சிங்களத்தின் அகமுரண் தேடி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும்

சிங்களத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும்
தம்பியன் தமிழீழம்

April 29, 2017 

தமிழர்கள் தம்முள் அகமுரண் களைந்து சிங்களத்தின் அகமுரண் தேடிஅவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும்.

தமிழர்கள் வீரம் குன்றித் தோற்கவில்லைசூழ்ச்சி தெரியாமலேயே தோற்கடிக்கப்பட்டார்கள்…….

சாதி, மத, சமூக, பிரதேச, வர்க்க வேறுபாடின்றித் தமிழர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே தமிழர்களின் நிலங்களை வல்வளைப்புச் செய்து, தமிழ் மொழியினைச் சிதைத்து, தமிழர் தாயகத்தைச் சிங்களமயப்படுத்தி, தமிழர்கள் என்ற அடையாளத்தையே இலங்கைத்தீவில் அழித்தொழித்து, இலங்கைத்தீவினை முழுமையாகச் சிங்கள பௌத்த நாடாக்கும் திட்டத்துடன் 1958, 1977, 1983 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பாரிய இனப்படுகொலைகளைத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துத் தனது பௌத்த சிங்கள பேரினவாத நரபலி வெறியினால் சிங்கள அரசு கோரத்தாண்டவம் ஆடியது. இப்படிப் பல மாந்த குல விரோதச் செயல்களைத் தமிழருக்கெதிராக தொடர்ச்சியாகச் சிங்கள பௌத்த பேரினவாதிகள் மேற்கொண்டமைக்கு எதிராகத் தமிழர்கள் அறவழியில் அமைதியாக மேற்கொண்ட போராட்டங்கள் அரச வன்முறையின் அதியுச்சப் பயங்கரவாத நடவடிக்கைகளினால் ஒடுக்கப்பட்டதன் விளைவாக, இனிமேலும் இலங்கைத்தீவில் தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒன்றுபட்டு வாழ முடியாது என்ற மெய்நிலையை உணர்ந்த தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமையானது, தமிழரின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்கலும், இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாதது என 1976- வைகாசி– 14 ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தீர்மானம் இயற்றி தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தது. இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமது செயலாக்க உறுதிமொழியாக வரிந்த தமிழ் இளைஞர்களின் மறவழி விடுதலை இயக்கங்கள் தமது வீரமரபின் வழிவந்த உச்சக்கட்டத் தியாகத்தாலும் போராடும் வல்லமையாலும் சிங்கள பௌத்த பேரிவாதத்தின் இராணுவ இயந்திரத்தை அடித்துத் தகர்க்கலானார்கள். இப்படித் தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்துடனான வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தினைப் பார்த்துச் சிங்கள மற்றும் இந்திய பயங்கரவாத அரசுகள் கிலிகொண்டன.

இந்திய மேலாதிக்கக் கனவின் உச்சத்தில் நின்று தேசிய இன விடுதலையை அடியொட்ட வெறுக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் உளவு அமைப்பானது நரித்தனமாக நயவஞ்சக வலையை விரித்துத் தமிழரின் புரட்சிகர விடுதலை இயக்கங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தித் தமிழர்களின் விடுதலை ஆற்றலைப் பலவீனப்படுத்தியது. இந்தியாவின் உளவு அமைப்பின் நரித்தனங்களின் நரபலி வேட்டையிலிருந்து தம்மைக் காக்கத் தவறிய விடுதலை அமைப்புகள் இந்தியாவின் நயவஞ்சக வலையில் வீழ்ந்து அதன் கூலிப்படையாகி ஈற்றில் தமிழின விரோத நடவடிக்கைகளில் இறங்கியமை தமிழரின் வாழ்வியல் வலியைப் பன்மடங்கு துயர் நிறைந்ததாக்கியது. இப்படியாக தமிழினத்தையும் தமிழ் மண்ணையும் காக்கத் தம்மை ஆகுதியாக்கக் களம் ஆடிய தியாகவுணர்வுள்ள விடுதலைப் போராளிகளை, இன விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடவைத்துத் தமிழர்களின் விடுதலை ஆற்றலைக் குன்றச் செய்தது இந்திய அரச பயங்கரவாதத்தின் உளவு அமைப்பு. தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தில் நின்று அது வரை போராடி வந்த தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினைக் குழுக்களாகப் பிளவுபடுத்திப் பலவீனமாக்கியதைத் தொடர்ந்தும், விடுதலைப் புலிகள் இயக்கமானது இந்தியப் பயங்கரவாத அரசினது உளவமைப்பின் நரபலிச் சூழ்ச்சிப் பொறியினுள் சிக்காது, இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்காக தமிழர் பகடைக்காயாக்கப்படுகின்றனர் என்ற தெளிவின் அடிப்படையில் நின்று இந்தியாவை எதிர்கொண்டு, இந்தியாவின் கூலிகளாயும் மக்கள் விரோதிகளாயும் விதியின் வழியில் சோரம் போன அமைப்புகளை தடை செய்து களத்தை விட்டு அகற்றியது. பின்னர் மக்களோடு மக்களாக நின்று போராடிச் சொல்லில் வடிக்க முடியாத தியாகங்களைச் செய்து படைவலுச் சமநிலையில் சிங்கள அரச படைகளை மேவியும் நடைமுறைத் தமிழீழ அரசை நிறுவியும் தமிழர்களின் விடுதலை ஆற்றலை உலகிற்குப் பறைசாற்றியது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.

உலக நாடுகளின் பாரிய ஒத்துழைப்புடன் சிங்கள அரசின் இராணுவ இயந்திரத்தை எவ்வளவு வலுவாக்கியும், ஆயுத பலத்தை எவ்வளவுக்கு அதிகரித்தும், எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு பன்னாட்டளவில் விடுதலைப் புலிகளுக்கு முட்டுக்கட்டைகளைப் போட்டும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க முடியாமல் அது தனிநாட்டுக்கான அத்தனை தகுதிகளையும் பெற்றுவிட்டதைப் பார்த்துத் திணறிய சிங்கள, இந்திய மற்றும் மேற்குலகின் உளவு அமைப்புகள் தமிழரைப் பிரித்தாளுவதற்கான சூழ்ச்சிகளைத் திட்டமிட்டனர். இதில் இந்திய மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறைகளின் ஆலோசனைகள் பெருமளவில் சிங்கள அரச பயங்கரவாதத்திற்குப் பயனுள்ளதாக அமைந்தது. தாம் அடிமைப்படுத்திய சமூகங்களை எப்படிப் பிரித்து ஆண்டு வந்தனர் எனவும் வருகின்றனர் எனவும் ஏகாதிபத்திய மற்றும் தேசிய இனங்களின் சிறைக் கூடமான இந்திய அரச பயங்கரவாதிகளால் கற்பிக்கப்பட்ட நுட்பமான பிரித்தாளும் சூழ்ச்சிகளை சிங்கள உளவுத்துறையினர் கற்று, அதற்கேற்றாற் போல சூழ்ச்சித் திட்டங்களைத் தீட்ட, அதனை மேற்பார்வை பார்த்து ஆலோசனை வழங்கிச் செயலூக்கியாக முன்னின்று வேலை செய்தது இந்திய அரச பயங்கரவாதத்தின் உளவுத்துறை.

போரில் வென்றெடுக்க முடியாத தமிழினத்தை அதனுள் இயல்பாகக் காணப்படும் முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்து பிரித்தாளுவதன் மூலம் அடக்கி ஆளலாம்  என சிங்கள, இந்திய, பன்னாட்டுக் கூட்டுச் சதி முடிவெடுத்தது. தமிழ் சமூகத்தை அதனுள் இயல்பாகக் காணப்படுகின்ற சகல வகையான முரண்பாடுகளையும் எவ்வாறு பயன்படுத்தி எமது தேசிய ஒருமைப்பாட்டை அழித்துவிடலாம் என்பதில் பெருநாட்டங்கொண்டு அதனைத் தமது முதன்மைப் பணியாகச் சிங்கள அரச பயங்கரவாதத்தின் புலனாய்வு அமைப்புகள் செயலாற்றி வந்தன. தமிழர்களின் அனைத்து விதமான அகமுரண்கள் குறித்த விடயங்கள் சிங்களப் புலனாய்வுத்துறைக்கான பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டது. இது குறித்து ஆழமான சூழ்ச்சித் திட்டங்கள் வகுப்பது குறித்து இந்திய உளவுத்துறை ஒரு படி மேலாகச் சென்று தனது வளங்களைக் கொட்டித் தானே நேரில் நின்று பணியாற்றியது.

இறக்குமதி செய்யப்பட்ட வடுகப் பிராமணியத்தின் கீழ்த்தரமான கருத்தூட்டங்கள் ஆகம வடிவில் தமிழரது தொன்று தொட்ட வழிபாட்டு முறைகளில் புகுந்ததன் விளைவாகத் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட சாதிய, பிரதேச ஒடுக்குமுறைகளானது, தமிழர்களின் ஆயுதப் போராட்டப் புரட்சிகர இயக்கங்களின் முற்போக்குச் செயற்பாடுகளினால் ஓரளவுக்கு முடக்கப்பட்டது. தமிழீழ மக்கள் மத்தியில் ஆழ வேரூன்றி இருந்த சாதி ஆதிக்க வெறி, தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் பேசு பொருள் ஆக்கப்படாது உறங்கு நிலையில் தேய்மானம் இன்றி உருத்தெரியாமல் அடைத்து வைக்கப்பட்டது. எனினும் நீண்ட நெடுங்காலமாகப் பேணிப் பாதுகாத்த சாதிய, பிரதேச உளவியல் வெளித் தெரியாமல் ஆனால் வேறு வடிவங்களில் வெளிப்பட, அதனை எம்மைப் பிரித்தாளுவதன் மூலம் நசுக்கிவிடுவதற்கான வாய்ப்பாக அரச பயங்கரவாதிகள் பயன்படுத்தினர்.

இன்று விடுதலைக்கான தலைமையை இழந்து விட்ட சூழலில், கட்டளை இடவும், வழி நடத்தவும், மாற்றங்களை உண்டு பண்ணவும் தக்க ஆளின்றித் தமிழினம் ஒரு தேக்க நிலைக்கு வந்து விட்டதால், தமிழினத்தில் ஏற்படும் மாற்றங்களெல்லாம் வெளியாரால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்தியத் தூதரகத்தால் தீர்மானிக்கப்படுகின்றது. இப்போது கேட்க ஆளில்லாத சூழலில் வெளிக்கிழம்பி இருக்கும் சாதிய வெறியை தனது இந்துத்துவ நச்சாயுதத்தாலும் இன்னும் பல குரங்குச் சேட்டைகளாலும் இந்திய அரசு பீறிட்டுத் தாண்டவம் ஆடத் தூண்டுகிறது. எம்முள் வெளிக்கிளம்பியிருக்கும் இந்த சாதி, பிரதேச வெறியை அழித்தொழித்துத் தமிழனம் என்ற ஒற்றை அடையாளத்துடன் ஒருமித்த சிந்தனையில் பயணிப்பதற்காகத் தொடர்ச்சியாகக் கருத்தூட்டல் வேலைகளையும் அரசியல் வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதனை நாம் செய்யத் தவறுமிடத்து, இதனை இந்தியத் தூதரகம் நன்கு கணக்கில் எடுத்து, தனது தலித்தியம் என்ற அடுத்த கருத்துருவாக்க அடியாள் மூலம் தமிழீழத்தில் சில திசைகோணச் செய்யும் கருத்துக்களைப் பரப்பி அதில் வெற்றியும் காணும். ஈற்றில் தேசிய இனச் சிக்கல் மறந்து, சிங்கள பேரினவாதமும் கண்ணுக்குத் தெரியாமல், தேசிய இன விடுதலையே உயர் சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கும் உரியது போல ஒரு போலித் தோற்றப்பாட்டை ஏற்படுத்தும்.

ஆகவே, சாதிய, பிரதேச வன்மம் தலை தூக்காமல், அதனை விஞ்ஞான ரீதியில் புரிந்து, எமக்காக இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி அதனை அடியொட்ட அழிக்க தமிழீழ மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். இதற்கு உள்ளூர் ஊடகங்கள் மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.

அத்துடன், தமிழனத்தினை வெற்றிகொள்ள முடியாத அரச பயங்கரவாதங்கள், எப்படி இயல்பாய் தமிழ்ச் சமூகத்தில் இருந்த அகமுரண்களைப் பற்றி நுட்பமாக அறிந்து அதனைக் கூர்மைப்படுத்தி அதன் மூலம் ஏற்பட்ட பின்னடைவைச் சாதகமாக்கி, சாதி, மத, சமூக, பிரதேச, வர்க்க வேறுபாடின்றித் தமிழர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காக அழித்தொழித்ததிலிருந்து நாம் 2 பாடங்களைக் கற்றேயாக வேண்டும்.

  • தமிழர்களிடத்தில் இருக்கின்ற சாதிய, பிரதேச உளவியலை அகற்றித் தமிழன் என்ற ஒற்றை அடையாளத்தில் எல்லாவிதமான அகமுரண்களையும் களைந்து எவராலும் பிரிக்கமுடியாத தமிழ் மக்கள் சக்தியாக மட்டுமே ஒன்று திரளுவதற்கான அரசியல் வேலைத் திட்டங்களை சகல மட்டங்களிலும் முனைப்புறுத்த வேண்டும்.
  • சிங்களவர்களிடத்தில் இயல்பாகக் காணப்படும் முரண்பாடுகளை நன்கு கற்றறிந்து, அதனை நுட்பமாக அணுகி, அவற்றினைக் கூர்மைப்படுத்தக் கூடிய உத்திகளைக் கண்டறிந்து அவற்றை முடுக்கி விடுவதன் மூலம் சாதி, மத, சமூக, பிரதேச, வர்க்க வேறுபாடுகளைத் தன்னியல்பிலேயே கொண்டுள்ள சிங்களச் சமூகத்தைக் கூறிட்டு அதனைப் பலவீனமடையச் செய்வதன் மூலம் சிங்கள அரச பயங்கரவாதத்தின் ஆளும் வர்க்க நலன்களுக்குப் புதிய தலையிடியைக் கொடுக்க வேண்டும்.

சிங்கள சமூகத்தில் இயல்பாகக் காணப்படும் முரண்பாடுகள் பற்றியும் கொடுஞ் சாதிய வெறி பற்றியும் நாம் இப்பத்தியின் இந்த வரியிலிருந்து விரிவாக ஆய்வோம்.

சாதிக்கணக்கெடுப்போ அல்லது சாதிரீதியான இடவொதுக்கீடோ அல்லது சாதிரீதியான வெளிப்படையான விவாதங்களோ இல்லை எனிலும் சிறிலங்காவில் சாதி இன்னும் உருக்குலையாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. திருமண விளம்பரங்கள் தவிர்ந்த வேறெந்தப் பகுதியிலும் செய்தித்தாள்களில் சாதி குறிப்பிடப்படுவதில்லை என்றாலும் யாருடன் மண உறவு வைத்திருப்பது, யாருக்கு வாக்களிப்பது, எந்தப் பௌத்த விகாரைக்குப் போவது வாடிக்கையாகவிருக்கின்றது என்பதைச் சிங்களச் சமூகத்தின் மத்தியில் சாதி தான் தீர்மானிக்கின்றது. சிறிலங்காவின் சிங்கள பௌத்த சமயத்தில் காணப்படும் சாதித் தட்டு வரிசைமுறை மற்றும் நிலவிவரும் சாதிய ஒதுக்கல்கள் குறித்து ஆய்ந்து பார்க்கையில் மாந்த குலமே வெட்கப்படும் படியான பல விடயங்கள் அதில் தென்படுகின்றன.

கி.மு 5 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் தோன்றிய பௌத்த மதத்தின் பௌத்த சங்கத்தில் அங்கத்துவம் வகித்த பௌத்த மதகுருமாரில் 80% ஆனோர் பிராமணர், சத்திரியர், வைசிகர் போன்ற வர்ணாசிரமம் என்ற மாந்தகுல விரோதக் கருத்தியலின் அடிப்படையிலான சாதிப்பிரிவினைச் சேர்ந்தவராவர். அதிலும் 40% ஆனோர் பிராமணரேயாவர் என்பதைத் திரிபீடகம் தெளிவாகச் சொல்கின்றது. தேரவாத அல்லது கினாயான மரபில் வந்த புத்ததர்மவம்ச என்ற பாளி நூலானது, கௌதம புத்தர் சத்திரியர் சாதியில் பிறந்ததாகவும் இதன் பின்னர் பிறக்கும் புத்தர்கள் பிராமணராகத் தான் பிறப்பார்கள் என்றும் கௌதம புத்தருக்கு முந்திய புத்தர்களான ககுசந்த, கொனாகம்மன மற்றும் கஸ்ஸப்ப ஆகிய மூவரும் பிராமண சாதிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுத் தனது ஆரிய சாதி வெறியினைத் துலாம்பரமாக எடுத்துச் சொல்கின்றது.

3 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரிய லலிதவிஸ்தர என்கின்ற வேத நூலானது, புத்தர் பிராமண அல்லது சத்திரிய குலத்திலிருந்து மட்டுமே உருவாக முடியும் எனவும்  வேறு எந்தத் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்தும் உருவாக முடியாது என்று குறிப்பிட்டதிலிருந்து, பௌத்த மதத்திற்கு முற்போக்குச் சாயம் பூசி அதனுள் காணப்படும் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றிய விடயங்களைக் கட்புலனாகாமல் செய்துவிடலாம் என இனியும் முயல்வது வெற்றியளிக்காது என எமக்கு உணரக் கூடியதாகவுள்ளது.

சிங்கள பௌத்தத்தின் வரலாற்று ஆவண நூல்களான பூஜாவலிய, சதர்மரத்னவலிய, கடயிம்பொத் மற்றும் நிதி நிகண்டுவ போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சிங்கள பௌத்தர்களிடையே காணப்படும் சாதிப் படிநிலைகள்  இன்றும் உருக்குலையாமல் சிங்களவர்களால் பேணிப் பாதுகாக்கப்படுகின்றது.

கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் பெரிதும் பேசப்பட்ட துட்டகெமுனு என்ற சிங்கள மன்னனின் மகனான சலிய என்பவன் அசோகமாலா என்ற தாழ்ந்த சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததால் அவர்களுடைய சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டான் என சிங்களவர்களின் வரலாற்றில் கூறப்படுகின்றது.

கி.பி 11 ஆம் நூற்றாண்டில் விஜயபாகு என்ற சிங்கள மன்னனானவன், சிறிபாத மலையிலுள்ள புத்தரின் பாதம் எனச் சிங்கள பௌத்தர்களால் நம்பப்படும் பாதத்தினைச்  சிங்களவர்களில் தாழ்ந்த சாதியினர் தொட்டு வணங்கக் கூடாது எனக் கடுமையான உத்தரவினைப் பிறப்பித்திருந்தான் எனச் சிங்கள வரலாறு கூறுகின்றது.

சியாம் நிக்காய என்ற பௌத்த சங்கத்தில் உறுப்பினராவதற்கான உரிமை கொவிகம என்ற சிங்கள ஆதிக்க சாதியினரைத் தவிர்ந்த ஏனையோருக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே கரவா, சலகம, துரவா போன்ற சிங்களச் சமூகத்தினர் கத்தோலிக்க மதத்தைத் தழுவலானார்கள்.

1983 காலப் பகுதியில் வெளியான சிங்கள மொழி அகராதியில் சிங்களவர்களில் உள்ள சாதிப் பிரிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டும், அதில் கொவிமக சாதியினரை மட்டும் உயர்ந்த சாதியினர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிங்களவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து அந்தச் சொற்பதத்தினை அகராதியில் இருந்து நீக்கினார்கள்.

சிங்கள மக்கள் தொகையில் 50% ஆனோர் கொவிகம என்ற உயர்சாதி என்று சொல்லப்படுகின்ற வேளான்குடிகளாவர். இவர்களே நிலவுடமையாளர்களாக இருந்தனர். ரணசிங்க பிரேமதாச தவிர்ந்த அனைத்து சிறிலங்காவின் சனாதிபதி, பிரதமர் ஆகியோர் கொவிகம சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அதில் பெரும்பாலானோர் (மகிந்த ராசபக்ச கரவா சமூகத்தைச் சேர்ந்தவர் என வதந்தி பரவியது. ஆனால் அவரும் கொவிகம சாதியைச் சேர்ந்தவரே) அங்கிலிக்கன் கிறிஸ்தவர்களாகவிருந்து சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்காக பௌத்த மதத்திற்கு மாற்றலானவர்களாவர்.

குணதிலக, ஜெயவர்த்தன, பண்டாரநாயக்க, சேனநாயக்க, கொத்தல்லாவல, டி-சரம், டி-லிவரஸ், டி-திசரஸ், விஜெயவர்த்தன போன்ற குடும்பப் பெயர்களையுடையவர்கள் கொவிகம என்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிறிலங்காவின் கீழ்ப்பகுதிச் சிங்களவர்களாவர்.

சிங்களக் குடித்தொகையில் 10% ஆகவுள்ள கரவா என்கின்ற சமூகமானது கொவிகம என்ற ஆதிக்க சாதிக்கு அடுத்த நிலையில் கடலோர மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தியது.

1971, 1987 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜே.வி.பி கிளர்ச்சிகளில் கரவா சமூகமானது கொவிகம என்ற ஆதிக்க சமூகத்தின் அரசியல் ஆதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியது. ஜே.வி.பி யினர் அரசியல் நாகரிகம் கருதி நுணுக்கமாக சுரண்டப்படுவோர், ஏழை பாளைகள் போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் அடிப்படையில் அந்த இயக்கத்தில் உறுப்பினர்களாகவிருந்த 99% ஆனோர் கொவிகம என்ற ஆதிக்க சாதியைச் சேராத தாழ்த்தப்பட்ட சமூகங்களாகவே இருந்தனர்.

சிறிலங்காவின் கீழ்ப்பகுதியைச் சேர்ந்த கொவிகம என்ற ஆதிக்க சமூகத்தினர் பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் அப்போது ஆட்சியதிகாரத்திலிருந்த அங்கிலிக்கன் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றலாக, கரவா சமூகத்தில் அரைவாசிப் பேர் ரோமன் கத்தோலிக்கத்தினைத் தழுவலானார்கள். சிறிலங்காவின் மேற்குக் கடலோரப் பகுதிகளான புத்தளம், சிலாபம், வென்னப்புவ, நீர்கொழும்பு, யாஎல, வத்தளை, மொரட்டுவ மற்றும் பாணந்துறை போன்ற பகுதிகளிலிருந்த கரவா சமூகத்தினரே இவ்வாறு கத்தோலிக்கரானார்கள்.

கொவிகம, கரவா போன்ற சமூகங்களுக்கு அடுத்த படியாக, சலகம என்ற ஒரு சாதிச் சமூகம் சிங்களவரிடத்தில் உண்டு. பிரதம மந்திரியாகத் தகுதியாயிருந்த சி.பி. சில்வா என்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதுபெருந்தலைவர் சலிகம என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் புறக்கணிக்கப்பட்டதால், 1960 ஆம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகினார். நிமால் சிறிபால டி சில்வாவும் இந்த சலகம சமூகத்தைச் சேர்ந்தவரே.

துரவ என்ற இன்னுமொரு சாதிச் சமூகம் சிங்களவர்கள் மத்தியில் இருக்கின்றது. தென்னையில் இருந்து கள் இறக்குவதற்காகக் கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சமூகம் என இவர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் சூழ்ச்சியும் தந்திரமும் உள்ள நம்பிக்கைத்தன்மை அற்றவர்கள் என்ற பொதுவான பேச்சு சிங்களவர்கள் மத்தியில் எப்போதும் உண்டு. மங்கள சமரவீர இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவரே.

வகும்புர, பாடு, பெரவா, றொடியா போன்றோர் இன்றும் தீண்டத்தகாதவர்களாக மிகவும் ஒடுக்குண்ட தாழ்ந்த சிங்களச் சமூகங்களாகவே வாழ்ந்து வருகின்றனர். விமல் வீரவன்ச பெரவா என்ற சமூகத்தைச் சேர்ந்தவராவர். இந்தச் சமூகம் கேரளாவின் மலபாரிலிருந்து செண்டு மேளம் இசைக்க அழைத்து வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஜே.வி.பி கிளர்ச்சியின் போது அந்த இயக்கத்தில் கரவா சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் இந்த மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே அதிகளவில் பங்கேற்றனர்.

1930- 1950 வரையான காலப்பகுதியில் இடதுசாரி இயக்கங்களின் முற்போக்குக் கருத்தியல்கள் அதிகம் கோலோச்சியதால் சிங்களவர்களின் மத்தியில் நிலவிய கொடுஞ் சாதிய ஒடுக்குமுறைகள் ஓரளவு முடக்கப்பட்டாலும், சிங்கள பௌத்தம் இதனை இன்னமும் கட்டிக்காத்து வருகின்றது.

திருமணத்தின் போதும், தேர்தலில் கட்சி வேட்பாளர் தெரிவாகும் போதும் நிக்காயாக்களில் பதவிகள் தெரிவாகும் போதும் சாதி இன்னும் சிங்களவர்கள் மத்தியில் கொடூரமாக வேரூன்றி நிற்கின்றது.

பலப்பிட்டிய, பூசா, றத்கம போன்ற இடங்களுக்கான தேர்தல் வேட்பாளர்களாக சலகம என்ற தாழ்ந்த சாதிச் சமூகத்திலுள்ளவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஏனெனில், இந்தப் பகுதியில் சலகம என்ற தாழ்ந்த சாதிச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக எல்லாப் பெருங் கட்சிகளும் தமது தேர்தல் உத்தியாகச் சிங்களவர்களிடத்தில் காணப்படுகின்ற சாதி உளவியலைப் பயன்படுத்துகின்றது. இதே போல கரவ சமூகத்தைச் சேர்ந்தவர்களே கடலோர மாவட்டங்களில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அதிக ஆதிக்கமுடைய சியாம் நிக்காய என்ற பௌத்த சங்கத்தில் கொவிகம என்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்தோர் மட்டுமே உள்வாங்கப்படுகின்றனர். அமரபுர நிக்காயவிலேயே ஏனைய சாதிப் பிரிவினர் உள்வாங்கப்படுகின்றனர். அதிலும் கரவா, சலகம, துருவ மற்றும் ஏனைய சாதிகள் மற்றும் அவற்றின் உட்சாதிப் பிரிவுகள் என்பனவற்றின் அடிப்படையில் 21 பிரிவுகள் அமரபுர நிக்காயாவில் உண்டு.

1911 இல் நடைபெற்ற படித்த இலங்கையருக்கான தேர்தலில் சேர். பொனம்பலம் இராமநாதனை எதிர்த்து சேர். மார்க்கஸ் பர்னாண்டோ என்ற கரவா சமூகத்தைச் சேர்ந்த சிங்களவர் போட்டியிட்டார். இதில் கொவிமக என்ற சிங்கள ஆதிக்க சமூகத்தினர் கரவா சமூகத்தைச் சேர்ந்தவரை வெற்றியடையச் செய்யக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத் தமிழராகிய அதுவும் ஒரு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சேர். பொன். இராமநாதனுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர். இதிலிருந்து சிங்களவர்களுக்கு இன நலனிலும் சாதி நலனே முதன்மையானதாக இருந்திருக்கின்றது என்று தெரிந்துகொள்வதுடன் அவர்களிடையே காணப்படும் அகமுரண்களைக் கணித்து அவற்றைக் கூர்மையடையச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் பற்றிச் சிந்திக்கவேயில்லை என்பதும் புலனாகின்றது. அத்துடன்,

“பெந்தோட்டை எயா அஸ் அருண நத்தி பூஸ் பெட்டிக்வத் கேண்ட எப்பா”

பெந்தோட்டை பாலத்திற்கு அப்பாலிருந்து ஒரு கண் கூடத் திறக்காத பூனைக் குட்டியைக் கூட எடுத்துக்கொண்டு வரக்கூடாது எனச் சிங்களத்தில் ஒரு பழமொழி உண்டு. எனில் கீழ்நாட்டுச் சிங்களவரை எவ்வளவு கேவலமாக மேல் நாட்டுச் சிங்களவர்கள் பார்க்கின்றார்கள் என்பது விளங்கும். மேல்நாட்டுச் சிங்களவரின் கீழ் நாட்டுச் சிங்களவர்கள் மீதான தீண்டாமைக் கொடுமையும் புரியும்.

தமிழ்நாடு விஜயநகரப் பேரரசாகிய தெலுங்கு வடுகர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட காலத்தில் அங்கிருந்து வந்து கண்டியைக் கைப்பற்றிப் புத்தரின் தந்தத்தையும் தமது கட்டுப்பாட்டிலெடுத்து சிறிலங்காவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய தெலுங்கு வடுகர்களே ஆங்கிலேய காலனித்துவத ஆட்சியின் போது அங்கிலிக்கன் கிறிஸ்தவத்தைத் தழுவி ஆங்கிலேயரின் அடிவருடிகளாகவிருந்து தமிழின விரோதச் செயற்பாடுகளைச் செய்து வந்தனர். சேனநாயக்கா, பண்டாரநாயக்கா போன்ற பல குடும்பப் பெயர்களை உடைய இன்றைய சிங்களவர்கள் தெலுங்கு வடுக வம்சாவளியினரே. இவர்களே சிறிலங்காவின் ஆட்சியதிகாரத்தை ஆங்கிலேயருக்கு நெருக்கமாகவிருந்து பெற்றுக்கொண்டனர். டி.எஸ் சேனநாயக்கா, எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தன, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் ஆங்கிலேயரிடம் இருந்து சலுகைகளைப் பெறுவதற்காக அங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய தெலுங்கு வடுகர் வம்சாவளியினரே. பின்னர் சிங்கள பௌத்த மறுமலர்ச்சியினைக் கண்ணுற்று, சிறிலங்காவின் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு பௌத்தனாக வேண்டுமென்பதால், பௌத்தத்தை தழுவிக்கொண்டார்கள். இந்த தெலுங்கு வடுக வம்சாவளியினரின் மரபில் வந்த வடுகச் சொல்லே “கொவிகம” என்ற சாதிப் பெயராக மருவலாயிற்று. இவர்கள் ஏனைய சிங்களச் சமூகத்தை ஒரு ஏளனத்துடனும் தீண்டாமையுணர்வுடனுமே பார்க்கின்றார்கள். இவர்கள் சிறிலங்காவின் ஆட்சியதிகாரத்தை (கொவிகம என்ற தெலுங்கு வழித் தொடர்ச்சியான ஆதிக்கசாதி) வேறு எந்த சிங்களச் சமூகங்களிடமும் கொடுத்துவிட மாட்டார்கள். சிங்களவர்களின் குடும்பங்களின் பெயர்களை வைத்தே சகலதையும் முடிவெடுத்துச் செயலாற்றும் பழக்கம் சிங்கள ஆதிக்க சமூகமான கொவிகம சமூகத்தினரிடம் உண்டு. சிங்களவர்களில் இப்படி பல அகமுரண்கள் கூர்மையடைந்த நிலையிலேயே இயல்பாகவே காணப்படுகின்றது. ஜே.வி.பி கிளர்ச்சியின் பின்னர் இவை அரசியல் வடிவம் பெறாமல் இருந்தமையால், தமிழர்களை சிங்களவர்கள் என்ற ஒற்றையடையாளத்தில் நின்று எதிர்கொள்ள சிங்கள ஆளும் அதிகாரவர்க்கத்தினருக்கு முடிந்திருக்கின்றது.

சிங்களவரிடத்தில் காணப்படும் சாதி, மத, வர்க்க, பிரதேச முரண்களைக் கூர்மையடையச் செய்து அவர்களை ஒருமித்த சக்தியாகத் திரளச் செய்யாமல், அவர்களை அவர்களுக்குள் மோத வைத்துச் சிங்கள ஆளும் அதிகார வர்க்கங்களுக்குத் தலையிடியைக் கொடுக்க வேண்டிய புலனாய்வுச் செயற்றிட்டம் எப்படியேனும் வகுக்கப்படல் வேண்டும். இந்த முரண்களைக் கூர்மையடையச் செய்யும் விதமாகவே நாம் சிங்களவர்களை அணுக  வேண்டும், கையாள வேண்டும் மற்றும் அவர்கள் குறித்து எழுத வேண்டும், பேச வேண்டும். அத்துடன் நாம் சகல சாக்கடை முரண்களையும் களைந்து தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

தமிழர்கள் வீரம் குன்றித் தோற்கவில்லை. சூழ்ச்சி தெரியாமலேயே தோற்கடிக்கப்பட்டார்கள்…….

தமிழர்கள் தம்முள் அகமுரண் களைந்து சிங்களத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும்.

About editor 3192 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply