மார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்

மார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்

December 16, 2020,

மதுரை: மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது.

ஆண்டாள் அருளிய திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் மழை வேண்டியும் செய்யும் நோன்பு முறைகளைப் பற்றிக் கூறுகின்றன. ஆண்டாளின் திருப்பாவை பெருமாளுக்கு உகந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுகிறது.

கண்ணனை கணவனாக மனதில் வரித்த ஆண்டாள் தன்னை ஆயர்பாடிப் பெண்களில் ஒருத்தியாகப் பாவித்துக் கொள்கின்றாள்.

திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபெருங்கோயில் நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் பாவித்து இடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள். அந்நோன்பைப் பற்றித் திருப்பாவையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்கழி மாதம் நோன்பு நோற்றால் மக்கள் நலனுற மழை பெய்யும் சொர்க்கம் புகலாம் என்றும் திருப்பாவை பாசுரம் மூலம் கூறுகிறார் ஆண்டாள் நாச்சியார். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பாவை 30 பாசுரங்களையும் மார்கழி மாதம் பாடினால் அந்த இறைவனின் திருவடி தரிசனம் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மணிவாசகப் பெருமான் பாடிய திருவெம்பாவை மார்கழி மாதத்திற்கே ஒரு தனித்துவமான பாடல்களைக் கொண்டது. சைவசமயத்தவர்கள் அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு சென்று திருவெம்பாவை பாடி, பக்தியிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கியிருக்கும் மாதம்.

திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்று சொல்வார்கள். அவ்வாறு கல்நெஞ்சத்தையும் கசிந்துருகவைக்கும் கனிவாக பாடல்களே திருவாசகப்பாடல்கள். அத்தகைய திருவாசகத்திற்கே மணியாக விளங்குவது திருவெம்பாவையாகும்.

திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்களைக் கொண்டது.

திருப்பாவை 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்

மார்கழி மாதம் பாவை நோன்பு இருக்கும் பெண்களை எழுப்பும் போது கண்ணனின் அழகை பாடுகின்றனர் கோபியர்கள். மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள்.

இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற வீரம் நிறைந்த மகன். அவனுக்கு கரிய மேகத்தைப்போன்ற மேனி அதிலேயே அவன் கருணாசாகரனாக காட்சி தருகிறான்.

தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவன். அவனுக்கு கதிரவனைப் போல பிரகாசமாகவும், அதே நேரத்தில் குளிர் மதிபோல தண்மையான கருணை ஒளி நிரம்பிய முகம்!. அந்த நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.

திருவெம்பாவை பாடல் – 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

வாள்போன்ற ஒளிபொருந்திய அகன்ற, நீண்ட அழகிய கண்களையுடைய பெண்ணே! தொடக்கமும் முடிவும் இல்லாத சோதிவடிவான சிவபெருமானைப் பற்றி நாங்கள் பாடிக்கொண்டுவருகிறோம். அதைக்கேட்டும் எழுந்துவராமல் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாயே? உனது செவிகள் கேட்கவில்லையா என்று எழுப்புகிறார்கள் பெண்கள் மேலும் சொல்கிறார்கள். அந்த மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி கேட்டு தெருவில் சென்ற எங்கள் தோழி ஒருத்தி விம்மி அழுது, பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சித்துக் கிடந்தாள். ஆனால், என் தோழியே நீ இன்னமும் உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனை வாழ்த்திப் பாட உடனே எழுந்து வருவாயாக! என்று அழைக்கின்றனர்.

இவ்வாறு வீடுவீடாகச் சென்று பெண்களைத் துயிலெழுப்பி அழைத்துக்கொண்டு பொய்கைக் கரைக்குச் செல்வதும், எல்லோரும் பொய்கையிலே நீராடுவதும், உள்ளம் உருக இறைவனை வாழ்த்திப் பாடுவதுமான பல்வேறு நிகழ்வுகள் திருவெம்பாவை பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பாடல் தத்துவம்

மலங்கள் நீங்கிப் பக்குவமடைந்தோர் இறைவனின் பெயரைக் கேட்டாலே தம்மை மறந்து இன்பத்தில் மூழ்கிவிடுவார்கள். இறைவன் புகழைப்பாடி எத்தனை முறை எழுப்பினாலும் பக்குவமடையாதவர்கள் எளிதில் எழமாட்டார்கள். மீண்டும் மீண்டும் மலங்களிலேயே அமிழ்ந்து கொண்டிருப்பார்கள்.

சைவசித்தாந்தத்தின் இந்தத் தத்துவப் பொருளை இப்பாடல் மூலம் மணிவாசகப்பொருமான் அற்புதமாக நமக்கு உணர்த்துகின்றார்.

Read more at: https://tamil.oneindia.com/astrology/news/margazhi-month-special-prayers-tirupavai-tiruvempavai-songs-1/articlecontent-pf507701-405962.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider

—————————————————————————————————————-

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply