தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: அரசியல் காட்சிகளை மாற்றிய 1967ஆம் ஆண்டு தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: அரசியல் காட்சிகளை மாற்றிய 1967ஆம் ஆண்டு தேர்தல்
  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

19 பிப்ரவரி 2021

அண்ணாதுரை

1967ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தல், தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனைத் தேர்தலாக மாறியது எப்படி? சுதந்திரத்திற்குப் போராடிய காங்கிரஸை விட்டு, தி.மு.கவை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தது ஏன்?

1967 நெருங்கியபோது தமிழக அரசியல் களம் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தது. தேர்தல் களத்திற்கென இந்திய தேசிய காங்கிரஸ், தி.மு.க., சுதந்திரா கட்சி, ஃபார்வர்ட் பிளாக், நாம் தமிழர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தயாராக இருந்தன. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, 1964ல் இரண்டாகப் பிரிந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்றும் இயங்க ஆரம்பித்திருந்தனர். தி.மு.கவிலிருந்து பிரிந்துவந்து ஈ.வே.கி. சம்பத் தான் ஆரம்பித்த தமிழ் தேசியக் கட்சியை 1964லேயே காங்கிரசுடன் இணைந்திருந்தார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

1962ல் காங்கிரஸ் வெற்றிபெற்று, காமராஜர் முதலமைச்சரானார். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே அவர் பதவிவிலகி கட்சிப் பணிக்குச் சென்றுவிட, எம். பக்தவத்சலம் முதலமைச்சராகி யிருந்தார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பக்தவத்சலத்தின் ஆட்சிக்காலத்தில் விமர்சனத்திற்குரிய பல விஷயங்கள் நடந்திருந்தன. 1965ல் இந்தியை ஒரே ஆட்சி மொழி ஆக்குவதை எதிர்த்து தி.மு.க. நடத்திய போராட்டம், காங்கிரஸ் அரசுக்கான எதிர்ப்பை ஒருமுகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது, காங்கிரஸ் எதிர்ப்புப் போராட்டமாக மாறியது. 1937ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குக் காரணமாக இருந்த ராஜாஜி, இந்தி திணிப்புக்கு எதிராக கடுமையாக முழங்கினார். சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். மத்திய அமைச்சரவையிலிருந்து சி. சுப்ரமணியனும் ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்தனர்.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு முன்பாகவே, 1964ல் தமிழ்நாடு முழுவதும் அரசிக்கு நிலவிய தட்டுப்பாடு மக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தேர்தலை பக்தவத்சலம் தலைமையில் எதிர்கொண்டால், படுதோல்வி உறுதி என்று கருதிய காமராஜர் மீண்டும் மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவுசெய்திருந்தார். ஆனால், தி.மு.க. இந்த முறை வாய்ப்பை தவறவிடத் தயாராக இல்லை.

காங்கிரசிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கவிரும்பிய அண்ணா கொள்கை ரீதியாக எதிரும்புதிருமாக இருந்த இடதுசாரிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் வலதுசாரிக் கட்சியான ராஜாஜியின் சுதந்திராவையும் தங்கள் கூட்டணியில் இணைத்தார். 1964ல் இருந்தே தி.மு.கவோடு நெருக்கமாகியிருந்தார் ராஜாஜி. இந்த முறை எப்படியும் காங்கரஸை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதில் அண்ணாவைவிட ராஜாஜியே தீவிரமாக இருந்தார் என்று சொல்லலாம்.

இவர்கள் தவிர, சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழரும் கூட்டணியில் இணைந்தது. ஆகவே தினத்தந்தி என்ற நாளிதழின் பிரச்சார பலம் கூட்டணிக்குக் கிடைத்தது. ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகம், காயிதே மில்லத்தின் முஸ்லீம் லீக், பிரஜா சோஷலிஸ்ட் ஆகிய கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இணைந்தன. தமிழரசுக் கழகமும் நாம் தமிழர் கட்சியும் தி.மு.கவின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்தக் கூட்டணி ஐக்கிய முன்னணி என்று அழைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலை தனித்தே எதிர்கொண்டது. அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் யாருடனும் இணையாமல் தனித்தே போட்டியிட்டது.

1962ஆம் ஆண்டுத் தேர்தலில் 206 தொகுதிகளைக் கொண்டிருந்த சென்னை மாகாணத்தில் தொகுதி மறுசீரமைப்பு நடந்ததால் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்திருந்தது. இதில் 189 தொகுதிகள் பொதுத் தொகுதிகள். 45 தொகுதிகள் தனித் தொகுதிகள்.

பெரியார்

கடந்த தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலிலும் பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது. காங்கிரசிற்கு ஆதரவாகவும் தி.மு.கவுக்கு எதிராகவும் ஈ.வி.கே. சம்பத், சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், பத்மினி ஆகியோர் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஜெமினி ஸ்டுடியோஸின் சார்பில் சிவாஜி, நாகேஷ் நடிக்க வாழ்க நம் தாயகம் என்ற காங்கிரஸ் பிரசாரப் படமும் வெளியிடப்பட்டது.

தேர்தலுக்கு ஒரு மாதமே இருந்த நிலையில், நடந்த ஒரு சம்பவம் தேர்தல் களத்தில் பெரும் அனலை ஏற்படுத்தியது. திராவிடர் கழக ஆதரவாளரும் நடிகருமான எம்.ஆர். ராதா, ஜனவரி 12ஆம் தேதி தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆரை அவரது வீட்டில் வைத்தே சுட்டார்.

கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெறும் படங்களும் கையைக் கூப்பியபடி உள்ள படங்களும் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன. தி.மு.கவின் பிரச்சாரத்தின் முக்கிய சின்னமாக இந்த போஸ்டர் உருவெடுத்தது.

இந்தத் தேர்தலுக்காக விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது தி.மு.க. அரசிப் பஞ்சம் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருந்ததால், அதனைத் அந்தத் தேர்தலின் மையப் பிரச்சனையாக மாற்ற விரும்பிய அண்ணா, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கும் என்றார். மூன்றுபடி இல்லாவிட்டாலும் ஒரு படி நிச்சயம் என்றார். படி அரிசித் திட்டம் என்ற இந்த வாக்குறுதி, மக்களின் மனநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

எம்ஜிஆர்

காங்கிரசின் சார்பில் காமராஜர் விருதுநகர் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். முதலமைச்சர் பக்தவத்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணா இந்தத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவில்லை. தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். மு. கருணாநிதி சைதாப்பேட்டையிலும் எம்.ஜி.ஆர். பரங்கிமலை தொகுதியிலும் போட்டியிட்டனர்.

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் காங்கிரசின் நிலைப்பாடு, அரிசிப் பஞ்சம், தி.மு.கவின் வலுவான கூட்டணி, தேர்தல் நெருக்கத்தில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டது ஆகியவை எல்லாம் சேர்ந்து தி.மு.கவுக்கு சாதகமான காற்று வீசுவதை உணர்த்தின. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சென்னை மாகாணத்திற்கான சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. மொத்தம் 778 பேர் களத்தில் இருந்தார்கள். பிப்ரவரி 5, 18, 21 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திண்டிவனம் தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதால், 233 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கிவைத்தன. தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்திருந்தது. நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சி.பா. ஆதித்தனார் (ஸ்ரீவைகுண்டம்), ம.பொ.சி (தியாகராய நகர்) என தி.மு.கவின் சார்பில் போட்டியிட்ட பெருந்தலைகள் அனைவரும் வெற்றிபெற்றிருந்தனர்.

காங்கிரஸ் கூடாரத்தை தோல்வியின் அலை அடித்துச்சென்றிருந்தது. முந்தைய பக்தவத்சலம் அமைச்சரவையில் இருந்தவர்களில் பூவராகனைத் தவிர அனைவரும் தோல்வியடைந்திருந்தனர். காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் மாணவர் தலைவரான பெ. ஸ்ரீநிவாஸனிடம் 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போயிருந்தார்.

அண்ணாதுரை

174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 137 இடங்களைக் கைப்பற்றியது. 232 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 51 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. தி.மு.க. கூட்டணியில் இருந்த சி.பி.எம். 11 இடங்களையும் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 4 இடங்களையும் சுதந்திரா கட்சி 20 இடங்களையும் தனித்து நின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும் பிடித்தது. பாரதீய ஜன சங்கம் ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை.

“தமிழ்நாடு முழுவதும் வைரஸ் பரவியிருப்பதைப் பார்க்கிறேன். மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார் தோல்வியடைந்த முதலமைச்சர் பக்தவத்சலம். ஆனால், காமராஜர் மக்கள் மாற்றத்தை விரும்பியிருப்பதாகக் கூறினார். “மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி தி.மு.கவிற்கு வாக்களித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். தி.மு.க. மந்திரிசபை அமைத்து வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகள்” என்றார் அவர்.

காமராஜர் தோல்வியடைந்ததைக் கேட்டு, அதிர்ச்சியடைந்ததாகச் சொன்னார் தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணா. “ஒரு புதிய சமுதாயத்தின் உதயம். நமது பொற்காலத்தின் விடிவெள்ளி” என மருத்துவமனையிலிருந்தபடி அறிக்கை வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.

தி.மு.கவிற்குப் பெரும்பான்மை கிடைத்ததையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இணைந்து அண்ணாவை முதல்வராகத் தேர்வுசெய்தனர். இதையடுத்து ஆளுநர் உஜ்ஜல் சிங் தி.மு.கவை ஆட்சியமைக்க அழைத்தார். மார்ச் ஆறாம் தேதியன்று அண்ணா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

அண்ணாதுரை அமைச்சரவை

முதலமைச்சரான அண்ணா நிதி, உள்துறை ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். நெடுஞ்செழியன் கல்வித்துறை அமைச்சராகவும் மு. கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தவிர, மதியழகன், கோவிந்தசாமி, சத்தியவாணி முத்து, மாதவன், சாதிக் பாட்சா, முத்துசாமி ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.

முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பாக, தி.மு.க. தலைவர்கள் அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி ஆகியோர் பெரியாரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தனது தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அண்ணா, சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கப்பட்டார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் முரசொலி மாறன் வெற்றிபெற்றார்.

இந்த சட்டமன்றத் தேர்தலுடன் இணைந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. பெரும் வெற்றிபெற்றிருந்தது. தி.மு.க. 25 இடங்களையும் சுதந்திரா கட்சி 6 இடங்களையும் சி.பி.எம். 4 இடங்களையும் முஸ்லீம் லீக் ஒரு இடத்தையும் பிடித்தது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 3 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

https://www.bbc.com/tamil/india-56116847

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply