திருகோணமலையில் 80 விழுக்காடு தமிழ் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்தால் இரண்டு இடங்களைக் கைப்பற்றலாம்!
நக்கீரன்
திருமலை எமது தலைநகர் என்ற முழக்கம் அறுபது, எழுபது விண்ணதிரக் கேட்டது. அது இப்போது கேள்விக்குறியாகி வருகிறது.
திருமலையில் 1881 ஆம் ஆண்டு எடுத்த குடிமக்கள் தொகுப்பில் தமிழர்களது விழுக்காடு 65 ஆக இருந்தது. அது தற்போது (2012) சரிபாதியாகக் குறைந்து 32.44 விழுக்காடாக ஆகிவிட்டது. 1827 இல் தமிழர்களது விழுக்காடு 81.76 விழுக்காடாக இருந்தது. முஸ்லிம்கள் 1881 இல் 5,746 (25.89 விழுக்காடு) இருந்தார்கள். சிங்களவர் 925 (4.21விழுக்காடு) மட்டும் இருந்தார்கள்.
தமிழர் குடித்தொகை வீழ்ச்சி அடைந்ததற்குக் காரணம் புலப்பெயர்வும் இடப்பெயர்வும். தமிழ்நாட்டில் 115 ஏதிலி முகாம்களில் 105,043 தமிழர்கள் வாழ்கிறார்கள். முகாம்களில் 73,241 பேரும் வெளியில் 31,802 பேரும் வாழ்கிறார்கள். இவர்களில் 20,000 பேரளவில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. இவர்களில் 800 குடும்பங்கள் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் திருகோணமலையில் மீள்குடியேறியுள்ளார்கள். அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் எஞ்சியவர்கள் இலங்கை திரும்புவதில் தடை தாமதம் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையில் இருந்து தெரிவு செய்யப்படும் நா.உறுப்பினர் தொகை 4 மட்டுமே. சென்ற தடவை இரண்டு முஸ்லிம்கள், ஒரு தமிழர், ஒரு சிங்களவர் வெற்றி பெற்றார்கள்.
இம்முறை தமிழர்கள் ஒன்றை இரண்டாகக் கூட்ட வேண்டும் என்றால் தமிழ்வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் ததேகூ வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால் இம்முறை 5 தமிழ்க் கட்சிகள் திருகோணமலையில் போட்டியிடுகின்றன. அவையாவன –
1) ததேகூ
2) தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (விக்னேஸ்வரன்)
3) தமிழ்க் காங்கிரஸ் (கஜேந்திரகுமார்)
4) இபிடிபி
5) அகில இலங்கை தமிழர்
மேலும் இரண்டு தமிழ்ச் சுயேட்சைக் குழுக்களும் களத்தில் நிற்கின்றன.
இந்தக் கட்சிகளில் எதுவும் தேர்தலில் வெல்லப் போவதில்லை. நிச்சயமாக இந்தக் கட்சிகள் கட்டுக்காசை இழக்கும். ஆனால் இந்தக் கட்சிகளுக்கு விழுகிற வாக்குகள் தமிழர்களது பிரதிநித்துவத்தை நிச்சயம் குறைவடையச் செய்யும்.
2000 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழரும் வெற்றியடையவில்லை. குரங்கிடம் அப்பத்தைக் கொடுத்து பிரித்துத் தருமாறு கேட்ட பூனைகள் போல வாக்குகள் பிரிந்ததால் பிரதிநித்துவம் முதல் முறை கை நழுவிப் போனது. தமிழ்ப் பெரும்பான்மை கொண்ட ஏனைய மாவட்டங்களிலும் தமிழ் பிரதிநித்துவம் குறைந்து போனது.
அந்தத் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.
திருகோணமலை தேர்தல் மாவட்டம் 2000 தேர்தல் முடிவுகள்
அட்டவணை 1
கட்சி | தொகுதிகள | அஞ்சல் வாக்குகள் | மொத்த வாக்குகள் | % | இருக்கை | ||
---|---|---|---|---|---|---|---|
மூதூர் | சேருவெல | திருகோண மலை | |||||
மக்கள் முன்னணி (SLFP, SLMC et al.) ஐக்கிய தேசியக் கட்சி (DWC, NWC, UCPF, UNP) தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இபிடிபி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மக்கள் விடுதலை முன்னணி சுயேட்சை குழு 2 சுயேட்சைக் குழு 3 சுயேட்சைக் குழு 6 ரெலோ | 21,393 | 18,517 | 11,928 | 1,964 | 53,860 | 40.46% | 3 |
17,688 | 14,489 | 12,861 | 1,638 | 46,700 | 35.08% | 1 | |
1,615 | 944 | 11,070 | 459 | 14,090 | 10.58% | 0 | |
746 | 316 | 3,382 | 80 | 4,524 | 3.40% | 0 | |
192 | 105 | 3,269 | 182 | 3,748 | 2.82% | 0 | |
156 | 2,056 | 901 | 180 | 3,301 | 2.48% | 0 | |
156 | 37 | 2,268 | 160 | 2,621 | 1.97% | 0 | |
609 | 119 | 674 | 32 | 1,434 | 1.08% | 0 | |
236 | 90 | 526 | 20 | 872 | 0.65% | 0 | |
36 | 36 | 420 | 6 | 498 | 0.37% | 0 |
இத்தேர்தலில் தமிழர் தரப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – ஈ.பி.டிபி ஆகிய கட்சிகளும், பெ.சூரியமூர்த்தி மற்றும் அ. பாக்கியதுரை தலைமையிலான சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சந்திரிகா தலைமையிலான பொது ஜன ஐக்கிய முன்னணி உட்பட 17 அரசியல் கட்சிகளும் ஆறு சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 23 அணிகளில் இருந்து 161 பேர் போட்டியிட்டிருந்தனர்.
இந்த முறையும் தமிழ்மக்கள் சிந்தித்து வாக்களிக்காவிட்டால் 2000 இல் இடம்பெற்ற பின்னடைவு 2020 ஆண்டுத் தேர்தலிலும் ஏற்படலாம்.
2015 இல் நடந்த தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி 1,144 வாக்குகளைப் பெற்றது. அதற்கு முன் 2010 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 1,181 வாக்குகள் பெற்றது. இரண்டு முறையும் அந்தக் கட்சி கட்டுக்காசை இழந்தது.
இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் போட்டியிடுகின்றனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இரா.சம்பந்தன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் சுசந்த புஞ்சிநிலமே, ஐக்கிய மக்கள் சக்தியில் அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக் ஆகிய முன்னாள் எம்.பிகள் போட்டியிடுகின்றனர்.
அதேவேளை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நால்வர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் திருமதி ஆரியவதி கலப்பதி, பிரியந்த பத்திரண, நிமல் காமினி ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியில் மருத்துவர் அருண சிறிசேன ஆகிய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நால்வர், தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
திருகோணமலையில் 2016 ஆண்டு அந்த மாவட்டத்தின் புள்ளிவிபர அலுவலகம் எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அங்கு 440,718 பேர் வாழ்கிறார்கள். அதில் முஸ்லிம்கள் 189,205 (42.93 விழுக்காடு) பேரும், தமிழர்கள் 134,357 (30.49 விழுக்காடு) பேரும், சிங்களவர் 115,732 (26.26 விழுக்காடு) பேரும் இருக்கிறார்கள்.
ஓகஸ்ட் 5 இல் நடை பெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 2019 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 288,868 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மூதூர் தேர்தல் தொகுதியிலிருந்து 110,891 வாக்காளர்களும் திருகோணமலை தேர்தல் தொகுதியிலிருந்து 97,065 வாக்காளர்களும், சேருவில தேர்தல்தொகுதியிருந்து 80,912 வாக்காளர்களும் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.
மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் தோராயமாக 124,415 முஸ்லிம் வாக்காளர்கள், 88,336 தமிழ்வாக்காளர்கள், 76,117 முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது சேருவில தேர்தல் தொகுதியில் 75,375 பேரும், திருகோணமலை தேர்தல் தொகுதியில் தொகுதியிலிருந்து 89,547 பேரும், மூதூர் தேர்தல் தொகுதியிலிருந்து 99,446 பேரும் என மொத்தமாக 243,168 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் இம்முறை மாவட்டத்தின் வாக்காளர் தொகை 24,500 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலே கூறியவாறு பதினொரு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பதின்மூன்று உள்ளூராட்சி சபைகளையும் கொண்ட திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.
ஒரு காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்மக்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்ந்தார்கள். ஆனால் திட்டமிட்ட அரச சிங்களக் குடியேற்றம் காரணமாக தமிழர்களின் எண்ணிக்கை கழுதை தேயந்து கட்டெறும்பான கதையாக இருக்கிறது. அந்த உண்மையை கீழ்க்கண்ட அட்டவணை 2 காட்டுகிறது.
அட்டவணை 2
ஆண்டு | முஸ்லிம் | தமிழ் | சிங்களவர் | மற்றவர்கள் | மொத்தம்
எண் |
||||
---|---|---|---|---|---|---|---|---|---|
எண் | % | எண் | % | எண் | % | எண் | % | ||
1827 | 3,245 | 16.94% | 15,663 | 81.76% | 250 | 1.30% | 0 | 0.00% | 19,158 |
1881 Census | 5,746 | 25.89% | 14,304 | 64.44% | 935 | 4.21% | 1,212 | 5.46% | 22,197 |
1891 Census | 6,426 | 24.96% | 17,117 | 66.49% | 1,105 | 4.29% | 1,097 | 4.26% | 25,745 |
1901 Census | 8,258 | 29.04% | 17,060 | 59.98% | 1,203 | 4.23% | 1,920 | 6.75% | 28,441 |
1911 Census | 9,700 | 32.60% | 17,233 | 57.92% | 1,138 | 3.82% | 1,684 | 5.66% | 29,755 |
1921 Census | 12,846 | 37.66% | 18,580 | 54.47% | 1,501 | 4.40% | 1,185 | 3.47% | 34,112 |
1946 Census | 23,219 | 30.58% | 33,795 | 44.51% | 11,606 | 15.29% | 7,306 | 9.62% | 75,926 |
1953 Census | 28,616 | 34.10% | 37,517 | 44.71% | 15,296 | 18.23% | 2,488 | 2.96% | 83,917 |
1963 Census | 40,775 | 29.43% | 54,452 | 39.30% | 39,925 | 28.82% | 3,401 | 2.45% | 138,553 |
1971 Census | 59,924 | 31.83% | 71,749 | 38.11% | 54,744 | 29.08% | 1,828 | 0.97% | 188,245 |
1981 Census | 75,039 | 29.32% | 93,132 | 36.39% | 85,503 | 33.41% | 2,274 | 0.89% | 255,948 |
2001 Census[c] | n/a | n/a | n/a | n/a | n/a | n/a | n/a | n/a | n/a |
2007 Enumeration | 151,692 | 45.37% | 96,142 | 28.75% | 84,766 | 25.35% | 1,763 | 0.53% | 334,363 |
2012 Census | 152,854 | 40.42% | 122,080 | 32.29% | 101,991 | 26.97% | 1,257 | 0.33% | 378,182 |
1827 இல் 81.76 விழுக்காடாக இருந்த தமிழர் குடித்தொகை 2012 இல் 32.29 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்து விட்டது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், புலப்பெயர்வு மற்றும் இடப்பெயர்வு காரணங்களாகும்.
1981 க்கும் 2012 க்கும் இடைப்பட்ட காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் குடித்தொகை 11.08 விழுக்காடு அதிகரித்துள்ளது. தமிழ்மக்களுடைய குடித்தொகை 5.79 விழுக்காட்டால் குறைந்துள்ளது.
இம்முறை ததேகூ இன் சார்பில் சம்பந்தன் ஐயா முதன்மை வேட்பாளாராக போட்டியிடுகிறார். அடுத்து சண்முகம் குகதாசன் அவர்களின் பெயர் இருக்கிறது. இவர் கனடாவில் இருந்து தாயகம் திரும்பியவர். தேர்தலில் போட்டியிட வசதியாக தனது கனடிய குடியுரிமையை கைவிட்டுள்ளார்.
தாயகம் திரும்பிய பின்னர் திருகோணமலையில் தமிழ் 50 தமிழ் அரசுக் கட்சிக் கிளைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைமையகம் சீராக இயங்குகிறது.
மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட 800 மில்லியன் (80 கோடி) ரூபா நிதி ஒதுக்கீட்டில் வீடுகள் கட்டுதல், குளங்கள் தூர்வாருதல், சாலைகள் புனரமைத்தல் போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ் மக்களுக்கு இப்பொழுது இருக்கின்ற ஒரே பலம் ததேகூ இன் அரசியல் தலைமை ஒன்றுதான். அந்த அரசியல் தலைமையையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி அழிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள் வெற்றிபெறுவது குதிரைக் கொம்பு என்று தெரிந்தும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தமிழரின் அரசியல் தலைமையை அழித்து விட்டோம் என்ற மகிந்தவி இராசபக்சவின் வெற்றிக்களிப்பில் பங்குகொள்வதுதான் அவர்களது நோக்கம் ஆகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.