சுமந்திரன் அவர்களுக்கு மாற்றாக ஒருவரையாவது இன்று சுட்டிக்காட்ட முடியுமா?

 சுமந்திரன் அவர்களுக்கு மாற்றாக ஒருவரையாவது இன்று  சுட்டிக்காட்ட முடியுமா?

யாழன்பன் 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டியது  அவசியம். ஏனெனில் இம்முறை என்றும் இல்லாதவாறு தமது முகவர்களூடாக தென்னிலங்கை அரசியல் கட்சிகளும், போலியான தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகளும் ஏராளமான சுயேச்சை குழுக்களும் களமிறங்கி உள்ளனர். நோக்கம் மிகவும் தெளிவானது. அதாவது பலமாகவுள்ள தமிழ் அரசு கட்சியை பலவீனப் படுத்துவதே இவர்கள் எல்லோரதும் நோக்கமாகும். துரோகத்தனமான நோக்கங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். எனவே, இந்த நயவஞ்சகர் எல்லோருக்கும் ஒரு படிப்பினையை மக்கள் இம்முறை தங்கள் வாக்களிப்பின் மூலம் வழங்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சிறிதளவேனும் பலவீனப் படுத்துவதற்கு தமிழ் வாக்காளர்கள் இடமளிக்கக் கூடாது. சுருங்கக் கூறின் இந்த நயவஞ்சகரின் குடும்ப உறுப்பினர் கூட இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். ஒரு நூறு வாக்கைக் கூட பெற முடியாதோரும் தேர்தலில் நிற்கின்றனர். தமிழினத்தின் ஒற்றுமையை சிதைத்து அவர்களை கூறு போடுவது ஒன்றே இவர்களது குறிக்கோளாகும். இந்த அணிகளை நீங்கள் இனங்காண்பது ஒன்றும் கடினமானது அல்ல. 

வடக்கில் உள்ள வேடதாரிகளை இனங்காண்பதே மிகவும் சிக்கலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

(1)போலிச்சாமி மு.மு. விக்கி ஆசாமி கட்சி- மண்டையன் குழுவின் கட்சி- வடமாகாண செங்கோல் உடைப்பு, மற்றும் 1008 தேங்காய் உடைப்பு செய்த கோமாளி கட்சி-  தமது கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி என்று தானே சொன்ன பெண்மணியின் கட்சி ஆகியற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டணி.

(2) தமிழ் இனத்துக்கு துரோகம் செய்வதையே தங்கள் பரவணிப் பழக்கமாக கொண்ட மூன்றாம் தலைமுறை சயிக்கிள்கார  அணி

(3) மு.மு. விக்கி நியமித்த  விசாரணை குழுவால் இனம் காணப்பட்ட ஊழல் மன்னன் ஐங்கரநேசன் கட்சி 

(4) ஈ.பி.டி.பி. கட்சி இவர்களின் கடந்தகால செயற்பாடுகள் என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்தித்தால் முடிவை எடுப்பது இலகுவாகி விடும். எனவே, இந்த மாற்று அணிகள் எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும். தமிழ் அரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தை மட்டுமே தெரிவு செய்ய வேண்டும். வடக்கைப் பொறுத்தவரையில் விருப்பு வாக்கு வேட்டையால் தமிழரசு கட்சியினுள் உள்ளவர்களே மோதிக்கொள்கின்றனர். குறிப்பாக சரவணபவன் நிராகரிக்கப்பட வேண்டும். 

யாழ் மாவட்ட வாக்காளர்கள் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களில் யார் யாரை தெரிவுசெய்ய வேண்டும் என எவ்வாறு முடிவு செய்யலாம் என்பது அடுத்த கேள்வி. வினைத்திறன் மிக்கவர் எவரோ அவரே கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாவார். அந்தக் காலங்களில் அமிர்தலிங்கம் அவர்கள் மிகவும் விமர்சனத்துக்கு உள்ளானார். ஏனெனில் அப்போது அறிவாற்றலும் செயல்திறனும் உள்ளவர்கள் பலர் இருந்தாலும், அமிர்தலிங்கம் அதிமிகு செயல்திறன் மிக்கவர். ஆனால், இன்று செயல்திறன் மிக்கவர்கள் மிகவும் அருகி விட்டனர். உங்கள் மனச்சாட்சியின் படி நீங்களே உங்களிடம் ஒரு கேள்வியை எழுப்புங்கள். அறிவாற்றல், ஆளுமை, செயல்திறன் மிக்கவரும் நிதானமான, நேர்மையான எம்.ஏ. சுமந்திரன் அவர்களை விட அவருக்கு நிகராக இல்லாவிட்டாலும் அவருக்கு மாற்றாக ஒருவரையாவது இன்று  சுட்டிக்காட்ட முடியுமா? அடுத்ததாக 2010 இலிருந்து இன்றுவரை படிப்படியாக நடைபெற்ற தமிழ் மக்கள் நலன் சார்ந்த நன்மைகள் யாவற்றிலும் முதன்மையான வினைத்திறன் மிக்க செயற்பாட்டாளர் சுமந்திரன் அவர்களின் பங்கு அளப்பரியது. 

முக்கால் பங்கு காணிகள் விடுவிப்பு- மூன்றில் இரண்டு பங்கு கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றில் சுமந்திரன் அவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது. கடந்த 2015 ஆட்சி மாற்றத்தின் பின் இனப்பிரச்சினை தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசமைப்பு முயற்சிகள் முக்கால் திட்டத்துக்கு முன்னேறின. முழு நாடாளுமன்றமும் அரசமைப்பு பேரவையாக மாறியது.  புதிய அரசமைப்பை உருவாக்கும் தீர்மானம் 225 உறுப்பினரின் ஆதரவையும் பெற்று ஏகமனதாக நிறைவேறியது. புதிய அரசமைப்பு உருவாக்க முறையில் மூன்று முக்கியமான அம்சங்கள் உள்ளன. அவையாவன

(அ)நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையில் மாற்றங்கள் (ஆ)தேர்தல் முறையில் சீர் திருத்தங்கள் (இ)அதிகார பகிர்வு திட்டம் இவற்றில் அதிகார பகிர்வு தமிழர் தரப்புக்கு முதன்மையான அம்சமாகும். கடந்த 72 ஆண்டு கால பல்வேறு முயற்சிகளின் பயன்களுடன் ஒப்பீடு செய்யும் போது கூட்டமைப்பின் அழுத்தத்துடன் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்பு முயற்சி என்பது அப்படி ஒன்றும் தோற்றுப்போன அல்லது முடிந்துபோன விடயமே அல்ல. மேலும் இம்முயற்சி விட்ட இடத்திலிருந்து தொடரக்கூடிய ஒன்றேயாகும். இந்த அரசமைப்பு வரைபு பணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜெயம்பதி விக்கிரமரத்ன ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, எம்.ஏ. சுமந்திரன் பெருவெற்றி பெறுவது காலத்தின் கட்டாயமாகும்.  

இவ்வேளையில் நாம் ஒன்றுபட்டு சரியான முடிவை எடுத்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாமல் விட்டால் என்ன விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எமக்கு அறிவாற்றல் மிக்க தலைவர்கள் இல்லாத போது நாம் சந்தித்த கடந்தகால துன்பங்கள் எமக்கு பாடமாக வேண்டும். அதை விளக்கவே கடந்த காலத்தில் எமது தரப்பில் நடந்த தவறுகளில் ஒரு சிலவற்றை சுருக்கமாக இங்கே தருகிறேன்.           

கலாநிதி நீலன் திருச்செல்வம் நீலன் அவர்கள் தயாரித்த அதிகார பகிர்வுக்கான அரசியல் அமைப்பு  வரைபை 1994 ஆகஸ்ட் 04 இல் சமர்ப்பித்தார். இந்த அரசியல் அமைப்பானது துரோகச் செயல் என்று 1995-08-11 இல் சுண்டிக்குழியில்  கூட்டம்போட்டு அன்டன் பாலசிங்கமும் தமிழ்ச்செல்வனும் அறிவித்தனர். அதன் பின் கவிஞர் இரத்தினதுரை தலைமையில் நீலன் திருச்செல்வம் அவர்களை துரோகி என்று பிரச்சாரம் செய்தனர். இறுதியில் 1999-07-29 இல்  பிச்சைக்காரன் வேடத்தில் நொண்டிச்சென்ற தற்கொலை போராளி மூலம் நீலனின் உயிரை பறித்தனர். அரசியல் சாசனம் வரைவதில் நிபுணத்துவம் பெற்றிருந்த நீலனின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டது. ஏன் இந்த யூலை 29 தினத்தை தேர்ந்தெடுத்தனர்?  1987 யூலை 29 இல் தான் இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் நலன் சார்ந்த பல விடயங்கள் இருந்தன. அவற்றை  உள்ளடக்குவதில் நான்கு தமிழ் தலைவர்கள் கடுமையாக உழைத்தனர். அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் மற்றும் நீலன் திருச்செல்வம் ஆகியோரே அந்த நால்வரும் ஆவர். வரலாற்றில் இதுவரை வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பதை கூறிய ஒரே ஒரு சட்டபூர்வமான ஆவணம் இது ஒன்றே ஆகும். அதுவும் உள்நாட்டு ஆவணமும் அல்ல, சர்வதேச ஆவணம். ஆயினும், எந்த ஒரு சமாதான  ஒப்பந்தத்தை பார்த்தாலும் புலிகள் மிரண்டுபோவது வழமை. அவர்களின் அரசியல் இராசதந்திரம் இவ்வளவு தான்.  

நீலன் திருச்செல்வம் அவர்களின் உயிரை பறித்து நான்காவது ஆண்டில் அதாவது 2003-03-11 அன்று கிளிநொச்சியில் வைத்து அதே அன்டன் பாலசிங்கம் நீலனின் அரசியல் அமைப்பு வரைபை புகழ்ந்து பேசியதாக யாழ் உதயன் பத்திரிகை 2003-03-13 அன்று செய்தி வெளியிட்டது. அதனை 2003-03-20 அன்று நாவலர் கலாசார  மண்டபத்தில் நடைபெற்ற- சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான நிறுவனம்- ஒழுங்கு செய்த “சமாதான செயல்முறை” பற்றிய கலந்துரையாடலில் நீதிபதி விக்கினராசா அவர்கள் கூறிய பின்வரும் செய்தியும் உறுதிப்படுத்துகிறது. அதாவது, “11-03-2003 அன்று தமிழீழ நீதிமன்ற வளாகம் கிளிநொச்சியில் திறக்கப்பட்ட நாளை சரித்திர பிரசித்தி பெற்ற நாளென அன்று    நீதிமன்றத்தை திறந்து வைத்து உரையாற்றிய அன்டன் பாலசிங்கம் கூறினார். அன்டன் பாலசிங்கம் தனது உரையில், கலாநிதி நீலன் திருச்செல்வம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை சம்பந்தமாக வரைந்த அரசியல் யாப்பு சிறந்தது, வரவேற்கக் கூடியது, தமிழ் மக்களுக்குப் பயனுடையது எனக் குறிப்பிட்டதுடன் அதில் சில விடயங்களை சனாதிபதி நீக்கி விட்டார் எனவும் கூறினார்” என்று நீதிபதி விக்கினராசா அவர்கள் கூறியுள்ளார்.

இந்தச் செய்தி 21-03-2003 இதழில்  வெளியிடப்பட்டது. எனவே, முன்பு துரோகச்செயல் என்று கூறி, துரோகி என்று வசைபாடி, அந்த அரசியல் சாசன நிபுணரின் உயிரையும் பறித்தவர்கள் அதன்பின் அதே அரசியல் சாசனத்தை புகழ்ந்து பேசி அது தமிழ் மக்களுக்கு பயன்மிக்கது, வரவேற்கக் கூடியது என்று கூறினர். ஆயின், இது காலம் கடந்த ஞானமன்றி வேறென்ன? 

இவ்வாறே அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், தங்கத்துரை மற்றும் பல தலைவர்களும்  கொல்லப்பட்டனர். உண்மையாகவே தமிழ் மக்களின் விடுதலைக்காக பற்றுறுதியுடன் போராடிய  அறிவாற்றல் மிக்க தலைவர்களை புலிகள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். ஆனால், இவ்வாறான தலைவர்கள் எம்மத்தியில் அருகியிருந்தமையே இறுதியில் புலிகளின் அழிவுக்கும் ஏராளமான தமிழ் மக்களின் அழிவுக்கும் காரணமானது.  

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் எம்மினத்தின் நிலை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். மாறாக இந்தியாவை பகைத்து 1987 இல் போர் தொடுத்தமையால் வந்த துன்பங்கள் ஏராளம். நீலன் திருச்செல்வம் தயாரித்த சந்திரிகா அம்மையார் சமர்ப்பித்த அரசமைப்பு வரைபை ஆதரித்திருந்தால் அத்துடன் ஒரு விடிவு கிடைத்திருக்கும். தமிழ் மக்களை வாக்களிப்பதை  தடுக்காமல் விட்டிருந்தால் தீர்வைபெற வழி ஏற்பட்டிருக்கலாம்.

இறுதியில் பயனற்ற இழப்புக்கள் மட்டுமே பெறுபேறு. எனவே, மீண்டும் ஒரு காலம் கடந்த ஞானம் வேண்டாம். விழிப்புடன் வாக்களிப்போம்! தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வழிசமைப்போம்!

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply