எது தமிழ் நிலம்

எது தமிழ் நிலம்?

Surya Xavier

1956 -ல் நவம்பர் 1ஆம் தேதியன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மலையாளம் பேசும் மக்களும், கன்னடம் பேசும் மக்களும், தங்களுக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் ஒன்றாம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

கேரளாவில் இந்த தினம், கேரள பிறவி தினம் என்றும், கர்நாடகத்தில் கன்னட ராஜ்யோத்ஸவம் என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு பல நிலப்பகுதிகள் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த தினம் குறித்த உற்சாகம் பெரிதாகக் காணப்படுவதில்லை. ஏன்? பெற்றவன் கொண்டாடுவதும், இழந்தவன் வருந்துவதும் அல்லது கொண்டாடாமல் இருப்பதும் இயல்பு தான்.

பழந்தமிழர்கள் பெரும் தேசிய இனமாக “நாவலந்தேசம்” எனப்படும் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

“தென்குமரி வடபெருங்கல் குணகுட கட லாவெல்லை. (புறம் – 17)

என்று குறுங்கோழியூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடியிருக்கிறார்.

மேலும், “வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி. (சிலம்பு – 11:19 – 22)

என்று இளங்கோவடிகள் பாடியுள்ளார்.

“வங்கத் தலைநகருக்கு இன்னும் “காளிக்கோட்டம்” என்னும் தூய தமிழ்ச்சொல் வழங்குவதே பண்டைக் காலத்தே தமிழர், பனிமலைவரை அல்லது கங்கை வரை பரவியிருந்தனர் என்பதற்குப் போதிய சான்றாகும் என்று தேவநேயப்பாவாணர் கூறியுள்ளார்.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக, “மொகஞ்சதாரோ, ஹரப்பா சிந்துசமவெளி நாகரிகத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல அடையாளங்கள் உள்ளன” என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பண்டைத் தமிழினமாகிய குமரி நாட்டிலும் மேல் கோடியிலிலேயே ஒரு “பன்மலையடுக்கத்துப் பெருமலை” தொடரிருந்தது. அது குமரிமலை எனப்பட்டது.அதன் தென்கோடியில் பஃறுளி என்னும் கங்கையைப் போன்ற பேராறும், வடகோடியில் காவிரி போன்று குமரி என்னும் பேராறும் இருந்ததால், குடதிசை (மேற்கு) என்றும், குணதிசை (கிழக்கு) என்றும் பெயர் பெற்றன.

காவிரி உருவாகும் மேற்கும் குடகு என்றே பெயர். இவ்விரு ஆறுகளுக் கிடையே,”ஏழ்தெங் நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணக்கரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்று 49 நாடுகளும், காடும், நதியும், பதியும் தடனீர் குமரி வட பெருங்கோட்டின்காறும், கடல்கொண்டழித்தாற் குமரியாகிய பெளவமென்றா ரென்றுணர்க” என்று கூறியுள்ளார் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார்.

குமரி மாவட்டத்தில் ஏழுதேசம் என்ற பேரூராட்சி இப்போதும் உள்ளது.

மேலும், லெமூரியா எனும் குமரிக்கண்டமே மாந்தன் என்பவன் தோன்றிய முதலிடமென்றும், இதிலிருந்த தமிழ் நிலம் 13 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன என்றும் கூறப்படுகிறது.

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும். (புறம் – 6)

என்ற பாடலுக்கேற்ப, இமயத்தின் முதல் மன்னன் சேரன் என்றும், ஆகவேதான் அவன் “இமயவரம்பன்” எனப் புகழப்பட்டான் எனவும் சான்றுகள் கூறுகின்றன.

“குணகடல் குமரி குடகம் வேங்கடம்” என்னும் நன்னூல் சிறப்புப் பாயிரத்தில், தமிழ் எல்லையை “திசைகள்” குறிக்காமல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், “வட வேங்கடம் தென்குமரி” என்று தொல்காப்பியப் பாயிரத்தில், திசைகளுடன் சேர்த்துக் குறிக்கும்பொழுது ஓர் ஐயம் தோன்ற வாய்ப்பிருக்கிறது.

தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்ததால், பொதுவாக மலைப் பகுதியை “வேங்கடம்” எனக் குறித்துஇமயமலையை “வடவேங்கடம்” என்றும், திருப்பதியை “தென் வேங்கடம்” என்றும்குறிக்க வாய்ப்புண்டு. அதைப்போலவே,இன்றைய குமரியை “வடகுமரி” என்றும், கடல்கோளால் அழிந்த பகுதியை “தென்குமரி” என்றும் அழைத்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இன்றைய மதுரையை “வடமதுரை” என்றும், முதல் சங்கம் தோன்றிய பகுதியைத் “தென்மதுரை” என்றும் இலக்கியங்கள் மற்றும் அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆரியர் வருகைக்குப் பிறகே தமிழர் எல்லைகள் சுருங்கி திருப்பதி மலையை (வேங்கட மலை) வட பகுதியாகச் சொல்லப்பட்டாலும், வடவேங்கடம் என்று இமயமலையையும், தென்குமரி என்று கடல்கொண்ட குமரியையுமே சொல்லியிருக்கக் கூடும் என்பது தெளிவு.மேலும், தொல்காப்பியமே தமிழின் மூத்த நூல் முதல் நூல் என்கிறோம். அதற்குப்பிறகு தோன்றிய சங்க நூல்களே பழந்தமிழர்களின் எல்லையை விரித்துக் கூறுகிறபோது, தொல்காப்பியம் தமிழ்கூறு நல்லுலகைச் சுருக்கிக்கூற வாய்ப்பே இல்லை. எனவே தமிழ் நிலம் என்பது “குமரி முதல் இமயம்” வரை என்பதே பொருத்தமானது.

பல்வேறு சூழல்களால் அதன் எல்லைகள் சுருக்கப்பட்டு திருப்பதி முதல் குமரி வரை என்றிருந்ததைக் கூட அரசியல் காரணங்களுக்காக மேலும் சுருக்கினார்கள். மைசூர்,கோலார் ஆகிய மாவட்டங்களுக்கு இடைப்பட்ட சிக்பல்லாபூர் என்ற இடத்திலுள்ள மலைத் தொடரில் தான் பெண்ணை ஆறு பிறப்பெடுக்கிறது. ஏழு மலைகள் தொடர்ச்சியாக அமைந்த இடம் அது. இந்த இடத்திற்கு நந்தி துர்க்கா என்று இப்போது அழைக்கிறார்கள். வட பெண்ணை, தென் பெண்ணை என இரண்டாகப் பிரிகிறது. பெண்ணை என்றால் பனை என்றே பொருள். பெண்ணையை கன்னடர்கள் உத்திரபிநாகினி என்கிறார்கள்.

மைசூர் என்பதெல்லாம் சமஸ்கிருத ஆக்கிரமிப்பு. மகிஷிர் என்ற சமஸ்கிருதச் சொல்லிருந்தே மைசூர் ஆனது. கன்னடத்தில் ஊர் பெயர்களை பெங்களூரு என்றும், ஹூப்பள்ளி என்றும் மாற்றியவர்கள் மைசூரில் கை வைக்காமல் கவனமாகத் தவிர்த்தார்கள். ஆனால் பெண்ணை ஆற்று மக்களால் இது எருமையூர் என்றே அழைக்கப்பட்டது. எருமைக்கு சமஸ்கிருதத்தில் மகிஷர் என்றே பெயர். இந்த மகிஷிர் தான் மைசூர் என்று வழக்கில் அழைக்கப்படுகிறது.

நீர்வளம் அதிகமுள்ள இடங்களில் தான் எருமைகள் வாழும். மழைதரும் காடுகளில் தான் எல்லா நாடுகளிலும் எருமைகள் அதிகமாக வாழ்கிறது. ஆனால் இன்றைய பெண்ணையாறு எருமைகள் இல்லாத இடமாக மாறிப்போனது. ஆங்கிலேயர்கள் வெப்பத்திற்கு பயந்து நீர் தரும் குளிர்ந்த மலைப்பகுதியில் குடியேறி காடுகளை அழித்த கொடுமையான வரலாறு நதிகள் அழிந்த வரலாறோடு தொடர்புடையது. எருமை இன்மையானது மழையின்மையின் அறிகுறி. “எருமைமாட்டில் மழை பெய்தது போல” என்ற வழக்கும் இதிலிருந்து உருவானது தான்.

தென் பெண்ணை ஆறு எருமையூர் எனும் மைசூரில் பிறந்து கிருஷ்ண கிரிக்குள் நுழைகிறது. இறுதியாக கடலூரின் மஞ்சக்குப்பத்துக்கு அருகில் கடலில் கலக்கிறது. வட பெண்ணை ஆறு இதே மலைத் தொடரின் வட பகுதி வழியாக இன்றைய தெலுங்கு கடப்பாவான அன்றைய தமிழ் கடப்பை வழியாகச் சென்று கடைசியாக கடலில் கலக்கிறது. கலக்குமிடத்திற்கு அழகிய தமிழ் பெயர் இருக்கிறது. அந்தப் பெயரும் கூட நதியோடு இணைந்த வாழ்க்கையை வாழும் ஒன்றின் பெயர் தான். அதுவே நெல்லூர்.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதியான குடகின் பிரமகிரி மலை முதல் பூம்புகார் வரை சோழர்களின் ஆட்சியில் இருந்த பகுதி தான். எனவே தான் பிரமகிரி மலையில் காவிரியின் அடர்ந்த நீர்பிடிப்புப் பகுதிக்கு சோழவனம் என்றே இன்றும் பெயர். தமிழக ஸ்ரீரங்கமும் கர்நாடகத்தில் இருக்கும் ஸ்ரீரங்கப் பட்டினமும் காவிரி உருவாக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய தீவுப்பகுதிகள்.

தமிழக நீலகிரி மலையின் குந்தா பகுதியில் உற்பத்தியாகும் வானி ஆறுமேல் பவானி அணையிலிருந்து வெளியேறும் வானி ஆறு, தென்மேற்கில் அமைதிப் பள்ளத்தாக்கை ஒட்டிப் பாய்ந்து அட்டப்பாடி பள்ளத்தாக்கில் உள்ள முக்காலி என்ற இடத்தில் 120 டிகிரி கோணத்தில் வட கிழக்காக அரை வட்டமடிக்கிறது. அட்டப்பாடி வனத்தில் சுமார் 22 கி.மீ. வரை பயணித்து அத்திக்கடவு என்ற வனப் பகுதியில் மீண்டும் தமிழகத்துக்குள் நுழைகிறது. அத்தி மரங்கள் சூழ்ந்த பாதையே அத்திக்கடவு என அழைக்கப்படுகிறது.நதிக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை தானே? இயல்புகளுக்கு மாறானது தான் ஆதிக்க அரசியல்.

பவானியை உள்ளிழுத்து தமிழக நிலப்பரப்பு வரையப்பட்டிருந்தால் 50 ஆண்டுகளாக மாநிலப் பிரச்சனைகள் வந்திருக்காது. அதன் பயணப்பாதை சிறிது தூரம் கேரளத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டது இயல்பாக நடந்த ஒன்றல்ல. மேல்பவானி அணை முதல் அத்திக்கடவு வனத்திற்குள் நுழையும் வரையிலான கேரளப் பகுதிக்குள் ஆறு தடுப்பணைகளைக் கட்ட கேரளம் முயற்சிக்கிறது. அதற்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் நடக்கிறது.கோவையிலிருந்து மஞ்சூர் செல்லும் வழியில் இருக்கிறது அத்திக்கடவு வனம்.

அந்த மக்களின் ஆனந்தக் கூத்தாட்டத்தில் மலைகளும் பெருமிதமாய் தன்னை வளர்த்துக் கொண்டது. பனித்துளிக்கு இணையான தூய்மை உள்ளம் கொண்ட மூத்த தமிழ் குடி அது. காற்றோடும், மலையோடும், பசுமை தாய்மையோடும் வாழ்ந்த அம்மக்களின் மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை.

மண் மீதான ஆக்கிரமிப்புகளுக்கு தமிழ் மண்ணில் 300 க்கும் மேற்பட்ட மூத்த தமிழ் குடிகள் அழிக்கப்பட்டு மூன்று முடியரசுகள் உருவானது. அந்த முடியரசில் ஒன்றான பாண்டியர்களின் ஒரு பிரிவின் தாக்குதலுக்கு இரையானதே மூணாறின் முதுவான் இனக்குழு. அந்த மக்கள் தங்கள் மண்ணைக் காக்க நடத்திய யுத்தத்தின் சத்தம் மலைகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

குற்றுயிரும் குலையுறுமாக மிச்சமான அம்மக்களின் ஒரு சிறு கூட்டம் முதுவான்குடி என்ற பகுதியில் இன்றும் வசிக்கிறது. ஆனால் அவர்களை அழித்த பாண்டியர்களின் பூஞ்சுவார் ராஜ்யம் இன்று இல்லை. வரலாறு என்பது மன்னர்களுக்கானதல்ல. மக்களுக்கானதே.

மதுரை பாண்டிய அரசர்களின் பரம்பரைகளில் ஒன்று தான் பூஞ்சார் அரசர்கள். இந்தப் பேரரசை நிறுவியவர் மாணவிக்ரம குலசேகர பாண்டியன் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய திண்டுக்கல், கம்பம், போடிநாயக்கனூர், வண்டிப்பெரியார், பீர்மேடு, தேவிகுளம், மூணாறு போன்ற பகுதிகளை உள்ளடக்கியதே பூஞ்சார் ஆட்சி. மூணாறும் பூஞ்சார் ஆட்சியின் ஒரு பகுதி தான்.

கேரளத்தில் ஆறுகளை புழை என்றே அழைப்பார்கள். புழா என்று முடியும் ஊர்கள் கேரளத்தின் ஒவ்வொரு அரைமணி நேரப்பயணத்திலும் புழையைப் போலவே தொடர்ந்து கொண்டிருக்கும். தமிழில் ஆறு என்றே அழைப்பதால் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பொருளில் மூணாறு என்கிறார்கள். முதிரப்புழா-குண்டலை-நல்லதண்ணி ஆகியவையே அந்த மூன்று ஆறுகள்.இந்தப் பகுதிகள் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டிருந்தால் தேனி, மதுரை,திண்டுக்கல், சிவகங்கை, முகவை மாவட்டங்கள் செழித்திருக்கும். வைகை மூர்ச்சை இழந்திருக்காது.

தற்போதைய கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் திருவிதாங்கூர். கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்தார். அதன் பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசைக் கைப்பற்றியது.

இதன் முதல் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மன். இவர் காலத்திலிருந்து வேணாடு திருவிதாங்கூர் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது வேணாட்டு மன்னன் பால மார்த்தாண்ட வர்மா காலத்தில் தலைநகர் பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. பின்பு வந்த திருவிதாங்கூர் மன்னர்களும் திருவனந்தபுரத்தையே தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர். இன்றைய திருவனந்தபுரமும் தமிழர்களின் நிலப்பகுதி தான். திருவனந்தபுரம் என்ற தமிழ்ப் பெயரே சாட்சி பகர்கிறது.

இப்போதுள்ள தமிழகத்தில் நீர் தேவை பற்றிய இரண்டு பிரச்சனைகள் உண்டு. 1.காவிரி 2. முல்லைப்பெரியாறு. தமிழ் இலக்கியங்கள் முழுமையும் போற்றிப் புகழ்ந்த வைகை இன்று நீரின்றி இருப்பதற்கும், காவிரியில் தேவையான நீர் கேட்டுப் போராடுவதுமான சூழல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு நதிகளின் ஒட்டு மொத்த நீர்பிடிப்பு பகுதிகளும் தமிழ் நிலத்தோடு இருந்தவை. தலையை வெட்டி கொடுத்துவிட்டு முண்டத்தோடு வாழுங்கள் என்பதே இன்றைய தமிழகம் எனும் மொழிவழி மாநிலம். இரண்டு நதிகளின் வாழ்க்கையை ஒழித்துக் கட்டிய நாளே நவம்பர் 1.

இன்றைய நிலப்பகுதிக்கு தமிழகம் எனப் பெயர் வைத்ததை கொண்டாடத் தான் வேண்டும். அதே நேரம் நவம்பர் 1 என்ற தேதி கொண்டாட்டத்திற்கான தேதி அல்ல. தமிழகம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நாளே கொண்டாட்டத்திற்கான நாளாக இருக்க முடியும். உடலையே எடுக்காமல் ஒரு வெற்றுப் பெட்டியை அடக்கம் செய்து கும்பிட்டதற்கு ஒப்பானதே நவம்பர் 1.👉

இழந்த துயரத்தை இன்னும் எழுத முடியும். இத்தனை தமிழ் பகுதிகளையும் அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்த அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்தது யார்?

தமிழக நிலங்களை அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்த, அன்றைய முதல்வர் வேறு யாருமில்லை.கர்மவீரர் “காமராசர்” தான்.

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply