இந்த ஆண்டு (2021) கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகப் போகிறது!

கடனில் மூழ்கிக்  கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகப் போகிறது!

நக்கீரன்  

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த சிறிலங்கா அரசுக்கு அழையாத விருந்தாளியாக வந்த கோவிட் – 19  கொள்ளைநோய்  அதன் பொருளாதரத்தை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. ஏற்கனவே நொண்டிக் கொண்டிருந்த பொருளாதாரம் இப்போது முற்றாக சீர்குலையும் நிலைக்கு  தள்ளப்பட்டு வருகிறது. இலங்கை மட்டுமல்ல கோவிட்-19 தாக்கத்திற்கு உலகிலுள்ள பல நாடுகள்  பொருளாதார சரிவை நோக்கி நகர்ந்துள்ளன.

இலங்கையில் சனவரி 27, 2020 அன்றுதான் சீனாவில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய  44 அகவையுடைய பெண்ணுக்கு கோவிட் – 19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச் 20 நிலவரப்படி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கிட்டத்தட்ட 3,500 பேர் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர்.  இதில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 வெளிநாட்டினரும்  இருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கோவிட் – 19 தொற்று நோய் யூலை, 2020  மாதம் வரை கட்டுப்பாட்டுள்குள் இருந்தது.  மார்ச் 10 இல் வெளிநாடுகளில்  இருந்து விமானங்களில்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கிய  சுற்றுலா பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அன்று முதல் கட்டுநாயக்கா விமானநிலையத்தில்  தரையிறக்கம் செய்வது ஒத்திவைக்கப்பட்டது.

ஏப்ரில் 16 2020 நிலவரப்படி, கோவிட் – 19 கொள்ளை நோயால் பாதிக்கப்படக்கூடிய 16 ஆவது அதிக ஆபத்துள்ள நாடாக இலங்கை பெயரிடப்பட்டது.  அதே நேரம் வைரஸைக் வெற்றிகரமாக கையாள்வதில்  இலங்கை உலகின் 9 வது சிறந்த நாடாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அரசு கோவிட் – 19 கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தனது முதுகை தானே தட்டிக் கொடுத்தது.  வைரசைக் கட்டுப்படுத்துவதில் இராணுவம் காட்டிய முனைப்புக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 

இதனை அடுத்து  இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஓகஸ்ட் 5 ஆம் தேதி வாக்களிப்பு தொற்றுநோய்களுக்கு மத்தியில் நடைபெற்றது,

இரண்டாவது அலை

கோவிட்  – 19 கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக அரசு நினைத்துக் கொண்டிருந்த போது இரண்டாவது அலை செப்தெம்பர் 23 முதல்  வீசத் தொடங்கியது. ஒக்தோபர் 13 அன்று தொற்று நோயாளர்களின்  எண்ணிக்கை 1,446 ஆக உயர்ந்தது. ஒக்தோபர் 25, 2020 நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 7,872 நோயாளிகள், 3,803 குணமடைந்தோர் மற்றும் 15 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நேற்று (செவ்வாய்க்கிழமை)  இலங்கையில்   42,056 நோயாளிகள், குணமடைந்தோர்  33,925 மற்றும் 195 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.  உலகளாவிய அளவில் கோவிட் – 19 தொற்றினால் 82.5 மில்லியன் (8.25 கோடி) நோயாளிகள், குணமடைந்தோர் 46.6 மில்லியன், 1.8 மில்லியன் இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

கோவிட் -19 கொள்ளை நோய் ஒரு உலகளாவிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது உலகெங்கிலும் பரவலான பசியையும் பட்டினியையும் கொண்டு வந்துள்ளது, வாழ்வாதாரங்களை அச்சுறுத்தியது, வேலையின்மை அதிகரித்தது, வறுமை மற்றும் சமத்துவமின்மை அதிகரித்தது.

இலங்கையைப் பொறுத்தளவில் கோவிட் – 19 கொள்ளை நோய்ப் பரவினால் பின்வரும் துறைகள் பலத்த பின்னடைவைச்  சந்தித்துள்ளன.

(1) சுற்றுலாத்துறை,

(2) ஆடை ஏற்றுமதித்துறை,

(3) தேயிலை, ரப்பர்  ஏற்றுமதித்துறை,

(4) மத்திய கிழக்கு நாடுகளில் பணியில் இருப்பவர்களால் அனுப்பப்படும் வெளிநாட்டு நாணயம்.

இந்தத் துறைகளில் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுருக்கம் ஏற்பட்டது.  விவசாயம் 5.9 விழுக்காடும், தொழில்கள் 23.1 விழுக்காடும் சேவைகள் 12.9 விழுக்காடுமும் சுருங்கிவிட்டன.

பொருளாதாரம்  மோசம் அடைந்ததற்கு  கோவிட் -19  முக்கிய காரணமாக இருந்தாலும் அது மட்டும்தான் முழுக் காரணம் என்று சொல்ல முடியாது.  கோவிட் – 19 க்கு முந்திய  2019 ஆம் ஆண்டில் எதிர்மறை வளர்ச்சி 1.6 விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டு எதிர்மறையான வளர்ச்சி 5.0 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய கோவிட் – 19 கொள்ளைநோய் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலகளாவிய வாணிபத்தை பாதித்தது. நாட்டின் தொழில்துறை ஏற்றுமதிகளான ஆடை, டயர்கள் மற்றும் மட்பாண்டங்கள் இந்த ஆண்டின் (2020)  இரண்டாவது காலாண்டில் இருந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன

பொருளாதாரத்தின் மூன்று துறைகளும் சிறப்பாக செயல்படவில்லை. இரண்டாவது காலாண்டில் பொருளாதாரத்தின் மூன்று துறைகளிலும் சுருக்கம் ஏற்பட்டது. விவசாயம் 5.9 சதவீதமும், தொழில்கள் 23.1 சதவீதமும், சேவைகள் 12.9 சதவீதமும் சுருங்கிவிட்டன.

2020 ஆம் ஆண்டில் விவசாயம் மிகக் குறைவான பாதிப்புக்குள்ளானது, அதே நேரத்தில் சேவைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்கள் கடுமையான பின்னடைவுகளைக் கொண்டிருந்தன, ஆனால் சில ஏற்றுமதி தொழில்களில் புதிய சர்வதேச கோரிக்கைகளுக்கு ஏற்ப மீண்டும் எழுச்சி ஏற்பட்டது.

ஏற்றுமதி


உலகளாவிய COVID தொற்றுநோய் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலகளாவிய வாணிகத்தைப் பாதித்தது. நாட்டின் தொழில்துறை ஏற்றுமதிகளான ஆடை, டயர்கள் மற்றும் மட்பாண்டங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.  இதன் விளைவாக, ஏற்றுமதிகள் ஒரு மாதத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டின, இது COVID க்கு முந்தைய மாத ஏற்றுமதி வருவாயைப் பற்றியது.


ஏற்றுமதிகள் 2019 ஆம் ஆண்டின் பத்து மாதங்களில் கிட்டத்தட்ட பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 16 விழுக்காடு  குறைந்து இந்த ஆண்டின் (2020) பத்து மாதங்களில் 8.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஏற்றுமதிகள் சுமார் 11.5 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஒக்தோபரில் ஏற்றுமதி உற்பத்தியில் இடப்பெயர்வு காரணமாக 2020 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருவாய் தோராயமாக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கலாம், ஏனெனில் COVID இன் இரண்டாவது அலை உற்பத்தியை சீர்குலைத்து வெளிநாட்டு வாங்குபவர்களிளின் தேவை பலவீனமடைந்தது.

வணிக பற்றாக்குறை 

இந்த ஆண்டின் வணிக பற்றாக்குறை 2019  ஒக்தோபர் மாத இறுதியில் 6.45 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2020 ஒக்தோபர் மாத இறுதியில் 4.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆண்டின் பத்து மாதங்களில் இந்த அமெரிக்க  டொலர்  1.6 பில்லியன் வணிக  பற்றாக்குறை குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், சமநிலை சுற்றுலா வருவாய் பெரும் சரிவு மற்றும் மூலதனத்தின் நிகர வெளியேற்றம் காரணமாக 2020  ஒக்தோபர் மாத இறுதியில் கொடுப்பனவு பற்றாக்குறை 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக விரிவடைந்தது.

இவற்றால்  வர்த்தக பற்றாக்குறை குறுகினாலும், கொடுப்பனவுகளின் இருப்பு விரிவடைந்தது. அடுத்த ஆண்டு நாட்டின் கடன் திருப்பிச் செலுத்தும் பொறுப்புத்  தொடர்பாக வெளிநாட்டு செலாவணி இருப்புக்கள் (External financial reserves) கடுமையாக சரிந்துள்ளது.

கொடுப்பனவுகளின் சமநிலை

2019  ஆம்  ஆண்டின்  கொடுப்பனவுகளின் சமநிலை  377 மில்லியன் அமெரிக்க  டொலர் உபரியாக இருந்தது. ஆனால்  இந்த ஆண்டின் கொடுப்பனவு இருப்பு அமெரிக்க டொலர் 2 முதல் 2.5 பில்லியன் வரை பற்றாக்குறையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ஆண்டு கொடுப்பனவு சமநிலையில் ஏற்பட்ட சரிவு நாட்டின்  பொருளாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கின்றது. ஏனெனில் வெளிநாட்டு செலாவணி  இருப்புக்கள் ஒரு  நெருக்கடியான  நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

வெளிநாட்டுக் கடன்

இந்த ஆண்டின் இறுதியில் முக்கியமான சிக்கல் இலங்கை  வெளிநாட்டுக் கடனை கொடுக்குமதிகளை குறித்த கால எல்லைக்குள் கொடுக்குமா என்பதுதான்.  இலங்கையின் 72 ஆண்டு வரலாற்றில் வெளிநாட்டுக் கடன்களை  திருப்பிச் செலுத்துவதில் தவற விட்டது கிடையாது. 2021 ஆம் ஆண்டில்  கடன் கொடுக்குமதி 4.5 பில்லியன் அமெரிக்க டொலராகவும் 2021-24 ஆம் ஆண்டில் சுமார் 23 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கொடுப்பனவு சமநிலையின் பலவீனமான போக்கு  தொடருமானால்  இந்த கடன்கனை திருப்பிச் செலுத்துதலுக்கான வல்லமை  கேள்விக் குறியாக மாறக் கூடும்.

2020 – 2026 ஆண்டுகளில் நாட்டின் வெளிநாட்டுக் கடன் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகப் போகின்றது. பல நிதி  முதலீட்டு நிறுவனங்கள் இலங்கையின் வெளிநாட்டுக் கடனை இலங்கை திருப்பி செலுத்துவதற்கான ஆற்றல் அதற்கு போதுமானதாக இல்லை  என நினைக்கின்றன. இதனால் இலங்கையின் கடன் மதிப்பீட்டை குறைத்து மதிப்பீடு செய்துள்ளன. இதனால் இலங்கை சர்வதேச மட்டத்தில் கடன்  வாங்குவது வில்லங்கமாக இருக்கப் போகிறது. 

இலங்கை  அடுத்த ஆண்டு (2021) அமெரிக்க டொலர் 4.8 பில்லியன் வெளிநாட்டுக் கடன் அடைக்க வேண்டியுள்ளது. மொத்த கொடுக்கமதி தோராயமாக   அமெரிக்க டொலர் 35 பில்லியன் ஆக இருக்கிறது.

வெளிநாட்டு நாணய கையிருப்பு

கடனுக்கு மேல் கடனை வாங்கி வந்த இலங்கை அந்தக் கடனை அடைக்க வழிதெரியாது நிற்கிறது.  நாட்டின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா வருவாய் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு  நாட்டு நாணய  கையிருப்புக்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இந்த ஆண்டு  ஒக்தோபர் மாத இறுதியில், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச இறையாண்மை பத்திரத்தை (ISB) திருப்பிச் செலுத்திய பின்னர், வெளிநாட்டு  நாணய கையிருப்பு 5.9 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சி கண்டது. நொவெம்பர் மாத இறுதியில் அவை 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. கணிசமான மூலதன வரவுகள் இல்லாவிட்டால், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இது நான்கு பில்லியன் அமெரிக்க டொடாலருக்கும் குறைவாக இருக்கப் போகிறது.

பொதுவான விதி  வெளிநாட்டு நாணய கையிருப்பு 3 மாத இறக்குமதிக் கொடுப்பனவுக்குச் சமானமாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் இந்த வெளிநாட்டு நாணய கையிருப்பு அமெரிக்க டொலர் சராசரி 7.5 பில்லியனாக இருந்தது.  ஆனால் இலங்கை மேற்கொண்ட இறக்குமதிக் கட்டுப்பாட்டுகள் காரணமாக அதன் இறக்குதி குறைந்து காணப்படுகிறது.  இது ஓர் ஆறுதரான செய்தி.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

கோவிட் கொள்ளை நோய்க்கு முன்னர் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம்  நேர்மறையான இரண்டு விழுக்காடு  மட்டுமே வளர்ந்தது. ஆனால் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி விழுக்காடு 16.3 விழுக்காடு எதிர்மறை வளர்ச்சியாகக் குறைந்து விட்டது. மூன்றாம் காலாண்டில் 1.5 விழுக்காடு வளர்ச்சியை அடைந்தது. ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால்    நான்காவது காலாண்டின் வளர்ச்சியும் எதிர்மறையாக இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், சில்லறை வணிகம், உள்ளுர் வேளாண்மை ஆகிய துறைகளினாலேயே நாடு தற்போது காப்பாற்றப்பட்டு வருகிறது.  2021 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

பொருளாதார கண்ணோட்டம்

முடிவடையும் ஆண்டைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​இது உலகளவில் மற்றும் இலங்கைக்கு மோசமான ஒன்றாகும். சீர்குலைந்த உலகப் பொருளாதாரம் சுருங்கிய தீவின் வர்த்தக சார்பு பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

உற்பத்தி வீழ்ச்சி தோராயமாக 890,000 பேரை புதிய ஏழைகளாக மாற்றியுள்ளது.  அவர்களில் பலர் இலங்கையின் ஏழ்மையான பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவு ஆகும்,

மேலே சொல்லியவாறு இலங்கையின்  உற்பத்தி ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் தொடர்புடைய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வேளாண் உற்பத்தியில் மிகக் குறைவான பாதிப்பு ஏற்பட்டது, இருப்பினும் இது சந்தைப்படுத்துதல் மற்றும் உள்ளீடுகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டது. வாணிக  பற்றாக்குறை குறுகினாலும், கொடுப்பனவுகளின் இருப்பு விரிவடைந்தது.

இந்த ஆண்டு (2021)  கடனில் மூழ்கிக்  கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகப் போகிறது. (02-01-2021)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply