“அதிகாரப் பகிர்வு என்ற போர்வையின் கீழ் பிரிவினை வாதம்” அறிமுகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது!

 “அதிகாரப் பகிர்வு என்ற போர்வையின் கீழ்  பிரிவினை வாதம்” அறிமுகப்படுத்துவதை  அனுமதிக்க முடியாது!

 நக்கீரன்

கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அவலச் சத்தமே அன்றி வேறு சத்தம் வராது. எழுபது ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப் போய்விட்ட இனச் சிக்கலுக்கு  அதியுச்ச அதிகாரப் பகிர்வே  பொருத்தமான  தீர்வாக அமையும் எனத் தமிழர் தரப்புக் கூறிவருகிறது. அதாவது 13ஏ சட்ட திருத்தத்தை முழுமையாக – காணி மற்றும் காவல்துறை அதிகாரம் உட்பட – நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கை கடந்த பல சகாப்தங்களாக இருந்து வருகிறது. ஆனால்  சிறிலங்கா அதற்குச் செவிசாய்ப்பதாக இல்லை.  மாறாக 13 ஏ சட்ட திருத்தத்தை, அதன் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை நீக்கிவிட  இன்றைய ஆட்சியாளர்கள் தீவிரமாக யோசிக்கிறார்கள்.

அண்மையில் ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையின்  46 ஆவது கூட்டத்தொடரில் முக்கிய நாடுகளான . ஐக்கிய இராச்சியம், கனடா,  ஜெர்மனி,  வடக்கு மசிடோனியா,  மொண்டினீக்ரோ மற்றும் மாலாவி –  சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது தெரிந்ததே.

அந்தத் தீர்மானம் தொடர்பாக  அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தீர்மானத்துக்கு அமெரிக்கா  இணை அனுசரணை வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டது.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிர்த்து 11 நாடுகளும் 14 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன. இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.  வாக்கெடுப்புக்கு முன்னர் இந்தியாவின் நிரந்தர தூதுவராலய முதல் செயலாளர் பவன்குமார் பாதே (Pawankumar Badhe) ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் –

இந்தியா அண்டை நாடு என்ற முறையில்  2009 க்குப் பிறகு இலங்கையில் நிவாரணம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளுக்குப்  பங்களிப்புச்  செய்துள்ளது.  

ஒன்று, இலங்கைத்  தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, சுயமரியாதை மற்றும் அமைதிக்கு எங்கள் ஆதரவு. மற்றது இலங்கையின் ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் ஆட்புல  ஒருமைப்பாட்டை உறுதி செய்துள்ளது.

இந்த இரண்டு குறிக்கோள்களும் ஒன்றுக்கொன்று ஆதரவளிப்பதாக நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.  ஒரே நேரத்தில் இரு குறிக்கோள்களையும் நிவர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறது.

நல்லிணக்கச் செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்ச்  சமூகத்தின் வேட்கைகளை நிவர்த்தி செய்யவும் அதன் அனைத்து குடிமக்களின் அடிப்படைச் சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபடுமாறு  இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் மூலமும் அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதிசெய்வது உட்பட, இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் படி. அரசியல் அதிகாரப் பகிர்வு குறித்த தனது உறுதிப்பாட்டை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கான பன்னாட்டு சமூகத்தின் வேண்டுகோளை இந்தியா ஆதரிக்கிறது.  

இந்தியா சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்ற நம்பிக்கையைச்  சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன  ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். 

ஜெனீவாவில் நடைபெறும் ஐநாமஉ பேரவைக் கூட்டத்தின் போது மிக நெருங்கிய அண்டைய நாடான சிறிலங்காவின்  ஆட்புல ஒருமைப்பாட்டையும் அதன் இறையாண்மையையும்  பாதுகாப்பதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது என வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்திருந்தார். 

மேலே கூறியவாறு இந்தியா வாக்களிப்பதைத் தவிர்த்திருந்தாலும் அரசியல் அதிகாரத்தைப்  பகிர்ந்தளித்தல், மாகாண சபைகளுக்கான  தேர்தல்களை நடாத்துதல் மற்றும் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கான ஓரளவு உத்தரவாதம் அளிக்கும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பாக  சர்வதேச சமூகத்தின் அழைப்பை இந்தியத்  தூதுவர் ஆதரித்துப் பேசியிருந்தார்.

ஆனால்  சிறிலங்காவின் ஆட்சியாளர்களது எதிர்பார்ப்புக்கு எதிராக இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகிக்தது அவர்களது கோபத்தைக் கிளறியுள்ளது.

முக்கியமாக சிறிலங்காவின் சனாதிபதி  கோட்டபாய இராசபக்ச  நெற்றிக் கண்ணைத் திறந்துள்ளார். “நாங்கள் ஜெனீவா சவாலை அச்சமின்றி எதிர்கொள்வோம். நாம் ஒருபோதும் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம். நாங்கள் ஒரு சுதந்திர தேசம்.  நாங்கள் இந்தியப் பெருங்கடலில் பெரிய  வல்லரசு நாடுகளின்  போட்டிக்குப் பலியாக மாட்டோம்” எனக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

சென்ற மாதம் (மார்ச் 27) சனிக்கிழமையன்று தெற்கு மாத்தறை மாவட்டத்தில் கிராம மக்களை சந்தித்துப் பேசுகின்ற கலந்துரையாடலில் சனாதிபதி கோட்டாபய  ஆற்றிய உரை ஐநாமஉ பேரவையில்  இந்தியாவின் தலையீட்டிற்குப்  பதிலளிப்பதாக அமைந்திருந்தது.

“சிறிலங்கா அரசு  இந்தியப் பெருங்கடலில்  உலக நாடுகளுக்கு இடையிலான  அதிகாரப் போட்டியில் எங்களது அரசு தன்னைத்  தொடர்புபடுத்த விரும்பவில்லை. சிறிலங்காவில்  மற்ற நாடுகள் தங்கள் புவிசார் அரசியல் தேவைகளை “அதிகாரப் பகிர்வு என்ற போர்வையின் கீழ்  பிரிவினை வாதம்  அறிமுகப்படுத்துவதை  அனுமதிக்க முடியாது.  எது எப்படியிருப்பினும் இலங்கையின் இறையாண்மை காட்டிக் கொடுக்கப்பட  மாட்டாது” எனப் பேசியுள்ளார்.

இந்தச் செய்தியை  அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஏரிக்கரை வெளியீடான டெய்லி நியூசின் முதல் பக்கத்தில் பிரசுரித்திருந்தது.

சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்கள – பவுத்த வாக்காளர்களின் வாக்குகளால் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சனாதிபதி கோட்டாபய இராசபக்ச தொடக்க முதலே அதிகாரப் பகிர்வுக்கு எதிராகப்  பேசிவருகிறார்.

நொவெம்பர் 2019 இல் சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்  பேசிய கோட்டாபய அதிகாரப் பகிர்வை விட  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்  கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்தார். புது தில்லிக்கு  மேற்கொண்ட தனது முதல் பயணத்தின்போது நொவெம்பர் 30, 2019 அன்று இந்து ஏட்டுக்கு அளித்த  நேர்காணலில் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.

1987 இல் அரசியலமைப்பிற்கு 13 ஆவது திருத்தத்தின் கீழ் செய்யப்பட்ட  அதிகாரப் பகிர்வு  பெரும்பான்மை [சிங்களம்] சமூகத்தின் விருப்பத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டது எனக்  குறிப்பிட்டார்.

“நல்லாட்சி அரசின் கொள்கையில் பயணித்து ஜெனிவா நெருக்கடிகளைச் சமாளிக்க நாம் ஆட்சிக்கு வரவில்லை. எமக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், இராணுவக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்வதேச நாடுகள் எம்மைத் துரத்தினாலும் அவர்களின் பொறியில் நாம் சிக்கிக் கொள்ள மாட்டோம்” என அமைச்சர் விமல்  வீரவன்ச சபதம் செய்கிறார்.

வீடு கொளுத்துகிற இராசாவுக்கு கொள்ளிக் கட்டை கொடுக்கும் அமைச்சரைப் போல இப்போது சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக இருக்கும் பவுத்த தேரர்கள் பலர்  மாகாண சபைகளுக்கு தேர்தலே நடத்தக் கூடாது எனப் போர்க் கொடி தூக்கியுள்ளார்கள்.

மாகாண சபைத் தேர்தலைக் கைவிடாது விடின் மகாசங்கத்தினரை ஒன்றிணைத்துப் போராடுவோம் எனப் போர் முழக்கம் செய்துள்ளார்கள்.

மாகாண சபை முறைமை இலங்கைக்குப் பொருத்தமற்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றிணைத்துப்  போராட்டத்தில் ஈடுப்படுவோம் என ஓமல்பே சோபித தேரர் முழங்கியுள்ளார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 29, 2021) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  அவர் மேலும் பேசுகையில் –

“மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு நாட்டு மக்கள் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. மாறாக அரசியல்வாதிகளே மாகாண சபை முறைமை ஊடாக இலாபம் பெற்றுக்கொள்ளப் போராடுகிறார்கள். தேர்தல் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முயற்சிக்கிறது. மாகாண சபைத் தேர்தல் இலங்கைக்குப் பொருத்தமற்றதாக உள்ளது. மாகாண சபை முறைமை ஊடாக எவ்வித பயனும் ஏற்படவில்லை. மாறாக மிதமிஞ்சிய செலவுகள் மாத்திரமே ஏற்பட்டுள்ளன.

தேர்தல் முறைமை காரணமாக மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. மாகாண சபை நிர்வாகம் சனதிபதி நியமித்த ஆளுநர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மாகாண சபை முறைமையை முழுமையாக இரத்து செய்து உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அரசியல்வாதிகளின் சுயநலத் தேவைக்காக மாகாண சபை முறைமை நிர்வகிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பொருளாதார அடிப்படையில் மக்கள்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசாங்கம்
கவனம் செலுத்த வேண்டும் அதனை விடுத்து மாகாண சபைத் தேர்தலை நடத்த முயற்சிப்பது பயனற்றது” என்றார்.

இன்று நாட்டை ஆள்பவர்கள் பவுத்த தேரர்களது ஆலோசனையின் படியே நாட்டை ஆள்கிறார்கள். முக்கிய பவுத்த தேரர்கள் கொண்ட ஆலோசனை சபை கடந்த மகிந்த இராசபக்ச ஆட்சிக் காலத்தில் (2014) உருவாக்கப்பட்டது.

தொல்பொருள் செயலணியில் இடம்பெற்ற 15 உறுப்பினர்களில்  பெரும்பான்மையினர் பவுத்த தேரர்களாவர். அதன் தலைவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற இராணுவ தளபதி கமால் குணரத்தின ஆவர்.

சிறிலங்காவில்  மற்ற நாடுகள் தங்கள் புவிசார் அரசியல் தேவைகளை “அதிகாரப் பகிர்வு என்ற போர்வையின் கீழ்  பிரிவினை வாதத்தை கொண்டு வர இடமளியோம்” என சனாதிபதி  கோட்டாபய வீரம் பேசுகிறார். இந்தப் பின்னணியில் இந்திய அரசு என்ன செய்யப் போகிறது? ஐநாமஉ பேரவையில் இலங்கைக்கு எதிராக  46-1 இலக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகள் என்ன செய்யப் போகின்றன?

இலங்கைத்  தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, சுயமரியாதை மற்றும் அமைதிக்கு எங்கள் ஆதரவு. மற்றது இலங்கையின் ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் ஆட்புல  ஒருமைப்பாட்டை உறுதி செய்தல் தங்களது நிலைப்பாடு என இந்தியா சொல்கிறது.

ஆனால் சிறிலங்கா அரசு செவிசாய்ப்பதாக இல்லை. செவிசாய்க்க மாட்டோம் எனச் சண்டித்தனம் செய்கிறது. இப்போது நிறைவேற்றப்பட்ட ஐநாமஉ பேரவையின் தீர்மானத்தில் பொருளாதாரத் தடை, பயணத் தடை பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கு  ஆண்டொன்றுக்கு  வழங்கம் அ.டொலர் 700 மில்லியன் ஜிஎஸ்பி வரிச் சலுகையை மீளப் பெற்றால் என்ன?  சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடை போல ஏனைய போர்க்கால இராணுவ தளபதிகள் மீதும் பயணத்தடையை போட்டால் என்ன? ஐக்கிய நாடுகள் சமாதானப் படையில் சிறிலங்கா இராணுவம் சேர்த்துக் கொள்ளப்படுவதைத் தவிர்தால் என்ன?

மயிலே, மயிலே  இறகு போடென்றால் அது போடாது. அதைப் பிடித்து இறகைப் பிடுங்கினால்தான் அது சாத்தியமாகும்!

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply