சுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுக்கள்!

சுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுக்கள்!

புருசோத்தமன் தங்கமயில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கு விருப்பு வாக்குச் சண்டைகளினால் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே, கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்; வாக்குத் திரட்சிக்காக போராடுவார்கள். ஆனால், இம்முறை, ஒரே கட்சிக்குள் இருக்கும் சக வேட்பாளர்களின் குற்றச்சாட்டுக்களுக்கும், குழிபறிப்புக்களுக்கும் எதிராக நின்று தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது.

கூட்டமைப்புக்குள், குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் வெற்றிக்காக ஓடும் எந்தவொரு வேட்பாளரும், இன்னொரு வேட்பாளரை நம்புவதற்கு தயாராக இல்லை. தோற்பதற்காகவே களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் தவிர்ந்த முக்கிய வேட்பாளர்கள் யாரும் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக இல்லை. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மாத்திரமே இன்னொரு வேட்பாளரின் பெயரைக் கூறி, “அவர் தமிழ்த் தேசிய அரசியலுக்கு தேவையானவர், அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்…” என்று கூறும் நிலைப்பாட்டில் இருக்கிறார். அதாவது தோல்விப் பயத்துக்கு அப்பால் நிற்கிறார்.

மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குக்கூட தோல்விபயம் வந்துவிட்டது. அது, முன்னாள் பங்காளிக் கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கடந்த தேர்தல் தோல்வி வழங்கிய பாடமாகவும் இருக்கலாம். அதனால், அவர்கள் தங்களது சொந்தக் கட்சியின் இன்னொரு வேட்பாளருக்கு வாக்குக் கேட்கவும் தயங்குகிறார்கள். சில கூட்டங்களுக்கு சக வேட்பாளர்களோடு சென்றாலும், தங்களது விருப்பு இலக்கத்தை மாத்திரம் பதிவு செய்யும் ஒற்றை இலக்கைக் குறித்தே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

கூட்டமைப்புக்குள் எழுந்திருக்கிற விருப்பு வாக்குச் சண்டை, அந்தக் கட்சியின் வேட்பாளர்களையும், அவர்களின் ஆதரவாளர்களையும் எவ்வளவு கீழ்நிலைக்கும் கொண்டு செல்லத் தயாராக இருக்கின்றது. அத்தோடு, தமிழ்த் தேசிய அரசியலை கபளீகரம் செய்வதற்கு தயாராக இருக்கும் அரச ஒத்தோடிகள், முகவர்கள், வெளிச்சக்திகள் உள்ளிட்ட அச்சுறுத்தல் தரப்புக்களோடும் தார்மீகங்களுக்கு அப்பால் நின்று இணைந்து செயற்படவும் வைக்கின்றது.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பேட்டியொன்று சர்ச்சையானதைத் தொடர்ந்து ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கை அரங்காற்றுகையொன்று நிகழ்த்தப்பட்டது. அதனை, ஆரம்பித்து வைத்தவர், ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன். குறித்த பேட்டியின் எந்தப் பின்னணியும் தெரியாமல், சுமந்திரனுக்கு எதிரான அறிக்கையை தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினருக்கான கடிதத் தலைப்போடு ஊடகங்களுக்கு அவர் அனுப்பினார். அடுத்த அறிக்கை, அவரது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு சக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சாள்ர்ஸ் நிர்மலநாதனிடம் இருந்து வந்தது.

இந்த இருவரும் ஏன் இவ்வளவு அவசரப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டார்கள் என்பது சார்ந்து பார்த்தால், திருக்கேதீஸ்வர ஆலய வரவேற்பு வளைவு உடைக்கப்பட்ட விவகாரம் மேலெழுகிறது. அதாவது, ஆலய வளைவு உடைப்புக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட சைவ மக்களின் சார்பில் சுமந்திரன் ஆஜராகிறார். ஆலய வளைவு உடைப்பு விவகாரம், மன்னாரின் கத்தோலிக்க – சைவ மக்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நிகழ்ச்சி நிரலோடு அரங்கேறிய சம்பவம். அப்படியான நிலையில், அந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் தரப்புக்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற முயற்சித்திருக்க வேண்டும். அவர்கள் விருப்பு வாக்கு விடயத்தை முன்னிறுத்தி பொறுப்பை மறந்த புள்ளியில், கூட்டமைப்பின் மீதான பெரும் விமர்சனமாக அது மாறியது.

இதனையடுத்து, மன்னார் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பிரதிநிதிகளை சந்தித்த சுமந்திரன், குறித்த வளைவு உடைப்பு விவகாரம் தொடர்பில் பேசினார். இந்த விவகாரத்துக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்படவில்லை என்றால், நீதிமன்றத்தினூடாக தீர்வொன்றுக்கு முயற்சிக்கப் போவதாக அறிவித்தார். அதற்கு மன்னார் மறை மாவட்டப் பிரதிநிதிகளும் இணங்கினார்கள். அதனையடுத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், வழக்கு திகதிக்கு முதல்நாள் மாவையை தொலைபேசியில் அழைத்த செல்வம், ‘…சுமந்திரன் இந்த வழக்கில் ஆஜராகக்கூடாது. அது, கூட்டமைப்புக்கு எதிராக கத்தோலிக்க மக்களைச் சிந்திக்க வைக்கும்’ என்றிருக்கிறார். இதனையடுத்து, சுமந்திரனுக்கு தொலைபேசிய மாவை, வழக்கில் வேறு சட்டத்தரணிகளை ஆஜர்படுத்துமாறு கோரியிருக்கிறார். ஏற்கனவே, வளைவு உடைப்பு விவகாரத்தை அந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமூகமாக தீர்த்திருக்க வேண்டும். அதனைச் செய்யாது விட்டுவிட்டு, வழக்குக்கு முதல்நாள் அழைத்து, அதில் ஆஜராக வேண்டாம் என்பது, என்ன வகையிலான நியாயம் என்று சுமந்திரன் கேட்டவுடன் மாவை விடயத்தை அப்படியே விட்டுவிட்டார். சுமந்திரன் வழக்கில் ஆஜராகவும் செய்தார். இந்த விடயம், செல்வத்தை மாத்திரமல்ல, கடந்த காலத்தில் சுமந்திரனோடு இணக்கமாக இருந்த சார்ள்ஸையும் விலகிப்போக வைத்தது. அதனால்தான், கத்தோலிக்க மக்களின் வாக்குகளைக் குறிவைத்து இருவரும் சுமந்திரனுக்கு எதிரான அறிக்கை அரங்காற்றுகையின் முதல் நாயகர்கள் ஆனார்கள்.

“…தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வினை உள்ளடக்கிய அரசியலமைப்பினை ராஜபக்ஷக்கள் கொண்டு வந்தால், அதற்கு ஆதரவளிப்போம்.” என்று ஊடக சந்திப்பொன்றில் சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தார். அப்போது, அவருக்கு பக்கத்தில் மாவையும் இருந்தார். ஆனால், அந்த விடயத்தை சுதிமாற்றி ஊடகமொன்று சுமந்திரனைக் குறிவைக்க நினைத்தது. அதற்காக செல்வத்திடம் ஒலிவாங்கியை நீட்டியது. செல்வமும், முழுமையான விடயத்தை அறியாமல், ‘ராஜபக்ஷக்களுக்கு ஆதரவளிப்போம்’ என்கிற விடயத்தை மாத்திரம் மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு சுமந்திரனுக்கு எதிராக பேசியிருக்கிறார். அதாவது, ‘கூட்டமைப்புக்குள் புல்லுருவிகள் நுழைந்துவிட்டார்கள். அவர்களை அகற்ற வேண்டும்.’ என்பது வரை பேசி ஓய்ந்தார். இந்த விடயம் தொடர்பாக சித்தார்த்தனையும் சம்பந்தப்பட்ட ஊடகம் அணுகியது. ஏற்கனவே சுமந்திரனுக்கு எதிரான அறிக்கைப் போரில் சம்பந்தப்பட்டு சிக்கி, விமர்சனங்களைச் சந்தித்த சித்தார்த்தன் விடயங்களை புரிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட விடயத்தை சரியாக அணுகினார். தப்பித்துக் கொண்டார். ஆனால், செல்வமோ, பட்டறிவு பகுத்தறிவு இல்லாதவர் என்கிற விமர்சனத்தை சந்திக்க வேண்டி வந்தது.

சிங்களப் பேட்டிச் சர்ச்சையை சுமந்திரனுக்கு எதிராக கையாள எத்தணித்த தரப்புக்களில் வெளிச் சக்திகளைக் காட்டிலும் தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்களே அதிக பங்காற்றினார்கள். யாழிலுள்ள தமிழரசுக் கட்சியின் பிரபல வர்த்தக வேட்பாளர் ஒருவர், சுமந்திரனுக்கு எதிராக அறிக்கை வெளியிடாத வன்னி மாவட்ட வேட்பாளர்கள் இருவரை தொடர்ச்சியாக தொலைபேசியில் மிரட்டிக் கொண்டிருக்கிறார். எப்படியாவது, சுமந்திரனுக்கு எதிரான அறிக்கையை வெளியிட்டு கட்சி முழுவதும் சுமந்திரனுக்கு எதிராக இருக்கின்றது என்று காட்டவும் முயன்றார். ஆனால், குறித்த வர்த்தகர், 2013ஆம் ஆண்டு ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் வர்த்தகத்துறை அமைச்சொன்றுக்காக பேரம் பேசிக் கொண்டிருந்த போது, அவரின் மனைவியை அழைத்து சம்பந்தன் எச்சரித்து அனுப்பியது இன்னொரு கதை. இம்முறை சம்பந்தப்பட்ட வர்த்தகர், தனக்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் சம்பந்தன், சுமந்திரன் தரப்பு எதிர்நிலைப்பாட்டில் இருப்பதைப் புரிந்து கொண்டதும், மாவையின் காலடியில் தஞ்சம் புகுந்து தப்பித்துக் கொண்டார். வேட்பாளரும் ஆனார். ஆனால், அவருக்காக வாதாடிய மாவை, தேசியப்பட்டிலுக்காக மாவையோடு நெருக்கமான இருந்த சட்டத்தரணி ஒருவரைக் கைவிட்டார். குறித்த சட்டத்தரணி ஒரு கட்டம் வரையில் சுமந்திரனோடு நெருக்கமாக இருப்பது மாதிரிக் காட்டிக் கொண்டார். அவரின் ஆதரவாளர்கள், சுமந்திரனின் படத்தை பேஸ்புக் முகப்புப் படமாகவும் கொண்டு சுமந்தார்கள். இறுதியில், தேசியப் பட்டியல் விவகாரம், சம்பந்தனின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்று அறிந்து, குறித்த சட்டத்தரணி, சம்பந்தனிடமே சென்று கெஞ்சினாராம். ஆனால், அந்தச் சட்டத்தரணியின் பெயரை எந்தவொரு காரணத்துக்காகவும் பரிசீலிக்க மாட்டேன் என்று மாவையிடமே சம்பந்தன் சொல்லியிருக்கிறார். அவர், சார்ந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த விடயத்திலும், சம்பந்தனுக்குப் பதிலாக குறித்த சட்டத்தரணியும் அவரது ஆதரவாளர்களும் சுமந்திரனைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் மனக்கிலேசங்களை ஊடகங்கள் சில பயன்படுத்திக் கொள்கின்றன.

புலம்பெயர் தேசத்தினை தளமாகக் கொண்டியங்கும் தொலைக்காட்சி, இணைய ஊடகக் குழுமம் ஒன்றின் தலைவர் ஒருவர் நேரடியாகவே, சுமந்திரனுக்கு எதிராக களத்தில் இறங்கி வேலை செய்கிறார். கடந்த வாரத்தில்கூட வடமராட்சிக் கிழக்கில் மக்கள் சந்திப்பொன்றில் பேசிய சிவஞானம் சிறீதரன், “…லண்டனில் இருந்து பாஸ்கரன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமந்திரனோடு இணைந்து செயற்பட வேண்டாம்; அவரோடு பயணித்தால் தோற்றுப் போய்விடுவீர் என்றார். நான் அப்படித் தோற்றால், அது வரலாறாக இருக்கட்டும் என்று பதில் சொன்னேன்.” என்றார்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் இயங்கு தளத்தில் மையப்புள்ளியாக சுமந்திரனின் பெயர் மாறியிருக்கின்றது. எதிர்க்கட்சிகள் தொடங்கி, சொந்தக் கட்சிக்கார்களினாலும் அவரே குறிவைக்கப்படுகிறார். ஏனெனில், அவரைச் சுற்றித்தான் ஊடாடல் திரட்சியொன்று கடந்த சில ஆண்டுகளாக காணப்படுகின்றது. சமூக ஊடகங்கள் தொடங்கி, பிரதான ஊடகங்கள் வரையிலும் அந்தப் பெயருக்கு அப்பால் நின்று பேசப்படுவதில்லை. வெற்றியும் தோல்வியும் அவரின் பெயரை முன்வைத்தே தீர்மானிக்கப்படும் என்று இந்தப் பொதுத் தேர்தல் காட்சிகள் தமிழரங்கை நிறைக்கின்றன. அது, உண்மையில் ஆரோக்கியமானதா என்றால் இல்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல் தாங்கி நிற்கவேண்டிய முதன்மை விடயங்களைத் தவிர்த்துவிட்டு, சுமந்திரனை முன்னிறுத்திப் பேசிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலை, மீண்டும் ஏகநிலை தலைவர்களையும் கட்சிகளையும் மாத்திரமே வளர்த்தெடுக்கும். இது, சுமந்திரனுக்கு இலகுவான வெற்றியைத் தேடித்தரலாம். ஆனால், அது ஆரோக்கியமான அரசியல் கலாசாரமொன்றை தமிழ் மக்களிடம் தோற்றுவிப்பதற்கு ஒத்துழைக்காது.

-தமிழ்மிரர் பத்திரிகையில் இன்று வெளியான எனது பத்தி. (சற்று விரிவாக)

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply