அவ்வைத் தமிழ்

அவ்வைத் தமிழ்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பதவுரை:

வாக்கு உண்டாம் – சொல்வளம் உண்டாகும்

நல்ல மனம் உண்டாம் – நல்ல சிந்தனை உண்டாகும்

மாமலராள் – பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் அமர்ந்திருக்கும் திருமகளின்

நோக்கு உண்டாம் – அருட்பார்வை உண்டாகும்

மேனி – உடம்பு

நுடங்காது – (பிணிகளால்) வாட்டமுறாது

பூக்கொண்டு – மலர் கொண்டு

துப்பார் (துப்பு + ஆர்– பவளம் போன்ற சிவந்த (துப்பு – சிவப்பு; ஆர் – நிறைந்த)

திருமேனி – திருமேனியையும்

தும்பிக்கையான் – துதிக்கையை உடைய விநாயகக் கடவுளின்

பாதம் – திருவடிகளை

தப்பாமல் – நாள்தோறும் தவறாமல்

சார்வார் தமக்கு – அடைந்துபூசை செய்வோருக்கு

பொருளுரை:

          பவளம் போன்ற திருமேனியையும் துதிக்கையை உடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை நாள்தோறும் தவறாமல் அடைந்து பூசை செய்வோருக்கு சொல்வளம் உண்டாகும், நல்ல சிந்தனை உண்டாகும், பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் அமர்ந்திருக்கும் திருமகளின் அருட்பார்வை உண்டாகும், உடம்பு பிணிகளால் என்றும் வாட்டமுறாது.

 கருத்து: விநாயகக் கடவுளை வழிபடுவோர்க்கு எல்லா நலன்களும் உண்டாகும். 

என் காலத்தில் (ஐயோ, ரொம்ப ஒன்றும் இல்லை , சுமார் முப்பத்தைந்து வருடம் முன்பு தான்), சிலேட்டும பலப்பமும் கையுமாய் பள்ளிக்கு போனவன் எல்லாம், அவ்வையை அறியாமல் இருக்க முடியாது. ஏன், இன்றும் அவ்வை இல்லாமல் தமிழ் ஆரம்பப் பாடம் இல்லை.

ஆத்திச் சூடியும், கொன்றை வேந்தனையும் கொடுத்த கவித் தெய்வம் அவ்வை. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற வாக்கு என் வயதில் எல்லோர் மனதிலும் வேரூன்ற அந்தப் பாட்டியன்றோ காரணம் ? மணப் பிராயத்திலேயே இளமையைத் துறந்து, என்றும் முதுமை வேண்டி நின்ற கருணைத் தெய்வம் அவள். உலகில் அல்லலுறும் மானிடர் பேரில் அவ்வைக்கு அவ்வளவு பரிவு !

அவ்வையார் என்பவர் யார் , எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றி வரலாற்றாளர்கள் பல விதமாய்ப் பேசுகிறார்கள். ஆனால் என் சுதந்திரம் பழத்தை மட்டுமே ருசிப்பது; வேரை நோண்டுவதல்ல. அவ்வையின் கனிகளாகிய பாடல்கள் மட்டுமே எனக்கு வேண்டும்.

முப்பது வயதுக்கு மேல் தான் அவ்வையின் அருமை எனக்குப் புரிந்தது. நல்வழியும், மூதுரையும் தமிழ்ப் பொக்கிஷங்கள் என்பது என் மண்டைக்கு அப்போதுதான் உறைத்தது . நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பழ மொழிகள் அவ்வையின் பாட்டுக்களிலிருந்தே கடன் வாங்கியவை. இந்தப் பாட்டைக் கவனியுங்கள்

சித்திரமும் கைப்ப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நடையும்நடைப்பழக்கம்; நட்பும்
தயையும்கொடையும் பிறவிக்குணம்.

இந்தப் பாடலின் சொல்லும் , பொருளும் இடி போன்ற முழக்கத்தோடு இறங்கும். ஆனால் இதனுள்ளே குறைந்தது இரண்டு பழ மொழிகள் நாம் தேடிக் கண்டு பிடிக்கலாம். அவ்வை தமிழ் மொழியோடும் மக்களோடும் இரண்டறக் கலந்து விட்டவள்.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு– மேலைத்
தவத்தளவே
 ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே
 ஆகுமாம் குணம்.

இதிலும், கடைசி வரி அடிக்கடி சுட்டப்படும் ஒன்றாகும்.

நான் அவ்வையின் பாடல்களில் மிகவும் விரும்பும் ஒன்று இதோ

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவல்ல
நட்டாலும நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும்
 மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும்
 வெண்மை தரும்.—————————–(மூதுரை- 4)

(பால் எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாததைப் போல, எதிரிகள் எவ்வளவு பழகினாலும், நண்பர்கள் அல்லர். சங்கைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்டுச் சுட்டாலும் அது கருக்காமல் வெண்மையான சுண்ணத்தையே தருவது போல, நற்பிறப்பு வாய்த்த மக்கள் வறுமை வரினும் மேன்மையோடு இருப்பார்)

இதோ இன்னொன்று

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று
 தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா
 வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே
 தான் தருதலால்.

(நிமிர்ந்து தளராது வளரும் தென்னை வேரிலே ஊற்றிய நீரைச் சுவையாக்கி தலையில் இளநீராகத் தருவது போல , தான் செய்த நன்றி பலமடங்காகத் திரும்பி வரும். ஆகவே அது என்று வரும் என்பது குறித்துப் பேசற்க.)

மேலே கூறியவை அனைத்தும் சமுதாய, மற்றும் அறவழிப் பாடல்கள். அவ்வைக்கு ஒப்புயர்வற்ற ஆன்மீகப் பக்கம் ஒன்று உண்டு. விநாயகனின் சிறந்த பக்தை அவ்வை என்பது நாம் அறிந்ததே. “வாக்கு உண்டாம், நல்ல மனமுண்டாம் …” என்று தொடங்கும் பாடல் அவ்வையுடையது தான். ஆனால், என் அன்றாட ஆன்மீக வழிபாட்டிற்கு நானும் என் குடும்பமும் பாடும் ஒரு பாடல் அவ்வை வாய் வந்ததுதான். அது பாடல் என்று சொல்வதை விட, யோக நெறியின் முற்றிய விளக்கம் என்றே சொல்லலாம். அந்தப் பாட்டு ” விநாயகர் அகவல்

அந்தப் பாட்டு இதோ கீழே உள்ள இணைப்பில்.சொடுக்குங்கள். நம் தமிழகத்தின் சிகரப் பாடகர், அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய இறவாப் பாடல்.

விநாயகர் அகவல் முழுவதையும் படிக்க விரும்புபவர்கள் இதோ இந்த இணைப்பிலிருந்து தங்கள் கணினிக்கு இறக்கிக் கொள்ளலாம். கீழ் உள்ள வரியின் மேல் சொடுக்குங்கள்.

விநாயக14ர் அகவல் பாட்டு 

முடிக்கவே மனமில்லை. இதோ ஒரு முத்தாய்ப்பு.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்– ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.

(ஆறு கோடையில் வற்றிய நிலையிலும் தன் மணல் ஊற்றால் உலகுக்கு நீரூட்டும். அது போல் நல்ல குடிப்பிறந்தார் வறியவர் ஆனாலும் மனம் ஒப்பி இல்லை எனச் சொல்ல மாட்டார்)

ஔவையார் உங்களையும் சிந்திக்கத் தூண்டினால் மகிழ்வேன்.

http://thamizhulagam.com/moothurai.html?page=1

About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply