சுமந்திரன் என்ன செய்தார்? இப்ப அரசியலுக்காக என்ன செய்கிறார்?

சுமந்திரன் என்ன செய்தார்?
இப்ப அரசியலுக்காக என்ன செய்கிறார்?

இது அவர் அரசியலுக்குள் புகுமுன் நடந்தது!
சுமந்திரனை விமர்சிப்பவர்களுக்கு….!

– தெல்லியூர் சி.ஹரிகரன் –

”பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.”

என்கிறார் மறைதந்த வள்ளுவர். ஒருவர் எந்தப் பயனும் கருதாது இடர்ப்படும் ஒருவருக்கு ஆற்றுகின்ற உதவி அது கடலைவிடப் பெரியதே. சமூக மருத்துவத்துறையில் இன்று கோலோச்சும் ஒரு பெருங்கல்விமான், நீதியாக – நேர்மையாக – மக்கள் நலன்சார்ந்து செயற்பட்ட ஒரே காரணத்துக்காக, அவரது பதவி பறிக்கப்பட்டு, இந்த மண்ணைவிட்டு வெளியேறுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அவர் வேறுயாருமல்லர். சமூக மருத்துவத்துறையில் இலங்கையில் புகழ்பூத்த வைத்திய நிபுணராக விளங்கும் வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன். இவரின் வாழ்வை மீட்டுக்கொடுத்தவர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக உள்ள எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்.

தற்போது பல பொதுநலவாய வழக்குகளை சுமந்திரன் எந்த ஊதியமும் இன்றி இன, மத, பேதங்கடந்து மேற்கொண்டு வருகின்றார். அவர், எந்தப் பயனும் கருதாது இனநன்மைக்காக – தமிழ் மக்களின் நன்மைக்காக – தர்மம் தலைகாக்கவேண்டும் என்று அந்த வழக்குகளை நடத்தினாலும், பலரும் சொல்கின்றவிடயம் அரசியலுக்காக வேசமிடுகின்றார் என்பதே!

சுமந்திரனைப் பொறுத்தவரை அவர் அனைத்து அரசியல்வாதிகளிலும் சற்று வித்தியாசமானவர். விமர்சனங்களைக் கண்டு அஞ்சுபவரோ – ஒதுங்குபவரோ அல்லர். முகத்துக்கஞ்சி ஏதோ ஆடுபவரும் அல்லர். எதையும் திடமாகவும், தெளிவாகவும் இடித்துரைக்கும் ஆற்றல் படைத்தவர்.

என்றைக்கும் அவர் முன்வைத்த காலைப் பின்வைப்பவரல்லர். சிந்திய சொற்களை மீளப்பெறுபவரும் அல்லர். உண்மைக்காகவும், நேர்மைக்காகவும் உரைப்பவர். தனது அறிவுக்குச் சரியெனப் பட்டதை மட்டுமே உரைப்பவர். அது மற்றவர்களின் அறிவுக்குத் தவறாகத் தென்பட்டால் அதைக்கண்டு அஞ்சுபவர் கிடையாது.

சரிநான் விடயத்துக்கு வருகின்றேன்.

சமூக மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதனின் வாழ்க்கையின் முக்கிய பகுதி ஒன்றை தற்போதைய சூழ்நிலை காரணமாக இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

2009 ஆம் ஆண்டில் வன்னி முகாம்களில் பலவந்தமாக அடைத்து வைக்கப் பட்டு இருந்த தமிழ் மக்களின் சுகாதார நிலை தொடர்பாக கேள்வி எழுப்பி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதை தொடர்ந்து தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்குவதில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்த இனவாத அரசினால் வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் பதவி இடைநிறுத்தம் செயப்பட்டு சம்பளமும் இன்றி 13 மாதம் அநாதரவாக விடப்பட்டார்.

அவரது உறவினர்கள், நண்பர்கள் கூடத் தாங்களும் பழிவாங்கப் படலாம் என்று கருதி திருமண அழைப்பிதழைக் கூட அவருக்கு வழங்க மறுத்த காலம்.. அந்த நேரத்தில் தனக்கு உதவுமாறு கோரி சமூக வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் அவர்கள் தற்பொழுது தமிழர்களுக்காக வீர வசனம் பேசுபவர்கள் உட்பட பல தமிழ்த் தலைவர்களை அணுகி இருந்தார். எந்த உதவியும் செய்யாமல் நல்ல வழக்கறிஞராகப் பார்த்து அமர்த்துங்கள் என்று அவருக்கு ஆலோசனை கூறியோர் சிலர்.

நாட்டை விட்டு தப்பி ஓடுமாறு ஆலோசனை கூறியோர் சிலர் . இனப்படுக் கொலை்யாளி மகிந்தவின் தமிழ் அடிவருடிகளை பிடித்து காலில் விழுந்து மீண்டும் பதவியை தக்க வைக்குமாறு கூறியோர் பலர் .

இறுதியாக முன் அறிமுகம் எதுவும் இல்லாத நிலையில் திரு #சுமந்திரன் அவர்களை சந்தித்து உதவி கோரினார் முரளி வல்லிபுரநாதன்.

சுமந்திரன் தானாகவே முன்வந்து எந்த வித கட்டணமும் இன்றி அவருடைய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நடத்தித் தருவதாகத் தெரிவித்து அதன்படியே வழக்கை வென்று 13 மாத சம்பளத்துடன் அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்தினார் .

”அவர் அன்று தனக்கு உதவி செய்து இருக்கவிட்டால் அனேகமாக 2010இல் இருந்து கனடாவில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தான் பணி புரிந்து கொண்டு இருந்திருப்பேன். அவருடைய வீட்டுக்கு எனது வழக்கைப் பற்றிக் கதைக்க செல்லும் போது என்னைப் போல எத்தனையோ அநாதரவான தமிழர்களுக்கு அவர் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி உதவுவதை அறிந்து கொண்டேன்.

”இத்தகைய உயர்ந்த மனிதரை இலக்கு வைத்துக் கேவலம் ஒரு தேர்தலில் வெல்வதற்காக, இனவாத அரசாங்கத்துடன் இணைத்து கடந்த காலத்தில் தமிழர் படுகொலையில் ஈடுபட்டவர்களைக் கூடக் கண்டிக்காமல், ‘தமிழ் இனத் துரோகி’ என்று பட்டம் கட்டுவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? “அரசியலுக்காக வழக்காடுபவர் அல்லர். இனத்தின் தேவைக்காக வழக்காடுபவர் எம்.ஏ.சுமந்திரன்” என்று சமூக வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் 2015 ஆம் ஆண்டு காலத்தில் தனது உத்தியோகபூர்வ முகநூலூடாக வாக்குமூலத்தைத் தனது பெயரைப் பதிவிட்டு பதிவுசெய்திருக்கின்றார்.

இப்படி தன்னலம் கருதாது பொதுநலம் கருதி செயலாற்றுபவர் சுமந்திரன். தான் அரசியலுக்கு வருமுன்னரே – அதுவும் ஒரு பிரபலம் மிக்க வைத்தியருக்காக வாதாடி அவரது 13 மாத சம்பளத்தைக்கூட பெற்றுக்கொடுத்தும் எவ்வித கட்டணமும் அவர் பெற்றிருக்கவில்லை. ஏன்பெறவில்லை? 2009 ஆம் ஆண்டு அவர் அரசியலுக்கு வரவில்லையே? முரளி வல்லிபுரநாதனிடம் அவர் பெறுவதற்கும் எந்த உதவியும் கிடையாதே! அவ்வாறிருக்க எதற்காக இலவசமாக வழக்காடினார் சுமந்திரன்?

எமது நாட்டின் வளமான எதிர்காலத்துக்கு சுகாதாரத்துறையின் பங்கு, பணி மகத்தானது. ஒரு வைத்தியர் எமது மண்ணைவிட்டு வெளியேறுவதே நாட்டுக்கு இழப்பு. முரளி வல்லிபுரநாதன் போன்ற ஆளுமையும், திறமையும் மிக்க – சமூக அக்கறையுள்ள – வைத்திய நிபுணர் ஒருவரைத் தமிழ்ச் சமூகம் இழக்க சுமந்திரன் ஒருபோதும் விரும்புபவர் அல்லர். நிறைந்த ஆளுமைமிக்க ஒருவர் எம்மண்ணைவிட்டகலாமல் அவரது பணி எமது மக்களுக்குத் தொடரவேண்டும் என்பதற்காகவே சுமந்திரன் வாதாடினார். நீதியை நிலைநாட்டினார். நல்லதோர் வைத்திய நிபுணரை தமிழ்ச் சமூகத்துக்கு மீட்டுத் தந்தார்.

பயன்கருதாது எமது மக்களுக்காக சுமந்திரன் பணியாற்றினாலும், தமிழ்மக்கள் என்றும் நன்றியுணர்வு உள்ளவர்களே! தமக்காக – எமது இனத்தின் இருப்புக்காக – எமது சுயநிர்ணய உரிமைகளுக்காக – நாங்கள் கௌரவமாக இந்த நாட்டில் வாழவேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்த – கொடுத்துக்கொண்டிருக்கின்ற – தொடர்ந்தும் கொடுக்கப்போகின்ற சுமந்திரனது இலக்கம் ஒன்றுக்கு புள்ளடியிடுவதற்கு முன்னர், அவர் சார்ந்த கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னம் வீட்டுக்கும் சுமந்திரனின் இலக்கம் ஒன்றுக்கும் புள்ளடியிட்டு தமிழரின் இருப்பைக் காப்பாற்றுவதற்காக சுமந்திரனைத் தெரிந்திடுவோம்.


சுமந்திரனைப் பலப்படுத்த வேண்டும், புலம் பெயர் தீவிரவாத அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த பத்து வருடத்தில் செய்தது என்ன?
நடராஜா முரளிதரன்.

July 20, 2020

புலம் பெயர் தீவிரவாத அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த பத்து வருடத்தில் செய்தது என்ன? முள்ளிவாய்க்கால் படுகொலையை செய்த மஹிந்த அரசு, ஜனநாயக வாக்குப்பலத்தால் தோற்கடிக்கப்பட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பினாலேயே என்கிறார் நடராஜ முரளிதரன்.

சுமந்திரன் போன்ற ஆற்றல் மிக்க தலைவர்களை எதிர்வரும் தேர்தலில் பலப்படுத்த வேண்டும் என்கிறார் நடராஜா முரளிதரன். அதற்கான தெளிவான தர்க்கத்தை முன்வைப்பதுடன் தமிழ் தேசியக் கூட்டணியின் அரசியல் ரீதியான சாதனைகளையும் அடையாளப் படுத்துகிறார்.

நடராஜா முரளிதரன் கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் அரசியல் ஆர்வலர், எழுத்தாளர். அவர் மிக நீண்ட அரசியல் பின்னணியைக் கொண்டவர். எதிர்வரும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டணி பலப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply