டொனமூர் அரசியல் யாப்பு
நம்முள் க. வீரன்
புதிய யாப்பின் பிரகாரம் சட்டவாக்க மன்றம் (Legislature) என்பது ஒரு அரசாங்க சபை (State Council) யாக மாற்றப்பட்டது. அதில் 3 அலுவலர்கள் 58 அலுவலர் அல்லாதோராக மொத்தம் 61 பேர் உள்ளடக்கப்பட்டனர். 58 அலுவலர் அல்லாதோரில் 50 பேர் ஆட்புல அடிப்படையில் (Territorial Basis) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் மிகுதி 8 பேர் ஆளுநரால் பல்வித அக்கறைகளைப் பாதுகாக்கும் வண்ணம் நியமிக்கப்பட வேண்டும் என்றும் யாப்பில் குறிப்பிடப்பட்டிருந்தன. முதன் முதலாக மக்கள் யாவருக்கும் தேர்வுரிமை (Universal Suffrage) அளிக்கப்பட்டது. இதனை சேர் பொன். இராமநாதன் அவர்கள் தமது தள்ளாத வயதில் எதிர்த்துங்கூட இலங்கை தேசிய காங்கிரஸ் போன்ற சங்கங்கள் கூட அதை எதிர்த்தும் ஆணையாளர்கள் தமது முடிவில் உறுதியாக இருந்தனர். ஆணையாளர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். உள்நாட்டின் முழு அளவிலான அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளைப் புரியாதவர்கள் அவர்கள். அவர்களின் புரியாமையின் தாக்கத்தை இன்றும் நாங்கள் அனுபவிக்கின்றோம்.
சகல மக்களின் தேர்வுரிமையானது சேர் பொன். இராமநாதனால் எதிர்க்கப்பட்டதன் காரணத்தை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெளிப்படையாக யாவருக்குஞ் சமநிலை அளித்து, வாக்களிக்கும் உரித்துக் கொடுத்து, அதன் பெறுபேறாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் உண்மையான ஜனநாயகக் கோட்பாடுகளைப் பிரதிபலிப்பன என்று எண்ணினார்கள் ஆணையாளர்கள். அது தவறு என்று கருதினார் சேர் பொன். இராமநாதன், நாட்டைச் சீரழிக்கும் பாதையில் இந்தத் தேர்வுரிமை இட்டுச் செல்லும் என்றார் அவர். பல் இன, பல் மொழி, பல் மத இலங்கையில் ஒருவர்க்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் உரித்துகள் அளிக்கப்பட்டால், அதுவும் படிப்பறிவு, அரசியல் அறிவு குறைந்த, கட்டுப்பாடு அற்ற, மக்கட் கூட்டத்திடம் இந்த வாக்குரிமை என்ற ஆயுதம் வழங்கப்பட்டால் இன, மொழி, மத அடிப்படையில் அவர்கள் வாக்களிப்பார்கள் என்றும் அதன் காரணமாக இன, மொழி, மத அடிப்படையிலான பெரும்பான்மையோர் மற்றவர்களை அடிமைப்படுத்தும் ஒரு காலகட்டம் உதயமாகலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
வாக்கின் வழி வரும் வலிய பொறுப்புகளை முன்னர் எப்பொழுதும் வகித்து அனுபவிக்காத மக்கட் கூட்டம் திடீரென்று தம்மை நாடிவரும் அதிகாரத்தை எவ்வாறு பாவிப்பார்கள் என்று எவருமே ஆரூடம் கூற முடியாது என்று வாதாடினார். அது வரையில் சேர் பொன். அருணாசலம் போன்றவர்கள் மிகவும் பாடுபட்டுக் கட்டியெழுப்பிய இலங்கை மக்கள் என்ற தேசிய ஒருமைப்பாட்டு நிலை, யோசிக்காது நடைமுறைப்படுத்தப்படவிருந்த சகல மக்களின் வாக்குரிமை உரித்து மூலம் பறிபோய்விடும் என்று அவர் நம்பினார்.
ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஆங்கிலேயர் உள்நாட்டு அரசியல் நிலை அறியாமையின் அடிப்படையில் அறிமுகப்படுத்திய தேர்தல் முறை வருங்காலத்தில் வன்முறைகளை வருவிப்பன என்று அவர் வலிந்துரைத்தார். பொதுத் தேர்வுரிமை (Universal Suffrage), ஆட்புலப் பேராண்மை (TerritorialRepresentation), மக்கள் இறைமை (Popular Sovereignty) போன்ற பகட்டான சொற் பிரயோகங்கள் சொல்லளவில் மக்களை மயக்கி இருக்கலாம். ஆனால் நாட்டின் நிலை, தன்மை, நாட்டு மக்களின் பாரம்பரியம், சரித்திரம், அவர்கள் இன, மொழி, மத, கலாசார வேற்றுமைகள் போன்ற பலதையும் கணக்கில் எடுக்காமல் மக்களின் படிப்பறிவுக் குறைபாடு, அரசியல் ஞான அறிவின்மை போன்றவற்றை மனதில் நிலை நிறுத்தாமல் ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாசாரம் என்ற விதத்தில் சிந்தித்து மேற்குறித்த அரசியல் கருத்துகளை அறிமுகப்படுத்துவதால் நாட்டுக்கும் மக்களுக்கும் இன்னல்களையே அவை வருவிப்பன என்று தள்ளாத வயதிலும் அவர் தடுக்கப் பார்த்தார். ஆணையாளர்கள் பிரித்தானியாவை உதாரணமாக வைத்தே தமது சிபார்சுகளை முன்வைத்திருந்தார்கள்.
ஐந்நூறு ஆண்டு காலம் அந்நியர் ஆதிக்கத்தினுள் அகப்பட்டு அமிழ்ந்திருந்து தலைதூக்கும் பல்தரப்பட்ட, பன்மொழி, பல்லின, பல்மத மக்களுக்கு இப்பேர்ப்பட்ட அரசியல் யாப்பு நன்மை பயக்குமா என்று ஆராய முன்வரவில்லை ஆங்கிலேயர்கள். நூலில் படித்ததை நடைமுறைப்படுத்த தலைப்பட்டார்கள். நேரில் சென்றறிந்து, மக்களின் சிக்கல்களை சிந்தித்து, உய்த்தறிந்து நடைமுறைக்குத் தகுந்தவாறு நல்லதொரு அரசியல் யாப்பை உருவாக்க எத்தனிக்கவில்லை, அந்த ஆங்கிலேயர்கள். முக்கியமாகப் படித்த இலங்கையர்கள் யாவரும் ஆங்கில மொழித் தேர்ச்சி பெற்றிருந்ததால் அம்மொழியே அனைவரையும் ஒரு குடைக்கீழ் கொண்டு வந்து விடும் என்ற எண்ணத்தில்தான் அந்த ஆங்கிலேயர்கள் செயலாற்றினார்கள் போலத் தெரிகிறது.
ஆங்கிலேயர் போனதும் அவர்களின் ஆங்கிலமும் ஓரத்தில் அமர்த்தப்பட்டு விடும் என்று அவர்கள் அணுவளவும் எண்ணவில்லை. ஆனால், இராமநாதன் அதனை உய்த்துணர்ந்து கொண்டார். ஆணையாளர்கள் அது சிறந்ததாகக் கருதிய ஜனநாயகம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் போது குழப்பநிலையை உண்டுபண்ணும் என்றார். ஆள்பவரின் ஆணவப் போக்குக்கு இடமளிக்கும் என்றார். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற போர்வையில் கொடுங்கோல் ஆட்சி உருவாகும் என்றார்.
இன்று அவர் கூற்றின் உண்மைகள் விளங்கத் தொடங்கியிருக்கின்றன. மக்களின் தகைமை, தன்மை, தகுதி, தரம் ஆகியவற்றை ஆராயாது வெறுமனே யாவர்க்கும் பொதுவாக வாக்குரிமை அளித்தால் அவர்கள் தமது வாக்கினைப் பாவிக்கும்போது தரமான காரணங்களைத் தவிர்த்து, தரங்கெட்ட காரணங்களுக்காகத் தேர்வுமுறையைப் பயன்படுத்தக்கூடும் என்றார். நாட்டு மக்களிடையே இன, மத, மொழி வேற்றுமைகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மனிதாபிமான முறையில் ஒன்றிணைந்து வாழலாம். அவ்வாறு வாழ்ந்து அதனால் ஏற்படும் தேசிய ஒருமைப்பாடு வரவேற்கத் தக்கது. ஆனால், மக்கட் கூட்டத்தில் ஒரு சாராருக்கு, அதாவது பெரும்பான்மை இனத்தவருக்கு வாக்குரிமை மூலம் ஊக்கங் கொடுத்துவிட்டு, மற்றைய இனத்தவருக்குப் போதிய பாதுகாப்புகள் அளியாது விட்டால், நாளடைவில் சகித்துக்கொள்ள முடியாத இன முரண்பாடு எழ இடமுண்டு என்றார். எந்தத் தருணத்திலும் இனரீதியான பாரபட்சத்திற்கு இடமளித்தல் ஆகாது என்றார். அக்கால முறைமைக்கு ஏற்றவாறு கல்வித் தகைமை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட வாக்குரிமையே வழங்கப்பட வேண்டும் என்றார். மக்கள் வாக்குரிமை பெற வேண்டுமானால் முதலில் கல்வியறிவு பெற முயல வேண்டும் என்றார். அதற்கு வேண்டிய கல்விக் கூடங்களை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் கடமை என்றார்.
அப்போது எண்பது வயதை அண்மித்திருந்தார் இராமநாதன். ஆனாலுஞ் சற்றுஞ் சளையாமல் புதிய அரசியல் யாப்பை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்த அந்தக் கருத்துகளைத்தான் இன்று சிஹல உறுமய, ஜாதிக ஹெல உறுமய போன்ற சில சிங்கள இனத்துவக் கட்சிகள் வெகுவாகச் சாடி, முதன்முதலில் இன வேற்றுமையை இலங்கையில் அறிமுகப்படுத்தியவர்கள் சேர் பொன். இராமநாதனும், அருணாசலமுமே என்று கூறி வருகிறார்கள். அன்று அவர்கள் எடுத்தியம்பிய கருத்துகளின் உண்மையை இன்று தமிழர்களாகிய நாம் உணரக்கூடியதாக இருக்கிறது. சிங்கள மக்கட் தலைவர்கள் சிந்தித்துச் செயலாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள் ஆங்கிலேயர்கள். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களின் உறவு எத்தகையது என்று ஆங்கிலேயர் அறிந்திருக்காதது எமது துரதிர்ஷ்டமே.
இங்கிலாந்தில் பொது வாக்குரிமை அளிக்கப் பல நூற்றாண்டு காலஞ் சென்றது. படிப்படியாகவே அது வழங்கப்பட்டது. அப்படி இருந்தும் இலங்கை மக்கள் அனைவருக்குந் திடீர் என்று அப்பேர்ப்பட்ட ஒரு சமூகக் கடமையைப் புரியக்கூடிய தகுதி இருந்தது என்று ஆணையாளர்கள் நினைத்தது விசித்திரமே. பிரித்தானியாவின் மாணவ, மாணவிகள் யாவரும் சுமார் 70 வருடகாலமாக ஆரம்பக்கல்வியறிவு பெற்ற பின்னரே வாக்குரிமை பெற்றனர். இங்கு பெரும்பான்மையோர் படிப்பறிவு இல்லாத வேளையில், இளைஞர்கள், யுவதிகள் பாடசாலைப் பக்கமே போயிராத வேளையில் இப்பேர்ப்பட்ட ஒரு பாரிய பொறுப்பு அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை பாரிய சீர்கேடுகளை விளைவிக்கும் என்றார் இராமநாதன் அவர்கள். தரங்குன்றிய தலைவர்கள், மனிதகுல மகானுபவர்கள் அல்லாதவர்கள், மக்களின் தலைவர்களாக வரக்கூடும் என்றார். இன்று அதனைக் காண்கிறோம். கிராமத்துப் போக்கிரிகள் எல்லாப் பாராளுமன்றத் தூண்களாகியுள்ளனர். நகரத்து நாட்டாண்மைகள் அரசியலில் நன்றாக நங்கூரம் இட்டுள்ளனர்.
பல வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது அன்றைய மாவட்ட நீதிபதி ஒரு கருத்தை வெளியிட்டார். அறிவும் பயிற்சியுந் தேவையான இரு விதமான மக்களுக்கு அவை கிடைப்பதில்லை. அதனால், அவர்கள் இருட்டில் வலம் வரவேண்டியுள்ளது என்றார். அவர் குறிப்பிட்டது பெற்றோர்களையும் அரசியல்வாதிகளையுந்தான். தாய் தந்தையராகப் போகும் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று எவருஞ் சொல்லிக் கொடுப்பதில்லை. உதாரணமாக, குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் தமது கருத்து வேற்றுமைகளைக் காரசாரமாக விவாதித்து குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்று யார்தான் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்? அரசியல் நடத்துவதென்றால் அள்ளிச்சுருட்டிக் கொள்வதுதான் என்பதே இன்றைய அரசியல்வாதிகள் நிலை. அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்ட சட்டநிறைவேற்று அலுவலர்கள் கூட சாக்கடை வாழ்க்கையில்தான் உழல்கின்றனர். வீதித்தடைகளில் கடத்தல்காரர்கள் கவலையின்றி கடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள். அப்பாவி மக்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். வேலியே பயிரை மேயும் காலமிது.
கவீரனின் சிங்கள நண்பர் ஒருவர், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று பதில் அமைச்சராகவும் நியமனம் பெற்றார். பதில் அமைச்சர் என்ற முறையில் என்ன செய்வதாக உத்தேசம் என்று கவீரன் வினவினான். “அட நீயொன்று! எவ்வளவு பணம் செலவழித்த பின் இந்தப் பாராளுமன்றப் பதவி கிடைத்துள்ளது தெரியுமா? அந்தப் பணத்தை முதலில் வசூலிக்க வேண்டும். அதன் பின்தான் மற்றவை எல்லாம்.” என்றார். சகல மக்கள் வாக்குரிமை, தேர்வுரிமை போன்ற திறமான கருத்துகள் நடைமுறையில் எப்பேர்ப்பட்டவரை உருவாக்குகின்றன என்பதை நாங்கள் உய்த்துணர்ந்து கொள்ளலாம்.
புதிய அரசியல் யாப்பு பற்றி மேலும் சில தகவல்களை அடுத்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.மூலம்: தினக்குரல் – கார்த்திகை 5, 2006
பிரசுரித்த நாள்: Nov 05, 2006
Leave a Reply
You must be logged in to post a comment.