கோயில் வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம்; உலக நாடுகளுக்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்

கோயில் வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம்; உலக நாடுகளுக்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்

  • 25 செப்டம்பர் 2019
கோயிலில் உடல் தகனம்

நீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவில் திங்கட்கிழமை பௌத்த பிக்கு ஒருவரின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்தமையினைக் கண்டித்தும், இதன்போது சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில் செவ்வாய்கிழமை நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பிலும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட நீதிமன்ற வளாகங்களுக்கு முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்கள்.

இதன்போது தமது கண்டனங்களையும், விசனங்களையும் வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் சட்டத்தரணிகள் ஏந்தியிருந்தனர்.

‘நீதி பீதியில் – அநீதி வீதியில்’, ‘வன்முறை வேண்டாம்’, ‘சட்டத்தை நிலைநாட்டடு’, ‘வெறுப்புக்கு இலங்கையில் எங்கும் இடமில்லை’, ‘சட்டம் சகலருக்கும் சமம்’, ‘நீதிக்கே சவாலா’ என்பவை உள்ளிட்ட வாசகங்கள், சட்டத்தரணிகள் ஏந்தியிருந்த பதாதைகளில் காணப்பட்டன.

நீதிமன்ற வளாகத்தின் முன்பாக கவன ஈர்ப்பு நடவடிக்கை

மட்டக்களப்பில் செவ்வாய்கிழமை கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சட்டத்தரணிகள், தங்கள் பணிகளைப் பகிஷ்கரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தின் முன்பாக கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் சார்பாக, சட்டத்தரணி எம்.ஐ.எல். முகம்மட் பளீல் பிபிசியிடம் பேசினார்.

“சட்டத்தரணியொருவர் நேற்றைய தினம் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஒருவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து நாம் அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது. மேலும் நேற்று நடந்த விடயங்களைக் காணும்போது, சட்டத்தை எவ்வாறு நிலைநாட்டுவது என்கிற அச்சமும் எம்முள் எழுந்துள்ளது.

எமது சகோதர சட்டத்தரணியொருவர் தாக்கப்பட்டமையைக் கண்டிக்க வேண்டிய கடமை எமக்குள்ளது. எமது கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில், மட்டக்களப்பில் இன்று சட்டத்தரணிகள் எவரும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை” என்று சட்டத்தரணி முகம்மட் பளீல் கூறினார்.

கல்முனை மற்றும் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகங்களுக்கு முன்பாகவும் இவ்வாறு சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில ஈடுபட்டனர்.

விக்னேஷ்வரன்

இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இனப்படுகொலையை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்கு ஒருவரின் உடல் நேற்று திங்கட்கிழமை தகனம் செய்யப்பட்டமை பஸ்களில் கொண்டு வரப்பட்ட சிங்கள காடையர்களினால் பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் முன்னிலையில் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டமை ஆகியன எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய “இனப்படுகொலை” க்கான ஒரு அறிகுறி என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்துத் தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரரின் இறுதி நிகழ்வுகள் ஏற்கனவே பெரும் பதற்றத்தை இந்தப் பகுதியில் ஏற்படுத்தி இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான போதிய கால அவகாசம் அரசாங்கத்துக்கு இருந்தது. வடமாகாண சிரேஷ்ட உப பொலிஸ் மா அதிபருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி நிலைமையை விபரித்து சட்ட ஒழுங்குகளுக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டிருந்தேன்.

உடல் தகனம்

ஆனாலும் ஒரு அரசியல் கட்சி பஸ் வண்டிகளில் நாலாபுறத்தில் இருந்தும் சிங்களக் காடையர்களைக் கொண்டுவந்து அராஜகத்தில் ஈடுபடுவதற்கும் தனது நூற்றுக்கணக்கான படையினர் பார்த்துக்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதற்கும் சிரேஷ்ட உப பொலிஸ் மா அதிபர் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதற்கும் அரசாங்கம் அனுமதித்தமை வெறும் தற்செயலான ஒரு நிகழ்வு அல்ல. இவை யாவும் மேலிட அனுசரணைகளுடன் தான் நடைபெற்றுள்ளன.

இலங்கை ஒரு தோல்வி அடைந்த நாடு என்பதையும், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக அதிகரித்துவரும் ‘இனக் குரோதம்’ காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்த இனப்படுகொலை சம்பவங்களையும் தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் இலங்கையின் அரசாங்கமோ அல்லது அதன் பாதுகாப்பு நிர்வாகக் கட்டமைப்புக்களோ இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு உடனடியான தலையீடு ஒன்றை மேற்கொள்ளவேண்டும்.

தமிழ் மக்கள் தமது வடக்கு கிழக்கு தாயகத்தில் சுய நிர்ணய உரிமைகளுடன் வாழ்வதற்கான ஏற்பாடு ஒன்றை இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் காலதாமதம் இன்றி செய்வதற்கான தருணம் வந்துவிட்டது என்பதை நேற்று முல்லைத்தீவில் நடைபெற்ற நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்? இதனை முன்னர் இலங்கையில் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐ. நா இணைத்தலைமை நாடுகள், இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

உடல் தகனம்

அதேவேளை, முல்லைத்தீவில் நேற்று நடைபெற்ற சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியிலும் ஆறாத காயம் ஒன்றை ஏற்படுத்திவிட்டது. திங்கள்கிழமை நடைபெற்ற சம்பவங்களுக்கு காரணமானவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும்.

இல்லையென்றால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தகுந்த பாடம் ஒன்றை வழங்குவதற்கு தமிழ் மக்கள் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்தமை பிழையென்று 1978ம் ஆண்டு அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் போது சட்டத்தரணியாகவும் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் என்ற முறையில் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் போதுஞ் சுட்டிக் காட்டியிருந்தேன். சிறு விடயங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று மெத்தப்படித்தவர்கள் சிலர் சீறினார்கள். நேற்று ஒரு புத்த பிக்கு இந் நாட்டில் பௌத்தத்திற்கே முதலிடம் சட்ட மன்றங்களுக்கு அல்ல என்று தனது வியாக்கியானத்தைத் தந்துள்ளார். இவ்வாறான ஏற்பாடுகள் எவ்வாறான எண்ணங்களை எமது பாமர மக்களின் மனங்களில் ஏற்படுத்துகின்றன என்பதை எம்மவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49815897

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply