ஈழத்தமிழர்களும் அலைந்து திரிந்து அழியும்

ஈழத்தமிழர்களும் அலைந்து திரிந்து அழியும் நிலையும்

 பேராசிரியர் இரா.சிவசந்திரன்  

இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. ஒவ்வொரு இனத்திற்கும் தனித்துவமான சமூக பொருளாதார மத பின்னணி உண்டு. எனினும் இவர்கள் மொழி அடிப்படையில் தமிழ்பேசும் மக்கள் எனவும் சிங்களம் பேசும் மக்கள் எனவும் பாகுபடுத்தப்படுகின்றனர். தமிழ் பேசும் மக்கள் இலங்கைத் தமிழர், இந்தியத்தமிழர், இலங்கை சோனகர், இந்திய சோனகர் என நான்காக வகைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.  

இலங்கையில் 1981 ஆம் ஆண்டு பெறப்பட்ட கணிப்பீடே இன்றுவரை இறுதியாக இடம்பெற்ற உத்தியோக பூர்வமான முழு இலங்கைக்குமான குடித்தொகை கணிப்பீடாகும். 1991 இல் இடம்பெற்றிருக்க வேண்டிய கணிப்பீடு யுத்த சூழ்நிலைகளால் நாடு முழுவதும் இடம்பெறவில்லை. 2011 ஆம் ஆண்டு நாடு முழுவதற்குமான கணிப்பீடுகள் இடம்பெறவுள்ளன. 2001 ஆம் ஆண்டு சில தேவைகளுக்காக நாட்டின் சில பகுதிகளில் கணிப்பீடுகளும், மதிப்பீடுகளும் இடம்பெற்றிருந்தன.  

ஆதிகாரபூர்வமாக இலங்கையில் 1981 மார்ச் இல் இடம்பெற்ற குடித்தொகை கணிப்பீட்டின்படி இலங்கையின் மொத்த குடித்தொகை 14.85 மில்லியன் ஆகும். இதில் சிங்கள மக்கள் 11.98 மில்லியனாகும். இது மொத்த குடித்தொகையில் 74 வீதமாகும். தமிழ் பேசும் மக்கள் 3.75 மில்லியன் ஆகும். இது மொத்த குடித்தொகையில் 25.3% ஆகவும் அமைகிறது. 1911 ஆம் ஆண்டு குடித்தொகை தரவுகளின்படி இலங்கையில் சிங்களம் பேசும் மக்களின் தொகை 66 வீதமாகவும், தமிழ் பேசும் மக்களின் தொகை 32.2 வீதமாகவும் காணப்பட்டது. இவ் இரு தரவுகளையும் ஒப்பிடும்போது நூற்று வீத அடிப்படையில் தமிழ் மக்கள் குறைவடைந்து செல்கிறார்கள் என்பது புலனாகின்றது. இதற்குச் சில காரணங்கள் உள.  

சிறிமா சாஸ்திரி உடன்படிக்கையின்படி 1964 இல் மலையகத் தமிழர்களில் 6 லட்சம் பேர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கையில் மலையகத்தில் பிறந்த இவர்களது விருப்பம் பெறப்படாமலேயே இந் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வானது அகன்ற பாரதம் தமிழ் பேசும் மக்களைப் பண்டப்பொருளாகவே பார்த்ததென்றும், இதுவே முதல் தமிழனுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் எனவும் மனித உரிமை அமைப்புகள் விமர்சித்தன.  

வட கீழ் மாகாணம் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்கள் வாழ்ந்த பாரம்பரிய பிரதேசமாக விளங்குகின்றது. வட, கிழக்கு மாகாணத்தின் மொத்த குடித்தெகை 20.9 மில்லியன் ஆகும். இலங்கையின் மொத்த குடித்தெகையில் இது 14.1 % ஆக அமைகிறது. வடகீழ் பகுதியின் மொத்தக் குடித்தொகையில் வடமாகாணம் 53.2 வீதத்தினையும், கிழக்கு மாகாணம் 46.8 வீதத்தினையும் கொண்டுள்ளது.  

வடமாகாணத்தின் மொத்த குடித்தொகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 75 வீதத்தினர் காணப்படுகின்றனர். நிலப்பரப்பில் 6 வீதமே கொண்ட யாழ் குடாநாட்டில் மொத்த வட கீழ் மாகாண குடித்தொகையில் 36 வீதத்தினரும், வடமாகாண குடித்தொகையில் 75 வீதத்தினரும் வாழ்கின்றனர்.

வடமாகாணத்தின் 72 வீத நிலப்பரப்பைக் கொண்ட வன்னிப்பிரதேசத்தில் 25 வீதமான குடித்தொகையே காணப்படுகின்றது. எனவே வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதாயின் வன்னிப்பிரதேசமே அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது புலப்படும்.  

சுதந்திரத்திற்குப் பின்னரான தமிழர் குடித்தொகை மாற்றங்கள்  

தமிழர் பாரம்பரிய பிரதேசமான வடக்கு கிழக்கிலிருந்து பாரிய அளவிலான குடித்தொகை மாற்றங்களும் பெயர்ச்சிகளும் சுதந்திரத்திற்குப் பின்னர் குறைந்தளவில் இடம்பெற்று வந்து 1990 ஆம் ஆண்டிற்கு பின்னதாக பாரிய அளவில் இடம்பெற்றது, இதில் முக்கியமாக திட்டமிட்ட சிங்கள மக்களது குடியேற்றத்தால் ஆரம்ப காலங்களில் இப்பிரதேசத்தின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. 1981 இல் வட கீழ் மாகாணத்தின் மொத்த குடித்தொகையில் தமிழ் பேசும் மக்கள் 86.3 வீதமாகவும், சிங்களம் பேசுவோர் 13.2 வீதமாகவும் காணப்பட்டனர்.  

மாவட்டத்திற்கு மாவட்டம் இதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களில் மொத்தக் குடித்தொகையில் தமிழர் 90.99 வீதத்தினராக இருந்தனர். வவுனியாவில் 86.3 வீதத்தினரும் தமிழ் பேசும் மக்களாவர். வடக்கே வவுனியா மாவட்டமும் கிழக்கே திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் சிங்கள மக்கள் திட்டமிட்ட அடிப்படையில் குடியேற்றப்பட்டதால் தமிழர்கள் குடிநகர்ந்து அப்பகுதிகளில் தமிழர் குடித்தொகை வீதம் குறைவடைந்துள்ளது.  

1981 இல் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் மொத்த குடித்தெகையில் 34 – 38 வீதத்தினர் சிங்கள மக்களாக இருந்தனர். அதற்கு குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு சிங்கள மக்களைப் பெருமளவில் குடியேற்றியமையே காரணமாக அமைகிறது. வவுனியா மாவட்டத்தில் மாமடுவ, மடுகந்த, ஈரப்பெரியகுளம், உளுக்குளம் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் அக்கோபுர, சோமபுர, கந்தளாய், பரண, மதவாச்சி, கோமரன்கடவல ஆகிய கிராமசேவகர் பிரவுகளிலும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாகக் குடியேற்றப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் வேவகம்பற்று வடக்கு, வேவகம்பற்று தெற்கு, லாமகுலகல, மாயஓயா, படியத்தலவ ஆகிய உ.அ பிரிவுகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அதனால் தமிழ் மக்கள் குடிபெயர்ந்தனர். பொதுவாக அம்பாறை, திருகோணமலை, வவுனியா மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தால் தமிழர் வீதாசாரம் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.  

அரசியல் காரணம்

இலங்கை அரசியலில் தமிழர் அரசியல் சார்ந்த பிரச்சினைகள் சுதந்திரம் பெற்ற பின்னர் தீர்க்கப்படாமல் இன்றுவரை இழுத்தடிக்கப்படுகின்றன. தனித்த தேசிய இனமாக இருக்கக்கூடிய சகல வரையறைகளையும் கொண்ட தமிழ்த் தேசிய இனம் சிங்கள ஆட்சியாளர்களின் தவறான அணுகு முறையினால் உரிமை பெற முடியாமல் போராட்டத்தில் ஈடுபடவேண்டியதாயிற்று.  

ஐரோப்பா ஆட்சிக் காலத்திற்கு முன்பு தமிழ் பாரம்பரிய பிரதேசம் சுய இராட்சியமாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. வன்னியை இணைத்த யாழ்ப்பாண இராச்சியம் இருந்தமைக்கான சான்றுகள் உறுதியாக உள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழர் தம் உரிமைகளை வென்றெடுக்க 1948 ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 30 ஆண்டுகள் அமைதியான முறையில் சனநாயக ரீதியில் போராட்டம் இடம்பெற்றது. பின்னர் 1980 களில் இது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது. 2009 மே மாதம் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதென்ற அறிவித்தலுடன் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளதாக அரசு கூறுகின்றது.  

சம உரிமை, சமஸ்டி, தனிநாடு என போராட்ட கோரிக்கைகள் அமைந்திருந்தன. ஆயுதப் போராட்ட காலத்தில் முக்கியமாக 1983 இற்குப் பின்னர் வெளிநாட்டு இடப்பெயர்வுகள் பெருமளவு இடம்பெற்றன. வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களும் யுத்த சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டன. இதனால் பெருமளவு மக்கள் உள்ளுர் இடப்பெயர்வாளர்களாகவும், வெளிநாட்டுப் புலப்பெயர்வாளர்களாகவும் மாற்றப்பட்டனர். (வெளிநாட்டில் நான்கு இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக சென்று வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது) இதனால் தமிழர் பாரம்பரிய பிரதேசத்தின் பொருளாதார, சமூக, கலாசார நிலைகளில் பெரிதும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.   பொதுவாக தமிழர்களது வாழ்வாதாரங்கள் ‘வேரோடும் வேரடி மண்ணோடும்’ பெயர்க்கப்பட்டன என்ற நிலை தோன்றியுள்ளது. ஆயுத போராட்ட காலத்தில் நிகழ்ந்த இடப்பெயர்வுகள் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா போன்ற அனைத்து இடங்களிலும் இடம்பெற்றன. இதற்கான காரணங்களை அரசசார்பற்ற அமைப்புகள் பின்வருமாறு வரிசைப்படுத்தியுள்ளன.  

1. யுத்தத்திற்குள் அகப்படுவோம் என்ற பயம் மக்களைப் பீடித்துள்ளமை/ குடும்ப அங்கத்தவர்களது இறப்பு  

2. துன்புறுத்தல் / பயமுறுத்தல் / அடக்குமுறை  

3. ஆயுதம் தரித்த குழுக்களின் துன்புறுத்தல்  

4. வாழ்வாதாரங்கள் இழக்கப்பட்டதால் ஏற்பட்ட வறுமை, நோய் கல்வியில் தாக்கம், வேலையற்ற நிலைமை, மீன்பிடி என்பன பாதிக்கப்பட்டமை  

5. மக்கள் வாழ்ந்த பகுதிகளிற் பல உயர்பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டமை போன்றன.   ஒரு தேசிய இனத்தை திட்டமிட்ட முறையில் சிங்கள மேலாதிக்க அரசு பழிவாங்கிய நடவடிக்கையே இதுவென பலரால் இவை விமர்சிக்கப்படுகின்றன. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலிருந்து ஆரம்பத்தில் LTTE இக்கும், அரசு படைக்கும் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பெருமளவு மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து வெளியேறினார்கள். அவர்களது குடிமனைகள் முற்றாக அழிக்கப்பட்டன. அகதி முகாம்களில் மக்கள் தஞ்சம் புகுந்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 1990 ஆண்டுகளை தொடர்ந்து வடமராட்சி, தீவுப்பகுதி, வலிகாமம் உயர்பாதுகாப்பு வலையப்பிரதேசம் போன்ற இடங்களில் ஏற்பட்ட மோதல்களினால் மக்கள் இடம்பெயர்ந்தனர். 1995 இல் வலிகாம மக்கள் அனைவரும் தென்மராட்சிக்கும், வடமராட்சிக்கும் இடப்பெயர நேர்ந்தது. பின்னர் தென்மராட்சி மக்கள் யாழ்ப்பாணம் இடப்பெயர நேர்ந்தது. ஒரு சில நாளில் யாழ்ப்பாணத்திலிருந்து தென்மராட்சிக்கு 8 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்த வரலாறு கறைபடிந்த சம்பவமாக பதியப்பட்டுள்ளது.   1990 ஒக்டோபரில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசத்தில் LTTE இனால் பலவந்தமாக முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை தமிழ் மக்கள் வரலாற்றில் கறைபடிந்தமை அத்தியாயமாகும்.

இதன்போது மக்களது பொருளாதார, சமூக, மத கட்டமைப்புகள் அனைத்தும் சிதைவுற்றன. இதைத் தொடர்ந்தும் பலர் உள்ளுர் இடப்பெயர்வையும் வெளியூருக்கான புலப்பெயர்வையும் மேற்கொண்டனர்.   வன்னியில் முள்ளிவாய்க்காலில் மே மாதம் 2009 இல் இடம்பெற்ற பாரிய மனிதப் படுகொலைச் சம்பவத்துடன் 3½ இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இன்றும் இவர்கள் நாட்டின் பல பகுதிகளில் அகதிகளாக வாழ்கின்றனர். சர்வதேச ரீதியாக மிகவும் மோசமான இடம்பெயர்வு என வர்ணிக்கப்படும் இடப்பெயர்வு தமிழ் மக்களது இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஆயுத போராட்டத்தை முறியடிக்கவென பெருந்தொகையாக இராணுவத்தினரை தொடர்ந்தும் அரசு வைத்திருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு திட்டமிட்ட அடிப்படையில் இராணுவத்தை இப்பிரதேசத்தில் குடியேற்றுவதும் தொடர்ந்து பாதுகாப்பு கெடுபிடியை மேற்கொள்வதும் தமிழ் மக்களிடம் தொடர்ந்தும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

ஒரு தேசியம் ஒரு நாடு என்ற அரசின் கோசம் ஒரு மதம் ஒரு மொழி எனவும் விரிவடையுமெனச் சந்தேகம் எழுப்பப்டுகின்றது.   அண்மைக் காலங்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் நிலவும் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிமுறைகள் மக்களுக்கு தெரியாதுள்ளது. அரசு திட்டமிடுவது போன்ற அளவு பாதிக்கப்படும் தமிழர்கள் தம்மைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிடுவதாக தெரியவில்லை. எமக்கிடையேயுள்ள கருத்து முரண்பாடுகள் இதை மேலும் சிக்கலாக்குகின்றன.  

இலங்கை தமிழர்களின் இன்றைய காலகட்டம் மிகவும் சிக்கலானதும் அவதானமாக பல்வேறு ஆதரவுச் சக்திகளை ஒருங்கிணைத்து அபிவிருத்தி பாதைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. அது தவறுமாயின் இலங்கைத் தமிழரின் தேசிய அடையாளங்கள், பொருளாதார சமூக கலாச்சார விழுமியங்கள் அற்றுப்போய்விடும் அபாயம் உள்ளது. தமிழரின் இருப்பு பற்றிய அக்கறையுள்ள அனைவரும் – முக்கியமாக புலம்பெயர்ந்தோரிடையேயும் தமிழ் மக்களிடையேயுமுள்ள கல்வியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இவை முறையான திட்டமிடல் மூலமும் முறையான அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவதன் மூலமும் எய்தப்பட வேண்டும்.

664 கருத்துக்கள்5 பகிர்வுகள்விரும்புகருத்துத் தெரிவிபகிர்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply