யாப்பு உருவாக்கம் | வெட்கப்பட வேண்டிய வரலாறு

யாப்பு உருவாக்கம் | வெட்கப்பட வேண்டிய வரலாறு

விக்டர் ஐவன்

January 19, 2019

எமக்கு அரசொன்று தேவையென்றால் ஏனைய அனைத்தையும் விட அரசியல் யாப்பு அதற்கு முக்கியமானது. அது ஜேவிபியின் 20 ஆவது திருத்தச் சட்டமோ அல்லது பிரதமர் ரணில் தயாரித்து வரும் அரசியல் யாப்போ அன்றி மொத்த முறைமையினதும் நன்மைக்கும் ஆழமான கட்டமைப்பு மாற்றத்துக்கும் காரணமாக அமைகின்ற வகையில் மக்களால் உருவாக்கப்படுகின்ற மக்கள் யாப்பாக அமைய வேண்டும்.

யாப்பு தயாரிப்பதிலும் அரசியலமைப்பை உருவாக்குவதிலும் இலங்கைக்கு பெருமைப்படக் கூடிய வரலாறு இல்லை. மாற்றமாக வெட்கப்பட வேண்டிய வரலாறு தான் இருக்கி றது. பொதுவாக எந்த நாடும் நீண்ட காலத் தேவைக்கே அரசியல் யாப்பைத் தயாரிக்கின்றன. எழுதப்பட்ட யாப்பு இல்லாத பிரித்தானியாவின் அரசியலமைப்புக்கு 750 வருடங்களாகின்றன. அமெரிக்க யாப்புக்கு வயது 229. எவ்வளவு பழமையானதாக இருந்தாலும் பிரித்தானிய அரசியலமைப்போ அமெரிக்க அரசியல் யாப்போ அதன் மக்களுக்குப் பிடித்தமில்லாததாக மாறியதில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் சுதந்திரத்துக்குப் பின்னரான 70 வருடங்களில் அது மூன்று யாப்புக்களைக் கண்டிருக்கிறது. கடைசியாகத் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் தான் தற்போது நான்காவது அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

இழிவான வரலாறு

இலங்கையில் இதுவரை உருவாக்கப்பட்ட மூன்று அரசியல் யாப்புக்களும் யாப்பு உருவாக்கத்தின் போது கவனிக்கப்பட வேண்டிய மரபுகளும் நியமங்களும் கவனத்தில் எடுக்கப்படாமலேயே தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இது யாப்புக்கு மதிப்பளிக்காமையையும் அதனை அகௌரவப் படுத்துதலையும் இலங்கைக்கே உரித்தான அவலட்சணமான அடையாளங்களாகக் கருதும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

சோல்பரி யாப்புக்கு அடிப்படையாக அமைந்த அமைச்சரவைப் பத்திரமாகக் கருதப்படுகின்ற முதலாவது அமைச்சரவைப் பத்திரம், குறைந்த பட்சம் பல்வேறுபட்ட சமூகத்தினரதும் தலைவர்களிடமாவது கருத்துக் கேட்கப்படாமல் டீ.எஸ். சேனநாயக்கவின் வழிகாட்டலிலேயே ஐவர் ஜெனிங்ஸினால் தயாரிக்கப்பட்டது. பின்னர் உதவிச் சட்ட வரைஞர் பீ.பி. பீரிஸினால் அதன் இறுதி வரைவு வைட் ஹோல் அதிகார சபைக்கு அனுப்பப்பட்டது.

பிரித்தானிய அரசு இதனைப் பொருட்படுத்தவில்லை. அமைச்சரவைப் பத்திரத்தில் தமது கருத்துக்கள் உள்வாங்கப் படவில்லை என சிறுபான்மைத் தலைவர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இலங்கைக்குப் பொருத்தமான அரசியல மைப்பொன்றை முன்மொழிவதற்காக சோல்பரி ஆணைக்குழுவை அது அனுப்பி வைத்தது. பிரித்தானிய அரசின் இந்த நடவடிக்கை டீ.எஸ். சேனநாயக்க உள்ளிட்ட அமைச்சரவையினதும் இலங்கைத் தேசிய சங்கத்தினதும் எதிர்ப்புக்குள்ளானது. இவர்கள் இந்தக் கமிஷனைப் பகிஷ்கரிக்கத் தீர்மானித்தார்கள்.

ஆணைக்குழுவைப் பகிரங்கமாக எதிர்க்கும் அதே வேளை மறைமுகமாக ஆணைக்குழுவுடன் உறவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை டீஎஸ் சேனநாயக்காவுக்கு ஒலிவர் குணதிலக காட்டிக் கொடுத்தார். ஆணைக்குழுவுடன் பின் கதவால் தொடர்பு வைத்துக் கொண்ட அடுத்தவர் ஜோன் கொத்தலாவல. கள்ளத் தனமாகச் செய்து முடிக்கப்பட்ட இந்தக் கொள்கை இல்லாத விவகாரம் ஆணைக்குழுவின் செயலாளரை ஒலிவர் குணதிலக தனது காதலியாக்கிக் கொள்ளும் அளவுக்கு நீண்டு சென்றது. இதனால் ஆணைக்குழு சேற்றில் நாட்டிய தடியாக மாறியது.

1962 சதிப் புரட்சியினால் ஆளுனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் ஒலிவர் குணதிலக வெளிநாட்டு வாசம் செய்த வேளையில், சுதந்திரத்துக்குத் தாம் வழங்கிய பங்களிப்புத் தொடர்பில் ஒரு நேர்காணை வழங்கியிருந்தார். அதே போல 70 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் ஜோன் கொத்தலாவல இங்கிலாந்தில் வாசம் செய்த வேளையில் நெவில் ஜயவீராவுக்கு ஒரு நீண்ட நேர்காணலை வழங்கியிருந்தார். இந்த இரண்டு நேர்காணல்களுக்கும் ஊடாக ஆணைக்குழுவோடு பின் கதவால் நடந்த விவகாரங்களின் உண்மை நிலை தெரிய வந்தது.

சோல்பரி ஆணைக்குழுவின் சார்பாக இங்கு வந்திருந்த அனைவரையும் இலங்கையில் அவர்கள் இருக்கும் வரை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு டீ.எஸ். சேனநாயக்கவுக்கு வழங்கப் பட்டிருந்தது. டீ.எஸ் சேனநாயக்காவும் தம்மால் தயாரிக்கப்பட்ட சட்ட மூலத்தை எந்தவித மாற்றமும் இன்றி நிறைவேற்றிக் கொள்ளும் தேவை இருந்தது. சோல்பரி பிரபுவை மட்டும் அழைத்து கொத்தலாவல வழங்கிய விருந்துபசாரமொன்றில் டீ.எஸ் நேனநாயக்காவுடைய தேவையைக் குறிப்பிட்டு, அவருடைய இந்தத் தேவையை நிறைவேற்றி வைத்தால் சுதந்திர இலங்கையின் ஆளுனர் பதவியை  சோல்பரி பிரபுவுக்கு வழங்குவதற்கு டீ.எஸ். சேனநாயக்கா தயாராக இருப்பதையும் கொத்தலாவல எத்தி வைத்தார். சோல்பரி பிரபு கொதலாவலயுடன் கைலாகு  செய்து இந்தப் பேரத்தை ஏற்றுக் கொண்டதாக நெவில் ஜயவீர தி ஐலன்ட் பத்திரிகையில் தொடராக எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சோல்பரி யாப்பின் 25 வருடங்களுக்குப் பிறகு, 1972 இல் ஐக்கிய முன்னணி அரசு முதலாவது குடியரசு யாப்பைத் தயாரித்த வேளையிலும்,  எதிர்த் தரப்பினரின் கருத்துக்களைப் பெறாமல் தமக்கிருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வைத்தே யாப்பைத் தயாரித்தனர். பெடரல் கட்சியினர் 09 அம்சங்கள் அடங்கிய பத்திரமொன்றை யாப்புப் பேரவைக்கு சமர்ப்பித்த போதும் அது கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. இதனால் இந்தக் கட்சியினர் யாப்பு உருவாக்கச் சபையினரைப் புறந்தள்ளினர்.

சிறுபான்மைக் காப்பீட்டுக்கான எந்தவித அம்சங்களும் புதிய யாப்பில் உள்ளடக்கப்படாமலேயே சிறுபான்மையினரின் காப்பீட்டுக்காக சோல்பரி யாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த 29 ஆவது சரத்து  நீக்கப்பட்டது. தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்த சிங்களத்தை அரச கரும மொழியாக்கும் விடயம் யாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இது தான் தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கும் காரணமாகியது.

1972 இன் முதலாவது குடியரசு யாப்பின் 06 வருடங்களுக்குப் பின்னர் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு இரண்டாவது குடியரசு யாப்பைத் தயாரித்தது. இதன்போதும் அது எதிர்த் தரப்பினருடன் இணங்கிய கருத்துக்களை வைத்து யாப்பைத் தயாரிக்கவில்லை. அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தை வைத்தே தயாரிக்கப்பட்டது. 1978 இல் தமிழ்க் கட்சிகள் பல இணைந்து உரு வாக்கப்பட்ட தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி தான் அப்போதைய பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது.

யாப்பை நகைப்புக்குள்ளாக்கல்

யாப்பை நகைப்புக்கிடமானதாக்கியதில் முதலாமவர் மைத்திரிபால சிறிசேன அல்ல. அதில் உலக சாதனை படைத்த நாடாக எமது நாட்டுக்குப் பெருமை உண்டு. யாப்பு, நிறைவேற்றதிகாரம், நீதி ஆகிய ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எமது நாட்டில் கேலிக்குள்ளாகியிருக்கிறது.

சோல்பரி யாப்பு கைச்சாத்திடப்பட்டு மை காயுமுன்னரே இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளரின் பிரஜாவுரிமையைப் பறிக்கும் வகையில் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க கொண்டு வந்த இரண்டு சட்டங்களுமே யாப்புக்கு முரணானவை. டீ.எஸ்.இன் பரம வைரியான சமசமாஜ இயக்கத்துடன் சில இடங்களில் இந்திய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி நெருக்கடிக்கு உள்ளாகியதற்குப் பழி வாங்கவே அவர் இந்திய வம்சாவழித் தொழிலாளரின் குடியுரிமையைப் பறித்தார்.

பின்னர் தமிழ் மக்களின் மொழி உரிமையைப் பறிக்கும் வகையில் பண்டாரநாயக்க கொண்டு வந்த  சிங்களத்தை மட்டும் அரச கரும மொழியாக்கும் சட்டமும் யாப்புக்கு முரணானதாகவே அமைந்தது. தமிழ் அரச ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவதற்காக சிங்கள மொழிப் புலமைப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைவதை இந்தச் சட்டம் நிபந்த னையாக்கியது. இதற்கெதிராக கோடீஷ்வரன் எனும் அரச எழுதுவினைஞர், இந்தச் சட்டம் சோல்பரி யாப்புக்கு முரணானது எனக் கோரி நீதி மன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றம் இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய போதும். தமிழருக்கு அநியாயம் இழைக்கும் இந்தச் சட்டத்தை அரசாங்கம் மாற்றிக் கொள்ளவில்லை. 

1978 இன் இரண்டாவது குடியரசு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 19 திருத்தங்களில் 07 திருத் தங்கள் யாப்புக்கு முரணானவை. ஆறில் ஐந்து பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்தை ஐதேக அரசு சர்வஜன வாக்குரிமை மூலம்   நீடிப்பதற்கு நான்காவது திருத்தம் இடமளித்தது. இது நாட்டின் அரசியல் பயணத்தையே மாற்றிய தோடு நாட்டை வன்முறைக்கும் இட்டுச் சென்றது. இதேபோல ஆளும் கட்சியில் இணையும் மந்திரிகளின் மந்திரிப் பதவியைப் பாதுகாப்பதற்கு இடமளிக்கும் வகையில் சந்திரிகாவின் ஆட் சிக் காலத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் யாப்பை மீறுவதற்குக் காரணமாகியது. இந்தத் தீர்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்ட யாப்பு மீறல் கலாச்சாரம் மொத்த அரசியலமைப்பையும் பலவீனப்படுத்தியது.

ராஜபக்ஷ ஆட்சியில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்றத்தைத் தொடர்ந்து நடத்திச் சென்ற அட்டகாசமான செயற்பாடும் யாப்பை மீறிய மற்றுமொரு சந்தர்ப்பமாகும்.   இந்த வகையில் யாப்பை மீறிய முதல் நபராக மைத்திரிபால சிறிசேனவைக் கருதுவது தவறு. பிரதமர் ஆட்சிக் காலத்தில் பிரதமர்களும் ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதிகளும் உயர்நீதிமன்றமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் யாப்பை மீறிச் செயற்பட்டிருப்பது தெளிவாகிறது. முன்னர் செய்த தவறுகளுக்கான தண்டனையாகத் தான் சரிந்து கொண்டிருக்கின்ற அரசாட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாயுள்ள தற்போதைய அரசியல் நெருக் கடியைக் கருத வேண்டியிருக்கிறது.

புதியதொரு யாப்பை உருவாக்கல்

இந்தத் துரதிர்ஷ்ட நிலைமையிலிருந்து மீள்வதற்கு புதியதொரு யாப்பை உருவாக்குவதில் நாடு ஈடுபட வேண்டும். யாப்பு தொடர்பிலும் யாப்பு உருவாக்கம் தொடர்பிலும் இலங்கையின் பொது மக்களைப் போலவே புத்திஜீவிகளுக்கும் அரசி யல் தலைவர்களுக்கும் போதுமான அறிவு இல்லை. 19 ஆவது திருத்தத்தின் பின்னர் பதவியில் இருப்பது நிறைவேற்றதிகாரம் இல்லாத பெயரள விலான ஜனாதிபதிதான் என்பதை பொதுமக்கள் மட்டுமன்றி ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடத் தயாராகவிருந்த கோதபாய, பல்லெவத்த, நாகா னந்த போன்றோரும் அரசியல் நெருக்கடி வரும் வரை தெரிந்திருக்கவில்லை.

இவர்கள் மட்டுமன்றி அரசியல் யாப்பைத் தயாரிக்கும் குழுவினர் கூட யாப்பு மற்றும் யாப்பு உருவாக்கம் தொடர்பில் பூரண அறிவு இல்லாத வர்களாவே இருந்தார்கள்.  19 ஆவது திருத்தத்துக்கும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தத்துக்குமென தயாரிக்கப்பட்டிருந்த சட்ட மூலங்கள், பாராளுமன்றமும் நீதித்துறையும் யாப்பு மற்றும் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கொண்டுள்ள அறிவைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

புதியதொரு யாப்பு நாட்டின் அடுத்த கட்ட நகர்வுக்கு முக்கியமான நிபந்த னையாக மாறி யுள்ளது. அது இரணில் விக்கிரமசிங்க தயாரித்து வருகின்ற யாப்பாக ஒருபோதும் இருக்க முடியாது. சிறந்ததொரு யாப்பைத் தயாரிப்பதற்கான பரிச்சயமும் தெளிவும் இரணில் விக்கிரமசிங்கவிடமோ ஜெயம்பதி விக்ரமரத்னவிடமோ இல்லை என்பது 19 ஆவது திருத்தம் மூலம் தெரிந்து விட்டது. ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தைக் குறைத்து பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்குவது மட்டுமே அவர்களது தேவையாகவிருந்தது. ஒட்டு மொத்த அரசியலமைப்பிலும் களையப்பட வேண்டிய பல விடயங்கள் அவர்களது கண்களுக்குத் தெரியவில்லை.

மொத்த அரசாங்கத்திலும் பரவிப் போயிருக்கின்ற ஊழல் தடுக்கப்பட வேண்டும், வேறெந்த ஜனநாயக நாட்டிலும் இல்லாத வகையில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்துடனான கொடுக்கல் வாங்கல்களுக்கான சந்தர்ப்பங்கள் இல்லா தொழிக்கப்பட வேண்டும். சட்டத்தை மீறும் மந்திரிகள் யாராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கின்ற, அவர்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமையைப் பறிக்கின்ற முறைமை ஒன்று வேண்டும்.

துஷ்பிரயோகங்களைக் களையும் வகையில் புதியதொரு நிறுவனமுறை உருவாக்கப்பட வேண்டும். இவை எதையுமே இரணில்-ஜெயம்பதி உருவாக்கிய யாப்பில் காணக் கிடைப்பதில்லை. அரசாங்கத்தின் அழுகிய நிலையையும் வீழ்ச்சியையும்,  மொத்த நிறுவன முறையிலும் மக்களின் சமூக ஒழுங்கு முறையிலும் மாற்றத்தைக் கொண்டு வருவதன் ஊடாகத்தான் மாற்ற முடியுமேயன்றி மேலோட்டமான மாற்றங்களினாலல்ல.

இதனால் அரசியல்வாதிகளின் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான அரசியல் யாப்பன்றி, மக்களின் நலனுக்கான மக்கள் யாப்பொன்றே தற்பொழுது அவசியப்படுகிறது. அது மோசடி, முறைகேடு, முயலாமை போன்றவற்றுக்கு இடமளிக்காத, சட்டமும் நீதியும் கோலோச்சுகின்ற, அரச நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்கின்ற, புதியதொரு மக்கள் அரசைக் கட்டியெழுப்புகின்ற யாப்பாக அமைய வேண்டும்.

முன்னைய தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வகையில் அது அமைய வேண்டும். இன, குல, மத பேதங்களை நீக்கிச் சகலரையும் சமமாக மதித்து ஒவ் வொரு தனி மனிதனுக்கும் உள்ள அந்தஸ்தையும் சுயமரியாதையையும் உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். ஊட கம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழிற்துறை, விவசாயம், வியாபாரம், சக்திவளம், சூழல் என்பவற்றோடு ஏழைக் கிராம மக்களின் மத்தியிலும் ஆழமான, பலன்தரக்கூடிய மாற்றத்தைக் கொண்டு வருவதாக அது அமைய வேண்டும்.

About editor 3020 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply