ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம்

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம்

தேமொழி

siragu periyar1

“இராமாயணக் குறிப்புகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பெரியார் ஈ. வெ. ரா. வின் இராமாயண ஆய்வு நூல் மிகச் சிறியது, அறுபது பக்கங்களைக் கொண்டது. நூல் சிறியதாக இருந்தாலும், வெளியிட்ட காலத்தில் எதிர்ப்புகள், கண்டனங்கள், விவாதங்கள் பலவற்றைத் தவறாமல் கிளப்பிவிட்ட நூல். “கடவுள் இல்லை” என்ற நாத்திகர் ஒருவர் சமய நூலான வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்புகள் சிலவற்றைப் படித்து, குறிப்புகள் எடுத்து தனது கோணத்தில் இராமாயணம் பற்றியக் கருத்துகளை ஒரு ஆய்வு நூலாக வெளியிட்டதன் பின்னணியில் இருப்பது அவரது ஆரிய எதிர்ப்பு அரசியலும், சமய மறுப்புக் கொள்கை பரப்பும் நோக்கமும் என்பதைத் தெளிவாகவே தமிழகம் அறியும்.

இந்தி எதிர்ப்பு முதல் பிராமணிய எதிர்ப்புவரை, சமய மறுப்பு கொள்கை முதல் சாதி மறுப்புக் கொள்கை வரை அவற்றின் அடிப்படையில் ஆரியத்தின் ஊடுருவல் என்பதைத்தான் பெரியார் அடையாளம் கண்டார். ஆரியத்தை மறுக்கவே திராவிடக் கழகம் என்ற இயக்கத்தையும் உருவாக்கினார். அவர் எதிர்த்த ஆரியத்தின் உயிர்நாடியாக அவர் கண்டது இராமாயணம்.  இராமாயணக் கதை ஆரிய மேலாதிக்கத்தையும் திராவிட அவமதிப்பையும் நிலைநிறுத்தவே பரப்பப்படுகிறது என்ற கோணத்தில் இராமாயணம் எரிப்பு, இராமர் படம் எரிப்பு, இராமாயணக் கதையின் பொய் புரட்டுகளை தோலுரிக்கும் இந்த நூல் வெளியீடு போன்றவற்றை முன்னெடுத்தார். இராமாயணத்தை அவர் ஒரு இலக்கியம் என்ற கோணத்தில் அணுக விரும்பாத பொழுது, மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்ற வேகத்தில் இராமாயணம் என்ற இதிகாசம் அவர் கையில் எதிர்ப்பு அரசியல் கருவியின் அடையாளமாக மாறியது.

இக்கட்டுரையில் “இராமாயணக் குறிப்புகள்” நூலில் இடம் பெற்ற கருத்துகள் மிகச் சுருக்கமாகத் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. நூலில் காணப்படும் கருத்துகளும், இராமாயணத்தைப் பற்றிய ஈ. வெ. ரா. வின் கோணங்களும் அவரது பார்வையில் இராமகாதை எவ்வாறு தெரிந்தது என்பதையே நமக்குக் காட்டுகிறது. அவர் தனது ஆய்வுக்குக் கொடுத்த முக்கியத்துவமும் புரிகிறது. இராமாயணம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்தாத பொய் புரட்டு நிறைந்த கட்டுக் கதை. சமயம் கடவுள் என்று போற்றும் அளவிற்கு அதில் வரும் பாத்திரங்கள் ஒழுக்க நெறியில் நடந்து கொள்ளவில்லை என்று காட்டும் முனைப்புடன் அத்தியாயத் தலைப்புகளை அமைத்துள்ளார்.

“இராமாயணக் குறிப்புகள்”:

இராமாயணம் நடந்த கதையல்ல! என்ற முன்னுரையில், இராமாயணத்திற்கு வரலாற்றுச் சான்று எதுவும் இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் அறிவியல் அடிப்படையற்றவை. இது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்தவில்லை. பூலோகம், மேல் லோகம் என்பவற்றை புவியியல் கோணத்தில் காட்ட வழியில்லை. பார்ப்பனர்கள் தங்களை தேவர்கள், ரிஷிகள் முனிவர்கள் என்று கூறிக் கொண்டு அவர்களை எதிர்ப்பவர்களை அசுரர்கள் அரக்கர்கள் என்று குறிப்பிட்டார்கள், இவர்களில் தென்னகத்தில் வாழ்ந்த திராவிடர்களும் அடங்குவர். ஆரிய திராவிடப் போரை கதையாக விளக்குவதே இராமாயணம். இராமாயணக் காலம் என்பதிலும் புரட்டு. உண்மையைப் பற்றிக் கவலைப்படாமலும், கண்டுபிடிக்க முடியாமலும் இருக்கிறது என்று 25 க்கும் அதிகமான குறிப்புகளைப் பட்டியலாக அடுக்கியுள்ளார்.

siragu periyar5

இராமாயணக்கதை சான்றுகளற்ற கற்பனை, அது மக்களிடம் பரப்பப்படுவதன் நோக்கம் திராவிடரை இழித்துக் கூறும் திட்டம், ஆரிய மேன்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி, அது சொல்லப்படும் விதத்தில் இருக்கும் புரட்டுகள் எவையெவை, உயர்வாகப் புகழ்ந்து சொல்லப்படும் இராமாயணப் பாத்திரங்கள் உண்மையில் அதற்குரிய பெருமையுடன் நடந்து கொள்ளாதிருப்பது போன்றவற்றைச் சுட்டிக்காட்டி இராமாயணக் கதை தெய்வீகம் என்பதற்கு ஏற்றதல்ல. மனித தர்ம ஒழுக்கம் என்பதைக் காணவும் முடிவதில்லை என்ற தமது கருத்தை ஈ. வெ. ரா. முன்னுரையில் வைத்து இராமாயணக் கட்டுடைப்பைத் தொடர்கிறார்.

முன்னுரையில் அவர் காட்டும் பட்டியலைத் தொடர்ந்து, அடுத்து வரும் 21 அத்தியாயங்களில் இக்கருத்துகளை விரிவாக்கி பெரும்பாலோர் போற்றும் பாத்திரங்கள் உண்மையில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என ஈ. வெ. ரா. காட்டுகிறார். ஒவ்வொரு அத்தியாயம் துவங்கும் பொழுதும், அந்தத் தலைப்பை மிகச் சுருக்கமாக விவரித்துவிட்டு அதற்கான மேற்கோள்களைக் கொடுக்கிறார். கொடுக்கும் மேற்கோள்களையும் தான் படித்த வால்மீகி இராமாயண மொழிபெயர்ப்புகளில் இருந்து எந்தக் காண்டம் எந்தச் சர்க்கம் என்ற குறிப்புகளுடனும் கொடுக்கிறார். சி. ஆர். சீனிவாசயங்கார், நடேச சாஸ்திரியார், தாத்தா தேசிகாச்சாரியார், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கா ராச்சாரியார் போன்றோரின் இராமாயண மொழிபெயர்ப்புகள் இவரால் படிக்கப்பட்டு மேற்கோளாக நூல் முழுவதும் எடுத்தாளப்பட்டுள்ளது.

இத்துடன் அவர் நூலின் தலைப்பு, நூலின் பதிப்பு, பதிப்பாண்டு போன்றத் தகவலையும் இணைத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இந்த நூலாசிரியரின் மொழிபெயர்ப்பு, இந்தக் காண்டம், இந்தச் சர்க்கம், இந்தப் பக்க எண் என்று கொடுத்துச் செல்கிறார். பதிப்பின் குறிப்பு கொடுக்கா விட்டால் பக்க எண் பொருந்தாமல் போகும் வாய்ப்புள்ளது. நூலின் ஆசிரியர் தனது விளக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டிப் பின்வரும் பதிப்புகளில் மாற்றியமைத்தாலும், விளக்கம் மாறுபட நேர்ந்தால் பெரியார் கூற்றுப் பொய் என்று கருத்து எழவும் வாய்ப்பளிக்கும் வகையில் ஒரு கவனக்குறைவு இந்த நூலில் காணப்படுகிறது.

siragu periyar2

இந்த நூலை மறுப்பவர் விரும்பினாலும் அவர் சொல்வதை எதிர்க்க வழியில்லை. ஏனெனில் ஈ. வெ. ரா. கொடுப்பது பிறநூலாசிரியர் செய்த மொழி பெயர்ப்பைத்தான் எனில் சட்டியில் இருப்பது அகப்பையில் வந்துள்ளது. எய்தவர் இருக்க அம்பை நொந்து கொள்வதில் பயனில்லை.  சொல்லப்போனால் பெரியாரின் இந்த இராமாயண ஆய்வுக் கட்டுரையை எதிர்த்து விமர்சிக்க விரும்புபவர்கள் அவர் வைக்கும் ஒவ்வொரு கருத்தையும் எடுத்து அதனை மறுக்கும் விதத்தில் சான்றுகள் காட்டிச் செல்ல வேண்டியதே சரியான முறை.

1. இராம அவதாரம் இராவணனைக் கொல்லுவதற்கே!

திருமால் இராம அவதாரம் எடுத்த ஒரே நோக்கம், அசுரன் இராவணனும் அவனது கூட்டத்தினரும் மூவுலகில் வாழ்பவரையும் தொல்லை செய்வதாகத் தேவர்கள் வைத்த முறையிடலைச் செவிமடுத்து, இராவணன் மற்றும் அவனது கூட்டத்தினரை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரம். இந்தக் கருத்திற்கு மேற்கோளாக சி. ஆர். சீனிவாசயங்கார் மொழிபெயர்ப்பு நூல் கொடுக்கும் பாலகாண்டம் 15, 16 சர்க்கம், மற்றும் நடேச சாஸ்திரியார் மொழிபெயர்ப்பு செய்த இதே பகுதியை ஈ. வெ. ரா. கொடுக்கிறார்.

2. இராமாயணக் காலம் – பொய்!

இராமாயணம் நடந்த காலமாக இராமாயணம் குறிக்கும் திரோதயுகம் துவாபரயுகம் போன்ற காலக்குறிப்புகளின் படி கணக்கிட்டால், இராமாயணம் நடந்தது 21,60,000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று கூறப்படுகிறது. புத்தர் பிறந்தது 2,550 ஆண்டுகளுக்கு முன்னர்த்தான். ஆனால் புத்தர் பற்றிய குறிப்புகள் 21,60,000 ஆண்டுகளுக்கு முன்னர் திரோதயுகத்தில் நடந்த இராமாயணக் கதையில் காட்டப்படுகிறது என்ற முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் ஈ. வெ. ரா. தனது கூற்றுக்கு சான்றாக மீண்டும் சி. ஆர். சீனிவாசயங்கார் மொழிபெயர்ப்பில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்.

siragu periyar3

மேற்கோள் காட்டப்படுவது …

அயோத்தி காண்டம் 6 ஆவது சர்க்கத்தில் இராமனின் முடிசூட்டு விழாவினை முன்னிட்டு தசரதன் நகரை அலங்கரிக்கும் பகுதியில் புத்தரின் ஆலயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ள பகுதி;

அயோத்தியா காண்டம் 100 சர்க்கத்தில் இராமன் தன்னைக் காண வந்த பரதனிடம் நலம் விசாரிக்கும் பகுதி ;

இராமன் ஜாபாலியிடம் “திருடனும் பவுத்தனும் ஒன்றே, பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை” எனக் கூறும் அயோத்தியா காண்டம் 106 வது சர்க்கம்;

சீதை இருந்த அசோக வனத்திற்குச் சற்றுத் தொலைவில் புத்தர் ஆலயம் போன்ற உப்பரிகையை அனுமன் காணும் சுந்தரகாண்டம் 15 ஆவது சர்க்கம்;

வாலியிடம் கொடிய பாவத்தைச் செய்ததற்காக பவுத்த சந்நியாசி வாலிபோலவே தண்டிக்கப்பட்டதாக இராமன் கூறும் கிஷ்கிந்தா காண்டம் 18 ஆவது சர்க்கம்

போன்ற பகுதிகளை எடுத்துக் காட்டி 21 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இராமாயணத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புத்தரின் குறிப்புகள் வருவதே இராமாயணம் புத்தரின் காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டதற்கான சான்று என்று கூறி இராமாயணம் நடந்ததாகப் பொய்யான காலம் காட்டப்படுகிறது என நிறுவுகிறார்.

3. கடற்பெரு வெள்ளங்களால் தென்னாட்டில் இருந்து இலங்கை பிரிந்து 5000 ஆண்டுகளே ஆகின்றன.

அறிவியல், புவியியல் ஆய்வுகளின்படி இறுதியாக நாம் அறியும் கடற்பெருவெள்ளம் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாக அறிவியல் கட்டுகிறது. இவ்வாறு கடல்நீர் மட்டம் உயர்ந்து, கடல்கொண்ட பழந்தமிழகப் பகுதி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள இடைப்பட்ட பகுதி.  இது பெரியதொரு ஆற்றிடைக்குறை, ஆற்றிடைக்குறை அலங்கம் என்று கூறப்படும், அலங்கம் என்பது மருவி இலங்கை என் ஆயிற்று என மொழி நூல் அறிஞர் கார்த்திகேய முதலியார் கூற்றின் அடிப்படையில், இலங்கை தமிழகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட காலத்திற்குப் பின்னர் பிறந்ததாக இராமாயணக்கதை இருக்க வேண்டும், இராமாயணம் கூறும் காலமான 21 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை இருந்திருக்க முடியாது என்கிறார் ஈ. வெ. ரா.

4. ரிஷிகளின் யோக்கியதை – தசரதன் யாகம்

குழந்தைப் பேறு வேண்டி தசரன் புத்திரகாமேஷ்டி யாகத்தினைச் செய்ய விரும்புகிறான். அதனை நடத்தித்தரக் காட்டில் வசிக்கும் ரிஷியசிருங்கரை வேசியரை அனுப்பி அவரை மயக்கி அழைத்து வந்ததாகக் கூறப்படும் பகுதிகளைச் சுட்டிக்காட்டி, ரிஷிகளின் ஒழுக்கத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பும் ஈ. வெ. ரா. அதற்கும் சி. ஆர். சீனிவாசயங்கார், தாத்தா தேசிகாச்சாரியார் ஆகியோர் மொழி பெயர்ப்பினையே துணை கொள்கிறார் (பாலகாண்டம் 10 ஆவது சர்க்கம்). யாகம் நடத்தியபொழுது மேற்கொள்ளப்பட்ட செயல்கள் அநாகரிகமானவை (பாலகாண்டம் 14, 47 ஆவது சர்க்கங்கள்) எனவும் சுட்டுகிறார்.

5. தசரதனுக்கு நான்கு மனைவிகள் அவர்கள் சூலான விதம்

தசரதனின் மனைவியர் நால்வரும் (மூவரல்ல, நால்வர்தான் !) யாகத்தில் ரித்விகளுக்கு கொடையாக அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் கருவுற்றனர். பெரும் செல்வத்தை ஈடாகப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர்களை மீண்டும் தசரதனுக்கே ரித்விகள் கொடுத்து விட்டனர் (பாலகாண்டம் 14 ஆவது சர்க்கம்) என்ற மேற்கோள்களை சி. ஆர். சீனிவாசயங்கார், நரசிம்மாச்சாரியார் மொழிபெயர்ப்பு நூல்களில் இருந்து காட்டுகிறார். இது ஒழுக்க நெறிக்குப் புறம்பான செயல் எனக் காட்டுகிறார் ஈ. வெ. ரா.

6. இராமனின் வயது பெரும் புரட்டு!

இராமனுக்குத் திருமணம் செய்யத் தக்க வயது என்று அதற்கு ஏற்பாடு செய்கிறான் தசரதன் (பாலகாண்டம் 18, 19 ஆவது சர்க்கங்கள்), அப்பொழுது அங்கு வரும் விசுவாமித்திரர் வேள்விக்கு இடையூறு அளிக்கும் தாடகையைக் கொல்ல இராமனை அனுப்பிவைக்குமாறு வேண்டும் பொழுது, இராமன் என் மடியைவிட்டு விலகாதிருக்கும் சிறுவன், விளையாட்டுப் பிள்ளை (பாலகாண்டம் 20, 24 ஆவது சர்க்கங்கள்) என்று தசரதன் கூறுவதாக இராமனின் வயது குறித்து மாறுபட்ட செய்திகள் கொடுக்கப்படுகின்றன என்று கூறி அதற்கு அண்ணங்காராச்சாரியார், மற்றும் சி. ஆர். சீனிவாசயங்கார் ஆகிய இருவரின் மொழிபெயர்ப்புகளையும் மேற்கோள் காட்டுகிறார்.

7. சீதையின் பஜாரித்தனம்!

சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பாத இராமன் அவளை அரண்மனையில் பரதனின் பாதுகாப்பில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளும் பொழுது, இதை என் தந்தை கேட்டால் ஆண்வேடத்தில் வந்த ஒருவனுக்கா என் மகளை மணமுடித்தேன் என வருந்துவார். மனைவியைப் பிறருக்கு ஒப்படைத்துப் பிழைப்பை நடத்தும் கூத்தாடியர் போன்று என்னை மற்றவரிடம் ஒப்படைக்க விரும்புகிறாயே என்று சீதை கூறும் பகுதி கற்புக்கரசி எனக் காட்டப்படும் பெண்ணின் சொற்கள் போலில்லை, கடைவீதிப் பஜாரி கூட இப்படிப் பேச மாட்டாள் என்று கூறும் ஈ. வெ. ரா., இதற்குப் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காராச் சாரியார் மொழி பெயர்ப்பில் அயோத்தியா காண்டம் 30 ஆவது சர்க்கத்தை மேற்கோள் காட்டுகிறார்.

இதையும் விட மேலாக, சீதை தனது கொழுந்தன் இலக்குமணனிடம் பேசும் இடமும் உள்ளது. சீதையின் விருப்பத்தை நிறைவேற்றப் பொன்மானை இராமன் விரட்டிச் சென்ற பொழுது, மானாக வந்த மாரீசன் இராமனின் குரலில் இலக்குமணனைப் பொய்யாக உதவிக்கு அழைக்கும் குரலைக் கேட்டு சீதை இராமனுக்கு உதவி செய்யுமாறு இலக்குமணனிடம் கூறுகிறாள். தனியே அவளை விட்டுச் செல்லத் தயங்கும் இலக்குமணனை மனம்போன போக்கில் கண்டவாறு ஏசுகிறாள் சீதை. “சீதை இலக்குமணனை, சக்களத்தி மகன், த்ரோஹி பரமசத்துரு, என்னைக் கைப்பற்ற வந்தவனே, வஞ்சகா, துஷ்டா, இரக்கமற்றவனே, மஹாபாவி, குலத்தைக் கெடுக்க வந்த பிதிருத்ரோஹி, ருத்ராக்ஷப் பூனையைப் போன்றவனே, எந்தப் பாபத்தையும் செய்பவனே, மஹா யோக்கியனைப் போல் வந்தவனே, என்னைக் கைப்பற்ற உன்னைப் பரதன் அனுப்பினானோ, அல்ப ஜந்துவே என்று ஒரு பெண் என்ற லட்சணத்துக்கே கொஞ்சங்கூடப் பொருத்தமின்றிக் குடிவெறியில் உளறிய குடிகாரியைப்போல் இலக்குமணனைப் பேசுகிறாள்” என்று ஈ. வெ. ரா. சுட்டிக்காட்டுகிறார். உண்மையிலேயே அந்த உரையாடலில் இருப்பவை கடுஞ்சொற்களே. திருமகளின் மறுவடிவு என்று கூறும் சீதையின் பேச்சு ஏற்கக்கூடியதாக இல்லைதான். குணமுள்ளவர் வார்த்தைகள் இப்படி இருக்கலாமா என ஈ. வெ. ரா. எழுப்பும் கேள்வியும் நியாயமானதே.

siragu periyar4

8. இராவணனிடம் சீதை சல்லாபம்

துறவி வேடத்தில் வந்த இராவணன் சீதையின் அங்க அழகுகளை, குறிப்பாக உன் தொடைகளும், கொங்கைகளும், பின்தட்டுகளும் அழகானவை, உன் இடை என் கைப்பிடிக்குள் அடங்குகிறதே! எனப் புகழ்வது தரக்குறைவின் உச்சம் என்பதல்லாமல், அதற்குச் சீதை சற்றும் சினம் கொள்ளாமல் துறவியை வரவேற்று உபசரித்து நடந்து கொள்ளும் முறையையும் பண்பற்ற செயல்களின் தொகுப்பாகக் காணுகிறார் ஈ. வெ. ரா. தனது கூற்றுக்குத் துணையாக சி. ஆர். சீனிவாசயங்கார் மொழிபெயர்ப்பில் உள்ள ஆரண்ய காண்டம் 46 ஆவது சர்க்கத்தைக் காட்டுகிறார்.

9. சீதை தன்னைப்பற்றி இராவணனிடம் புகழ்ந்து கூறுதல்!

சி. ஆர். சீனிவாசயங்கார் மொழிபெயர்ப்பில் உள்ள ஆரண்ய காண்டம் 47 ஆவது சர்க்கத்தில் சீதை முறையற்ற வகையில் இராவணன் பேசியதைப் புறந்தள்ளிவிட்டு சீதை இராவணனை உபசரித்து விருந்துண்ண அழைத்து தனது கதையைக் கூறி அறிமுகப்படுத்திக் கொள்கிறாள் என்பதை ஈ. வெ. ரா. படிப்போர் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.

10. சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள்!

இடது கையால் சீதையின் கூந்தலையும், வலது கையால் அவளது தொடைகளையும் சேர்த்துப் பிடித்தெடுத்து சீதையைத் தேரில் ஏற்றுகிறான் இராவணன் என்கிறது சி. ஆர். சீனிவாசயங்கார் மொழிபெயர்ப்பில் உள்ள ஆரண்ய காண்டம் 49 ஆவது சர்க்க உரை. இராவணன் தன் மீது விருப்பமில்லாத பெண்ணைத் தொட்டால் அவன் தலை சுக்கு நூறாகிவிடும் என்ற சாபத்தையும், உடல் தீப்பற்றியெரியும் என்ற மற்றொரு சாபத்தையும் பெற்றவன். ஆனால் சீதையைத் தொட்டுத் தூக்கி கடத்தும் பொழுது இராவணன் தலை வெடிக்காமல், உடல் பற்றி எரியாமல் இருப்பது சீதை உடன்பட்டே இராவணனுடன் சென்றாள் என்பதைத் தானே காட்டுகிறது என்பது ஈ. வெ. ரா. முன் வைக்கும் விவாதம். அத்துடன் தாத்தா தேசிகாச்சாரியார் மொழிபெயர்ப்பில் உள்ள ஆரண்ய காண்டம் 55 ஆவது சர்க்க உரையில், “உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை நேர்ந்தமையின் இதுவும் தர்மமேயாகும்” என்று இராவணன் சீதையிடம் கூறுவது அவர்கள் உறவைக் குறிக்கும் கூற்றாக ஈ. வெ. ரா. காட்டுகிறார்.

11. இராமனின் சின்னப் புத்தி!

ஆரண்ய காண்டத்தில் மட்டுமின்றி, கிஷ்கிந்தா காண்டத்திலும் சீதைக்கும் தனக்கும் இருந்த இல்லற உறவினை தனது தம்பியான இலக்குமணனிடம் இராமன் விவரித்துக் கூறும் செயல் வெட்கங் கெட்ட செயல், “இந்தப் பம்பை நதியில் அடிக்கும் சுகமான காற்றைச் சீதையும் என்னிடத்திலிருந்து அனுபவித்தால் ஒழிய நான் பிழைக்க மாட்டேன்” என்று அண்ணன் தனது தம்பியிடம் விவரித்துக் கொண்டிருப்பது உலகில் எங்குமே அறிந்திராதது என்று ஈ. வெ. ரா. காட்டுகிறார். ஆனால், முன்னர் கையாண்ட மேற்கோள் முறையைக் கைவிட்டு, இப்பகுதியில் கிஷ்கிந்தா காண்டத்தில் சர்க்கம் எவையெவை எனவும், யாருடைய மொழிபெயர்ப்பைப் பின் பற்றினார், எந்த நூல், ஆசிரியர் யார் என்ற தகவல் கொடுக்கப்படாமல் வெறும் பக்க எண்ணை மட்டும் கொடுத்துள்ள முறை ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்காது.

12. இராமன் வயதைப் பற்றிக் கவுசலை முன்னுக்குப்பின் முரண்!

நீ பிறந்து காட்டுக்குப் போகும் இன்றுவரை 17 வயதாகிறது என்று கோசலை குறிப்பிடும் அயோத்தியா காண்டம் 20 ஆவது சர்க்கமும் உள்ளது, கோசலையே காட்டுக்கு புறப்படும் இராமன் 25 உள்ளவன் என்று கூறும் அயோத்தியா காண்டம் 43 ஆவது சர்க்கமும் உள்ளது என்று சி. ஆர். சீனிவாசயங்கார் மொழிபெயர்ப்பில் இருந்து ஈ. வெ. ரா. காட்டுகிறார். இதனால் இராமாயணம் பொய் புரட்டு முரண்கள் பல கொண்ட கட்டுக்கதை என்ற தனது முடிவை உறுதிப் படுத்திக் கொள்கிறார்.

13. சீதையின் வயது பற்றிய புரட்டு!

சீதை அனுசூயையிடம் தனது கதையைக் கூறும் பகுதியான, சி. ஆர். சீனிவாசயங்கார் மொழிபெயர்ப்பு அயோத்தியா காண்டம் 118 ஆவது சர்க்கத்தில் கூறப்படும் வயதும், ஆரண்ய காண்டம் 47 ஆவது சர்க்க உரையில் குடிலில் இராவணனிடம் சீதை தான் காட்டிற்கு வந்த பொழுது தனக்கு வயது 17 என்று கூறுவதும் வேறுபடுவதைக் காட்டுகிறார். இராமனின் வயது முரண்பாடுகளுடன் காட்டப்படுவது போலவே சீதையின் வயதிலும் குழப்பங்கள் உள்ளதைக் காட்டுகிறார் ஈ. வெ. ரா.

14. இலட்சுமணனது தத்துவஞானம் – விதியையடித்துத் தள்ளுகிறான்!

“வீர்யமில்லாதவர்களும், சித்தப்பிரமை உள்ளவர்களும், ஷத்திரியர்களில் கீழ்ப்பட்டவர்களும் மாத்திரம் வாஸ்தவமாக சக்தியற்ற விதியை அனுசரித்து அதற்குக் கட்டுப்படுவார்கள்” என்றும் “பயந்தவர்களும் வீர்யமில்லாதவர்களுமே தெய்வத்தைப் பின்பற்றுவார்கள். வீரர்களும் மன உறுதி உள்ளவர்களும் லட்சியம் செய்ய மாட்டார்கள்” என்றும்,  சி. ஆர். சீனிவாசயங்கார் மொழிபெயர்ப்பில் இருந்து அயோத்தியா காண்டம் 23 ஆவது சர்க்கத்தில் இலக்குமணன் கூறுவதை மேற்கோள் காட்டும் ஈ. வெ. ரா. பகுத்தறிவுக் கோணத்தில் உள்ள இலட்சுமணனது தத்துவஞானத்தைப் பாராட்டுகிறார். இதே கருத்துகளை நாங்கள் (திராவிட கழகத்தினர்) கூறினால் நாங்கள் நாத்திகர் என்கிறார்கள். ஆத்திகர்கள் இலக்குமணன் கருத்துகளின் பகுதிக்கு ஒன்றும் சொல்ல வழியில்லாமல் திருடனுக்குத் தேள் கொடியது போல வாய்மூடி உள்ளார்கள் என்று எள்ளலும் செய்கிறார் ஈ. வெ. ரா.

15. கடவுளுக்கு விபசாரம் சர்வசாதாரணம்

இராமாயணத்தில் காட்டப்படுபவர்கள் ரிஷிகளாக இருந்தாலும், அரசர்களாக இருந்தாலும், கடவுளின் அவதாரங்களாகக் காட்டப்படுபவர்களாக இருந்தாலும் ஒழுக்க நெறிக்கு எடுத்துக்காட்டாகக் காட்டப்படும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளவில்லை என்று மிகச்சுருக்கமான இந்த அத்தியாயத்தில் தனது கருத்தை வைக்கும் ஈ. வெ. ரா., அதற்கு யாவரும் அறிந்த இராமாயணக் காட்சிகளை பொதுவாக சுட்டிச் செல்வதற்கு மேல் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. எந்த மொழிபெயர்ப்பு ஆசிரியரின் இராமாயண உரையையும் துணைக்குக் கொள்ளவுமில்லை. தலைப்பிற்கும் உள்ளுறைப் பொருளுக்கும் தொடர்பும் இல்லை.

16. இராமாயணம் ஆரிய கலாசாரத்தைச் சித்தரிக்கும் இலக்கியம்!

மற்றுமொரு சுருக்கமான, அத்தியாயத்திற்கும் அதன் தலைப்புக்கும் பொருத்தமின்றி பொதுவாக யாவரும் அறிந்த கட்டுக்கதையான காலக்கணக்கு, கடவுளுக்கே சாபம் கொடுக்கும் முனிவர்களும் தேவர்களும், இயற்கையில் காண முடியாத வகையில் விண்ணுக்கும் மண்ணுக்கும் நெடிது வளரும் உருவம், மலைகளையும் தூக்கி வீசிப் பல நூறாயிரம் மனிதர்களைக் கொல்லும் நிகழ்வுகள் என்ற பொய்யும் புரட்டும் நிறைந்த கதை இராமாயணம் என மேலோட்டமாக ஈ. வெ. ரா. சுட்டிச் செல்லும் அத்தியாயம் இது.

17. இராவணன் கொல்லப்பட்ட பிறகு இராமன் சந்தேகப்பட்டது, ஆத்திரப்பட்டது!

ஒரு வீரன் தனக்கு ஏற்பட்ட பழியைக் களையும் நோக்கில் தனது எதிரிகளை அழிக்கும் முறையில் நானும் பிறழாது எனது கடமையைச் செய்தேன் என்று கூறி இராமன் சீதையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பகுதிக்கு சி. ஆர். சீனிவாசயங்கார் மொழி பெயர்ப்பில் இருந்து யுத்த காண்டம் 116 , 117 சர்க்கங்களை மேற்கோள் காட்டுகிறார் ஈ. வெ. ரா. அத்துடன் இராமன் சீதையைச் சந்தேகிக்கிறான் என்பதை “துஷ்டனான இராவணனுடைய வீட்டில் வசித்ததால் உன் நடத்தையைப் பற்றிச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது” என்று வெளிப்படையாகவே வெறுப்பைக் காட்டும் வரியையும் தனது சான்றாகக் கொடுக்கிறார் .

18. இராமன் சீதையை சோரம் போனவளாகவே தீர்மானித்துவிட்டான்!

“நீ நிகரற்ற அழகுள்ளவள்; பார்ப்பவர்களுடைய மனத்தை அபகரிப்பவள்; இராவணன் உன்மேல் ஆசை வைத்து எடுத்துக்கொண்டு போனான்; சகல விதத்திலும் அவனுடைய வசத்தில் இருந்தாய். அவனுக்கு நீ சுவாதீனப்படாமல் இருக்கமுடியுமா?” என்று சந்தேகித்துக் கூறும் மொழிகளையும்;  “நான் கோபத்தில் பதறிச் சொல்லவில்லை; இது சாந்தமாய் நெடுநேரம் ஆலோசித்து செய்த முடிவு. லட்சுமணன், பரதன், சத்துருக்கனன், சுக்ரீவன், விபீஷணன் முதலியவர்களுடைய கிரகங்களில் எங்கே இஷ்டமோ அங்கே நீ வசித்துக் கொண்டிருக்கலாம்”என்று சீதைக்கு இராமன் விடுதலை அளிக்கும் மொழிகளையும் மேற்கோள் காட்டி இராமன் சீதையின் நடத்தையைச் சந்தேகிப்பதை சி. ஆர். சீனிவாசயங்கார் மொழிபெயர்ப்பில் இருந்து யுத்த காண்டம் 117 சர்க்கத்தில் இருந்து ஈ. வெ. ரா. காட்டுகிறார்.

19. சீதை ஆத்திரமடைந்து ஒரு அளவுக்குத் தந்திரமாக தனது கற்புத் தவற்றை ஒப்புக்கொள்கிறாள்!

இராமனின் குற்றச்சாற்றையும் முடிவையும் கண்டு சினம் கொண்ட சீதை “நீ பேசியது அற்பனைப் போல் பேசினாய்; வீரனுக்குள்ள பேச்சுகளைப் பேசவில்லை”, “என்னை இராவணன் தொட்டு டெடுத்தான் என்கிறீர்கள்; வாஸ்தவமே” “நான் ஸ்திரீ, ஒண்டி; அநாதை; அவனோ ராட்சதன்; அளவற்ற பலசாலி; க்ரூரன்; ஆயுதபாணி; சகாயமுள்ளவன் என்னால் கூடிய வரை தடுத்தேன். எனக்கு எள்ளளவாவது அவனுடன் போக வேண்டும் என்று ஆசை இருந்ததா?” (சி. ஆர். சீனிவாசயங்கார் மொழிபெயர்ப்பில் இருந்து யுத்த காண்டம் 117 சர்க்கம்) என்று சீதை கூறும் மொழிகளைச் சுட்டிக்காட்டும் ஈ. வெ. ரா.வின் நோக்கம், சீதை உடன்பட்டுத்தான் இராவணனுடன் சென்றிருக்கிறாள். இல்லாவிடில் அவளைத் தொட்டுத் தூக்க முயன்ற இராவணன் தலை வெடித்து, உடல் பற்றி எரிந்திருப்பான் அல்லவா? என்று காட்டும் முயற்சி.

20. இப்படிப்பட்ட இந்த இராமாயணம் ஒரு திருட்டுக் கதை!

சமயக் கருத்துகளை கூறி மக்களிடம் மூட நம்பிக்கையை வளர்க்கும், ஆரிய ஆதிக்கத்தைத் திணிக்கும் இராமாயணம் என்ற கதையின் மூலக்கருத்து கந்தபுராணத்தில் இருந்து களவாடப்பட்டது. இரண்டும் ஒரே கூறுகளைக் கொண்டுள்ளது. பரிணாம வளர்ச்சிக் கோணத்தில் ஆராய்ந்தால் சிவனின் தோற்றம் குணங்கள் பண்புகள் எனக் குறிப்பிடப்படுவன நாகரிகம் வளர்ச்சியடையாத நாடோடி யாகத் திரிந்த காலற்றவை. திருமாலைப் பற்றிக் குறிப்பிடப் படுபவை மக்கள் உழவுத்தொழில் மேற்கொண்டு ஊர்கள் அமைத்து வாழ்ந்த காலத்தைக் காட்டுபவை. ஆகவே கந்தபுராணம் முந்தியது எனவும், இராமாயணம் அதன் தழுவலில் வந்தது எனவும் ஈ. வெ. ரா. கருதுகிறார்.

21. கருத்துக் கையாடல்களாவன

இப்பகுதியில் ஒப்பிலகியக் கோணத்தில் கந்தன் இராமன் இவர்களின் தோற்றம், பிறப்பு; சீதை வள்ளி இவர்களின் தோற்றம் பிறப்பு; தேவர்களைக் காக்கும் நோக்கில் அசுரர்களை அழிக்க அவதரித்த நாயகர்கள்; பிறர் மனைவியரைச் சிறை எடுத்துச் செல்லும் அரக்கர்கள்; அங்கவீனம் செய்யப்படும் அரக்கர்களின் தங்கைகள்; அடுத்தவர் மனைவியைக் குறித்து அண்ணனிடம் ஆசையைத் தூண்டிவிடும் தங்கைகள்; நாயகர்களின் தூதுவர்கள் எதிரி நாட்டை எரியூட்டி அழிப்பது எனப் பல ஒற்றுமைகளை சுட்டிக் காட்டும் ஈ. வெ. ரா. வின் நோக்கம் இதெல்லாம் அறிவுக்கு ஒவ்வாத ஒரு கதை, இந்த அழகில் இராமாயணக்கதை ஒரு திருட்டுக் கதைவேறு என்ற நையாண்டிதான் தொனிக்கிறது.

வழக்கமாக அவரது கருத்துகள் வழி நாம் அறிந்துள்ளது போல இராமாயணத்தின் இலக்கியச்சுவை பற்றியெல்லாம் ஈ. வெ. ரா. விற்கு அக்கறை இல்லை. இது ஒரு கற்பனைக்கதை. பொய்யும் புரட்டும் நிறைந்த இதைச் சொல்லி ஏன் மக்களை ஏமாற்றிச் சமயம் வளர்க்கிறார்கள் என்ற ஆதங்கம்தான் வெளிப்படுகிறது. அவர் வால்மீகி இராமாயண மொழிபெயர்ப்பு நூல்களுடன் இராமாயண ஆய்வை இந்த நூலில் நிறுத்திக் கொள்கிறார், எந்த ஒரு இடத்திலும் கம்பராமாயண காட்சிகளுடன் ஒப்பிட முயலவில்லை. இறுதியாக நூலில் அவரது கருத்துகள் அனைத்தையும் தொகுத்து முடிவுரையாகக் கொடுக்கவில்லை. மேலும், 15 மற்றும் 16 ஆவது அத்தியாயங்களை நீக்கியிருந்தாலோ, அல்லது அவற்றின் கருத்துகளைத் தொகுத்து முடிவுரையாகக் கொடுத்திருந்தாலோ மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

__________________________________________

இராமாயணக் குறிப்புகள் – பெரியார்

Notes on Ramayanam – Periyar E.V.R.

வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்

பதிப்பு : மே – 2007

http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/13.pdf

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply