இந்தியாவின் நிலையான நிலைப்பாடு இரண்டு தூண்களில் உள்ளது!

இந்தியாவின் நிலையான நிலைப்பாடு  இரண்டு தூண்களில் உள்ளது!

நக்கீரன்

சாத்தான் வேதம் ஓதுகிறது என்பது தமிழில் வழங்கும் ஒரு பழமொழி. உண்மையில் இது ஒரு ஆங்கிலப் பழமொழி.  பிரபல ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர் தாம் எழுதிய  வெனிஸ் வாணிகன் (The Merchant of Venice) என்ற நாடகத்தில் வருகிறது.   “பிசாசு தன் நோக்கத்திற்காக வேதத்தை மேற்கோள் காட்ட முடியும் (The devil can cite Scripture for his purpose) என்பதுதான் அந்த சொற்றோடர்.

Human Rights Council | Human Rights Watch

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பெப்ரவரி 23 ஆம் நாள் காணொளி மூலம் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பேசினார். அவர் தனது பேச்சை முடிக்கும் போது புத்த பிரானின் போதனையை மேற்கோள் காட்டினார்.

UNHRC resolutions: Dinesh announces withdrawal from cosponsorship in Geneva  | EconomyNext

எல்லா உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கட்டும், எல்லா உயிரினங்களும் துன்பத்திலிருந்து விடுபடட்டும். எல்லா உயிரினங்களும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.

வெறியுறவு அமைச்சர் புத்தரின் போதனையை தனது பேச்சின் முடிவில்  மேற்கோள் காட்டிய போது இந்த சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தமது உரையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைர் அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்ட  இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது எதிர்பார்க்கப்பட்டதே.

சென்று ஆண்டு (2020) பெப்ரவரி மாதத்தில் ஐநாமஉ பேரவையின் 43 ஆவது அமர்வின் போது  சிறிலங்கா அரசாங்கம்  ஐநாமஉ பேரவையின் தீர்மானம் 30/1 மற்றும் 40/1  இரண்டுக்கும் டுத்த  இணைஅனுசரணையில் இருந்து முற்றாக விலகுவதாக அறிவித்திருந்தது. அப்படி சிறிலங்கா விலகிக் கொண்டாலும் தீர்மானங்கள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் என்பது தெரிந்ததே.

ஐநாமஉ பேரவையின்  உயர் ஆணையர்  மிச்செல்  பச்சலெட் வெளியிட்ட  17 பக்க அறிக்கையில்  சிறிலங்கா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

UN Rights Chief raises concerns in report on Sri Lanka to UNHRC | Colombo  Gazette

உள்நாட்டு யுத்தம் முடிந்து சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப் படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை தொடர்கின்றன என்றார்.

2015 ஆம் ஆண்டில், மனித உரிமை மீறல் நடக்காதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதிமொழி அளித்த பிறகும், தற்போதைய அரசு, அதன் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே, உண்மையைக் கண்டறியவும் குற்றங்களுக்குப்  பொறுப்புடைமையாக்கும் நடவடிக்கையிலும் தோல்வி அடைந்துள்ளது.  போரில் உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்வு நிர்மூலமாகியிருக்கிறது. அதுமட்டுமன்றி அமைப்புமுறை, கட்டமைப்பு, கொள்கைகள், பணியாளர்கள் போன்றவற்றில் முந்தைய காலம் போலவே விதிமீறல்கள் தொடர்கின்றன. ஐநாமஉ பேரவையின் முக்கியமான பணி, குறைகளுக்கு தீர்வு கண்டு முந்தைய விதிமீறல்கள் நடக்காதவாறு கவனிப்பதுதான்.

கடந்த ஆண்டு, முக்கிய பகுதிகளில் மிகக் கடுமையான வகையில் சங்கடத்தை தரக்கூடிய போக்கு தீவிரமாக இருப்பதை எமது அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முந்தைய ஆண்டுகளில் வளர்ந்து வந்த சிவில் சமூகமும் தன்னிச்சையான ஊடகமும் தற்போது வேகமாக சுருங்கி வருகின்றன. நீதித்துறை சுதந்திரம், இலங்கை மனித உரிமைகள் ஆணையம், தேசிய  காவல்துறை  ஆணையம் ஆகியவை சமீபத்தில் கொண்டு வரப்பட்ட 20 ஆவது அரசமைப்புத் திருத்தம் மூலம் பலவீனமாக்கப்பட்டுள்ளன. முக்கியமான சிவில் நிர்வாக பணிகளில் வளர்ந்து வரும் இராணுவத் தலையீடு, ஜனநாயக ஆளுகை மீதான ஆக்கிரமிப்பாக பார்க்கப்படுகிறது.

பிரத்தியேக சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் காணப்படும் தொடர்ச்சியான தோல்வி அல்லது விதிமீறல்களுக்குக் காரணமானவர்களை அடையாளம் காணாமல் இருப்பது, கொடூரமான குற்றங்கள் மற்றும் விதி மீறலில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளைப் பொறுப்புடைமைக்கு ஆளாக்காமல் விட்டுள்ளமை போன்றவை அரசின் அலட்சியத்தைக் காட்டுகின்றன.

தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர், அரசின் உயர் பொறுப்புகள் உள்ளிட்ட பணிகளில் சேராத வகையில், பிளவு படுத்தக்கூடிய மற்றும் தவறான சொல்லாடல்களால் தவிர்க்கப்படுகிறார்கள். சிறுபான்மை சமூகங்கள் கவலை கொவிட்- 19 சடலங்கள் கட்டாயப் படுத்தப்பட்டு தகனம் செய்யப்படுவது முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மை சமூகங்களுக்கு வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், நீண்ட கால அடிப்படையிலான அமைப்பு சார்ந்த சிக்கல்கள் இலங்கையில் தொடருகின்றன.

கடந்த கால வன்முறைகள், இப்போதும் தொடரலாம் என்ற அபாயச் செய்தியின் அறிகுறி தெளிவாகத் தென்படுகிறது. அடுத்து வந்த அரசுகள், உண்மையையும் பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட் டன. உண்மையில், மனித உரிமைகள் வழக்குகளில் அரசாங்கம் நீதி நடைமுறைகளுக்கு தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறது. 

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா தனது உரையில் ஐநாமஉ பேரவையின் ஆணையர்  மிச்செல் பச்சலெட் சமர்ப்பித்த அறிக்கையில் காணப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையுமே நிராகரித்திருந்தார். இப்படி நடக்கும் என்பது முன்னரே  தெரிந்திருந்தது. 

அமைச்சர் தனது  உரையில் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். அதாவது  “ஐநா  சாசனத்தின் 2(7) ஆவது பிரிவான தற்போதைய சாசனத்தில் உள்ள எதுவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவொரு அரசினதும் உள்நாட்டு அதிகார எல்லைக்கு உட்பட்ட விடயங்களில் தலையீடு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்காது  என்ற விதியை முழுமையாக மீறும் செயலாகும்” என்றார்.

ஐநா சாசனத்தின் 2(7) பிரிவு சொல்வது உண்மைதான். ஆனால்  மனிதாபிமான தலையீடு சமீபத்திய ஆண்டுகளில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற நாடுகளில் மனித உரிமை நிலைமையை விமர்ச்சிக்க மாநிலங்களுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் உரிமை உண்டு என்பது இப்போது மறுக்கப்படுவதில்லை. சிறிலங்கா கூட  ஐநாமஉ பேரவையின் தலையீட்டை நேற்றுவரை ஏற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறது. தீர்மானங்கள்  30/1 மற்றும் 40/1  சிறிலங்காவின் உள்நாட்டு விடயங்களில் தலையீடு செய்த நடவடிக்கைகள்தான்.

சிறிலங்கா போர்க்காலத்தில் எந்த மனித உரிமை மீறல்களையும் மீறவில்லை ஒரு கையில் மனித உரிமைப் பட்டயத்தையும் மறுகையில் துப்பாக்கியோடுதான் வி.புலிகளுக்கு எதிராகக் போராடி வெற்றிவாகை சூடியது,  போரில் ஒருவர்கூடக் கொல்லப்படவில்லை என மகிந்த இராசபக்ச தொடர்ந்து பேசி வருகிறார்.

போரின் கடைசிக் கட்டத்தில் இராணுவம் வி.புலிகளைச்  சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே வி. புலிகள் தங்களது ஆயுதங்களை மவுனிப்பதாக அறிவித்திருந்தார்கள். இதனை அடுத்து 18  மே அதிகாலை பா.நடேசன் (சமாதானச் செயலகம்) சீ. புலித்தேவன் (அமைதிச் செயலகம்)  கேணல் இரமேஷ் (தமிழீழ காவல்துறை) ஆகிய மூவர் தலைமையில் நூற்றுக் கணக்கானவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தார்கள். இந்தச் சரணையை மகிந்த இராசபக்ச, பசில் இராசபக்ச, முன்னாள் நா.உறுப்பினர்  சந்திர நேரு மற்றும் வெளியுறவு அமைச்சின் செயலாளர் பாலித கோகொன தொலைபேசி வாயிலாகச் ஒழுங்கு செய்திருந்தார்கள்.

ஆனால்  சரண் அடைந்த வி.புலிகள் எல்லோரும் சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப்பட்டார்கள். குண்டுபாய்ந்த அவர்களது உடல்கள் தரையில் வீசப்பட்டிருந்தன. உடல்களில் தீக்காயங்கள் காணப்பட்டன.  புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. கேணல் இரமேஷ் கொடூரமான முறையில் விசாரணை செய்யப்படும் காட்சி காணொளியாக வெளிவந்தது. 

18 மே 2009 அன்று மாலை மேலும் ஒரு தொகுதி வி. புலிகளின் தலைவர்கள் வட்டுவாகலில் இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவிடம் சரண் அடைந்தார்கள். இதன் கட்டளைத் தளபதி சவேந்திரா சில்வா. இதில் ஆயுதம் ஏந்தாத – சீருடை தரிக்காத தலைவர்களும் இருந்தார்கள். இவர்களை ஒரு சிறிய விசாரணையின் பின்னர் விடுவிப்பதாகக் கூறி இராணுவம் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் அழைத்துச் சென்றார்கள். அவர்களோடு வண.பிதா யோசேப் பிரான்சிஸ் அவர்களும் சேர்ந்து கொண்டார். அவர்கள் பேருந்துகளில் ஏற்றிச் சென்றதை நூற்றுக் கணக்கான குடும்ப உறுப்பினர்கள் கண்கண்ட சாட்சியாக இருக்கிறார்கள். விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட வி.புலித்தலைவர்களது பட்டியல் இதோ:

1.  செல்வராகா – மணலாறு கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவர்
2.  பாஸ்கரன்    –  மணலாறு கட்டளைப் பணியக தளபதிகளில் ஒருவர்
3.  வேலவன்  –   இம்ரான் பாண்டியன் சிறப்புத்தளபதி
4.  தளபதி லோறன்ஸ்
5.  தளபதி குமரன்
6.  இளந்திரையன்  – விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர்
7.  பிரபா  – மட்டுமாவட்ட தளபதிகளில் ஒருவர்
8.  சோ. தங்கன் – அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர்
9.   ரூபன் – வழங்கல்ப் பகுதி பொறுப்பாளர்
10. பாபு   –  நகை வாணிபங்களின் பொறுப்பாளர்
11.  வீரத்தேவன் – வைப்பகப் பொறுப்பாளர்
12.  கி. பாப்பா – விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர்
13. இராசா (செம்பியன்) –  விளையாட்டுத்துறை துணைப் பொறுப்பாளர் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள்
14.  கானகன் –   அரசியல் துறை
15. வெ. இளங்குமரன் (பேபி சுப்பிமணியன்) –  கல்விக்கழகப் பொறுப்பாளர். மற்றும் அவரது மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள் அறிவுமதி
16.  அருணா – கல்விக்கழக பொறுப்பாளர்களில் ஒருவர்
17. க.வே. பாலகுமாரன் – அவரது மகன் சூரியத்தேவன், உதவியாளர் போராளி அய்ங்கரன்
18.  சொ.நரேன் – தமிழர் புனர்வாழ்வுக்கழக துணை நிறைவேற்றுப் பணிப்பாளர்
19.  பிரியன்  –  நிருவாக சேவை பொறுப்பாளர்  மற்றும் அவரது குடும்பம்
20.  வீ. பூவண்ணன் – நிர்வாக சேவை முன்னாள் பொறுப்பாளர்
21.  தங்கையா –  நிர்வாசேவை பொறுப்பாளர்களில் ஒருவர்
22.  மலரவன்  – நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவர்
23.  பகீரதன்  – நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவர்
24.  குட்டி  –  போக்குவரத்துக் கழகப் பொறுப்பாளர்
25.  புதுவை இரத்தினதுரை –  கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர்
26.  எழிலன் (சசிதரன்) –   திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்
27.  இளம்பரிதி  –  யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்
28.  விஜிதரன் – அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளர்
29.  வீமன்  – தளபதிகளில் ஒருவர்
30.  சக்தி  – வனவள பாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் மற்றும் அவரது  குடும்பம்
31.  இ. இரவி – சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர்
32.  சஞ்சை – முள்ளியவளைக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்
33.  பரா ராதா  –  நீதி நிர்வாகப் பொறுப்பாளர்
34.  யோகி யோகரத்தினம்  – சமர்ஆய்வு மையப் பொறுப்பாளர்
35.  குமாரவேல் – இராதா வான்காப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவர்
36.  ரேகா – மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர்
37.  சித்திராங்கன்  –  மணலாறு மாவட்ட கட்டளைத் தளபதி
38.  சுகி  – மாலதி படையணித் தளபதிகளில் ஒருவர்
39.  அருணன் – கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவர்
40.  மனோஜ்  – மருத்துவப் பிரிவு
41.  லோறன்ஸ்  – நிதித்துறை.

கொழும்பிலிருந்து வெளியாகும் Sri Lanka Guardian  10-08-2010 இல் வெளிவந்த பதிப்பில் பாலகுமாரன் மற்றும் அவரது மகன் ஒரு மரவாங்கில் அருகருகே வீற்றிருக்கும் படத்தை முதல் முறையாக வெளியிட்டது.  அதன் பின்புலத்தில்  சீருடை அணிந்த ஒரு இராணுவத்தினன் நடந்து செல்வது பதிவாகியிருக்கிறது. (http://www.srilankaguardian.org/2010/08/v-balakumaran-killed-or-still-alive.html)

19  மே,  2009 அன்று  சரணடைந்த பின்னர் காணாமல் போன 110 விடுதலைப் புலிகளது முக்கிய தலைவர்கள், போராளிகளது பெயர்ப் பட்டியலை  யஸ்மின் சூக்கா (International Truth & Justice Project – Sri Lanka)  வெளியிட்டிருந்தார்.

இப்படிக் கண்கண்ட சாட்சிகள், புகைப்படங்கள், காணொளிகள் இருந்தும்  இராசபக்ச அரசாங்கம் சார்பாக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தொடர்ந்து பொய் சொல்கிறார். இது முழுப் பூசணிக்காயை ஒரு கோப்பை சோற்றுக்குள் மறைத்தது போன்றது!

வி.புலிகளின் தலைமையை திட்டமிட்டு சிங்கள – பேரினவாதம்  அநாகரிகமான முறையில் அழித்தொழித்துள்ளது.

சரண் அடைந்தவர்களைக் கொல்லக் கூடாது என்ற மரபு இதிகாச காலம் தொட்டு இருந்து வருகிறது. வாலியை இராமன் மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து கொன்றதற்குக் காரணம் நேரில் அவன் முன் தோன்றினால் வாலி சரண் அடைந்து விடுவான், அப்புறம் அவனைக் கொல்ல முடியாது என இராமன் நினைத்ததே.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஐநாமஉ பேரவையின் உறுப்பு நாட்டுப் பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் முன்மொழிந்த தீர்மானம்பற்றி தங்களது கருத்துக்களை (ஒன்றரை நிமிடம்)  பதிவு செய்து வருகிறார்கள். சில நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தும் சில நாடுகள் ஆதரித்தும் பேசியிருக்கின்றன. எல்லா நாட்டுப் பிரதிநிதிகள் பேசி முடித்த பின்னர்தான் தீர்மானம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பில் கரைசேருமா இல்லையா என்பது தெரியவரும்.

சிறிலங்கா அரசு தனக்கு 18 உறுப்பு நாடுகளது ஆதரவு இருப்பதாகச் சொல்கிறது. இப்போது  ஐநாமஉ பேரவையில் உள்ள 14 இஸ்லாமிய நாடுகளின்  ஆதரவை பெறும் பொருட்டு முஸ்லிம்களது உடலை புதைக்க அனுமதியோம் எரித்தே தீருவோம் வெளிநாடுகளது தலையீட்டுக்கு  அனுமதியோம் என்று வீரம் பேசி வந்த இராசபக்ச அரசாங்கம் இப்போது அசுர வேகத்தில் உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் நேற்றிரவு வெளிவந்துவிட்டது! உண்மை என்னவென்றால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களது  தலையீட்டுக்கு சிறிலங்கா அடிபணிந்து போயிருக்கிறது. 

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் (Organisation of Islamic Countries)  57 உறுப்பு நாடுகள் இருக்கின்றன.

 ஐநாமஉ பேரவையில் பேசிய இந்தியத் தூதுவர் இந்திரா மணி பாண்டே  அவர்களின்  உரை சிறிலங்கா அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

இந்தத்  தீர்மானங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் இந்தியா ஒரு சுறுசுறுப்பான பங்கேற்பாளராக இருந்து வருகிறது, மேலும் இலங்கையுடன் அதன் நெருங்கிய நண்பராகவும், உடனடி அண்டை நாடாகவும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் நிலையான நிலைப்பாடு  இரண்டு தூண்களில் உள்ளது:

(i)  இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஆட்புல  ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு.

(ii). சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கவுரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் வேட்கைகளுக்கு உறுதியளித்தல்.

இவை  இரண்டில் ஒன்று அல்லது தேர்வுகள் அல்ல. தமிழ்ச் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மூலம் உட்பட, இலங்கையின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

எனவே, தமிழ் சமூகத்தின் நியாயமான வேட்கைகளை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்காக நல்லது  என்று நாங்கள் வாதிடுகிறோம். நல்லிணக்க செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய  வேட்கைகளுக்குத்  தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். (http://www.dailymirror.lk/breaking_news/India-calls-upon-Sri-Lanka-to-fully-implement-13A-to-address-aspirations-of-Tamil-community/108-206640)

இந்தியத் தூதுவரின் பேச்சு இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கையாகும்.  தமிழர் சிக்கல் பற்றி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் அவர்களது கருத்தைவிட மேலும் ஒரு படி இறுக்கமாகவுள்ளது. 

ஐநாமஉ பேரவையில் இலங்கைக்க எதிரான தீர்மானம் மீது அடுத்தமாதம்  மார்ச் 22 அல்லது 23 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெற இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About editor 3145 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply