ஜெயலலிதா ஆட்டோகிராப்!

ஜெயலலிதா ஆட்டோகிராப்!

20 Feb 2014

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு  உருகும் ஜெயலலிதா, 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்…? முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2002 ஏப்ரல் 16ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தில், பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி இடம்பெற்றிருந்த அனல் வரிகளின் ஃபிளாஷ்பேக் இது..!

“படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்திய திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.

ஸ்ரீலங்கா நாட்டில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகளையும், அந்த நாட்டைச் சார்ந்த தீவிரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். 10.4.2002 அன்று சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததையும் பார்த்து, தமிழக மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது குறித்து நழுவும் தோரணையில் பிரபாகரன் தெரிவித்த கருத்துக்கள் பற்றி இந்தச் சட்டமன்றப் பேரவை மிகவும் கவலை கொள்கிறது.

ஜெயலலிதா ஆட்டோகிராப்!

1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் அன்று, ராஜீவ் காந்தி மிகவும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையும், இந்தக் கொடூரமான செயலில், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் உறுதியாக சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதையும் இந்த நாடு இன்னும் மறந்துவிடவில்லை.

1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சிகளின் காரணமாக, மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தடை செய்தது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால், நமது நாட்டுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தை நன்கு உணர்ந்த மத்திய அரசு, அண்மையில் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டம், அதாவது பொடா சட்டத்தின் கீழ் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது.

பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் 14.4.2002 அன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி என்றும், அது பற்றி வழக்கு இன்னும் நடைபெற்று வருவதால், அது முடியும் வரை கருத்து ஏதும் கூற இயலாது என்றும் தெரிவித்திருப்பது முற்றிலும் புதிராக உள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றம். ராஜீவ் காந்தி அவர்களின் கொலையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்தக் கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட முதல் குற்றவாளி என்ற அறிவிப்பையும் செய்துள்ளது.

ஜெயலலிதா ஆட்டோகிராப்!

முதலமைச்சர் ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது, அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு, ஸ்ரீலங்கா அரசோடு தொடர்பு கொண்டு, பிரபாகரனை ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார். ஸ்ரீலங்கா அரசின் அனுமதியை பெற்று, நமது இந்திய ராணுவததை ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்து கொண்டு வர வேண்டும், பிரதமரை கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிரபாகரன், ஸ்ரீலங்காவில் சர்வதேச பத்திரிகையாளர்கள் முன்பு பகிரங்கமாகத் தோன்றி, தனது இயக்கம் ஆயுதங்களைத் துறக்காது என்றும், தனித் தமிழ் ஈழமே தங்கள் கொள்கையாக நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது பற்றி தமிழக மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடந்த கால வரலாற்றையும், அந்த அமைப்பினால் நமது நாட்டுக்கூ ஏற்படக் கூடிய பேராபத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது ஸ்ரீலங்காவில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து இந்தியா அமைதி காப்பது, பிரபாகரனை புனிதப்படுத்தும் ஸ்ரீலங்காவின் முயற்சிக்கு மறைமுகமாக ஒப்புதல் அளிப்பதாக ஆகிவிடுமோ என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள்.

சட்டத்தை மதிக்கின்ற, தேசப்பற்று கொண்ட இந்தியக் குடிமக்கள் யாரும் பிரபாகரன் போன்ற ஒரு கொலைக் குற்றவாளியை தேசத் தலைவராக சித்தரித்து காட்டப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழக மக்களும், மாநிலத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், பிரபாகரன் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்திய நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தினையே கொண்டுள்ளார்கள்.

ஜெயலலிதா ஆட்டோகிராப்!

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அனுதாபமும், ஆதரவு மனப்பான்மையும், ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்பு முற்றிலும் மாறிவிட்டது. அதிலும் அந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்டது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும்தான் என்பது தெரிய வந்தபோது. தமிழக மக்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் அதன் நடவடிக்கைகள் மீதும், ஓர் அச்சம் கலந்த வெறுப்பைக் காட்டத் துவங்கினார். தமிழக மக்களின் உணர்வை எப்போதும் பிரதிபலிக்கும் இந்தத் தமிழக அரசு. அது முதல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தனது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் இந்திய மண்ணில் கால் ஊன்றுவது ஒருபோதும் ஏற்கப்பட மாட்டாது. அனுமதிக்கப்படமாட்டாது. இந்த எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட முதல் குற்றவாளியான பிரபாகரனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசோடு சட்டப்படியாகவும், தூதரக நடைமுறைப்படியும் அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரபாகரனை அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், தமிழக சட்டமன்றப் பேரவை மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

ஸ்ரீலங்கா அரசினால், பிரபாகரனை பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதியோடு, இந்திய ராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது.”

https://www.vikatan.com/government-and-politics/politics/24810-

About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply