திருகோணமலை மாவட்ட கடந்த காலப் பொதுத் தேர்தல் முடிவுகள்

திருகோணமலை மாவட்ட கடந்த காலப் பொதுத் தேர்தல் முடிவுகள்

மு.சௌந்தரராஜன்.

June 29, 2020

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்களால் அறிமுகஞ் செய்யப்பட்ட புதிய அரசியல் அமைப்பின் பிரகாரம் முதலாவது விகிதாசாரத் தேர்தல்1989 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 1,52,289 வாக்காளர்களில் 1,06,456 பேர் வாக்களித்திருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 69.50 வீதம் ஆகும்.இத் தேர்தலில் தமிழர் தரப்பில் தமிழர் விடுதலை கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி – ஈ.என்.டி.எல்.எப் ஆகிய நான்கு கட்சிகளும் கூட்டாக தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. இந்த அணி இரா. சம்பந்தன் தலைமையில் களமிறங்கியது. ஈரோஸ் சுயேட்சைக் குழுவாக வெளிச்சவீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது.சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, சிறி லங்கா சுதந்திரக் கட்சி உட்பட 5 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சைக் குழு ஆகியவற்றில் இருந்து மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவற்றில் ஈரோஸ் சுயேட்சைக் குழு 25,229 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களையும், சிறி லங்கா சுதந்திர கட்சி 22,968 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், ஐக்கிய தேசிய கட்சி 22,450 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றிக் கொண்டன.17,884 வாக்குகள் பெற்ற சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், 17,755 வாக்குகள் பெற்ற தமிழர் விடுதலை கூட்டணி ஆகியவை எந்த ஆசனத்தையும் பெறவில்லை.ஈரோஸ் சார்பாக சிவப்பிரகாசம் ரட்ணராஜா 784 விருப்பு வாக்குகளும், கோணமலை மாதவராசா 574 விருப்பு வாக்குகளும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகினர். (இந்தத் தேர்தலில் விருப்பு வாக்குகள் அளிப்பதைத் தவிர்த்து வெளிச்சவீட்டுச் சின்னத்திற்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று ஈரோஸ் பரப்புரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.)ஐ.தே.க. சார்பில் எம்.ஈ.எச். மஹ்ரூப் 10,000 விருப்பு வாக்குகளும், சுதந்திரக் கட்சி சார்பில் சோமதாஸ குணவர்தன 11,260 விருப்பு வாக்குகளும் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தியப் படையினரின் முழுமையான ஆதரவோடு இரா சம்பந்தன் தலைமையில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சம்பந்தனும் படுதோல்வி அடைந்திருந்தார். முதன்முதலாகப் பொது தேர்தலில் போட்டியிட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூதூர் தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற போதிலும் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைக் கூட வெல்லவில்லை,1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 1,84,090 வாக்காளர்களில் 1,26,624 பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்காளர்களில் 68.78 வீதம் ஆகும்.

இத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் தனியாகவும், ரெலோ, ஈரோஸ், தமிழீழ விடுதலைக் கழகம் – புளொட் ஆகியவை கூட்டாக ரெலோ கட்சியின் வெளிச்சவீட்டுச் சின்னத்திலும், ஈ.பி.ஆர்.எல்.எப். தனியாக மல்லிகைச் சின்னத்திலும் போட்டியிட்டன.இவை தவிர, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை உட்பட ஏழு அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவுமாக மொத்தம் 56 பேர் போட்டியிட்டனர்.இவற்றில் ஐக்கிய தேசிய கட்சி 34,986 வாக்குகள் பெற்று இரண்டு ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 28,380 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும், சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 26,903 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றன.

23,886 வாக்குகள் பெற்ற சிறி லங்கா சுதந்திரக் கட்சி, 3,709 வாக்குகள் பெற்ற ரெலோ மற்றும் 881 வாக்குகள் பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகள் ஆசனம் எதனையும் பெறவில்லை.ஐ.தே.க. சார்பில் 17,043 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.ஈ.எச். மஹ்ரூப், 15,084 விருப்பு வாக்குகள் பெற்ற சுனில் சாந்த ரணவீர ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 22,409 விருப்பு வாக்குகள் பெற்ற ஏ. தங்கத்துரை தெரிவு செய்யப்பட்டார். சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏ.எம்.எம். நஜீப் 21,590 விருப்பு வாக்குகள் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார்.

இத் தேர்தலிலும் இரா சம்பந்தன் தோல்வி அடைந்திருந்தார். அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் சிறி லங்கா சுதந்திர கட்சியுடன் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்ட தேர்தல் உடன்படிக்கையில் படி சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் முஸ்லிம் வேட்பாளார் எவரும் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனை இருந்தது. அதனால் சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான ஏ.எம்.எம். நஜீப், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிட நேரிட்டது. இதனால் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு ஆசனம் கிடைத்திருந்தது.மு.சௌந்தரராஜன்.

திருகோணமலை மாவட்ட கடந்த காலப் பொதுத் தேர்தல் முடிவுகள்.
சென்ற வாரதத்தொடர்

July 08, 2020

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 2,06,884 வாக்காளர்களில் 1,41,772 பேர் வாக்களித்திருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 68.25 வீதம் ஆகும்.
இத்தேர்தலில் தமிழர் தரப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – ஈ.பி.டிபி ஆகிய கட்சிகளும், பெ.சூரியமூர்த்தி மற்றும் அ. பாக்கியதுரை தலைமையிலான சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சந்திரிகா தலைமையிலான பொது ஜன ஐக்கிய முன்னணி உட்பட 17 அரசியல் கட்சிகளும் ஆறு சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 23 அணிகளில் இருந்து 161 பேர் போட்டியிட்டிருந்தனர்.

இவற்றில் பொதுஜன ஐக்கிய முன்னணி 53,860 வாக்குகள் பெற்று மூன்று ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 46,700 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டன.

தமிழர் விடுதலைக் கூட்டணி 14,090 வாக்குகளையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – ஈ.பி.டிபி 4,524 வாக்குகளையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 3,748 வாக்குகளையும், தமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ 498 வாக்குகளையும், பெ. சூரியமூர்த்தி தலைமையிலான சுயேட்சைக் குழு 2,621 வாக்குகளையும், அ. பாக்கியதுரை தலைமையிலான சுயேட்சைக் குழு 1,434 வாக்குகளையும் பெற்றன.

பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பாக ஏ.எம்.எம். நஜீப் 18,173 விருப்பு வாக்குகளையும், எம் எஸ். பைத்துல்லா 15,588 விருப்பு வாக்குகளையும், சோமதாஸ குணவர்தன 15,392 விருப்பு வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக எம்.ஏ.எம் மஹ்ரூப் 21,438 விருப்பு வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழர்களின் வாக்குகள் பிரிந்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமற் போய் இருந்தது. தமிழர் விடுதலை கூட்டணி இன்னும் 348 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றிருந்தால் ஒரு ஆசனம் கிடைத்திருக்கும்.

மூதூரில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் எம் எஸ். பைத்துல்லா கொல்லப் பட்டதையடுத்து அவரது இடத்திற்கு அவரின் சகோதரர் எம்.எஸ். தௌபிக் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 212.280 வாக்காளர்களில் 1,69.576 பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்காளர்களில் 78.86 வீதம் ஆகும்.

இத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. ஆகியவை தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில். தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திலும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி. தனியாக வீணை சின்னத்திலும் போட்டியிட்டன.

இவை தவிர, ஐக்கிய தேசிய கட்சி, பொது ஜன ஐக்கிய முன்னணி சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி , ஆகியவை உட்பட பதினைந்து அரசியல் கட்சிகளும், ஆறு சுயேட்சைக் குழுவுமாக மொத்தம் 147 பேர் போட்டியிட்டனர்.

இவற்றில் ஐக்கிய தேசிய கட்சி 62.930 வாக்குகள் பெற்று இரண்டு ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 56,121 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும், பொது ஜன ஐக்கிய முன்னணி 32.997 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டனர் 1.470 வாக்குகள் பெற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, 6.095 வாக்குகள் பெற்ற மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் ஆசனம் எதனையும் பெறவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி, சார்பில் 40.110 விருப்பு வாக்குகள் பெற்ற இரா.சம்மந்தன், ஐ.தே.க. சார்பில் 25.264 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.ஏ.எம் மஹ்ரூப், 24.847 விருப்பு வாக்குகள் பெற்ற கே.எம் தெளபிக் பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பில் 14.938 விருப்பு வாக்குகள் பெற்ற சோமதாஸ் குணவர்தன ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தேர்தலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முழுமையான ஆதரவும் பங்களிப்பும் இரா.சம்மந்தன்னுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பெரும் ஆதர தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சேர்ந்த திரு ஸ்ரீகாந்தவுக்கும் இருந்தது.
தொடரும்

.https://ravanamurasu.com/2020/06/29/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply