தமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை


தமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம்  கியூ.ஸி. அவர்கள் அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அவ்வாரம்ப மாநாட்டில்,  செல்வநாயகம் அவர்கள் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை.

வரவேற்புக் கழகத் தலைவருக்கும் இலங்கையின் பற்பல பகுதிகளிலுமிருந்து இங்குவந்து குழுமியிருக்கும் பிரதிநிதிகளுக்கும் – எனது அன்பான வணக்கம். 

இன்றைய நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகிக்கும்படி என்னைத் தெரிந் தெடுத்துக் கௌரவித்ததற்காக எனது மனப்பூர்வமான நன்றியறிதலை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நீங்கள் எனக்கு அளித்திருக்கின்ற பெரும் பொறுப்பினை நோக்கும் போது, அவற்றையெல்லாம் கொண்டு நடத்துவதற்குப்போதுமானவன்மை என்னிடமிருக்குமோ என்று ஐயுறுகின்றேன். எனினும், நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து எனக்கெனக் குறிக்கும் பணியினை ஏற்று, எங்கள் நோக்கத்துக்காக யான் தொண்டு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றேன். என்னைத் தலைவராகத் தெரிவு செய்ததில் – நல்ல நியாயம் – ஒன்று மாத்திரம் இருக்கின்றது. அது, இலங்கையில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் அடைந்திருக்கும் பரிதாப நிலைமையினையும், அவர்கள் அதினின்று நீங்கி விடுதலை பெறுவதற்காக ஒரு இயக்கம் அவசியமாகும் என்பதையும் நீங்கள் உணரும் அளவுக்கு யானும் உணர்கின்றேன் என்பதேயாகும். 

இலங்கையில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள், விடுதலை பெறுவதற்காக உழைக்கும் ஒரு ஸ்தாபனத்தை அமைக்கவேண்டும் என்னும் தனிநோக்கத்துடன், நாங்கள் எல்லோரும் இன்று கூடியிருக்கின்றோம். இப்போதிருக்கும் நிலைமையில், யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமை யாதது என்பது எமது திடமான நம்பிக்கையாகும். பழைய காலச் சரித்திரத்தைத் தெளிவாக நன்றாக ஆராய்ந்து பார்த்தால், தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டிலே இப்போது எப்படியான நிலைமைகளுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து நோக்கினால், இதுதான் ஒரேயொருவழி வேறு எந்தவிதமான பரிகாரமும் கிடையாது – என்பது நன்கு விளங்கும்
16ஆம் நூற்றாண்டிலே, ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக இந்நாட்டு மக்களே தங்களுக்கென அரசாங்கங்களை அமைத்திருந்தனர்.

நாங்கள் ஒரு விஷயத்தை மாத்திரம் ஊன்றிப்பரிசீலனை செய்தல் வேண்டும். அதாவது, போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு முன் இங்கு வசித்த மக்கள் பல நூ ற்றாண்டுகளாகச் சிங்களம் பேசும் இனம், தமிழ் பேசும் இனம் என இரு தேசிய இனங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். விஜயன் காலந்தொடங்கிப் பல நூ ற்றாண்டுகளாகச் சிங்களம் பேசும் தேசிய இனத்தைப்பற்றி மாத்திரம் பேசப்படுகிறது. இவர்களைச் சில காலங்களில் தமிழ் மன்னர்களும் அரசு புரிந்தார்கள். எனவே, தமிழ் மக்கள் அவர்களிடையே எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது புலனாகின்றது. ஆயினும், அது சிங்களத் தேசிய இனமும் சிங்கள அரசாங்கமுமே யாரும் பூமிசாத்திர சம்பந்தமான காரணங்களாலும் வேறுபல நியாயங்களாலும் இலங்கையின் வட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நெடுங்காலமாகத் தமிழர்களாகவே திகழ்ந்திருத்தல் வேண்டும். அதனால், பெரும்பாலும் தமிழ் மக்களையே கொண்ட வட பகுதிகளைத் தென் பகுதியிலிருந்த சிங்கள இராச்சியங்கள் ஆட்சி புரிவது வரவரக் கடினமாக இருந்திருத்தல் வேண்டும். இறுதியாக, இயற்கையாயமைந்த ஒரு பரிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. 9ஆம், 10ஆம் நூற்றாண்டளவிலே, வடபகுதித் தமிழ்ப்பிரதேசங்கள் பிரிந்து தனியரசாயின. இலங்கையின் தென்பகுதி, சில வேளைகளில் 2, 3 இராச்சியங்களாகப் பிரிந்திருந்தாலும் சிங்களப் பிரதேசமாகவே இருப்பதாயிற்று. 

சில காலங்களில் இந் நிலைமை மாறியிருந்தாலும், ஐரோப்பியர் வரும்வரை, இச் சிங்கள் – தமிழ் இனப் பாகுபாடு பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்தது. முதலிலே தமிழ் இராச்சியத்தை அழித்த ஐரோப்பியர், படிப்படியாகச் சிங்கள் இராச்சியங்களையும் ஒழித்து விட்டார்கள். இதிலிருந்து யாம் பெறக்கூடிய பெரும் படிப்பினை, மக்களின் வாழ்க்கையிலும் அரசியலிலும் மொழி மிக முக்கியமானதென்பதேயாகும். சிங்களத் தேசிய இனமாகவும் தமிழ் தேசிய இனமாகவும் இலங்கை பிரிக்கப்பட்டிருந்தபோது கூட, சிங்களச் சாகியத்தினரிடையே தமிழ் மக்களும், தமிழ்ச் சாகியத்தினரிடையே சிங்கள மக்களும் வாழ்ந்திருத்தல் வேண்டும். மக்கள் இப்படியாக நாடெங்கும் பரவிக் கலந்து வாழ்ந்துகொண்டிருந்த போதிலும், அரசியல் விஷயங்களுக்காக, வடபகுதியிற் பெரும்பான்மையினராய்த் திகழ்ந்த தமிழர் – தென்பகுதியிற் பெரும்பான்மையினராய்த் திகழ்ந்த சிங்களவர் – என இரு பிரிவினராகப் பகுக்கப்பட்டார்கள். தமது ஆட்சிச் சௌகரியத்தை மட்டுமே கருதிய பிரிட்டிஷார், சிந்தனைக்குறைவான முறையில், நாடு முழுவதையும் ஒரே குடியேற்ற நாட்டு அரசாங்கத்தின் கீழ்க் கொண்டு வந்து, பல நூற்றாண்டுகளாக இரு தேசிய இனங்களாக இருந்த பாகுபாட்டினை ஒழித்து விட்டார்கள், ஆயினும் இவ்விரு தேசிய இனங்களும் இயற்கையாகக் கலந்து ஒன்றாகி விடவில்லை ஆயினும், மக்களுட் பெரும்பகுதியினர் வெவ்வேறான இரண்டு மொழிகளையே பேசுபவராய், வெவ்வேறு நிலப்பகுதிகளுள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆயினும், இரு இனங்களிலிருந்தும் ஆங்கிலம் பேசுகின்ற ஒரு சிறுபான்மைச் சமூகத்தினர்  தலைமையான தோன்றினார்கள்.

ஆனால், நாட்டு மொழிகள் பொது வாழ்விலே தமக்குரிய ஸ்தானத்தைப் பெற்றவுடன். தொகையிற் குறைந்தவர்களாகிய இவ்வாங்கிலம் பேசும் சமூகத்தினர் அருகிவருகிறார்கள். நாளடைவில், குடியேற்ற நாட்டு ஆட்சி முறை மாறி, மக்களாட்சி படிப்படியாக நிலைபெறத் தொடங்கிய காலத்தில், புதிய அரசியற்றிட்டங்களை வகுத்தவர்கள், பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு ஆட்சி முறையினைப் பின்பற்றி, ஒற்றையாட்சி அமைப்பு அடிப்படையிலேயே தமது திட்டங்களை வகுத்தனர். இதற்குப் பல காரணங்களுள்ளன. வெளித்தோற்றத்தளவில், பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு ஆட்சியின் கீழ், இலங்கை மக்கள் ஒரே தேசிய இனமெனும்படி ஆகிவிட்டார்கள். அன்றியும், நமது அரசியற் சீர்திருத்த வாதிகள் அரசியலமைப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அனுபவமற்றவர்களாயிருந்தார்கள். அல்லாமலும், ஆங்கிலேயரும் ஸ்கொச்சுக்காரரும் உவெல்சுக்காரரும், ஒரு அரசின் கீழ்ச் சேர்ந்துகொண்டதுபோல , அதையே முன்மாதிரியாக வைத்து, இலங்கையிலும் அரசியலமைக்கலாம் என எல்லோரும் ஏமாறினார்கள்.

அதிலும் பார்க்கச் சிறந்ததொரு மாதிரி கிடையாதென்றும் நம்பியிருந்தார்கள். பெரிய பிரித்தானியாவிலே, ஸ்கொச்சு மொழியும், உவெல்சுமொழியும் முற்றாக இல்லையெனும்படி அழிந்தொழிந்து, பிரித்தானிய மக்கள் எல்லோரும் ஆங்கில மொழியையே பேசுபவர்களாக மாறி விட்டார்கள் என்பதைச் சிந்தித்து, எவராவது எடுத்துக்காட்டினாரல்லர். ஆனால், இருபது நூற்றாண்டுகள் வரை கூடி வாழ்ந்திருந்தும், சிங்கள மொழியோ, தமிழ் மொழியோ அழிந்தொழியவில்லை, ஒவ்வொரு சாரிலும், அம்மொழிகள் அழிந்தொழியாதபடி காக்கும் இயற்கைச் சக்திகளும் நோக்குகளும் அமைந்துள்ளன. 

பிரிட்டனிலும் இலங்கையிலுமிருந்து எமது நாட்டின் அரசியலமைப்பினை வகுப்பதில் பங்குபற்றினோர், பிரிட்டிஷாரின் ஒற்றையாட்சி அமைப்பினை மாதிரியாகக் கொண்டு அதையே எமது நாட்டிலும் தழுவிக்கொள்ள முயன்றார்கள். சென்ற முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற அரசியற்சீர்திருத்த இயக்கத்தின் வரலாற்றை நோக்குவோமாயின், நமது சீர்திருத்த வாதிகள் பிரிட்டிஷ் ஆட்சிமுறையைத் தழுவுவதிற் கவனஞ் செலுத்தினார்களேயன்றி, எமது நாட்டிற்கு எவ்வகையான அரசாங்கம் பொருத்தமானதென்று ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. தமது அரசியலமைப் பேயல்லாமல் வேறு எதனையும் இலங்கைக்கு மாதிரியாகக் கொள்ளலாமென்று பிரிட்டிஷார் கருதவில்லை . பிரிட்டிஷ் அரசியலமைப்பானது, சிங்கள மக்களுக்கு விசேஷ திருப்தியளிப்பதாயிற்று, ஏனெனில், சிங்கள மக்கள் பெரும்பான்மையோர். எனவே வெறும் எண்ணிக்கையினாலேயே அவர்கள் பூரணமான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லாமலும், பழைய காலத்திலிருந்தது போல, ஒரே சிங்கள இராட்சியத்தை அமைத்துக்கொள்ளலாமென்றும் கனவு கண்டார்கள்.

சென்ற பத்து நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருந்த மாற்றங்களையெல்லாம், ஒரு சிறிதாவது அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை. பல இன மக்கள் கூடி வாழும் நாட்டிலே, ஒற்றையாட்சி அமைப்பை நிறுவுவதனால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தமிழ் பேசும் மக்கள் தெளிவாகக் கண்டார்கள். அவர்கள் தங்களை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தை என்றும் உணர்ந்திருந்தது போற்றத்தக்கதாகும். தலைவர்களென்போர் இந்த ஆபத்தைக் குறைப்பதிற் கவனஞ் செலுத்தினார்களேயன்றி, அதை நீக்க முயற்சிக்கவில்லை.

சிறுபான்மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் பெற்றுக் கொண்டாற் போதுமென்று அவர்கள் நம்பினார்கள். அவர்களுக்குத் தோன்றிய ஒரே பரிகாரம் அதுதான். அவர்கள் வருங்காலத்தைப்பற்றிப் போதிய முன்யோசனையுடனும் பரந்த நோக்கத்துடனும் நடந்து கொள்ளாதது வருத்தத்திற்குரியதாகும். இங்ஙனம் தவறியதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை. தமிழ் பேசும் மக்கள் – முஸ்லிம்கள், இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழரென மூன்று பிரிவினராய் இருந்தனர். இந்நாட்டிலே முஸ்லிம்களும் இலங்கைத் தமிழர்களும் வாழும் பிரதேசங்கள், பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் விருத்தி செய்யப் படாதனவாய், கீழ்நிலை எய்திக்கிடந்தன. இதனால், அப்பிரதேசங்களின் பொருளாதாரநிலை சீரழிந்திருந்தது. அப்பிரதேசங்களிலேயே வாழ்ந்துகொண்டு அரசியல் விஷயங்களில் ஈடுபட்டுழைக்கப் போதுமான அவகாசம் படைத்தோர், அவ்விடங்களிலே தோன்றவில்லை. இந்தியத் தமிழரென்ற பிரிவினர், அரசியலமைப்பு ஆலோசனைகளிற் பங்குபற்ற இயலாதவர்களாயிருந்தனர். அவர்கள் எங்கள் நாட்டுக்கு ஏனையோரிலும் பார்க்கப் பிந்திய காலத்தில் வந்தவராவர்.

அவர்கள், தமிழ் பேசும் பிரதேசங்களுக்குப் புறம்பான சிங்களமொழி பேசப்படும் பிரதேசங்களிற் குடியேறியிருந்தார்கள். இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறியிருந்த போதிலும், அவர்கள், தொழிலாளர்களாகிய தங்களது வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளிற் கவனம் செலுத்தினார்களேயன்றி, அரசியலமைப்புச் சிக்கல்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இந் நிலையின் பயனாக அரசியலமைப்பில் ஈடுபட்டோர், பிரிட்டிஷ் ஒற்றையாட்சி அமைப்பினையே அடிப்படையாகக் கொண்டனர். சிறுபான்மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிப்பதானது. ஜனநாயகத்துக்கு மாறான தென்று சிங்கள மக்கள் எதிர்த்தனர். சிறுபான்மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிப்பதனாலேனும், அதிகாரம் முழுவதையும் தம் கையிலேயே வைத்திருக்க கூடிய ஒற்றையாட்சி அமைப்பினை நிலைபெறச் செய்யலாமென்று அவர்களுக்குத் தென்படவில்லை. 

நீதி செய்வார்களென்று எதிர்பார்க்கப்பட்ட பிரிட்டிஷ் எஜமானர்கள், தம் கடமையில் முற்றாகத் தவறிவிட்டார்கள். அரசியலதிகாரம் சிங்களவரின் கையிலேயே இருப்பதை அவர்கள் கண்டார்கள். எனவே, தமிழ் பேசும் மக்களுக்கு நீதி வழங்குவதிலும் பார்க்கச் சிங்கள மக்களைத் திருப்தி செய்வதே உசிதமென்று கருதினர். அது ஆண்மையற்ற செயல் எனினும், அதையே விரும்பினர். இதன் பயனாக இந்நாட்டின் அரசியற் பிரச்சினைக்கு ஒரு பரிகாரமென , சிறுபான்மையோருக்குக் கூடுதலான பிரதி நிதித்துவம் அளிக்காத ஒரு ஒற்றையாட்சி அமைப்பு, சோல்பரி – பிரிட்டிஷ் அரசியற்றிட்டம் தமிழ் பேசும் மக்களின் மீது திணிக்கப்படுவதாயிற்று. வாக்காளர்கள் அளித்த உத்தரவாதத்தை மறந்து எம் பிரதிநிதிகள் சோல்பரித் திட்டத்தை ஏற்றமையால், இப்பிரச்சினை மேலும் சிக்கலடைந்தது. இதனால், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களது அரசியல் வாழ்வுக்கு அந்தியக் கிரியைகள் செய்யப்பட்டு விட்டனவென்று பலரும் கருதியிருக்கக் கூடும். ஆனால் பொதுமக்கள் சரணடைய மறுத்தனர். 1945 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையை ஏற்ற அப்போதைய அரசாங்கசபைத் தமிழ் அங்கத்தவருள், ஒருவர் தவிர்ந்த பிறரெல்லாம் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிற்படுதோல்வி அடைந்தனர். தமிழ்ப்பிரதி நிதிகள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதா அன்றேல் சரணடைவதா என்ற ஒரே கேள்வியை அடிப்படையாகக் கொண்டே தமிழ்த் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் தெளிவான முடிவு போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டு மென்பதேயாகும். 

ஆனால், முஸ்லிம் தொகுதிகளில் இதற்கு வேறான கொள்கையுடன் தேர்தல் நடைபெற்றது. 1945ஆம் ஆண்டுவரை சிறுபான்மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கொள்கைக்காகத் தமிழரும் முஸ்லிம்களும் சேர்ந்துழைத்தனர். சோல்பரித் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், வேறு வழியின்றி முஸ்லிம்கள் தயங்கினர். இப்போது நாங்கள் கைக் கொண்டிருக்கும் கொள்கையைப் போன்ற திட்டங்களெவையும் அர்களுக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதேசங்கள், தனிச்சுயாட்சி அரசாக அமைக்க முடியாதனவாய் இருந்தன. வடபகுதியிலும் திரிகோணமலையிலும் வாழும் தமிழ் மக்களுக்கு, இப் பிரதிகூலமில்லாதபடியால் அவர்களிடையே ஒரு விடுதலை உணர்ச்சி நிலவியது. 

இவ் விடுதலை உணர்ச்சியே உருவெடுத்தாற்போல் விளங்கிய தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தொகுதிகள் எல்லாவற்றிலும் பூரண வெற்றி. பெற்றது தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைப் பற்றிய தமிழ் மக்களின் கருத்தினை, அத் தேர்தல் தெளிவாகக் காட்டியது. தமிழ்க்காங்கிரசினை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சி அபேட்சகர்கள், அதிகாரத்துக்கு வரக்கூடியவர்களான சிங்களப் பெரும்பான்மையோருடன் ஒத்துழைப்பதால், தமிழ்ப் பிரதேசங்களுக்குப் பொருளபிவிருத்தி ஏற்படுமென்று வாக்களித்தார்கள். ஆனால், தமிழ்க் காங்கிரஸ் அபேட்சகர்கள் அரசாங்கத்திடமிருந்து பொருள் நலம் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளிக்கவில்லை; தமிழரின் உரிமையைப் பறிக்க நடக்கும் முயற்சிகளை எதிர்ப்போமென்றே கூறினர். அதிகப்படியான வாக்குகளால் தமிழ்க் காங்கிரஸ் அபேட்சகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் அடுத்த வருஷம் – 1948 ஆம் ஆண்டில் என்றும் எதிர்பார்த்திராத சம்பவம் நடைபெறுவதாயிற்று. தேர்தலிலே தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பையும் தமிழ்க் காங்கிரசையும் கவனியாது ஐக்கிய தேசியக்கட்சி தனிப்பட்ட முறையில் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டது. அதன்பின், தமிழ்க் காங்கிரஸ் தலைவர் மனந்தளர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியிடம் சரண் புகுந்தார். தமிழ் மக்கட்கு அளித்த உத்திரவாதத்தையும் இதனால் மீறினார். ஆனால் அநேகர், தமிழ்க் காங்கிரஸ் தலைவர் பூரணமாகச் சரணாகதி அடையவில்லை யென்றும், தாம் சேர்ந்திருக்கும் அரசாங்கம் தமிழ்க் காங்கிரசின் கொள்கைகளுக்கு மாறான சட்டங்களைக் கொண்டுவரும் பொழுது அவற்றை எதிர்ப்பதற்கான உரிமையை வைத்துக் கொண்டாரென்றும் நம்பியிருந்தனர்.

1948ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில், அரசாங்கம் இந்தியப் பிரஜாஉரிமைச் சட்டமொன்றைப் பிரதிநிதிகள் சபையிற்கொண்டுவந்தது இச்சட்டத்தை இலங்கை, இந்தியக் காங்கிரசும் புதுடெல்லியிலுள்ள இந்திய அரசாங்கமும் எதிர்த்து வந்தன. இது, தமிழ்க் காங்கிரசின் அமைப்பு விதிகளிலும் அதன் மகாநாடுகள் பலவற்றிலும் வற்புறுத்தப்பட்ட – அடிப்படையான கொள்கைகளுக்கு முரண்பட்டதாயிருந்தது. அன்றியும், ஐந்து வருஷ ங்கள் இலங்கையில் வசித்த இந்தியர்களுக்குப் பிரஜாவுரிமை பெறுவதற்காகவும், அவர்களுடைய பிறவுரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் உழைப்பதற்காக, இலங்கை, இந்தியக்காங்கிரசுக்குத் தமிழ்க்காங்கிரஸ்த் தலைவர் கைச்சாத்திட்டுத், தேர்தற் காலத்தில் வாக்களித்திருந்தார். எதைப்பெறுவதற்கு உழைப்பதாக இவர் வாக்களித்திருந்தாரோ, அதைப் பாராளுமன்றத்திற் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் மறுத்தது. அவரும் தமிழ்க் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலரும் இதனை ஆதரித்தனர். இதிலிருந்து தமிழ்க்காங்கிரஸ் தலைவரும் பிரதிநிதிகள் சிலரும் உரிமைப் போரைக் கைவிட்டுவிட்டன ரென்பது தெட்டத்தெளிவாக விளங்கிவிட்டது. இதன் பயனாக , தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற அங்கத்தவர்கள், இரு கட்சியினராகப் பிரிந்தனர். முன்கூறியபடி, ஒரு பகுதியினர் – தங்கள் தேர்தற்காலக் கொள்கையைக் கைவிட்டுவிட்டனர். மற்றப் பகுதியினராய – உங்கள் முன்நிற்கும் நாங்கள் – தேர்தற்காலக் கொள்கையைக் கடைப்பிடித்து. உரிமைப் போரைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானித்திருக்கின்றோம். 
இப்போதைய அரசியற்றிட்டத்தின் கீழ், சிங்கள மக்கள், தமிழ்ப் பிரதிநிதிகள் எல்லோரையும் உதாசீனஞ் செய்து, அவர்களது உதவியில்லாமல் அரசாங்கத்தை . நடத்தவும் அவர்களது விருப்பத்துக்கும் உணர்ச்சிக்கும் மாறாகச் சட்டங்களை ஒன்றன் மேலொன்றாய் நிறைவேற்றவும் முடியுமென்பது, 1947ஆம், 1948ஆம் ஆண்டுகளிலே தெளிவாகியபின், தமிழ் பேசும் மக்களுக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று நிபந்தனையற்ற சரணாகதி; மற்றையது தமிழ் பேசும் மக்களை, பலுரிமையற்றவர்களாகச் செய்யும் இப்போதைய அரசியலமைப்பிலிருந்து மீட்பதற்காக, ஒரு இயக்கத்தை ஆரம்பிப்பதாகும். பிந்திக்கூறிய வழி கடினமானது; ஆனால் வீரர்களுக்குரிய வழி அதுவேயாகும். அதுவுமல்லாமல், தேர்தற் காலத்திலே தமிழ் மக்கள் காட்டிய வழியும் அதுவே. தமிழ்க் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்குள்ளே, “தலைவணங்கோம்” என்று நின்றவர்கள், இவ்வழியையே கைக்கொண்டு, அதனையே பின்பற்றும்படி, நாடெங்குமுள்ள தமிழ் பேசும் மக்களிடையே பிரசாரஞ் செய்து வருகின்றனர். 

1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதியன்று, தமிழ்க்காங்கிரஸ் தலைவரே குடியேற்ற நாட்டு மந்திரிக்குப் பின் வரும் தந்தியை அனுப்பினார். 

“இல:181 – சென்ற பொதுத் தேர்தலிலே ஐக்கிய தேசியக் கட்சித் தமிழ் அபேட்சகருள் ஒருவராவது தெரிவு செய்யப்படாததிலிருந்தும்; 1945 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையை ஆதரித்த பழைய அரசாங்க சபை அங்கத்தவர்களுள், ஒருவர் தவிர ஏனையோர் தோற்கடிக்கப்பட்டதிலிருந்தும்; இலங்கைத் தமிழ்மக்கள் சோல்பரி அரசியற்றிட்டத்தை நிராகரித்து விட்டார்கள் என்பது தெளிவு.”
“இலங்கையிலுள்ள சமூகங்கள் எல்லாவற்றுக்கும் சம உரிமை அளிக்கும் சுதந்திர அரசியற்றிட்டமொன்றை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கோருகிறது. இலங்கை மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியற்றிட்டத்தை வகுப்பதற்கு, அரசியல் நிர்ணயசபையொன்று வேண்டும். இப்பொழுது இருப்பதைப்போன்ற, சட்டசபை – மந்திரிசபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தைத் தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தகுந்த மாற்றுமுறை இல்லாதபடியால், நாங்கள் தமிழ் மக்களுக்குச் சுய நிர்ணய உரிமை கோருகிறோம்.” 

1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலே, தமது நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த தலைவர் சரணடைந்ததும், தமிழ்க் காங்கிரஸிற் பிளவு ஏற்பட்டபோது, தமிழ் பேசும் மக்கள் திற்க்கற்றவர்களாய்த் தவிக்கலாயினர். அரசியல் வாழ்விலே , தமது நிலையையிட்டு திருப்தி கொள்ளாதவர்களாய் இருந்தபோதிலும், இந்நிலையை மாற்ற வழி காணாதவர்களாய் திகைத்தனர். தமிழ் பேசும் மக்களுக்கென ஒரு சுதந்திர அரசினை நிறுவுவதன் மூலம், இப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற புது எண்ணம் மக்களின் மனதைப் பெரிதும் கவரவில்லை. இப்படியான இயக்கத்துக்கு நாட்டிலே எவ்வளவு ஆதரவு இருக்குமென அவர்கள் திடமாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால், அவர்களிடையே இவ்விதமாக இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நம்பிய வீரர்களும் தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள், இந்த வீரர்கள் இடைவிடாது தமது நம்பிக்கையூட்டும் கொள்கையைப் பிரசாரஞ்செய்து கொண்டு வந்தபடியால், இன்று, தமிழ்பேசும் மக்கள் எல்லோருக்குமே சுதந்திரத் தமிழ் அரசு ஒன்றினை நிறுவவேண்டும் என்னும் கொள்கையில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

பெருந்தொகையினராக நீங்கள் இங்குவந்து இன்று குழுமியிருப்பதே இதற்குப் போதிய சான்றாகும். 

இப்படியான எண்ணத்தில் நம்பிக்கை மாத்திரம் இருந்தாற்போதாது; அதை டைமுறையில் கொண்டுவரவேண்டும். எமது கனவை நனவாக்குவதே எமது இயக்கத்தின் அடுத்த திட்டமாகும். இவ்விஷயத்திலே பலரும் சந்தேகமுறுகின்றனர். துரதிஷ்ட வசமாக, எமது சமீப காலத்திய அரசியல் வரலாறு இச் சந்தேகத்துக்கு இடமளிப்பதாயிருக்கின்றது. பல முறைகளில் தலைவரென்போர் எங்களைக் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். வீரர்களாகக் காட்சியளித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்கள், ஒருநாள் நமிர்ந்து நின்று போராடி, மறுநாள் களத்தையே விட்டு ஓடினர். 1934ஆம் ஆண்டு தொடக்கமாக சேர் மகாதேவா அவர்கள் தமிழ்ப்படையின் முன்னணியில் நின்றார்; அவருடைய உற்சாகம் படிப்படியாகக் குறைந்து, ஈற்றில் அவர் எதிரிகளின் கட்சியிற் சேர்ந்தார். இப்படியே திருவாளர்கள் நடேசன், தியாகராசா ஆதியானோரும் தமிழர்களின் உரிமைக்காக உழைப்பவர்களாயிருந்து, கடைசியில் 1945ஆம் ஆண்டிலே தமிழ் மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வந்த உரிமைகளை மறுக்கும் அரசியற்றிட்டத்துக்குச் சார்பாக வாக்களித்தார்கள். அண்மையிலே, நம் உரிமைகளுக்காக விட்டுக்கொடுக்காது போராடிவந்த திரு.ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் இப்பொழுது போராட்டத்தைக் கைவிட்டது மாத்திரமன்றி, இலங்கைத் தமிழ் மக்களுக்கு எவ்வித குறையுமில்லை என்று எங்கும் பறை சாற்றி வருகிறார்! இப்படியான குட்டிக் கரணங்களின் பலனாக, தமிழ் இனத்தின் பண்புக்கே பழுது வந்தடைந்ததுடன், இப்போதுள்ள தமிழ்த்தலைவர்களிலும், எதிர் காலத்திலே தோன்றக்கூடிய தலைவர்களிலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமற் போய்விட்டது. “இப்போது சுதந்திரத் தமிழ் அரசு வேண்டுமென்று கோரும் தலைவர்களை, நாம் எப்படி நம்புவது” என்று மக்கள் கேட்கின்றார்கள். “முந்திய தலைவர்கள் செய்ததைப்போல, இத் தலைவர்களும் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு” என்று வினவுகின்றார்கள்; இவை சரியான கேள்விகளேயாகும். 

தமிழ்த் தலைவர்களது மனவருத்தத்தைத் தரும் நிலையற்ற போக்குடன், எம் பொதுமக்கள் அரசியல் விஷயங்களிற் காட்டிய விடாப்பிடியான உறுதியை ஒப்பிட்டுப் பார்த்தால், எவ்வளவு வித்தியாசம் தென்படுகிறது? மக்களின் மனவுறுதி சாந்தி அளிப்பதாயிருக்கின்றது. இதனைத் தெளிவாக உங்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன். 

இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் எல்லாப், பிரிவினருள்ளும் தமிழ் விடுதலைக்காக உழைக்கக்கூடிய வசதி வடமாகாண மக்களுக்கே இருந்தது. அவர்கள், இலகுவாகப் பிரிக்கப்படக்கூடிய பிரதேசத்தில் பெருந்தொகையினராக வாழ்ந்திருந்தது மாத்திரமன்றி, அவர்களிடையே சிங்கள மக்கள் கலந்து வாழ்வதும் குறைவாக இருந்தது. அவர்களே ஆங்கிலக் கல்வியினாலும் அதிக பயன் பெற்றிருந்தனர். ஆனபடியால் இலங்கை வாழ் தமிழ் இனத்துக்காகத் தொண்டு செய்யும் பொறுப்பு, பெரும்பாலும் அவர்களையே சார்ந்திருந்தது. தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக நடைபெற்ற அரசியற் கிளர்ச்சிகள், பெரிதும் வடமாகாணத்திலேயே ஆரம்பித்தன. வடமாகாணத்தினருக்குக் கூடுதலான வசதிகளிருந்தமையால், இக்கடமை அவர்களையே சார்ந்தது. யான கூறப்போகும் அரசியற் கிளர்ச்சிகள், பெரும்பாலும் அவர்களாலேயே நடத்தப்பட்டன. ஆயினும், தமிழ் பேசும் மக்கள் எல்லோரினதும் சுதந்திர உணர்ச்சிக்கு அவை எடுத்துக்காட்டாகும். சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பேயில்லாது, இந்நாட்டுக்கு ஓரளவு சுயாட்சி வழங்கிய முதல் அரசியற்றிட்டம் டொனமூர்த் திட்டமேயாகும்.

டொனமூர் அரசியற்றிட்டத்தின் கீழ் நடைபெற்ற முதற் பொதுத்தேர்தலை யாழ்ப்பாண மக்கள் பகிஷ்கரித்து விட்டனர். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு, அரசாங்க சபையில் யாழ்ப்பாணப் பிரதிநிதிகள் எவருமே இருக்கவில்லை . இப்பகிஷ்காரம் அந்த அரசியற்றிட்டத்துக்குள்ள எதிர்ப்பையே பிரதிபலித்தது. இந்த நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே இது ஒப்பற்றதொரு சம்பவமாகும். அந்த அரசாங்க சபைக்கு நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலிலே அந்த அரசியற் திட்டத்தை மாற்றி, சிறுபான்மையோருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற ஒரே கொள்கையுடைய பிரதிநிதிகளே வடமாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். 

அடுத்த பொதுத்தேர்தல் இப்போதைய சோல்பரி அரசியற்றிட்டத்தின் கீழ், சென்ற 1947ஆம் ஆண்டிலே நடைபெற்றது.

இத்திட்டம் சிறுபான்மையினருக்குச் சாதகமாகத் திருத்தியமைக்கப் படமாட்டாது என்றே தோன்றியது. இச்சந்தர்ப்பத்திலே தமிழ் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்றே அரசியல் விஷயங்களை நுணுகி நோக்குவோர் பலர் எதிர்பார்த்தனர். ஆனால். என்னுடைய பேச்சின் முற்பகுதியில் யான் குறிப்பிட்டதைப்போல. தமிழ் பேசும் மக்களின் விடுதலைப்போரினைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்ற தீர்ப்பே தமிழ்த் தொகுதிகளிலிருந்து கிடைத்தது. இத்தருணத்திலே திருகோணமலையும், வடமாகாணத்துடன் சேர்ந்துகொண்டது. இதிலிருந்து, இவ்விஷயத்தையிட்டு தமிழ் மக்களுடைய அபிப்பிராயம் கோரப்பட்ட நேரத்திலெல்லாம், உரிமைப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றே அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என்பது தெளிவாகின்றது. தமிழ்ப் பொதுமக்கள் என்றுமே தமது இலக்கினின்றும் பிறழவில்லை. வருங்காலத்திலும் அவர்கள் தமது இலக்கினின்றும் தவறமாட்டார்கள் என்ற பெரிய நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இவ்விஷயத்தில் மட்டக்களப்பில் வாழும் தமிழ் பேசும் மக்களின் கருத்தும், திருகோணமலையிலும் வடமாகாணத்திலுமுள்ள நம் சகோதரர்களின் கருத்தை ஆதரிப்பதாகவே இருக்கின்றதென்பது பல குறிகளிலிருந்து தெளிவாகின்றது. இங்ஙனமாக, இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களுக்கெல்லாம் தங்களுடைய இன்றைய அரசியல் நிலையைப் பற்றியும் எதிர்கால நிலையைப் பற்றியும் ஒரு நிலையான கொள்கை உண்டு என்று விளங்குகின்றது. அவர்களுக்கு ஒரு நிலையான குறிக்கோள் உண்டு.

சுருக்கமாகக் கூறினால் அவர்களுக்குத் தாங்கள் ஒரு தனித்தேசிய இனம் என்ற உணர்ச்சி உண்டு. இம் மக்களின் நலத்துக்காக உழைக்க விரும்புவோர் உற்சாகமூட்டக்கூடிய இவ்வுணர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
நமது மக்களின் அரசியல் இலட்சியத்தை அடைவதற்கு, கட்டுப்பாடான முறையில் வேலை செய்வது அத்தியாவசியமாகும். ஆனபடியால், தமிழ் பேசும் மக்களின் விடுதலையைக் காண்பதற்கு விரும்புபவர்களாய், நமது மக்களின் எதிர்காலத்தில் நம்பிக்கை உள்ளவர்களாய் உள்ள உண்மை ஊழியர்களை ஒன்று சேர்த்து ஒரு ஸ்தாபனம் நிறுவுதல் வேண்டும். 

இனி, தமிழ் பேசும் மக்கள் சென்ற காலங்களில் அரசியல் உலகிலே தங்களை ஆபத்து எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாக எண்ணியது சரியோவென்று கவனிப்போம். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இன்றைய அரசியற்றிட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேற் சிறிது காலந்தான் ஆகிறது. இதற்கிடையில், அரசாங்கமோ – இங்கே எடுத்துச்சொல்ல முடியாத தொகையினவாய் நமக்குப் பாதகமான சட்டங்களை ஒன்றன் மேலொன்றாய் நிறைவேற்றியும், பரிபாலனத் துறையில் நம்மைப் பாதிக்கக் கூடிய கருமங்களை ஆற்றியும் கொண்டுவருகின்றது. தெளிவாகப் புலப்படுகின்ற சில உதாரணங்களை மாத்திரம் இங்கே எடுத்துக்காட்டினாற் போதுமென்று கருதுகின்றேன், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களில், அரைப் பங்கினரைப் பிரஜாவுரிமை யற்றோராகச் செய்யும் ஒரே நோக்குடன், அரசாங்கம் பிரஜாவுரிமைச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றது. அந்நியர்களுக்கு எதிராகவே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவென்று வெளிக்குக் கூறிக்கொள்கின்றனர். இது ஒரு போலி நியாயமாகும். இலங்கையின் மத்திய பாகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏழு லட்சம் தமிழ்த் தொழிலாளர்களுடைய பிரஜாவுரிமையைப் பறிப்பதே இச்சட்டங்களின் உண்மை நோக்கமாகும்.

இவர்களுள்ளே பெரும்பாலானோர் வேறு நாட்டையே அறியமாட்டார்கள், அவர்களெல்லோரும் இந்தியர்களல்லர்; இலங்கையர்களே. தமிழ்பேசும் மக்களாக இருப்பதே அவர்களுடைய ஒரே ஒரு குற்றம். அரசியல் அதிகாரம் எண்ணுத் தொகையினையே பொறுத்திருக்கின்றது. இந்த மலைநாட்டுத் தமிழர்களைச் சேர்த்து எண்ணினாலும், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அரசியலதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றார்கள். 

இவர்களுள் மலைநாட்டுப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கும் தமிழ் பேசும் மக்கள், தொகையில் மிகவும் குறைந்த அரசியல் அநாதைகளாய் விடுவார்கள். இது போதாதென்று, இந்த மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்குச் சட்டம் இயற்றிவிட்டார்கள். இது கொடுமையிற் கொடுமையாகும். அரசாங்கத்தின் நோக்கம், இந்நாட்டில் வசிப்பதற்குப் பூரண உரிமையுடைய இம்மக்களை இந்நாட்டைவிட்டுத் துரத்துவது; அல்லது அவர்களைப் பலவந்தமாகத் துரத்துவது; அல்லது அவர்களைப் பலவந்தமாகச் சிங்களம் பேசும் மக்களாக மாற்றுவதுதான் என்பது எவருக்கும் எளிதிற்புலனாகும். 
தேசியக்கொடி விஷயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம், தமிழ் பேசும் மக்களுடைய உணர்ச்சிகளையும் உரிமைகளையும் உதாசீனம் செய்வதாக இருக்கின்றது.

சிங்கக்கொடி – சிங்கள மன்னரின் கொடியேயாகும். இன்று, அது சிங்களவருடைய அதிகாரத்தின் சின்னமாக விளங்குகின்றது. அந்தக் கொடியே நடைமுறையில் இலங்கையின் தேசியக்கொடி எனக் கொள்ளப்படுகின்றது. பல்வேறு இனங்கள் வாழும் நாட்டின் தேசியக்கொடியாக, ஒரு இனத்தவரின் கொடியைக் கொண்ட நாடு வேறு எதுவும் உலகிலில்லை. தேசியக்கொடி விஷயத்தில் அரசாங்கத்தின் கொள்கை, தமிழ் பேசும் மக்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. அரசாங்கம், அவர்கள் இங்கு வசிப்பதைச் சகித்துக் கொண்டிருக்கின்றது; அவ்வளவுதான். 

அரசாங்கத்தின் குடியேற்றக்கொள்கையானது, இவையெல்லாவற்றிலும் பார்க்கத் தமிழ்பேசும் மக்களுக்குக் கூடிய ஆபத்து விளைவிக்கக் கூடியதாய் இருக்கின்றது. இக்கொள்கையின் ஆரம்பத்தைத்தான் கல்லோயாவிற் காண்கின்றோம். கல்லோயாத் திட்டத்தின் கீழ் நீர்ப்பாய்ச்சப்படும் பிரதேசம், தமிழ் பேசும் பகுதியாகிய கிழக்கு மாகாணமேயாகும். தமிழ் பேசும் இப்பிரதேசத்திலே, அரசாங்கம், சிங்கள் மக்களைக் குடியேற்றத் திட்டமிட்டுள்ளது என்பதற்குச் சான்றுகளுள். இது உண்மையாயிருந்தால், இன்றைய தமிழ் பேசும் பிரதேசத்தைக் குறைப்பதற்கே அரசாங்கம் அநீதியான முறையில் தன் அதிகாரத்தை உபயோகிக்கின்றதென்பது தெளிவு. தடுப்பாரின்றி இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், சில வருடங்களுக்கிடையில் இந்நாட்டிலே தமிழ்ப்பிரதேசமே இல்லா தொழியும்.

நிதி மந்திரியவர்கள் விளக்கியபடி, அரசியல் மொழி விஷயத்திலே தமிழ் பேசும் மாகாணங்களைப் பரிபாலன முறையிற் பிரித்து விடுவதும்; மற்றைய ஏழு மாகாணங்களிலும் சிங்களத்தையே அரசாங்க மொழியாகச் செய்வதும் தான் அரசாங்கத்தின் கொள்கையாகும். இவ்வேழு மாகாணங்களிலே, குறைந்தது இரண்டு மாகாணங்களிலாவது, தமிழர்கள் செறிந்து பெரும்பான்மையோராக வாழும் பிரதேசங்கள் இருக்கின்றன. இவர்களிடம் அரசாங்கம் நீதியாக நடந்துகொள்ள விரும்பினால், அவர்களுடைய பிரதேசத்தின் பரிபாலன விஷயங்களில் அவர்களுடைய மொழியையே உபயோகிக்க வேண்டும். ஆனால், இது நடைபெறப்போவதில்லை. இப்படியான செயல்களினால் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களை ஆளுவதற்கு, இன்றைய அரசாங்கம் தர்ம நீதிப்படி அருகதையற்ற தாகிவிட்டது. அவர்கள் அப்படி ஆளுவதற்கு அதிகார வலிமையொன்றே உரிமையளிக்கின்றது.

இரண்டேயிரண்டு வருடச்சுயாட்சியில், தமது சொந்த நாட்டிலேயே இவ்வளவு கீழ்நிலையடைந்து விட்டார்கள் ! இன்றைய அரசாங்கம் தங்களுடையதென்று தமிழ் பேசும் மக்கள் கருதவில்லை, இந்தச் சூழ்நிலையில் யாம் செய்யவேண்டுவதென்ன ? நடந்தது நடக்கட்டுமென்று வாளாதிருப்பதா ? அவ்விதம் இருத்தல் நமக்கோ-நமது நாட்டுக்கோ நன்றன்று. நாம் ஆண்மையுடன் முயன்று இப்பிரச்சினையைத் தீர்க்க ஒருவழி காணுதல் வேண்டும். அவ்வழிதானென்ன ? கூடுதலான பிரதிநிதித்துவம் கோரினோம்; அது கிட்டவில்லை . வேறோர் பரிகாரம் தேடியாக வேண்டும். இதற்காக, பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழுகின்ற பிற நாடுகளைப் பார்ப்போம். இலங்கையில் போலவே, அந்நாடுகளிலும் பல்வேறு மொழிகளைப் பேசும் இனம் ஒவ்வொன்றும் தத்தம் உரிமைகளைக் கவனமாகப் பேணிவந்தன. சிறிய மொழிவாரி இனங்கள் பெரிய மொழிவாரி இனங்களால் விழுங்கப்படாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டன. இவ்விதம், மொழிவாரி இனங்களுக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகள் பல தடவைகளில் யுத்தத்தில் முடிந்து, பெரிய தேசிய இனங்களும் மோதிக்கொள்ள நேரிட்டதுண்டு. இவ்வித சச்சரவுகளை நீக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று. மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட பூரண சுதந்திர அரசுகளை அமைப்பது; இதிலும் பார்க்கத் தீவிரங் குறைந்ததான மற்றைய வழி, மொழிவாரிச் சுயாட்சி மாகாணங்களை அமைத்து, அவற்றை இணைக்கும் ஒரு மத்திய அரசாங்கத்தையுடைய சமஷ்டி அரசை ஏற்படுத்துவதே .

இவ்விரு முறைகளையும் கையாளுவதற்கு, வெவ்வேறு மொழிபேசும் இனங்கள் பிரிக்கப்படக்கூடிய பிரதேசங்களில் வாழுதல் வேண்டும். சமஷ்டி அரசியலானது, உலகிற் பல பாகங்களிலும் இவ்வித பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்த்துவைத்திருக்கிறது. பிரெஞ்சு-ஆங்கில மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட கனடா தேசமும்; பலவாய் , ஜெர்மன், பிரெஞ்சு – இத்தாலிய சுவிற்சலாந்து தேசமும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். ரஷ்ய தேசத்திலும் சுயாட்சி கொண்ட மொழிவாரி மாகாணங்களே அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே ஒரு தனியான பிரதேசத்தில் வாழும் ஒவ்வொரு மொழி பேசும் மக்களும், ஒரு தனித் தேசிய இனத்தினராகக் கருதப்படுகின்றனர். இந்தியாவிலும், இந்திய தேசியக் காங்கிரசும் இந்திய அரசாங்கமும் மொழிவாரி மாகாணங்களை அமைக்க வேண்டுமென்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு, அப்படியே அமைத்தும் வருகின்றார்கள். தனி ஆந்திர மாகாணமொன்று உருவாகின்றது. கன்னடர் தமக்கொரு மாகாணம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்கின்றனர். இவையெல்லாம் ஒவ்வொரு மொழிவாரி இனமும் தன்னைத்தானே பாதுகாக்க விரும்பும் இயற்கையுணர்ச்சியின் பயனாக ஏற்பட்டவையேயாகும். 

யாம் கோருவதும் இதுதான். ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும் ஒரு சுயாட்சிச் சிங்கள மாகாணமும் அமைத்து, இரண்டுக்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள – சமஷ்டி அரசு – இலங்கையில் ஏற்படவேண்டும். தமிழ் பேசும் தேசிய இனம் பெரிய தேசிய இனத்தால் விழுங்கப்பட்டு அழியாதிருக்க வேண்டுமேயானால் இவ்வித சமஷ்டி ஏற்படுவது அவசியமாயிருக்கிறது. தமிழ் பேசும் பிரதேசங்களை இலகுவாகப் பிரித்துவிடலாம். இடையிடையே இரு மொழிகளைப் பேசும் மக்களும் கலந்து வாழும் பிரதேசங்களும் உண்டு. ஆனால் இதைக் காரணமாகக் கொண்டு ஒவ்வொரு மொழியைப் பேசும் மக்களும் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களை, சுயாட்சி மாகாணங்களாக வகுப்பதற்குத் தடை ஏற்படக்கூடாது. சமஷ்டி அரசியலால் ஒருவரும் நஷ்டமடையப்போவதில்லை . நிச்சயமாகச் சிங்கள மக்கள் நஷ்டமடையவே மாட்டார்கள். ஏனென்றால், இது பெரும்பான்மையோருடைய பிரதிநிதித்துவத்தைக் குறைத்து. சிறுபான்மையோருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிக்கும் திட்டத்தைப் போன்றதன்று. ஆதலால், சமஷ்டி அரசியல் எல்லோரும் விரும்பவேண்டிய ஓர் இலட்சியமாகும். 

சுயாட்சித் தமிழரசை நிறுவவேண்டுமென்று யாம் கோருவதற்குப் பல காரணங்களுண்டு. முஸ்ஸிம்கள், தமிழர்களாகிய தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் இப்பொழுதே , தாங்கள் – தாழ்ந்தவர்கள் என்ற மனப் பான்மையைப் பெற்று வருகிறார்கள். ஒரு மனிதனின் பூரணமான மனோவிருத்திக்கு, அவன், “தானிருக்கும் நாடு தன்னுடையதே” என்றும், “நாட்டின் அரசாங்கமும் தனதே” என்றும் கருதவேண்டியது அவசியமாகும். இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையே இன்று இவ்வுணர்ச்சி இல்லாதிருக்கிறது. அவர்கள், தங்கள் பிரதேசங்களைத் தாங்களே ஆளுவதன் மூலம், அவ்வரசாங்கம் தங்களுடையதே என்று கருதுவதற்கு உரிமை இருக்க வேண்டும். இன்று கூட , தமிழ்ப்பகுதிகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும், சிங்களப் பகுதிகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்குமிடையே, இவ்வுணர்ச்சியைப் பொறுத்தவரையில் ஒரு வேற்றுமை இருப்பதைக் காணலாம்.

சிங்களப் பகுதிகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள், தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றார்கள் ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் வசிப்பவரிடையே சுதந்திர உணர்ச்சி, இன்னும் நிலவுகிறது. தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சுதந்திர அரசு வேண்டுமென்ற இந்த இயக்கங்கூட, தமிழ் பேசும் பகுதிகளில் வசிக்கும் மக்களாலும், அப்பகுதிகளுடன் இன்னும் தொடர்புடையவர்களாலுமே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாணத் தமிழர்கள் இத்திட்டத்தை ஆதரிக்கும் அளவுக்கு அங்குள்ள முஸ்லிம் மக்களும் இதை வரவேற்கின்றனர். கிழக்கு மாகாணம் முழுவதும் தமிழ் அரசின் பகுதியாக வேண்டுமென்றால், தமிழ் பேசும் அவ்விரு சாகியத்தாரும் ஒன்றுசேர வேண்டும். ஆனால், எங்களுடைய இயக்கம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தமிழ்ப்பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? அல்லது சிங்களம் பேசும் பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கு முஸ்லிம்களுக்கே பூரண சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். தமிழ் மாகாணங்கள் என்று அழைக்கப்படும் பகுதிகள், இந்நாட்டில் மிகவும் குறைவாக அபிவிருத்தி செய்யப்பட்ட பகுதிகளாக இருக்கின்றன.

இலங்கையின் பரப்பில் முப்பது விகிதத்தையும்; மொத்த சனத்தொகையிற் பத்து விகிதத்தையும் இம் மாகாணங்கள் கொண்டிருக்கின்றன. இவை நன்றாக அபிவிருத்தி செய்யப்படக்கூடியன. போதிய நீர்ப்பாசன வசதிகளுடன் – சம தரையுள்ள இப் பிரதேசங்கள், தமிழ் பேசும் மக்களுடைய அரசாங்கத்தினாலன்றிச் சீரிய முறையில் அபிவிருத்தி செய்யப்படமாட்டா. சிங்கள அரசாங்கத்தினால் இப்பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டால், அங்கு சிங்களமக்கள் குடியேற்றப்படுவார்கள் என்பதும் எதிர்பார்க்கப்பட வேண்டியதே. கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தில் என்ன நடைபெற்று வருகின்றதென்பதை, அங்குள்ள மக்கள் இப்பொழுதே உணர்ந்துவிட்டார்கள். 

எங்களுடைய ஒரேயொரு நோக்கம், ஐக்கிய இலங்கைச் சமஷ்டியின் அங்கமாக, ஒரு சுதந்திர அரசை நிறுவுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் விடுதலையைப் பெறுவதேயாகும். செய்யவேண்டிய வேலை எவ்வளவு கஷ்டமானதென்பதை யாம் உணர்ந்தேயிருக்கின்றோம். ஆயினும் அப்பணியைச் செய்து முடிக்க எம்மால் இயலும். அதைச் செய்தே தீரவேண்டும். எமக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் பல விஷயங்கள் உள்ளன. யான் முன் குறிப்பிட்டதைப்போல, எமது மக்கள் தம் எதிர்காலத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் உறுதியான அரசியற் கொள்கையே எமக்குச் சாதகமான பெரிய சக்தியாகும். யாம் சிறந்த முறையில் – நம்பிக்கைக்குரிய ஊழியர்களுடன் ஒரு கட்சியை அமைப்போனால், எமது மக்கள் எம்மைக் கட்டாயம் ஆதரிப்பார்கள். சென்ற காலங்களில் தலைவர்களின் உறுதியற்ற நிலையே, எமது பலவீனத்துக்குக் காரணமாயிருந்தது.

இக்குறையை நிவர்த்தி செய்தாலன்றி, எமது கட்சியும் தோல்வியுறும். ஐரிஷ் தேசியவாதிகளைப்போல, சுதந்திரத் தமிழ் அரசு நிறுவப்படும் வரை, “பதவி ஏற்கவே மாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும். உள்ளத்தில் ஒரு நோக்கமும் பேச்சில் ஒரு நோக்கமுமாக யாம் இருத்தலாகாது.

செல்வத்திற் குறைந்த எங்களுக்கு, வலிமை பொருந்திய நண்பர்களும் இல்லை. நேர்மையையும் – மன உறுதியையும் – இலட்சியத் தூய்மையையுமே நாங்கள் ஆயுதங்களாகக் கொள்ள வேண்டும். இந்திய விடுதலை-இப்படியான தார்மீக சக்திகளினாலேயே பெறப்பட்டது. எமது விடுதலை – வெளிச்சக்திகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. யாம் வெற்றி பெறுவதற்கு அருகதையுள்ளவர்களாக வேண்டுமானால், நமது சமூகத்திலிருக்கும் குறைகளைக் களைந்து அதைத் தூய்மை பெறச் செய்யவேண்டும். தமிழ் மக்களிடையே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருக்கின்றனர். அவர்கள் தாங்கள் மற்றவர்களால் ஒடுக்கப்படுவதாகக் கருதுகின்றனர். யாம் ஒருவருக்குக் கொடுமை செய்தால், தர்மநீதியின்படி எமக்கும் பிறரொருவர் அதையே செய்வார். தமிழ்மக்கள் அரசியல் சுதந்திரம் பெறவேண்டுமேயானால், தம் சமுதாயத்திலே உரிமையற்றவர்களாய் இருக்கும் மக்களுக்கு அவ்வுரிமைகளை வழங்க வேண்டும். 

மலைநாட்டில் வாழும் தமிழ்த் தொழிலாளர்களுடைய நிலைமையானது, இங்கு கூறிய தாழ்த்தப்பட்டோருடைய நிலையிலும் பார்க்கக் கேவலமானதாய் இருக்கின்றது. அவர்கள் அரசியலில் தீண்டாதவர்களாய் விட்டார்கள். அவர்களுக்குப் பிரஜாவுரிமை இல்லாமலிருப்பது மாத்திரமன்றி, தமக்கென ஒரு நாடுமற்ற அகதிகளாகவு மிருக்கின்றார்கள். ஏனைய தமிழ் பேசும் மக்கள் இவர்களுக்கு வந்திருக்கும் இன்னலைத் தங்களுக்கு வந்ததாகவே கருதுதல் வேண்டும். அவர்கள் உதவிக்கு எதிர்பார்ப்பது இந்தியாவையல்ல ; சுதந்திரம் விரும்பும் இலங்கை வாழ் மக்களிடமிருந்தே அவ்வுதவி வருதல் வேண்டும். இவ்விரண்டு விஷயங்களும் – நீங்கள் ஆரம்பிக்க வந்திருக்கும் இக்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் இடம் பெறுதல் வேண்டும். 

இறுதியாக, என்னுடைய பேச்சினைப் பொறுமையுடனும் ஆதரவுடனும் கேட்டுக் கொண்டிருந்தமைக்காக உங்களுக்கு யான் நன்றி கூறுகிறேன். உங்களுக்குள்ளே எத்தனையோ பேருடைய வீரத்தை யான் நேர்முகமாக அறிவேன். அவ்வீரமானது – என்னகத்தும் செறிந்து, எனக்கும் உற்சாகம் அளிக்கின்றது. குற்றங்களிருந்தால் மன்னித்து, எங்கள் தொண்டின் ஒரு பகுதியாக என் முயற்சியையும் ஏற்றுக்கொள்ளும்படி, உங்கள் எல்லோரையும் பணிவுடன் வேண்டிக்கொள்ளுகின்றேன். 
வணக்கம்.

“தந்தை செல்வா ஒரு காவியம்” எனும் நூலிலிருந்து

https://www.namathumalayagam.com/2020/02/1949sjvSpeech.html

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply