ஒழுக்கம் விழுப்பம் தரலான்


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:131)

பொழிப்பு: ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
மணக்குடவர் உரை: ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும்.
இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.பரிமேலழகர் உரை: ஒழுக்கம் விழுப்பம் தரலான் – ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் – அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.
(உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். ‘உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்’ என்றார்.)தமிழண்ணல் உரை: உயிர் சிறந்தது; உயிரைக் காட்டிலும் ஒழுக்கம் சிறந்தது. ஏனெனில் ஒழுக்கமே அவ்வுயிரொடு கூடிய வாழ்க்கைக்கு விழுப்பத்தைத் தருகிறது (விழுப்பம்-நிலைத்த நன்மதிப்பு, சிறப்பு). எனவே ஒழுக்கத்தை உயிரைக் காட்டிலும் கருத்தாகப் பாதுகாக்க வேண்டும்.
ஒழுக்கச் சிறப்பில்லாத உயிர் மதிக்கப்படாது. ஒழுக்கம் தவறியும் கழுவாய் தேடி வாழலாம் என்பர் சிலர். ஒழுக்கமா, உயிரா என்று வரும்போது ஒழுக்கத்தைக் காக்க உயிரையும் விட்டுவிடலாமென்பதே வள்ளுவர் கருத்து.
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.பதவுரை:
ஒழுக்கம்-ஒழுக்கமுடைமை; விழுப்பம்-விழுமம், மேன்மை, சிறப்பு; தரலான்-கொடுப்பதால்; ஒழுக்கம்-நடத்தை; உயிரினும்-உயிரைக் காட்டிலும்; ஓம்பப்படும்-காப்பற்றத் தகும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே;

மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.
பரிப்பெருமாள்: ஒழுக்கம் சீர்மையைத் தருதலானே;

பரிதி: ஒழுக்கமுடைமை பெருமை தருதலால்;

காலிங்கர்: அவரவர்க்குத் தக்க ஒழுக்கமானது இருமைக்கும் நன்மையைத் தருவதால்; [இருமை- இம்மை, மறுமை]

பரிமேலழகர்: ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்;

பரிமேலழகர் குறிப்புரை: உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார்.’ஒழுக்கமுடைமை சீர்மையை/பெருமை/நம்னமையை/சிறப்பினைத் தருதலானே’ என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.இன்றைய ஆசிரியர்கள் ‘ஒழுக்கம் பெருஞ்சிறப்பைத் தரும் ஆதலின்’, ‘ஒழுக்கம் மேன்மையையே தருதலால்’, ‘ஒழுக்கமானது எல்லார்க்கும் மேன்மையை அளித்தலால்’, ‘ஒழுக்கமானது எல்லார்க்கும் பெருமையினைத் தருதலான்’, என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.ஒழுக்கம் மேன்மையைத் தருதலால் என்பது இப்பகுதியின் பொருள்.ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும்.

மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.

பரிப்பெருமாள்: அதனைத் தனது உயிரைக் காப்பதினும் மிகக் காக்க.

பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய நன்மையெல்லாந் தருதலான், இதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.

பரிதி: அந்த ஒழுக்கம் பிராணனைப் போலே கொண்டொழுகுக.

காலிங்கர்: ஒழுக்கத்தினைத் தமது உயிரோம்புதலிற் காட்டிலும் குறிக்கொண்டு பாதுகாக்கவே அடுக்கும் என்றவாறு. [அடுக்கும் – பொருந்தும்]

பரிமேலழகர்: அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.

பரிமேலழகர் குறிப்புரை: சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். ‘உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்’ என்றார்.’அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும்’ என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.இன்றைய ஆசிரியர்கள் ‘உயிர் கொடுத்தும் காக்க வேண்டும்’, ‘அவ்வொழுக்கம் நன்மை தீமை இரண்டனையும் செய்யும் உயிரைக் காட்டிலும் போற்றிப் பாதுகாக்கப்படும்’, ‘அஃது உயிரினுஞ் சிறந்ததாகப் பாதுகாக்கப்படல் வேண்டும்’, ‘அவ்வொழுக்கம் உயிரைவிடச் சிறந்ததாகக் காக்கப்படும்’ என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.ஒழுக்கமுடைமை உயிரைக் காட்டிலும் சிறந்ததாகக் காக்கப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை:
ஒழுக்கம் மேன்மையைத் தருதலால், ஒழுக்கமுடைமை உயிரினும் ஓம்பப் படும் என்பது பாடலின் பொருள்.
‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்று ஏன் சொல்லப்பட்டது?
ஒழுக்கமில்லையென்றால் உயிர் இல்லாததுபோல்தான்.ஒழுக்கம் ஒருவர்க்கு மேன்மையைத் தருவதால் அதை உயிரினும் சிறந்ததாகப் பேணிக் காக்க வேண்டும்.
நல்லொழுக்கமே ஒழுக்கம் எனப்படுவது. ஒழுக்கம் என்பது நன்னெறியில் நடத்தலைக் குறிக்கும். உலகம் பழிக்காத ஒழுக்கம் அதாவது உலகத்தோர் எதைச் சிறந்த ஒழுக்கம் என்று ஏற்றுக் கொள்கிறார்களோ அது நல்லொழுக்கம் ஆகும்.
ஒழுக்கம் உடையார் யாராக இருந்தாலும் அவ்வொழுக்கத்தால் அவர்கள் சிறப்புப் பெறுவார்கள். இச்சிறப்பை வள்ளுவர் விழுப்பம் எனக் குறிக்கின்றார். விழுப்பம் என்ற சொல் விழுமம் (Value) என்ற பொருளது. அதற்கு மேன்மை, சிறப்பு, பெருமை எனவும் பொருள் கொள்வர், ஈகையாலும், வீரத்தாலும், பேச்சாற்றலாலும், கல்வி மிகுதியாலும், செல்வ மிகுதியாலும் சிறப்புப் பெறலாம் எனக் குறளுள்ளேயே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஒழுக்கம் போல் சிறப்பு தருவது மற்ற எதுவுமில்லை. மேலான சிறப்பு தருவதால் அது விழுப்பம் ஆகியது.

உடல் நிலைபெற உயிரைப் பேணுகிறோம். எதைக் காப்பதினும் தம்தம் உயிரைக் காத்துக் கொள்வதில் எல்லாரும் அளவிறந்த முனைப்புக் காட்டுவது இயல்பு. அத்துணை முயற்சியை ஒருவர் விழுப்பம் தரும் ஒழுக்கமான வாழ்க்கை தவறி விடாமல் கருத்தாகக் காத்துக் கொள்ள எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது இக்குறள். உயிர் எல்லாப் பொருளையும் விடச் சிறந்ததே; ஆயினும் அந்த உயிருக்கும் சிறப்புத்தர வல்லதாக ஒழுக்கம் விளங்குகின்றது; ஆகையால் உயிரைவிட ஒழுக்கமே சிறந்ததாகக் கொண்டு காக்க வேண்டும்.

இன்னொரு வகையில் சொல்வதானால் ஒழுக்கம் தவறி வாழ்வு நடத்துவதைவிட இறப்பது மேல் என்கிறது குறள்.
‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்று ஏன் சொல்லப்பட்டது?உயிரினும் என்ற சொல் உயிரைவிட என்ற பொருளது; ஓம்பப்படும் என்ற சொல் தொடர்ச்சியாகப் பேணப்படும் அல்லது பேணப்பட வேண்டும் எனப் பொருள் தருவது. ஒழுக்கத்தின் அருமையும் காப்பும் இங்கு பேசப் பெற்றது.
உயிர் இல்லாமல் வாழமுடியாது. ஒழுக்க மேன்மையில்லாத உயிர் மதிக்கப்படாது. மேன்மை எல்லாருக்கும் இல்லை. ஒழுக்கமுள்ளோர்க்கே உயர்வு கிடைக்கிறது. அதுவே விழுப்பம் என்னும் அளவு சிறந்தது. அதனால் உயிரைக் காட்டிலும் சிறந்தது ஒழுக்கம். ஒழுக்க நெறி நிற்பார்க்கு இழுக்கல் வருவது இயற்கை. இழுக்கல் வந்துழியும் ஒழுக்கத்தில் தாழாது, இடையறாது இடர்களையும் தாங்கிக்கொண்டு ஒழுக்கத்தைப் பேணுதல் வேண்டும் என்ற குறிப்புத் தோன்ற ‘ஓம்பப்படும்’ என்றார். ஒழுக்கம் தவறியும் கழுவாய் தேடி வாழலாம் எனற கருத்துள்ளோரும் உளர். ஆனால் ஒழுக்கமா, உயிரா என்று வரும்போது ஒழுக்கத்தைக் காக்க உயிரையும் விட்டுவிடலாம் என்கிறது குறள்.
சாதலின் இன்னாத தில்லை… என்பதால், உயிரின் சிறப்பினை யறியலாம். உயிர் தான் தங்கியுள்ள மாந்தர் தம் நிறைக்கேற்ப நன்மை தீமை இரண்டினையும் செய்யும். ஆனால், ஒழுக்கம் எங்கு தங்கினும் விழுப்பமே செய்யும் ஆதலின், ‘உயிரினும் ஓம்பப் படும்’ என்றார் என்பது ச சோமசுந்தர பாரதியின் விளக்கம். உயிர் எல்லாவற்றிலும் சிறந்ததாயினும் ஒழுக்கம் போலச் சிறப்புத் தராமையின் உயிரினும் ஓம்பப்படும் என்பது பரிமேலழகர் உரை.உயிரையும் உயர்குணங்களையும் இணைத்துக் குறளில் வரும் மற்ற

இடங்களாவன: இளிவரின் வாழாத மரணமுடையார் (மானம் 970 பொருள்: தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவர்) நாணால் உயிரைத் துறப்பர் (நாணுடைமை 1017 பொருள்: நாணத்தால் உயிரை விடுவார்) தன்னுயிர் நீப்பினும் செய்யற்க (கொல்லாமை 327 பொருள்: தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும் செய்யக்கூடாது) புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் (படைச்செருக்கு 780 பொருள்: தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால்) இழைத்தது இகவாமைச் சாவாரை (படைச்செருக்கு 779 பொருள்: தாம் உரைத்த சூள் தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை, அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்?) என உயர்ந்த பண்புகளுக்காக உயிர் துறக்கத்தகுவது எனக் குறள் கூறும்,உயிர் போன்றது என்று சொல்லாமல் உயிரினும் என்று உம்மை சேர்த்து சொல்லப்பட்டது எண்ணத்தக்கது. உயிரை விடவும் மேலானது என்றதால் ஒழுக்கம் எல்லாவற்றிலும் மேலானது என்பது பொருள்.
ஒழுக்கம் மேன்மையைத் தருதலால், ஒழுக்கமுடைமை உயிரைக் காட்டிலும் சிறந்ததாகக் காக்கப்படும் என்பது இக்குறட்கருத்து.

உயிருள்ளவரை ஒழுக்கமுடைமை கொண்டு வாழவேண்டும்.ஒழுக்கம் மேன்மையைத் தருதலால், அவ்வொழுக்கம் உயிரைக் காட்டிலும் போற்றிப் பாதுகாக்கப்படும்.
http://thirukkural.co.in/thirukural/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/
About editor 3122 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply