மதங்களைக் கடந்த நீதிமான் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

மதங்களைக் கடந்த நீதிமான் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

எமது வேதங்கள், உபநிடதங்கள், இதிகாச புராணங்கள், முனிவர்கள், நாயன்மார்கள் மற்றும் சித்தர்கள் எல்லோருடைய போதனைகளையும் உற்றுநோக்கினால் அவற்றின் சாராம்சமாகக் கிடைப்பது அறம் அல்லது நீதி என்பதை நாம் கண்டுகொள்வோம்.

மனுநீதி கண்ட சோழனின் வரலாறு உலகமே மெச்சும் தமிழனின் நீதி வரலாறாக இன்று வரை போற்றப்படுகிறது. அநீதி சில சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வெல்வதைப் போன்று தோன்றினாலும் நீதி ஒருபோதும் தோற்றுப் போவதில்லை. சத்தியமும் நீதியும் சூரியனைப் போன்றன, அவற்றை ஒருபோதும் எவராலும் மறைத்துவிடமுடியாது என்று யசுர் வேதம் போதிக்கின்றது. மானுட இனம் அநீதிக்குட்படுகின்றபோதெல்லாம் இறைவன் அந்த மானுடருக்கு ஏதோ ஒரு வடிவத்தில் தன்னுடைய படைப்புக்கள் மூலமாக அருள்புரிந்துகொண்டே இருக்கின்றான்.

ஈழத் தமிழராகிய நாம் பல்வேறுவிதத்திலும் துன்புறுத்தப் படுகின்றோம், அடக்கியாளப்படுகின்றோம், எமது பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து, எமது இனப்பரம்பலை மாற்றியமைத்து, எமது வரலாற்றைத் திரித்து, எம்மை நாடற்றவர்களாக்கும் இரகசிய கைங்கரியம் பேரினவாதிகளாலும் மதவாதிகளாலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அவ்வாறான ஆக்கிரமிப்புக்களின் போது எமது மக்கள் தமக்கு நீதியைப் பெற்றுத்தர யாருமில்லையே என்று அங்கலாய்க்கும் போதெல்லம் மதங்களைக் கடந்து நீதிக்காய் எழுகின்ற ஒரு சிறந்த ஆளுமையாக ஜனாதிபதி சட்டத்தரணி னி.பு.சுமந்திரன் அவர்களை நான் காண்கின்றேன்.

திரு மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவர்கள் சட்டம், அரசியல் மற்றும் ராஜதந்திரம் ஆகிய மூன்று பரப்புக்களிலும் நன்கு அறிமுகமான பன்முக ஆளுமை கொண்ட ஒரு அரசியல் தலைவராக இருந்தபோதிலும் எமது இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் நெருக்கமான கோணத்தில் அவரைக் காண்பதற்கு யாராவது தவறியிருந்தால் அச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது ஒரு இந்து மத குருவாக எனது தலையாய கடமையயனநான் உணர்கின்றேன்.

தமிழர் தாயகத்தின் தலைநகராம் திருக்கோணமலையில் கோயில்கொண்டிருக்கும் ஈழத்தின் புராதன ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரத்திற்கு மேற்கே அமைந்துள்ள கன்னியாய் வெந்நீரூற்று கிணறுகள் சரித்திர பிரசித்தி பெற்ற ஒரு புனித பிரதேசமாக பல நூற்றாண்டுக் காலமாக இருந்து வருகின்றது.

சிவ பக்தனான இலங்காபுரிவேந்தன் இராவணனோடு தொடர்புபட்டதும் ஆன்மீக உலகின் அதிசயம் எனப் போற்றப் படுவதுமான ஏழு வெந்நீரூற்றுக்களைக் கொண்டதும், தட்சணகைலாச புராணம், வீரசிங்காத புராணம், திருகோணாசல புராணம் பல்வேறு புராணங்களால் விதந்துரைக்கப்பட்ட பெருமை கொண்டதும், அகத்திய மாமுனியின் மனங்கவர்ந்த தலங்களைக் கொண்டதுமான இப் புண்ணிய தலம் இராவண மன்னன் தனது தாயாருக்கு பிதிர்கடன் நிறைவேற்றிய தீர்த்தம் என்ற ஐதீகத்தின் தொடர்ச்சியாக இந்துக்கள் தமது பிதிர் கடன்களை தீர்க்கும் புனித இடமாக இன்று வரை போற்றப்படுகின்றது.

இங்கிருந்த பூர்வீகமான பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் பெளத்த தாதுகோபுரமொன்றை அமைக்க, வில்கம் விகாரை பிக்குமார் எடுத்துவரும் பிரயத்தனங்களுக்கு தொல்பொருள் திணைக்களமும் உடந்தையாக இருந்து வரும் நிலையில் அண்மையில் பிள்ளையார் ஆலயம் இருந்த பூர்வீக மேட்டில் பெளத்த தாது கோபுரம் அமைக்க எடுத்த முயற்சிக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி னி.பு.சுமந்திரன் அவர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடை உத்தரவு பெற்றுக் கொடுத்தார். பறிபோகவிருந்த இந்து சமயத்தவரின் புண்ணிய தீர்த்தமொன்று பாதுகாக்கப்பட்டது.

வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேழிச் செல்வமாம் நெல் விளைவிக்கும் உழவர் பெருமக்களின் பாரம்பரிய வழிபாட்டிடமான பழைய செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அதன் தீர்த்தக் கரைக்கு அருகில் பெளத்த பிக்கு ஒருவரின் பூத உடலானது தகனம் செய்யப்படக் கூடாது என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவையும் மீறி இந்து மக்களின் மத நம்பிக்கைக்கு முரணாக குறித்த உடலம் எரியூட்டப்பட்டது. இதனை எதிர்த்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முல்லைத்தீவு மக்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்குரைஞராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களே ஆஜராகி வருகின்றார்.

குறித்த வழக்கை விசாரித்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளால், இந்து சமயத்தவர்களின் மனம் புண்படும் வகையில், நீதவான் நீதிமன்றக் கட்டளையை மீறி செயற்பட்ட பெளத்த பிக்குவை மன்றில் ஆஜராகுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் மேற்கே அமைந்துள்ளது திருக்கேதீச்சரமாகும்.

இந்நாட்டுப் பழங்குடியினராகிய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் கோயிலெனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதீச்சரமாயிற்று என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத் திருக்கோயிலிற்கு ஆற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப் பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும்.

கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலம் இதுவாகும்.

அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகளின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது.

பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகளில் இக் கோயில் சோழ மன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலெனவும் அழைக்கப்பட்டுள்ளது.
திருக்கேதீச்சரத் திருத்தலத்தில் அமைந்துள்ள பாலாவித்தீர்த்தத்தில் நீராடுவோர்க்கு பிரமஹத்தி போன்ற பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது தொன்றுதொட்டு நிலவிவரும் ஐதீகமாகும்.

மகாசிவராத்திரி விரத தினத்தில் இலங்கைமுழுவதுமுள்ள சிவ பக்தர்கள் இவ்வாலயத்தில் ஒன்றுகூடி பாலாவியில் நீராடி பாலாவித் தீர்த்தத்தினால் அங்கு எழுந்த ருளியிருக்கும் புராதன லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து நித்திரை விழித்து சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பர்.

கடந்த வருடம் மகா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சர ஆலயம் செல்லும் வீதிமுகப்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு தவறாக வழிநடத்தப்பட்ட சில சகோதரர்களால் உடைத்தெறியப்பட்டபோது உனது ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு எனறு இயேசுநாதர் கூறியது போல பொறுத்துக்கொண்டாலும் அச்சிறியோரின் அறிவற்ற செயல் கண்டு மனம்நொந்து கொண்டோம். ஆயினும் ஒன்றாக இருக்கும் தமிழ் மக்களை மதங்கள் இரண்டாகப் பிரித்துவிடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையிலும், மதநல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திருக்கேதீச்சர ஆலய வீதி முகப்பு வளைவு உடைக்கப்பட்டது தொடர்பான மன்னார் மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் திருக்கேதீச்சரஆலயம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி னி.பு. சுமந்திரன் அவர்களே ஆஜராகி வருகின்றார் என்பதோடு குறித்த வளைவு மீண்டும் நிறுவப்படவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்து வருகிறார்.

இவ்வாறு மதங்களைக்கடந்த நீதிமானாக தமிழ் இனத்திற்கு ஆற்றிவரும் அளப்பரிய சட்டப் பணியைக் கெளரவித்து இவ் வருடம் தைத் திங்கள் அகில இலங்கை கம்பன் கழகம் கொழும்பு இராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் வெகு கோலாகலமாக நடாத்திய கம்பன்விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளரும் ஆகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அவர்கள் தரம்மிகுந்த போராளி என்ற உயர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

மேற்படி கெளரவிப்பின் போது திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்களது சிறப்பு பின்வருமாறு புகழ்ந்து பாடப்பெற்றது.

சட்டத்துறை புகுந்து தமிழர்களின் புகழ் நிலைக்க
எட்டாத வெற்றிகளை எட்டித் தலைநிமிர்ந்தோன்!
முட்டிப் பகைவர்களின் முன்னின்று தமிழ் உரிமை
தட்டிக் கேட்கின்ற தரம்மிகுந்த போராளி!
 

இவ்வண்ணம்
 

சிவஸ்ரீ. விக்கினராஜ ஐயர் பாலகுமாரக்குருக்கள்
கிராம்புவில், சாவகச்சேரி
 

About editor 3015 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply