நாளை இந்த வேளை பார்த்து….
ப.தெய்வீகன்
சிறிலங்காவில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினை வலுப்படுத்தவேண்டிய தேவை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இவ்வளவு காலமும் தமிழர் தரப்பின் வலுவை நீர்த்துப்போகச்செய்வதற்கான பெருங்காரியங்களை சிங்களத்தரப்பு தொடர்ந்து செய்துவந்தது. ஆனால், இப்போது அந்த “சிறப்பான சம்பவத்தை” தமிழ் தரப்புக்குள்ளிலிருந்து பிரிந்துசென்ற குழப்பவாதிகளே ஒன்றுக்கு பல அணிகளாக நின்று மேற்கொள்ளத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
உலகில் எந்தவொரு அரசியல் கட்சியும் முழுமையாக மக்கள் தேவைகளை பூர்த்திசெய்துவிட்டு மார்தட்டிக்கொண்டுவந்து நின்றதாகச் சரித்திரமில்லை. மக்களது தேவைகள், அவர்களது உரிமைகள், எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களது இருப்பு என்பது காலத்துக்கு காலம் மாறிக்கொண்டிருப்பது. அவற்றை நிறைவேற்றுவதற்கும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு செயற்பட்டுக்கொண்டிருப்பதுதான் அரசியல்.
அந்தத்தொடர்ச்சிதான் அங்கு முக்கியமானது.விடுதலைப்புலிகள் என்ற வியாபித்த போராட்ட அமைப்பு திடீரென்று நீங்கிப்போன வெற்றிடத்தில் நின்றுகொண்டு, தொடர்ந்து போராடுவது என்பது முதலில் அந்தப்போராட்ட வலுவை இழந்துவிடாமல் பேணுவது. அதன்பின்னர்தான், மேற்கொண்டு நடைபோடுவது. அந்தவகையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பு கடந்த காலத்தில் கணிசமானளவு தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறது.
அதாவது, தன் முன்னாலிருந்த சவால்கள், தடைகள், குழிபறிப்புக்கள் போன்ற எத்தனையோ வகையான இருளிலிருந்து தனது அணியையும் மக்களையும் இயன்றளவு முன்னகர்த்தியிருக்கிறது. போர் முடிந்த இந்தப் பதினொரு ஆண்டுகளில், கஜேந்திரகுமார் தரப்பு குதியம் குத்தியதுபோல தேர்தல்களை புறக்கணித்து மக்கள் தலையில் மண் அள்ளிப்போட்டுவிடாமல் – சர்வதேச அரங்குகளில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வெளிநடப்புக்களை செய்து வாய்ப்புக்களை முற்றுமுழுதாக சிங்களத்தரப்பின் கைககளில் கொடுத்துவிடாமல் – மறுபுறத்தில் அபிவிருத்தி என்ற ஜிகினா நடனங்களுக்குள் மயங்கி மக்கள் இருப்பை தொலைத்துவிடாமல் – தென்னிலங்களை அரசியல் கரகாட்டங்களுக்குள் சிக்கி ஒற்றுமையை தொலைத்துவிடாமல் – முதுகில் குத்திவிட்டு பல உட்கட்சி பிரமுகர்கள் வேலி பாய்ந்தபோதும் தனது நம்பிக்கையில் உதிர்ந்துவிடாமல் -தமிழ் தேசியக்கூட்டமைப்பு எனப்படுவது மக்களுக்கான நிறுவனம் என்பதை கடந்த பதினொரு ஆண்டுகளில் உறுதிசெய்திருக்கிறது.
முப்பதாண்டு போரில் வென்ற பௌத்த மேலாதிக்க பீடமொன்றிடம் தனது மக்களின் மீதி இருப்பும் பலிபோய்விடாமல் இவ்வளவு காலமும் காத்திருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு. இந்த பத்து ஆண்டுகளில் தமிழரின் விதி வேறு எப்படியெல்லாமே தொலைந்திருக்கலாம். வடக்கும் கிழக்கும் நீர்கொழும்புபோல முற்றாக மாறி ஓரிரு எம்பிக்களுடன் சேடமிழுத்திருக்கலாம். அதிலிருந்து மீட்டுக்கொண்டது தமிழ் தேசியக்கூட்டமைப்பு.அதற்காக அதில் எந்த தவறுகளும் இல்லையென்றோ அதன் நடவடிக்கைகளில் எந்த கறலும் இல்லையென்றோ முற்றுமுழுதாக புனிதப்படுத்திவிடமுடியாது. பல கட்சிகள் இணைந்த கூட்டணிக்குரிய குழப்பங்கள், அதிலுள்ள தனிப்பட்டவர்களின் பலகீனங்கள், சமயோசித சறுக்கல்கள், இன்னமும் கூட்டணியின் முதுகுக்கு பின்னால் அலையும் கூட்டணிக்குள்ளிருக்கும் கஜேந்திரகுமார்கள் மற்றும் விக்னேஸ்வரன்களின் உள்ளடிகள், இவையெல்லாவற்றையும் சமாளிப்பதில் மெத்தனம் காண்பிக்கும் தலைமை என்று பலவற்றை பட்டியல் போடலாம். ஆனால், இவை அனைத்துடனும்தான் இந்த பதினொரு வருடங்களாக தனது பொறுப்பை இயன்றளவு நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது இந்தக்கூட்டமைப்பு.
விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பிலான நிலைப்பாட்டிருக்கு வெளிப்படையாக ஆதரித்து அறிக்கைவிடவேண்டும், அவர்களது திருவுருவ படங்களுக்கு தீபமேற்றி சத்தியம்செய்துதான் அவர்களுக்குரிய ஆதரவை அறிவிக்கவேண்டும், அவர்களது முன்னைய தவறுகளை அறவே பேசாமல் சிங்கள இராணுவத்தை சம்பந்தனும் சுமந்திரனும் வாகனத்தில் கட்டி வீதி வீதியாக இழுத்துக்கொண்டு ஓடித்திரியவேணும் போன்ற காமடிகளை, வெறும் காமடிகள் என்று மக்களுக்கு தெளிவூட்டியது
இந்த பதினொரு வருடத்தில் கூட்டமைப்பு செய்த மிகப்பெரிய விடயம்.உண்மையாகவே, விடுதலைப்புலிகளின் போராட்டம் எதைநோக்கியதாக விரிந்து சென்றதோ – அதனை தற்போதைய அரசியல் சூழலுக்குள் சாத்தியமாக்குவதற்காக தொடர்ந்தும் செயற்பட்டுக்கொண்டிருப்பது மாத்திமல்லாது அதற்குரிய மக்கள் ஆணையையும் பெற்றிருக்கிறது கூட்டமைப்பு.இன்னும் தெளிவாகச்சொல்லப்போனால், மக்களின் மனசாட்சியோடு மிகநெருக்கமான அரசியல் பயணத்தை முன்னெடுத்துக்கொண்டிருப்பது தமிழ் தேசியக்கூட்டமைப்பு.
ஒரு விளையாட்டுக்கழகத்திற்குரிய கூக்குரல்கள், ஆர்ப்பரிப்புக்கள், அபத்தமான வாய் சவடால்கள் ஆகியவற்றுடன், அரியாலை தாண்டும் முன்னரே ஐ.நா.வுக்கு அனுப்புங்கள் என்று கேட்பவர்களை பார்த்து வழக்கம்போல சிரித்துவிட்டு, நாளைய தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணையை வழங்குவது தமிழ் மக்களின் பயனுள்ள கடமையாக அமையும். கடைசியாக – தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு மாற்று வேண்டும் என்று கேட்பது மக்களின் கோரிக்கையாக இருக்கமுடியுமே தவிர, கட்சிகளின் கோரிக்கையாக இருக்கமுடியாது. அரசியல் என்பது மக்களுக்கானது. கட்சிகளுக்கானது அல்ல. அந்தவகையில், இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பே தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு மாற்று.
கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சுரேஷ் போன்றவர்கள் களையெடுக்கப்பட்ட கூட்டமைப்பு மக்களுக்குரிய மாற்றேதான். இனிவரும் காலங்களில் அது இன்னமும் பொலிவுபெறும். அதனையும் மக்கள் முடிவுசெய்யட்டும்.
18Muralitharan Nadarajah, Yogoo Arunakiri மற்றும் 16 பேர்2 கருத்துக்கள்9 பகிர்வுகள்விரும்புகருத்துத் தெரிவிபகிர்
Leave a Reply
You must be logged in to post a comment.