண்ணைத் தானமாகத் தருவோர், மணமகனை அழைத்து வருவார்கள். இப்படி மணமகன் அழைப்பு இந்திமொழியில் பராத் எனப்படும். மணமகனுடன் வருவோர் தங்க வைக்கப்படும் இடம் ஜான்வாசா எனப்படும். பார்ப்பனர்தம் திருமணங்களில் மாப்பிள்ளை அழைப்பை ஜான்வாசா அல்லது ஜானவாசம் என்கிறார்கள்.

மஞ்சள் பூசிய நூலை மணமகனின் வலது கையில் கட்டுவதும் அதேமாதிரி நூலை மணமகளின் இடதுகையில் கட்டுவதும் காப்புக் கட்டுதல் எனப்படும். திருமணம் இனிதே நடைபெற வேண்டுதலைக் குறிப்பதாம் இது.

பழைய பார்ப்பன மரபுப்படி பூணூல் அணிவிக்கப்பட்டு சிறுவர்கள் குருவிடம் பாடம் கற்றனர். கல்வி முடிந்ததும் அவர்களை வீட்டுக்கு அனுப்பும் குரு, காசிக்குப் போய் நீராடிவிட்டுப் போ எனக் கூறி அனுப்பி இல்லறத்தில் ஈடுபட அறிவுரை கூறுவார். பெண்ணைப் பெற்றவர் அந்த இளைஞனை வழிமறித்து காசிக்குப் போகவேண்டாம், என் மகளைத் தருகிறேன் என வலியக் கூறி அழைத்துவந்து திருமணம் செய்து வைப்பாராம். அதை இப்போது காசி யாத்திரை என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண் பார்த்து, பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டு, வரதட்சணை இவ்வளவு என்று பேசி முடித்துவிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சடித்து வழங்கிவிட்டுத் திருமணத்தன்று மேற்படி காசியாத்திரை நாடகம் நடத்துகிறார்கள். இதில் ஏதாவது பொருத்தமோ அர்த்தமோ இருக்கிறதா? இப்படி அர்த்தமற்றவை நிறைந்ததுதான் தமிழர் திருமணம் என்பவை!

மதுகுடிக்கும் இந்திரன்

இந்திரனுக்குச் சோமபானம் தந்தால் அழகான மாப்பிள்ளை கிடைப்பான் என்கிறது ஆரிய சாத்திரம். அழகில்லாத அபலா என்ற பெண் சோமபானம் இல்லாத நிலையில் சோமக்கொடி ஆற்றில் மிதந்து வந்ததை எடுத்துக் கசக்கி இந்திரனுக்கு அர்ப்பணம் செய்தாளாம். மகிழ்ந்த இந்திரன் அவள்மீது நுகத்தடியை வைத்து அழகை உண்டாக்கியபின் திருமணம் நடந்ததாம். இந்திரன் லஞ்சம் வாங்கிக் குடித்த பிறகுதான் அருள் பாலித்திருக்கிறான். இந்தச்  சாத்திரத்தைச் செய்யும் வகையில் மணப் பெண்ணைத் தன் மடியில் அமர்த்திக் கொள்ளும் அவளின் தந்தை தர்ப்பப்புல்லால் செய்த வளையத்தை (நுகத்தடி) அவள் தலையில் வைத்து காசு வைத்து தண்ணீர் தெளித்து ஒரு சடங்கு செய்கிறார். இதனைப் பார்ப்பனர் திருமணங்களில் பார்க்கலாம். இதுவே தமிழர் திருமணமாகிவிட்டது. பெண்ணை அப்பா சுமப்பதுதான் செம்மையாகச் சுமப்பது எனப் பொருள்படும் விவாகம் எனப்படுகிறது. அதனால்தான் விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகை எனப்படும். அப்படிப் பத்திரிகை அச்சடிக்கும் பல மண்டூகங்களில் எத்தனை பேருக்கு இதன் பொருள் தெரியும்?

கூரைப் புடவை

மணமகளுக்குப் புதுப்புடவை அணிவிப்பதைக் கூரைப் புடவை என்கிறார்கள். விவாக தோஷம் உள்ளதாம் இக்கூரைப் புடவை. அதனால் இந்தப் புடவையைத் தானமாகத் தருவது சிலரின் பழக்கம். தோஷம் (க்ருரம்) நிறைந்த க்ருரப் புடவைதான் கூரைப் புடவை என்றாகிவிட்டது என்பார்கள்.

திருமணத்தில் முக்கியமானது தாலி கட்டுவது. மாங்கல்ய தாரணம் என வடசொல்லால் குறிக்கப்படும் சடங்கு. மணப் பெண்ணுக்கு நேரில் முக்காலியின்மேல் வைக்கப்பட்ட தாலியைப் புரோகிதரிடம் வாங்கி கிழக்கே பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கும் பெண்ணின் கழுத்தில் மேற்கு நோக்கிப் பார்த்துக் கட்டவேண்டும்.

மாங்கல்யம் தந்துநா அநேன மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி சுபரீகத்வம் ஜீவ சரதச்சதம் எனும் சுலோகத்தைப் புரோகிதர் கூறுவார். தோஷம் கழிப்பதற்காகப் பலபேர் நாயுடன் திருமணம், தவளையுடன் திருமணம், கழுதையுடன் திருமணம் என்று செய்கிறார்கள். பார்ப்பனப் புரோகிதர் நடத்தி வைக்கிறார். இதே மந்த்ரத்தைத்தான் கூறுகிறார். அர்த்தம் கெட்ட திருமணம், திருமண மந்திரம் தமிழர் திருமணம்!

தாலி என்பது என்ன? தமிழர் திருமணத்தில் ஆதியில் தாலி உண்டா? பாதியில் வந்த இந்தச் சடங்கு எப்படித் தமிழர் திருமணத்தில் நுழைந்தது? யாரால் நுழைக்கப்பட்டது? இதுபற்றித் தமிழ்நாட்டில் நடந்த வாதப் போர் விவரம் யாது? வடநாட்டில் தாலி கட்டுவது இல்லையே! பின் எப்படி தாலி கட்டும் திருமணம் இந்துத் திருமணம் ஆகும்? விரிவாகப் பார்க்க வேண்டும்.

– சு.அறிவுக்கரசு

– (தொடரும்)


எது தமிழர் திருமணம்? – 6

சு.அறிவுக்கரசு

1954ஆம் ஆண்டில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கம் உரையாற்றும்போது தமிழர் திருமணங்களில் ஆதியில் தாலி இருந்தது இல்லை என்றும் அது பாதியில் புகுந்தது என்றும் பேசினார். தினத்தந்தி நாளேட்டில் வெளியிடப்பட்ட அந்த உரையைப் படித்த ம.பொ.சி. என அறியப்பட்ட சிவஞான கிராமணி என்பவர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் மாதிரியில் உண்மைக்கு மாறானது எனும் தலைப்பில் தினத்தந்தி தீபாவளி மலரில் ஒரு கட்டுரை எழுதினார். இவர் தொடக்கத்தில் அச்சகத்தில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றியவர். அதன் மூலம் தன் தமிழறிவைப் பெருக்கிக் கொண்டவர். விபச்சாரத்தில் தொடங்கி, மூடத்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் முடிந்த கதை என்று தந்தை பெரியாரால் வருணிக்கப்பட்ட சிலப்பதிகாரம் எனும் தமிழ்க் காப்பியத்தைப் பயின்று, பாண்டித்யம் பெற்று எழுதியும் பேசியும் வந்ததால் சிலம்புச் செல்வர் என்று சிலரால் பாராட்டப்பட்டவர்.

இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றுச் சிறைக்-கோட்டம் ஏகிய காரணத்தால் தன்னை சிப்பி ஏந்திய சிவஞானம் என்று அவரே கூறிக்கொள்வது உண்டு. காங்கிரசுக் கட்சியில் இருந்தபோது இவரின் ஆதரவும் அபிமானமும் இராசகோபால ஆச்சாரியார் பக்கம் இருந்தது. பிறிதொரு பெரு அணியின் தலைவரான காமராசருக்கு எதிர்ப்பாகவே செயல்பட்டவர். பார்ப்பனருக்கு விபீஷணனாக இருந்ததால் பார்ப்பனப் பத்திரிகைகளின் விளம்பர சடகோபம் இவருக்கு நன்றாகவே சாற்றப்-பட்டது. தமிழ்ப் பற்று மிக்கவர் என்று காட்டிக் கொள்ளும் வகையில் காங்கிரசில் இருந்து கொண்டே தமிழரசுக் கட்சியை நடத்திவந்தார். அப்படி இருப்பது காங்கிரசுக் கட்சியின் சட்ட விதிகளுக்கு மாறானது என்பதால் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுமாறு காங்கிரசுக் கட்சி கூறியது. அவரும் தமிழரசுக் கழகத் தலைவராகவே இருக்க விரும்பி, காங்கிரசிலிருந்து விலகி நின்றார். சில ஆண்டுகளில் இவரது குரு ஆச்சாரியார் தனிக்கட்சி தொடங்கியபோது இவர் கூட்டணிக் கட்சியாகும் வாய்ப்புக் கிடைத்தது. இருகைவிரல் எண்ணிக்கைக்கு உள்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்ட தமிழரசுக் கழகத்தின் தலைவர் எனும் பதவி இவருக்குக் கிட்டியது.

இவருடைய தமிழ்ப் பற்று மிகவும் பிரபலமானது. இந்தி மொழி தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டபோது இவர் இந்தி வாழ்க என்றார். தமிழும் வாழ்க என்றார். பிறகு இந்தி எழுத்துகளைத் தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தைப் பெரியாரும் அண்ணாவும் நடத்தியபோது தனது தொண்டர்களைக் கொண்டு தாரை மண்ணெண்ணெய் பூசி அழித்து இந்தி எழுத்துகளைத் துலங்கச் செய்த தமிழ்ப் பற்றாளர்(?)! சில ஆண்டுகள் கழித்து தி.மு.க. அரசின் பதவிகளைக் கேட்டுப் பெற்ற பண்பாளர். அமைச்சர் பதவி கேட்டு ஆலாய்ப் பறந்து அறிஞர் அண்ணாவை அணுகியபோது, விடுதலையில் பெரியார் எழுதிய தலையங்கத்தின் தலைப்பே இது என்ன, நாடா? சுடுகாடா? என்பது. அதிலிருந்தே தந்தை பெரியாரின் கருத்து என்ன என்பதை விளங்கிக் கொண்டார் அண்ணா! ம.பொ.சி.க்கு மந்திரி பதவி தரப்படவில்லை, நாடு பிழைத்தது!

அப்பேர்ப்பட்ட ம.பொ.சி. மறுப்பு எழுதிய மா.இராசமாணிக்கனார் தம் கருத்தை நூலாகவே ஆக்கியுள்ளார். (படிக்க: தமிழர் திருமணத்தில் தாலி).

வரலாற்று ஆசிரியர் பி.டி.சீனுவாச அய்யங்கார் எழுதிய தமிழர் வரலாறு எனும் நூலில் குறித்துள்ளவாறு (ஆங்கில நூல்) 1.எரிவளர்த்தல் இல்லாத, 2.தீவலம் வராத, 3.புரோகிதர் இல்லாத அந்தக் காலத் திருமணங்கள் முற்றிலும் தமிழர்க்கே உரிய திருமணங்களாகும் எனக் குறிப்பிடுகிறார். அகநானூறு பாடல்கள் 86ம் 136ம் கூறும் திருமணங்கள் மேற்கண்ட முறையில் நடந்தனவே! 86ஆம் பாடலின்படி திருமண நிகழ்ச்சியின் முதல் கட்டம் விருந்து. அடுத்து மணப்பந்தலில் தரையில் புதுமணல் பரப்பப்பட்டு விளக்கேற்றி வைக்கப்பட்டது. இளங்காலைப் பொழுதில் நடந்ததால் விளக்கு வைக்கப்பட்டது. அடுத்து உரோகிணி நட்சத்திரம் சந்திரனுடன் கூடிய நல்ல நேரத்தில் மணமகளைக் குளிப்பாட்ட பெண்கள் குடங்களில் நீர் எடுத்து வருதல். நீர்க்குடங்களில் நெல்லும் அரும்பும் தூவி நான்கு பெண்கள் வாழ்த்துக் கூறினர். நன்மணம் முடிந்தது.

136ஆம் பாடலின்படி இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட (புலால்) வெண்சோறு விருந்து நடைபெற்றது. திங்களும் உரோகிணி நட்சத்திரமும் கூடிய நல்ல நேரத்தில் மணமனை அலங்கரிக்கப்பட்டது. மணமுழவும் முரசும் முழங்கப்பட்டன. மணமகளைக் குளிக்க வைத்தனர். வாகை இலை அறுகின் கிழங்குகளும் அரும்புகளோடு கட்டப்பட்ட வெள்ளை நூல் மணமகளுக்கு காப்பு என்ற வகையில் சூட்டப்பட்டது. மணமகளுக்குத் தூய ஆடை அணிவிக்கப்பட்டது. அணிமணிகள் அணிவிக்கப்பட்டன. திருமணம் முடிந்தது.

பார்ப்பனப் புரோகிதர் நுழைந்தது சிலப்பதிகாரக் கதையில்தான். மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, தீவலம் செய்து கோவலன் கண்ணகி திருமணம் நடந்துள்ளது. பாலிகை ஏந்தி (முளைப்பாரி) மகளிர் நின்றுள்ளதும் கூறப்படுகிறது. மணப் பெண்ணின் கையை மணமகன் பிடித்தல்தான் கடைசிச் சடங்கு. இதை வடமொழியாளர் பாணிக்கிரகணம் என்று கூறுவர். ஆரியச் சடங்குகள் மெல்லமெல்ல ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் தாலி வரவில்லை. தாலி கட்டப்படவில்லை.

மேற்கண்ட சடங்குகள் செய்யப்படுவதற்கு முன்பு அகலுள் மங்கல அணி எழுந்தது எனும் சொற்றொடர் உள்ளது. இதனை மாங்கல்ய சூத்திரம் எனப் பொருள் கூறியுள்ளார் ஒருவர். அவரே பிறிதொரு இடத்தில் வரும் மங்கல அணியே அன்றியும் / பிறிதணியணியப் பெற்றதை எவன் கொல் எனும் வரிக்குப் பொருள் கூறும்போது மங்கல அணி என்பதை இயற்கை அழகு எனக் கூறுகிறார் என்பதை டாக்டர் மா.இராசமாணிக்கம் எடுத்துக் காட்டியுள்ளார். மங்கல அணியிற் பிறிதணி மகிழான் என்று அந்திமாலைச் சிறப்புசெய் காதையில் வரும் இடத்தில் இயற்கை அழகு என்றே பொருள் கூறி, அதைத் தவிர வேறு அணியைச் செய்யவில்லை என்கிறார்.

கோவலன் கொலைப்பட்ட பிறகு, மதுரையை எரித்துத் தன் சினம் தணித்த கண்ணகி துர்கா கோவிலின் முன் நின்று தன் கைவளையல்களை உடைத்தாள் என்றுதான் சிலப்பதிகாரம் பாடுகிறது. தாலியை அறுத்தாள் எனப் பாடவில்லை. எனவே கைவளையல்கள்தான் மணமான பெண்ணுக்கான அடையாளமாக இருந்துள்ளது.

இன்றைக்கும் கருவுற்ற பெண்டிர்க்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. குழந்தை பெற்று உயிருடன் மீளவேண்டும், சுமங்கலியாகவே வாழவேண்டும் எனக் காட்டுவதற்காக வளைகாப்பின்போது வளையல்கள் கைமுழுக்க அணிவிக்கப்படுவதும் இதனால்தான். அந்தச் சடங்கே மூடத்தனம். பிள்ளைப்பேறு சுகமாக நடைபெற மருத்துவ வசதிகள்தான் தேவை. வளையல்கள் என்ன செய்யும்? இந்த மூடத்தனத்தைத் தமிழ்நாடு அரசே தன் செலவில் செய்கிறது எனும்போது இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 51(கி) மக்களைப் பார்த்துச் சிரிக்கிறது.

எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைக் காப்பியத்தில் ஆண்டாளின் திருமணம் கண்ணன் எனும் கடவுளோடு நடந்ததாக உள்ளது. இந்திரன் முதலிய தேவர்கள் வருகை, மணமகளுக்குப் புத்தாடை கட்டி காப்பு நாண் கட்டுதல், மணமகன் வருகை, பின்னணி இசை முழங்க கண்ணன் ஆண்டாளின் கையைப் பிடித்தல், புரோகிதர் மந்திரம் கூறல், தீவலம் வருதல், ஆண்டாளின் காலைக் கண்ணன் தூக்கி அம்மிமேல் வைத்தல், கண்ணனும் ஆண்டாளும் தத்தம் கைகளை இணைக்க உறவினர்கள் பொரி வாரித் தூவுதல், குங்குமச் சாந்துபூசி மணமக்களை மஞ்சனம் ஆட்டல் என எல்லாச் சடங்குகளும் கூறப்பட்டன. தாலி கட்டப்படவில்லை.

9ஆம் நூற்றாண்டின் சூளாமணி நூலில் மணமகளை அவள் தந்தை தாரை வார்த்துத் தந்தது, தீ வளர்த்தது, தீவலம் வருவது, அம்மி மிதித்தது, அருந்ததியைக் காட்டியது எனும் சடங்குகளே குறிக்கப்படுகின்றன. தாலி பற்றிய பேச்சே கிடையாது.

10ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சீவக சிந்தாமணியில் 3200 பாடல்கள் உள்ளன. செய்யுள்கள் 81_84இல் கோவிந்தை திருமணம் பேசப்படுகிறது. அதில் மங்கலக் கடிப்பு என வருகிறது. கடிப்பு என்றால் காதணி. தாலி வரவில்லை. செய்யுள்கள் 345, 346இல் பாடப்படும் காந்தருவதத்தை திருமணம் தீவலம் வருவதோடு முற்றுப் பெறுகிறது. தாலி இல்லை. செய்யுள்கள் 213_215இல் கூறப்படும் குணமாலை திருமணத்திலும் தாலிபற்றிய குறிப்பில்லை. செய்யுள்கள் 179_181இல் வரும் பதுமை திருமணத்திலும் தாலி இல்லை. கேமசரி திருமணம் (பாடல் 79) தாலி கட்டியதைப் பாடவில்லை. அதுபோலவே கனகமாலை, விமலை, கரமஞ்சரி இலக்கணை ஆகியோர் திருமணங்களிலும் தாலி கட்டப்பெறவில்லை.

11ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கந்த புராணத்தைக் கச்சியப்ப சிவாச்சாரி என்பார் எழுதினார். இதில் அப்பா, மகன் திருமணங்கள் பாடப்பட்டுள்ளன. சிவன்_உமா திருமணம், முருகன்_தெய்வயானை திருமணம், முருகன் _ வள்ளி திருமணம் ஆகியவை பாடப்-பட்டுள்ளன. சிவன் உமாவின் கையைப்பற்றிய சடங்கான பாணிக்கிரகணம் பற்றி மட்டுமே குறிக்கப்படுகிறது. நாரதன் இருந்து நடத்திவைத்த முருகன்_வள்ளிக்குறத்தி திருமணம் எரி வளர்த்துப் பிற சடங்குகளோடு நாரதன் புரோகிதம் பார்க்கச் செய்யப்பட்டதாம். இந்திரன் மகளான தெய்வயானையுடன் முருகன் செய்து கொண்ட திருமணம் மணமகளின் தந்தை தாரை வார்த்துத் தர, முருகன் ஏற்று, பிரம்மனால் செய்யப்பட்ட தாலியைத் தெய்வயானையின் கழுத்தில் கட்டினான் என்று பாடப்படுகிறது.

செங்கமலத்திறை சிந்தையின் ஆற்றி
அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட
மங்கலநாணை மணிக்களம் ஆர்த்து
நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான்

என்று பாடல் 247 கூறுகிறது. மூன்று திருமணங்கள் குறித்துப் பாடிய கச்சியப்பன் ஒரு திருமணத்தில் மட்டும் தாலி கட்டுகிறான்; தாலியைக் காட்டுகிறான். இந்தப் பாடல் எவனோ செருகியதாக இருக்குமோ? இடைச்செருகலாக இருக்கும் என்கிற அய்யத்தைப் பேராசிரியர் எழுப்புகிறார்.

இதே காலகட்டத்தில் இயற்றப்பட்ட கலிங்கத்துப் பரணியில் பாணிக் கிரகணம் மட்டுமே செய்விக்கப்படுகிறது. தாலி காணோம்.

12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் சிவாச்சாரியான (குருக்கள்) சுந்தரர் இரண்டு திருமணங்களும் சுமார்த்தப் பார்ப்பனனான சம்பந்தனின் ஒரு திருமணமும் காட்டப்படுகின்றன. தாரை வார்த்தல், கரம் பிடித்தல், தீவலம் வருதல் முதலியன மட்டுமே வருகின்றன. தாலி கட்டப்படவில்லை.

குங்கிலியக் கலய நாயனார் என்பார் வறுமையில் வாடியபோது மனைவியின் கோதில் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் வாங்கியதாகக் கூறப்படுகிறது. தாலியை நூலில் கோத்து அணிந்திருந்தது தெரியவருகிறது. இதனையே காலவழு (Anachronism) என்று ஆய்ந்து அறிவிக்கிறார், பேராசிரியர் இராசமாணிக்கனார். 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டாலும் வரலாறுக்குரிய நாயனார் 7ஆம் நூற்றாண்டவர். எனவே 12ஆம் நூற்றாண்டுப் பழக்கத்தை 500 ஆண்டுகளுக்கு முன்பே திணித்துக் கூறிய குற்றம் உடையது என்கிறார்.

(தொடரும்)



தமிழர்களுடைய மணமுறை என்பது புரோகிதமற்ற மணமுறையாகவே இருந்தது

(சிங்கப்பூரில் நடைபெற்ற தன்மான மணவிழாவில் திரு.கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம் ஆற்றிய உரை)

பேரன்பிற்குரிய பெரியோர்களே! தாய்மார்களே! உற்றார் உறவினர்களே! நண்பர்களே! மன்றல் கொள்ளிட்ட மணமக்களே உங்கள் எல்லோருக்கும் என் அன்பான வணக்கம்.

இங்கே வாழ்க்கை ஒப்பந்த விழா உறுதி மொழியினை மணமக்கள் கூற எல்லோரும் நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். இந்த மணமுறை எவ்வளவு எளிதாக அமைந்திருக்கின்றது என்பதைப் பார்க்கும் பொழுது இந்த மணமுறையைப் புகுத்தி இன்றைக்கு உலகமே ஏற்கக் கூடிய அளவிலே இதை செய்திருக்கின்ற அறிவு ஆசான் தொண்டு செய்து பழுத்த பழம் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்குத்தான் நம்முடைய முதல் வீர வணக்கம் உரித்தாக வேண்டும்.

ஏனென்றால் தந்தை பெரியார் அவர்கள்தான் இந்தச் சுயமரியாதை திருமணத்தை உருவாக்கினார்கள்.

அதற்கு முன்னாலே தமிழர்களுடைய மணமுறை என்பது புரோகிதமற்ற மணமுறையாகத்தான் இருந்தது. அதிலே பலவிதமான சடங்குகள் நடந்தன என்று சொன்னால் அவைகள் பின்னாலே புகுத்தப்பட்டவைகள் பண்பாட்டு படையெடுப்பால் நிகழ்த்தப் பட்டவைகள்.

மலையரசி கலைச்செல்வன் மணவிழா பல ஆண்டுகளுக்கு முன்னாலே நான்தான் வந்து இங்கு நடத்திவைத்தேன்.

அதுபோல பல திருமணங்கள் இங்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தங்களாக சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்றிருக்கின்றன.

மணமக்கள் வாழ்விணையர்கள் இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இங்கு அமர்ந்திருக்கின்றார்கள். இங்கு மாலையை மட்டும் மணமக்கள் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த மணமுறையில்தான் இவ்வளவு வசதியாக நாற்காலியில் அமர்ந்திருக்கின்றார்கள். பழைய புரோகித மணமுறையில் இவ்வளவு வசதியாக இருக்க முடியாது.

மாங்குச்சி சுள்ளி போட்டு ஒரு பக்கம் கொளுத்த அது கண்ணிலே புகையடிக்க மணமகன் ஒரு பக்கம் கண்களை கசக்க மணமகள் இன்னொரு பக்கம் கண்ணை கசக்க என்ன இரண்டுபேரும் அழுது கொண்டிருக்கின்றார்களே என்று ஒரு பாட்டி மூலையிலே முணுமுணுக்க…….. இவைகள் எல்லாம் நடக்கும் பழைய திருமண முறையிலே! ஆனால் அதற்கெல்லாம் இடமில்லாமல் தந்தை பெரியார் சுயமரியாதை மணமுறையை அறிமுகப்படுத்தினார். அவர் நமது நன்றிக்கு உரியார் என்பதை நாம் எல்லோருமே நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த மணமுறை வசதியாக சுருக்கமாக முடிந்துவிட்டது.

வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினை மணமக்கள் இங்கு கூறினார்கள். ஒருவருக்கு ஏற்படுகின்ற இன்பம் – துன்பம் இரண்டிலுமே அவர்கள் வாழ்விணையர்கள். இருவருமே உற்ற நண்பர்கள். இன்றைக்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றார்களோ இதேபோன்று நட்பை அவர்கள் என்றைக்கும் ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கவேண்டியவர்கள் என்பதை இங்கு வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

தமிழிலே தமிழர்களால் நடத்தப்படுகின்ற மண விழா இந்த மணவிழா என்பதுதான் இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று. ஆரம்பத்திலே அப்படித்தான் தமிழர்கள் நடத்திக் கொண்டு வந்தார்கள். இன்னும் கேட்டால் எங்களைப் போன்றவர்கள் இங்கு வரவேண்டும் நடத்த வேண்டும் என்று கூடத் தேவையில்லை.

பழைய இலக்கியத்தில் பார்த்தால் இரண்டு பாடல்கள்தான் தமிழர்களுடைய மணவிழாவைப்பற்றிய குறிப்புகள் இருக்கின்ற பாடல்கள். இங்கு பேசிய கவிஞர்கள் இரண்டு பேருமே அதைப்பற்றித் தெளிவாக அறிவார்கள்.

பழந்தமிழர் திருமண முறைப்பற்றி நமக்கு ஏராளமான வரலாற்றுச் செய்திகள் இல்லை. அகநானூறு 86 ஆவது பாடலில் இதுபற்றிச் செய்தி உள்ளது. மணப்பந்தலிலே புது மணல் பரப்பப் பட்டிருந்தது பந்தலில் மறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது காலை நேரம் மாசற்று இருந்தது ஒருபுறம் உணவு குவியல் கிடந்தது முதுபெண்டிர் உச்சியில் நீர்குடம் ஏந்தி நின்றனர் அவர்கள் முன்னவும் பின்னையும் நீர்க் குடங்கள் முறை முறையாகப் பல பிள்ளைகளைப் பெற்ற மகளிர் நால்வர் கூடி கற்பு நெறி என்றும் தவறாமல் நல்லறங்களை செய்து கணவன் விரும்பத்தக்க மனைவியாக வாழ்வாயாக என வாழ்த்தி மணமகளை நீராட்டினர். அந்த நீரில் நெல்லும் மலரும் கலந்திருந்தன.

இங்ஙனம் பெண்ணை நீராட்டும் சடங்கு நடைபெற்றது. இது நடைபெற்ற பிறகு மணமகளை அவளின் உறவினர் சிலர் விரைந்துவந்து பெரிய இல்லக்கிழத்தியாய் திகழ்வாயாக! என்று வாழ்த்தி என் கையில் ஒப்படைத்து அவளும் நானும் ஒருங்கு கலந்திருந்த இராப்பொழுது என்று அந்தப் பாடலிலே இருக்கின்றது.

ஆகவே குத்து விளக்கு வைப்பது மணமக்கள் நெருப்பைச் சுற்றி வருவது அம்மி மிதிப்பது ‘அருந்ததி ‘ என்ற இல்லாத நட்சத்திரத்தைப் பகலிலே காண முயற்சிப்பது இதுபோன்ற கற்பனைகள் எல்லாம் பழைய திருமண முறையில் ஒருபோதும் இல்லை.

அதுபோல புறநானூற்றில் 77 ஆவது பாடல் மற்றும் 37 ஆம் பாடலிலும் அகநானூற்றின் 54-ஆவது பாடலிலும் மணவிழாவைபற்றி ஒரு சில கருத்துகள் கூறப்பட்டுள்ளன. தாலி கட்டுதல் போன்ற சடங்குகள் எல்லாம் பின்னால் வந்தவைகளாக இருக்கின்றன.

குறுந்தொகை நிகழ்வு இருக்கிறதா? இங்கே கவிஞர் அவர்கள் அருமையாக சுட்டிக் காட்டினார்கள் ‘ஞாயும் யாயும் யாராகியரோ’ என்று.

அப்படி இருவர் உள்ளங்கள் இணைந்த ஒரு மணவிழாவாகத்தான் முதலில் நடந்து கொண்டிருந்தன. ஆனால் இன்றைக்கு தமிழர்களின் வாழ்வில் குறுந்தொகை நிகழ்வு இருக்கின்றதா? இதுபற்றி;தான் இன்றைக்கு நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

எனவே மனப்பொருத்தம் என்கிற அடிப்படையிலே ‘ஞாயும் யாயும் யாராகியரோ’ என்ற முறையிலே ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள் என்று கவிஞர் அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.

தமிழ் நாட்டில் ஏன் பல இடங்களிலே திருமணம் எப்படி நடைபெறுகின்றது? குறுந்தொகைக்குப் பதவுரை பொழிப்புரை சொல்லிக் கொடுக்கிறவர் வீட்டில் கூட இதைச் செரிமானம் செய்து கொள்கிறார்களா என்றால் இல்லை! தந்தை – மகனை கண்டிப்பார் ‘அய்யோ இப்படி வேறு சாதியில் பெண்ணைப் பார்த்துவிட்டாயே உனக்காக பெரிய இடத்தில் அல்லவா பெண் பார்த்து வைத்திருந்தேன். பெருந்தொகை வரும் என்று கணக்குப்போட்டு வைத்திருந்தேன் வருந்தொகையும் போய்விட்டதே’ என்று குறுந்தொகைப் பாடலை சொல்லிக் கொடுப்பவர் கேட்பார்.

நுழையக் கூடாத ஒரு தத்துவம் தமிழர் வாழ்விலே வரதட்சணை என்ற பெயராலே நுழைந்திருக்கின்றது. ®வரதட்சணை என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. வரனும் தமிழ் சொல் அல்ல தட்சணையும் தமிழ் சொல் அல்ல தமிழனுக்கு வரதட்சணை வாங்கி பழக்கமே கிடையாது.

மணமக்களுடைய அழைப்பிதழைப் பாருங்கள் மன்றல் அழைப்பு மடல் என்று தூய தமிழிலே நல்ல தமிழிலே அழைப்பிதழ் அச்சடித்திருக்கின்றார்கள். இந்த உணர்வு வருகின்ற தலைமுறையினருக்கும் இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக் கின்றார்கள் எனக்கு முன்னாலே வாழ்த்துரை கூறிய அறிஞர் பெருமக்கள்.

பழைய திருமணத்திலே யாரோ ஒருவரிடம் கொடுத்து ‘முகூர்த்த ஓலை’ என்று எழுதச் சொல்வார்கள். இதில் முகூர்த்தம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. விவாஹ சுப முகூர்த்தம் என்று போட்டு கன்னிகாதானம் செய்விக்கப் பெரியோர்களால் நிச்சயித்தபடி என்று போட்டு தாராமுகூர்த்தம் செய்விக்க என்று திருமண ஓலையில் போடுகின்றார்கள். இதிலே ஏதாவது ஒரு சொல் தமிழ்ச் சொல் உண்டா? இதற்குப் பொருள் தெரிந்து கொண்டு யாராவது எழுதியிருக்கின்றார்களா? இதை மட்டும் இந்த நேரத்திலே நான் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

‘கன்னிகா தானம்’ என்று சொல்லுகின்றார்கள். கன்னி என்றால் பெண் தானம் என்றால் தர்மம். பெண்ணை வளர்த்துத் தருமமாகக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்வதிருக்கிறதே அது தமிழர் பண்பாடு அல்ல ஏன் மனித பண்பாடே அல்ல காரணம் பெண்களை ஒரு பொருள் போலக் கருதிய அடிமை மனப்பான்மை இது. எப்படியோ ஆரியப் பண்பாட்டின் மூலமாக உள்ளே நுழைந்ததன் மூலமாகத்தான் இப்படி ஏற்பட்டது.

பேனா என்னிடத்திலே இருக்கிறது இதை ஒருவருக்குத் தானமாகக் கொடுத்தால் வாங்கியவர் இதை இன்னொருவருக்கு விற்கலாம் – கொடுக்கலாம் அல்லது உடைத்தும் போடலாம் நொறுக்கலாம் ஏன் என்று கேட்கக்கூடிய உரிமை எனக்குக் கிடையாது. இது பொருளுக்குப் பொருந்தும். ஆனால் பெண் ணுக்குப் பொருந்துமா? என்று கேட்டவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அதனுடைய விளைவு தான் மாறுபட்ட சுயமரியாதை சீர்த்திருத்த வாழ்க்கை இணை ஒப்பந்தம் ஆணுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவ்வளவு உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு.

இதை பார்த்துத்தான் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கின்றோம்.

பாரதக் கதை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாரதக் கதையில் தருமன் சூதாடினான் பஞ்ச பாண்டவர்கள் அய்ந்து பேரில் யோக்கிய மானவர் யார் என்று சொல்லும்பொழுது தர்மராசா என்றுதான் சொல்லுவார்கள்.

தருமன்தான் தன் மனைவி திரௌபதையை வைத்துச் சூதாடினான். அதுவும் தருமனுக்கு அய்ந்திலே ஒரு பங்குதான் சொந்தம். தருமன் சூதாட்டத்திலே தோற்கிறான். பெண்ணை ஒரு பொருளாக வைத்துத் தருமன் சூதாடினான்.

இந்தக் கருத்து நமது இனத்திற்கோ பண்பாட்டிற்கோ மனித சமுதாயத்திற்கோ ஒத்ததல்ல. இதில் தாரா முகூர்த்தம் என்று சொல்வது இன்னும் மோசமானது.

பெற்றோர் மணப் பெண்ணை மடியிலே உட்கார வைத்து கையிலே எள்ளும் தண்ணீரையும் விட்டுத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம் என்று சொன்னால் அந்தப் பொருள் கைநழுவிப் போய் விட்டது என்று பொருள். ஆகவே தாரா முகூர்த்தம் அதுவும் தமிழ்ச் சொல் அல்ல தமிழ்ப் பண்பாட்டிற்குரியது அல்ல ஏன் பண்பாட்டிற்கே உரியது அல்ல.

தாரை வார்த்துக் கொடுத்துவிட்டால் மணமகன் வீட்டார் மணப்பெண்ணை என்ன செய்தாலும் ஏன் என்று கேட்கின்ற உரிமை மற்றவர்களுக்குக் கிடையாது. அந்தப் பெண்ணை எவ்வளவு இம்சித்தாலும் எவ்வளவு சங்கடப்படுத்தினாலும் அந்த உரிமை கிடையாது. இது பழைய திருமண முறையிலே உள்ளது.

ஆனால் இந்தத் திருமண முறையிலே நீங்கள் எல்லோருமே பார்த்தீர்கள். இரண்டு பேருமே வாழ்க்கை இணைநல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறியபொழுது வாழ்விணையர்களாக அவர்கள் ஆகின்ற நேரத்திலே இருவரும் சம உரிமை உடையவர்களாக வாழ்வோம் என்று சொன்னார்கள்.

சடங்கு என்ற பெயராலே சம்பிரதாயம் என்ற பெயராலே புரோகிதர் வந்து நடத்துகின்ற திரு மணத்திற்கு நமக்கொன்றும் தனிப்பட்ட யார் மீதும் கோபம் இல்லை. யார் மீதும் வெறுப்பில்லை.

ஆனால் நம்மைத் தாழ்த்தும் பொழுது நம்மை வீழ்த்தும் பொழுது நம்மை கேவலப்படுத்தும் பொழுது நம்மை அவமானப்படுத்தும் பொழுது அதை ஒரு மனிதன் சகித்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

நான் பேசினேன் கவிஞர்கள் இங்கே பேசினார்கள் இந்த கருத்துகளை கேட்டுக் கொண்டிருந்தீர்கள். இந்த கருத்துகள் உங்களுக்கு உடன்பாடாக இருக்கலாம் நாங்கள் சொன்ன கருத்தை நீங்கள் ஏற்கலாம் அல்லது தள்ளலாம் ஆனால் உங்களுக்குப் புரிகிறது. அதே நேரத்திலே வடமொழியில் புரோகிதர் மந்திரம் சொன்னால் அந்த மந்திரத்தின் பொருள் என்ன என்று மணமக்களுக்காவது புரியுமா? அல்லது வந்திருக்கின்ற நமக்காவது புரியுமா? பெற்றோர்களுக்காவது புரியுமா?

யாருக்குமே புரியாது. அந்த மந்திரத்தை சொன்னால்தான் திருமணம் நிறைவேறியது என்று ஒரு தவறான மூடநம்பிக்கைக்கு நாம் ஆளாக்கப்பட்டிருக்கின்றோம். அதை இந்த மணமுறையில் காண முடியாது. புரோகிதர் என்ன மந்திரம் சொல்லுகிறார் என்பது பல பேருக்குத் தெரியாது.

புரோகித திருமணத்திலே மணமக்களை வைத்து தாலி கட்டுவதற்கு முன்னாலே அவர்கள் சொல்லுகின்ற மந்திரம்

சோமோ பிரதமோ விவேதே கந் தர்வோ
விவித உத்ர திரிஜ்ஜியஷ்டே அக்னிஷ் டபதி
துரிஜியஸ்தே மனுஷ்யஜா என்பதாகும்.

இந்த மந்திரத்தைப் புரோகிதர் சொன்னவுடனே நல்லா சொல்லுங்கள் சாமி என்று சொல்லு கின்றார்கள். நல்ல செய்தியாக இருந்தால் நூறுமுறை கேட்கலாம்! ஆனால் அதன் பொருள் என்ன? பலபேருக்குத் தெரியாது.

வைதீக முறையில் திருமணம் செய்துகொள்ளக் கூடிய அந்த மணமகனைப் பார்த்து என்ன சொல்லுகின்றார்கள். முதலில் இந்த மணப்பெண் சோமனுக்கு மனைவியாக இருந்தாள் இரண்டாவது கந்தர்வனுக்கு மனைவியானாள். மூன்றாவது இந்திரனுக்கு மனைவி யானாள் நான்காவது அக்னிக்கு மனைவியானாள் அய்ந்தாவதாக என் மூலமாக உனக்கு மனைவியாகிறாள் என்று அந்த மந்திரத்திற்கு பொருள் சொல்லுகின்றார்கள். இதைத் தமிழில் புரோகிதர் சொன்னால் அவரை எந்தத் தாய்மாரும் வெளியே அனுப்ப மாட்டார்கள்.

ஆனால் இதை சமஸ்கிருதத்தில் சொன்னவுடனே புதுப் பணக்காரர்கள் தோளிலே இருக்கின்ற துண்டை இடுப்பிலே எடுத்து கட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் தட்சணை கொடுத்து மந்திரத்தை இன்னும் கொஞ்சம் இறுக்கிச் சொல்லுங்கள் சாமி என்று சொல்லக்கூடிய அளவிலே இருக்கின்றார்கள் என்று சொன்னால் தமிழர்களுடைய நிலை எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

நக்கீரன் என்ற வார ஏட்டிலே அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரியார் என்பவர் எழுதுகின்ற கட்டுரை பல மாதங்களாக விடுதலையில் எடுத்துப்போட்டு வருகின்றோம். அவருக்கு 94 வயதாகிறது. அவர் ஒன்றும் சுயமரியாதைகாரர் அல்ல எங்களுடைய கொள்கை பற்று கொண்டவர்கூட அல்ல. அவர் பெரிய பக்திமான் நல்ல ஆராய்ச்சியாளர் வேத மந்திரங்கள் எப்படிப் பட்டவை? என்ன பொருள் என்பதைப்பற்றி அவர் சொல்லி இந்தக் கட்டுரை வெளி வந்திருக்கிறது. தாத்தாச்சாரியார் சொல்லுகின்றார்:

வாத்தியார்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்திரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்லுகின் றன் என்று போன அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா? அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்.

தாம்பூஷன் சிவதாமம்
ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா
பவந்த்தீ
யான ஊரு உஷதி
விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா
ப்ஷரே பஷேயம்…

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம் இதைக் கல்யாண மேடையிலே பெண்ணையும் மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார்.

இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால் அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

என் இஷ்டமித்ரர் ஒருவருடைய மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது அந்தப் பெண் மகா புத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும்போது வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல ‘ஸ்வாமீ.. நிறுத் துங்கோ’ என்றாள். அவள் வாத்யார் வாயடைத்து விட்டார். இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ? இதை உங்கள் முன்னால் படித்தால் எனக்கு அசிங்கம். உங்களுக்கு சங்கடமாக இருக்கும். அதை விட்டு விடுகிறேன்.

(பெண்ணும் மாப்பிள்ளையும் துணியில்லாமல் செய்யுற காரியத்தை… நீங்க பலபேர் முன்னாடி சொல்றேளே… வாத்யார் அதன் பிறகு அந்த மந்த்ரத்தை சொல்ல வில்லை)

இந்த செய்தி 7-5-2005 நக்கீரன் வார இதழிலே வெளிவந்திருக்கிறது. அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரியார் இதை எழுதியிருக்கின்றார்.

எனவே இவ்வளவு ஆபாசமான செய்திகளை ஒரு பொது அரங்கத்தில் சொல்லும்பொழுது அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம் என்றால் அதைப் புரியாத மொழியிலே மந்திரம் என்ற பெயராலே சொன்னதினுடைய விளைவு அது.

நாவலர் சோமசுந்தர பாரதியாரைப்பற்றி சிலராவது கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் ஒரு வைதீகத் திருமணத்திற்குச் சென்று முன்பகுதியிலே அமர்ந்திருக்கின்றார். அவர் பன்மொழிப் புலவர்.சமஸ்கிருத பண்டிதர். அவர் தமிழிலே எவ்வளவு புலமைப் பெற்றவர்களோ அதுபோல சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றவர்கள்.

அந்த மணவிழாவிலே ஒரு புரோகிதர் மந்திரம் சொல்லிக் கொண்டே யிருந்தார். புரோகிதர் ஒரு இளைஞர் வயதானவர் கூட அல்ல. அவர் சொல்லுகிற மந்திரத்தைப் பார்த்தவுடன் கோபம் கொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார் மணமேடைக்குச் சென்று அந்த புரோகிதரை ஓங்கி கன்னத்தில் ஒரு அறை அறைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் எல்லாம் ஓடி இவரைப் பிடித்து என்ன இவ்வளவு அநாகரீகமாக நடந்துகொண்டீர்களே என்று கேட்டார்கள்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் எல்லோரையும் அமைதிப் படுத்திவிட்டுச் சொன்னார் உங்களுக்கு யாருக்காவது சமஸ்கிருதம் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது என்று சொன்னார்கள்.

அப்பொழுது அவர் சொன்னார் நான் ஏன் இப்படி நடந்துகொண்டேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இது எனக்கு சங்கடமான விசயம்தான்.

புரோகிதப் பையனைப் பார்த்து நீ சொன்ன மந்திரத்தின் அர்த்தம் என்ன தெரியுமா? என்று கேட்டார். அந்தப் புரோகிதர் எனக்குத் தெரியாது என்று சொன்னார். நீ கருமாதி மந்திரத்தை கலியாணத்தில் சொல்கிறாயே அப்பா நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். இதை நீ மாற்றியாவது சொல்வாய் என்று பார்த்தேன். நீ அதை சொல்லவே இல்லை. அதனால்தான் அடித்தேன் என்று சொன்னார்.

அடி வாங்கிய அந்தப் பையன் அழுது கொண்டே சொன்னார். எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க எங்க அப்பா இரண்டு மந்திரத்தை மனப்பாடம் செய்து கொள்ளச் சொன்னார். அந்த இரண்டையும் மாற்றி மாற்றி சொல்லச் சொன்னார். எனவே மந்திரத்தை மாற்றிச் சொல்லிவிட்டேன் என்று சொன்னார்.

ஆகவே மணவிழாவிலே மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய நேரத்திலே கருமாதி மந்திரத்தை சொன்னால் சும்மா இருப்பார்களா?

பண்பாடு தன்மானம் இதை வைத்துத்தான் சொல்லுகிறோமே ஒழிய நமக்கு தனிப்பட்ட முறையிலே யார்மீதும் எந்த வெறுப்பும் கிடையாது. ஆகவே இந்த மணமுறையை அய்யா முருகு சீனி வாசன் போன்றவர்கள் ஏற்றார்கள். அவருடைய இன்றைய சம்பந்தியார் அவர்களும் தெளிவாக ஏற்றிருப்பது பாராட்டத் தகுந்தது.

மணமக்களுக்கு நான் அதிகம் கருத்துகளை சொல்லவேண்டிய அவசியமில்லை இரண்டு அற்புதமான குடும்பங்கள் இணைகின்றன.

மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும். மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும்போது கூட நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ நான் ஒன்றை நன்றாக கவனித்தேன்.மணமகன் ராம்சந்தர் அவர்கள் குறிஞ்சிச் செல்விக்கு மாலை அணிவிக்கும்பொழுது சுலபமாக போட்டு விட்டார். குறிஞ்சி செல்வி அவருக்கு மாலை போடும் பொழுது கொஞ்சம் அவர் தலை குனிந்து வாங்கிக் கொண்டார். இந்த சம்பவத்தை வாழ்க்கை ப+ராவும் அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் அவர்களுடைய குடும்பத்தில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

வளைய வேண்டிய நேரத்தில் ஒருவர் கொஞ்சம் வளையவேண்டும் குனிய வேண்டிய நேரத்தில் கொஞ்சம் குனியவேண்டும் விட்டுக்கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுக் கொடுக்கவேண்டும் புரிந்துணர்வோடு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பழகவேண்டும் நண்பர்களோடு பழகவேண்டும் அவர்கள் தங்களுடைய குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பவர்களாக இருக்கவேண்டும்.

பல இனங்கள் பல மொழிகள் இருந்தாலும் எல்லோரும் மனித நேயத்தோடு வாழவேண்டும் தொண்டுள்ளத்தோடு வாழவேண்டும். எனவே இந்த மணமுறையின் மூலமாக திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்கள் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கவேண்டும். எந்த வகையிலும் மூடநம்பிக்கைக்கு ஆளாக வேண்டிய அவசியம் இல்லை.

மூடநம்பிக்கை வந்தால் தன்னம்பிக்கை குறையும். எனவே அந்த தன்னம்பிக்கையை நீங்கள் பெறுங்கள். நீங்கள் தலைசிறந்து வாழ்வீர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு யார் வெற்றி பெற்றோம் என்பது முக்கியமல்ல. அது நம்முடைய வாழ்க்கை என்ற உணர்வோடு வாழுங்கள். இன்றைக்கு எவ்வளவு பெருமையாக மகிழ்ச்சியாக இருக்கி றீர்களோ இதுபோல் என்றைக்கும் இருங்கள்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சொன் னதையே நினைவூட்டி என்னுடைய உரையை நான் நிறைவு செய்ய விரும்புகின்றேன்.

ஒரு மனதாயினர் தோழி
மணமக்கள் நன்கு வாழி

என்று சொன்னார்கள். இதற்கு முன்னால் உங்களுக்கு இரண்டு மனங்கள் இருந்தன. ஆனால் இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சியின் மூலமாக நீங்கள் இணையர்களாக ஆனதினுடைய விளைவாக ஒருமனம்தான் உங்களுக்கு. ஆகவே நீங்கள் சிறப்பாக வாழவேண்டும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும். மண மக்களை வாழ்த்தி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றிகூறி விடை பெறுகிறேன். வணக்கம் நன்றி. (விடுதலை – 29-05-2005)


தமிழ்ச் சான்றோர்களை தலை தாழ்ந்து வணங்குகிறேன்

தமிழ் வழிபாட்டு மொழியல்ல அதில் வேள்விகள் செய்தால் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று முழங்கிய நல்லோர்களின் செவிகளிலெல்லாம் இடியோசை விழுந்த வண்ணமாக மீண்டுமொரு நிகழ்வு நடை பெற்றுள்ளது. கடந்த 03.07.2011 ஞாயிற்றுக்கிழமை கொங்கு நகராம் கோவையில் திரையுலக நடிகரின் திருமணம் நடந்தது. அத்திருமணத்தில் தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் வண்ணமாக அத்திருமணமானது தமிழ் முறைப்படி, தமிழ் மரபுப்படி, தமிழ்த் திருமுறைகளாம் தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரிய புராணம் மற்றும் அபிராமி அந்தாதி கந்தர் அநுபூதி ஆகிய செந்நூல்களில் இருந்து செழுந்தமிழ்ப் பாக்களை ஓதி மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது என்ற செய்தியை செவிகளால் கேட்டு தமிழர்களின் மனம் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது என்றால் அது மிகையல்ல. இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் திருமணத்தை நடாத்தித் தந்த பெருமகனார் யார்? என்று உற்று நோக்குவோமானால் அவரும் அவர் சார்ந்த மன்றமுமே வரலாற்றுச் சிறப்புமிக்கவை என தமிழக மக்களால் என்றும் நினைவில் கொள்ள முடிகிறது. கல்லை பிசைந்து கனியாக்க வல்ல திருவாசகம் தந்த மணிவாசகரின் திருப்பெயரைத் தாங்கி 1993ல் தொடங்கப்பட்டு கடந்த 18 வருடங்களாக கொங்கு மண்டலமாம் கோவையிலே பட்டிப் பெருமான் உறையும் திருப்பேரூரில் தமிழுக்காகவும் தமிழ் முறையிலே வழிபாட்டிற்காகவும் முனைவர் இரா. சென்னியப்பனார் அவர்களை தலைவராகவும் திருமுறை அடிமை திரு. பழ. குமரலிங்கம் அவர்களை செயலராகவும் முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு அவர்களை பொருளாலராகவும் ஏனைய சான்றோர்களையும் அடியார் பெருமக்களையும் கொண்டு அரிய செயல்களை செய்து வருவது “மணிவாசகர் அருட்பணி மன்றம்” என்பதை அறிய முடிகிறது.

இம் மன்றத்தின் செயலர் பழ. குமரலிங்கம் அவர்களே இன்று தமிழர் அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கும் படியான ஒரு திருமணத்தை நடாத்தி வைத்த

பெருமகனார் ஆவார். இவரும் இவர் சார்ந்த மன்றமும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை என்று நான் முன்பு குறிப்பிட்டதற்கு வேறு பல சான்றுகளும் உண்டு.

கரூர் மணிமுத்தீசுவரர் கோயில் என்றாலே பலருக்கு இன்றளவும் மனதில் கிலி ஏற்படுவதுண்டு. அதன் வரலாற்றை சுருங்கச் சொல்லுவது இவ்விடத்தில் சாலப் பொருந்தும். கி.பி. 1008 ஆண்டு கட்டப்பட்ட திருமுக்கூடலூர் திருக்கோயிலில் சிதைந்த நிலையில் இருந்த மணிமுத்தீசுவரர் சன்னதியை உழவாரப்பணியின் மூலம் சீர் செய்து தமிழ்த்திருமுறைப்படி குடமுழுக்குச் செய்ய கரூர்த் தமிழர்கள் எண்ணம் கொண்டு செயலாற்றினர். இதைத் தடுக்கச் சமசுகிருதப் பற்றுள்ள சங்கரமடம் மற்றும் அந்நாளில் அங்கிருந்த பூசகர்கள் சங்கமும் இணைந்து பணி செய்தனர். தமிழ் முறைத் திருக்குடமுழுக்கு விழா நடத்தக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியில் தமிழில் குடமுழுக்குச் செய்ய ஆகமத்தில் சொல்லப்படவில்லை. மேலும் முறையாக அனுமதி பெறவில்லை என பல காரணங்களைக் காட்டி விழாவை தடுத்து நிறுத்துவதில் முனைப்பாக இருந்தனர்.

2002 ஆண்டு செப்டம்பர் திங்கள் 5 -ம் நாள் சங்கரமடத்திலிருந்து சங்கராச்சாரியார் தமிழ்க் குடமுழுக்கு அனுமதிக்கக் கூடாது எனச் சொல்லி கோயில் அதிகாரிகள் சங்கராச்சாரியாரின் கடிதத்தை காட்டியபோது தான் தமிழ்ச் சிவனடியார்களும் ஊர்ப் பொதுமக்களும் ஒன்று கூடி தமிழ்த் திருமுறை வழிபாட்டுரிமை பாதுகாப்பு மாநாடு நடத்துவதென முடிவு செய்து மாநாட்டிற்கு தமிழறிர்கள் முனைவர் முனி. தெய்வநாயகம்.  வா. மு. சேதுராமன் ஆகியோர்களை அழைப்பதென முடிவு செய்யப்படுகின்றது. செப்டம்பர் 7-ம் நாள் செய்தியாளர்கள் கூட்டம் நடத்தப்பட்ட போது தான் தமிழ் சமுதாயத்திற்கு வந்த தீங்கை உலகமெங்கும் வாழ்ந்த தமிழர்கள் உணர்ந்தனர்.

செப்டம்பர் 8-ம் நாள் தமிழ்த்திருமுறைக்கு வழிபாட்டு உரிமை கேட்டு மாநாடு நடத்தப்பட்டு எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் குடமுழுக்கை தமிழ்த் திருமுறைகளை மட்டுமே ஓதி செய்வதென முடிவும் செய்யப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் சிவனடியார்கள் தமிழ் அமைப்பினர் ஊர்ப் பொதுமக்கள் ஆகியோர்களை வைத்துக் கோயில் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தித் தமிழ்முறையில் குடமுழுக்கு விழா செய்யக்கூடாது எனச் சொல்லுகின்ற வேளையிலே அந்நாளின் திருச்சி காவல்துறை ஆணையர் மிரட்டல் ஒன்றையும் விடுக்கின்றார். அது யாதெனில் காவல்துறையிடம் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி பெறவில்லை என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் பயமுறுத்திகி14றார்.

அன்று ஆறு மணியளவில் தமிழ்க்குடமுழுக்கை நடத்த அனுமதிக்கக்கோரி அடியார் பெருமக்கள் சிவ. முத்து. சிவ. ராசேசு என்ற இருவர் நடத்திய போராட்டம் கண்டு தமிழ்நாடே அதிர்ந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. மேற்கண்ட அடியார் பெருமக்கள் இருவரும்

“செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!”

என்ற வாக்கிற்கிணங்க தாய்த்தமிழ் நைந்து போகும் நிலை வந்தால் நாங்களும் நைந்து உயிரை மாய்த்துக் கொள்வோம் எனச் சொல்லி தொலைத் தொடர்பு கோபுரத்தின் மேல் ஏறி தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தனர் என்றால் என்னே சொல்வது அவர்களின் தமிழ்ப் பற்றை…

2002 செப்டம்பர் 9-ம் நாள் தமிழறிஞர்கள் முனி. தெய்வநாயகம். வா. மு. சேதுராமன் ஆகியோர்களின் முன்னிலையில் சங்கரமடத்தின் தாக்குதல். தமிழேகூடாதென்ற பூசகர்கள் காவல்துறையின் பயமுறுத்தல் ஆகிய பல்முனைத் தாக்குதல்களுக்கிடையில் தமிழ்க்குடமுழுக்குப் பணியைச் செய்த பெருமகனார் நாம் மேற்கண்ட மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் செயலர் பழ. குமரலிங்கம் அவர்களே ஆவார்.

“தமிழக வரலாற்றில் இழந்த தமிழ்க் குடமுழுக்கு உரிமையை மீட்டு புதிய வரலாற்றை கரூரில் நிகழ்த்தும் வகையிலும் தமிழ்முறைக் குடமுழுக்குக்கு தடை போட்டவர்களின் தரங்கெட்ட செயலைத் தூள்தூளாக்கி தமிழ்த்திருமுறைகள் ஓதி பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றத்தினர் தமிழ்க்குடமுழுக்கு விழாவை நூற்றுக்கணக்கான மக்கள் புடை சூழ நடத்திக் காட்டினர்”

என்பது அன்றைய நாளிதழ்களில் வந்த செய்தியாகும். இப்படிப்பட்ட வரலாற்றை தன்னகத்தே கொண்டவர்கள் மணிவாசகர் அருட்பணி மன்றத்தார் என்பதை தமிழ்நாடறியும். இம்மாதத் தொடக்கத்திலே கோவையில் நடந்த திருமணமானது எவ்வாறு நடந்தேறியது என மக்களும் ஊடகங்களும் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிய போது தான் உறங்கிக் கொண்டோரெல்லாம் விழிப்படைந்தனர். அத்திருமணத்தின் போது திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு திருநீரு அணிவித்தல் ஐங்கரன் வழிபாடு காப்பணிவித்தல் அம்மையப்பர் வழிபாடு எரியோம்பல் தாய் தந்தையர் வழிபாடு கொடுப்பதும் கொள்ளுதலும் திருமாங்கல்ய வழிபாடு மங்கல நாண் அணிவித்தல் மாலைமாற்றி அணிவித்தல் மணவறையைச் சுற்றிவரச் செய்தல் ஆன்றோர் ஆசி வழங்குதல் கதிரவன் வழிபாடு என ஒவ்வோர் நிகழ்ச்சியையும் பழ. குமரலிங்கம் அவர்கள் நடத்தியதை ஊடகங்கள் காட்டிய போது கண்களில் ஆனந்த நீர் சொரிந்து இதிலும் தாய் தந்தையர் வழிபாட்டின் போது

“ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க

ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த் தோன்றாந் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே ”

என்ற பாடலையும்

“அப்பன் நீ! அம்மை நீ! ஐயனும் நீ!

அன்புடைய மாமனும் மாமியும் நீ!

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ!

ஒரு குலம் சுற்றம் ஒர் ஊரும் நீ!

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ!

துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ!

இப்பொன் நீ! இம்மணி நீ! இம்முத்தும் நீ!

இறைவன் நீ!ஏறு ஊர்ந்த செல்வன் நீ! ”

என்ற நாவுக்கரசரின் பாடல்களை ஓதியதின் சிறப்பை என்னே வென்று சொல்வது. வார்த்தைகள் தொண்டைகுள்ளேயே முடங்கி வெளியே வர இயலாதபடி ஆனந்தக்கூத்தை என்னுள் உணர்ந்தேன். வடமொழி வித்தர்கள் செய்யும் திருமணங்களின் போது தாய் தந்தையர் வழிபாட்டில் தாய் தந்தையரை வணங்கத்தக்க பாடலை பாடுவோர் எத்தனைப் பேர்கள் என அத்தகைய முறையில் திருமணங்கள் செய்து கொண்டோர் எண்ணத்தகுந்தது இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

கொடுப்பதும் கொள்ளுதலும் நிகழ்ச்சியில் மணமகளின் பெற்றோர் எங்கள் அன்புடைய மகளைத் தங்களுடைய பண்புடைய மகனுக்குத் திருமணம் செய்தளிக்கிறோம் என்றும் மணமகனின் பெற்றோர் எங்கள் பண்புடைய மகனுக்குத் தங்களுடைய அன்புடைய மகளைத் திருமணம் செய்து கொள்கிறோம் என்று சொல்லிய போது பெற்றோர்களின் உள்ளத்திலும் திருமணத்திற்கு வந்திருந்த ஆன்றோர்களின் மனங்களிலும் அவர்கள் சொல்லக் கேட்ட மக்களின் மனமும் நெகிழ்ந்தது. அவரவர் தாய் மொழியில் வழிபாடு நடத்துவதால் தானே மக்களுக்குப் புரிகிறது. புரிவதால் தானே உள்ளம் நெகிழ்ந்து பத்தி தழைக்கிறது.

சைவ சமய குரவர்கள் தமிழ் மந்திரங்களைப் பாடி நிகழ்த்திய அற்புதங்களை உலகறியும். அவைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. சங்ககாலத்தில் தமிழகத்தில் மலையில் வாழ்ந்த ஒரு குறவன் செய்த அற்புதத்தை பற்றி சுருங்கக் காண்போம். குறிஞ்சி நிலம் மழை வளம் குறைந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயரம் கொண்டது “மலையில் மழை பெய்க” எனக்குறவர் கட்டளையிட்டனர். மழை மிகப் பெய்தது. அதனை நிறுத்த “மழை மேகம் மேலே செல்க” எனக் கட்டளையிட்டனர். மழை நின்றது. இதனை

“மலையான் கொள்க என்னுயிர் பலிதூஉய்
மாரியென்று மழைமேக்கு உயர்க எனக்
கடவுள் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர்”

என்று புறநானூறு சொல்லுகிறதே… இதனை மேலும் கபிலர் பாடிய ஐங்குறுநூறு நூலில் மூன்றாவது நூறு குறிஞ்சி பகுதியில் குன்றக் குறவன் பத்தின் கீழ் வரும் பாடலில்

“குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
நுன்பல் அழிதுளி பொழியும் நாட
நெடுவரைப் படப்பை நும்மூர்க்
கடுவரல் அருவி காணினும் அழுமே”

என்று குன்றத்தில் வாழும் குறவன் ஆரவாரம் செய்தாலே மழை பொழியும் என்கிறது ஐங்குறுநூறு. மேலும் மருத நில மக்கள் மழை வேண்டி சங்கு நண்டு இறவு வாளை போன்றவற்றை வைகையாற்றில் இட்டு “விளைக பொலிக” எனக் கட்டளை தானே இட்டுள்ளனர். இதனை

“நத்தொடு நள்ளி நடையிறவு வயவாளை
வித்தி அலையில் விளைக பொலிக என்பார்”

என பரிபாடலின் 10-ம் பாடல் நமக்கு காட்டுகிறது. மேற்கண்ட கூற்றுகளை மெய்பிக்கும் வகையில் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் 480-ம் பாடலில்

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம்”

என்று சுட்டிக் காட்டுகிறது. இதன் பொருளாவது நிறைந்த மொழியை உடைய மாந்தர் தமது ஆணையால் சொல்லப்பட்ட மறைந்த சொல் மந்திரமாவது என்பது உரையாசிரியர் இளம்பூரணரின் உரையாகும்.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”

என்பது திருவள்ளுவரின் நீத்தார் பெருமை அதிகாரம் சொல்லும் குறளாகும். நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை நிலவுலகத்தின் கண் அவராணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ‘நிறைமொழி’ என்பது அருளிக்கூறினும் வெகுண்டுகூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தே விடும் மொழியாகும் என்பது உரையாசிரியர் பரிமேலழகரின் கூற்று ஆகும்.

ஆக வடமொழி அன்பர்கள் சொல்லும் மந்த்ரங்கள் வேண்டுமா? தமிழர்கள் சொன்ன மந்திரங்கள் வேண்டுமா? என்ற வகையில் இன்றைய தமிழ் மக்கள் தமிழின் பெருமைகளை தமிழ் வழிபாட்டின் அருமைகளை  தமிழ்த் திருமுறைகளின் சிறப்புகளை உணரத் தொடங்கிவிட்டனர் என்றே சொல்லலாம்.

வாழ்க தமிழ்!

வளர்க தமிழ்த் திருமுறை வழிபாடுகள்!!

தமிழார்வன் ப.


சங்ககாலம் காட்டும் திருமண சடங்குகள்

சங்ககாலம் தொடங்கி திருமணம் ஒரு பெருமைக்குரிய சடங்காகக் கருதப்பட்டிருக்கிறது. மேல் வருணத்தார் மூவர்க்கு மட்டுமே உரிமையாக இருந்த இச்சடங்கை கீழ் வருணத்தாரும் கைப்பற்ற ஒரு காலம் பிடித்தது என்பது தொல்காப்பியம் தரும் செய்தி.

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே”

(தொல் பொருள்- கற்பியல், 3)

தோன்றும் போதே, சமூக உயர்வு தாழ்வு கற்பித்துப் பிறந்த நிறுவனமாகத் திருமணம் இருக்கிறது. சங்க இலக்கியத்தில் காதலும் திருமணமும் உணர்வுகளை வென்றெடுக்கும் கருப்பொருள்கள் ஆகிவிட்டன. சங்க காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் காதல் திருமணமா? பெற்றோர் ஏற்பாட்டுத் திருமணமா? என்பது குறித்துப் போதுமான விவாதங்கள் நடந்துவிட்டன.

தமிழ்ப் பற்றுள்ள அறிஞர்கள் இப்பிரச்சினையைத் தொடும் போதெல்லாம் “சங்க காலத்தில் களவு மணம் பெருவழக்கில் இருந்தது. களவு வாழ்க்கையின்றித் திருமணம் நடைபெறவில்லை என்று கூடக் கூறலாம்” என்ற உணர்ச்சிவசப்பட்ட முடிவுக்கே வருகின்றனர்.

களவு மணம் வழக்கில் இருந்தது என்பது தெளிவான விஷயம். ஆனால் அதுவே பெருவழக்காக இருந்தது என்பதற்கு எது ஆதாரம், சங்க இலக்கியக் காதல் பாடல்களா? அப்படியெனில் கடந்த 50 ஆண்டுத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு ஓர் ஆய்வாளர், “தமிழ்ச் சமூகத்தில் கடந்த 50 ஆண்டுகளாகச் சாதி, மதம் தாண்டிய புரட்சித் திருமணமே பெருவழக்காக இருந்து வருகிறது என்ற முடிவுக்குப் போவது பொருத்தமாக இருக்குமா?

காதல் திருமணம் பெரு வழக்காக இருந்த சமூகத்தில் காதல் பாடல்கள் இத்தனை தவிப்புடனும், தடைகளுடனும் பாடப்பட்டிருக்கக் கூடுமா? இன்னும் அழியாத கண்ணீர்த் தடங்களுடன் பாடல்கள் காட்சி தர வேண்டிய அவசியம் என்ன?

சங்க இலக்கியக் காதல் பாடல்களை ஆய்வு செய்து, அக்காலத்தில் பெற்றோர் ஏற்பாட்டு மணமே பெரு வழக்காக இருந்திருக்க முடியும் என்ற முடிவுக்கு வரும் ஆய்வாளர்களும் உளர் “பெற்றோர் அனுமதி’ திருமணத்தின் மிக ஆதாரமான பிரச்சினையாக இருப்பதை அவர்கள் பல பாடல்களின் வழி எடுத்துக்காட்டுகின்றனர்.

“உன் தாய் யார்? என் தாய் யார்? என வியக்கும் குறுந்தொகைப் பாடல் கூட (பாடல் 40) வழக்கமான நடைமுறையில் இருந்து நம் காதல் விலகியிருக்கிறது பார்! என்ற உணர்வையும் பொருளையும் தானே தருகிறது.

குடும்பம் என்ற சொல் முதலில் திருக்குறளில் தான் இடம்பெறுகிறது. சங்க இலக்கியங்கள் குடி என்ற சொல்லை ஆள்கின்றன. குடி என்னும் சொல், தொழிலாலும் ஒத்த உறவாலும் நெருக்கமுடைய குடும்பங்களின் தொகுதியைக் குறிக்கிறது. (26) என்னும் ஆய்வு முடிவுகளை இங்கு கருதத்தக்கன.

குடி, பெற்றோர் அனுமதி, பொருள் ஆகியவை, சங்ககால திருமணம் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தின. இயக்கின என்பது வெளிப்படை. ‘பெற்றோர் என்பது கூட நழுவுகிற பொதுச் சொல்லாக இருக்கிறது. தந்தையே மகள் திருமணம் முடிவு செய்யும் அதிகாரம் பெற்றிருந்தார். தன்னை முறைப்படி வணங்காதவர்களுக்குத் தன் மகளைத் தந்தை மணமுடித்துத் தருவதில்லையாம்.

“தன்தக, வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்’ (புறநானூறு 338) என்கிறது ஒரு புறப்பாடல் குடிகளுக்கிடையே அல்லது ஒரு குடிக்குள்ளேயே பெற்றோர் ஏற்பாட்டுடன் நடந்த ஒரு திருமண அமைப்பின் இறுகிய தளத்தைக் கீறி, குடி, திணை, ஊர் என்ற எல்லைகளைத் தாண்டிப் ஆண் பெண்ணிடையே காதல் முளை விடுவதும் அந்தக் காதல் பழைய இறுகிய அமைப்பின் சம்மதம் பெற்றுத் திருமணம் புரியத் தவிப்பதும் சங்க இலக்கியம் உயிர் துடிப்புடன் முன்வைக்கும் செய்திகளாக இருக்கின்றன.

“ஒரே பிரதேசத்தைச் சேர்ந்ததாக இருந்தால் களவு மணம் கற்பு மணமாக மாறுவது இலகுவாக இருந்தது” என்கிறார் மனோன்மணி சண்முகதாஸ் இவ் ஆய்வு உண்மை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. சூழல் நுண்ணுணர்வை இந்தியப் பண்பாட்டின் இயல்பாகக் குறிப்பிடுவார் ஏ. கே. ராமானுஜன் சூழலுக்குக் கட்டுப்படாததாக மேற்கத்திய பண்பாடு இருக்கிறது. சங்க காலத்தில் சூழல் உணர்வு என்பது திணை சார்ந்தது. பிரதேசம் சார்ந்தது.

பிரதேசத் தனித்துவம் காரணமாகவே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்கள் பிரிக்கப்பபட்டன. ஒவ்வொரு திணையும் கட்டிக்காத்த நுண்ணுணர்வுகள் பிரதேச தனித்துவங்கள் விரிவான ஆய்வுக்குரியவை காதலை விடக் கூட இந்தப் பிரதேச உணர்வு சில உள்ளங்களில் ஆழமாக ஊன்றியிருக்கிறது. “நெய்தல் தழையைத் தவிர வேறொன்றை ஏற்க மாட்டோம்” எனத் தலைவன் தரும் கையுறை (பரிசுப் பொருள்) மறுத்து நிற்கும் தலைவியின் பிடிவாதம் (ஐங்குறுநூறு 187) நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இன்னொரு பக்கம், அதே நெய்தல் நிலத்தின் ‘சுதந்திரவெளி’ பிரதேசக் கட்டுமானங்களைத் தகர்க்கக் கூடியதாக இருக்கிறது. அது வாணிகம் நடக்கும். கடற்கரையின் சுதந்திரவெளி “நீ என்னைப் பார்க்க வரலாம். தடையில்லை. எங்கள் ஊர்க்காரர்களுக்கே ஒருவரை இன்னொவருக்குத் தெரியாது. பிறர் வருவது யாருக்குத் தெரியப் போகிறது?” என்ற தலைவி தலைவனுக்கு அழைப்பு விடுவது கடற்கரைப் பிரதேசத்தில் சாத்தியமாக இருக்கிறது.

“இனிவரின் தவறும் இல்லை, ஏனையதூ உம் பிறர்பிறர் அறிதல் யாவது தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே’ (நற்றிணை 331)

அது மட்டுமல்ல. அந்தக் கடற்கரைப் பிரதேசத்தில் மகளைக் கடுங்காவல் காப்பளாகவும் தாய் இல்லை. எல்லோருக்கும் வெளியே வேலை இருக்கிறது. “சுறாமீன் தாக்கிய புண் ஆறி, தந்தை மீண்டும் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்று விட்டான். தாய் உப்பை விற்று நெல்லை வாங்கும் பொருட்டு உப்பளம் சென்று விட்டாள். இப்பொழுது வந்தாலும் தலைவி பார்ப்பதற்கு எளியவள் (குறுந் தொகை 269) என்று அனுப்பப்படும் தூதும் நெய்தலின் ‘சுதந்திர வெளிக்குச் சாட்சி.

காளையடக்கித் திருமணம் புரியும் நிகழ்ச்சி முல்லையில் மட்டும் நடப்பது. முல்லையின் தனித்துவமாக இருக்கிறது. ஒவ்வொரு பிரதேசமும் இத்தகைய தனித்துவத்தைப் பெற்றிருக்கிறது.

பிற திணைகளில் தெரியாத பரத்தமையொழுக்கம் மருதத்தில் மட்டும் தெரிவதேன்? என்ற வினாவுக்கு ‘செல்வச் செழிப்பு, பண்புகளில் உண்டாக்கிய குந்தகம்’ என்று ஏற்கனவே ஆய்வுகளில் விடை சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இப்பிரச்சினையை வேறொரு கோணத்தில் பார்க்கிறார் மனோன்மணி மலை, கடல், காடு ஆகிய பிரதேசங்களில் குடிகளின் கூட்டு வாழ்க்கை கட்டுக்கோப்பாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

மருதமோ கூட்டு வாழ்க்கையிலிருந்து குடும்பங்கள் சுதந்திரம் பெற்ற நிலையாகும்.

“நிலையாக ஓரிடத்தில் இருந்து பயிர்ச் செய்து வாழ்ந்த அப்பிரதேச மக்களிடையே குடும்பங்கள் தனித்து வாழ்வு நடத்தக்கூடிய வாய்ப்பிருந்தது என்கிறார் மனோன்மணி. சமூகக் கட்டுக்கோப்பிலிருந்த குடும்பங்களுக்கு கிடைத்த சுதந்திரம் பரத்தமை ஒழுக்கத்திற்கு கதவு திறக்கிறது.

இந்த ரீதியில் சிந்திக்கும் மனோன்மணி “தமிழர் திருமண நடைமுறைகள் பிரதேச சூழலுக்கேற்ப அமைவதும் சாத்தியமாயிற்று என்ற முடிவை எட்டுகிறார்.

நிலங்கடந்து மணம் செய்து கொள்ள சங்க காலத்தில் தடை இல்லை. இருப்பினும் இத்தகைய மணங்கள் பலவாகக் காணப்படவில்லை என்று முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியம் கருதுவதும் குறிப்பிடத்தக்கது. சமூகவியல் நோக்கில், சங்கத் திருமணங்களை நிலப்பரப்பு சார்ந்த அகமணம் (territorial endogamy) என வரையறுப்பது பொருத்தமாகப்படுகிறது.

இந்தக் கருத்துக்கு முரணாக உள்ள பாடல்களும் இருக்கத்தான் செய்கின்றன. சிறு வயது முதல் சண்டையிட்டு, ஓடிப்பிடித்து விளையாடி ஒன்றாக வளர்ந்தவர்களும் கூட பெற்றோர் சம்மதம் கிடைக்காமல் உடன் போக்குத் திருமணம் மேற்கொள்ளும் நிலை (குறுந்தொகை 229) ஏற்படுவதையும் காண்கிறோம்.

நிலப்பரப்புக்குள் நெருங்கிய உறவுக்குள், நிகழ்ந்த காதலுக்கும் அனுமதி கிட்டவில்லை. திருமண முடிவுகளில் நிலப்பரப்புக்கும் மேலான முன்னுரிமை பொருளாதாரத்துக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டதை ஒருவாறு நாம் யூகிக்கலாம். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் திருமணத்தை உறுதி செய்ய எவ்வாறு தடைகளாக அமைந்து விட்டன என்பதை நற்றிணை 45வது பாடல் விளங்குகிறது. ‘மீன் எறி பரதவர்மகள்”

கடுந்தேர்ச் செல்வன் மகனை மணப்பதில் உள்ள தடைகளை அப்பாடலில் காண்கிறோம்.

புலவு நாற்றம் உள்ள தங்களுடைய சிறுவாழ்க்கையைத் தாழ்வு மனப்பான்மையோடு தலைவி தலைவனோடு பகிர்ந்து கொள்வது மனதைத் தொடுகிறது.

ஊர், பெற்றோர் ஆகிய குறுக்கீடுகளுக்குப் பணியாமல் காதலின் சக்தியால் ஆபத்துக்களைத் தாண்டிப் புறப்படுகிறது. உடன் போக்குத் திருமணம் இன்று சாதி மதங்களைத் தாண்டி நடைபோடுகிற திருமணங்கள் எடுத்து வைத்த முதல் எட்டாக உடன்போக்குத் திருமணம் திகழ்கிறது. துணிச்சலின் மறுபக்கமாகப் பெண்ணின் பாதுகாப்பு குறித்த அச்சமும் உடன் போக்கில் வெளிப்படுகிறது.

“முலை தளர்ந்து கூந்தல் நரைத்து இவள் முதியவளாகும் போதும் இவளைக் கைவிட்டு விடாதே’ (32) என்று கைகூப்பி வழியனுப்பும் தோழியின் கூற்று இப்பயத்தைப் பிரதிபலிக்கிறது. காதலித்தவளைக் கைப்பிடிப்பதற்காக “மடலேறி நடக்கும் திருமணம் மிரட்டல் திருமணமா? அல்லது காதல் போராட்டமா? என்பது குறித்த முடிவுக்கு வரமுடியவில்லை. இத்தகைய போராட்டம் பெண்ணின் சம்மதத்துடன் தான் நடக்கிறதா என்றும் அறிய முடியவில்லை.

ஆனால் மடலூர்தல் பெண்ணின் பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்த “பாண்டியனுக்குத் திறை செலுத்துவது போல, மடலூர்ந்தவனுக்கு அவர்கள் பெண்ணைத் தருகிறார்கள் (33) நீராட்டுல், சிலம்பு கழிதல், அலங்காரம் செய்தல் வெண்ணூல் கட்டுதல், மலர், சூடுதல், மண அடுப்பில் பால் காய்ச்சுதல் எனச் சங்ககாலத் திருமணச் சடங்குகள் எல்லாம் பெண்ணை மையப்படுத்தியவையே வாழந்தும் கூட பெண்ணுக்குத்தான்” கணவன் விரும்பும் மனைவியாக இரு” (34) என்பது தான் வாழ்த்து.

பெண்ணுக்கு ஒரு விலை தந்து (நறுநுதல் அரிவை விலை, அகம், 90) தண்டூன்றிய கையும் நரைத்த தலையும் உடைய பெரியோர்களைக் கொண்டு பெண் வீட்டுக்கு வந்து மணம் பேசி, முடிக்கும் வழக்கம் (குறுந், 146) அதாவது பெண்ணைத் தேடி வரும் வழக்கம் அகப்பாடல்களில் தெரிகிறது. புறப்பாடல்களில் தெரியும் திருமணங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன.

கபிலர் பாரிமகளிர்க்குத் திருமணம் முடிக்க, பாரி மகளிரோடு அரண்மனைகளில் ஏறி இறங்குகிறார். அரசன், பெண்ணைக் கேட்டுப்பெறாமல், பேரெடுத்துப் பெறும் வழக்கமும் புறத்தில் தெரிகிறது. (புறம் 341) அகமும் புறமும் ஒன்றையொன்று எதிரொலிக்கவில்லை. முரண்பாடுகள் பளிச்சிடுகின்றன.

அகத்தோடு புறத்தையும் இணைத்துத்தான் பழந்தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும். பெண் கேட்கும் வழக்கத்தைத் ‘தூது’ என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிக்கிறது. வீடு வந்து பெண் பார்க்கும் வழக்கத்தை அறிய முடியவில்லை. பொது இடங்களில் திருவிழாக்களில் பெண் பார்க்கும் வழக்கம் ஒருவேளை இருந்திருக்கலாம்.

விழாவில் துணங்கைக் கூத்தாடும் பெண்களையும் அவர்களில் தாங்கள் விருப்பப்பட்ட பெண்களைப் பெறப் போர் செய்யும் மள்ளர்களையும் ஒரு சேரக்காட்டும் குறுந்தொகைப்பாடல் (பாடல் 364) பொது நிகழ்ச்சிகளில் பெண் தேடும் வழக்கத்திற்கு ஆதாரமாக இருக்கிறது.

இன்றும் கூட சில சமூகத்தார், திருவிழாக்களில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியையும் சேர்த்தே நடத்துவது நன்கு அறியப்பட்ட செய்தியே.

திருமணச்சடங்கு பெண்ணுக்கான தேவை என்பது முன்னரே கூறப்பட்டது. சங்க இலக்கியத்தில் இந்தத் தேவை, அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. என்னைப் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை, என்னை மணந்துகொள்” (நயவாய் ஆயினும் வரைந்தனை கொண்மோ ஐங்குறுநூறு 276) என்றும் “மனைவி என்ற ஸ்தானத்தைக் கொடு” (பெண்டெனப் படுத்தே ஐங்குறு 276) என்றும் பெண் ஆணிடம் கெஞ்சிக் கதறுவது.

பெண்ணின் திருமணத் தேவையை உறைக்கும்படி வெளிப்படுத்துகிறது.

திருமணநாள் பெண்ணுக்கு எவ்வளவு இனிய நாள் என்பதை விளக்க வதுவை நாளினும் இனியனால் நமக்கே” (அகம் 352) என்ற ஒரு வரி போதுமானது.

தனித்திருக்கும் பெண் மீதான சமூகப்பார்வை, பெரும்பாலும் அனுதாபம் போர்த்திய வக்கிரமாகவே இருக்கிறது. திருமணம் ஆகாத பெண், திருமணம் ஆகிக் கணவனைப் பிரிந்திருக்கும் பெண் ஆகியோர் மீது சாணி அடிப்பது சமூகத்தின் கைவந்த கலை.

“கெழமானாலும் கெட்டானாலும் கட்டிக்கிட்டவ பிழைப்பாள்” “பத்து வயசுக்கு மேலே ஒரு றையனுக்காவது தள்ளி விடணும்”

என்ற சொல்வடைகள் சமூக வக்கிரத்தின் வெளிப்பாடுகள்.

தவறு செய்பவனாக இருந்தாலும், கணவனோடு தான் சேர்ந்து வாழ வேண்டும். பெண் மட்டும் கைக்குழந்தையோடு தனியே இருந்து உண்டு வாழும் வாழ்க்கையால் பயன் என்ன? என்று அநானூற்றுப்பாடல் (35) “தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்” எனப் பெண்ணைச் சார்ந்தோர் கூச்சமின்றி வற்புறுத்தும் வார்த்தைகளும் இப்பாடலில் இடம் பெறுகின்றன.

குழந்தை பெறாத பெண்ணும், குடும்பத்தின் அங்கீகாரம் இழப்பது நடைமுறையாக உள்ளது. இதற்குப் பயந்து அவள் கணவனின் மறுமணத்தையும் வரவேற்று ஏற்கக் கூடிய நிலை உள்ளது. “நின்னினும் சிறந்தனள் எமக்கே” (ஐங்குறு 292) என்று தலைவனுக்கும் மேலாக அவனது இரண்டாவது மனைவியை நேசித்து வரவேற்று முதல் மனைவி பேசும் வார்த்தைகளில் வெளிப்படுவது பெண்ணின் குரல் தானா? என்ற ஐயம் இயல்பாக எழுகிறது.

காலந்தோறும் திருமணங்கள் … சங்க இலக்கியத்துக்குப் பின்னர் வந்த இலக்கியங்களின் வழி நாம் அறியும் திருமணங்களில் பெரும்பாலானவை செல்வந்தர்கள். அரசர்கள், கடவுளர், கடவுளடியார் ஆகியோரின் திருமணங்களே, புதிய சடங்குகளையும் நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தித் தடபுடலாக நடந்த அந்தத் திருமணங்களைத் தமிழ்த் திருமணங்களின் மாதிரிகளாகக் கொள்ள இயலாது.

இருப்பினும் அவ் இலக்கியங்களின் வழி சில சந்தேகங்கள் நிவர்த்தி ஆகின்றன. அத்தை மாமன் வழி உறவுத் திருமணங்கள் சங்க காலத்தில் இருந்தனவா என்ற கேள்விக்கு விடை சங்க இலக்கியத்தில் இல்லை. மணிமேகலை அத்தகைய உறவுத் திருமணத்தை உறுதி செய்கிறது. தருமதத்தன் தன் மாமன் மகள் விசாகை யைத் திருமணம் முடிப்பது பற்றிய செய்தியை மணிமேகலை தருகிறது.

சங்க காலத்தில் தாலி இருந்ததா என்பது குறுத்தும் சந்தேகம் இருந்தது. பின்னமை நெடுவீழ (நெடுநல்வதடை) “ஈகையறிய இழையணி (புறநானூறு 127) போன்ற தொடர்கள் தாலியைக் குறிக்கின்றனவா? என்றறிய ஆய்வுகள் நடந்தன. பின்னர் வந்த பெரியபுராணம், கோதில் மங்கல நூல் தாலி, (குங்கிலியக்கலைய நாயனார் புராணம்) என்று தெளிவுபடத் திருமணத்தில் தாலியை நிலை நிறுத்தியது.

சமூகத்தில் மதிப்புமிக்கோர் புரிந்த திருமணங்கள் ஆதலால், விமரிசையுள்ள பொது நிகழ்ச்சிகளாகவே இது நடந்தேறின. கண்ணகி – கோவலன் திருமண விழாவில் அரச வாழ்த்தும் இடம்பெற்றது. திருமண விழாக்களில் அரசியலும் இடம்பெற்றது. ஒரு புதிய மரபே.

வீதி ஊர்வலமும் ஒரு புதிய நிகழ்ச்சியாகத் திருமணத்தில் இணைகிறது. சிலப்பதிகாரத்தில் மங்கல அணிக்கு ஊர்வலம்; சீவக சிந்தாமணியில் மணப்பெண்ணின் ஊர்வலம் (கோவிந்தையா), பெரிய புராணத்தில் மாப்பிள்ளை ஊர்வலம் (திருஞானசம்பந்தர்) மங்கல அணி ஊர்வலத்திலும், மணப்பெண் ஊர்வலத்திலும் தோன்றாத வரவேற்பு முறைகள் மாப்பிள்ளை ஊர்வலத்தில் தோன்றின.

ஊர்வலமாக வரும் மணமகனின் காலைக் கழுவி, மணமகளின் பெற்றோர் மணமண்டபத்துக்குள் வரவேற்பதாக பெரியபுராணம் அம்மி மிதித்தல், மணமகள் நெற்றியில் குங்குமம், அப்பல் போன்ற புதிய பழக்கங்கள் தமிழர் திருமணத்திற்குள் நுழைந்தமையை ஆண்டாளின் திருமணக் கனவுப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

மணவறை, வேள்விமன்று திருமண மண்டபம் போன்ற சொற்களம் இடைக்கால இலக்கியத்தில் புழக்கத்துக்கு வரலாயின. மணவறையில் நீர் விளக்கு இவற்றோடு அரசிலை, தர்ப்பைப்புல் ஆகியவையும் இடம்பிடித்தன. சோதிடர்கள் ஆராய்ந்து கூறிய நல்ல நாளில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடக்கும் நேரத்தைப் பழுதில் நற்பொழுது என்கிறது பெரிய புராணம். “குலம் பேசியே திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டன. நிலப்பரப்பு சார்ந்த மணம், குலம் கோத்திரம் சார்ந்த மணமாக வடிவம் மாறியது. பெண்ணை தாரை வார்த்துத் தருதலும் தீவலம் வரும் சப்தபதிச் சடங்கும். இடைக்காலத்தில் தான் பிரபலம் பெறுகின்றன.

தழைவிலை, அரிவை விலை எனச் சங்க காலத்தில் பல பெயர்களில் நிலவி வந்த ‘மணப்பெண் பரிசு’ (பரிசம்) படிப்படியாகக் கைவிடப்பட்டு மணமகனுக்கான சீதனமாக மாற்றம் பெறுகிறது. பரிசம், சீதனம், இரண்டுமே பெண்ணை ஒரு பொருளாகக் கருதிய நடைமுறைதான்.

முன்னதில் பெண்ணுக்கு ஒரு மரியாதை இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. சீதனமோ ஒரு சமூகக் குற்றமாகும். குணமலையின் தந்தை பொன் பொருளோடு இளம் பெண்களையும் சீவனுக்குச் சீதனமாகத் தந்ததாகச் சீவகசிந்தாமணி பாடுகிறது.

“அருள் இலஞ்சி வேலர் தமக்கொரு பெண்ணைக் கொடுத்தோம். ஆதீனத்து மலைகளெல்லாம் சீதனமாகக் கொடுத்தோம்”

என்று சீதனம் தந்த பெருமைகளைக் குதூகலித்துப் பாடுகிறது. குற்றாலக் குறவஞ்சி.

இடைக்காலத்தமிழர் திருமண முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களில் முற்போக்கான மாற்றம் எதுவுமில்லை என்பது தெளிவு.

புரோகிதர் வைத்து திருமணம் நடத்துவது சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது ஆகிய இரு நடைமுறைகளை மட்டும் கடுமையாக எதிர்த்து பிற சடங்குகளில் மிகவும் நெளிவு சுளிவான அணுகுமுறையை மாநாடு கடைப்பிடித்தது. தாலி கட்டல், தீவலம் வருதல்,அம்மி மிதித்தல் எல்லாம் தமிழர்களுக்கே உரிய சடங்குகள் என்று மறைமலையடிகள் உறுதிபடச் சொன்னார்.

“சடங்குகள் எப்படியாயினும் இருக்கட்டும்” என்றே பிற அறிஞர்களும் சொன்னார்கள். சாதீயத் தடைகள், பலதாரமணம் போன்ற சமூகப் பிரச்சினைகளை மாநாடு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை” அந்தணப் புரோகிதர்களின் இடத்தில் சைவப்பெரியோர், வட மொழி மந்திரங்களுக்கு மாறாகத் தமிழ்ப் பாடல்கள் என்பதே சைவர்கள் உருவாக்கிய தமிழ்த் திருமண முறை (39) என்கிறார் ஆ. இரா. நெடுஞ்செழியன் எனவே முற்போக்காளர் மத்தியில் இத் திருமண மாநாட்டுக் கருத்துரைகள் தாக்கத்தைஏற்படுத்தவில்லை.

”தமிழில் நடக்கும் திருமணம் எல்லாம் தமிழர் திருமணம் ஆகிவிடாது (40) என்று மறுக்கும் நிலையே உருவானது மா. இராசமாணிக்கனார் (தமிழர் திருமண நூல்) சு. வித்தியானந்தன் (தமிழர் சால்பு) பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார் (தமிழ்த் திருமணம்) ஆகியோர் எழுதிய நூல்களிலும் சடங்குகளைத் தமிழ்ப்படுத் தும் முயற்சியே முனைப்பாக இருந்தது.

சடங்குகளைக் கைவிடுவது, முற்போக்கான மாற்றங்களைக் கொண்டுவருவது, திருமணத்தில் கலந்துவிட்ட சமூகக் குற்றங்களைச் சாடுவது போன்ற சிந்தனைகள் எல்லாம் அக்காலத்திற்குப் புதியன ஒன்றும் அல்ல. ஆனால் தமிழ்த் திருமணம் குறித்து எழுதப்பட்ட நூல்களில் அக்குரல் ஒலிக்கவில்லை.

தமிழறிஞர்கள் முன்வைத்த பழைய சடங்குகளே நிறைந்த தமிழர் திருமண முறைக்கு மாற்றாக, திராவிடர் புரட்சித் திருமணம் என்று ஒரு புதிய வடிவத்தைச் சிந்தித்தார். பாவேந்தர் பாரதிதாசன் தாலிக்குப் பதிலாக மோதிரம் மாற்றுதலை அறிமுகப்பத்தினார் கவிஞர். அறிஞர் பெருமக்கள் மணமக்களை வாழ்த்தும் நிகழ்ச்சிகளுக்கும் அவர் முக்கியத்துவம் தந்தார்.

“உள்ளம் ஒப்புவது மணமாம்” என்ற கருத்தை வலிமையானச் சொன்னவர் பாவேந்தர்.

“கொடியச் சாதிய நாய் குலைக்கு முன்னே நடந்து வா அன்னமே” என்று அவருடைய பாடலில் தலைவன் தலைவியை அழைப்பான். தமிழறிஞர்கள் சிந்திக்க மறந்த சமூகப் பிரச்சினைகளை எல்லாம் சிந்தித்தவர் பாரதிதாசன்.

அவருடைய திருமணத் திட்டத்தில் இருந்த ஒரே குறை மனைத்தக்க மாண்புடையாள் ஆக வேண்டும். தன்னையும் காத்து தன் கொழுந்தனையும் காக்க வேண்டும் என்று மணவிழா அறிவுரைகள் எல்லாம் பெண்ணை நோக்கியே இருப்பது” கணவன் விரும்பும் பெண்ணாக இரு” என்ற சங்க கால வாழ்த்தின் தொடர்ச்சியாகவே பாரதிதாசன் வாழ்த்தும் அமைந்தது.

நன்றி:- இணையம்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply