தமிழீழத்தை எதிர்த்தவர்கள் இப்போது சீன ஈழத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் – முன்னாள் அமைச்சர் இராஜித சேனரத்தின!
நக்கீரன்
பூனைக் குட்டியை பையில் இருந்து வெளியில் விட்டு விட்டார்கள் என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. மறைத்து வைத்த ஒரு பொருள் வெளியே வந்து விட்டது என்பது இதன் பொருளாகும்.
புதிதாக உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரை நிருவாகிப்பதற்கு கோட்டாபய இராசபக்ச அரசு ஒரு சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதனை எதிர்த்தும் ஆதரித்தும் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதில் ஒரு வழக்கு சனாதிபதியின் செயலாளர் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. அந்த வழக்கில் செயலாளர் சார்பாக வாதாட பிரபல சனாதிபதி சட்டத்தரணி றொமேஷ் டி சில்வா அமர்த்தப்பட்டுள்ளார். இவர் அரசுக்கு மிக நெருக்கமானவர். ஒரு புதிய அரசியல் அமைப்பை எழுத நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரும் இவரே.
இந்த வழக்கு கடந்த புதன்கிழமை (ஏப்ரில் 21) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது றொமேஷ் டி சில்வா தனது வாதத்தை முன்வைத்தார்.
“இலங்கை தலைமை நீதிபதி ஒரு வெளிநாட்டவர் ஆக இருக்கலாம். அதற்கான தடை அரசியலமைப்பில் இல்லை” என்றார். இதன் பொருள் சனாதிபதி நந்தசேனா கோட்டாபய கொழும்புத் துறைமு நகரை சீனா நிருவகிப்பதற்கு அனுமதி வழங்கலாம். அதற்கு அரசியலமைப்பில் தடை இல்லை என்பதாகும்.
பிரதம நீதியரசர் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட நடுவராயம் முன் மூன்று மணி நேரம் தனது வாதத்தை சமர்ப்பித்த றோமேஷ் டி சில்வா, தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் கூட இலங்கை அல்லாதவர்களாக இருக்கலாம் என்று கூறினார். இதற்கு விதிவிலக்கு நகர மேம்பாட்டு ஆணையம் (Urban Development Authority (UDA) தொடர்பான சட்டம். இந்தச் சட்டத்தில் வெளிப்படையாக ஒரு தடை இருப்பதால் நகர மேம்பாட்டு ஆணையம் தவிர ஏனைய சுயாதீன (மாநில) நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு குடிமக்களை நியமிக்க முடியும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30-1 மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், விசாரணையாளர்கள் கொண்ட ஒரு கலப்பு (hybrid) நீதிமன்றப் பொறிமுறையை சிறிலங்கா அரசு உருவாக்க வேண்டும் எனக் கேட்டிருந்தது.
இந்த ஏற்பாட்டுக்கு சனாதிபதி கோட்டாபய இராசபக்சவின் அரசு மிகக் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்பு வழக்கறிஞர்கள், புலனாய்வாளர்கள் மற்றம் வழக்குத் தொடுநர்கள் போன்றோரை நியமிப்பது நாட்டின் இறையாண்மையையும் அரசியலமைப்பையும் மீறுவதாகும் என்ற வாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்வைக்கப்பட்டது.
சிறிலங்கா பொதுசன பெரமுனா மற்றும் ‘கூட்டு எதிர்க்கட்சி’ ஆகியன வெளிநாட்டு நீதிபதிகளின் ஈடுபாட்டிற்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தின. சிறிசேனா – இரணில் அரசு நாட்டின் இறைமையை மீட்டெடுப்பதற்காக உயிரைத் தியாகம் செய்த இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது என்று குற்றம் சாட்டின.
யூன் 2017 இல் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரும் தற்போதைய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார். அது தொடர்பாகப் பேசிய அமைச்சர், “ஐக்கிய நாடுகள் சபை வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்பு வழக்கறிஞர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் உட்பட ஒரு “கலப்பு நீதிமன்றத்தை” நிறுவத் தொடர்ந்து பரிந்துரைத்து வருவதாகக் குற்றம் சாட்டினார். அத்தகைய நீதிமன்றம் இந்த நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகும் ” என்றார்.
ஆனால் கடந்த புதன்கிழமை (ஏப்ரில் 21), சனாதிபதியின் செயலாளருக்கான வழக்கறிஞர் றொமேஷ் டி சில்வா அவர்களால் இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்கள் – சிறிலங்கா பொதுசன கட்சியினர் இதுகாறும் முன்வைத்த வாதங்கள் – அதாவது வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்பது பொய்யானது, சொத்தையானது என்பது இப்போது துலாம்பரமாக எண்பிக்கப்பட்டுள்ளது. பொதுசன பெரசன கட்சியினர் மேற்கொண்ட பரப்புரை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது.
ஒருவர் சாப்பிட வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் கபரகோயா, தலகோயாவாக (உடும்பாக ) மாறிவிடும் என்பதற்கு அரசின் இரட்டை நிலைப்பாடு சான்றாகும்.
கொழும்புத் துறைமுக நகரம் என்பது காலிமுகத்துக்கு அருகிலுள்ள கடலுக்கு அடியில் இருந்து 65 மில்லியன் கன மீட்டர் மணலை அள்ளி நிரப்பிய நிலத்தில் நிருமாணிக்கப்பட்ட நகரம் ஆகும். கடலை நிரப்பி அதில் குடியிருப்புகள், அலுவலகங்கள், தொடர்மாடிக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை இலங்கை அரசாங்கமும் சீனாவின் CHEC (China’s CHEC Port City Colombo (Pvt) Ltd ) நிறுவனமும் இணைந்து பட்டை மற்றும் சாலை முன்முயற்சியின் கீழ் உருவாக்கியது ஆகும்.
இந்தத் திட்டம் 2014 இல் மகிந்த இராபக்ச சனாதிபதியாக இருந்த காலத்தில் தொடக்கப்பட்டதாகும். இதற்கான செலவு அ.டொலர் 1.4 பில்லியன் ஆகும். நகர நிருமாணத்தை என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 269 ஹெக்டர் (665 ஏக்கர்) நிலம் மீட்கப்பட்டது. இதில் சீனாவுக்கு 110 ஹெக்டர் (272 ஏக்கர்) நிலம் 99 ஆண்டுகாலக் குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இராசபக்ச அரசு சீனாவுக்கு 50 ஹெக்டர் (24 ஏக்கர்) நிலத்தை அறுதியாக (Freehold) கொடுக்கப்பட்டிருந்தது. சிறிசேனா – ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஆட்சேபனையை அடுத்து அது 99 ஆண்டு குத்தகை நிலமாக மாற்றப்பட்டது.
மேலும் இத் திட்டமானது சீனாவின் பட்டை மற்றும் சாலை (Belt and Road) முன்நகர்வின் கீழ் தொடக்கப்பட்டதாகும். சீனா ஏனைய 56 நாடுகளுடன் இணைந்து இதனுடன் தொடர்புடைய திட்டங்களுக்கு கடன் வழங்குவதற்காகவே ‘ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை’ 2014 இல் தொடங்கியது. இதேயாண்டு சீனா 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாகக் கொண்ட ‘பட்டுச்சாலை நிதியை’ உருவாக்குவதாக அறிவித்தது.
இவ்வளர்ச்சி நிதியானது நேரடியாக ‘ஒரு பட்டை ஒரு பாதைத்’ திட்டத்துடன் தொடர்பு படாவண்ணம் அதேவேளை இத்திட்டத்துடன் தொடர்புடைய நாடுகளுக்கு பயனளிக்கக் கூடியவகையில் அமையும் என சீனா தெரிவித்தது
.
பட்டை என்பது “பட்டுச் சாலை பொருளாதார பட்டை” என்பதன் சுருக்கமாகும். இது மேற்கு பிராந்தியங்களின் புகழ்பெற்ற வரலாற்று வாணிக பாதைகளில் நிலப்பரப்புள்ள மத்திய ஆசியா வழியாக சாலை மற்றும் தொடர்வண்டி போக்குவரத்திற்கான உத்தேச நிலப்பரப்பு வழிகளைக் குறிக்கிறது. சாலை என்பது கிழக்கு ஆசியா வழியாக தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா வரையிலான இந்தோ-பசிபிக் கடல் வழிகளைக் குறிக்கும். துறைமுகங்கள், வானளாவிய கட்டிடங்கள், தொடர்வண்டிப் இரயில் பாதைகள், சாலைகள், விமான நிலையங்கள், அணைகள் மற்றும் தொடர்வண்டிப் பாதை சுரங்கங்கள் மற்றும் முன்முயற்சி உள்கட்டமைப்பு முதலீடுகளைக் குறிக்கிறது.
சீனாவின் பட்டை மற்றும் சாலை முயற்சியால் ஈர்க்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
சீனா Communications Construction Co நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரம், சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையில் ஒரு புதிய மையமாக அமைக்கப்பட்ட ஒரு நிதி மாவட்டத்தை கட்டும் திட்டத்தையும் கொண்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் ஒரு சீன காலனியாக இருப்பது குறித்த கவலைகள் தவறாக உள்ளன. மேலும் இந்த திட்டம் கடன் அல்லாத வரத்துக்கான ஆதாரமாக இருக்கும். இது முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிவப்பு நாடாவைக் குறைப்பதன் மூலம் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என்று மாநில பண மற்றும் மூலதன சந்தைகளின் அமைச்சர் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம் பல சட்டங்கள் மற்றும் முகவர்களிடமிருந்து வணிகத்தை எளிதாக்குவதற்கு விலக்கு அளித்துள்ளது எனவும் கப்ரால் கூறுகிறார்.
எல்லாம் சரி ஆண்டொன்றுக்கு அ.டொலர் 7 பில்லியன் வருவாய் வரும் என மதிப்பிடப்பட்டுள்ள இந்தக் கொழும்பு துறைமுக நகர்த் திட்டத்தை ஆளும் பொதுசன கட்சியில் உறுப்பு வகிக்கும் 11 சிறு கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் சனாதிபதி கோட்டாபய அவர்களை பதவிக்குக் கொண்டு வந்த பவுத்த குருமார்கள் ஏன் கடுமையாக எதிர்க்கிறார்கள்? கொழும்பு துறைமுக நகர் ஆணையத்துக்கு-
(1) ஐந்து அல்லது ஏழு உறுப்பினர்களை சனாதிபதி நியமிக்கலாம். அவர்கள் இலங்கையர் ஆக இருக்கவேண்டியதில்லை. எல்லோரும் வெளிநாட்டுக்காரர் ஆகவும் இருக்க முடியும்.
(2) சிறப்பு நிதி அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் நீதித்துறையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சீனாவின் இன்னொரு கொலனி நாடாகப் போகிறது என்ற அச்சம்.
(3) சட்டமியற்றும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
(4) வெளிநாட்டவரும் நியமிக்கப்படலாம். மேலும்,
(5) வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சிறிலங்காவின் சட்டங்கள் பொருந்தாது.
(6) ஊழியர்களது ஊதியம் வெளிநாட்டு நாணயத்தில் கொடுக்கப்படும்.
(7) வெளிநாட்டவர் நீதிபதிகள் ஆக நியமிக்கப்படலாம்.
(8) ஒரு சுயாதீன அதிகாரங்களைக் கொண்ட தனிநாடாக மாறும் அபாயம் இருக்கிறது.
(9) வெளிநாட்டவர் மட்டுமே முதலீடு செய்யலாம். உள்ளூர்வாசிகள் முதலீடு செய்ய முடியாது. அந்நிய செலாவணி இருந்தாலும் முதலீடு செய்ய முடியாது. முதலீடு செய்பவர்களுக்கு 30 ஆண்டுகள் வரி விலக்கு உண்டு.
(10) வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்திருக்கும் இலங்கையர் முதலீடு செய்யலாம். இதனால் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற முடியும்.
இந்த சட்ட வரைவைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த முன்னாள் நல்வாழ்வு அமைச்சர் இராஜித சேனரத்தின தமிழீழத்தை எதிர்த்தவர்கள் இப்போது சீன ஈழத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளார்கள். அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின் இறையாண்மை மற்றும் தனித்துவமே பாதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரி. சனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களால் நியமிக்கப்பட் சிறிலங்காவின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்!
Leave a Reply
You must be logged in to post a comment.