முதலமைச்சராக நாளை பதவியேற்கும் ஸ்டாலின் அவர்களது அரசு இமாலாயச் சிக்கல்களை எதிர்கொள்கிறது!
நக்கீரன்
முடி அணிந்த தலையில் அமைதியின்மை இருக்கிறது (Uneasy lies the head that wears a crown) என்பது பிரபல ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் கிங் ஹென்றி IV, பகுதி இரண்டு நாடகத்தில் வரும் வரியாகும். ஒரு அரசன் போன்ற பெரிய பொறுப்புகளையுடைய ஒருவர் தொடர்ந்து கவலையில் இருக்கிறார் அதனால் அவர் சரியாகத் தூங்குவதில்லை என்பது பொருளாகும். தமிழில் சொல்ல வேண்டும் என்றால் தலையில் தங்கத்திலான முடி ஆனால் அரியணை முள்ளாலானது!
பத்து ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் 6 ஆவது தடவையாக தமிழ் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.
முதல்வராகப் பதவியேற்கும் முன்பு ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி, பெரியார் ஈவேரா மற்றும் அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, கோட்டைக்கு செல்லவிருக்கிறார். முதல்வர் இருக்கையில் அமர்ந்ததும் முக்கியமான 4 கோப்புகளில் கையெழுத்திடவுள்ளார்.
1. கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபா4,000 வழங்கும் திட்டம்.
2. தமிழகத்தில் உள்ள அனைத்து நகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
3. “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின்” கீழ் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பெண்களுக்கு திருமண உதவித்தொகை தரப்பட்டுவருகிறது. அப்படி வழங்கப்படும் உதவித்தொகை ரூபா 25,000 இல் இருந்து ருபா 30,000 ஆக உயர்த்துவது. அத்துடன் 8 கிராம் தங்கம் தாலியும் வழங்கப்படும்.
4. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அல்லது வழிபாட்டுத்தலங்களை சீரமைக்க நிதி அல்லது பேறுகால உதவித்தொகை உயர்வு.
மு.க. ஸ்டாலின் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் பதவியேற்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா என்ற கொடிய தொற்று நோய் விசுவருபம் எடுத்துள்ளது. புதன்கிழமை வரை புதிதாக நோய்வாய்ப்பட்ட 24,898 பேர்களோடு மொத்தம் 1,28,311 பேர் கோவிட் – 19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் புதிதாக 6,678 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த தொகை 3,70,596 தொட்டுள்ளது. இறந்தவர் தொகை 14,974 ஆகவும் குணமானவர்கள் தொகை 11,51,058 ஆகவும் இருக்கிறது. போதாக்குறைக்கு உயிர்க்காற்றுத் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் இறக்கும் நிலைமை நீடிக்கிறது.
இது தொடர்பாக கொரோனா தொற்று நோய் அசுர வேகத்தில் பரவுவதை கட்டுப்படுத்த போர்க்கால வேகத்த்தில் நடவடிக்கை எடுக்குமாறு தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் செய்திருக்கிறார். மேலும் தொடருமுன் கடந்த ஏப்ரில் 6 ஆம் தேதி நடந்த தேர்தல் முடிவைப் பார்ப்போம்.
தமிழ்நாடு 15 ஆவது சட்ட சபை தேர்தல் முடிவுகள்
கூட்டணி | கட்சி | தொகுதிகள் | வாக்குகள் | % | வெற்றி 2021 | வெற்றி 2016 |
திமுக | 188 | 17,430,100 | 37.70 | 133 | 89 | |
மதசார்பற்ற | தேசிய காங்கிரஸ் | 25 | 1,976,527 | 4.27 | 18 | 08 |
அணி | வி.சிறுத்தைகள் | 06 | 457,763 | 1.06 | 04 | 00 |
சிபிஎம் | 06 | 390,819 | 0.9 | 02 | 00 | |
சிபிஐ | 06 | 504,537 | 1.09 | 02 | 00 | |
IUML | 03 | 222,263 | 0.48 | 00 | 00 | |
தொகை | 234 | 20,982,009 | 45.70 | 159 | 98 | |
தேசிய முற்போக்கு | அதிமுக | 191 | 15,390,974 | 33.29 | 66 | 136 |
அணி | பாமக | 23 | 1,758,774 | 4.04 | 05 | 00 |
பாஜக | 20 | 1,213,510 | 2.62 | 04 | 00 | |
தொகை | 134 | 18,363,258 | 39.41 | 75 | 136 | |
அமமுக அணி | அமமுக | 165 | 1,085, 915 | 2.34 | 00 | புதிது |
தேமுதிக | 60 | 200,156 | 0.43 | 00 | 00 | |
SDPI | 6 | 28,051 | 0.06 | 00 | 00 | |
AIMM | 3 | 3134 | 0.00 | 00 | 00 | |
தொகை | 234 | 1,317,256 | 2.85 | 00 | 01 | |
மக்கள் நீதி மையம் | 154 | 1,058,847 | 2.45 | 00 | புதிது | |
AISMK | 33 | 89.220 | 0.21 | 00 | 00 | |
நாம் தமிழர் | 234 | 3,041,974 | 6.85 | 00 | 00 | |
Others | 234 | 1037890 | 2.066 | 00 | 00 | |
NOTA | 234 | 345,538 | 0.75 | |||
மொத்தம் | 46,236,492 | 100 | 234 | 234, |
கன்னியாகுமாரி மக்கள் அவைக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயே வசந்த் பாரதிய ஜனதாக் கட்சியில் போட்டியிட்ட பொன் இராதாகிருஷ்ணனை 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். அவருக்குக் 5,76,037 வாக்குகளும் . பொன். இராதாகிருஷ்ணனுக்கு 4,38,087 வாக்குகளம் கிடைத்தன.
இந்தத் தேர்தலில் 234 தொகதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக தன்னைப் பலமாக அடையாளப் படுத்தியுள்ளது. ஏனைய அணிகள் பல கட்சிகளின் கூட்டாக அமைந்து பலம் சேர்த்த போது தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கி இம்முறை 6.85 விழுக்காடாக அதிகரித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. 2016 இல் நடந்த தேர்தலில் ஒரு விழுக்காடு வாக்குகளை மட்டும் அந்தக் கட்சி பெற்றிருந்தது.
ஊடகங்களின் கவனத்தை கமல்ஹாசனின் மக்கள் நீதிமையமும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகமும் அதிகம் பெற்றிருந்தாலும் அவற்றைவிட மூன்று மடங்கு வாக்குவங்கியை நாம் தமிழர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். திமுக, அதிமுக இரண்டும் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்தத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக பணத்தை தண்ணீர் போலச் செவழிந்திருந்தன. ஒவ்வொரு தொகுதியிலும் அண்ணளவாக ரூபா 10 கோடிக்குக் குறையாது இரண்டு கட்சிகளும் செலவழித்தன. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை ரூபா 470 கோடி ரூபாயை பணமாகவும் தங்கமாகவும் பரிசுப் பொருட்களாகும் கைப்பற்றியிருந்தது. இதில் பெரும்பான்மை திமுக, அதிமுக இரண்டுக்கும் உரியனவாகும். வாக்காளர்களுக்கு வழக்கம் போல பணம், சேலை, வேட்டி, மது தாராளமாக வழங்கப்பட்டன. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காத கட்சிகளில் நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மையம் இரண்டையும் குறிப்பிட வேண்டும்.
ஸ்டாலின் அவர்களது அமைச்சரவைப் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 34 அமைச்சர்களில் 19 பழைய முகங்களும் 15 புது முகங்களும் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்கள். அமைச்சரவையில் துரைமுருகன் – நீர்பாசனத்துறை, கே.என் நேரு – நகராட்சி வளர்ச்சித்துறை, ஐ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை, பொன்முடி – உயர்கல்வித்துறை, எ.வ.வேலு – நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் –வேளான்துறை, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை, தங்கம் தென்னரசு, தொழில்துறை, தமிழ்வளர்ச்சித்துறை, ரகுபதி- சட்டத்துறை, முத்துசாமி, வீட்டுவசதித்துறை, பெரிய கருப்பன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்தத் தேர்தலில் அவர் மொத்தம் 91,776 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 68,133 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். இதன் மூலம் தனது தாத்தாவை மிஞ்சிய பேரனாக வந்துவிட்டார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதி முதல் முறையாக போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் 35,784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2001ஆம் ஆண்டு தேர்தலில் 4,834 வாக்குகள் வித்தியாசத்திலும், 2006ஆம் ஆண்டு தேர்தலில் 8,526 வாக்குகள் வித்தியாசத்திலும் கருணாநிதி தொடர்ந்து வெற்றி பெற்றார்.
அதிமுக வை சேர்ந்த 11 அமைச்சர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 16 அமைச்சர்கள் வெற்றி பெற்றார்கள். அதிமுகவின் பின்னடைவுக்கு முக்கிய காரணம் அதில் ஏற்பட்ட பிளவு. தினகரனின் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் வாக்குகளைப் பிரித்ததால் அதிமுக 20 தொகுதிகளில் தோல்வியைத் தழுவ வேண்டியிருந்தது.
தேர்தல் காலத்தில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் நேநரகாலம் பார்க்காது தொடர்ந்து ஸிடாலின் பரப்புரை செய்தார். அவர் கடந்து வந்த அரசியல் பாதை கரடுமுரடானது. இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கும் ஸ்டாலின் தனது கடும் உழைப்பால் படிப்படியாக முன்னுக்கு வந்தவர்.
1973 – ஆண்டு தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1976 – பிரதமர் இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய அவசர காலச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, சிறை சென்றார். சென்னை மத்தியச் சிறையில் கிட்டதட்ட ஓராண்டு காலத்தைக் கழித்தார்.
1982 – திமுக இளைஞரணியின் அமைப்பாளராகத் தேர்வானார்.
1984- முதல்முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 1989 ஆம் ஆண்டு மீண்டும் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எனினும் 1990 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் 5 ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாக வகிக்க முடியாமல் போனது
1996 – சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் வெற்றிபெற்றார். அதே ஆண்டில், சென்னை மாநகராட்சி மேயராகவும் தேர்வானார்.
2001 – ஆண்டு மீண்டும் சென்னையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002 – இரட்டைப் பதவிக்கு எதிராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டம் கொண்டுவர, மேயர் பதவியைத் துறந்து சட்ட சபை உறுப்பினர் பணியைத் தொடர்ந்தார்.
2003 – திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
2006 – சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றதை அடுத்து முதன்முறையாக உள்ளாட்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2008 – திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009 – துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
2011 – கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்ட சபைக்கு சென்றார்.
2016 – மீண்டும் கொளத்தூர் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார்.
2017 – திமுக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019 – நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளில் 38 இடங்களை திமுக கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 290 இடங்களில் போட்டியிட்டு 213 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சென்றமுறை 209 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இருந்தும் திரிணாமல் கட்சித் தலைவி மமதா பானர்ஜி போட்டியிட்ட நந்திக்கிராம் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 2016 இல் நடந்த தேர்தலில் 03 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றிருந்தது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி 16 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், பாஜக 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. என்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் இரங்கசாமி ஆட்சி அமைக்க இருக்கிறார்
கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணி 93 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறது. ஒரே கட்சி அடுத்தடுத்து ஆட்சி அமைப்பது இதுவே முதல் தடவையாகும். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய சனநாயக முன்னணி 40 இடங்களிலும் ஏனையோர் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
முதலமைச்சராக நாளை பதவியேற்கும் ஸ்டாலின் அவர்களது அரசு இமாலாயச் சிக்கல்களை எதிர்கொள்கிறது. கொரோனா, பொருளாதாரச் சிக்கல்கள், ஊழல், கையூட்டு, ஏழ்மை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் எல்லாவற்றிற்கும் மேலாக மத்தியில் அசுரபலத்துடன் இருக்கும் பாஜக அரசு எனக் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறார்.
அரசை இயக்குவது என்பது, ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் நிருவாகத்தை நடத்துவது போன்றது. அதை வெற்றிகரமாகச் செய்யத் வினைத் திறமை தேவை. அதுதான் மு.க.ஸ்டாலினின் பலம்.
Leave a Reply
You must be logged in to post a comment.