குரு (வியாழ) பெயர்ச்சியால் நன்மையோ தின்மையோ இல்லை
நக்கீரன்
அறிவியல் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்ற பாரதியாரின் கனவு பலித்து வருகின்றன.
நிலாவில் 1969ம் ஆண்டு யூலை 16 ஆம் தேதி அப்பொலோ 11 என்ற விண்கலத்தை அமெரிக்கா நிலவுக்கு ஏவியது. நான்கு நாள் பயணத்திற்கு பின்னர் அந்த விண்கலம், யூலை 20ம் தேதி நிலவில் தரை இறங்கியது. அந்த விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று பேர் சென்றனர். அதன் பின்னர் ஆளில்லாத விண்கலன்களை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய், வியாழன், சனி கோள்களை ஆராய அனுப்பி வருகிறது.
மனிதர் பயணித்த முதல் விண்கலம் வஸ்தோக் 1 (Vostok 1) 1961-ல் செலுத்தப்பட்டது. இதில்தான் யூரி ககாரின் பூமியை சுற்றிவந்தார். முதல் விண்வெளி வீரர் என்ற புகழ்பெற்றார். வஸ்தோக் விண்கலம் மேலும் ஐந்து விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவது விண்கலம் ஃபிரீடம் 7 ஆகும். 1961-ல் ஏவப்பட்ட இதில் அமெரிக்க விண்வெளி வீரரான அலன் ஷெப்பர்ட் துணை-சுற்றுப்பாதை விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இந்த விண்கலம் 187 கிமீ உயரத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து மேலும் ஏழு மெர்க்குரி விண்கலங்கள் விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டன.
2011 வரை உருசியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக மனிதர் செல்லும் விண்கலங்களை செலுத்தியுள்ளன. இந்தியா, ஜப்பான், ஐரோப்பா (ESA) ஆகியவை மனிதர்கள் செல்லும் விண்கலங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன.
நொவெம்பர் 2000-லிருந்து மனிதர் தங்கியிருக்கும் அனைத்துலக விண்வெளி நிலையம் உருவானது, அமெரிக்கா, உருசியா, கனடா மற்றும் பல நாடுகளின் கூட்டு முயற்சித் திட்டமாகும்.
1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. பல்வேறு விண்கலன்களையும் செவ்வாய்க்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றது. இந்த ஆண்டு விடாமுயற்சி (Perseverance) என்ற விண்கலத்தை நாசா செவ்வாய்க் கோளுக்கு அனுப்பியிருக்கிறது. அடுத்த ஆண்டு 2021 பெப்ரவரி 18 இல் செவ்வாயில் ஜெசெரோ பள்ளத்தில் தரையிறங்க இருக்கிறது. இந்த விண்கலம் பண்டைய வாழ்க்கையின் அறிகுறிகளைத் தேடுவதோடு மற்றும் பூமிக்கு திரும்புவதற்கு முன்னர் பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரிக்கும்.
இப்படி பல நாடுகள் போட்டிக் போட்டுக் கொண்டு செவ்வாய்க் கோள் குறித்தும், உயிரினங்கள் வாழ்வதற்கு ஆன அங்குள்ள சூழ்நிலைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகின்றன.
ஆனால் தமிழன் என்ன செய்கிறான்? இந்தக் கோள்களை தெய்வங்கள் என நினைக்கிறான். இந்தக் கோள்கள் தனது உயர்வு – தாழ்வுக்கு, வெற்றி – தோல்விக்கு காரணம் என நம்புகிறான். சோதிடன் சாதகத்தைப் பார்த்துவிட்டு இன்னின்ன கோள்கள் இன்னின்ன வீடுகளில் இருக்கின்றன. இன்னின்ன கோள்களினால் இன்னின்ன தோசங்கள் இருக்கின்றன, அதற்கான பரிகாரத்தையும் சொல்கிறான். சோதிடன் சொல்வதை படிக்காதவன் மட்டுமல்ல படித்தவனும் நம்புகிறான்.
முக்கியமாக திருமணத்தின் போது திருமணப் பொருத்தம் பார்க்கிறார்கள். கல்வி, செல்வம், தேக நலன் இருந்தும் பத்துப் பொருத்தங்களில் நட்சத்திரப் பொருத்தம் உட்பட ஆறு, ஏழு பொருத்தங்கள் இல்லை என்று சொல்லி திருமணத்துக்கு சோதிடன் தடைபோட்டு விடுகிறான்.
சாதகம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் விண்ணில் உள்ள கோள்களை பிரதிபலிக்கிறது. விண்ணை ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட 12 வீடுகளாகப் பிரிக்கிறார்கள். அதற்குள் ஒன்பது கோள்களையும் 12 இராசிகளையும் பிரதிபலிக்கிறது. பன்னிரண்டு இராசிகள் என்பது விண்ணில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களாகும். அவற்றை ஒன்றோடு ஒன்று தொடுக்கும் போது பண்டைண வானியலாளர்களுக்கு அவை, கிடா, காளைமாடு நண்டு, துலா, சிங்கம் போல் தெரிந்தன. அந்த மிருகங்களின் பெயர்களை இராசிகளுக்கு வைத்தார்கள்.
திருமணம் என்றால் நட்சத்திரப் பொருத்தம் முக்கியம். அது அமையாவிட்டால் திருமணம் நின்றுவிடும்.
மொத்தத்தில் இந்துக்கள் 12 வீடுகள், 12 இராசிகள், ஒன்பது கோள்கள், 27 நட்சத்திரங்களை வைத்துத்தான் சாதகத்தைக் கணிக்கிறார்கள். இதில் வீடுகள் இராசிகள் கற்பனை ஆகும். இராசி நட்சத்திரங்கள் உண்மை. ஆனால் அவற்றை மனம்போன போக்கில் தொடுத்து அதற்கு மேடம், இடபம் என 12 இராசிகளை உருவாக்கியது கற்பனையாகும்.
ஒன்பது கோள்களில் இராகு, கேது கோள்கள் அல்ல. சூரியன் கோள் அல்ல. அதுவொரு நட்சத்திரம். சந்திரன் துணைக் கோள். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஆக ஐந்தும் மட்டுமே கோள்கள். நாம் வாழும் புவி ஒரு கோள். ஆனால் சோதிடர்கள் அதனைக் கணக்கில் எடுப்பதில்லை!
இந்தக் கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகளினால் புவியில் வாழும் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. செவ்வாய் சிகப்பு நிறம் என்பதால் அது போர்க்கடவுள் என மனிதன் நினைத்தான். சனி 1,426,940 கிமீ தொலைவில் காணப்படுகிறது. அது கண்ணுக்கு மங்கலாகத் தெரிகிறது. அதனால் அதன் நிறம் கருப்பு, அதன் வாகனம் காகம் எனச் சோதிடர்கள் சொன்னார்கள்.
இந்தக் கோள்கள் சூரியனைச் சுற்றி வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. அப்போது அது ஒவ்வொரு “இராசிகளை” கடந்து வருகின்றன. அதனைத்தான் “பெயர்ச்சி” என்கிறார்கள். இப்போது வான வெளியில் ஓடிக் கொன்றிருக்கின்ற கோள்கள் பற்றிப் பார்ப்போம்.
நாம் வாழும் இந்தப் பூமியில் இருந்து சூரியன் சராசரி 149.60 மில்லியன் கிமீ (92.96 மைல்) ) தூரத்தில் இருக்கிறது. பூமி இந்தச் சூரியனைச் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றிவரும் காலத்தை ஓர் ஆண்டு என்று அழைக்கிறோம். ஓரு நட்சத்திர ஆண்டில் (Sidereal) 365.24219878 நாட்களும் ஒரு வெப்ப மண்டில ஆண்டில் (Tropical) 365.24219878 நாட்கள் இருக்கின்றன. சூரியன் ஒரு கோள் என்று சோதிடம் சொல்கிறது. இல்லை அது ஒரு நட்சத்திரம் என வானியல் சொல்கிறது.
மேலும் புவி ஒரு கோள் என்றாலும் இராசிச் சக்கரத்தில் அதற்கு இடம் இல்லை. காரணம் புவியும் ஒரு கோள் என்பது சோதிடர்களுக்குத் தெரியாமல் இருந்தது.
பூமியைப் போலவே ஏனைய கோள்கள், உப கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. கீழ்க்கண்ட அட்டவணை ஒரே பார்வையில் புவி உட்பட 9 கோள்களின் வான் வெளி ஓட்டத்தைப் பற்றிய தரவுகளைத் தருகிறது.
வான் வெளியில் கோள்களின் ஓட்டம்
அட்டவணை 1
கோள் | விட்டம் | ஞாயிறு கோள் தொலைவு | சுழல் காலம் | சுற்றுக் காலம் | துணைக் கோள் | அடர்த்தி | திணிவு | வெப்பம் | அச்சின் சாய்வு | ஞாயிறை சுற்றும் வேகம் | |
கிமீ | மைல் | மில் கிமீ | நீர்-1 | புவி-1 | செல்சி | பாகை | கிமீ | ||||
புதன் | 4,878 | 3,029 | 57,910 | 58.67 நாள் | 87.96 நாள் | 0 | 5.43 | 0.06 | 467/-210 | 0 | 47.89 |
வெள்ளி | 12,102 | 7,515 | 108,200 | 243 நாள் | 224.70 நாள் | 0 | 5.25 | 0.82 | 450 | 177.4 | 35.03 |
புவி | 12,756 | 7,921 | 149,600 | 23.56 மணி | 365.24 நாள் | 1 | 5.52 | 1.00 | -89/58 | 23.45 | 29.79 |
நிலா | 3,476 | 2,159 | 384,467* | 27.32** | 27.32** | 0 | 0.60 | 0.012 | 123/-233 | 7.00 | 31.022*** |
செவ்வாய் | 6,794 | 4,219 | 227,940 | 24.6 மணி | 687 நாள் | 2 | 3.93 | 0.11 | -187 | 23.98 | 24.13 |
வியாழன் | 142,984 | 88,793 | 778,330 | 9.8 மணி | 11.9 ஆண்டு | 35 | 1.33 | 317.83 | -148 | 3.08 | 13.06 |
சனி | 120,536 | 74,852 | 1,426,940 | 10.665 மணி | 29.46 ஆண்டு | 31 | 0.71 | 95.2 | -178 | 26.73 | 9.64 |
யுறேனியஸ் | 51,118 | 31,744 | 2,870,990 | 17.24 மணி | 84 ஆண்டு | 5 | 1.24 | 14.53 | -210 | 97.92 | 6.81 |
நெப்தியூன் | 49,528 | 30,756 | 4,497,070 | 16.1 மணி | 165 ஆண்டு | 8 | 1.67 | 17.14 | -210 | 28.8 | 5.43 |
*புவி-நிலா தொலைவு (கிமீ) **புவியைச் சுற்றும் காலம் *** புவியைச் சுற்றும் வேகம்
இதன் அடிப்படையில் வியாழன் சூரியனைச் சுற்றிவர 11.9 புவி ஆண்டுகளை எடுக்கின்றது.
சோதிடர்கள் பூமியும் ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றிவருவதில்லை, சூரியன்தான் புவி உட்பட ஏனைய கிரகங்களை சுற்றி வருகிறது என்கிறார்கள். உண்மையில் புவிதான் ஞாயிறைச் சுற்றிவருகிறது ஆனால் எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றிவருவது போன்ற மருட்சி (illusion) ஏற்படுகிறது. இந்த ஞாயிறின் தோற்றப் பாதைக்கு (ecliptic)இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதி இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 வீடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலே கூறியவாறு இராசிகள் பத்து, நூறு ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படும் விண்மீன் கூட்டங்கள் (Constellations) ஆகும். அவற்றைத் தொடுத்து வரும் உருவங்களுக்குக் கிடா (மேஷம்) காளைமாடு (ரிஷபம்) மிதுனம் (இரட்டையர்) நண்டு (கடகம்) சிங்கம் (சிம்மம்) கன்னி, துலாக்கோல் (துலாம்) தேள் (விருச்சிகம்) வில் (தனுசு) மகரம் (பாதிமீன் பாதி மனிதன்) கும்பம் (குடம்) இரட்டை மீன்கள் (மீனம்) எனப் பெயர் இட்டுள்ளார்கள்.
இப்படிப் பெயர் இட்ட பின்னர் எந்த விதிக்கட்டுப்பாடுமின்றி அந்த உருவத்துக்குரிய பண்புகளை (குணாம்சங்களை) அந்த இராசியில் பிறந்தவர்களுக்கு மாடேற்றி விட்டார்கள். எடுத்துக்காட்டாக சிங்க இராசியில் பிறந்த ஒரு பெண் சிங்கம் போல மூர்க்க குணம் படைத்தவளாக இருப்பார்கள்! விருச்சிக இராசியில் பிறந்தவர்கள் தேள் போல் கொட்டுவார்கள்!
சூரியனை வியாழன் ஒருமுறை சுற்றி வர 11.9 ஆண்டுகள் எடுப்பதால் ஒவ்வொரு இராசியையும் கடக்க ஒரு ஆண்டுகள் எடுக்கும். இதனையே குரு பெயர்ச்சி அல்லது வியாழ பெயர்ச்சி என்று சோதிடர்கள் சொல்கிறார்கள். வியாழன் எதையும் பெயர்ப்பதில்லை. அது தன்பாட்டில் சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாக அண்ட வெளியில் அதனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் சோதிடர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் அண்டத்தைப்பற்றி அறிந்திருந்த அதே தரவுகளின் அடிப்படையில் வியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி இவற்றால் தோசம் ஏற்படுகிறது எனறு சொல்லி அது பூசை, யாகம் எனப் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
இந்த வியாழ பெயர்ச்சி பற்றி ஒரு சோதிடர் சொல்வதைப் படியுங்கள்.
மங்களநாயகன் செவ்வாய் வீட்டிற்கு மாறும் குருப் பெயர்ச்சி பலன்கள்
நிகழும் மங்கலகரமான கலியுகாதி 5121- சாலிவாகன சகாப்தம் 1942 – பசலி 1430- கொல்லம் 1196ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீசார்வரி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது சரத் ருது ஐப்பசி மாதம் 30ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 15.11.2020 சுக்லபக்ஷ ப்ரதமையும் – ஞாயிற்றுக்கிழமையும் – அனுஷ நக்ஷத்ரமும் – சோபன நாமயோகமும் – கிம்ஸ்துக்ணம் கரணமும் – சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 39.01க்கு – இரவு 09.48க்கு மிதுன லக்னத்தில் குரு பகவான் தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு மாறுகிறார். மகர இராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த இராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மகர இராசிக்கு வரும் குரு பகவான் கும்ப இராசிக்கு பிலவ வருடம் ஐப்பசி மாதம் 27ம் தேதி – 13.11.2021 – சனிக்கிழமையன்று மாறுகிறார்.
தற்போது மாறக்கூடிய குருபகவான் மகர இராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் ரிஷப இராசியையும் – ஏழாம் பார்வையால் கடக இராசியையும் – ஒன்பதாம் பார்வையால் கன்னி இராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட, பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் இராசிகள் பூரண பலன்கள் பெறும். மனித வாழ்க்கையின் ஏற்றம் – இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன.
பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர்.
இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான்.தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
குருபகவான் இராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு இராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம இராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
குருபகவான் ஒரு இராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார். இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய இராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். குரு பெயர்ச்சியை முன்னிட்டு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 04.10.2018 மற்றும் 11.10.2018 ஆகிய இரு நாட்கள் குருப் பெயர்ச்சி மகா யாகம் நடைபெறுகிறது.
சூரிய குடும்பத்தில் உள்ள வியாழ கோள் பற்றி வானியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
சூரிய குடும்பத்தில் வியாழன் | |
பூமியிலிருந்து தூரம் | 588.50 மில்லியன் கிமீ |
சூரியனிலிருந்து தூரம் | 778.33 மில்லியன் கிமீ – புவியின் தொலைவை விட 5.2 மடங்கு |
சுற்றளவு | 1,42,984 கிமீ (பூமியைப் போல் 11.2 மடங்கு) |
தன்னைத்தானே சுற்றும் நேரம் | 9 மணி 55 மணித்துளி (பூமி 24 மணி) |
சூரியனை சுற்றி வரும் காலம் | 11.86 ஆண்டுகள் அல்லது 4,333 புவிநாள் |
சூரியனைச் சுற்றும் வேகம் | வினாடிக்கு 13.06 கிமீ |
வெப்பம் | -234 பாரன்கைட் (-148 C) |
அடர்த்தி | தண்ணீரை விடக் குறைவு (தண்ணீரில் மிதக்கும்) |
சூரியனில் இருந்து | 5 ஆவது இடம் (பூமி 3 ஆவது இடம்) |
வடிவம் | முதலாவது பெரிய கிரகம் (பூமியைவிட 121.9 மடங்கு பெரியது) |
வளிமண்டலம் | சுழன்றடிக்கும் முகில் கூட்டங்கள், அமோனியா, நீரகம் (hydrogen)90 விழுக்காடு, கீலியம் (helium) 10 விழுக்காடு |
மேற்பரப்பு | வெப்ப வாயு மறறும் நீர்மம் (Hot gas and liquid) |
வியாழனில் இருந்து வரும் ஒளி பூமியை வந்தடையும் நேரம் | 35 மணித்துளி 52 நொடி (நொடிக்கு 299,792,458 கி.மீ வேகம்) |
துணைக் கோள்கள் | 63 |
வளையம் | 1 |
புவியில் ஆளின்நிறை 180 இறாத்தல் | 426 இறாத்தல் |
அண்டத்தில் வலம் வரும் கோள்களால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. அவற்றால் நன்மை, தின்மை ஏற்படாது. அவை பல நூறு மில்லியன் மைல்களுக்கு அப்பால் அண்ட வெளியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. மனிதர்கள் அறியாமை காரணமாகவே இந்தக் கோள்களுக்கு தெய்வீகம் கற்பித்து அவை மனிதனது உயர்வு, தாழ்வு, நன்மை, தின்மை போன்றவற்றுக்குக் காரணம் என நினைக்கிறான். ஒருவன் தனக்கு வியாழ தோசம், சனி தோசம் இருக்கிறது எனச் சோதிடன் சொல்வதை நம்பினால் உளவியல் அடிப்படையில் அவனுக்குத் தடைகள் வந்து விடும்.
பொதுவாக சனி, செவ்வாய், இராகு, கேது பெயர்ச்சியின் போது தோசம் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் வியாழன் விதி விலக்கு. அது எல்லா இராசிக்காரர்களுக்கும் நன்மை செய்யும் கோள் என்று சொல்கிறார்கள். அப்படியிருந்தாலும் வியாழ பெயர்ச்சிக்கு அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் நன்மை பெறலாம் என்பது வெறும் நம்பிக்கையே தவிர உண்மையன்று. அண்ணளவாக 588.50 மில்லியன் கிமீ (365.64 மில்லியன் மைல்) அப்பால் இருக்கும் வியாழனுக்கு இங்கு அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் அது அந்தக் கோளைத் திருப்திப் படுத்துமா? குளிர வைக்குமா?
சோதிடர்களில் பலர் ஒழுங்காக படிக்காது, வேறு எந்த வேலையும் செய்யத் திறமை இல்லாது ஏமாற்றிப் பிழைப்பு நடத்த சோதிடத்தை கையில் எடுத்துள்ளார்கள். கனடாவுக்கு வரும் சோதிட சிகாமணிகள், சோதிட சக்கரவர்த்திகள், சோதிட பண்டிதர்கள், சோதிட ஆசான்கள்பேரளவு படியாத தெலுங்கர், மாலையாளிகள் ஆவர். இவர்கள் மூடநம்பிக்கையைப் புகுத்தி தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறார்கள். அதற்கு இங்குள்ள செய்தித்தாள்கள், வணிக நிறுவனங்கள் துணை போகின்றன.
உண்மையான இறை தத்துவம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறப்பதற்கு முன் அவன் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைக்கு – சென்ற பிறவிகளில் செய்த கர்மவினைகளுக்கு – ஏற்ப இறைவனால் படைக்கப்படுகிறான். இது அவனது தலையெழுத்து. இந்த தலைவிதியை யாரும் அழித்தெழுத முடியாது.
ஆனால், சோதிடம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறக்கும்போதுள்ள கிரகங்களின் நிலையே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிறது.
அப்படியாயின் ஒருவன் வாழ்வைக் கிரகங்கள் தீர்மானிக்கின்றனவே தவிர எல்லாம் வல்ல எல்லாம் தெரிந்த எங்கும் நிறைந்த இறைவன் அல்ல என்பது உறுதியாகிறது.
ஆக, சோதிடத்தை நம்புகிறவன் இறைவனை மறுக்கிறான். அவன் நாத்திகனாகிறான். அது போலவே வாஸ்துவை நம்புகிறவன் அதைவிடப் பெரிய நாத்திகன். காரணம், வாசலை மாற்றி அமைத்தால் வாழ்வே மாறுகிறது என்றால், வாழ்வை இறைவன் தீர்மானிப்பதில்லை, கிரகங்களும் தீர்மானிப்பதில்லை, ஒரு வீட்டின் வாசலும் யன்னலும் இருக்கும் இடங்களே தீர்மானிக்கின்றன என்றாகிறது. அதன்படி, வாஸ்துவை நம்புகிறவன் இறைவனையும் சோதிடத்தையும் மறுக்கிறான்!
தமிழர்கள் அறிவை வளர்க்க வேண்டும். பகுத்தறிவின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். மேற்கு நாடுகள் அறிவுக்கு முதலிடம் கொடுக்கின்றன. அறிவே ஆற்றல் (Knowledge is power) என்கிறார்கள். அதன் மூலம் மண்ணையும் விண்ணையும் அளக்கிறார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.