இயற்கை விவசாயம் (Organic Farming)

இயற்கை விவசாயம் (Organic Farming)

இயற்கை விவசாயம் என்பது விவசாய பண்ணையை உயிருள்ள ஒரு தொகுதியாக கருதி, சூழலுடன் இசைவான முறையில், இயற்கையாக கிடைக்கும் உள்ளீடுகளை பயன்படுத்தி, பொருளாதார ரீதியில் பயனளிக்கக்கூடிய உற்பத்திகளை மேற்கொள்வதை நோக்கமாக கொண்ட ஒன்றிணைந்த விவசாய முறையாகும்.

இவ்விவசாய முறையின் அடிப்படை தத்துவமானது, பண்ணையில் ஆரோக்கியமானதும் உயிர்வாழ்கின்றதுமான மண்ணை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான பயிர்களை உற்பத்தி செய்வதாகும்.

1960 ஆம் ஆண்டுகளிலிருந்து இயற்கை  விவசாயமானது விசேட கவனத்தை ஈர்த்ததற்கான காரணம் விவசாயமானது இயந்திர மயமாக்கப்பட்டதும் கிருமிநாசினிச் சேர்வைகள் உணவில் தேக்கமடைந்ததனால் பல சுகாதார பிரச்சனைகளுக்கு காரணமாய் அமைந்ததும், உயிரங்கிகளும் அவற்றின் இருப்பிடங்களும் அழிவடைந்தமையும் சூழல் மாசடைந்தமையுமாகும்.

இயற்கை  விவசாயமுறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் தரத்தில் உயர்ந்தவையாகவும் சந்தையில் அதிக விலைவாய்ப்பை பெறக் கூடியவையாகவும் உள்ளன.

இயற்கை  விவசாய முறையில் பல்லினப் பயிர்செய்கை

இயற்கை  விவசாய முறையில் மேற்கொள்ளப்படும் சில நடைமுறைகள்.

பயிர்வகைகளை மாற்றி மாற்றி நடல் (சுழற்சி முறை பயிர்ச்செய்கை)

விலங்கு, கால்நடை உரப்பாவனை

கூட்டெருப் பாவனை

இலைப்பசளை பாவனை (பசுந்தாள் பசளை)

அவரை இனப் பயிர்களை வளர்த்தல்

பல்லின பயிர்களை வளர்த்தல்

உயிரியல் முறையில் பீடைகளை கட்டுப்படுத்தல்

இயந்திரங்கள் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தல்

இயற்கை  விவசாய முறையில் தடைசெய்யப்பட்ட சில நடைமுறைகள்

செயற்கையான நஞ்சூட்டப்பட்ட பீடை நாசினிப் பாவனை

செயற்கையான இரசாயனப் பசளைகள்

செயற்கையான வளர்ச்சி ஹோர்மோன்கள்

செயற்கையான உணவுகளை உட்கொண்ட விலங்குகளின் கழிவுகள்

இயற்கை  விவசாயத்தில் பயிர் போசணை

இயற்கை  விவசாயிகள் திடகாத்திரமான பயிர்களை உற்பத்தி செய்வதற்காக தமது பண்ணையிலுள்ள மண்ணை நன்கு பரிபாலிக்க வேண்டும். இங்கு மண்ணிலுள்ள உயிர் அங்கிகளுக்கு போசணை ஊட்டுவதன் மூலம் வளமான மண்ணை உருவாக்குவதே இவ் விவசாய முறையின் பிரதான நோக்கமாகும். நுண்ணங்கிகளின் அதிகரித்த செயற்பாட்டின் மூலம் மண்ணிலிருந்து தாவரங்களுக்கு தேவையான போசணையின் அளவு அதிகரிக்கும். அத்துடன் இயற்கை  பசளைகளின் அதிகரித்த பாவனை மூலம் மண்ணில் காற்றூட்டல் அதிகரிப்பதோடு ஈரலிப்புத்தன்மையையும் அதிகரிக்க செய்யும். இம்முறையில் பொதுவாக பயன்படுத்தப்படும் சில இயற்கைப் பசளைகளும் அவற்றின் பரிந்துரைகளும் கீழே தரப்பட்டுள்ளன.

சில தெரிவு செய்யப்பட்ட இயற்கைப்  பசளைகளின் வகைகளும் அவற்றின் பரிந்துரைகளும்

பசளை வகை ஒரு ஹெக்டயருக்கு தேவையான பசளையின் அளவு (தொன்) பயன்படுத்தப்படும் காலம்

மாட்டுச் சாணம் 30 (1 சதுர மீற்றருக்கு 3 கி.கி) பயிர் நடுகைக்கு 2-3 நாளைக்கு முன்

கோழிச் சாணம் 20 (1 சதுர மீற்றருக்கு 2 கி.கி) பயிர் செய்கைக்கு 10 நாளைக்கு முன்

சிறந்த தரம்மிக்க கூட்டெரு 40 (1 சதுர மீற்றருக்கு 4 கி.கி) பயிர் செய்கைக்கு 2-3 நாளைக்கு முன் மாட்டுச் சாணம், கூட்டெரு போன்றவற்றை தேவைக்கு ஏற்ப மேற்கட்டு பசளைகளாகவும் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்த வேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட அளவுகளில் அரைவாசியினை (மாட்டுச் சாணம் 15 t/ha, கூட்டெரு 20 20 t/ha) பயன்படுத்தலாம். இதைவிட பயிர்களில் தற்காலிக போசணைப் பற்றாக்குறை அறிகுறிகள் தென்படும்போது அவற்றை நிவர்த்திசெய்ய இலைகுழை அல்லது மாட்டுச் சாணத்திலிருந்து தயாரித்த இலைகளுக்கு விசிறும் (Foliar sprays) கலவைகளை விசிறலாம்.

இயற்கை  விவசாயப் பண்ணையில் பீடைகளின் கட்டுப்பாடு

இயற்கை  விவசாயப் பண்ணையின் அடிப்படைத் தத்துவமானது தாவரங்களுக்கு உயர் போசணையை பெற்றுக்கொடுத்து அதன்மூலம் தாவரங்களின் வீரியமான வளர்ச்சிக்கு உதவுவதன்மூலம் பீடைகளினால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பதாகும். இம்முறையில் மேற்கொள்ளப்படும் சில செயற்பாடுகளாவன:

பாதுகாப்பு பயிர்களை நடல்

தொடர்ச்சியாக பயிர்களை மாற்றுதல்

பல்வின (mixed crops) பயிர்செய்கையை மேற்கொள்ளல்

பல் வகையான மண் உயிரினங்களை பாதுகாப்பதோடு சூழலுக்கு நன்மைபயக்கும் பூச்சிகளினதும் பறவைகளினதும் உதவியினால் பீடைகளை ஒழித்தல்

பீடை கட்டுப்பாட்டு முறை தோல்வியடையும் போது இரைகவ்விகளின் பாவனை மூலம் அவை பரம்பலடைவதை தடுத்தல், பொறி அல்லது தடைகளை பாவித்தல்

இவ்வனைத்து முறைகளின் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது மாத்திரம் இயற்கையான அல்லது இயற்கை  பீடை நாசினிகளை (வேப்பம் விதை, புகையிலை, காஞ்சோந்தி, இஞ்சி, மிளகாய், மிளகு, வெள்ளைப்பூடு போன்றவற்றில் இருந்து தயாரித்த திராவகங்களை) பயன்படுத்தலாம்.

இயற்கை  விவசாயப் பண்ணையில் களைகளின் கட்டுப்பாடு

இயற்கை  விவசாய முறையில் களைகளை முற்றுமுழுதாக பண்ணையில் இருந்து அகற்றாது அவற்றை கட்டுப்படுத்துவதே பிரதான நோக்கமாகும். களைகளை கட்டுப்படுத்தல் என்பது பயிர்களின் வளர்சியிலும், விளைச்சலிலும் களைகளின் பாதிப்பால் ஏற்படும் தாக்கத்தினை குறைப்பதாகும்.இயற்கை  விவசாய முறையில் செயற்கை களை நாசினிகளின் பயன்பாடு தவிர்கப்படவேண்டும். இதற்கான காரணம் களைநாசினிகளும் பீடை நாசினிகள் போன்று சூழலுக்கு தீங்கை விளைவிக்கக் கூடியன. சூழலுக்கு நன்மை பயக்கும் பூச்சி இனங்களுக்கு புகலிடம் அளிக்கும் தாவரங்களும் களை நாசினிகளின் பாவனையால் அழிக்கப்படலாம். பின்வரும் செயற்பாடுகள் மூலம் இயற்கை  விவசாய முறையில் களைகள் மட்டுப்படுத்தப்படலாம்.

சுழற்சிமுறை பயிர்ச்செய்கை

களைகளை கையால் அல்லது இயந்திரங்களின் உதவியால் அகற்றுதல்

மூடுபயிர்களை வளர்த்தல்

பயிர்களை நெருக்கமாக நடல்

மூடுபடைகளை பயன்படுத்தல்

காலத்திற்கு காலம் மண்ணை கிளறிவிடல்

இயற்கை  விவசாய முறையில் மூடுபடை மூலம் களை கட்டுப்பாடு

இயற்கையான கட்டுப்பாடு

இயற்கை  விவசாய முறையில் பல்வேறு வழிகளில் இயற்கையாக நோய்களும் பீடைகளும் கட:டுப்படுத்தப் படலாம்.

வீரியமான பயிர்கள் நோய்களாலும் பீடைகளாலும் மிகக் குறைவாகவே பாதிக்கப்படும்

குறிப்பிட்ட நோய்களுக்கும் பீடைகளுக்கும் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி கொண்ட பயிரினங்களை தெரிவு செய்து நடல். உள்ளுர் இனப் பயிர்கள் பொதுவாக அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களைவிட நோய்களை எதிர்க்கும் சக்தியைக் கொண்டதாகும்.

உரிய காலத்தில் பயிர்களை நடுவதன் மூலம் பீடைகள் அதிகம் தாக்கும் காலத்தை தவிர்த்து கொள்ளலாம்

பீடைகள் அதிகம் விரும்பாத ஏனைய தோழமைப் பயிர்களுடன் (உதாரணமாக வெங்காயம், வெள்ளைப் பூடு) கலந்து நடல்

பொறிகளை பயன்படுத்தி அல்லது கைகளால் பீடைகளை அகற்றுதல்

நோய்களையும் பீடைகளையும் சரியான முறையில் அடையாளம் காணல். இது விவசாயின் நேரத்தை மீதப்படுத்துவதோடு தவறுதலாக நன்மை பயக்கும் பூச்சியினங்களை அழிப்பதையும் தவிர்க்க உதவும்.

சுழற்சிமுறை பயிர்செய்கை மூலம் பீடைகளின் வளர்ச்சி வட்டத்தை தகர்பதோடு பீடைகள் அடுத்த போக பயிருக்கு பரவுவதையும் தவிர்க்கலாம்.

பண்ணையை சுற்றி பீடைகளை பிடித்து உண்ணும் இயற்கை இரைகௌவிகளுக்கான வாழ்விடங்களை உருவாக்குவதன் மூலம் பீடைகளின் தாக்கத்தை மட்டுப்படுத்தலாம்.

தத்துக்கிளி, நத்தை, கறையான், ஏபிட்டுக்கள், கம்பளிப்பூச்சி வர்க்கங்கள் என்பன பீடைகளிற் சிலவாகும். லேடி பேர்ட், சிலந்தி, நில வண்டுகள், ஓட்டுண்ணிக் குழவிகள், கும்பிடுதட்டான் என்பன சில இரைகௌவிகளாகும்.

கவனமான திட்டமிடலுடன், கிடைக்கப்பெறும் சகல தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களுக்கு கிருமிநாசினிகள் விசிறுவதை தவிர்கலாம். இதற்கும் மேலாக பீடைகளின் தொல்லைகள் அதிகரிக்கும் போது மாத்திரம் இயற்கையான பீடைநாசினி தன்மை கொண்ட பொருட்களில் (மிளகாய், வெங்காயம், வெள்ளைப்பூடு, வேப்பம் விதை) இருந்து தயாரித்த தெளிகரைசல்களை பயன்படுத்தலாம்.

மேற்குறிப்பிட்ட இயற்கையான தெளிகரைசல்களைக்கூட தேவைக்கு மேலதிகமாக பயன்படுத்துதல் கூடாது.

இயற்கை  விவசாயிகள் கருத்திற் கொள்ளவேண்டியவை

பல்லினப் பயிர்களை கொண்ட பண்னைகளை நடைமுறைப் படுத்தவேண்டும் (கலப்பின பயிர்ச்செய்கை, ஊடுபயிரிடல், நிரைகளில் பயிரிடல்)

ஒரே இனப்பயிரில் பல்வேறு வர்க்கங்களை பயிரிடல்

இயன்றளவு உள்ளுர் வர்க்கங்களை பயிரிடல்

உள்ளுர் மற்றும் தரமுயர்ந்த பயிரினங்களின் விதைகளை சேமித்து வைத்து பயன்படுத்துவதன் மூலம் வெளியில் இருந்து வருடம்தோறும் விதைகள் வாங்குவதை தவிர்க்கலாம்.

விவசாயிகள் தமக்கிடையே விதை இனங்களை மாற்றீடு செய்வதன் மூலம் பண்ணைகளில் பயிர் பல்வகைத்தன்மையை கூட்டலாம். இதன்மூலம் பாரம்பரிய பயிரினங்கள் அருகிப்போவதையும் தவிர்கலாம்.

கால்நடை வளர்ப்பு (Animal Husbandry) இயற்கை  விவசாய முறையில் பயிர் உற்பத்தியுடன் கால்நடை வளர்ப்பும் ஒரு பிரதான அங்கமாகும். இங்கு விலங்குகளின் சேமநலம் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படுகின்றது. பின்வரும் நடைமுறைகள் கால்நடைகள் திடகாத்திரமானதாகவும், நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டவையாகவும் அதிக விளைச்சலை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்த உதவுகின்றன.

விலங்குகளை அவற்றின் இயற்கையான நடவடிக்கைகளான சுதந்திரமாக நிற்றல், நடமாடல் போன்றவற்றிற்கு வசதியில்லாத நெருக்கமான இடங்களில் வைத்திருத்தல் கூடாது அதேவேளை அதிகரித்த சுதந்திரத்தின் மூலம் பயிர்களுக்கு சேதம் விளைவிக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும்

விலங்குகளுக்கு தேவையான உணவுகள் யாவும் இயற்கை  முறையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும்

தேவைக்கும், சூழலுக்கும், அங்குள்ள வளங்களுக்கும் ஏற்றவாறு விலங்கினங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்

கூட்டெரு (Compost) இயற்கை  விவசாயத்தின் மிகப்பிரதான செயற்பாடு பயிருக்கு வேண்டிய போசணையை வழங்குவதாகும். இதனை இயற்கை ப் பசளைகளை நிலத்திற்கு இடுவதன்மூலம் நிவர்த்தி செய்யலாம். இயற்கை ப் பசளைகளில் மிக பிரதானமாக மாட்டுச்சாணம், கோழி உரம், ஆட்டுச்சாணம், பச்சை இலைகுழை என்பன பயன்படுத்தப்படக்கூடியதாக இருந்தாலும் அவை போதியளவில் கிடைக்காத பட்சத்தில் பண்ணையில் சேரும் சகல கழிவுப் பொருட்களையும் சேர்த்து கூட்டெரு தயாரிப்பதன் மூலம் பண்ணைக்கு வேண்டிய போசணைத் தேவையை பூர்த்தி செய்யலாம்.

கூட்டெரு தயாரிப்பதன் மூலம், பண்ணைக்கழிவுகள் யாவும் மீழ்சுழற்சி முறையில் பண்ணையிலேயே மீண்டும் சேர்க்கப்படுவதால் மண்வளத்தை திருப்திகரமான முறையில் பேணமுடியும். கூட்டெரு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை பொதுவாக பின்வரும் 3 வகையாக பிரிக்கலாம்.

1. கால்நடை உரம், 2. பண்ணை பயிர்மீதங்கள் (உ+ம் வைக்கோல), 3. பச்சை இலைகுழை. இப்பொருட்களை உரிய விகிதத்தில் [(1:1:1) அல்லது (1:2:2)ஸ]சேர்த்து கூட்டெரு தயாரிப்பதன் மூலம் போசணைச் செறிவுள்ள தரமான கூட்டெருவை பண்ணையிலேயே தயாரிக்கமுடியும்;.

கூட்டெரு தயாரிக்க மிக இலகுவான முறை குவியல் முறையாகும் (Heap method). இம்முறையில் மேற்குறிப்பிட்ட பொருட்களை மெல்லிய படை படையாக அடுக்கி குவியலை 1 மீற்றர் உயரமளவில் உயர்த்தி அதனை பொலித்தீன், வைக்கோல், அல்லது தென்னை ஓலை போன்றவற்றால் மூடிவைக்கலாம். இக்குவியலை 2 வாரங்களுக்கு ஒருமுறை கலைத்து கலந்து மீண்டும் குவித்து பரிபாலப்பதன் மூலம் 2 மாதங்களில் மிக தரமான கூட்டெருவை தயாரிக்கலாம். கூட்டெருவை சிறு தானியப் பயிர்கள் தொடக்கம் பெரிய பழ மரங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். வீட்டுத்தோட்ட மட்டத்தில் திருப்திகரமான விளைச்சலை பெற, சிறு தானியப் பயிர், மரக்கறி பயிர்கள் என்பவற்றிற்கு நடுகைக்கு முன்னர் 500 கிராம் அளவில் கூட்டெருவை அடிக்கட்டு பசளையாக இடுவது பொருத்தமாகும். இதைவிட 250 கிராம் அளவில் மேற்கட்டுப் பசளையாகவும் பயன்படுத்தலாம்.

குவியல் முறையில் கூட்டெரு தயாரித்தல்

இயற்கை  விவசாயத்தில் கூட்டெரு பயன்பாட்டினால் ஏற்படும் சில அனுகூலங்கள்

தாவரத்திற்கு வேண்டிய அத்தியாவசிய போசணை மூலகங்களை வழங்க உதவுகின்றது.

தாவரத்திற்கு வேண்டிய போசணை மூலகங்களை மிக மெதுவாக வழங்க உதவுகின்றது.

மண்ணில்; நீரை பற்றிப்பிடித்து வைத்திருக்கும் தன்மையை அதிகரிக்கின்றது

மண்ணை மிருதுபடுத்த உதவுகின்றது.

மண் கட்டமைப்பை விருத்தி செய்ய உதவுகின்றது.

மண்ணில் உள்ள போசனை மூலகங்களை பிடித்து வைத்து தாவரத்திற்கு வேண்டிய நேரத்தில் கொடுத்து உதவுகின்றது.

மண்ணில் உள்ள நுண்ணங்கிகளுக்கு உணவாக பயன்படுவதனால், நுண்ணங்கிகளின் எண்ணிக்கையும் அவற்றின் தொழிற்பாடும் அதிகரிக்கின்றது.

கூட்டெரு குவியல் முறையில் தட்டுக்களின் அமைப்பு

வேப்பம் விதை திராவகம் (Neem seed water extract)

இயற்கை  விவசாயத்தில் பீடைகளை கட்டுப்படுத்த வேப்பம் விதை திராவகம் பொதுவாக பயன்படுத்தப்படுகினறது. இதன் பயன்பாட்டின் மூவம் இயற்கை  விவசாயத்தில் தீங்குசெய்யும் அனேகமான பூச்சி புழுக்களை கட்டுப்படுத்தலாம். அதிலும் விசேடமாக இலைகளுக்கு தீங்கு செய்யும் கம்பளிப் பூச்சிகளை கட்டுப்படுத்த மிகச்சிறந்த வழியாகும்;. இத்திராவகத்தை மிக இலகுவாக பண்ணைகளிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.

வேப்பம் விதை திராவகத்தை தயாரிக்க 50 கிராம் நிறையுள்ள காற்றில் உலர்ந்த வேப்பம் விதையை உரலை பயன்படுத்தி நன்கு உடைத்து தூளாக்கிய பின் அதனை 1 லீற்றர் நீரில் இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் காலையில் மெல்லிய துணியினால் வடித்து விசிறும் தாங்கிகளில் நிரப்பி பயிர்களுக்கு விசிறலாம். திராவகத்தை விசிறுவதற்கான மிக உகந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளைகளாகும். இத்திராவகத்தின் தன்மை சு10ரிய ஒளியினால் பாதிப்படையக்கூடுமாகையால் சூரிய ஒளி செறிவாகவுள்ள பகல் வேளைகளில் பயன்படுத்துதல் தவிர்க்கப்படவேண்டும். இத்திராவகத்தை தேவைக்கு ஏற்ப 2 வாரங்களிற்கு 1 முறை பயன்படுத்தலாம். இத்திராவகத்தின் பயன்பாட்டின் மூலம் கோவா பயிர்செய்கையில் இலைகளை தாக்கியழிக்கும் பூச்சிகள் (உ+ம் னுயைஅழனெ டியஉம அழவா) திருப்திகரமாக கட்டுப்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இலைகளுக்கு விசிறும் (Foliar sprays) கலவைகள்

இயற்கை  விவசாய முறையில் பயிர்களின் வளர்ச்சிக் காலத்தில் ஏற்படும் தற்காலிக போசணப் பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றும்போது இலைகளுக்கு விசிறும் இயற்கை க் கலவைகள் அவற்றை நிவர்திசெய்ய பயன்படலாம். இக்கலவைகளை இளமையான பச்சை இலைகளை அல்லது கால்நடை உரங்களிலுள்ள போசணப் பதார்த்தங்களை நீரில் கரைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இக்கலவைகளை பயிர்களுக்கு விசிறுவதன் மூலம் வளர்ச்சி தூண்டப்படுவதோடு, பயிர்களுக்கு வேண்டிய நுண்மூலக குறைபாடுகளையும் நிவர்த்தி செய்லாம்.

இக் கலவைகளை தயாரிக்க, சிறிதாக அரியப்பட்ட, அதிக போசணை சத்துள்ள, இளம் தாவர இலைகள் (கிளிரிசீடியா, காட்டு சூரிய காந்தி) 100 கிராமை அல்லது கால்நடை உரம் (மாட்டு சாணம், கோழி உரம்) 50 கிராமை 1 லீற்றர் நீரில் 1 மாத காலத்திற்கு ஊறவைத்து பின்னர் அதனை மெல்லிய துணியினால் வடித்தெடுத்து கிடைக்கும் திரவத்தை பயிர்களுக்கு காலை வேளைகளில் விசிறலாம்.

இயற்கை விவசாயத்தின் பிரதான கொள்கைகள்

உற்பத்தி செய்யப்படும் உணவானது போஷணை மட்டத்தில் உயர்வானதாக இருப்பதோடு போதியளவு உற்பத்தி செய்யப்படவும் வேண்டும்.

அனைத்து இயற்கையான செயற்பாடுகள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதன் மூலம் தாவர, விலங்கு மண்ணிலுள்ள நுண்ணங்கிகள் என்பவற்றுடன் மண்ணின் வளத்தையும் அதிகரிக்க செய்ய வேண்டும்.

மண்ணின் வளத்தன்மையை நீண்ட காலத்திற்கு பேண வேண்டும்.

இயலுமானளவு மீள்சுழற்ச்சிக்குட்படுத்தக்கூடியதும் பிரிந்தழியக் கூடியதுமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

விவசாய பண்ணையிலுள்ள விலங்குகளின் இயற்கையான நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சுதந்திரமாக வாழ இடமளிக்க வேண்டும்.

இயற்கை  விவசாய முறையில் விலங்குகளின் சேமநலத்தை பேணுவது மிக முக்கியமான நடவடிக்கையாகும். இங்கு விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடையில் பிணக்குகள் ஏற்படாதவண்ணமும், இரண்டிற்குமிடையில் உள்ளுறவு ஒன்றை ஏற்படுத்தி பாதுகாத்து வர வேண்டும்.

விலங்குகளின் உணவு இயற்கை  உணவாக இருப்பதோடு அதனை முடியுமான அளவு பண்ணையிலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தேவையான அளவு விலங்கு உரமும் ஏனைய விலங்கு உற்பத்தியையும் பெற்றுக்கொள்ளலாம்.

பண்ணை நடவடிக்கைகளின் போது அனைத்து விதமான மாசடைதலையும் குறைத்துக் கொள்ளவேண்டும் (மண், நீர் என்பன மாசடைதல்).

பண்ணையிலும் அதன் சூழலிலும் உள்ள பல்வகைத்தன்மையை பாதுகாக்க வேண்டும்.

பண்ணை வேலையாட்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு அவர்களைத் திருப்திப் படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளவும் வேண்டும்.

பண்ணை நடவடிக்கைகள் மூலம் எந்தவித சூழல், சமூக பிரச்சினைகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

பாரம்பரியமானதும் குறித்த பிரதேசத்து காலநிலைக்கு ஒத்திசைவானதுமான தாவரங்களைப்பயர் செய்வதிலிருந்து விலகி எப்போது மரபணுமாற்றப்பட்ட தாவரங்களையும் பயிர் வகைகளில் எப்போது நாட்டம் கொண்டு இவற்ரை விளைவிக்க முயன்றோமோ, எப்போது சேதனப்பசளைகளைத் தவிர்த்து அசேதனப்பசளைகள் மீது நாட்டம் கொண்டோமோ அன்றிலிருந்து மேற்கத்தய நிறுவனங்களுக்கு அடிமையாகி எமது பாரம்பரிய பயிரினங்களையும் மறந்து வளமான நிலபுலங்களையும் விசமாக்கி விட்டுள்ளோம்.

போதைவஷ்து பழக்கம் எமது இளைஞர்களை எப்படித் தவறாக்கியதோ அதையொத்ததே வளமான மண்ணை உரம் கொண்டு விசமாக்குவது. அரசு மாணிய உர விநியோகத்தை நீக்கி செயற்கை உரப்பாவனையை கட்டுப்படுத்தி பயிர் செய்யும் நிலப்பரப்பை கூட்டி விவசாயத்தை பெருக்க வேண்டும். பாரம்பரிய பயிரினங்களை மீட்டெடுக்க ஒவ்வொரு விவசாயியும் நம்மாழ்வார் வழியில் முன்வர வேண்டும். இல்லையேல் காலம் பூராகவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடிமைப்பட்டுக்கிடக்க வேண்டியது தான். நோயையும் தந்து மருந்தையும் தந்து பரம்பரை பரம்பரையாக பிழிந்தெடுக்கும் செயற்பாடே நடக்கும். இதிலிருந்தும் மீண்டு வரும் வழிவகைகள் காணவேண்டும்.

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply