திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!!

திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும்

திருமந்திரமும்!!

ஆரூர் சுந்தரசேகர்

திருமூலர் என்கிற திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களில் ஒருவரும் ஆவார்.

திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திரம் தமிழுக்கு வரமாக வாய்த்த நூல் மற்றும் தமிழ் சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்…” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருமந்திரத்தில் அழகாக விளக்கியுள்ளார்.

திருமந்திரம் ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் துறைகளை கொண்டது. திருமந்திரத்தில் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தந்திரம் என்பது பெயர். இதில் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்கள் உள்ளன.

திருமூலரான சுந்தரநாதர்

சித்தர் மரபில் திருமூலர் தான் முதல் சித்தர் எனக் கருதப் படுகின்றார். இவருடைய இயற்பெயர் சுந்தரநாதன். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் ஏழாயிரம் நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் வாழ்ந்த காலம் கி.மு 5000 வருடங்களுக்கு முந்தையது என்றும் சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

இவர் கயிலையில் குருகுலவாசம் இருந்த போது, இவரோடு குருகுல மாணாக்கராக இருந்தவர்கள் சனகர், சனந்தனர், சனத்குமாரர், சிவயோக மாமுனி, பதஞ்சலி முனிவர், வியாக்ரமர் என எண்மரைக் குறிப்பிடுகின்றனர். கயிலையில் குருகுலம் பயின்று முடித்த சுந்தரநாதன் தில்லையம்பதி என்று அழைக்கப்படும் சிதம்பரம் வந்து அங்கு பதஞ்சலியையும், வியாக்ரபாதரையும் சந்தித்து, மூவரும் நடராஜரின் அற்புத நடனக் காட்சியைக் கண்டுகளித்தனர். பின்னர் மாடு மேய்க்கும் மூலன் என்ற இளைஞன் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து, மூலனின் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப் பெயர் பெற்றார் என்பர். பின் திருவாவடுதுறை கோயிலில் போதிமரமாகிய அரசமரத்தின் கீழ் ஐம்புலனை அடக்கி தவநெறியில் யோகியாக அமர்ந்தார்.

திருமாளிகைத் தேவர் காலங்கிநாதர், கஞ்சமலையார், இந்திரன், சந்திரன், பிரம்மன், ருத்திரன் உள்ளிட்ட ஏழு சித்தர்கள் திருமூலரின் சீர்மிகு சீடர்கள் ஆவர். இவர் சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் ஜீவசமாதி அடைந்தார்.

வாழ்க்கை நெறி உணர்த்தும் திருமந்திரம்

திருமூலர் அருளிச் செய்த “திருமந்திரம்” எனப்படும் நூல் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகச் சைவப்பெருமக்களால் போற்றப்படுகிறது. இதனைத் ‘திருமந்திரமாலை’ என்றும் ‘தமிழ் மூவாயிரம்’ என்றும் கூறுவர். திருமந்திரத்தில் பல யோக ரகசியங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் திருமூலர் சொல்லியிருக்கிறார். தாமறிந்த உண்மைகள் உலகத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார் இவர்.

திருமந்திரத்தின் முதல் பாடலே அர்த்தங்கள் நிறைந்ததாகவும் நற்சுவையாகவும் அமைந்துள்ளது.

‘ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்

சென்றனன் தானிருந்தான் உணர்ந்தெட்டே (மந்திரம்-1)

‘ஒன்று’ என்பது முதலாகிய ‘சிவம்!’

‘இரண்டு’ என்பது சிவத்தின் மறுபாதியாகிய ஆற்றல் ‘சக்தி!’

“யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப்

பற்றத் தலைப்படும் தானே” – திருமந்திரம்.

‘மூன்று’ என்பது ஆன்மா, சிவம், சக்தி என்பதையும், ஆக்கல் (பிரம்மா), காத்தல் (விஷ்ணு), அழித்தல் (ருத்ரன்) என்பதையும் குறிக்கின்றது.

‘நான்கு’ என்பது ரிக், யஜூர், சாமம், அதர்வணமாகிய சதுர்வேதங்களையோ அல்லது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற நான்கு அனுபவ நிலைகளையோ குறிக்கிறது.

‘ஐந்து’ என்பது பஞ்சபூதங்களையும் ஐம்புலன்களையும் குறிக்கிறது.

‘ஆறு’ என்ற எண் குறிக்கும் பொருள் ஒன்றுக்கும் மேல் உள்ளது. ஆறு ஆகமச் சமயங்கள், ஆறு ஆதாரங்கள் மற்றும் வண்ணம், பதம், மந்திரம், கலை, புவனம், தத்துவம் ஆகிய அறுபெரும் விஷயங்கள்.

‘ஏழு’ ஏழாவது சக்கரமாகிய சகஸ்ராரம், ஏழு மேல் உலகங்கள். ஏழு கீழ் உலகங்கள்.

‘எட்டு’ என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், சிவன் ஆகிய எண் பெரும் சக்திகள்.

இறுதிச் சொல்லான ‘உணர்ந்தெட்டே’ என்பதற்கு, இவற்றை அனுபவத்தின் மூலம் அடையுங்கள் அல்லது உணருங்கள் என்று பொருள்!

சித்தர் ஆய்வாளர்கள் இப்பாடலை ‘எண் குறி இலக்க மொழி’ எனச் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நூல் ஒன்பது தந்திரங்களைக் கொண்டுள்ளது. முதல் நான்கு தந்திரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உணர்த்துகின்றன. பின்வரும் ஐந்து தந்திரங்களும் வீடுபேறு, வீடுபேற்றுக்கான வழி, வழிபாடு, வழிபாட்டுறுதி, வாழ்வு ஆகிய ஐந்தையும் உணர்த்துகின்றன.

முதல் தந்திரம் அறத்தைப் பற்றி அடிப்படையான கருத்துக்களை கூறுகின்றது. எச்சமயத்தவரும் மேற்கொள்ளும் அறங்களே இத்தந்திரத்தில் கூறப்பட்டுள்ளன.

இரண்டாம் தந்திரத்தில் இறைவன் பக்தர்களுக்கு அருள் புரிந்தமை, அவரது ஐந்தொழில், அஷ்டவீரட்டம், சில புராணக்கதைகள் முதலியன கூறப்பட்டுள்ளன.

மூன்றாம் தந்திரத்தில் அஷ்டாங்கயோகம், அஷ்டமாசித்தி, ஜோதிடம் முதலானவற்றின் விளக்கங்களை தெரியப்படுத்தியுள்ளது.

நான்காம் தந்திரத்தில் மந்திர நூல் கருத்துக்களையும், தெய்வ சக்கரங்களைப் பற்றியும் தெரிவிக்கின்றன.

ஐந்தாம் தந்திரத்தில் சைவ சமய பேதங்களையும், புறச்சமய பேதங்களையும் சரியை, கிரியை, யோக, ஞான மார்க்கங்களையும் பற்றிய விளக்கங்களை தெரியப்படுத்தியுள்ளது.

ஆறாம் தந்திரமானது சிவகுரு தரிசனம், திருவடிப்பேறு, துறவு, தவம், நீறு, பக்குவன், அபக்குவன் முதலியன விரித்துரைக்கப்பெற்றுள்ளது.

ஏழாம் தந்திரம் சிவபூசை, குருபூசை, மகேஸ்வர பூசை, அடியார் பெருமை, போஜன விதி, இந்திரிய அடக்கம், சற்குரு, அசற்குரு பற்றிய விளக்கங்களை கூறுகின்றது.

எட்டாம் தந்திரத்தில் அவா அறுத்தல், ஞானி செயல், தத்துவமசி மகா வாக்கியம், பக்தியுடைமை, புறங்கூறாமை, முக்குற்றம் முதலியனவற்றை தெரியப்படுத்தியுள்ளது.

ஒன்பதாம் தந்திரமானது தன்னகத்தே பஞ்சாட்சரத்தின் பேதங்கள், சிவதரிசனம், திருக்கூத்து தரிசனம் முதலியன பற்றிய குறிப்புக்களைக் தெளிவாக்கியுள்ளது.

ஸ்ரீதிருமூலர் காயத்ரி:


“ஓம் ககன சித்தராய வித்மஹே பிரகாம் சொரூபினே தீமஹி தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்”!!

https://www.vikatakavi.in/magazines/174/5983/thirumoolarumvazhkainaeriyaivunarthumthirumanthiramaroorsundarashekar.php

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply