இலங்கையில் கல்வெட்டியல் ஆய்வுகள் : 1875 – 1975 ஒரு நூற்றாண்டு வரலாறு

இலங்கையில் கல்வெட்டியல் ஆய்வுகள் : 1875 – 1975 ஒரு நூற்றாண்டு வரலாறு

பேராசிரியர் வி.சிவசாமி

பேராசிரியர் வி.சிவசாமி எழுதிய இக்கட்டுரை யூலை மாத தாய்வீடு பத்திரிகையில் வெளியானது. தமிழில் இதனை மொழியாக்கம் செய்தவர் க.சண்முகலிங்கம். நன்றியுடன் இங்கு வெளியிடுகிறோம்.

கல்வெட்டுக்களை நெறி – முறை சார்ந்த திட்டத்தின் படி முறைப்படி ஆராய்வு செய்வதைக் கல்வெட்டியல் ஆய்வு என்பர். கல்வெட்டுகளின் பெரும்பங்கு கற்களில் பொறிக்கப்பட்டவை. செப்பேடுகள் என்னும் உலோகப் பொறிப்புக்களான கல்வெட்டுக்களும் உள்ளன. மட்பாண்டங்களிலும் ஓடுகளிலும் கூடச் சில கல்வெட்டுப் பொறிப்புகள் உள்ளன. இலங்கையில் கி.மு 3ம் நூற்றாண்டில் எழுத்துக் கலை தோற்றம் பெற்றது. அக்காலத்தில் இருந்து கல்வெட்டுக்களை வெளியிடும் மரபும் தொடங்கியது. கி.மு. 3ம் நூற் றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக இலங்கையில் கல்வெட்டு கள் வெளிவந்தன. ஐரோப்பிய காலனிய ஆட்சியின் போது, குறிப்பாக போத்துக் கீசரும் டச்சுக்காரரும் ஆட்சி செய்தபோது கரையோர மாகாணங்களில் குறைந்தளவு கல்வெட்டுக்களே வெளியிடப்பட்டன.

சுதந்திர அரசாக 1815 வரையிருந்த கண்டி இராச்சியப் பகுதியில் இக்காலத்திலும் கல்வெட்டுக்கள் வெளியிடப்படும் வழக்கம் இருந்து வந்தது.

இலங்கையின் முற்காலக் கல்வெட்டுகள் பிராமி வரிவடிவில் பொறிக்கப்பட்டன. இக்கல்வெட்டுக்கள் பெரும்பான்மை தானம் அல்லது கொடை வழங்கும் செய்தியை வெளிப்படுத்துவன. இவை பிராமிக்கல் வெட்டுகள் என அழைக்கப்படுவன. இலங்கையில் கிடைத்த பிராமிக்கல்வெட்டுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 1500 ஆகும். இவை இலங்கையின் மொத்தக் கல்வெட்டுகளின் சரிபாதி எண்ணிக்கையுடையவை. இக்கல்வெட்டுகள் பிராகிரு தம் (முற்பட்ட சிங்களம் – Proto – Sinhala) மொழியில் எழுதப்பட்டவை. அப்பிராமிக் கல்வெட்டுகள் 3ம் நூற்றாண்டுப் பழமை யுடையவை. இவை ஓரிரு சொற்களை உடைய சிறிய கல்வெட்டுகளாக , ஒரு வரியில் மட்டும் அமைந்துள்ளன. காலப்போக்கில் இக்கல்வெட்டுகளின் அளவும், உள்ளடக்கமும் ஓரளவுக்கு விரிவுற்றன. கி.பி. 3ம் 4ம், 5ம் நூற்றாண்டுகளின் பிராமிக் கல்வெட்டுகள் பல வெளியிடப்பட்டன. ஆயின் 5ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 

பின்னர் 9ம் 10ம் நூற்றாண்டுகளில் பிராமிக் கல்வெட்டுகள் பல தோன்றலாயின. அக்காலம் கல்வெட்டுக்கள் பெரும்பான்மை கற்தூண்களிலும் கற்பல கைகளிலும் வெட்டப்பட்டனவாக இருந்தன. இவற்றுள் சில பிரசாஸ்திகள் என்ற வகையினலாகும். பிரசாஸ்திகள் என்ற வடிவம் இக்காலத்தில் சிங்கள மொழியில் வழக்கில் வந்திருந்தது. ‘கிராப்டி’ (கிறுக்கல்கள் – Graffiti) என்ற வகை பொறிப்புகள் தனித்துவமான ஒரு வகையின. இவ்வகைக் கல்வெட்டுகளும் இக்காலத் தில் சிகிரியா குன்றின் கண்ணாடி போன்ற சுவர்களில் எழுதப்பட்டன. சோழர்களின் ஆதிக்கம் இலங்கையில் பரவிய காலத்தில் (985 – 1070) தமிழ்க் கல்வெட்டுக்கள் பலவும் வெளியாயின. இக்கால இடை – வெளியின் பின் மீண்டும் சிங்கள மொழிக் கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெளிவந்தன. இவை முதலாம் விஜயபாகு காலம் முதல் கோட்டை இராச்சியத்தின் இறுதி வரையான காலத்திற்குரியனவாகும்.

கண்டிப்பகுதியில் 18ம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தமிழ்ச் சாசனங்களும் இக்காலத்தில் வெளியாகின. 12ம் நூற் றாண்டில் பிரசாஸ்திகள் என்ற வகைக் கல்வெட்டுகள் பெருவழக்காக இருந்தன. குறிப்பாக நிசங்க மல்லன் காலத்தில் பிரசாஸ்திகள் பல வெளியாயின. முதலாம் விஜயபாகு காலத்தில் செப்புப் பட்டயங்கள் பல வெளியிடப்பட்டன. விஜயபாகு காலத்தைய பனாக்கடுவ செப்பேடுகளும், நிசங்கமல்லனது அல்லைச் செப்பேடுகளும் இவற்றிற்கு உதாரணங்களாகும். கல்வெட்டுகளின் மொழி என்ற வகையில் கி.மு 3ம் நூற்றாண்டு தொடக்கம் முதலான முற்பட்ட சாசனங்களில் சிங்களம் பெரும் பான்மையான கல்வெட்டுகளின் மொழியாக உள்ளது. மிகப் பழைய இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுகள் கி.பி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

சோழர் காலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் பல பொறிக்கப்பட்டன. பொலன்நறுவகோட்டை காலங்களின் முக்கியமான அரசர்கள் சிலர் தமிழ்க் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். இன்றுவரை யாழ்ப்பாண அரசர்களினது என்று சொல்லக்கூடியதாக ஒரே ஒரு கல்வெட்டே கிடைத்துள்ளது.

அக்கல்வெட்டும் கூட யாழ்ப்பாணத்தில் இருந்து தூரத்தில் உள்ள கொட்டகம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. மகாயான பௌத்தத்தோடு தொடர்புடைய சில சமஸ்கிருதக் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. தமிழ், சீனம், பாரசீகம் ஆகிய முன்று மொழிகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று காலியில் கண்டெடுக்கப் பட்டது. இது தனித்துவம் மிக்கதோர் கல்வெட்டு என்பது குறிப்பிடப்பட வேண்டியது. போத்துக்கேயர்களும் டச்சுக்காறர்களும் கட்டிய கட்டடங்களில் பொறிக்கப்பட்டனவான கல்வெட்டுகள் சிலவும் உள் ளன. மேற்குறித்த வகைக் கல்வெட்டுகள் யாவும் இலங்கையின் அரசியல், சமூகம், சமயம், பண்பாடு , பொருளாதார நிலை போன்ற விடயங்கள் குறித்து விளக்குவனவாக உள்ளன. இந்திய வரலாற்றைப் பொறுத்த வரை பண்டைக் காலம், மத்திய காலம் ஆகிய இரு காலத்து வரலாறுகளையும் அறிந்து கொள்வதற்கு கல்வெட்டுகள் முதன்மையான ஆதாரங்களாக உள்ளன.

இலங்கையில் பாளி வரலாற்று நூல்கள் வரலாற்று மூலங்களாக இருப்பதால் கல்வெட்டுகள் இரண்டாம் நிலையான துணைச் சான்றுகளாகவே உள்ளன எனலாம். பாளி இலக்கியங்களில் இருந்து இலங்கையின் சமய நிறுவனங்கள் பற்றியும், பொருளாதார நிலை பற்றியும் பெற்ற தகவல்களை உறுதிப்படுத்தும் துணைச்சான்றுகளாக இலங்கைக் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. அத்தோடு இக்கல்வெட்டுகளை ஆராய்வதன் மூலம் இலங்கையின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளின் வளர்ச்சியையும், அம்மொழிகளின் வரிவடிவங்களின் வளர்ச்சிகளையும் அறிந்து கொள்ளவும் முடிகிறது. இது வரை கூறியவை அறிமுகமாக கொள்ளப்படத்தக்கவை. அடுத்து கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கல்வெட்டு ஆய்வில் அடையப்பெற்ற வளர்ச்சிகளை நோக்குவோம்.

19ம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதி வரை இலங்கையின் கல்வெட்டுகள் மூடுண்ட ஒரு புத்தகம் போன்றே இருந்தன. இதற்கு முந்திய காலத்தில் ஐரோப்பியர் சிலர் கல்வெட்டுகள் பற்றிக் கவனம் செலுத்தினார்கள் ஆயினும், அவர்கள் முறைப்படியான ஆய்வில் ஈடுபடவில்லை. உதாரணமாக பெர்ணா ஓடி குவெய்றோஸ் என்ற பாதிரியாரின் The Temporal and Spiritual Conquest of the Island of Ceylon என்ற நூலில் கல்வெட்டுகள் பற்றி உள்ள குறிப்பை எடுத்துக் காட்டலாம். குவெய்றோஸ் பிராமிக்கல் வெட்டுகள் பற்றிக்குறிப்பிடுகிறார். ஆனால் அவர் அவற்றைத் தவறாக கிரேக்க மொழிப் பதிவுகள் என்று கூறினார். எதிர்காலம் பற்றிய ஆருடம் என்று கூறத்தக்க திருகோணமலைத் தமிழ்க் கல்வெட்டுப் பற்றியும் குவெய்றோஸ் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கைதியாக வாழ்ந்தவரான றொபேர்ட் நொக்ஸ், அப்பகுதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் பற்றித்தம் நூலில் பட்டும் படாமலும் சொல்லிச் செல்வதையும் காணலாம்.

பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்வெட்டுக்கள் பற்றிய முறைப்படியான ஆய்வு தொடங்கியது. புராதனமான பொருட்களைக் கண்டுபிடித்தலும் பேணுதலும் தொடர்பாக பிரித்தானியாவிலும் இலங்கையிலும் அக்காலத்தில் ஏற்பட்டிருந்த ஆர்வத்தின் பின்னணியில் கல்வெட்டியல் கல்வி பற்றிய ஆர்வமும் வளர்ந்தது. புராதன பொருட்கள் பற்றிய ஆய்வு ஆர்வம் ‘அன்டிகுவாரியன் ரிசேர்ச்’ (Antiquarian Research) எனப்பட்டது. இது பிரித்தானியாவில் பேரார்வமாகப் பரவியிருந்தது. அங்கிருந்து இலங்கைக்கு ஆளுநராக வந்த வில்லியம் கிரகெரி இவ்விட யத்தில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார்.

அவர் கொழும்பு அருங்காட்சியகத்தை நிறுவினார். அருங்காட்சியகம் பற்றி சட்ட சபையில் உரையாற்றிய போது அவர் கல்வெட்டுக்கள் பற்றி “அருங்காட்சியகத்தில் கல்வெட்டுக்களின் புகைப்படங்கள், அச்சுப்பதிவுகள், கையால் படியெடுக்கப் பட்ட பிரதிகள் என்பனவற்றை வைக்க வேண்டும், நாடு முழுவதிலும் காணப்படும் கல்வெட்டுகளை மீள்பிரதி செய்து இங்கு கொண்டுவரவேண்டும் என்பது என் திட்டம்” என்று குறிப்பிட்டார். இக்கல்வெட்டுகளின் இயல்புகளிலும், மொழி வழக்கிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இவை மொழி நூல் வல்லாரின் ஆழ்ந்த பரிசீலனைக்கும் அக்கறைக்கும் உரியவை. இவை பற்றிய ஆய்வு பண்டைய வழமைகள், சமயப் பண்பாடுகள், இலங்கையின் பண்டைய வரலாறு ஆகியன தொடர்பான விடயங்களை தெளிவு – படுத்தும் என்று அவர் கூறினார். மேலே தரப்பட்ட அவரது கூற்று, கல்வெட்டியல் தொடர்பாக அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டினை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

ஆங்கிலக் கல்வி கற்ற இலங்கையினர் அக்காலத்தில் மிகச்சிறிய எண்ணிக்கையினராகவே இருந்த போதும் அவர்கள் சக்திமிக்க ஒரு குழுவாக விளங்கினர். அவர்களுள் சிலராவது இலங்கையின் புகழ்மிக்க கடந்த காலம் பற்றி மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாய் இருந்தனர். தொல்பொருட்கள் பற்றிய ஆர்வத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகளை அவர்கள் எழுதிப் பருவ இதழ்களில் பிரசுரித்தனர். சிலோன் அல்மனாக், ஆசிய வேத்தியல் கழகத்தின் இலங்கைக் கிளையின் பருவ இதழ் ஆகியவற்றில் பலரது கட்டுரைகள் அக்காலத்தில் பிரசுரமாயின. அப்பருவ இதழ்களில் ஆர்மர், றேணர், ஹார்டி, ஜோர்ஜ்லி, காசிச் செட்டி, டி அல்விஸ், புரோடி, நிஸ் டேவிட்ஸ் என் போரும் பிறரும் எழுதியவை ஆர்வத்தைத் தூண்டுவனவாய் இருந்தன. இதன் பயனாக காலம் சென்ற ஆளுநர் வில்லியம் கிரகரி , காலம் சென்ற கலாநிதி போல் கோல்ட்சிமித் அவர்களின் சேவையை கல்வெட்டியல் ஆய்வுக்கு பெற்றுக் கொள்வதென முடிவு செய்தார். அவ்வறிஞர் மூலம் வடமத்திய மாகாணம், மேற்கு மாகாணம் தெற்கு மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டம் ஆகிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளைத் திட்ட முறையாக ஆய்வு செய்வது (ஆளுநரின்) நோக்கமாக இருந்தது. போல் கோல்ட்சிமித், மொழி நூல் கீழைத்தேயவியல் கல்வி ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற யேர்மன் நாட்டு அறிஞராவர். அவரை பிரித்தானிய வேத்தியல் கழகம் சிபார்சு செய்திருந்தது.

கலாநிதி போல் கோல்ட்சிமித் அவர்களே கல்வெட்டியலாளர் என்ற உத்தியோகப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது நபர். அவர் யேர்மனி தேசத்தைச் சேர்ந்த இளம் அறிஞர். 1875ல் கடமையை அவர் பொறுப்பேற்ற போது அவருக்கு இருபத்தி நான்கு வயதே ஆகியிருந்தது. (இந்நிய மனம் இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன் நடைபெற்றது.) அவர் பதவி வகித்த இரு ஆண்டு காலத்தில் கல்வெட்டியல் தொடர்பாக முன்னோடியான பல பணிகளை செய்தார். கல்வெட்டுகளைச் சேகரித்தல், அவற்றை வாசித்து பொருள் கொள்ளுதல், விளக்கமளித்தல் என்பனவும் மொழியியல் விளக்கங்களுடன் அவற்றை பிரசுரம் செய்தலும் அவரது பணிகளாக இருந்தன. அவரது கல்வெட்டியல் ஆய்வுகள் ‘செசனல் பேப்பர்ஸ்’ (Sessional Papers) எனப்படும் பிரசுரங்களாக 1875, 1876 ஆண்டுகளில் வெளியாயின. சிங்கள கல்வெட்டுகள் பற்றிய அவரது குறிப்புகள் ஆசிய வேத்தியல் கழகத்தின் பருவ இதழ் 1879ல் வெளியாயின. இக்கட்டுரைகளின் ஆய்வுப் பெறுமதி கருதி இவை ‘இன்டியன் அண்டிகுவரி’ என்ற சஞ்சிகை யில் மீள் பிரசுரம் செய்யப்பட்டன. அவர் பணியில் இருந்த போது மலேரியா நோய் வாய்ப்பட்டு இறந்தார். இவ்வாறாக அவர் இலங்கையின் கல்வெட்டியலிற்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்தார். ஆளுநர் கிரகரி இலங்கை சாசன மஞ்சரி (Corpus Inscriptionum Zeilanicarum) ஒன்றை வெளியிடுவதற்கு எண்ணியிருந்த திட்டம் நிறைவேறாது போயிற்று.
கோல்ட்சிமித் அவர்களின் அகால மரணத்தின் பின்னர், அவரின் பணியைத் தொடர் வதற்காக கலாநிதி நு.முல்லர் என்ற இன்னொரு யேர்மன் அறிஞர் நியமிக்கப் பட்டார். அவர் தமக்கு முன்னர் பதவி யில் இருந்தவர் எழுதிய அறிக்கைகளை வைத்துக் கொண்டு மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டம் வட மேற்கு மாகாணம், என்ப னவற்றிலும் இன்னும் பல இடங்களிலும் கல்வெட்டுகளைத் தேடிப் பரிசோதித்தார். இலங்கைக் கல்வெட்டுகள் பற்றிய அவரது ஆய்வுகள் 1878, 1880, 1881 ஆகிய ஆண்டுகளின் ஆசியவேத்தியல் கழகத்தின் இலங்கைக் கிளையின் பருவ இதழிலும் இன்டியன் அன்டிருவரி, பண்டைய இலங்கைக் கல்வெட்டுகள் நூல் இரு தொகுதிகளிலும் பிரசுரமாயின. பண்டைய இலங்கைக் கல்வெட்டுகள் நூல் 172 கல்வெட்டுகளை உரோம வரிவடிவத்தில் தந்திருப்பதோடு, அவற்றின் மொழிபெயர்ப்பு அச்சுருக்கள் என்பனவற்றையும் கொண்டிருந்தது. முல்லர் 1879ல் தமது பதவியில் இருந்து விலகினார். முல்லரின் ஆய்வுகள் கோல்ட்சிமித் எழுதியவற்றை விட திட்டமுறையில் அமைந்தவை. அவரது பண்டைய கல்வெட்டுக்கள் நூல் பின்னாளில் இன்னும் சிறப்பான முறை யில் வெளியிடப்பட்ட ‘எபிகிறாபியா சிலனிக்கா ‘ (Epigraphia Zelanica) தொடர் நூல்களுக்கு முன்னோடியாக அமைந்தன.

இலங்கைக் கல்வெட்டுகளை புதியதொரு பதிப்பாக வெளியிடும் தேவை இருந்தது. 1890ல் தொல்லியல் திணைக்களத்தின் தலைவராக நியமனம் பெற்ற திரு எச்.சி.பி. பெல் புதிய பதிப்பின் தேவையை நன்கு உணர்ந்தார். அவர் தொல்லியல் ஆய்வுகளையும் தொடர்ந்து முறைப்படி நடத்தினார். அவர் நூற்றுக்கணக்கான பிராமிக் கல்வெட்டுகளைக் கண்டெடுத்துப் பிரசுரித்தார். அவற்றிற்கு வாசிப்பு செய்து விளக்கம் அளித்தல், மொழி பெயர்த்தல் என்பனவும் அவரால் செய்யப்பட்டன. ‘எபிகிறாபியா சிலனிக்காவின் முதலாவது பதிப்பாசிரியரான டொன் மார்ட்டினோ டிசில்வா விக்கிரமசிங்க, யொன் ஸ்ரில் ஆகியோர் பெல் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அவரது உதவியாளர்களாவர்.

அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த எபிகிறாபியா இண்டிகா (EPI Graphia Indica) என்ற பருவ இதழினைப் போன்று கல்வெட்டியல். தொடர்பான பருவ இதழ் இலங்கையில் வெளியிடப்பட வேண்டும் என்பதை திரு. எச்.சி.பி . பெல் அரசாங்கத்திற்கு தமது ஆலோசனையாக முன்வைத்தார். இந்த ஆலோசனை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது . லண்டன் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், சிங்களம், தமிழ் ஆகிய பாடங்களின் விரிவுரையாளராக இருந்த டொன் மார்டினஸ் சில்வா விக்கிரமசிங்கவை எபிகிறாபியா சிலனிக்கா என்ற பெயரில் இலங்கைக் கல்வெட்டுகளை பதிப்பித்து வெளியிடும் பணிக்கு அரசாங்கம் நியமனம் செய்தது. அப்பணியை லண்டனில் இருந்தவாறே அவர் செய்து கொடுத்தார். 1904ல் அதன் முதலாம் தொகுதி வெளியாயிற்று, 1929ல் அவர் பணி ஓய்வு பெறும் வரை அவர் தொடர்ந்து அதன் இரண்டாம், மூன்றாம் தொகுதிகளையும் வெளியிட்டார். இலங்கை சிவில் சேவை உத்தியோகத்தராக இருந்த திரு எச். டபிள்யு. கொட்றிங்டன் மூன்றாம் தொகுதியின் பதிப்பு வேலையில் விக்கிரமசிங்கவிற்கு ஒத்தாசையாக இருந்தார். கொட்றிங்டன் நான்காம் தொகுதியை வெளியிட்டார். கொட்றிங்டன் இலங்கையின் நாணயவியல் ஆய்வுகளிற்குப் புகழ்பெற்றவர். ஆயினும் இலங்கைக் கல்வெட்டியலுக்கும் அவரது பங்களிப்பு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

விக்கிரமசிங்கவிற்கு அடுத்து கல்வெட்டியலாளராக நியமனம் பெற்றவர் கலாநிதி. சேனரத் பரணவித்தான ஆவர். இவர் 1929ம் ஆண்டு கல்வெட்டியலாளராக நியமனம் பெற்றார். அதன் பின்னர் 1940 – 1956 காலத்தில் அவர் தொல்லியல் ஆணையாளர் பதவியில் கடமையாற்றினார். அவர் கல்விப் புலமையால் சிறந்தோங்கியவர். அவர் தொல்லியல் திணைக் களத்தில் இணைந்து கொண்ட பின்னர் கல்வெட்டியல் ஆய்வுத்துறையில் புதியயுகம் ஒன்று உதயமானது எனலாம். 1972ல் அவர் இறக்கும் வரை கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்தல், அவற்றைப் பதிப்பித்தல், விளக்கமளித்தல் ஆகிய பணிகளைச் செய்தார். பெருந்தொகையான கல்வெட்டுக்களை வெளிக்கொணர்ந் தார். தமது தாய் மொழியாம் சிங்களத் தோடு பாளி, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளிலும் அவர் அறிவு பெற்றிருந்தார். அவர் சில தமிழ், சமஸ்கிருதக் கல்வெட்டுக்களையும் கூடப் பதிப்பித்துள்ளார். திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி என்னும் கல்வெட்டியல் நிபுணரிடம் இந்தியா சென்று இவர் பயிற்சி பெற்றார். பொலன்நறுவவில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் விஜயபாகுவின் தமிழ் கல்வெட்டே இவரால் பதிப்பிக்கப்பட்ட முதலாவது கல்வெட்டாகும். இலங்கையின் கல்வெட்டியலுக்கு அவரின் பங்களிப்பாக எபிகிறாபியா சிலனிக்கா’ தொகுதி IV – V என்பனவற்றையும் சிகிரி கிராபிடி (Sigiri Graffiti) எனப்படும் சிகிரிய சுவரெழுத்துக்கள் பற்றிய இரண்டு தொகுதிகள், இலங்கைக் கல்வெட்டுகள் இரு தொகுதிகள் (கி.பி 4ம் நூற்றாண்டு வரை யானவை) ஆகியவற்றையும் குறிப்பிடலாம். கல்வெட்டுகளின் வரிகளுக்கு இடையில் வெளிப்படும் எழுத்துக்கள் (Interlinear Inscriptions) வகையான கல்வெட்டுக்க ளையும் படித்ததாக அவர் கூறினார். இவை பற்றியும் அவர் நிறைய எழுதியுள்ளார். ஆயினும் இவர் குறிப்பிடும் வரிகளுக்கு இடையிலான எழுத்துக்களின் உண்மைத்தன்மை குறித்து துறை சார் நிபுணர்களான வரலாற்று ஆசிரியர்களும், கல்வெட்டியலாளர்களும் ஐயம் தெரிவித்துள்ளார்கள். ஆகையால் இவ்விடயம் சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் உண்மையானவை என நிரூபிக்கப்படும் வரை கல்வெட்டுகள் பற்றிய சுருக்க வரலாறான இக்கட்டுரையில் அவர் குறிப்பிடுவன பற்றிச் சேர்த்துக் கொள்ளவியலாது.

வரிகளுக்கு இடையிலான எழுத்துக்கள் (Inter linear Inscriptions) பற்றிய இவர் கருத்துக்களைத் தவிர்த்து, இவரது கல்வெட்டியல் ஆய்வுகளை முழுமையாக தொகுத்து நோக்கும் போது இலங்கையின் கல்வெட்டியலாளர்களில் ஈடு இணை யற்றவராக இவர் விளங்குகிறார். கல்வெட்டியல் பற்றிய அவரது கட்டுரைகள் ஆசிய வேத்தியல் கழகத்தின் இலங்கைக் கிளையின் பருவ இதழிலும் இலங்கை விஞ்ஞான பருவ இதழ் பிரிவு G (Ceylon Journal of Science Sect- G) றிலும் வெளியாயின. பின்னர் யூனிவேர் சிட்டி ஒவ் சிலோன் ரிவியு (The University of Ceylon Review) இதழில் அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆராய்ச்சிப் பேராசிரியராக (1957 -1965) இருந்த காலத்திலும் வெளியாயின. 1947ம் ஆண்டு தொல்லியல் திணைக்களத்தின் பணியில் சேர்ந்து கொண்ட கலாநிதி சி.ஈ. கொடகும்புற சில ஆண்டுகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந் தார். பின்னர், மீண்டும் திரும்பி வந்து காலாநிதி பரணவித்தானவின் இடத்தில் தொல்லியல் ஆணையாளராகப் ஐம்பதுகளின் பிற்பகுதியில் கடமையேற்றார். கொடகும்புற அவர்களும் ஒரு கல்வெட்டியலாளர் ஆவர். அவர் தனக்கு முன்னிருந்த கலாநிதி பரணவித்தானவுடன் இணைந்து எபிகிறாபியா சிலனிக்கா’வின் தொகுதி ஐந்தைப் பதிப்பித்து வெளியிட்டார். அத்தோடு Inscriptions of Ceylon (இலங்கைக் கல்வெட்டுகள் ) நூல் பதிப்பிலும் அவருக்கு உதவினார்.

தொல்லியல் திணைக்களத்தின் உதவி ஆணையாளராக இருந்த கலாநிதி சதா மங்கல கருணாரத்தின லண்டன் பல்கலைக் கழகத்தில் தமது கலாநிதிப் பட்ட படிப்புக்காக இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார். ஒரு கல் வெட்டியலாளர் என்ற முறையில் அவர் தமக்கு முன்பு பணி செய்தவர்கள் கல்வெட்டியிலுக்கு செய்த பணியைத் தொடர்ந்தார்.

அரசாங்கத்தால் கல்வெட்டியலாளர்களாக நியமனம் பெற்றவர்கள் கல்வெட்டியலுக்குப் பணியாற்றியிருப்பதோடு வேறு, முழு நேரப் பணிகளில் இருந்தவாறே தமது விருப்புக்குரிய பணியாக கல்வெட்டியல் ஆய்வை மேற்கொண்ட சிலரையும் இவ்விடத்துக் குறிப்பிடுதல் வேண்டும். திரு. ஹென்றி பார்க்கர் (நீர்ப்பாசனப் பொறி யியலாளர்) என்பவரும், திரு. சி.டபிள்யு. நிக்கலஸ் (மதுவரித் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர்) என்பவரும் விசேடமாகக் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய கல்வெட்டியலாளர்கள் ஆவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் கற்கைக்குரிய ஒரு பாடமாக அறிமுகம் செய்யப்பட்டதும், கல்வெட்டியல் ஆய்வில் மாணவர்களில் ஒரு பகுதியினராவது கரிசனை கொள்ளும் நிலை ஏற்பட்டது. பண்டைய வரலாறு, சிங்களம், தமிழ் ஆகியவற்றில் சிறப்புக் கலைத்துறைப் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்களுக்கு இலங்கைக் கல்வெட்டியலும் தொல்லெழுத்தியலும் பற்றிய அடிப்படைகள் பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் இத்துறையில் பயிலும் மாணவர்கள் சிலரில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமது பட்டப் படிப்பை நிறைவு செய்த பின்னர் அவர்களில் சிலர் சிறந்த கல்வெட்டியலாளர்கள் ளாக (உருவாகிக் கொண்டிருந்தனர்) / ஆயினர்.

தொல்லெழுத்தியல் (Palaeography) பற்றிய அறிவு இல்லாமல் கல்வெட்டியல் ஆய்வை முறைப்படி மேற்கொள்ளுதல் இயலாது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிராமி எழுத்துக்கள் தொடக்கம் சிங்கள் எழுத்து வரிவடிவம் வளர்ச்சியடைந்த வரலாற்றைக் காட்டும் நெறிமுறைப்பட்ட தொல்லெழுத்தியல் அட்டவணை தயாரிக்கப்படுதலும் மாற்றங்களை விளக்குதலும் மாற்றங்களுக்கான காரணங்களை எடுத்துக் காட்டுதலும் அவசியமான பணியாகும். இப்பணியை தகைமை உடைய அறிஞர்களான கலாநிதி சேனரத் பரணவித்தான, சி.டபிள்யு. நிக்கலஸ், கலாநிதி தெ.விமலானந்த, கலாநிதி பி.ஈ. பெர் ணாண்டோ , கலாநிதி ஏ.எச். டானி ஆகியோர் ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளனர். இலங்கையில் தமிழ் எழுத்து வரி வடிவம் வளர்ச்சியுற்ற வரலாறு இனிமேல் தான் எழுதப்பட வேண்டியுள்ளது.
இலங்கையின் கல்வெட்டியல் வரலாறு பற்றிய இச்சிறு ஆய்வுரையில் தமிழ் கல்வெட்டுக்கள் பற்றிக் குறிப்பிடப்படாதுவிடின் அது நிறைவுடைய ஒன்றாக அமைய மாட்டாது, தமிழ்க் கல்வெட்டுக்கள் பற்றி 1950களின் பிற்பகுதி வரை உரிய கவனம் செலுத்தப்படவில்லை . ஏறக்குறைய 200 தமிழ்க் கல்வெட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆயினும் பெரும்பான்மையானவை இருபதாம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டன.

வண குவெஸ்றோஸ் திருகோணமலையில் உள்ள கல்வெட்டு ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதை முன்னரே குறிப்பிட்டோம். கலாநிதி முல்லரின் கல்வெட்டுகள் பற் றிய அட்டவணையில் சில தமிழ் கல்வெட்டுக்களும் இடம்பெற்றுள்ளன. முல்லர் அட்டவணை வெளியான காலத்திலே ஹியு நெவில் கிழக்கு மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட இரு கல்வெட்டுகளை பிரசுரித்தார். ‘தப்பிரபேனியன்’ என்ற இதழில் பிரசுரமான அக்கல்வெட்டுகளின் உரோமானிய வரிவடிவ எழுத்துப் பெயர்ப்பும், ஆங்கில மொழிபெயர்ப்பும் ஹியு நெவில் அவர்களால் தரப்பட்டிருந்தன. அவரது வாசிப்பும், பொருள் விளக்கமும் குறையுடையதேனும், அவரது முயற்சி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தொல்லியல் திணைக்கள ஆணையாளராக இருந்த திரு. எச்.சி.பி. பெல் தமிழ்க் கல்வெட்டுக்களை திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி என்னும் புகழ்பெற்ற தென்னிந்தியக் கல்வெட்டியலாளரின் உதவியுடன் பதிப்பித்தார். இலங்கையின் இருபத்தியாறு தமிழ்க் கல்வெட்டுகள் திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி பதிப்பித்த ‘தென்னிந் =தியக் கல்வெட்டுக்கள்’ (South Indian Inscriptions) தொகுதி நான்கில் (1924) இடம் பெற்றன. திரு. பெல் அவர்களே முதற் தடவையாக கொட்டகம் தமிழ்க் கல்வெட்டைப் பதிப்பித்தார். விக்கிரமசிங்க இன்னொரு தமிழ்க்கல்வெட்டைப் பதிப்பித்தார்.

கலாநிதி. எஸ். பரணவிதான சில தமிழ்க் கல்வெட்டுக்களைப் பதிப்பித்துள்ளார். இவர் பதிப்பித்தவற்றுள் புதுமுத்தாவையில் கண்டுபிடிக்கப்பட்டவையும் அடங்கும். காலியில் கண்டெடுக்கப்பட்ட மும்மொழிக் கற்பலகையின் தமிழ் எழுத்துக்களையும் வாசித்துப் பரணவித்தான பதிப்பித்தார்.

முதலியார் இராசநாயகமும் சுவாமி ஞானப்பிரகாசரும் தமிழ் கல்வெட்டுக்களிலும் மிகுந்த ஆர்வத்தைச் செலுத்தினார். சுவாமி ஞானப்பிரகாசர் கல்வெட்டுக்கள் எவற்றையும் பதிப்பிக்கவில்லை. ஆனால் அவர் நயினாதீவுக் கல்வெட்டை வாசிப்பதற்கு முயற்சி செய்ததோடு அதனைப் புகைப்படம் எடுத்துள்ளார். முதலியார் இராசநாயகமும் யாழ்ப்பாணக் கல்வெட்டுக்கள் மூன்றை வாசிக்கவும், அவற்றை விளக்கவும் பதிப்பிக்கவும் முயன்றார். இம்மூன்று கல்வெட்டுகளில் ஒன்று நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் கல்வெட்டாகும். இது பற்றி ஏலவே குறிப்பிட்டோம். ஏனைய இரண்டும் உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் ஆலயக் கல்வெட்டுக்களாகும். அண்மைக்காலம் வரை யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட சில கல்வெட்டுக்களில் முதலியார் இராசநாயகம் கண்டெடுத்த மேற்படி மூன்று கல்வெட்டுகளும் அடங்கும். இவற்றுள் முதலாவதான நயினாதீவுக் கல்வெட்டின் வாசகத்தையும் அதன் மொழிபெயர்ப்பையும் தமது பண்டைய யாழ்ப்பாணம் (‘Ancient Jaffna’) என்னும் ஆங்கில நூலில் தந்துள்ளார். கலாநிதி எஸ். பரணவித்தான வெளியிட்ட சில தமிழ்க் கல்வெட்டுக்களை வாசித்தல், அவற்றை பதிப்பித்தல் ஆகிய பணிகளிலும் முதலியார் இராசநாயகம் உதவிபுரிந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முன்னர் வெளிவந்து கொண்டிருந்த ஈழகேசரி பத்திரிகை, கல்வியங்காடு செப்பேடுகள் பற்றியும் நயினாதீவு தமிழ்க் கல்வெட்டுப் பற்றியும் 1930களில் சில கட்டுரைகளை வெளியிட் டது.
காலம் சென்ற கலாநிதி க. கணபதிப் பிள்ளை இலங்கைப் பல்கலைக் கழகத் தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். அவர் தனது கலாநிதிப் பட்டத்திற்காக இடைக்காலப் பாண்டியர் கல்வெட்டுக்கள் பற்றி ஆராய்ந்து ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். இது லண்டன் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவர் பொதுவாக கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்விலும், தொல்லெழுத்தியல் பற்றிய ஆய்விலும் ஆர்வம் செலத்தினார் எனினும், கல்வெட்டுக்களின் மொழி பற்றியே பிரதான கவனம் செலுத்தினார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ், பண்டைய வரலாறு என்பனவற்றில் சிறப்புக் கலைமாணி பட்டப்படிப்பை மேற் கொண்ட மாணவர்களுக்கு அவர் தமிழ்க் கல்வெட்டியல், தமிழ் தொல்லெழுத்தியல் ஆகிய பாடங்களில் விரிவுரை நிகழ்த்தினார்.

இக்காலத்தில் அவர் இலங்கையின் தமிழ்க் கல்வெட்டுக்கள் மூன்றைப் பதிப்பித்தார். அத்தோடு தமிழில் எழுத்துக்கலையின் வளர்ச்சி பற்றியும் தமிழ் இலக்கியங்களை வாய்மொழி நிலையில் இருந்து எழுத்து வடிவத்திற்கு மாற்றம் செய்யப்பட்டமை பற்றியும் கட்டுரையொன்றையும் எழுதினார். எழுதுவதற்குத் தமிழர்கள் பயன்படுத்திய சாதனங்கள் பற்றி இன்னொரு கட்டுரையும் அவர் எழுதினார்.

காலம் சென்ற பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கல்வெட்டுக்கள் பலவற்றைப் பதிப்பித்தவர் அல்லரேனும் தனது மாணவர்கள் மத்தியில் கல்வெட்டியல் பற்றிய ஆர்வத்தை அவர் தூண்டிவிட்டார். அவரது மாணவர்களில் இருவர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். ஒருவர் தமிழ்ப் பேராசிரியராகிய ஆ. வேலுப்பிள்ளை ஆவர். மற்றவர் பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்களாவர். வரலாற்றாய்வாளராகிய கா. இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலுக்கு அரிய சேவையை ஆற்றி வருகிறார். இவர்கள் இருவரும் மைசூரில் உள்ள மானச கங்கோத்திரி எனும் அசாங்க கல்வெட்டியல் அலுவலகத்தில் கல்வெட்டியல் துறையில் பயிற்சி பெற்றவர்கள், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை கல்வெட்டியல் ஆய்வுக்காக இரு கலாநிதிப் பட்டங்களைப் பெற்றவர். ஒருபட்டத்தை இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், இன்னொரு பட்டத்தை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் அவர் பெற்றார். அவர் ஏறக்குறைய ஐம்பது இலங்கைக் கல்வெட்டுக்களைப் பதிப்பித்துள்ளார். பருவ இதழ்களிலும் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்திலும் சிதறிக் கிடந்த கல்வெட்டுக்களை இவர் தொகுத்து இலங்கைத் ‘தமிழ்க் கல்வெட்டுக்கள்’ (Ceylon Tamil Inscriptions) என்ற பெயரில் இரு நூல்களாக அவர் வெளியிட்டார். முதலில் ‘எபிகிறாபியா சிலனிக்கா தொடர் வெளியிட்டுக்காக இவற்றை தயாரித்தார். ஆயினும் தமது சொந்தச் செலவிலேயே வெளியிட்டார்.

பின்னர் இவை எபிகிறாபியா சில –  (EPI Graphia Zeylanica) VIV தொகுதியில் சேர்க்கப்பட்டன. இவர் ‘சாச னமும் தமிழும்’ என்ற பெயரில் அரிய தொரு நூலை எழுதியுள்ளார். இதன் பின்னர் அவர் கல்வெட்டியல் பற்றிய பெறுமதி மிக்க இரு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ் கல்வெட்டுக்களில் கிளைமொழி வழக்குகள் (Study of Dialects in Inscriptional Tamil (கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்). என்னும் நூல் 1976ல் அவரால் வெளியிடப்பட்டது. மற்றொரு நூலான ‘தமிழியல் கல்விக்கான கல்வெட்டியல் சான்றுகள்’ (Epigraphical Evidence for Tamil Studies – சென்னை , 1981) பின்னர் வெளியாயிற்று.

பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்கள் தொல்லியலுக்கு செய்த அரிய பங்களிப்பும் முக்கியம் வாய்ந்ததாகும். ஏற்கனவே அறியப்பட்டடிருந்த தமிழ் கல்வெட்டுக்கள் பருவ இதழ்களிலும், தொல்லியல் திணைக்களத்திலும் சிதறிக் கிடந்தன. இவற்றை அவர் தொகுத்துப் பதிப்பித்தார். அத்தோடு நில்லாது கள ஆய்வில் ஈடுபட்டு பல கல்வெட்டுக்களை அவர் கண்டுபிடித்தார். அக்கல்வெட்டுக்களின் அச்சுப்படிமங்களைப் பெறுதல், வாசித்துப் பொருள் கொள்ளுதல், பதிப்பித்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபட்ட அவர் முதலில் சிந்தனை’ என்னும் இதழில் அவற்றை வெளியிட்டார். (சிந்தனை அவரால் வெளியிடப்பட்டு வந்த பருவ இதழாகும்). பின்னர் எபிகிறாபியா தமிழிக்கா’ (இதுவும் அவரால் பதிப்பித்து வெளியிடப்பட்ட பருவ இதழாகும்) என்னும் பருவ இதழில் தாம் கண்டெடுத்த கல்வெட்டுக்களை வெளியிட்டார். இந்திர பாலா அவர்கள் ஏறக்குறைய ஐம்பது வரையான தமிழ்க் கல்வெட்டுக்களைப் பதிப்பித்துள்ளார். அவர் சிங்களக் கல்வெட்டுக்களை வாசித்துப் பொருள் கொள்வதிலும் திறமை மிக்கவராவர்.

1972ம் ஆண்டில் அவர் வேறு இருவருடன் சேர்ந்து யாழ்ப்பாணம் தொல்லியல் கழகம் என்னும் அமைப்பினை நிறுவினார். அவ்வமைப்பின் அனுசரணையுடன் அவர் இலங்கையில் முதன் முதலாக 1972 முதல் 1976 வரை கல்வெட்டியல் பற்றிய தொடர் சொற்பொழிவுகளை நடத்தினார். கல்வெட்டியலில் ஆர்வம் காட்டியவர்களில் பேராசிரியர் எஸ். பத்மநாதன், கலாநிதி. எஸ். குணசிங்கம் ஆகியோரையும் குறிப்பிடுதல் வேண்டும். அவர்களிருவரும் தனித்தனியே யாழ்ப்பாணம் கல்வியங்காடு செப்பேடுகளை பதிப்பிப்பதில் பங்களிப்புச் செய்தனர். கலாநிதி. எஸ். குணசிங்கம் திருகோணமலை மாவட்டத்தின் கல்வெட்டுக்கள் சிலவற்றையும் வெளியிட்டார்.

பத்மநாதன், குணசிங்கம் ஆகிய இருவரும் வேறு சில கல்வெட்டுக்களை பதிப்பிப்பதிலும், மீள் பதிப்புச் செய்வதிலும் பங்களிப்புச் செய்துள்ளனர். இலங்கையின் எல்லாத் தமிழ்க் கல்வெட்டுக்களையும் ஒளிப்படங்களுடன் தனிநூலாக சிறப்புறப் பதிப்பித்து வெளியிடுதல் இன்னும் செய்து முடிக்கப்படாத பணியாகவே உள்ளது. அத்தகைய நூல் ஒன்றில் தமிழில் எழுத்து வரிவடிவம் வளர்ச்சியுற்ற வரலாறு பற்றியும் ஒரு குறிப்புச் சேர்க்கப்படுதலும் வேண்டும். தமிழ்க் கல்வெட்டுக்கள் தொகுத்துப் பதிப்பிக்கப்படுதலின் தேவை குறித்து திரு. டி.ரி. தேவேந்திர தமது ‘இலங்கைத் தொல்லியலின் வரலாறு (Story of Ceylon Archaeology. 1969) என்னும் நூலில் பக்: 18ல் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் தொல்லியல் திணைக்களம் நிறுவப்பட்டதன் ஒரு நூற்றாண்டு நிறைவினை ஒட்டி வெளியிடப்பட்டதொரு நூலாகும். தமிழ்க் கல்வெட்டுக்கள் தொகுதி வெளிவருவதன் தேவை குறித்து தேவேந்திர 1969ல் குறிப்பிட்டதன் பின் னர், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையும் பேராசிரியர் கா. இந்திரபாலாவும் மேற்குறிப்பிட்ட தொகுதிகளை வெளியிட்டனர். இவை தேவேந்திர சுட்டிக் காட்டிய பணியை ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளன.

கலாநிதி எஸ். பரணவித்தானவும் வேறுசி லரும் கல்வெட்டியல் வளர்ச்சிக்கு உதவியதைப் போன்று, சமஸ்கிருத மொழிக் கல்வெட்டுகளைப் படிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் கலாநிதி டி. பன்னசார, கலாநிதி. என். முதியான்சே ஆகிய இரு வர் குறிப்பிடக் கூடிய பங்களிப்பை நல் கினர்.
இன்று வரை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 3,000 ஆகும். ஒவ்வோர் ஆண் டும் இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இலங்கையின் வரண்ட வலயங்களின் காடுகள் பயிர்ச்செய்கைக்காக அழிக்கப்படும்போது, அப்பகுதிகளில் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படுகின்றன. இலங்கையின் பண்டைய நினைவுச் சின்னங்களை மீட்டெடுக்கும் வேலை கலாசார முக்கோணத் திட்டப்பகுதியில் பெரும் அளவில் மேற்கொள்ளப்படுவதால் அங்கும் பெருந் தொகையான கல்வெட்டுகள் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் யெதனவனராமயவிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட ஏழு பொற்தகடுகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கண்டுபிடிப்பாகும். இவை சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டவை. யெதவன விகாரய மகாஜன பௌத்தத்திற்குரிய விகாரையாகும். இப்பொற்தகடுகளில் பிரசித்தி பெற்ற பிரக்ஞா பாரமித்தி சூத்திரம் பொறிக்கப் பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இளம் தலைமுறையைச் சேர்ந்த அறிவாளர்கள் மத்தியில் நாட்டில் ஏற்பட்டு வரும் பண்பாட்டு மறுமலர்ச்சி காரணமாக கல்வெட்டியல் துறையில் ஆர்வம் மிகுந்து வருவதைக் காணமுடிகிறது. இதனை நல்லதோர் அறிகுறியாகக் கொள்ளலாம்.

உசாத்துணை: 

  • எபிகிறாபிக்கா செலனிக்கா (E.Z) 1 – VI 1904 – 1973 
  • தேவேந்திர . டி.ரி. தொல்லியல் கழகம் இலங்கை கொழும்பு 1969 • 
  • கொடகும்புற சி.ஈ. History of Archaeology in Ceylon. JARS இலங்கைக் கிளை தொகுதி XVIII, 1969 பக்: 1-38. 
  • எல்.எஸ். பெரரா. இலங்கையில் நிறுவன அமைப்புக்களின் வளர்ச்சி, பண்டைக்காலம் முதல் கி.பி. 1016 வரை, இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பு 1949 கலாநிதிப்பட்ட ஆய்வு (ஆங்கிலம்) 
  • ரே.எச்.சி History of Ceylon Vol – I,  Part – 1960 66 – 71
About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply