சர்வஜன வாக்குரிமைக்கு எதிராக 1928 இல் இந்து சாதனம்

சர்வஜன வாக்குரிமைக்கு எதிராக 1928 இல் இந்து சாதனம்

இலங்கையில் சர்வஜன வாக்குரிமை எளிமையாக கிடைத்த ஒன்றல்ல. அதற்கான கோரிக்கையை அன்றைய அரசாங்க சபையில் இருந்த இலங்கை பிரதிநிதிகள் கூட அவ்வளவு பெரிதாக அழுத்தியது இல்லை. அரசாங்க சபைக்கு வெளியில் தான் சர்வஜன வாக்குரிமைக்கான போராட்டமும், கோரிக்கைகளும், அழுத்தங்களும் வலுவாக இருந்தன.

டொனமூர் 1927 ஆம் ஆண்டு இலங்கை வந்து குறுகிய காலத்தில் தனது விசாரணைகளை முடித்துவிட்டு திரும்பிவிட்டார். அந்த விசாரணைக்குழுவின் அறிக்கையின் மீதான விவாதங்கள் கூட 1928 இல் நடத்தப்பட்டுவிட்டபோதும் டொனமூர்  திட்டம் 1931 இல் தான் அமுலுக்கு வந்தது. அப்போது இலங்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்தே ஏக காலத்தில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது.

டொனமூர் காலம் வரை இலங்கையில் 4% வீதத்தினருக்கு மாத்திரமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. “படித்த- வசதி படைத்த – ஆண்களிடமே” அந்த உரிமை இருந்தது.

சர்வஜன வாக்குரிமை பற்றிய யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் இருந்த பொதுப்புரிதல் என்ன என்பதை கீழே பகிரப்பட்டுள்ள இந்து சாதனம் பத்திரிகையில் அன்று வெளியான ஆசிரியர் தலையங்கப் பத்தியில் நீங்கள் காணலாம். அதுமட்டுமன்றி பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்று தொடர்ச்சியாக செய்திகளையும், கட்டுரைகளையும், ஆசிரியர் பத்திகளையும் பெண்களின் வாக்குரிமைக்கு எதிரான வெகுஜன அபிப்பிராயத்தை உருவாக்கிவந்தது.

01.11.1928 அன்று அரச சபையில் நிகழ்ந்த விவாதத்தின் போது பெண்களுக்கும், படிக்காதவர்களும், வசதிபடைக்காதவர்களுக்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனம் என்றார் சேர் பொன் இராமநாதன்.  அதுமட்டுமன்றி அவர் டொனமூர் கமிஷன் முன் தமிழர் மகா சபை சார்பில் சாட்சியளிக்கையில் இலங்கைக்கு தன்னாட்சி அளிப்பதை தான் எதிர்ப்பதாகக் கூறினார். இலங்கை சுயாட்சியை அனுபவிக்குமளவுக்கு முதிர்ச்சிபெறவில்லை என்றார்.

சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான உணர்வுநிலை அன்றைய யாழ் – சைவ – வேளாள – ஆணாதிக்க அதிகார வர்க்கத்தினரின் வெகுஜன அபிப்பிராயமாக இருந்திருக்கிறது. அந்த தரப்பின் ஊதுகுழலாக இருந்த இந்து சாதனம் பத்திரிகை அன்றைய அந்த மனநிலையை நாடிபிடித்தறிய முக்கிய சாதனமாக நமக்கு ஆதாரமாக இருக்கிறது. சேர் பொன் இராமநாதனை எப்போதும் ஆதரித்து அனுசரித்து வந்த முக்கிய பத்திரிகையும் கூட. அதில் வெளிவந்துள்ள அக்கால பல்வேறு செய்திகள் கட்டுரைகளிலிருந்து நாம் அதனை அறிந்துகொள்ள முடியும்.

இராமநாதன் ஏன் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தார் என்பதை நாமறிவோம். அதேவேளை இனவாத தரப்பில் வேறு ஒரு அர்த்தத்தை தொடர்ந்தும் பதிவு செய்து வந்திருப்பதை பல்வேறு நூல்களிலும் காண முடிகிறது. சிங்களத்தில் பல அரசியல் நூல்களை எழுதிய W.A.அபேசிங்க தனது “டொனமூர் அறியலமைப்பு” என்கிற நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“படித்தவர்களுக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்த வேண்டும் என்று பொன்னம்பலம் கருதியதற்குப் பின்னால் தமிழர்களுக்கு சாதகமான அரசியல் நலனே இருந்திருக்கிறது. ஏனென்றால் தெட்டத்தெளிவாக அன்றைய நிலையில் கல்வியில் சிங்களவர்களை விட முன்னேறிய நிலையிலேயே தமிழர்கள் இருந்தார்கள்.”

அன்றைய இலங்கையில் கல்வி கற்றோர் சிங்களவர்களை விட தமிழர்களே அதிகமாக இருந்தார்கள். எனவே சிங்களவர்களை அரசியல் அதிகாரத்துக்கு வார விடாமல் தடுக்க எடுத்த முயற்சியைத் தான் இராமநாதன் செய்தார் என்கிற குற்றச்சாட்டை சிங்களத் தர்ப்பு இன்றும் பிரச்சாரம் செய்து வருகிறது.
சேர் பொன் இராமநாதனை போற்றும் சிங்களவர்கள் 1920 வரை அவரின் தேசிய வகிபாகத்தை வைத்து கொண்டாடுபவர்கள். அதேவேளை சேர் பொன் இராமநாதனை தூற்றும் சிங்களவர்களவர்கள் 1920க்குப் பின் அவரின் வகிபாகக்தை வைத்து நிறுவ முயல்கிறார்கள்.

சரி; 22.11.1928 அன்று வெளியான “இந்து சாதனம்” பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை சற்று கூர்ந்து கவனிப்போம்.

பிரதிநிதிகளை தெரிவு செய்தல்

இலங்கை சட்ட நிரூபண சபை பட்டின பரிபாலன சங்கம் நகர சங்கம் சுகாதார சங்கம் கிராம சங்கம் என்னுமிவைகளுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பும் சிலாக்கியம் இலங்கை வாசிகளுக்கு உதவப்பட்டு பல வருடங்கள் செல்லவில்லை எனலாம். இந்த சுதந்திரம் சீர்திருந்திய அரசாங்கத்தினரால் பிரசைகளும் பரிபாலன விஷயத்திற் பங்குபற்ற வேண்டும் என்னும் நன்நோக்கத்தோடு சீர்திருத்தமான நாட்டில் வசிக்கும் ஏழைகளுக்கு உதவப்பட்டுள்ளது இதனை பெற்ற பிரசைகள் தாங்கள் இந்தச் சிலாக்கியத்திற்கு அருகதை என்பதை பிரதிநிதிகளை தெரிவு செய்யும் விஷயத்தில் அரசினருக்கும் மற்றுமுள்ளோருக்கும் காட்டி விடுதல் வேண்டும். ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் இங்ஙனம் செய்தலை விடுத்து தாங்கள் இதற்கு அருகரல்லர் என்பதை காட்டத் தலைப்படுகின்றனர் போல தெரிகின்றது. பிரதிநிதிகளை தெரிவு செய்யும் காலத்தில் அதற்கு தகவல்களை ஊரவர்கள் சந்தித்து

“நீர் இந்த முறை என்ன சங்கத்தில் எங்கள் பிரதிநிதியாக வரல் வேண்டும்”

என்று கேட்க அவர் அதற்கு உடன்பாடாராயின் அவர் யாதும் பிரயத்தனம் இன்றி வாளாவிருப்ப உரவர்கள் முயற்சி செய்து அவரை தெரிந்து கொள்வதே முறையானது ஆகும். எங்கள் ஊருக்கும் பிரதிநிதியாக தெரியப்படுத்தவும் பிரதிநிதியைத் தெரிவு செய்பவர்களுக்கும் மகத்துவம் ஆகும். சுருக்கமாகச் சொல்லுகில் பிரதிநிதி தெரிவு மார்ச்சால சம்மந்தம் போல் இருக்கவேண்டும். மார்ச்சாலம் பூனையாகும் பூனை தன் குட்டிகளை இருந்த இடத்தை விட்டு பிரிந்து ஓரிடத்திற்கு அகற்ற வேண்டின் குட்டிகள் யாதும் பிரயத்தனமின்றியிருப்ப, தாய் பூனை தானே அழைத்துக் கொண்டு போய் சேர்க்கும். அப்படியே பிரதிநிதிகளால் வர விரும்புவோர் பூனை குட்டிகள் போல் யாவும் பிரயத்தனமின்றி இருப்ப ஊரவர்கள் தாய் பூனை போல் முயற்சி செய்து பிரதிநிதிகளை சங்கத்தின் அங்கத்தவராக வைத்தல் வேண்டும்.

ஆனால் இங்குள்ளோர் இந்த மேலான முறையை அனுசரித்தலை விடுத்து மர்க்கட சம்பந்தத்தை தெரிதல் விஷயத்தில் அனுசரிக்க தலைப்பட்டு கொண்டனர். மார்க்கடமென்பது குரங்கு. குரங்கு எங்கேனும் போகும்பொழுது ஒரு போதும் தன் குட்டிகளை தான் தூக்கிப் போகும் வழக்கமில்லையாம் தாய் குரங்கு இடம்பெயற போகின்றது என்பதை கண்ட மாத்திரத்தில் குட்டி தானாகவே தாய் குரங்கை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். இவ்வாறு இங்குள்ளோர் யாதாயினும் ஒரு சபைக்கேனும் சங்கத்திற்கேனும் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக காலம் சமீபித்து விட்டது என கண்ட மாத்திரத்தே “என்னை உங்கள் பிரதிநிதியாக தெரிந்து விடுங்கள்” என்று தனித்தனியாக முற்பட்டு ஊரவர்களை நெருக்க கலைபட்டு வருகிறார்கள். ஒருவர் பிரதிநிதியாக வர விரும்பி தாமே சென்று தம்மை பிரதிநிதியாக தெரிவு செய்யும்படி ஊரவரை இரத்தல் ஒரு ஆடவன் ஒரு கன்னிகையிடம் போய் “அய்யோ நீ என்னை கல்யாணம் முடி” என்று இரந்து நிற்றல் போல் அவமரியாதை ஆகும். சென்ற சனிக்கிழமை நடந்த பட்டின பரிபாலன சங்கம் அங்கத்தவர்களை தெரிவு செய்யும் விஷயத்தில் அங்கத்தினர் ஆய்வதற்கு முற்பட்டு நின்று வரும் வட்டார வாசிகளும் பலரும் செய்த முயற்சிகளும் நடந்து கொண்ட விதமும் அவமதித்தற்கேதுவானவையாகும்.

அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக காலம் வர வட்டார வாசிகள் யாரை தெரிவு செய்யலாம் என்று யோசித்து அதற்குதானும் நேரம் விடாமல் “என்னைத் தெரி, அய்யோ என்னைத்தெரி” என்று பலர் எவரும் கேளாதிருப்ப தாமாகவே மழைக்காலத்தில் புறப்படும் புற்றீசல் போலப் புறப்பட்டு வருகின்றனர் முந்தி இரண்டு மூன்று முறை தொடர்பாக அங்கத்துவம் வைத்திருந்த பழைய அங்கத்தவர்கள் செத்தாலும் நாம் இந்த பதவியை விட மாட்டோம் என்றவராய் பதவியை விட பிரியம் இல்லாமல் இருக்கின்றார்கள். நாம் செய்யக்கூடிய நன்மைகளை எல்லாம் பட்டணத்திற்கு செய்துவிட்டோம் இப்படியே மற்றவர்களும் செய்ய இடம் கொடுக்க வேண்டியதல்லவா முறை என்று நினைப்பார் எவரையும் காணோம்.

இனி புதிய அங்கத்தவராக வரப் புறப்பட்டு நிற்பவர்களெனிலோ, எப்படியாயினும் தாம் வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்கின்றார்களேயன்றி அங்கத்தவர்களால் வருவதற்கு தாம் கைக்கொள்ளும் செய்கைகள் சரியோ பிழையோ என்பதை சிறிதும் சிந்திக்கிறார்கள் இல்லை. உணவளித்து பொருளுதவியும் ஒட்டியும் வெட்டியும் பற்காட்டி இரந்தும் ஆல் மாற்றியும் தீநெறிகளாற்பெற்ற வெற்றியும் ஒரு வெற்றியா கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும் என்பர். இருக்கும் தகைமையோடிருந்தால் பதவியும் பெரும் புகழும் பொருளும் மதிப்பும் தாமே தேடி வரமாட்டாவா? பலரையும் இரந்து, மனசாட்சிக்கு விரோதமான உபாயங்களைக் கையாண்டு உயர்பதவி பெற்று மகிழ்ச்சி அடைதல், பல வீடுதோறும் இரந்தும் உணவை உண்டு யாசகன் பசி நீங்கி மகிழ்ச்சியோடு இருத்தலை யொக்கும். இப்படியான செயலுக்கு முந்தி உடன் பட்டவர்கள் பதவி பெற்றபின் நீதி செய்வார் என்றும் நன்மை செய்வார் என்றும் நம்பியிருப்பது கிள்ளை இலவுகாத்த போலாகும்.

பொருளை மாத்திரமன்று புகழ் புண்ணியம் அதிகாரம் என்னும் இவைகளையும் நீதிநெறியினாலேயே ஈட்டிக்கொள்ள வேண்டும் என்பதை தேசாபிமானிகள் இனியேனும் மனதில் கொள்வாராக.இக்கட்டுரைக்காக “இந்துசாதனம்” பத்திரிகையை www.noolaham.net இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொண்டோம் என்பதை நன்றியுடன் பதிவு செய்கிறோம்.

Share this post :Share1

https://www.namathumalayagam.com/2020/08/hinduorgan1928.html
About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply