மியன்மாருக்கான தீர்ப்பும் தமிழர்களுக்கான நீதியும்!

மியன்மாருக்கான தீர்ப்பும் தமிழர்களுக்கான நீதியும்!

செவ்வாய் பெப்ரவரி 04, 2020

மியன்மாரின் அரச படைகளால் அந்நாட்டில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய இன அழிப்பிற்கு எதிராக, ஆபிரிக்க நாடான கம்பியா, தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நீதி கோரித் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒரு திருப்புமுனையான வெற்றியை ரோஹிங்கியா மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்தத் தீர்ப்பு அம்மக்களுக்கு நீதியை உடனடியாகப் பெற்றுக் கொடுக்காவிட்டாலும், சர்வதேச சட்டங்களின்படி மிகவும் மோசமான குற்றமாகக் கருதப்படும் இனப்படுகொலை மியன்மாரில் நடந்தது என்பதை நீதிமன்றம் நிரூபிக்க இன்னும் பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும் இந்தத் தீர்ப்பு மிகவும் காத்திரமானது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி சர்வதேச நீதிமன்றில் ஆபிரிக்காவிலுள்ள கம்பியா நாடு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பது மற்றும் தண்டிப்பது குறித்த ஐ.நா.வின் 1948ம் ஆண்டு உடன்படிக்கையின் கீழ், சர்வதேச சட்டத்தை மீறியதாகக் குற்றம்சாட்டி, உறுப்பு நாடுகள் மற்ற உறுப்பு நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அதன் அடிப்படையிலேயே மியன்மார் அரசுக்கு எதிராக கம்பியா இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த டிசெம்பர் 10ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை மூன்று நாட்கள் இடம்பெற்றன.

முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா நடாத்திய இனப்படுகொலை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தியவருமான நவநீதம்பிள்ளை அம்மையார் உட்பட உலகின் 17 மிக முக்கிய நீதிபதிகள் முன்பாக இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

இந்த வழக்கில், கம்பியா நீதி அமைச்சர் அபுபக்கர் தம்பாடு (Abubacarr Tambadou) முன்னிலையாகி, ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்களை முன்வைத்தார்.

ரோஹிங்கியாக்களுக்கு எதிராக மியன்மார் இனப்படுகொலை செய்து வருவதையும், அந்நாட்டிலுள்ள ரோஹிங்கியாக்கள் கடுமையான ஆபத்தில் உள்ளனர் என்பதையும் ஆதாரங்களுடன் அவரும் அவரது குழுவினரும் எடுத்துரைத்தனர்.

இதேவேளை, மியன்மார் அரசின் சார்பில் அந்நாட்டின் செயல் தலைவர் ஆங் சாங் சூகி நேரில் முன்னிலையாகி இனப் படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்திருந்தார். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, மியான்மர் இராணுவம் அளவுக்கதிகமான பலப்பிரயோகத்தில் ஈடுபட்டது உண்மை என்பதை ஏற்றுக்கொண்ட  அவர், ரோஹிங்கயா முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யும் நோக்கில் இராணுவம் செயற்படவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், ஆங் சாங் சூகி அளித்த வாதங்களை நிராகரித்த சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள், மிகக் கடுமையான தமது தீர்ப்பை கடந்த ஜனவரி 23ம் திகதி வழங்கியுள்ளனர்.

மியன்மாரில் ரோஹிங்கியா இனத்தவர்கள் அழிக்கப்படுவதற்கான அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதாக தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ரோஹிங்கயா இனத்தவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மியன்மாரிற்கு உத்தரவிட்டுள்ளதுடன், ரோஹிங்கயாக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மியன்மார் அரசு எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவாக நீதிமன்றத்தின் 17 நீதிபதிகளும் வாக்களித்துள்ளனர்.

அத்துடன், சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் மேலும் பிறப்பித்துள்ள உத்தரவில், மியன்மார் அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உண்மையிலேயே ரோஹிங்கியா இனத்தவரைப் பாதுகாப்பதற்கானவை என்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும். அத்தயை நடவடிக்கைகள் மேற்கொள்வதை சர்வதேச அளவிலான சட்டபூர்வ கடமையாக மியன்மார் ஏற்க வேண்டும்.

இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இன்னும் 4 மாதங்களில் மியன்மார் அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அதற்குப் பிறகு, இதுதொடர்பாக 6 மாதங்களுக்கு ஒரு முறை அந்த நாடு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  

இவற்றைவிட கொலைகளைத் தடுக்குமாறும், ரோகிங்கியா இனக்குழுவினரிற்கு உடல் மற்றும் உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தடுக்குமாறும், ஏற்கனவே இடம்பெற்ற படுகொலைகளிற்கான ஆதாரங்களை பாதுகாக்குமாறும் நீதிமன்றம் மியன்மார் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய வல்லுநர்களும், மனித உரிமை ஆர்வலார்களும் வரவேற்றுள்ளனர். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாதாடி வரும் அனைத்து தரப்பினருக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உற்சாகத்தை அளித்துள்ளது.

அதேவேளை, ரோஹிங்கியா படுகொலைகளையும் அவர்களை நாட்டில் இருந்து விரட்டி அடித்ததையும் தவறில்லை என இதுவரை வாதிட்டுக்கொண்டிருந்த மியன்மார் அரசுக்கு இந்தத் தீர்ப்பு பலத்த அடியாக விழுந்துள்ளது.

இந்தத் தீர்ப்பினால் மியன்மார் கடும் சீற்றமடைந்துள்ளது. ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் சில நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறிவருவதாக ஆங் சான் சூகி கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

தமிழினப் படுகொலைக்கு நியாயம் கற்பிக்க சிறீலங்கா ஆட்சியாளர்கள் முயல்வதைப்போலவே, ரோஹிங்கியா படுகொலைகளுக்கும் மியன்மார் ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லைப் பாவித்து நியாயம் கற்பிக்க முயல்கின்றது.

ஆனால், மியன்மாரின் நடவடிக்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் இதே உலகம்தான், சிறீலங்கா இனப்படுகொலை ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர். இனப்படுகொலையில் ஈடுபட்ட சிறீலங்காவின் முப்படைகளையும் பயிற்சி கொடுத்துப் பலப்படுத்துவதிலும், இராணுவ உதவிகளை அள்ளி அள்ளி வழங்குவதிலும் இந்நாடுகள்தான் முண்டியடிக்கின்றன.

சீனா-இந்தியா, இந்தியா-பாகிஸ்தான், பாகிஸ்தான்-வங்களாதேஷ், ரஷ்யா_அமெரிக்க, அமெரிக்கா -ஈரான், ஈரான்-இஸ்ரேல்… போன்ற தங்களுக்குள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நாடுகள் கூட சிறீலங்கா விடயத்தில் ஒன்றிணைந்து நிற்பது உலகத்தின் மிகப்பெரும் விசித்திரமும் கூட…

அதேவேளை, கடந்த சில ஆண்டுகளாக இடம்பெறும் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளை இனப்படுகொலை என்று வாதிடும் மனித உரிமை அமைப்புக்களும் கூட, கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவில் தமிழ் மக்களை மட்டுமே இலக்குவைத்து சிங்களப் பேரினவாதம் மேற்கொள்ளும் வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் அழிப்புக்களையும் இனப்படுகொலை என்று வரையறுக்க இன்றுவரை மறுத்துவருகின்றன.

111

தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்று இவர்கள் அத்தனை இலகுவில் வாய்திறந்துவிட மாட்டார்கள்.

மியன்மாரில் இவர்கள் எல்லோருக்கும் இருக்கும் தேவையும், இலங்கைத் தீவில் இவர்களுக்கு இருக்கும் தேவையும் வெறுபட்டவை. எனவே, தமிழ் மக்களுக்கு நிகழ்ந்ததும் இனப்படுகொலை என்பதை இவர்கள் வாயால் சொல்லவைப்பதென்பது கல்லில் நார் உரிப்பதுபோன்ற மிகக்கடினமான பணிதான். ஆனாலும், அதற்காக தமிழ் மக்கள் சோர்ந்து போய்விட முடியாது.

ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வழிகாட்டியாகக் கொண்டு,சிங்களப் பேரினவாத அரசிற்கு எதிராக தமிழ் மக்கள் தங்கள் காய்களை சர்வதேச நீதிமன்றம் நோக்கி நகர்த்தவேண்டும். ரோஹிங்கியா மக்கள் பெற்ற வெற்றியைப்போன்று தமிழ் மக்களும் ஒரு வெற்றியைப் பெற்றுக்கொண்டாலேயே, நிகழ்ந்தது இனப்படுகொலை என்பதை சட்டரீதியாக நிரூபிப்பதற்கான அடுத்த கட்டங்களுக்கு செல்லமுடியும்.

http://sankathi24.com/news/maiyanamaaraukakaana-taiirapapauma-tamailarakalaukakaana-naiitaiyauma

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு

About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply