ஊடக அறிக்கை
ஆயர் வண. இராயப்பு யோசேப் ஆண்டகை ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்த மானிடவாதி
மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயரும் தமிழ்மொழி, தமிழினப் பற்றாளருமான அதி வண. இராயப்பு யோசேப் ஆண்டகை இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு பெருந்துயர் உறுகிறோம்.
மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற கோட்பாட்டுக்கு இணங்க ஆயர் வண. இராயப்பு யோசேப் ஆண்டகை தனது வாழ்நாள் முழுவதும் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். குறிப்பாக போர்க் காலத்தில் தமிழ்மக்கள் பட்ட துன்பதுயரத்தில் மதம் கடந்து பங்கு கொண்டவர். அவர்களுக்கு காப்பரணாக நின்று துணிச்சலோடு தொண்டாற்றியவர்.
ஒரு கிறித்தவ மத குருவுக்கு என்ன இலக்கணம் வகுக்கப் பட்டிருக்கிறதோ அந்த இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக கடைசி வரை ஆயர் அதி வண. இராயப்பு யோசேப் ஆண்டகை வாழ்ந்தவர்.
ஆயர் என்ற பதவிக்கு உரித்தான உயர் கல்வி, நம்பிக்கை, நல்லொழுக்கம், அன்பு, அருள், பக்தி, அறிவாற்றல் போன்ற மனிதப்பண்புகள் ஆகியவற்றில் தலைசிறந்தவராக விளங்கியவர். மதம் கடந்து எல்லா மக்களதும் நன்மதிப்பைப் பெற்ற மானிடவாதி.
ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு உள்ளம் கசிந்து உருகியவர். அவர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர். அநீதிக்கு எதிராகப் போராடியவர். ஆளும் பேரினவாத அரசுகள் விசாரணை என்ற பெயரில் அவரை அவ்வப்போது மிரட்டிய போதும் அவர் அஞ்சிடவில்லை. அடங்கிப் போய்விடவில்லை.
“ஆயர்” என்றால் “மேய்ப்பவர்” என்பது நேரடிப் பொருள். கிறித்தவ சமயத்தில் ஆயர் என்றால் மக்களை வழிநடத்துபவர் என்று பொருள். இயேசு தம்மை “நல்ல ஆயர்” (Good Shepherd) என்று அறிமுகப்படுத்துகிறார். அவரிடத்தில் நம்பிக்கைகொண்டு அவரால் வழிநடத்தப்படும் “ஆடுகளை” (மனிதர்களை) அவர் கண்காணித்துக் காக்கிறார்.
ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் அவர்களுக்கு உதவ வருகிறார்களோ அவர்களே உண்மையான இறை அடியார்கள். அவர்களே மக்கள் பணியாளர்கள். அவர்களே ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். ஆயர் வண. இராயப்பு யோசேப் ஆண்டகை அப்படிப் பட்டவர். ஆயிரத்தில் ஒருவர்.
ஆயர் அதி வண. இராயப்பு யோசேப் ஆண்டகை அவர்களது மறைவு தமிழ்மக்களிடையே பெரிய சோகத்தை மட்டுமல்ல பெரிய இடைவெளியையும் விட்டுச் சென்றுள்ளது. அந்த இடைவெளியை ஓயாத உழைப்பால் நிரவுவதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
தமிழ்மக்களுக்குத் தொண்டு செய்தோர் மறைவதில்லை. அவர்கள் மக்கள் நெஞ்சங்களில் காலம் கடந்தும் கொலு வீற்றிருப்பார்கள்.
தமிழினத்தின் வரலாறு எழுதப்படும் போது ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை அவர்களுக்கு பல பக்கங்கள் ஒதுக்கப்படும் என்பது நிச்சயம்.
எம் தாயகத் தமிழர்களின் துயரத்தில் கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொள்கிறது.
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
கனடா.
Leave a Reply
You must be logged in to post a comment.